இன்னும் எத்தனை நாட்கள்......
தெரியவில்லை...
கனவுகள் கண்டேன்....
இரவு-பகல் ஒன்றாய் ஓடி...ஆடிய
சங்காத்திகள்......
என்னை விட்டு ஒவ்வொருவராய்...
வெளி நாடுகள் சென்றார்கள்...
ஒரு சிலரைத்தவிர
தனிமை....அவ்வளவு தனிமை....அப்போதான் .
எப்போதாவது வரும் கடிதங்கள்,
பெருநாட்களில் வரும் தொலைபேசி அழைப்புகள்....
அவைதான் நட்புச்சங்கிலியை பாதுகாத்தன.... என்னால் முடியவில்லை......
என் காலில் நானே போட்டு வைத்தேன்...
விலங்குகள்.......
அங்க இங்க ஓடமுடியாமல் .......
சமூகப் பணிஎன்றும்....கல்விப்பணி என்றும்....
“நம்மைவிட்டால் யார் செய்வா?”......
நான் கொண்டது .........
என்னை....பித்து நிலை.....கண்டுவிட்டான்
என்றார்கள்.
எல்லா தந்தைக்கும் வரும் கவலைகள்
என் தந்தைக்கும்.
என்னிடம்,
கோபமே கொள்ளாமல்....
“வெளிநாடு போறியாப்பா?....” என்று கேட்டுப்பார்த்தார்..
“இல்ல....வாப்பா.....நான் இங்கதான்....
இந்தியால தான்.”...என்றே சொல்லிவைத்தேன்..
“வேறென்ன செய்யப்போற?.”....
கவலைகள் சூழக்கேட்டார்.
“அதான்....நான் விவசாயம் செய்யப்போறேன்” என்றேன்...
“உனக்கு சரியா வருமாப்பா?”
“ஏன்....வாப்பா.?”......
“நம்ம சொல்ல மனுஷனும் கேக்க மாட்டான்,
மண்ணும் கேக்காதுப்பா”.....
சலனமே இல்லாமல்....
எங்க வாப்பா சொன்ன போது
கலக்கமாகத் தெரிந்தார்......
“இல்லை......நீங்க நினைப்பது தப்பு.”....
நவீன தொழில் நுட்பம்.....கருவிகள் என்று சொல்லி
சம்திக்க வைத்தேன்...
அதைச்செயலிலும் காட்டினேன்.
தினமும்.....நான் பார்க்கிற
விவசாயிகள் வாழ்க்கை
போராட்டங்கள் தான்.......
காடுவெட்டி என்று ஒரு ஊர்..
நெல்லை மாவட்டம் களக்காடுபக்கம்.
அங்கும் பாலைநிலம் போல்....
சில நிலங்கள்....
அதைப் பார்க்கச்சென்றேன்.
அப்போது தண்ணீர் மட்டம் பக்கத்தில்...
அதை வைத்து பயிர் வளர்த்தேன்....
இல்லை....உயிர் வளர்த்தேன்....
செடிகளும்,கொடிகளும்,மரங்களும்.
இரவு-பகல் எந்நேரமும்
பச்சைக் கனவுகள்......
அதே நினைவாய்....
பல நேரம் போன் பேச
மூன்று கிலோ மீட்டர் வரவேண்டும்...
ஒரே நாளில் தோட்டத்துக்கும் வீட்டுக்கும்
பலமைல்கள் படைஎடுத்தேன்...
மங்கம்மா சாலையில் போயிருந்தால்
அதே தூரத்தில் மதுரை.....வந்திருக்கும்.
அவ்வளவு உழைப்பு......
அவ்வளவு வெறி.....
அவ்வளவு ஆர்வம்....
அன்று இருந்த வேகம் என்னிடம் இன்று இல்லை....
துணிவு இல்லாமை என்றும் இல்லை...
இயலாமை...... மட்டும்தான்.
இன்னொரு இல்லாமை
எது?.....
தண்ணீர்....தண்ணீர் தான்..
நம்மில் பலருக்கு
நெல்லும்,வாழையும் எப்படி விளைகிறது என்று
பாலபாடம் கூடத்தெரிவதில்லை......
கடந்த இரண்டு ஆண்டுகளாய்...கிராமத்தில்
பருவமழை பொய்த்து.... பொய் சொல்லிவிட்டது....
இருக்கிற தண்ணீரை உயிர் தண்ணீராய்......
சொட்டு நீராய் ஊற்றிக் கொடுக்கிறோம்.....
ஆறுகளில் மண் எடுத்து போய்விட்டதால்
ஆற்றின் நீரும் ஆழத்துக்கு ....
அதுவும் வறண்டு .......இல்லாமல் போய்விட்டது.
காலம் காலமாய் வற்றாமல் ஓடி வந்த
பச்சை ஆற்றுத் தண்ணீர்
அனைக்கட்டால் தவளவே இல்லை....
அதனால் தண்ணீரும் இல்லை...
மனுஷனுக்கு சாப்பிட பல இடங்கள்....
தண்ணி குடிக்கவும்-அடிக்கவும்
பல இடங்கள்....
கோடை வந்தால் குடிக்க மடங்கள்....
'ஒருநாள் பெருமை காட்ட'
ஆடம்பரம் காட்டும்
தண்ணீர் பந்தல்கள்...
ஆனால்.....மாடுகளும்,ஆடுகளும்
எந்தக் கடைக்குப் போய்
“மினரல் வாட்டர்” வாங்கிக் குடிக்க?
பசித்த வயித்துக்கு அதுகள் திங்க
புல் கூட கரைகளில் இல்லாமல் போச்சு.......
அதுங்க கைல என்ன ஒட்டா இருக்கு?
எல்லாரும் பார்த்து கையேந்த?.....
கையேந்தி பவன் முதல், நட்சத்திர ஓட்டல் வரை
பலவகை உணவுகள் .....மனுஷனுக்கு உண்டு.
ஆனால் வாயில்லா ஜீவன்கள்......
வயித்துப் பசி ஆத்த ......
எந்த கடையில்
வைக்கோலும்.....புல்லும் விக்கிறாக?
என்று கேக்குமா?
அதுகளுக்கு வாங்கத்தெரியாதே....
அதுங்க கிட்ட மணி பர்ஸ் ஏது?
எ.டி,எம்.கார்டு ஏது?
ஆனாலும் என்னால் பார்த்துக் கொண்டு
இருக்க முடியாதே....
அதுங்களுக்கு
“என்ன விலை கொடுத்தாவது”
வாங்கித்தருகிறேன்....
எவ்வளவோ...இழந்துவிட்டேன்.....
அதற்காக.....
அந்த வாயில்லா ஜீவன்களை.....
கசாப்புக்கா நான் அனுப்ப முடியும்?
சொன்னால் நம்ப மாட்டார்கள்
என்னை பார்க்க விட்டால்......
'கண்ணீர் விடுபவை' அவை....
“எய்யா.. நீ இப்படிக் கலங்கி நின்னா?
ஒன்னு மில்லாத விவசாயி
எங்கையா போவான்?.....
எங்க தேவர்; என்கிட்டே கேட்டார்.
பதில் சொல்வார் யாரும் இல்லை...
கடைக்காரர்களுக்கு
தினமும் லாபம் கிடைக்கிறது.
அரசாங்க ஊழியர்கள்...
மாதம்
ஒன்னாம் தேதி வந்துவிட்டால்
கையிலே காசு....
அதையும் தாண்டி.....
பலர் பை நிறைய “வாங்குகிறார்கள்”
எந்த ஆத்மி வந்தால் நமக்கென்ன ?
அப்புறம் திபாவளி ‘போனஸ்’
‘பொங்கல் பரிசு’.. வேற.....
எத்தனையோ ஓய்வூதியங்கள் வேறு....
திருவிழாக்கள் வராதா?.....
என்று ஏங்குவோர் பலர்.....
இன்னும் மூணு மாசம் தள்ளி வராதா?
என்று தவிப்போர்.......
கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள்...
பாழாப் போன பொருளாதாரம்
நோய் நொடி வந்து,
படிப்புக் கனவுகள் வந்து,
கொடுக்கல் வாங்கலை
வாழ்வித்துக் கொண்டு இருக்கிறது...
பொஞ்சாதியோடும்,பிள்ளை குட்டியோடும்
டவுன் பக்கம்
என்னைக்காவது வந்தால்
தொலைஞ்ஞான்.....
"எங்கையா......லைசன்சு....
எல்மட்டு ஏய்யா போடல்ல?
கட்டுயா பைன"........
.
"ஆத்துக்குல குளிக்க வந்தன்.....
அப்புமாயா எல்மட்டு?"....
அவன் குரல் யாருக்கு கேக்கும்?
அதுக்குள்ளே...அவன்
பொண்டாட்டியும் பிள்ளைகளும்
அதைப் பார்க்கும் மிரட்சி
மனசு....தாங்காது.....
சட்டத்தின் காவலர்களுக்கு
சட்டத்தைக் "காக்க வேண்டிய"
'கடமை" இருக்கிறதே .........
அன்னைக்கு அந்த விவசாயிதான்
"ஆப்புட்டான்.".......
பாவேந்தர் சொன்னது போல
தன் பெண்டு....தன் பிள்ளை...தன் வீடு,
தன் சுற்றம் வாழ்ந்தால் போதும்
என நினைக்கின்றார்கள் .......
மாசச் சம்பளக் காரர்கள்
கொடுத்து வைத்தவர்கள்.....
ஆனாலும் விவசாயிக்கு
பச்சையையே பார்த்து வளர்ந்ததால்
தூரத்தில் தெரிவதெல்லாம்
பச்சையாய் தெரிகிறதே....
“அக்கரைப் பச்சை.”
விவசாயிகள் பற்றி பேசிக் கொண்டு இருந்த
அந்த “பச்சை தலைப்பா” கிழவனும்
“இயற்கையோடு’
போய் சேர்ந்து விட்டான்
ஈரோட்டுச்சிங்கம் தந்தை பெரியார் போல...
இந்தப்பழம் ஏரோட்டிகளின் சிங்கம்......
வயக்காட்டுக்கு போக வழியில்லாமல்
முன் முகப்பை எல்லாம்
பிளாட் போட்டு வீடு கட்டி தடுத்தால்....
சோத்த விளைய வைக்க எங்க போக?...
எப்படிப் போக?
அந்த மனைகளில்.......
கட்டப்படும் வீடுகளுக்கு
எந்த நடை முறையும் இல்லாமல்
திட்டமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட
மின் விளக்குகள்
வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
“இவ்வளவு கொடுத்து கரண்ட் வந்தது”
"இவ்வளோ கொடுத்து தண்ணி வந்தது."....
பாவம் விவசாயி.....
நானும் தான்.