சனி, 24 ஜூன், 2017

பெருநாள் நோக்கி ஒரு பயணம் .



    எனக்குத் திருமணமான பொழுதில் வந்த முதல் நோன்புப்பெருநாள்.
அப்போதுநான் சென்னைக்கும் ஊருக்கும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தேன்.
         காரணம் பல்வேறு சிவில் கேஸ்கள் என்னை, என் குடும்பத்தை அலைக்களித்துக்கொண்டு இருந்த கடுமையான வேளை அது.

    ஒருத்தருக்கொருத்தர் கேஸ் நடத்தும் சாதாரண மனிதர்களுக்கே கோர்ட் உத்தியோகம் மோசமானதாக இருக்கும்.ஆனால் நானோ தமிழக அரசை, அதன் நிலச் சட்டத்தை எதிர்த்து என்னுடைய குடும்பத்து உறுப்பினர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.

          சென்னை உயர் நீதி மன்றப் படிக்கட்டுகள் ஏறியதோடு, டெல்லி உச்ச நீதி மன்றம் வரையிலும் சென்றேன்.

      காலமும் பணமும் விரையமானது.நாட்டின் அருமையான சட்டங்கள் பல, அரசு அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தினால், அறியாமையினால் குடிமக்களுக்கு எப்படி எல்லாம் பாதகம் தரமுடியும் என்று, மற்றவர்களிடம் சொல்லிக் காட்ட,  என்னிடம் டாக்ட்டரெட் செய்யும் அளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.

      திருமணமாகி பதினைந்தாம் நாளிலேயே கேஸ் நடத்த சென்னை வந்து விட்டேன்.என் தந்தையும் தாயும் .என்னை நம்பி வந்த மனைவியும் பலநேரம் இதனால் வருந்தி இருக்கிறார்கள்.கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.என்ன செய்வது? கேஸ் நடத்தாவிட்டால் இழப்புக்கள்  நிறைய வருமே..கடமை இருக்கிறதே. குடும்பத்து மற்ற பங்காளிகளும் நான் பார்த்துக்கொள்வேன் என்று இருந்து விட்டார்கள்.
     சென்னையில் பல நேரங்களில் பெரிய வக்கீலை பார்க்கவே முடியாது.கேஸ் கட்டும் கையுமாக ,சில வேளைகளில் புத்தகமும் கையுமாகவே இருப்பார்கள்.
         கத்துக்குட்டி ஜூனியர்கள் கைகளில் அப்பாவிக் கட்சிக் காரன் கிடைத்தால் தொலைந்தான்.நாம் ஒன்னு சொல்ல, அவர்கள் நமக்குத்தெரியாததை கோர்ட்டில் சொல்லுவார்கள்.
     நாம் கேட்காமலே வாய்தா வாங்கி இன்னொரு நாளுக்கு வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள்.
    "வர்ற வாய்தாவுக்கு நீர் வந்துரும்.வரும்போது மறக்காமே திருனவேலி அல்வா கொண்டாரும்வோய்."
"வாய்தா எப்போ?"
வர்ற மூணாம் நாளைக்குத்தான்."
"சார் நான் ஊருக்குப் போக முடியாதே ?"

"இங்கேயே இரும்மையா" அழகாக பதில் தருவார்கள்.
  வேறு என்ன செய்ய சென்னையிலே இருப்பேன்.
இதற்கு மாற்றமாக சில நல்ல வக்கீல்களும் எனக்குக் கிடைத்தார்கள்.என்னைத் தமது  நண்பனாக,தம்பியாக, மகனாகப் பாவித்த நல்லவர்களும் இருந்தார்கள்.அவர்கள்தான் எனது கண்ணீரைத் துடைத்து கரை ஏறச் செய்தார்கள்.

பீஸ் என்று நான் கொடுத்த மிகச்சிறிய தொகையை மிகப் பெருந்தன்மையோடு  பெற்றுக் கொள்வார்கள்.
       அரிதான குணமுடைய அவர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நெல்லை வழக்கறிஞர் தீன்அவர்கள், அவரதுசீனியர்அப்துல் வஹாப் அவர்கள், சென்னைகொடைஅரசு அவர்கள் ஆகியோரையும் சொல்லலாம்.

           கோர்ட்டுக்குப் போய்இன்னொரு நாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டு "வாய்தா" வந்து விட்டால் எனக்கு வேறு வேலை  இருக்காது.
நேராக வாலஸ் கார்டன் போய்விடுவேன்.
        அங்கே தான் முதல் தெருவில் ,அப்போலோ மருத்துவ மனை பக்கம்,  மணிச்சுடர் நாளேடு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களின் அலுவலகம்  இருந்தது.
       எனது குடும்ப "வழக்குப் போக்குவரத்தை" தலைவர் நன்கு அறிவார். 

அங்கே நான் சோர்வாகப் போய் அமர்ந்தால் "என்ன புது மாப்பிளை எப்படி இருக்கீங்க?" என்று அன்பு மொழி பேசி கலகலப்பாக்குவார். 

    பக்கத்தில் குளிர்ந்த மோர் இருக்கும் அதைப் பருகிடத் தருவார்.
      கொஞ்சநேரத்தில் தலைவர் வீட்டிலிருந்து மதிய சாப்பாடு வரும் அதைத் தலைவரும், நானும் இன்னும் வேறு யாராவது வந்தால் அவர்களும், பகிர்ந்தே சாப்பிட தலைவர் வற்புறுத்துவார்.எல்லோரும் உண்டுமுடிப்போம்.

    ரமலான் மாதம் வந்தது.அப்போதும் வாரக்கணக்கில் சென்னையில் தங்கவேண்டியதிருந்தது.இருபத்து ஒன்பதாம்  நாள் ஊருக்குப் புறப்பட ஆயத்த மானேன்.
      ரொம்ப சிரமப்பட்டு எக்மூரில் இருந்து புறப்படும் பஸ் ஒன்றில் பயணிக்க மேலப்பாளையம் பள்ளி காசிம் என்கிற குடும்ப நண்பர் பயணச்சீட்டு எடுத்து வைத்திருந்தார்.அந்த பஸ்சை விட்டால் மறுநாள் பஸ் எதிலும் இடமே இல்லை.சரி ஊருக்குப் போய் விடுவோம் என்று முடிவு செய்து விட்டு தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களிடம் பயணம் சொல்லப் போனேன்.

       அப்போது மாலை ஐந்து மணி இருக்கும் .தலைவர் தொழுது கொண்டிருந்தார்.தொழுகை முடிந்து சலாம் வாங்கியதும் நான் நிற்பதைப் பார்த்தார்....கூர்ந்து பார்த்துக்கொண்டே புன்னகைத்தார்கள்...
      "என்னா.தம்பி ?என்ன சேதி "என்று அழகான மெல்லிய குரலில் கேட்டார்கள்.
"வாப்பா நான் ஊருக்குப் போகிறேன்"......பதில் ஏதும் சொல்லாமல் 
அவர்கள் எதோ ஒதிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்.மீண்டும் ஊருக்குப் போவதைச் சொன்னேன்.

"நாளைக்குப் போலாம் தம்பி" என்று சொல்லிவிட்டு,தலைவர் .மீண்டும் தொழுகையைத் தொடர்ந்தார்கள்.என்னால் அங்கே நிற்க முடியவில்லை.

  "இங்க வந்தது.... தப்பாப் போச்சே,.....அடடா நம்ம ஊரில் ஒரு நாளைக்கு முன்னதாகவே நோன்பு வச்சாங்களே.அங்கே இன்னைக்கு இருபத்து ஒன்பது முடிஞ்சாச்சே..திடீர்ன்னு நாளைக்கு பெருநாள்ன்னு அறிவிச்சுட்டா என்ன செய்ய?.....நம்மள வாப்பா, உம்மா, மனைவி தேடுவாங்களே.....இங்க வந்து பயணம் சொன்னது தப்பாப் போச்சே"ன்னு மனசுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். 
     அங்கே மேனேஜராக இருக்கும் நெல்லை ஏர்வாடி மீராசாஹிப் அவர்களிடம் போனேன்."சாச்சா,தலைவர் எதுக்காக என்னை நாளைக்குப் போ ன்னு சொல்லுறாங்க?உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு?"கேட்டேன்."
   "இன்னைக்கு எதோ இப்தார் பார்ட்டிக்கு போறதா தெரியுது.அதுக்கு உங்களைக் கூட்டிட்டு போறதா இருக்குமோ? என்னவோ?"ன்னு அவர் பட்டும் படாமலும் வழக்கம் போல் சொல்லி  முடித்தார்.
நான் என்ன செய்யன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்.
   "சாச்சா.நாளைக்கு நான் ஊரில் இருக்கணும்.எனக்கு தலை பெருநாள்.என்னை எங்க வீட்டில் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் கேட்டால் பஸ் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருப்ப தால் நான்  கிளம்பிட்டேன்னு    சொல்லி விடுங்கள்" என்று  வந்து விட்டேன்.

   அரக்க பறக்க ரூமை காலி செய்ய்துவிட்டு எக்மோர் ரயில் நிலையம் முன்பாக வந்து சேர்ந்தேன்.அந்த பஸ் எனக்காகவே காத்திருந்த மாதிரி தெரிந்தது.காரணம் நான் வண்டிக்குள் ஏறியதும் மற்ற பயணிகள்லாம் ஒரு பார்வை என்னைப் பார்த்த விதத்தில் நான் ஐந்து நிமிட லேட் என்பதைப் புரிந்து கொண்டேன்.
      பஸ் டிரைவருக்குப் பின்னால் இரணடாவது வரிசையில் சன்னலோரத்தில் என்னுடைய இருக்கை.   அதில் என்னை விட இளையவர் ஒருவர் இருந்தார்.'"அண்ணே எனக்கு வாமிட் வரும்னே .அதனாலே நான் ஜன்னலோரமா உங்க  சீட்ட்ல இருக்கேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"எனறதும் அடுத்து உள்ள சீட்டில் அமர்ந்தேன்.

   என்னை அடுத்து நடை பாதை.அதற்கடுத்துள்ள சீட்டில் நெல்லை வழக்கறிஞர்முருகவேல் அவர்களும்,அவருக்கு அடுத்து ஊத்து மலை இளைய ஜமீன்தார் எஸ்.எம்.பாண்டியன் என்கிற சங்கர மருதப்ப பாண்டியன் அவர்களும்.இருந்தார்கள்.
    ஊத்துமலை ஜமீன் தாருக்கு எங்கள் குடும்பத்தையும், என் வாப்பாவையும்,என்னையும் நல்லா தெரியும்.அவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மேலே ரொம்பவும் காதலும் மோகமும் உண்டு.திருநெல்வேலி வட்டாரத்தில் பி.எஸ்.எ.மோட்டார் சைக்கிள் அவர் மட்டுமே வைத்திருந்தார்.

   திருனவேலி பக்கம் அப்போதெல்லாம்1970 களில்மோட்டார் சைக்கிள்களை அவர்மாதிரி ஆட்களும்,பண்ணையார்களும்,போலீஸ் இலாக்காவைச் சேர்ந்தவர்களும் .பெரிய வியாபாரிகளும் தான்  வைத்திருந்தார்கள்.
       அது அந்தஸ்த்தின் சின்னமாக பார்க்கப்பட்டது.அவர்கள் எல்லோரும் திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் தியாகராஜன் ஆட்டோ ஒர்க்ஸ்  பரமன் அண்ணாச்சி கடையில் ஒன்று கூடுவார்கள்.
      அங்கே எங்கள் குடும்பத்தில் இளையவரான எங்கள் வாப்பாவும் அவரின் அண்ணன் வைத்திருந்த ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வார்.அந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தது.
      அந்தக் கடையில் த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி  முதலாளி, ஹரிராம் சேட் படம் இருக்கும்.அவர் தான் அந்த கடையை உருவாக்கியதாகச்சொல்லுவார்கள். எங்க வாப்பா சில நேரங்களில் என்னையும் மோட்டார் சைக்கிளில் அங்கே அழைத்துச் செல்வதுண்டு.அங்கே தான் ஊத்துமலை என்னை பல முறைப்பார்த்துள்ளார்.பாசமுறையில் கொஞ்சுவார். நான் வளர்ந்த பிறகும் போற வாற இடங்களில் கண்டால் விடமாட்டார். .
    "யோவ்... மருமகனே"என்று.தான் பெரும்பாலும் அழைப்பார்.திருநெல்வேலித் தமிழின் பாசம் அதில் இருக்கும்.
   "யோ....வ்வ்...எங்கய்யா  உன்ன ஊர்ல பாக்கவே முடியல்லே?என்னய்யா பண்ணிக்கிட்டுருக்கே?" என்று பார்த்த இடத்தில, பஸ்சில் என்னை விசாரித்துக்கொண்டார்.
    நான் ஒரு கேஸ் விஷயமா மெட்ராசுக்கு வந்ததை மட்டும் சொன்னேன்."ஒங்க அப்பா சுமையை நீர் சுமக்கீராக்கும் ".
    எங்க வாப்பா மற்றும் நில விபரங்கள் கேட்டு முடிக்கும் போது வண்டி தாம்பரத்தை நெருங்கி இருந்தது.
"யோவ்,மருமகனே,........... என்னைய்யா இது .அரை மணி நேரத்துல இந்த டிரைவர் இங்க வந்துட்டாநேய்யா?"
"ஆமாம் ராஜா".
அப்போதுதான் அந்த டிரைவர் பஸ் ஓட்டுகிற 'அழகை' கவனித்தேன்.மோசமான ட்ரைவிங் .மனசு என்னவோ போல் இருந்தது.
"வோய்....... இவன் நம்மள ஊர் கொண்டு சேப்பானாயா"?
"விழுப்புரத்துல பஸ் மாறிட வேண்டியது தான்யா"
இப்படி அவர் சொன்னதும் எனக்கு பக் என்று இருந்தது.

       பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் விழுப்புரத்தில் ஒரு ஓட்டல முன்பாக  வந்து  நின்றது.சுற்றிலும் ஆம்பிளைகள் மூத்திர நெடியில் தங்களுடைய ;கட்டாயக் கடமையை'முடித்துக்கொண்டிருந்தார்கள் .

    மனசு என்னவோ போல் இருந்தது.வேற ஏதாவது பஸ்சில் மூணு டிக்கெட் கிடைக்குமான்னு, 'ஊத்து மலை' அக்கம் பக்கம் நின்ற பஸ்களில் விசாரித்தார்.எல்லாம் புல்.
    "பேசாம திருச்சி போய், வேற பஸ்ல போய் விட வேண்டியது தாங்கற" முடிவுக்கு வந்தோம்.விழுப்புரம் வரையிலும் ஒரு மாதிரியாக வந்த பஸ் அதைத் தாண்டியதும் இன்னும் வேகம் எடுத்தது.
      ஒரு கட்டத்தில்  டிரைவரை சப்தமாக எச்சரித்த ஊத்துமலை, வண்டி ஓட்டுகிற இடத்துக்கே போய் டிரைவரிடம் "எப்பா நீ ஓட்டுவது கொஞ்சமும் சரியில்லை.பாத்துப்போப்பா"என்றார். டிரைவர் எதையும் காதில் வாங்க வில்லை.
    எதிரே கண்கூசும் விளக்குகளோடு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் நாங்கள் பயணித்த வண்டி கடக்கும் வரை, அடிவயிறு ஒரு கலக்கு கலக்கி நின்றது..
     அந்த டிரைவர் யார் சொல்லியும் கேட்கவில்லை.நான் இருந்த இருக்கைக்கு அடுத்து இருந்த இரும்புத் தூணை பக்கவாட்டில் சேர்த்துப் பிடித்துக்கொண்டேன்.தூக்கம் வரவே இல்லை.என்றைக்கும் இல்லாத பீதியும் பயமும் அடிக்கடி வந்து போனது.

     திருச்சி வரப்போகிறது. அப்பாடி இறங்கிட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு மேம்பாலத்தில் வண்டி ஏறியது. பின்னர் கடும் வேகத்தில் பஸ் இறங்கியது.எங்கள் கண் முன்னேசைக்கிள் டயர் பொருத்திய தள்ளுவண்டியும், அதை ஒருவர் தள்ளிக் கொண்டு போவதும் தெரிந்தது.
  
     அடுத்த கணம் பஸ்சின் முன் கண்ணாடியில் தள்ளுவண்டிக்காரர் வந்து விழுவதும்,பஸ் டிரைவர் சடன்பிரேக் பிடித்ததும் தெரிய முடிந்தது.யாரும் எதிர் பாராத நேரத்தில், இறக்கத்தில் வேகமாக இறங்கிய பஸ் வலது புறமாகச் சாய்ந்தது.ஒரு ஆயிரம் வயலின் சப்தம் ஒரு சேரக் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு
சப்தம் வந்தது.
      இடது கையை அந்த இரும்புத்தூனோடு சுற்றி வளைத்து வலது கையைச் சேர்த்து தலையோடு கட்டிக் கொண்டேன்.முதலில் ஒரு பல்டி அடித்த பஸ் மறுபடியும் உருண்டு பக்கத்தில் இருந்த பள்ளத்தில் பக்கவாட்டில் சரிந்தது.கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே புரியவில்லை.என்ன நடந்தது? என்று அங்கே இங்கே பார்க்கும் போதுதான், தலைக்கு மேலே பஸ்சின் வாசல் படி இருப்பது தெரிந்த்தது.
எனக்கு பக்க வாட்டில் இருந்தவருக்கு இடப்புறம் நான் கிடந்தேன்.என் காலுக்கு ஊடே வேறு இருவர் குப்புறக் கிடந்தார்கள்.எழ  முயற்சித்தேன்.முடியவில்லை.

"தம்பி எழுந்திரியுங்கள் என்று நான் என்பக்கத்து சீட் ஆளை எழுப்பும் போது தான் அவர் உயிருடன் இல்லை என்பது தெரிந்தது.
பாலத்தில் பஸ் முட் செடிகளின் மேல் கவிழ்ந்ததால் அதில் வலுவான ஒரு கிளை அந்த இளைஞரின் நெஞ்சுக்குள்ளே நுழைந்து தெரிந்தது.அவர் இருக்கும் இடம் நாம் இருக்க வேண்டிய இடம் அல்லவா,என்ற அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

எப்படி எழுவதுஎன்றே புரியவில்லை.ஒரு வழியாக சுதாரித்து தலைக்கு மேலே பார்த்தபோது ஊத்து மலையும்.வக்கீல் முருகவேல் அவர்களும் சீட்டுகளின் மேல் கால வைத்து ஏறி பஸ்சின் வாசல் படிப்பக்கம் நின்று கொண்டுஎன்னைத் 'தம்பி' 'தம்பி' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு முன் சீட்டில் இருந்தவர்களும் பிழைக்கவில்லை.

நீ ஏறுகிறாயா?இல்லையா?பஸ் தீப்பிடிச்சுடும்.ஏறுய்யாஎன்று ஊத்து மலை உரத்தகுரலில் என்னை அழைத்தார்.
ஒருவழியாக சமாளித்து மேலே ஏற  எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.இதில் ஊத்து மலை எப்படி ஏறினார் என்று யோசிக்கும் போது தான் அவர் காடு மேடுகளில் வேட்டைக்குப் போன அனுபவம் கொண்டவர் என்பது நினைவில் வந்து போனது.
எங்கய்யா அவன்?நம்மள இப்படி இந்த கதிக்கு ஆக்கின டிரைவரைப் பிடிய்யா” என்றார் மிடுக்கோடு.".

   பஸ் கவிழ்ந்ததும் ஓட்டம பிடித்தவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை என்றார்கள்.பஸ் விழுந்த இடத்தில் இருந்த S.K.எஜன்ஜீஸ் என்கிற பெட்ரோல் பல்க் காரர்களும் அதுக்கு பக்கத்தில் இருந்த ஒர்க் ஷாப் தொழிலாளிகளும் பஸ்சில் மாட்டிக்கொண்ட ஒவ்வொருவரின் உடைமைகளை எடுத்து வந்து கொடுத்தது வாழ் நாளில் மறக்க முடியாததது

   பின்னர் ஒருவழியாக திருச்சி பஸ் நிலையம் வந்து வேறு பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம்.கைகளில் இருந்த மணி பர்ஸ் ,பணமெல்லாம் தொலைந்து நாற்பத்து ரூபாய் மட்டும் பெட்டிக்குள் சில்லரைகளாய் இருந்து அவற்றை கொடுத்து டிக்கட் எடுத்து ஊர் வந்தது   தனிக்கதை.

வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினேன்...காலை  வேளையில் ,நோன்போடு விழித்த கண்களோடு ,  கிழிந்த சட்டை பேண்டோடு என்னை அந்தக் கோலத்தில் பார்த்த என் வாப்பா பதறிப்போய் அதிர்ச்சி ஆகிவிட்டார்....

நடந்ததைச் சொன்னேன்.அழுதேவிட்டார்.



ஞாயிறு, 4 ஜூன், 2017

துபாய் நண்பர்கள் தந்த வரவேற்பு.




துபாய் நாட்டில் அன்பர்கள் தந்த வரவேற்பு
துபாய் நாட்டில், சில தமிழ் நெஞ்சங்கள் தமிழகம் மற்றும் தாய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு உறைவிவிடம் உணவுகள் போக்கு வரத்து மற்றும் அவர்கள் வந்த பணிமுடிக்க மிகப்பெரும் பொறுப்பு ஏற்று இருப்பார்கள்.,..அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தப் பணியினை வைத்திருப்பார்கள்.
ஆனால் துபாய் இ டி ஏ அஸ்கான் நிலைத்தில் பணி செய்யும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பக்கம் உள்ள அரிகேசவ நல்லூர் ஊரைச்சேர்ந்த அன்பு இளவல் செய்யது மீரான் அவர்கள் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் அமீரக துபாய் சார்ந்த நாடுகளுக்கு வருகைதரும் வணிகத்தூதர்கள், அவர் பணி செய்யும் நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள், அதிகாரிகள், இலக்கிய வாதிகள்,எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஉலக மேதைகள், அரசியல் நண்பர்கள், உள்ளிட்ட யாவரையும் இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் அமீரகம் வந்த நோக்கம் முழுமை பெற கடந்த இருபது ஆண்டு காலமாக அரும்பணி செய்து வருகின்றார்.
என் போன்றவர்கள் ஒரு போன் மூலமாகவே அவரைத்தொடர்பு கொண்டு பல்வேறு பொதுக்காரியங்கள்செய்துள்ளோம்.
தமிழகத்தின் எண்ணற்ற இளைஞர்கள் பலருக்கு அவர் மூலமாக பணிவாய்ப்புக்கள் அமீரகத்தில் இன்னும் அரபு நாடுகளில் கிடைத்துள்ளதை பெருமையாகச்சொல்லலாம்.
முதலில் வள்ளல் பி.எஸ்.அப்துல ரகுமான் அவர்களின் உதவியாளராக துபாய் நாட்டில் பணியில் சேர்ந்த செய்யது மீரான் அவர்கள் அடுத்து இ.டி.ஏ.அஸ்கான் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனராக தற்போது துணைத்தலைவராக இருக்கின்ற கீழக்கரை வணிகக் கோமான் , தொட்டதுறைகள் எல்லாம் வெற்றி காணச்செய்த டாக்டர் செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்களின் தனிச்செயலாலரானார்.
எப்போதும் சுறுசுறுப்பு குணம் கொண்ட சகோதரர் மீரான் மீதான நம்பிக்கை, நேரம் காலம் பாராத உழைப்பு, எதனையும் செய்து முடிக்கும் சுறுசுறுப்பான ஆற்றல் இவை தான் சகோதரர் மீரான் அவர்களின் நற்பெயரின் பக்கபலம் என்றே சொல்வேன்.
இந்தியக் குடியரசின் முன்னாள்தலைவர் APJ அப்துல் கலாம் அவர்கள் மீரான் அவர்களை பல்வேறு நிகழ்வுகளில் சந்தித்து அளவளாவியுள்ளார்.
தமிழகத்தின் தனிகரில்லா தனிப்பெரும் தலைவர்களோடு அறிஞர்களோடு,கலையுலக வித்தகர்களோடு கவிஞர்களோடு நெருக்கமான தொடர்பினைப்பெற்றவர்.
எங்கள் பகுதியில் உயர்கல்வி வளர்ச்சி தொடர்பாக ,கடந்த 2014 ஆம் ஆண்டு நானும் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் டி.எஸ்.எம்.ஒ.மஜீத் கல்விக்குழு உறுப்பினர் எம்.ஏ.எஸ்.முகைதீன் அப்துல்காதர் முதலானோர் டெல்லி ராஜாஜி சாலையில் இந்தியக் குடியரசின் முன்னாள்தலைவர் APJ அப்துல் கலாம்அவர்களின் வீட்டுக்கு சென்று சந்திக்க எங்களுக்கு நேரம் கேட்டு வாங்கி ஒதிக்கித்தந்ததே சகோதரர் மீரான் தான்.
அதற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அப்துல்கலாம் அவர்களின் அன்பினைப்பெற்ற நடிகர் விவேக் அவர்களிடமும் , அத்தோடு அப்துல் கலாம் அவர்களின் உதவியாளராக இருந்த பொன் ராஜ் அவர்களிடம் எங்களைப்பற்றி தொலைபேசி வாயிலாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு நலக்காரியங்களில் அவரது பேருதவி மகத்தானது.
என்னிடம் அஸ்கான் டவர்சில் நேரில் சொன்னது போலவே எனக்கு அமீரகத்தில் 26.05.17 அன்று ஒரு பெரிய வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினை ஒரு நட்சத்திர ஓட்டல ஒன்றில் அடுத்த நாளே ஏற்பாடு செய்துவிட்டார்.அவரோடு அன்புத்தம்பி காயிதே மில்லத் பேரவை நிர்வாகி கீழக்கரை ஹமீதூர் ரஹ்மான் ,லால் பேட்டை அன்பு சகோதரர் அப்துல் ரகுமான் , திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தம்பி நியாஸ் அலி,கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி இபுராகிம் அவர்களின் சகோதரர் முஸ்தபா முதலானோர் துணை நிற்க துபாய் தேரா பகுதியில் ஸம்மிட் ஸ்டார் ஹோட்டலில் லிங்க்ஸ் ஹாலில் ஏற்பாடு செய்து இருந்தார்.
நண்பர்கள் சந்திப்பு ஏதாவது ஒரு ஹாலில் இருக்கும் என்று நினைத்தேன்.அங்கே போன பின்னர் நான் மலைத்துப்போய் விட்டேன்....என்னையே நான் திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.
என் குடும்ப மூத்தவர்கள் பெரிய வாப்பமார்கள் அதாவது என் தந்தையை பெற்றெடுத்தவர் மற்றும் அவர்களது சகோதரர்கள் பர்மா கொழும்பு கராச்சி,சிட்டகாங் என்று பறந்து திரிந்து ஜவுளி,நூல்,எண்ணெய் வணிகம் செய்தவர்கள்,
விடுதலைப்போராட்டக் களத்தில் நின்றவர்கள்.
அதன் பின்னர் காயிதே முகம்மது அலி ஜின்னாஹ் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,அவரது தம்பி இந்திய அரசியல் சாசன சபை உறுப்பினர் கே.டி.எம்.அகமது இப்ராகிம் அவர்களின் அரசியல் நட்பில் பயணித்தவர்கள்...
என் தந்தையின் பெரிய வாப்பா அதாவது பெரியப்பா திருநெல்வேலியின் ஜில்லா போர்டு என்று சொல்லப்பட்ட டிஸ்ட்ரிக்ட் போர்டு துணைத்தலைவராக முஸ்லிம் லீக் சார்பாக தேர்வு செய்யப்பட்டவர்.
எனது மாமா வழக்கறிஞர் எல்.கே.எம் அப்துர் ரகுமான் சாகிப் மேலப்பாளையத்தின் முஸ்லிம்லீக் நகர்மன்றத்தலைவராக மூன்றுமுறை பணியாற்றியவர்.
அவர்காலத்தில் தான் நகருக்கு குடிதண்ணீர் வசதிகள் ,மேலப்பாளையம் தாமிரபரணி ஆற்றில் பாலம் , மீன் மார்க்கெட், சாலைகள்,அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முதலானவை ஏற்படுத்தப்பட்டன.
அவர்களின் பிள்ளையாக நான் வளர்ந்தேன். அவர்தான் என்னை மேடைகளில் பேசவும், கவிதைகள் கட்டுரைகள் எழுதவும்,பாடவும் பயிற்றுவித்தார்.
அவர்களாலே தான் என்னால் பள்ளிப்படிப்புக்காலங்களில் நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில் ஏனைய நண்பர்கள் அண்ணாவை, காமராஜரை, கலைஞரை, எம்.ஜி.ஆரை.பேசும் போது காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களை பேசவும் முடிந்தது.
அந்த பயிற்சி தான் என் தந்தைக்கு ஒப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமது, அண்ணன் அப்துல் லத்தீப், அண்ணன் பேராசிரியர் கே,எம்..காதர்முகைதீன்., கல்லிடைகுறிச்சி பன்னூல் அறிஞர் டி.எம்.பீர்முகம்மது , தென்காசி மேடை முதலாளி அவர்களின் மகன்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னூல் ஆசிரியர் ஏ.கே.ரிபாயி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.சாகுல் ஹமீது , கோதர் முகைதீன்,சம்சுல் ஆலம், மேலப்பாளையம் முன்னாள் சேர்மன் எம்.ஏ.எஸ்.முகம்மது அபூபக்கர், ,மற்றும் இளைய தலைமுறை தலைவர்களான சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் அண்ணன் அப்துல் ரகுமான், அண்ணன் காயல் மகபூப், நெல்லை அப்துல் மஜீத் ,கத்தார் நாட்டின் அன்பு நேயர் ஹபீப் முகம்மது, என்று இணைத்தது...
என்னை மாபெரும் மனிதர்களோடு , மாபெரும் சபைகளில் என்னை உட்கார வைத்து அழகு பார்த்த என் தந்தையும், என் தாயாரும் என்னை கைகளில் தாங்கும் என் தம்பியும் ,சகோதரிகளும் என் இக்கட்டான நேரங்களில் எல்லாம் இன்முகம் கொண்டு பாராட்டி நிற்கும் என் அன்பு மனைவியும் , பிள்ளைச் செல்வங்களும் மாசில்லாத குணமுடைய நண்பர்கள் சிலரும்,நினைவில் வந்தார்கள்.
அடிப்படையில் நான் ஒரு விவசாயி....அதற்கப்புறம் கல்விப்பணிகள் செய்பவன்....அப்புறம் இளம் பருவம் முதல் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைத்துக்கொண்டவன்...என்னை எல்லா நிலைகளிலும் அவர்களே. தாங்கிப்பிடிப்பவர்கள்.
என்னை பரிவோடும் கண்ணியத்தோடும் பாசத்தோடும் நடத்தியவர்கள் கீழக்கரை பெருமக்கள்.அவர்களில் வள்ளல் பி.எஸ்.அப்துர் ரகுமான் அவர்கள் முதலாமவர்.
அவரைத்தொடர்ந்து அவர்களின் இளவல்கள் எம்.டி.வாப்பா செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்களும் சின்னவர் சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களும் அதைத்தொடர்கின்றார்கள்.
சீனா தானா வாப்பா அவர்கள் என் தந்தை இருந்தால் என்ன பாசம் பிரியம் காட்டுவார்களோ அதையே தந்து கொண்டு இருக்கிறார்கள்....என்னுடைய வளர்ச்சியின் படிக்கட்டுகள் அல்லாஹ் அவர் மூலமாக அமைத்துத்தந்தான்.
இவையெல்லாம் அந்த மேடையில் நான் அமர்ந்து இருந்த போது என்னுள் கலவையான உணர்வுகளாக வந்து கொண்டே இருந்தது.
எனக்குத்தெரிந்து எனது திருமண மேடைக்குப்பின்னர் என்னை நண்பர்கள் அதிகமாக வாழ்த்தியது இந்த மேடையில் தான் என்பேன்.அல்ஹம்துலில்ல்லாஹ்..
அல்லாஹ் வழிநடத்துவான்...
அந்த மேடையில் என் அன்பிற்கு உரியவர்கள் இருந்தார்கள். வாழ்த்தி பேசினார்கள்.
அவர்களைப்பற்றி தொடர்வேன் .