ஞாயிறு, 3 ஜூன், 2012

நம்ம ஆறும்...பெரியாறும்.

நாங்கள் சின்னவர்களாக இருந்த போது பெற்ற பல்வேறு "அனுபவிப்புகள்" இப்போ உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்..

இதைச்சொல்லும்போது என் போன்றவர்களுக்கு ஒரு வித ஏக்கமும்,சின்ன தலைமுறைகளுக்கு 'நல்ல வேளை பிழைத்துக்கொண்டோம்' என்கிற அசட்டு எண்ணமும் வருகிறது.
 
"அதென்ன உங்களுக்கு கிடைத்து, எங்களுக்குக் கிடைக்காதது?" இந்த கேள்வி சிலர் கேட்கத்தான் செய்கிறார்கள்.

,முஸ்லிம் மேல் நிலைப் பள்ளிக் கூடத்துக்கு கலர் வேஷ்ட்டி,லுங்கி கட்டிக்கொண்டு போனது எங்க காலம்.
 
1982 க்கு பிறகு யூனிபாரம் வந்தது.இதை சொன்னால் அப்பிடியா?என்கிறார்கள்.

அந்தக்காலத்தில் குரூப் போட்டோ புடிக்கிற அன்னைக்கோ , கல்வி இலாக்கா இன்ஸ்பெக்ட்டர் வருகிற நாளைக்கோ, சிலர் கால் சட்டை அதுவும் முட்டு வரை உள்ளதும்.பெரிய பையங்க சிலர் , பேண்ட்டும் போட்டு வருவார்கள்.

எட்டு முழ வேஷ்டிகட்டி அந்த வயசில் தோரணை காட்டுபவர்களும் உண்டு.

வேஷ்ட்டிகட்டுறது பலருக்கு பிடிபடாத ஒன்னாக இருக்கும்.
அதை முழு வகுப்பும் கேள்வி கேட்டு துளைத்துவிடும்.,"எப்பிடில ஒன் இடுப்புல இந்த எட்டு முழ வேஷ்ட்டி நிக்குது"?....

இது ஒரு வாய்ப்பு அல்லது வசதி.

மாசிலாமணி சார்வாள் கட்டுற அரவிந்த் வேஷ்ட்டி, அழுக்கே படாமல் அம்புட்டு அழகாக இருக்கும்.

பாளையங்கோட்டை அல்லது  திருநெல்வேலி ஜங்ஷன்ல பள்ளிக்கூடத்தில் படிச்ச பையங்க இதையெல்லாம் நினைச்சும் பாக்கமுடியாது.
 
காலை வேளைகளிலும்,நோன்புக்காலங்களிலும் பெரியாத்துல போய் குளிச்சு வந்ததும் இன்னிக்கு மாறிப்போனது.
 
எங்க வீட்டுக்கு பின்னாலே ஓடுன பாளையங் கால்வாயை நம்ம ஆறுன்னும்.தாமிரபரணியை பெரிய ஆறுன்னும் அழைச்சதும் அந்தக்காலம்.
இன்னிக்கு ஆத்துல குளிக்கப்போகாததுல, நாம இழந்தது ஒரு முக்கிய மானதைன்னு நம்மில் பல பேருக்கு தெரியல்லை.
எங்களுக்கெல்லாம் பொழுது போக்கே நம்ம ஆத்துல தான் இருந்தது, காலை ஒரு ஒம்பது மணிக்கெல்லாம் லீவு நாள்ல ஆத்துக்கு வாப்பவோடயோ,சின்னாப்பா வோடயோ போய் குளிச்சா ஒரு கா மணி நேரம் குளிக்கலாம்.
தனியா, சங்காத்திகளோட குளிக்காப்போனா ஆசை தீர குளிக்கலாம்.அதுக்கு நேரம் காலம் கிடையாது.ஆனா படிக்கட்டுல "வேஷ்ட்டிக்கு சோப்போடுறவங்க நம்மள திட்டாம இருக்கணுமே" அந்தக் கவலை ஒன்னு மட்டும் தான் இருக்கும்.
இன்னொன்னு ஆளக் காணமேன்னு ஊட்டுல இருந்து யாரும் வந்துடப்டாது. வந்தா,முதுகிலே அடிகிடி விழும்.அவ்வளவு தான்."எம்புட்டு நேரம்தாம்லே,நீ குளிப்பே?"ன்னு கண்டிப்பா கேப்பாங்க.குளியல்கள் ன்னா பெரும்பாலானவர்களுக்கு பிறந்த மேனி குளியல்தான்.
"என்னலே உன்னை இம்புடு நேரமா காணோம்?"
"இங்க தானே நின்னேன்"
"மறைக்காம சொல்லு .குளிக்கத்தானே போன?"
பதில் வர வில்லைன்னா டவுசருக்குள் கைவிட்டு அரனாக் கயிறை, பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் அழுத்தித் தொட்டுப் பார்ப்பார்கள்.

பெறகு எவ்வளவு முடியுமோ அம்புட்டு அடி விழும்.
 
செல வீம்புப் புடிச்ச பையனுவோ டவுசரைக் கழட்டி வைக்கும் போதே, "
இந்த அரனாக் கொடி எதுக்கு"?ன்னு அதையும் சேத்தே நைசாக் கழட்டிவப்பானுவோ.

"இனி எப்பிடி, நாம  குளிச்சதைக் கண்டுபிடிப்பாங்களாம்?"ன்னு தன்னம்பிக்கை தைரியம் அந்தப்பையன்களுக்கு இருக்கும்.

தலை முடிகளெல்லாம் பஞ்சாய் மாறி காற்றில் பறக்க,கண்கள் இரண்டும் ரத்தச்சிவப்பாக மாறின பெறகு தான் கரை ஏறுவோம்ன்னு எண்ணம் வரும்.
 
எங்க வீட்டுல எங்க,அப்பாம்மா கண்ணைத் தப்பி, நாங்க ஆத்தங் கரைக்கே வர முடியாது. எங்க வீட்டு பின் கதவிலிருந்து ஒரு இருபது அடி தூரத்தில் தான் நம்ம ஆறு இருந்தது.

காலையில் எழுந்ததும் மெளகை போட்டு காச்சிய எண்ணையை தலையில் தேச்சி உட்கார வச்சிடுவா?அவ கூடத்தான் குளிக்கக் கூட்டுப் போவாள்.ஒரு வயசுல எங்க வாப்பா எங்களை கூட்டிட்டு போவ ஆரம்பிச்சப் பொறவு தான் நீச்சல் அடிக்க படிச்சுத் தந்தார்.எங்க பக்கம் அதுக்கு "தப்பட்டா "அடிக்கிறதுன்னு பேர்.
 
மொதல்லே தண்ணி கொறச்சலா போகும் போது தைரியமா முடிந்த அளவு அந்தக் கரைக்கும், இந்தக் கரைக்கும் போய் வருவதும்,தண்ணி கொஞ்சம் கூடுன காலத்தில் கரை ஓரத்தில் குதிச்சு நீஞ்சி வருவதும்,பெறகு தைரியத்துடன் அக்கறை போய் வருவது தான் நீச்சல் முழுசும் தெரிஞ்சதுக்கு அடையாளமாகும்.
 
மேலப்பாளையம் மதகடை பகுதியில் எங்க வீடு இருக்கு.அங்கிருந்து பெரிய கொத்துபா பள்ளிவாசல் பாலம் வந்து அங்கிருந்து குதிச்சி நீஞ்சி வந்த காலமெல்லாம் இனி வருமான்னா?வராதுன்னு சொல்லலாம்.
ஆனா சின்ன தலை முறைக்கு?

வீட்டுக்குள்ளேயே குளிக்கிறவனுக்கு நீச்சல் எப்படி தெரிய வரும்?
பிள்ளைகள் பள்ளிக்கூடம்,காலேஜ் நண்பர்களுடன் வெளியூர் போகும் போது
."எப்பா தண்ணியில இறங்காதே"
,"ஆழம் தெரியாம கால விடாதே"ன்னு பயந்து போய் சொல்லி அனுப்புகிறார்கள்.
 
எங்க தலைமுறையில் உள்ளவர்களோடு 'நீஞ்ச தெரியும்' என்கிற துணிச்சல் நின்னுபோச்சு.நீச்சல் தெரிஞ்ச தலைமுறை என்று யாரையும் சொல்ல முடியவில்லை.
 
விளையாட்டா,.பொழுதுபோக்கா நீஞ்சத்தெரிந்த அனுபவம்,வாய்ப்பு இப்போ உள்ள தலைமுறைக்கு இல்லாமல் போய் விட்டது.அதுக்கு பாளையங்கால்வாய் சாக்கடை ஆனதும் மிகப்பெரும் காரணம்.

"ஆடு மாடுகளே குளிக்கப்பயந்துகொள்ளுகிற நம்ம ஆத்துல மனுஷங்க குளிக்க முடியுமா?"
 
பாதாள சாக்கடை வேலையெல்லாம் மேலப்பாளையத்தில் முடிஞ்சாத்தான் பதில் கிடைக்கும்.
அப்போ தானே நம்ம ஆறு "நமக்குக்கிடைக்கும்".சாக்கடைஎல்லாம் குழாய் வழியா ராமயன்பட்டிக்குப் போகும்.நம்ம ஆத்துல கலக்காது.
"நமக்குன்னா?"
"நம்மசந்ததிக்குத்தான்".