செவ்வாய், 31 ஜனவரி, 2017

' எட்டு போட்டா....தப்பா? "


சில சம்பவங்கள்.... அவை தொடர்பானவை மறக்கவே முடியாமல் காலமெல்லாம் மனதின் உள்ளுக்குள் உறங்கும். 

இன்ப துன்ப நிகழ்வுகள் என்கிற பேதம் அவற்றுக்கு இல்லை. சில நினைக்க நினைக்க என்ன ?  எவ்வாறு ? எப்படி ?   என்பன போன்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும். மனசு அப்படி.

சில பாடல்கள் எங்காவது கேட்கும் போது....ஏதாவது ஒரு நிகழ்வு சடார்ன்னு நினைப்பில் வரும்..

சில இடங்களுக்குச்  செல்லும் போது அந்த இடத்தில் என்றோ எப்போதோ நடந்த சம்பவங்களும் கண்முன்னே வந்து போகும்...நேற்று முன் தினம் குற்றாலம் போன இடத்தில் அண்ணா சிலை பக்கம் நினைவு போனது.....

எனக்கு தந்தை தாய் வழியில் மாமா மார்கள் நிறைய பேர்கள் உண்டு.அவர்கள் பெற்று எடுத்த மைத்துனர்கள் ஆண் பெண் கிளை வழியில் நிறையவே  இருக்கின்றார்கள்.

என் வயது மற்றும் அதற்கும் கீழே உள்ள மைத்துனர்கள் நம்ம மாவட்டத்துக்கு பக்கத்துக்கு இடங்களுக்கு டூர் போறதா இருந்தால் மறக்காமல் என்னை அழைப்பார்கள்..

நம்மால தூர தொலைவுகளுக்கு வாறது கஷ்ட்டம்ன்னு அவுகளுக்கும் தெரியும்.காரணம் எனக்குள்ள வேலைகள் அப்படி...
நாம் போகல்லன்னா  அங்க இங்க இருக்கின்ற நம்ம நண்பர்களின் தங்குமிட வசதிகளைக் கேட்டு வாங்கிக் கிடுவார்கள். 

சில நேரங்களில் ரொம்ப பவ்வியமா....வண்டி வாகனங்களை கேப்பார்கள்..அப்பவெல்லாம் மோட்டார் பைக்குகள் தான். இப்போ கார் வரை வந்தாச்சு..

ஒரு நாள் .....குற்றால சீசன் கால நாளில் என்னுடைய பாசமிக்க இளைய மைத்துனர் ஒருவர்  ....அவங்க நட்புகளோடு , ஆமா சேக்காளிகளோடு  அஞ்சாறு பைக்குகள் சேர்ந்து குத்தால ரோட்டில் போறதைப் பார்த்தேன்....போகட்டும் போகட்டும் .பத்திரமா போயிட்டு வரட்டும் என்று மனசுக்குள் வாழ்த்திக்கொண்டேன். 

அன்னைக்கு திருனவேலி வரை இளஞ்சாரல் ரொம்ப அழகா தூரிக்கொண்டு இருந்தது....வீட்டுக்கு வந்து என் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நானும் குத்தாலத்துக்கு வந்தாச்சு....

பொளுகிற ஒரு அஞ்சு மணி இருக்கும்....மெயின் பால்ஸ்..பக்கம் குளிச்சுட்டு....பிள்ளைகள் வரவை எதிர் பார்த்து கார்கள் நிப்பாட்டி வைக்கிற இடத்தில் நின்னுகிட்டு இருந்தேன்.
செல்போன் மணி அடிச்சது.......எடுத்தேன். காலையில் பார்த்த மச்சினன் போன்ல வந்தான்...

“ மச்சான்....எங்க இருக்கிய “
“ என்னப்பா....சொல்லு என்ன விஷியம் “
“ ஒன்னுமில்லை...ஒரு சின்ன பிரச்சினை “
“ எங்கேப்பா....என்ன நடந்துச்சு..”
“ நீங்க குத்தாலம் போலிஸ் ஸ்டேசன்  வரைக்கும் வரமுடியுமா “
“ எதுக்குப்பா...போலிஸ் ஸ்டேசனுக்கு வரணும் ....என்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா ...”
“ வாங்களேன்....நேர்ல சொல்லுறேன் எவ்வளோ  நேரத்தில இங்கன வருவீங்க?....”
“ என்னத்த சொல்லப் போறானுவளோ.....என்ன கதையோ ...பதட்டமா பேசுரானுவளே ....   ...என்று யோசிச்சுக்கிட்டே .....ம்...ஒரு கா மணி நேரத்தில் வந்துடுவேன் என்றேன்  “
“ கா...மணி நேரத்திலா....நீங்க ஊர்ல இருந்து அவ்ளோ வேகமாவா வரப்போறீங்க “
“..யே.....நான் போலிஸ் ஸ்டேசன் பக்கம் ....அருவிக்கரைல தான் நிக்கேன்....கொஞ்சம் பொறு... ந்தா வாறேன்.”
“ சீக்கிரமா....வாங்க மச்சான் .” என்று சொல்லிக்கிட்டே போனை வச்சுட்டான்.
என்னவோ...ஏதோன்னு நான் பேசினத ....மோப்பம் பிடிச்ச எங்க வீட்டு ....மகராணி “ என்ன போன்ல..... என்னத்த பேசுறிய. ?...”..
நான் நடந்ததை சொன்னேன் ...


“ அப்படியா........சின்ன புள்ளைகளா பைக்கில போனாங்களே ....சீக்கிரமா போங்க...யாருக்கும் எதுவும் ஆகல்லியே....என்னவோ பெரிய பிரச்சினை...அதான் உங்களைக் கூப்பிடுறானுவோ....” என்றார்.
எங் கூட வந்த எல்லோரையும் குற்றாலம் பள்ளிவாசலில் உள்ள தங்குமிடத்தில் உட்கார வச்சிட்டு ....நான் காவல் துறையில் பணியாற்றும் என்னுடைய இன்ஸ்பெக்டர் நண்பருக்கு...போன் பண்ணிட்டு குற்றாலம் போலிஸ் ஸ்டேசனுக்கு போனேன்....

குற்றாலம் கலைவாணர் அரங்கம் முன்புள்ள காவல் நிலையம் .அங்கே ஸ்டேசன் முன்பாக....ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள்....நின்றுகொண்டு இருந்தார்கள்..அவ்வளவு பேரும்...என் மைத்துனனோடு வந்தவர்கள் தாம்.
“....என்னப்பா...என்ன நடந்துச்சு.....எதுக்கு இங்க வந்துருக்கிய...ஏம்பா....”
என்று கேட்டேன்.

“ ஒன்னு மில்லை மச்சான்....அண்ணா சிலை பக்கம் வந்துக்கிட்டு இருந்தோம்....எங்க எல்லோரையும் நிப்பாட்டி ....வண்டியோடு....கூட்டி வந்து....வண்டிய நிப்பாட்டி சாவிய எடுத்துட்டு போட்டாங்க”...என்றான் என் பாசக்கார மச்சினன்.

“ டே...வண்டில..ட்ரிபிள்ஸ் வந்தியளாடே ?”  

“ இல்ல மச்சான்.”

“..அப்போ லைசென்ஸ்...ஆர்.சி....இன்சூரன்ஸ் பேப்பர் வண்டில இல்லாம வந்தியளாடே “ ?  

“ லைசன்ஸ் புக எல்லாம் கரைக்க்டா இருக்கு மச்சான்.”

“ அப்போ எதுக்குப்பா ....உங்க வண்டிய.... இங்க புடிச்சிப்போட்டு இருக்காங்க...யார் மேலயாவது வண்டிய விட்டுட்டீங்களா...இல்ல எந்த கார் பைக் மேல இடிச்சிட்டீங்களா  ? “

“அப்படிலாம் ஒன்னும் நடக்கல்ல மச்சான்...” என்று அங்க நின்ன பயலுக..... ஒன்னு போல சொன்னனுக.

ஆனாலும்....அவனுக முகத்தில எதையோ இந்தப் பயபுள்ளைக மறைக்கிறா னுவோன்னு...ஒரு  “ இது..” தெரிஞ்சுது..

.சரி....எதுவா இருந்தாலும் உள்ள போய் கேட்டுக்குவோம்...என்று அங்கே இன்ஸ்பெக்டர் முன்னே போய் நின்றேன்.

“ வாங்க மாமா..உட்காருங்கள் “ என்று அந்த அதிகாரி என்னை வரவேற்று உட்கார வைத்தார்..எனது காவல்துறை இன்ஸ்பெக்டர் நண்பரும் வந்துவிட்டார்...பரஸ்பரம் நலம் விசாரிப்பில் கொஞ்ச நேரம் போனது.
எங்க பக்கம் பெரும்பாலான அதிகாரிகள் உறவு சொல்லியே அழைத்து கண்ணியப்படுத்துவார்கள்....கண்டிப்பானவர்கள்....மத்தியில் அப்படி ஒரு உபசரிப்பும் இருக்கும்....

கடுமையானவர்களிடம் அவ்வாறு எதிர் பார்க்க முடியாது.....ஒன்னுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் .....பொய் வழக்கில் உள்ளே தள்ளியவர்களை நான் அறிவேன். கண்ணியமானவர்கள் பணி ஓய்விற்குப் பிறகும் கண்ணியமாகவே வாழ்கின்றார்கள்.

“ என்ன ஊர்ல இருந்தா வாறீக....”

“ இல்ல சார் ...நான் தற்செயலா ...குடும்பத்தோடு குத்தாலம் வந்தேன்...இவனுங்க போன் பண்ணுனாங்க...அதான் என்ன ஏதுன்னு...தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்....”
அந்த அதிகாரி மேசையில்  ஏழு..எட்டு பைக்குகளின் சாவிக்கொத்துகள் கிடந்தன.....

“ இவனுக...என்ன செஞ்சான்னு கேட்டியளா “

“ இல்லையே...ஒருத்தனும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறாங்களே’..
எனக்கு பதட்டமாய் இருந்தது...
அந்த இன்ஸ்பெக்டர்....தலையை குனிந்து கொண்டார்....” இவனுக என்ன பன்னுராங்கன்னு கேட்டேன்.....எல்லாரும் காலேஜ்ல படிக்கிறதா  சொல்லுரானுங்க....அதோடு உங்க குடும்ப உறவையும் சொல்லுறாங்க..”
என்னோட  டி.எஸ்.பி.யும் நின்னு .......இவங்களை புடிச்சு ....வண்டிகளை இங்க கொண்டு வந்து இருக்கோம்.

“ என்ன செஞ்சானுக ? “

“ அங்க யாரப்பா....வெளியில நிக்கிறது...உள்ள வாங்கடே..” என்றார்.
ஒவ்வொருத்தனா உள்ளே அந்த அறைக்குள் வந்து நின்றார்கள்,.

“ என்ன பன்னுனாங்கன்னு நீங்களே கேளுங்க...”

“ என்னப்பா...சொல்லுங்களேன்டே “...

“ அண்ணா...சிலைக்கு பக்கத்தில..... வண்டிய..... ஒட்டிக்காட்டினோம்...”

:” வண்டிய....ஒட்டிக்காட்டினியளா...” அப்போது தான் அந்த அதிகாரி முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது...

“ அண்ணா சிலைக்கு முன்னால....இங்க நிக்கிற இந்தப் பயலுவல்லாம் எட்டு போட்டு ...காட்டுரானுவ....யார்கிட்ட அங்க நிக்குற எங்க கிட்ட...நாங்க என்ன ஆர்.டி.ஒ.வேலையா பார்க்கிறோம். ”...
இதைக்கேட்டதும்..எனக்கு அடக்க முடியாத ....சிரிப்பு வந்தது....வெளியே காட்டிக்கொள்ளவில்லை..
அந்த இளைஞர்களிடம் ...” கொஞ்சம் ஏல...வெளியே...போங்க..”.என்று சொன்னார்..

கொஞ்ச நேரம் அங்கே அமைதி .... என்கூட வந்த அந்த இன்ஸ்பெக்டர்...
” காக்கா......இவனுகளை கண்டிச்சு வைங்க....நியுசன்ஸ் கேஸ் போட்டு....கோர்ட்டுக்கு அனுப்பிடக் கூடாதேன்னு நானே இவங்களைக் கேட்டுக்கிட்டேன்...இந்த ஊர் அப்பிடி.இங்க குளிக்க வாரவனுவளை விட குடிக்க வாரவங்க அதிகம்....அப்புறம் தள்ளிக்கிட்டு வாரவங்க வேற....அருவிக்கரையில் கடுமையா கட்டுப்பாடுகள் இருக்கு.இவ்வளோ  வச்சும் .....பண்ணுற சேட்டைகளைப் பார்த்தீயளா ....யார் வி.ஐ.பி...யார் கள்ள வாளிப்பய ன்னே தெரியாது...கஞ்சா கிஞ்சா ....எவனாவது விக்கிறானுவாளான்னு பார்க்கணும்...பொம்பள புள்ளைகளை கேலி பன்னுறவன்...சீட்டாட்டக் கோஷ்ட்டி...சண்டை போடுறவன்...அப்புறம் ஜட்டி மட்டும்  போட்ட்டு குளிக்கிரவன்....கூச்சல் கூப்பாடு போடுறவன்...என்று அடுக்கிட்டே போனார்.

செங்கோட்டை ....அண்ணன் கடுமையா சிபாரிசு செய்தார்...

“..சரி..பைன கட்டிட்டு வண்டிய கொண்டு போகச்சொல்லுங்க...”

“ பைன் எவ்வளவு வருது ?”

“ வண்டிக்கு...700…800..வரும்.”
எனக்கு பகீர் என்றது...
கொஞ்ச நேரம் அந்த அதிகாரிகளிடம் பேசினேன் ....மொதலாவதாக...எவன் இந்த சேட்டையை செய்தானோ...அவனுக்கு கண்டிப்பா...அபராதம் போட்டே தீரணும்...என்பதில் அந்த இன்ஸ்பெக்டர் உறுதியாய் இருந்தார்....
கடைசியில் ....இந்தப்பையங்கள் மத்த தப்புகள் வேற எதுவும் செய்யல்லை...அதனால பேருக்கு ஒரு வண்டிக்கு...அபராதம் போட்டார்.அதுவும் யாரிடத்தில் லைசன்ஸ் இல்லாமல் வண்டி இருந்துச்சோ அவனுக்கு மாத்திரம் 100 ரூபாய் அபராதம்.
எல்லாம் முடிந்தது....காவல் அதிகாரிகளுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

” சரி சரி பைனக்கட்டிட்டு...ஊருக்கு வாங்கடே..” என்றேன்.

“...மச்சான்...கொஞ்சம் நில்லுங்க...ஒரு 1000 ரூபாய் தந்துட்டு போங்களேன்.”

“உங்க கிட்டே எவ்வளவுதான் துட்டு வச்சு இருக்கிய”?"

" மொத்தமா சேர்த்து ஒரு 80 ரூபாய் தேறும்."

" நீங்களும்..ஒங்க ரூபாயும் ...போய் அபராதத்தை கட்டிட்டு ...செங்கோட்டையில சாப்பிட்டிட்டு பத்திரமா ஊர் வந்து சேருங்கன்னு ....அவன் கேட்ட தொகைக்கும் அதிகமா எல்லோருக்கும் சாப்பிடும் அளவுக்கு....ரூபாய கொடுத்துட்டு புறப்பட்டேன்.
ராத்திரி மணி எட்டு  ஆகிவிட்டது.
என் மனைவி...பிள்ளைகள் இருந்த பள்ளிவாசலுக்குப் போய் சேர்ந்தேன்.

“ என்ன இவ்வளோ நேரமா போய்ட்டிய..”
“ஆமாம்”

“ சரி அவங்களை எல்லாம் போலிஸ் ஸ்டேசனை விட்டு கூட்டி வந்துட்டீங்கள்ளே ... “

“ஆமா...”

“ அவங்க என்ன பண்ணினான்னு....புடிச்சிட்டு போனாங்களாம்...”

“ ஆ.....ம் எட்டு போட்டு காட்டி இருக்கானுவ”

அடுத்து எனக்கு அங்கே வந்த கேள்வி....

“ எட்டு போட்டா.....தப்பா”?
.

....