நாங்கள் சின்ன பிள்ளைங்களா இருந்த போது ..... எங்க ஊர் அமைப்பு வேற...
இன்னைக்கி நாங்க பாக்குற ஊர் வேற...
பொழுந்த பிறகு ....விளக்கு வச்ச பெறகு ....வீட்டை விட்டு பிள்ளைகள்
யாரும் வெளியே போக பெத்தவங்க விடமாட்டாங்க...
அவங்க கண்காணிப்பிலே வச்சுக்கிடுவாங்க.....
பெரும்பாலும் குண்டு பல்புகள் தான் தெரு விளக்காகி வெளிச்சம்
தரும்.அதுவும் நாப்பது வாட்சுக்கு மேல இருக்காது.
ராத்திரியானா....ஒருவிதமான ஈசல் சத்தமும்....கொஞ்சம் பெரிய வீடுகளின்
மேல.... ஒசக்க ஆந்தைகள் சத்தமும் சிலவேளைகளில் கேக்கும்.
எப்பவாவது வெருகுகள் வந்து கோழிய புடிச்சிட்டு போனதா சொல்வாங்க.
ஜூன்,ஜூலை மாதத் தென்றல் காற்றை அனுபவிப்பது அந்தக்காலத்தில்
மிகப்பெரும் கொடுப்பினையாகும்.
இன்னைக்கு வீடுகளின் முன் பக்கத்தில் திண்ணைகளே இல்லாமல் வீடு
கட்டுவது ,ஒரு நாகரிகமாகிவிட்டது...
ஆனால் கடையநல்லூர் மக்கள் அந்த திண்ணை வச்சு
கட்டுகிற கலாச்சாரத்தை இன்னும் விடவேஇல்லை.
எங்கூர்ல அந்த திண்ணைகளில் ‘ஒன்னுபோல’ இரண்டுபேர்கள் படுக்கிற....
தூங்குகிற வசதிகள் இருக்கும்.ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும்.
அப்போது திண்ணைகளில் உட்கார்ந்து.... முகம் காண முடியாத கொஞ்சம் மெல்லிய இருட்டில்...ஆண்மக்கள் தனியாவும் ,பெண்மக்கள் தனியாவும் உட்கார்ந்து ஒரு ஒரு மணி நேரத்த போக்குவார்கள்...அதுக்குப் பெறகு சிலதுகள் வீட்டுக்குள்ளே போய் தூக்கம் போடுவார்கள்.சிலர் அப்படியே திண்ணையில் பாயை போட்டு தூங்கிவிடுவார்கள்..
ஒரே ஒரு தட்டு உள்ள வீடுகளில் உள்ள ஆண்கள்.... தானும் ,அவங்க
வீட்டம்மாவும்,ஒரு மறைப்பு....அல்லது படுதா கட்டி.... ,”பிள்ளை அல்லது மகன் மருமகளுக்கு வசதியா”...பின்னிரவு அல்லது அதிகாலை வரை
திண்ணைகளிலேயே.. தூக்கம் போடுவார்கள்.அங்கேயே குடும்பம் நடத்தும் சில
“வல்லாத்த”:...பேர்களும் உண்டு.
யாரும் அடுத்த வீடுகளில் போய் தலையிட மாட்டார்கள்..
யார்வீட்டு
மாப்பிளையாவது...நடுநிசி தாண்டி...மனைவி வீட்டில் இருந்து வேக வேகமாக சைக்கிளை
அழுத்திக் கொண்டு போவதுண்டு...அந்த சைக்கிள் போன திசையின் பின்னே.....முபாரக்
ஸ்டோர் அல்லது குட்டிமீனா ஆலிம் ஷா அத்தர் வாசனை காற்றில் வீசுவதுண்டு..
அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் காதுகளின் மேல் மடிப்பு இடுக்குகளில்
புளியங்கொட்டை அளவில் உருண்ட அமைப்பில்,பஞ்சு எடுத்து அத்தர் அல்லது சென்டில்
நனைத்து செருகி வைத்திருப்பார்கள்.
பொண்ணு வீட்டு தெருக்களில் செல்லும் போதோ...அல்லது வேறு யாராவது
பக்கத்தில் வந்தாலோ....சொய்யில....காதில உள்ள பஞ்சை...ஒரு
விரலால் லேசாக ஒரு சிறிய அழுத்தம்
கொடுத்து அதில் தட்டுப்படுகிற அத்தரின் ஈரப்பதத்தை “அங்க இங்க” தேய்த்துக்
கொள்வார்கள்.
மேலதிகமாக காற்று வாங்கனும்ன்னு நினைக்கிற கிளடு கட்டைகள் ....அவங்க
வீட்டின் வாசல் ஓரம், நார் அல்லது கயிர் பின்னல் கட்டில்களைப் போட்டு அதுக்கு மேல
சின்னதா முதுக அழுத்தாம இருக்க, ஜமுக்காளம் விரித்து,தலைக்கு தலையணை வைத்துத் தூங்குவார்கள்.
நிம்மதியான காலம் அது...
எப்பவாவது திருட்டுப்பய ....சேட்டைகளும் நடக்கும்...அப்படியாபட்டவங்க
....கையில ஆம்ப்ட்டான்னா தொலைஞ்சான்.......கொன்னு எடுத்துருவாங்க.அதுக்கு
தோதுவா...பாவாத்துற அலாம்புக் கம்புகள் ஐந்து வீடுகளில் ஒன்றிலாவது இருக்கும்.
குடிக்க மட்டும்தான் பெரியாத்துத் தண்ணி.(தாமிரபரணி)...அல்லது முனிசிபாலிட்டி தண்ணி....மத்ததுக்கெல்லாம் நம்மாத்துத் தண்ணிதான்.
பொதுவா நம்மாறுன்னு மேலப்பாளையம் ஊரைச்சுத்தி ஓடுகிற
பாளையங்கால்வாயைத் தான் சொல்லுவார்கள்.
காலை விடிகிற நேரத்துக்கு முன்னே ‘புதுப்பொண்ணுகளும்,’இளம் வயது ஆண்
பெண் மக்களும் வாய்க்காலில் போய் குளித்து முடித்துவிடுவார்கள்.
அதுக்கப்புறம் எட்டுமணிக்கு மேலே இளந்தாரிகளின் ஆளுகையில் நம்மாறு
வந்து விடும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி படித்துறைகள் உண்டு.காலை எட்டு மணிக்கு குளிக்க ஆத்துல இறங்கி மதியம் ரண்டு மணிவரை அழிச்சாட்டியம் செய்யும் சேட்டைக் கார பையன்கள் ஒவ்வொரு தெருவிலும் இருப்பார்கள்..
வாய்க்காலின் இக்கரைக்கும் அக்கறைக்கும் போட்டி போட்டு
நீச்சலடிப்பார்கள்...சில குசும்பர்கள்,படிக்கட்டின் பக்கத்தில் கூட்டமா நின்று
குளிக்கும் ஆண்களை அதிலும் கொஞ்சம் வயசு கூடியவர்களை உள் நீச்சல் போட்டு நீந்தி
வந்து “பிச்சி” விடுவதுவதும் உண்டு.
எங்காவது தெருவில் “மையத்து” விழுந்துவிட்டால், இளவட்டங்கள் வாய்க்காலில் இருந்துதான் நாலு நாலு குடமாக தண்ணி எடுத்து கொண்டுபோய் தொட்டியில் நிரப்பிக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்வார்கள்..
எங்காவது தெருவில் “மையத்து” விழுந்துவிட்டால், இளவட்டங்கள் வாய்க்காலில் இருந்துதான் நாலு நாலு குடமாக தண்ணி எடுத்து கொண்டுபோய் தொட்டியில் நிரப்பிக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்வார்கள்..
மிக நீண்ட தூரமாய் இருந்தாலும்
ஊர்க்காரர்கள் தான் தண்ணி மொண்டு கொண்டு போவார்கள்..இன்னைக்கு ஆழ்குழாய் உதவியால்
யார்வீட்டின் மையத்துக்கும் வாய்க்கால் தண்ணி கொண்டுபோவதில்லை.
தண்ணீர் வசதி இல்லாத வீடுகளில்... தெருவில் உள்ள பொது நல்லிகளில் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லுகிறார்கள்
நல்ல தண்ணி வராத காலங்களில் வாய்க்கால் தண்ணியைக் கொண்டு சோறாக்கி
,குடித்து தாகம் தணித்தவர்களும் நிறைய இருந்தார்கள்.
இன்னைக்கு....படித்துறைகள் எதிலும் ஆட்கள் யாரும்
வருவதில்லை...மனுஷங்க மாறியதுபோல....பாளையங்காலும் மாறிவிட்டது..
எங்க ஊருக்கு தண்ணி வருவதற்கு முன்னாடியே கருங்குளத்தில் துவங்கும்
சாக்கடை கலக்கல் காட்டுத்தெரு தாண்டி..... பெருகி ஓடும கூவமாக மாறிவிட்டது...
கைகால்கள்
கூட அலம்ப முடியாது.மீறினால் சொறி சிரங்குதான்.
பாளையங்கால்வாயை இப்படி கொடுமைக்கு உள்ளாக்கியது யார்
குத்தம்?....பொறுப்பற்ற உள்ளாட்சி நிர்வாகமும், கண்டுகொள்ளாத மாநகராட்சியும்,தான்.
அத்தோடு
இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.பூமியை இறைவன் படைத்த நாள் முதல் பாதுகாத்து
அதனுள்ளே இருக்கும் ஆழ்குடிநீரை வகைதொகை இல்லாமல் பம்ப் செட்டுகள் மூலம் எடுத்து
சீரழிக்கின்றோம்.
பாதி தெருக்களில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது.மிச்சம்
மீதியுள்ள தெருக்களில் முன்நூறு அடிக்கு கீழே போய்விட்டது.
பின் சந்ததிகளுக்கு நிலத்தடி நீரை இருப்புவைக்காமல் சுரண்டிக் கொண்டு இருக்கிறோம்....
எங்கள் தலைமுறைக்குப் பின்னர் வாய்க்காலை யாரும் பயன் படுத்தததால்
நீச்சல் என்றால் என்னவென்று தெரியாத இளைஞர்கள் எங்கள் ஊரில் பெருகிக் கொண்டு
இருக்கிறார்கள்.
வசதி வாய்ப்புக்கள் உள்ள சிலர் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில்
சென்று நீச்சல் குளத்தில் நீந்த பயிற்சி எடுக்கிறார்கள்...முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சொன்னது போல நீருக்காகவே யுத்தங்கள் வரலாம்.
நேற்று நானும் ,மருமகன் அப்துல் ஜப்பாரும் எங்கள் வீட்டின் பக்கம் வாய்க்கால் கரையில் நின்ற காரில் ஏறி வெளியூர் புறப்படுமுன்னர் அங்கே பார்த்தேன்.....நாங்கள் எல்லாம் நீச்சல் பழகிய....அதிக நேரம் குளித்ததால் என் வாப்பும்மாவிடம் உதைவாங்கக் காரணமாயிருந்த பாளையங்கால்வாயின் கரையைத்தொட்டு நிறைய நீர் சாக்கடை நீர் தேங்கி திணறிக் கொண்டிருந்தது.
தண்ணீர் நிறைந்து செல்லுகிற காலங்களில் கூட குளிப்பதற்கு இளவட்டங்கள்,சிறுவர்கள்,தாய்மார்கள் என்று
யாரும் இல்லை..என் மனது என் இளமைக் காலத்தை நினைந்தது ஏங்கியது..
நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து டவுசரை கழட்டி வைத்துக் குளித்தக் காலங்களும்,.......லுங்கி
கட்டும் வயதில் வெட்கப்பட்டு மறைத்துக் குளித்த வசந்தகாலப் பொழுதுகளும்.கண்முன்
வந்து போனது.
வாப்பாமார்களின் லுங்கியை உடுத்திக் கொண்டு ஆற்றில் குளிக்கும்
போது.... இருபுறமும் வேஷ்ட்டிக்குள்ளே காற்றை செலுத்தி கொஞ்சம் பலூன் போல ஆக்கி
வாத்துகள் போல கொஞ்ச தூரம் நீந்திச்சென்றதும் நினைவில் வந்து நிறைத்தது.
ஆனால்.....பாளயங்கால்வாயில் குளிக்கத்தான் ஆட்கள் இல்லை.......மனது கனத்தது .......மாடுகளும்,எருமைகளும்..... சுகமாக நீந்திக் கொண்டு இருந்தன.
பாளையங்கால்வாய் கரையை ஒட்டி குழாய்கள் அமைத்து அந்த குழாய்களில் கழிவு நீர் சாக்கடைகள் கழிப்பறை கழிவுகள் சேருகிற அமைப்பில் உண்டு செய்தால் பாளையங்கால் வாயை காப்பாற்ற இயலும்.பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறட்டும்.... என்று காத்துக் கொண்டிருந்தால்.... மேலப்பாளையத்தில் உள்ள நிலத்தடி நீர் அனைத்தும் சாக்கடை நீராகவே மாறிப் போய்விடும் அபாயக் கொடுமை உள்ளது .
கன்னிமார் குளத்தில் தேங்கி இருக்கின்ற தண்ணீர் அனைத்தும் ஹாமிம்புரம் பகுதிகளின் கழிவு நீர் சாக்கடைகளின் சேமிப்பாகும் .
அங்கு சேருகிற கழிவு நீரையும் தனியாக வெளியேற்றி தனி குழாய்கள் மூலமாக பாதாள சாக்கடைக்கு சேமிப்புக்கு செல்ல வேண்டும்.
இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றோம்.
4 கருத்துகள்:
நல்ல கட்டுரைதான் ...........
சுகமான தருணங்கள் தான் ......
அருமையான கட்டுரை சிறப்பான படங்களுடன்
பழைய கால நினைவுகள் வந்தன
யார்வீட்டு மாப்பிளையாவது...நடுநிசிதாண்டி...மனைவி வீட்டில் இருந்து வேக வேகமாக சைக்கிளை அழுத்திக் கொண்டு போவதுண்டு...அந்த சைக்கிள் போன திசையின் பின்னே.....முபாரக் ஸ்டோர் அல்லது குட்டிமீனா ஆலிம் ஷா அத்தர் வாசனை காற்றில் வீசுவதுண்டு..
அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் காதுகளின் மேல் மடிப்பு இடுக்குகளில் புளியங்கொட்டை அளவில் உருண்ட அமைப்பில்,பஞ்சு எடுத்து அத்தர் அல்லது சென்டில் நனைத்து செருகி வைத்திருப்பார்கள்.
பொண்ணு வீட்டு தெருக்களில் செல்லும் போதோ...அல்லது வேறு யாராவது
பக்கத்தில் வந்தாலோ....சொய்யில....காதில உள்ள பஞ்சை...ஒரு விரலால் லேசாக ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து அதில் தட்டுப்படுகிற அத்தரின் ஈரப்பதத்தை “அங்க இங்க” தேய்த்துக் கொள்வார்கள்.
மிகவும் ரசித்தேன்
அந்த காலகட்டத்தில் மாப்பிளை துணையிடம் காதுல வைக்க சென்ட்கலந்த பஞ்சிய வாங்க ஒரு கூட்டம் அவர சுத்தி சுத்தி வரும், அப்ப அவரு பண்ணுற ஒரு வகையான அலட்டல் இந்த கட்டுரையை படிக்கும் போது கண் முன் வந்து செல்கிறது
சீனத்பரிமணம் செண்டும் பஞ்சியும் ரொம்ப பேமஸ்
அற்புதமான கட்டுரை ரசித்து ரசித்து படிக்க தூண்டுகிறது மாஷாஅல்லாஹ்
்்்்நாமெல்லாம் மதித்த குட்டி மீனா ஆலீம்ஷாவையும் நம கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள் மச்சான் நீங்கள் தந்த்து அந்த பொற்கால நினைவலைகள்
கருத்துரையிடுக