வெள்ளி, 11 அக்டோபர், 2024

மைக் செட் காரர்களும் ,ரெக்கார்டு பிளேயர்களும்

எங்களுடைய சின்ன வயசுக் காலங்களில்.... சினிமாப் பாடல்கள், இசை முரசு நாகூர் ஹனிபா , மகாதானபுரம் உசேன் பாகவதர் , திருச்சி இசைமணி யூசுப் பாடல்கள்....
 தியாகராஜபாகவதர், பி யு சின்னப்பா, டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், பி லீலா, சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, ஜானகி, எஸ் பி பாலசுப்ரமணியம் இவங்க பாடல்களை கேட்கணும்ன்னா  ரேடியோல தான் கேட்கணும். அல்லது ரெக்கார்டு பிளேயர்களில் இசைத் தட்டு போட்டு தான் கேட்கணும்.

 அந்தக் காலத்து ரேடியோக்களில் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் காலையில்  அல்லது அவங்க போடுற நேரங்களில் தான் கேட்க வேண்டும்.

அல்லது
 கொழும்பிலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி மூலமாக ஒலிபரப்புகளைக் கேட்க வேண்டும். 

காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மதியம் 12 முதல் மாலை 6 மணி வரையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்புகள் எங்க திருநெல்வேலியில் தெளிவாகக் கேட்கும். 
ஆமடே... கிழக்க காயல்பட்டினம் ஒரு முப்பது மைல்.... அங்கருந்து கொழும்பு 40 மைல்... வேற கேட்காம என்ன செய்யும். ஆனா கொழும்பு கேட்கிற மாதிரி நம்ம திருநவேலி தெளிவா இல்லியே... 

கொட்டுச் சத்தம்லாம் அதான் .... தபேலா...மியூசிக் லாம் என்னமா போடுறான். திருநவேலி அப்படி இல்லையே. என்று சொல்வார்கள். 

கொழும்பு ரேடியோ கிடைக்கணும்னா வீட்டுக்கு மேல ரெண்டு மூங்கில் களைகளைக் கட்டி அதற்கு இடையில் கருப்பு தார் மொழுகப்பட்ட வயர் கட்டி..
. அதிலிருந்து நேரா ரேடியோ பெட்டியில் பொறுத்த... ஏரியல் என்று எழுதப்பட்டுள்ள துளையில் அந்த வயரை கொண்டு சேர்ப்பார்கள். 

தப்பித்தவறி அந்த வயர் தொடர்பு அறுந்து போய்விட்டால் வானொலியை கேட்க இயலாது. டர்ர்ர்..ன்னு எறஞ்சிக் கிட்டே இருக்கும்.

மேலப்பாளையத்தில் அந்தக் காலத்துத் தெருக்கள் 64 என்று சொல்லுவார்கள். 

ஒரு தெரு மூன்று துண்டாக இருந்தால் அதையும் மூன்று என்று பெருக்கிக் கொள்வார்கள். 
யானை போற 64 தெரு என்று சொல்வார்கள்.

அந்த 64 தெருக்களுக்கு யானை சுத்தி வரணுமே.... எவ்வளவு நேரம் ஆகும் என்று யான காரனும்.... யானை கூட வருகிற மகா ரசிகர்களும் கவலைப்படுவார்கள். 

 கடைசியில் யானை வருகிற தெருவில் உள்ளவர்களிடம்... ... எங்க தெருவுக்கெல்லாம் காலையிலயே வந்திடும்..வெளிச்சத்தோட யானை வரத பாக்கணுமே ஆஹா அப்படின்னு பெரிய கிளவி கீழாப் பாளையத்தா சொல்லிக் கொள்வாள்.

கீழப்பாளையம் ஒன்னும் ரொம்ப மைலுக்கு அப்பால் உள்ள இடமில்லை.

 .மேலப்பாளையத்தில் உள்ள ஜின்னா மைதானத்திற்கு வடக்க.... குண்டு தெருவுக்கு கிழக்க.... உள்ள பகுதிதான் அது. 

ஆனாலும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சங்களில்.... யானை நடந்து வருவது அதுவும் இரண்டு யானைகள் நடந்து வருவது சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு கொஞ்சம் பீதியவே கொடுக்கும்.

பெருசுகள்... என்னா ஜோரா இருக்குன்னு சொல்லுவார்கள்.
யானைக்காரனிடம் கெஞ்சி கொடி மேல் இருக்கிற மல்லிகை பிச்சப் பூவை வாங்குற கோஷ்டிகளும் உண்டு. 

கொஞ்சம் வசதியான வீடுகள் பார்த்து யானை மூக்கில் தண்ணீர் ஊற்றி அங்கே நிற்கிற பெரியவங்க ...சின்னவங்க மொகரையில் பீச்சி அடிக்க ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு யானைப்பாகங்கள் போவார்கள். 

சில தெருக்களில் குழந்தைகளை யானையின் மீது ஏற்றி கொஞ்ச தூரம் போவதற்கு ஐந்தோ பத்தோ ரூபாய் வாங்கிக் கொள்வார்கள்.
அப்படியா பட்ட 64 தெருக்களில்... தெருவுக்கு நாலோ ஐந்தோ வானொலிகள் இருக்கும். 
சில வீடுகளில் அந்த ரேடியோ பெட்டிகளில் இணைத்துக் கேட்கக்கூடிய ரெக்கார்டு பிளேயர்களும் இருக்கும்.

 அதுக்கு ரேடியோகிராாம் என்று பெயர். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் சில வீடுகளில் கிராம போன் பெட்டியும், சில வீடுகளில் ரெக்கார்டு பிளேயரும் இருந்தன. 

எங்கள் வீட்டில் இருந்ததனால் எனக்கு சிறிய வயது முதல் அது அறிமுகம்.

அதத் தாண்டி அந்த ரெகார்ட் பிளேயர் 
 மைக் செட் காரர்களிடம் மட்டுமே இருந்தன. 

கல்யாண வீடுகள் திருவிழாக்கள்  இங்க ரெக்கார்டுகள் போட வேண்டுமென்றால் மேலப்பாளையத்தில் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சிலர் இருந்தார்கள். 

அந்தக் காலத்து பேமஸ் ஒலிபெருக்கி ஆர் எம் ஏ அப்துல் சமது வைத்திருந்த அன்வர் ஒலிபெருக்கி, மைலக் காதர் தெரு மூப்பன் அத்துக்கா சாகுல் மீது சகோதரர்கள் வைத்திருந்த அக்பர் ஒலிபெருக்கி, காஜா நாயகம் தெருவில் கல்வத் ஒலிபெருக்கி , இன்றைய தன்ஷித் ஓட்டல் உள்ள வரிசையில் கணபதி கடைக்கு அடுத்து அன்பு ஒலிபெருக்கி இருந்தது. அன்பர் ஒலிபெருக்கி என்றும் ஒன்று உண்டு. சித்தர் நாகூர் தன்னுடைய பெயரில் நாகூர் ஒலிபெருக்கி என்று வைத்திருந்தார். 

பிந்திய காலங்களில் சேப்பிள்ளை குடும்பத்தில் காஜா மொய்தீன் ரஹ்மத் ஒலிபெருக்கி வைத்திருந்தார். 
அதுக்கு எலலாம் பிற்பாடு தான்
 ரகுமான் வந்தார். 

அந்தக் காலத்து சவுண்ட் சர்வீஸ் காரர்கள் தங்களை ஒலிபெருக்கி என்கின்ற பேரோடு மட்டும் அழைத்துக் கொண்டார்கள். சிலர் ஒளி ஒலி அமைப்பாளர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள். 

ஒலிபெருக்கி சர்வீஸ் மட்டும் வைத்துக் கொள்ளாமல் அலங்காரமாக சீரியல் விளக்குகள் அமைப்பது,  டியூப் லைட்டுகளை  V வடிவில் பந்தல் தூண்களில் ஒரு பக்கமாக சாய்த்துக் கட்டுவது , ஒரு போர்டில் விளக்குகள் அமைத்து அதைப் பல விதமான வண்ணங்களில் மிளிரச்செய்வது போன்ற வேலைகளையும் செய்தார்கள்.

மைக் செட் உரிமையாளர்கள் மத்தியில் யார் பெரிய ஆள் என்று கொஞ்சம் வியாபாரம் போட்டி மனப்பான்மையும் அவ்வப்போது இருக்கும். 

அப்படி வியாபாரப் போட்டி மேலப்பாளையம் ஆர் எம் ஏ அப்துல் சமது சவுண்ட் சர்வீஸுக்கும் அக்பர் ஒலிபெருக்கி அத்துக்கா சாகுல் அமீது சவுண்டு சர்வீஸ்க்கும் நடக்கும். 
அக்பர் ஒலிபெருக்கி உரிமையாளர் தன்னுடைய பணியாள் மூலமாக "நான் போட்டால் தெரியும் போடு.... தமிழ் பாட்டால் அடிப்பேன் ஓடு"  என்கிற டி எம் சௌந்தராஜன் பாடிய எங்க பாப்பா படத்தின் பாடலை முதலாவதாக போடுவார். 
அதற்கு பதில் சொல்லும் விதமாக ஆர் எம் ஏ அப்துல் சமது அவர்களின் அன்வர் ஒலிபெருக்கி காரர்கள் " வாடா மச்சான் வாடா.... ஏடா ..
மூடா... உந்தன் ஜம்பம் எங்கிட்ட பலிக்குமாடா"  என்கிற டிஎம் சௌந்தரராஜன் அன்று கண்ட முகம் படத்தில் பாடிய பாடலை பதிலுக்கு போடுவார்கள். 

மைக் செட் காரர்களிடம் சண்டை வந்துவிடும் அளவிற்கு போட்டிகள் இருந்தன. 
பொதுவாக.... அல்லது
அனேகமாக கம் செப்டம்பர் என்கிற ஆங்கில பெயரில் வெளிவந்த ஆல்பத்தில் உள்ள இசையமைப்பாளர் அமைத்த அந்த டியூன் முதலில் போடுவார்கள். 

திருமண வீடுகள் என்றால் அங்கே உசேன் பாகவதர் பாடிய தக்கலை பீர் முஹம்மது அப்பாவின் ...தனைத்தேரும் காயம் சூழலும் என் நாவில் தான் தொலைந்தால்.... என்கிற ஞானப் புகழ்ச்சி பாடல், அல்லது அல்லாஹு எண்ணுங்கள் சதாகாலம் என்கிற பாடலும் ஒலிக்கும்.

சகோதர சமுதாய நிகழ்வுகளுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஏ பி என் சேதுராமன் பொன்னுசாமி வாசித்த நகுமோ மு... நாதஸ்வர தவில் இசை ஒலிபரப்பாகும். அதை மாதிரி கடைசி இசையும் அதுதான்.

ஒரு காலத்து மேலப்பாளையத்தில் திருமணங்கள் நடக்கும் போது குழாய் வைத்து பாடல்கள் ஒலிபரப்புவது வழக்கமாக இருந்தது. 

கொஞ்சம் பெரிய ஆட்கள் வீட்டில் நாகூர் ஹனிபா, உசேன் பாகவதர் திருச்சி இசைமணி யூசுப் பாடல்கள் போடுவார்கள். 
திமுக அபிமானிகள் வீட்டில் எம்ஜிஆர் பாடல்களும் , காங்கிரஸ் குடும்பத்து வீடுகளில் சிவாஜி பாடல்களும் தெருவில் ஒலித்துக் கொண்டே இருக்கும். 

என்னா சத்தம் ....என்னா சத்தம் காதே செவிடாகி விடும் போலிருக்கிறது என்று சொல்லிக் கொள்வார்கள். 

கல்யாண வீட்டுக்காரன் பாட்ட போட்டா... போட்டுத் தொலைகிறான். என்று சொல்பவர்களும் உண்டு. 

சில தெருக்களில் கந்தூரி வந்துவிட்டால் அப்பொழுதும் போடுவார்கள். 

மேலப்பாளையத்தின் சவுண்ட் சர்வீஸ் காரர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள கோயில் சர்ச் திருவிழாக்களுக்கு சென்று நாட்கணக்கில் தங்களுடைய ஒளி ஒலி அமைப்பு வேலைகளை செய்வார்கள். 

முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் பகுதிக்கு பக்கத்தில் உள்ள சகோதர பெருமக்கள் வாழக்கூடிய பகுதிகளில்,  கல்யாணம் எல்லாம் வீட்டு வாசலில் வைத்து தான் நடக்கும் அல்லது வீடுகளுக்கு உள்ளே வைத்து முற்றங்களில் பந்தல் போட்டு நடத்துவார்கள். 
இப்ப மாதிரி கல்யாண மண்டபங்களுக்குப் போய் நடத்துவது என்பது ரொம்ப அபூர்வம். 
குறுக்குத்துரை முருகன் கோயில், நெல்லையப்பர் கோயில், சாலைக் குமாரசாமி கோயில் என்று போய் தாலி கட்டி விட்டு இங்கே வந்து சடங்குகள் செய்வார்கள். 
கொஞ்சம் பேரு அமர்ந்து சாப்பிடுவார்கள் அவ்வளவுதான். 
அங்கேயும் ரெக்கார்டுகள் ஒலிபெருக்கிகள் மூலமாக ஒலிக்கும். 

எங்கப் பக்கத்து அம்மன் கோயில் வருஷ கொடை நடக்கும் போது.... ஒரு ரெண்டு மூணு நாளைக்கு பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். 
பெரும்பாலும் டி எம் சௌந்தர்ராஜன்,  சீர்காழி கோவிந்தராஜன் , தண்டபாணி தேசிகர் பாடுகிற பாட்டாகவே இருக்கும். 

பிற்காலத்தில் பி சுசிலா பாடிய மாணிக்க வீணை ஏந்தும் பாடலும் எல் ஆர் ஈஸ்வரி பாடிய செல்லாத்தா ....மாரியாத்தா பாடலும் ரொம்ப ஃபேமஸ். 

ஒரு காலத்தில் வெளிவந்த ஒரு ரெக்கார்டில் டி எம் சௌந்தரராஜன் முருகா என்றழைக்கவா.... முத்துக்குமரா என்றழைக்கவா ....கந்தா என்றழைக்கவா கதிர்வேலா என அழைக்கவா.... எப்படி அழைப்பேன்..
 உன்னை எங்கே காண்பேன் என்று பாடியிருப்பார். 

அதே ரிக்கார்டில் அடுத்த பக்கம் முருகனென்ற ழைத்தால் என்ன.. குமரன் என்று ரைத்தால் என்ன....
கந்தன் எனச் சொன்னால் என்ன ....
கார்த்திகேயன் என்றால் என்ன ....எப்படியும் அழைக்கலாம் எங்கிருந்தும் பார்க்கலாம்...
என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார். 
அந்தப் பாட்டைக்கேட்பதற்கு எங்கள் பக்கம் உள்ள பல பெருசுகள் கோயில் வாசலில் இருப்பார்கள். 
அது ஒரு ரெக்கார்டு தான். 

கந்தூரி நாட்களில் மீரா பள்ளிவாசல் மினாராவின் மேல்தட்டில் மிக நீண்ட குழாய் ஒலிபெருக்கி வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து வருகிற பாட்டுச் சத்தம் பாதி ஊருக்காவது கேட்கும். 
10 நாட்கள் தொடர்ந்து அந்தச்சத்தம் ஓயாது.
காலையிலும்  மாலையிலும் நாகூர் ஹனிபா பாடல்கள் ஒலிக்கும். 
இரவு 8 மணிக்கு மேல் சினிமா பாடல்கள் தான். 
விளம்பரம் செய்கின்றவர்கள் இடையிடையே மேலப்பாளையம் வியாபாரிகளின் விளம்பரத்தை சொல்லிவிட்டு மவுத் ஆர்கன் வைத்து ஒரு சவுண்ட் கொடுப்பார்கள். அது வித்தியாசமாக இருக்கும். 

ஒரு எம்ஜிஆர் பாட்டு,  ஒரு விளம்பரம்... அப்புறம் சிவாஜி பாட்டு , விளம்பரம். சில வேலைகளில் ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் பாடல்களும் போடுவார்கள். 
என் சிறு வயதில் அங்கே கேட்ட எம்ஜிஆர் சிவாஜி பாடல்கள் அல்லது நாகூர் அனிபா பாடல்கள் இன்று கேட்டாலும் மீரா பள்ளிவாசலும் அதன் குழாயில் ஒலித்த பாடல்களும் தான் நினைவுக்கு வருகின்றன. 

மீரா பள்ளிவாசலில் இருந்து ஒரு 100 அடி தூரத்தில் தான் என் தாய் வீடு இருந்தது. 
விழாக்கள் நடக்கின்ற காலங்களில் அங்கே இருந்து ,அந்த கந்தூரி கடைகளை எல்லாம் பார்ப்போம். 
இன்றைக்கு பொருட்காட்சிகளில் என்னென்ன கடைகள் எல்லாம் போடுகிறார்களோ அதே கடைகளை, மலிவு விலை சாமான்கள் விற்பதற்காக அங்கே போடுவார்கள். 
பெண்கள் அணியும் வளையலிலிருந்து... கொண்டையில் மாட்டுகின்ற  சமாச்சாரங்கள்.... குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள் என்று வியாபாரங்கள் பரபரப்பாக நடக்கும். 
அந்த காலத்தில் மேலப்பாளையத்தில் பேமஸ் ஆக இருந்த அலாவுதீன் ஸ்டோர் லாலா மிட்டாய் கடை தகர கொட்டகை அமைத்து ஒரு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குநடத்துவார்கள். சிறிய அளவிலான ராட்டினம், கொடைராட்டினம் அங்கே இருக்கும். 
1975- 80 காலகட்டங்களில் எங்கிருந்து வருகிற நாடோடி கூட்டத்தினர் கதாநாயகர்கள் போல வேசமிட்டு கொண்டு பாடல்கள் பின்னணியில் ஒலிக்க ஆடல் பாடல் நடத்துவார்கள். 
அப்படி ஆடுவோர்களை பார்க்கும்போது அவர்கள் சோகமே இல்லாதவர்கள் என்று தோன்றும். எப்போது முகத்தில் ஒரு செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபளப்பாக இருக்கும். சில வேளைகளில் சிறிய அளவிலான சர்க்கஸ் காட்சிகள் கூட அங்கே நடக்கும். 

இன்னைக்குப் பிள்ளைகளிடம் ரெக்கார்டு பிளேயர் என்று விளக்கம் சொன்னால் அவர்களுக்கு புரிவதில்லை. 
ஒன்னரை சான் வட்ட வடிவில் கருப்பு நிற அரக்கு தட்டுகள் ஒரு மோட்டாரில் ஓடும். ஓடுகிற அந்த தட்டின் மீது ஊசி ஒரு கைப்பிடியோடு உரசி செல்லும். 
அதிலிருந்து வருகின்ற ஒலி ஆம்ப்ளிபையர் மூலமாக ஸ்பீக்கர்களுக்கு செல்லும். 
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடக்கும்போது காலையிலிருந்து ரெக்கார்டு பிளேயர் வைத்து தங்கள் கட்சி கொள்கை பாடல்களை போடுவார்கள். திமுக கூட்டங்களில் நாகூர் அனிபா கொள்கை பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும். 
கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, 4 கோடி மக்களுக்கு தலைவன், கழகம் நல்ல கழகம், ஓடி வருகிறான் உதயசூரியன் தமிழகத்தின் தவப்புதல்வன் தரணி போற்றும் செயல் வீரன் அமுத வாஞ்சை நிறைந்த அன்னை அஞ்சுகத்தின் செல்வ மகன் அண்ணாவின் தம்பி அவன் என்று நீண்ட எடுப்புக்களோடு உள்ள பாடல், எஸ் சி கிருஷ்ணன் பாடிய திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பாடல் பிற்காலத்தில் இறையன்பன் குத்தூஸ் பாடுகிற பாடல் ஒலிபரப்பாகிறது.

முஸ்லிம் லீக் கூட்டங்களில் நாகூர் ஹனிபா பாடல்கள் மட்டும் போடுவார்கள். ஒரு காலகட்டத்தில் அத்தோடு ஏ ஆர் ஷேக் முகம்மது பாடல்களும் ஒலிக்கும்.

1972 ஆம் ஆண்டு துவக்கம் செய்யப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக் கட்டங்களில் 1977 வரை எம்ஜிஆர் சினிமா படப் பாடல்கள் தான் ஒலிக்கும். 

1977 பொதுத் தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் மக்களாட்சி மலர வேண்டும் அண்ணா திமுகவுக்கு ஆதரவு தாருங்கள் என்று அவரது பேச்சை பதிவு செய்த இசைத்தட்டு எல்லா கூட்டங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும். வாசலெங்கும் இரட்டை இலை கோலம் போடுங்கள்....,
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் எந்த கரங்களோ..., புரட்சித் தலைவர் வழி நடப்போம் ...புதிய சமுதாயம் இனி அமைப்போம் என்ற பாடலும் ஓடிக் கொண்டிருக்கும் 

காங்கிரஸ் கட்சிக்கூட்டங்களில் பெருந்தலைவர் காமராசரை வாழ்த்திப் பாடுகிற பாடல்கள் ஒலிக்கும். அவை மிகக் குறைவானதாக இருக்கும். 

நர்மதை ஆற்றின் கரையில் பிறந்தார் காந்தி மகான் என்று டி எம் சௌந்தராஜன் பாடுவார். பெரும்பாலும் சிவாஜி நடித்த படங்களில் உள்ள பாடல்கள் தான் போடுவார்கள். 
திமுக நண்பர்களைப் பார்த்து கேள்வி கேட்கிற மாதிரி உள்ள சில பாடல்களும் ஒலிக்கும். தங்கப்பதக்கம் படத்தின் வசனங்களை காங்கிரஸ் கூட்டத்தில் ரெக்கார்டு போடுவார்கள். 
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் காங்கிரஸ் கூட்டத்தில் " என்னய்யா பாட்டுகள் கட்டியிருக்கீங்க....

 திமுக காரனை பாருங்க. ஓடி வருகிறான் உதயசூரியன் என்று நாகூர் ஹனிபா பாடும் போது திமுக காரங்கள் எல்லாம் ஓடி வருவார்கள். அழைக்கின்றார் அண்ணா பாட்டைக் கேட்கின்றவர்கள் அண்ணா பக்கத்தில் நின்று அழைப்பதாக எண்ணிக் கொண்டு போவார்கள். 
நம்ம கட்சியிலும் பாட்டை போடுகிறார்கள். உன்னைப் போல் ஒருவன் உண்டோ உத்தமனே.... என்கிற பாடல் ஒப்பாரி வச்சி அழுவது  போல் இருக்கிறது"...... 
என்றெல்லாம் கேலி கிண்டல் செய்வார். 

ஒரு காலத்தில் ஒரு பக்கத்தில் 3.20 நிமிஷங்கள் போடக்கூடிய பாடல்கள் மட்டுமே அமைந்திருக்கும். 
அந்த அளவுக்குள் தான் பக்தி பாடல்கள் ,அரசியல் கட்சி பாடல்கள்,  சினிமா பாடல்கள் அமைந்திருக்கும். அதன் பிறகு ஒரு பக்கத்தில் ஒரு பாடல் என்கிற நிலைமை மாறி ஒரு பக்கத்தில் நான்கு அல்லது ஐந்து பாடல்களும் மறுபக்கத்தில் நான்கு அல்லது ஐந்து பாடல்களும் பதிவு செய்து ரெக்கார்டுகள் வெளிவந்தன. 
அதன் பிறகு ஒரு பக்கத்தில் பத்து பாடல்கள் மறுபக்கத்தில் பத்து பாடல்கள் என்று சொல்லப்படக்கூடிய அளவில் எல் பி லாங்க் பிளே ரெக்கார்டுகள் வந்தன. ஒரு காலகட்டத்திற்கு பிறகு சிடி பதிவுகள் மிகத் துல்லியமான அளவோடு ஒரு பக்கத்தில் 10 அல்லது 15 பாடல்களோடு வந்தன. 
அதற்குப் பின்னணி mp3 சிடிகள் 150 பாடல்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டு வந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது. 
தற்போது பென்டிரைவ் மூலமாக ஆயிரக்கணக்கில் பாடல்களை சேகரித்து கேட்க முடிகிறது. 
ஆனாலும் அந்த கருப்பு அறக்கு தட்டு ரெக்கார்டுகள் தந்த இனிமையை இப்போதைய mp3 சிடி தட்டுகள் பென்டிரைவுகள் தர முடியவில்லை. 
இன்றும் மேலை நாடுகளில் இசை விற்பன்னர்கள் தங்களது பாடல்களை அரக்கு தட்டுகளில் பதிந்து பாதுகாத்து வெளியிடுகிறார்கள். 
அரக்குதட்டு ரெக்கார்டுகளை பார்த்தவுடன் இத்தனை சிந்தனைகள் நினைவுகளோடு வந்தன.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அன்வர் ஒலிப்பெருக்கியில் முதல் பாட்டு கம்செப்டம்பர் பாடல் தான்,கேட்டவுடன் ஓ
அன்வர் ஒலிப்பெருக்கி என
அறிவோம். அந்த காலம் இனி
வருமா?