ஞாயிறு, 31 மே, 2020



எங்கள் வீட்டில் என் தந்தை காலத்தில்... அடிக்கடி கேட்ட பெயர்.
சிங்கம்பட்டி ராஜா TNS. முருகதாஸ் தீர்த்தபதி என்கிற அந்த கடைசி ராஜாவின் பெயர் .
தென்னாட்டு வேங்கை நல்லகுத்தி புலிக்குட்டி சிவசுப்ரமணிய கோமதி சங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர TNS முருகதாஸ் தீர்த்தபதி ராஜா என்கிற நீண்ட கம்பீரமான பெயரைப் பெற்றிருந்தார் அவர்.
சிலவேளைகளில் ஊத்து மலை ஜமீன்தார்கள் இருதாலய மருதப்ப பாண்டியன், SM. பாண்டியன், தங்க ராஜ் பாண்டியன்...இப்போதுள்ள முரளி ராஜா என்று பேச்சுக்கள் நடக்கும்.
என் தந்தையை பெற்றெடுத்த எங்கள் பெரியவாப்பா LKS. முகம்மது மீரா முகைதீன் தரகனார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் , 14 கிராமங்களின் நஞ்சை புஞ்சை நிலங்களுக்கு உரிமையாளராக இருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள
சிங்கம்பட்டிக்கு அருகில்...
இன்றைய மணிமுத்தாறு அணைக்கட்டு நீர்தேக்க பகுதியில் உள்ள நிலங்களும், அதனைத்தாண்டி வைராவி குளம் பகுதியிலும் சில ஏக்கர்களில் நிலங்கள் எங்கள் தாத்தாவின் சொந்தமாக இருந்தன.
அதனால் அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்கள்.
அப்போது முதல் சிங்கம்பட்டி அரண்மனை எங்கள் குடும்பத்தோடு தொடர்புடையதாக இருந்தது.
அதுவும் இவர்களது தந்தை 30 ஆம் ராஜா காலம் தொட்டு இருந்தது.
எங்கள் வாப்பா.... ஒரு முறை புதிய ராஜ்தூத் பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு நேராக சிங்கம்பட்டி ராஜாவைக் காண்பதற்காக என்னையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
அப்போது நான் சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன்.
அது தான் எனக்கு அவருடனான முதல் சந்திப்பு.
அந்த பிரமாண்ட அரண்மனைக் கட்டுமானம் கொண்ட...மாளிகையை, அதன் தேக்கு மரப்படிகளை, முந்தைய ராஜாக்களின் படங்ளை, அவர்கள் பயன்படுத்திய பல்லாக்குகளை, வாள் மற்றும் கலைப்பொருட்களை கொஞ்சம் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என் தந்தை அவரகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்...
"யாரங்கே....பண்ணையாருக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாருங்கள்"...என்று அழைக்க கொஞ்ச நேரத்தில் பால் வந்தது.அதுவும் பிரமாண்ட கண்ணாடிக் குவளையில்...
எனக்கு நாடோடி மன்னன் படத்தில் MGR பழ ரசம் அருந்தும் குவளை கண் முன்னே வந்தது.
என் தந்தையுடன் பேசிக்கொண்டே...
என்னை உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்.
" உங்க மகன்...எங்கே படிக்கிறார்?" என்கிற விபரம் கேட்டார்.
நான் எழுந்து நின்று அதற்கு பதில் சொன்னேன்.
"சபாஷ் "....என்றார்.
அவர் இலங்கையில் இளமை க்காலத்தில் கல்வி கற்றக் காலங்களைச் சொல்லிக்காட்டினார்.
உங்களுக்குத் தமிழில் என்னவெல்லாம் தெரியும் ? என்று அவர் கேட்க...
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியதைச் சொன்னேன்.
"ஆஹா....பிரமாதம் "என்றார்.
அவர் ஜாதகம், முன் ஜென்மம் போன்றவற்றில் மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கொஞ்சநேரம் என்னை உற்று நோக்கினார்....பின்னர் பல விஷயங்கள் என்னைப்பற்றி என் தந்தையிடம் சொன்னார்.....அவை எனக்கும் என் தந்தைக்கும் உரியவைகளாகும்.
" இவர் கல்வி, கலை, இலக்கியம், நாடகம் தொடர்பானவர்... ஊருக்கு உரியவர்.அதிகம் படிக்க மாட்டார்...ஆனால் படித்துக்கொண்டே இருப்பார்" என்று.... எனது 21 ஆம் வயதில் சொன்னதை மட்டும்
வெளியே சொல்ல முடியும்.
இன்னும் நிறைய பேசினார்.
என் தந்தை அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டார்.
அவர் ஒரு ஞானி போல பேசிக்கொண்டு இருந்தார்.
ஆமாம்...." மேலப்பளையத்தில் பாத்திமா தர்கா என்று இருப்பது தெரியுமா ? " என்று கேட்டார்....நான் விழித்துக்கொண்டு நின்றேன்.
"ஆமாம்....இருக்கிறது " என்று என் தந்தை சொன்னார்கள்.
அதற்கு அவர் அந்தப் பாத்திமா ஒரு பெண் ஞானி என்று சிலவற்றை சொன்னார்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டு அரண்மனையில் உணவு முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஊருக்குப் புறப்பட்டோம்.
1988 ஆம் ஆண்டில் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ...நாடு திரும்பிய பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவராகவும் திகழ்ந்த பன்னூல் ஆசிரியர், கல்லிடைக்குறிச்சி TMP என்கிற கல்லிடை TM.பீர்முகம்மது அவர்களின் பேத்தி திருமணத்தில்.... என்னைப்பார்த்துவிட்டு அழைத்தார்.
அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். " உட்காருங்க... தலைவரே " என்று என்னைப்பார்த்து சொன்னார்.சுற்றி நின்றவர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
இவர்... LKS மகன் என்று TMP அறிமுகப்படுத்தினார்.
" யாரு...இவரா ? இவருக்கும் எங்க அரண்மனைக்கும் தலைமுறைகள் தொடர்பு ".....என்று அவர் சொல்லி முடித்தவுடன்...பக்கத்தில் நின்றவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
எப்போதாவது....அவரைப்பார்க்கச் செல்வேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மேலப்பாளையம் பரோடா வங்கிக்கு சொந்த அலுவலாக வந்தார். நான் வழக்கம் போல அவர் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
எங்கள் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவிற்கு அழைத்தேன்.அதற்கு வருகை தர அங்கேயே ஒப்புதல் பெற்றேன்.
பள்ளிக்கூடத்தில் விழா நடந்து கொண்டு இருந்தது.
திடீரென....என்னைப்பார்த்து
" செல்வா " என்றார்.
எங்கள் சேர்மன் MAS. அபூபக்கர் சாகிப் ..."அவன் பேர் மீரான் முகைதீன் " என்றார்.
தெரியும்.
" பாத்திமா தர்காவுக்கு போகணும் வா " ...என்றார்கள்.
நான் காஜா நாயகம் தெரு மையவாடியின் கிழக்கு பகுதியில் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.
காருக்குள்ளே இருந்த அரச தலைப்பாகையை கட்டிக்கொண்டு உள்ளே சென்றார்...என்னை வெளியே இருக்கச் சொல்லிவிட்டார்.
நீண்ட நேரத்திற்குப்பின்னர் கதவைத்திறந்து வெளியே வந்து... புறப்படுங்கள் ...என்றார்.
பல்வேறு சந்திப்புக்கள்...
அவருடனான உரையாடல்கள்
இனி நடக்கப்போவதில்லை.
உயர்ந்த அரிதான மனிதர்.அதுவும் சிங்கம்பட்டி ராஜ குடும்பத்தில் கடைசி மன்னராக அரசால் அன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
அவரிடத்தில் சென்று பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் அமைக்க இடங்கள் கேட்டபோதெல்லாம் கைகாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்லியவர்.
சிங்கம்பட்டி ஊர் பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைந்துள்ள நிலம் அவர் கொடுத்த இடங்கள் தாம்.
" எங்கள் சமஸ்தானத்தில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவர்கள் என் மக்கள்.....அவர்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் " என்பார்.
அடிக்கடி மரணம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர்
24.5.2020 அன்று இறந்து போய்விட்டார்.
25.4.2020 அன்று நோன்புப்பெருநாள்...மதியம் ஊரிலிருந்து புறப்பட்டுச்சென்று
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு ...வந்தேன்.
வாழ்க சிங்கம்பட்டி ராஜா புகழ்.

கருத்துகள் இல்லை: