வியாழன், 2 ஜூன், 2016

அது ஒரு கனாக்காலம் ....

மேலப்பாளையத்தில் நீச்சல் தெரியுமா என்று கேட்கனுன்னா...தப்பட்டா அடிக்கதெரியுமான்னு தான் கேப்பாக..

நாங்கள் சின்ன வயசுப் பய்யங்களா இருந்த போது .....விடுமுறைகள் வந்து விட்டால் எங்க வீட்டுக்குப் பொறத்தாலே ஓடுகிற  பாளையம் கால்வாயில் நீந்தி அழிச்சாட்டியம் பண்ணுவதுதான் எங்க செட்டுகளின்  பொழுது போக்கே.....எங்க ஊரைச்சுத்தி ஓடி....பயிர் பச்சைகளை விளைய வைக்கிற.......அந்தக் கால்வாய்க்கு ஊரு  வச்ச பேருதான் “நம்மாறு”....தாமிரபரணிக்கு பெரியாறுன்னு தான் பேரு.
சேக்காளிகள் ...சங்காத்திகள் ஒன்னு சேர்ந்து கோடைக் காலங்களில் பெரியாத்துலே  தாமிரபரணி ஆத்திலே போய் மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டே  குளிப்பது.....அடடா.....சொல்ல முடியாத சொகத்தைக் கொடுக்கும்....அதுக்கு நிகரா என்னத்த சொல்ல முடியும்?....
டவுசர் போட்டகாலங்களில் அத...... கழ்ட்டி வச்சுட்டு மணிக்கணக்கில் கண்கள் சிவக்க தலைமுடிஎல்லாம் பஞ்சு போலாகி காற்றில் பறக்கும் அளவுக்கு குளிப்போம் குளிப்போம் .....அம்புட்டு நேரம் குளிப்போம்... இதே கோலத்தில் வீட்டுக்கு போனால் அங்கே எங்க வாப்பும்மா தலைமையில் விசாரணை நடக்கும்....
வீட்டுக்கு போக முன்னாலேயே கோணத்து கடையில் மூனு பைசாவுக்கு கரண்டி நிறைய ஸ்டார் ஆயில் வாங்கி தலையில்..... தேச்சிட்டு...அது . ஒழுகி நெத்தி,மூஞ்சி பூராவும் படருகிற அளவில் தான் வீடு போய் சேர்வோம்...
எதுக்காம்?.....குளிச்சது தெரியக்கூடாது என்பதுக்காம்...
ஏதாவது சேட்டை கீட்டை பண்ணி, வழக்கமா எங்களுக்கு விழுகிற அடிகளை தடுத்து நிறுத்தி எங்களைப்  பாதுகாக்கும் வேலைகளை வாப்பும்மா ரொம்ப கவனமா செய்வா.....
ஆனா வாய்க்காலில் குளிச்சு முடிச்சு....தும்மல் விழ வீட்டுக்கு போனால்......அஞ்சாறு அடிகள் அவ கிட்டே இருந்துதான் விழும்..வீட்டுக்குள் நுழைந்தவுடன் கேப்பாள்....
“எலே.....எங்கல போன”?....
“நா....இங்கன தானம்மா நின்னேன்...”
“பொய் சொல்லப்படாது.....மறைக்காம சொல்லு”..... என்று அவ கேக்கும் போது .....வேற எதையும் பேச  முடியாமல் ‘ கல்லூளிமங்கான் ‘ முழி தானாவே வந்துடும்...
போவியா?.....போவியா?....வாயில் இருந்து வார்த்தைகள் வரும்போதே....முதிகில் ரண்டு விழும்......வீராப்பா அடி விழுந்த வலியை..... வெளியே காட்டாமல் .....கண்ணைக் கசக்கிட்டே நிப்பேன்.....கொஞ்சமாவது கண்ணில தண்ணி வந்தாத்தானே....அவ முறைக்கிரதை விடுவா...”.மூஞ்சியப் பாரேன்....மூஞ்சிய...”....அதோடு...... அவளோட.... தாக்குதல் முடிஞ்சிடும்.
“இனி அப்படிப் போகப்டாது...” என்பாள்.
“ உன்ன எங்கனைஎல்லாம் போய்த்  தேட?...நீ ஊடு வந்து சேருற வரைக்கு பயமா இருக்கு.....நெல கொள்ள மாட்டேங்கு........இனிமே இப்பிடி போனே?....அவ்வளோதான் பாத்துக்கோ....பெர்னா சார்கிட்டே போய் சொல்லிடுவேன்.......நீ படிச்சுக் குடுத்த ஆ.....க்கம் இது தானா?....ன்னு   போய் கேட்டுட்டு வந்துடுவேன் ”..... என்று சொல்லி கடும் மிரட்டல் விடுவாள்..
பெர்னா சார் பகவதியா பிள்ளை எங்க பக்கம் கடுமையான வாத்தியார்.....நாங்கல்லாம் அவர்கிட்டே எத்தனை வருஷம் படிச்சோம்னு சொல்லிக்க முடியாது....நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பொளுகிற வேளையில் பள்ளிக் கூடம் விட்டு, வந்து அவர் வீட்டுக்கு டீயுசன் படிக்க அனுப்பிருவாங்க..
அதென்ன பெர்னா சார்?....ஆங்கில மேதை ,அறிஞன் பெர்னாட்ஷா பேர் அவருக்கு யாரும் வச்சாங்களோ?....இல்ல அவராவே அத வச்சிகிட்டரோ?....ன்னு யாருக்கும் விளங்கியதில்லை.அந்த பெர்னாட்ஷா பேருதான் பெர்னா சார்வாள்ன்னு பரவிடுச்சு....


அந்த மாபெரும் மேதை அவர்கிட்ட படிக்கிற பையங்க கையெழுத்தை ரொம்பநல்லாஆக்கிப்புடுவார்.... சும்மா இருக்கிற நேரம்......தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருக்குறள்.....பாரதியார் பாடல்கள், விநாயகர் பாடல்கள் பாடுவார்....திருவாசகம் பாடும்போது பல நேரங்களில் குரல் கம்மிப் போய் அழுதுவிடுவார்....சார்வாள் ஒரு கண் பார்வை கொண்டவர்..... ஆகையால்...அந்த நேரம் .......அவர் அழும்போது நாங்களும் சேர்ந்து  அழுதுடுவோம்...மழை வந்தால் பள்ளிக் கூடத்துக்கு லீவு தான்....காரணம் அவர் வீட்டில் வகுப்புகள் நடந்த இடம் ஒலைக்கூரைகளால் ஆனது....எப்படியும் மழைக் காலத்திலேயே மாசம் பாதி நாள்..... வகுப்பு நடந்தாலே ஆச்சரியம் தான்..
இதெல்லாம் எதுக்கு சொல்ல வந்தேன்னா?........வீட்டில பெத்தும்மா.....உம்மா, வாப்பா கண்ணைத்தப்பி நம்மாத்திலே போய் நீச்சலடிச்சு.....குளிச்சு வந்த கதையை சொல்லும் போது வருவது ....
ஒரு ஆறு...... ஏழு  படிக்கிற காலத்தில்....உள்நீச்சல்..... எதிர் நீச்சல்..... மழைக்காலத்தில் வேகமாக பெருகி வெள்ளம் ஓடும் ஆத்தில்  ....நீச்சல் போடும் தைரியம் கொண்டு இருப்போம்...
ஆனா....எல்லா மக்களும் அவ...... அவ வீட்ல பாத்  ரூம் கட்டி.....  குளிக்க ஆரம்பிச்ச பொறவு ....ரண்டு நடந்துது.....ஒன்னு ஒவ்வொரு வீட்டில இருந்தும் ஏராளமா....... கழிவு நீர் பெருகி ஓடி....  மலச்சாக்கடை  தண்ணியும்....வாறுகாலில் சேர்ந்து  மேலப்பாளையம் காட்டுத்தெருல ஆரம்பிச்சு....ஊர் முழுக்க 80 க்கும் மேற்பட்ட கழிவு நீரோடைகள் ....கால்வாய்  தண்ணியில்   கலந்து ....மொத்தமா பெருகி ........ பாளையங்கால்வாயை ...நம்மாத்தை கூவமாக்கிடுச்சு.....இந்தக் கொடுமை 1987 ஆம் வருஷத்தில் தான் துவக்கம் கொண்டது....
இப்போ யாரும் வாய்க்கா பக்கம் போறதும்  இல்லை...சட்டிப்பானைகள் கழுவ.....துணிமணிகள் துவைக்கக் கூட அங்கே செல்வதில்லை...செல இடங்களில் ...தூண்டி போட்டு ...அல்லது வல வீசி மீன் பிடிக்கிற ஆட்கள் கூட ....தூரமாய் போகிற அளவுக்கு நம்மாறு ஆகிவிட்டது... ...இந்த கொடுமைக்கு யார் காரணம்?.....
மையித்துகள் குளிப்பாட்ட....சோறாக்க.....பாளையங்கால்வாயில் ..... இளைஞர்கள்....கொடத்த வச்சு தண்ணி மெத்திக்கிட்டு  போவாங்க..... கல்யாணத்துக்கு மறுநாள் புதுப்பெண்கள்.......குளிச்சு முடிச்சு ....அந்த ஆத்து நீரை செப்புக்குடத்தில்  பிடித்து..... தூக்கி இடுப்பில் கொண்டு போவார்கள்.........
சாக்கடை கலந்த அநியாயம் ..... இப்போது..... அந்தத்  தண்ணிய சீண்டுவார் யாருமில்லை...அந்த தண்ணீர் என்ன பாவம் செய்தது?
இன்னொன்னு 1987க்கு பொறகு பொறந்த மேலப்பாளையத்து....பையங்களுக்கு  நீச்சல் என்பதே தெரியாமப் போச்சு....அதனாலே ஒரு முப்பது வருஷத்திலே....80 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மூச்சு திணறி தாமிரபரணியிலும் ....பாளையங்கால்வாயிலும்  மூழ்கி இறந்து போய் இருக்கிறார்கள்....
வீட்டுக்கு வீடு நீச்சல் தெரிஞ்சவர்கள் இருந்த ஊரா இன்னைக்கு இப்படி  ஆயிடுச்சு?.....இத மாத்த வழியே இல்லையா?....
பாதாள சாக்கடைகள் அமைக்கப்பெற்ற தெரு வாசிகளும் ....அவர்கள் வீட்டு சாக்கடை தண்ணியை வீட்டுக்கு வெளியே தான் விடுறாக...பல வீட்டு கழி ப்பறைகளுக்கு “ செப்டிக் டாங்கே ”.....வச்சு கட்டுறதில்லை...அவன் வீட்டு கழிவுகள் ....அடுத்தவன் வீட்டுக்கு பக்கத்தில் போய் ....நாத்தக் காடாக்குவதை யாரும் கண்டிக்க முடியவில்லை...இதையெல்லாம் ஒட்டு மொத்தமா சரி செய்ய எத்தனை வருஷங்கள் ஆகப் போகுதோ?..தெரியல்லை...அது முடிஞ்சா பொறவு நம்மாத்திலே போய் மக்கள் குளிக்க ஆரம்பிச்சு....எப்பிடி தப்பட்டா அடிக்க பழகுவாங்களோ?.....
ஆனா....ஒன்னு செய்யலாம்.....ஊரில் நீச்சல் குளங்கள் ஏற்படுத்தலாம்....அதிலே பிள்ளைகள் நீஞ்ச..படிக்கலாம்..படிக்கணும்...மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேர்மன் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்களையும் பொருளாளர் டி.எஸ்.எம்.ஒ.மஜீத் அவர்களையும் குற்றாலம் செய்யது உறைவிடப்பள்ளிக்கு அழைத்துப் போய்,அங்கு உள்ள நீச்சல் குளத்தை காட்டி வந்தேன்.....அது போல மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காலியிடத்தில் நீச்சல் குளம் ஒன்று அமைக்க வேண்டுமென கட்டாயப் படுத்தி  இருக்கிறேன்.....நிதி தான் வேண்டும்....தேவைப்படுகிறது.
நீந்தத்தெரியாததால் நீர்ச்சுழலில் சிக்கி வாழ வேண்டிய இளங்குருத்துக்கள் பலர்  மூச்சடங்கி மாண்டு போய்விட்டார்கள்........ வசதி வாய்ப்புகள் கொண்ட  இளைஞர்கள் நீச்சல் குளங்கள் அமைக்க உதவி செய்யவேண்டும்.... .......அவர்கள் உதவுவது...வருங்காலத்து பிள்ளைகளின்  உயிரைக்  காப்பாற்றச் செய்கிற உதவி என்பதை அறிவார்கள் என ....நம்புகிறேன்..உருவாகும் பயிற்சிக்களத்தில் வீட்டுக்கு ஒருவர் நீச்சல் பயிற்சினை பெறுவார்கள்....வருங்கால இளைய தலை முறைகளை பாதுகாப்பார்கள்..இறைவன் துணை நிற்பான்.

மேலப்பாளையத்தில் இளைஞர்கள்...இளைய தலைமுறையினர் நீச்சல் பயிற்சி பெற,  நீச்சல் குளம் அமையப்பெற வேண்டும்...என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திச்சொல்லுகிறேன்... 




1 கருத்து:

Abu Roshni சொன்னது…

வாய்காலில் நீச்சலடிக்கும் கதையை சொல்லி,எங்களை பழைய காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் அண்ணே