எங்க ஊர் பக்கமெல்லாம் நாங்க இளம் பிராயத்துல வளர்ந்த போது இருந்த
நிலைமைக்கும், இப்போ உள்ள இளசுகள் வளர்ற காலத்து நிலைமைக்கும் ஏணி வச்சாலும்
எட்டாது...
காதல், கீதல்ன்னு கனவு தான் காங்க முடியும். பெத்து வளர்த்த தாய்
தகப்பனவிட்டு இன்னொருத்தி முந்தானைய பிடிச்சிக்கிட்டு போய்க்கிட அவ்ளோ லேசா, மனசுல
துணிச்சல் வந்துடாது....அதிலும் பாட்டி, தாத்தாவ விட்டு ஒருநாள் கூடபிரியமுடியாது....கூடப்பிறந்ததுகளும்அப்படித்தான்..நகழாதுங்க...கொள்ளைப்பிரியம்னு
அதத்தான் சொல்லுவாங்க...
“...மெட்ராஸ்ல ஆம்புளையும் பொம்பிளையும், சைக்கிள் மோட்டார்ல....ஒன்னு
முதுகில ஒன்னு,..... அப்பி பிடிச்சிக்கிட்டு போறாங்கல....நம்மூர்ல இப்படிப்போனா?....முதுகுத்
தொலிய உரிச்சிடுவாங்க” ..... இப்படித்தான் மெட்ராஸப் பத்தி எல்.எஸ். முதல்ல
சொன்னான். அதுவும் பத்தாவது படிக்கும்
போது; .அவன் எனக்கு சித்தப்பு முறை...ஆனாலும் அவனுக்கு எனக்கும் ஒரே வயசு..
அவன் தான் எங்க செட்ல முதன்முதலா,மெட்ராஸ் போயிட்டு வந்தவன்...என்னை முதன் முதலா பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பார்க்கவும்
அவம்தான் கூட்டிப் போனவன்.
நான்.....ஆறாப்பு படிக்கும்போது மெட்ராஸ் பார்த்தது....அப்புறம்
காலேஜ் முடிச்சுதான் அங்க எட்டிப் பார்க்க முடிஞ்சது...அப்புறம் மாசம் மூணு,நாலு தடவையாவது
போய் வந்துக்கிட்டு இருக்கேன்..
“ கடக்கரை பக்கம் போய்டாதல.....அதுவும் பொழுகிற நேரம் போய்டாத.....
மோசமானவனுங்க………. எதுக்குத்தான் இப்படி வெறிபிடிச்சு திரிகிறானுவளோ?.....” நான் காலேஜ்
முடிச்ச பிறகு, மெட்ராஸ் போகப் போறேன்னு
தெரிஞ்சு, அதே எல்.எஸ்.அப்பவும் சொல்லி அனுப்பினான்...
”என்னல சொல்லுதே?”.....
“கருமம் புடிச்சவனுங்க....நம்ம கூடப் பிறந்ததுகளை, தப்பித்தவறி அந்தப்
பக்கம் கூட்டிப் போய்டாத....கண் கொண்டு அங்கன நடக்கதப்பார்க்க
முடியாது....மோசம்ல........”
அப்புறம் சொன்னான், “ஆம்பிளைகள் கூட தன்னந்தனியா அந்தப்பக்கம்
போகமுடியாதுடா....”...
எனக்கு “புரிந்தும் புரியாத” நிலை ஆகிவிட்டது...
அன்னையில் இருந்து இன்னை வரையிலும், நண்பர்கள் யாரும் கூட வராமல்
கடக்கரை பக்கம் போனது இல்லை....அப்படி எப்போவாவது போன நேரம் அங்கும் இங்கும் பார்த்தால்....”சர்தான்....என்னைக்கோ
எல்.எஸ்.சொன்னானே...அது சரிதான்”னு இன்னைக்கும் மனசில் வந்து போகிறது...
திருனவேலி பக்கம் பார்த்தறியாத, கூடா ஒழுக்கங்கள் அங்கேசர்வ சாதாரணமாக
அரங்கேறுகின்றன...
‘அத’ வரவிட்டதும், வளரவிட்டதும் யார்?....
சினிமாக் காரங்களா?
கலாச்சாரத்தை ஒழுங்கா படிச்சிக் கொடுக்காத குடும்பத்தலைவர்களா?...
இல்லை; கல்வியைச் சரியாக் கற்றுக் கொடுக்காத வாத்தியார்மாருங்களா?
அல்லது இப்போ புதுசா முழைச்சிருக்கிற இன்டர்நெட்
வலைப்பின்னலா?....அதுல வார படங்களா?
மொத்தத்தில் இதில் எல்லோருக்குமே பங்கு உண்டு....
எங்க திருனவேலி பரவா இல்லை ....
தெரிஞ்சோ தெரியாமலோ இந்த அழகான ஊரைப் பத்தி இல்லாததும் பொல்லாததும்
கற்பித்து படம் எடுத்து கேவலப்படுத்திட்டாங்க....”ஏதோ..தினசரி எல்லோரும்
வீச்சருவா..வேல்கம்பு வீசிட்டுத்தான் மத்த சோலி” என்று எங்க ஊர்க்காரர்களை ஒரு தினுசா மத்தவங்க பார்க்கிறாங்க.
திருனவேலி ஊர் எவ்வாறு பழமை மாறாத ஊரோ, அது போலவே இந்த மண்ணும்,
மக்களும்...
மூன்று மத தத்துவங்களும் ஒன்னுக்கொன்னு கையைப்பிடிச்சுகிட்டு
இன்னைக்கும் பயணப்படுது.
“ மாமா....மாப்பிளை..”.,உறவை எங்க பக்கம் தான் வந்து பார்க்கவேண்டும்.
“மாமா’” என்று முஸ்லிம்களைத் தேவர்கள், கோனார்கள், ரெட்டியார்கள்
நாயக்கர்கள்,நாயிடுகள் அழைப்பார்கள்.
“அப்பு.....சின்னய்யா”....இப்படித்தான் ஆசாரிமார்கள் அழைப்பார்கள். தேவேந்திரர்கள்
“தாத்தா” என்று......
கொஞ்சம் கிழக்கே கடற்கரை பக்கம் போனால்....சாச்சா தான்.
டவுணில் பிள்ளைமார்கள்,நாடார்கள், முதலியார்கள், செட்டியார்கள்
எல்லோருக்கும் “அண்ணாச்சி” தான்..
இப்படித்தான் எங்க பக்கம் மதநல்லிணக்கம் தாமிரபரணியாய் வாழ்ந்து
கொண்டு இருக்கிறது...
சினிமாக்காரர்கள் பார்த்தப் பார்வை தான், அரிவாள் கலாச்சாரத்தை
திருனவேலியில் வளர்த்து விட்டது என்று தெளிவாச்சொல்லலாம்.
“நாங்க என்னத்த புதுசா சொல்லிப்புட்டோம்.....அங்கன நடக்கத தான
சொன்னோம்” , எடுத்தோமுன்னு அறிக்கை விடுவான்ங்க....
அவங்க எத படமா எடுத்தாலும் கடைசிக் குறிக்கோள் காசு தான்..
பண்பாட்டைக் காக்கனும்ன்னு சொல்றவங்க, காசு பணத்தை எதிர் பார்த்து எந்த
பிரச்சாரங்களையும் செய்வதில்லை...
சொல்லப் போனால் பண்பாட்டுப்
பிரச்சாரம், யார் செய்கிறார்களோ, அவர்கள்
மீது அது மரியாதையைத்தான் ஏற்படுத்தும்...
சரி; சொல்ல நினைச்சதுக்கு
வருவோம்..’
டில்லிக்கு நான் பலமுறை போய் வந்திருக்கேன்...
சொந்தஅலுவல்கள்,யாருக்காவது சிபாரிசு,உச்ச நீதிமன்ற
வழக்குகள்,கல்விப்பணிகள் என்று காரணம் இல்லாமல் போனதில்லை.
ஒவ்வொரு முறையும் யாராவது நண்பர்கள்,வக்கீல்கள், பொறியாளர்கள் என்று
வருவார்கள்...சில நேரங்களில் சுற்றுலா கூட போயுள்ளேன்...
முதல்நாள் ராத்திரி பத்து மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
பிடித்து,மறுநாள் பகல் முழுதும் பயணம் செய்து,
அன்னைக்கு இரவும் ரயிலில் தூங்கி, மூன்றாம் நாள் காலை 36 மணி நேரம் பயணம் செய்து இந்தியத் தலைநகர் டில்லி போய் அந்த அழுக்கான
சுகாதாரமில்லாத ரயிலடியில் போய் இறங்கி
உள்ளேன்.
சில நேரங்களில் தூரந்தோ அல்லது ராஜதானி விரைவு ரயில்களில்.அதுவும் 29 மணி நேரம் பயணிக்கும்
வண்டிகளில் பயணப்பட்டுள்ளேன்.
டெல்லி போய் இறங்க,
விமானங்கள்....3 மணி நேரம் செல்லும். அதிலும் சென்று வந்துள்ளேன்.
என்ன இருந்தாலும் தமிழ்நாடு,ஆந்திரா,மகாராஷ்ட்ரா,மத்திய
பிரதேசம்,ராஜஸ்தானின் ஒரு பகுதி,உத்தரபிரதேசம்,என்று பல்வேறு மேடு,பள்ளங்கள்
நிறைந்த நிலப்பரப்புக்கள் மீது ரயிலில் பயணப்படும் போதுதான், நம் இந்தியா இப்படி
மேடு பள்ளங்கள், வளமை,வறட்சிகள் மீதா இருக்கிறது ? என்கிற உண்மைகள் அவற்றைப்
பார்க்கும் போது தெரிய வரும்...நம் தமிழகத்தைப் பற்றி உயர் மதிப்பு பெருகும்.
சமீபத்தில்,கடந்த இரு மாதங்களில் டெல்லிக்கு பல்வேறு பணிகள் சம்பந்தமாக இரு முறை நண்பர்களோடு
சென்று இருந்தேன்..
இடையில் ஒரு மூன்று நாட்கள் ஓய்வு கிடைத்தது...
அஜ்மீர் செல்லுகிற ரயில் டெல்லியிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு,அரண்மனைகளின்
நகரம் ஜெய்ப்பூர் தாண்டி, மதியம் 12.45 அஜ்மீர் அடைந்து, அங்கிருந்து அதே வண்டி மதியம் 3.45 மணிக்கு மீண்டும்
புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு புது டெல்லி வந்து சேர்கிறது. ஆக போக வர 14.00 மணி நேரம் பயணிக்க
வேண்டும்.
அன்று அஜ்மீர் போய் சேர்ந்து, அங்கிருந்து மதியம் மீண்டும் புறப்பட்டு
டெல்லி நோக்கிக் கிளம்பினோம்...
அந்த ரயில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகும். எங்கள் இருக்கைக்கே வந்து தேநீர் மற்றும் சிற்றுடிகள் வகைகளைத் தந்து
செல்கிறார்கள்.. ஆனாலும் ஒரு பெரிய சிரமம், பயண நேரம் முழுதும் உட்கார்ந்து
மட்டுமே பயணிக்க வேண்டும்.
எங்கள் இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவை.ஆகவே அதில் சென்று
அமர எந்தப்பிரச்சினைகளும் இல்லை.பயணம் கலகலப்பாகவே அமைந்து இருந்தது..
முன்பெல்லாம் ரயில் பயணங்கள் புதிய புதிய நட்புகளைத் தேடிதந்தது......கொஞ்ச
நேர உரையாடல்,முன்பின் அறிமுக மில்லாதவர்களைக் கூட வெகு விரைவில் நட்பில் இணைத்து
வைத்துவிடும்....ஆனால் “மயக்க பிஸ்கட்” புண்ணியத்தில்’ ,பக்கத்தில் இருக்கிற
யாரும், பிறர் தரும் எந்தப் பண்டம் பலகாரங்களையும் தொட்டுக் கூட பார்ப்பதில்லை...அப்படித்
தந்ததைச் சாப்பிட்டால், அப்புறம் மயக்கம் வந்து, கொண்டு வந்த பொருட்களை, கொள்ளை
அடித்து சென்று விடுவார்களோ?,என்கிற அச்சம், தானே வந்து விடுகிறது. அதனால் நாசூக்காக
எல்லோரும் மறுத்தே விடுகிறார்கள்.
நாங்கள் ஏறி அமர்ந்ததும் எங்கள் இருக்கைக்கு முன்பு, புது
மணத்தம்பதிகள் “முளிப்பில்” ஒரு இளம் ஜோடி வந்து அமர்ந்தது...
எங்களைப்பார்த்தாலே “இவங்க தமிழ் நாட்டுக் காரர்கள்” என்று கண்ண
மூடிக்கிட்டே சொல்லிவிடலாம்.
அந்தப்பெண் தன் கை பேசியில் இருந்த சேமிக்கப்பட்ட படங்களை,திருமணக்
கோலத்திலான பல்வேறு படங்களை, அந்த இளைஞனின் தோளில் சாய்ந்து கொண்டு அவனிடம் காட்டிக் கொண்டு இருந்தாள்...ஒவ்வொரு
படத்தைப் பற்றியும் அந்த இளைஞன் என்னவோ
சொல்ல,அந்தப் பெண் அவனிடம் செல்லமாய் சிணுங்கிக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து அந்தப்பெண் ஏதோ பாடல்கள் அடங்கிய தொகுப்பை அந்த
போனில் ஓடவிட்டாள். அந்தப்பாடலின் ஓசையை காதுகளுக்குள் கேட்கும் ஹெட்போனின் இரண்டு
முனைகளில் ஒன்றை அவனும், மற்றொன்றை அவளும் மாட்டி நெருக்கமாக சாய்ந்து கொண்டு,
கேட்டு ரசித்துக் கொண்டே வந்தார்கள்....
இன்னும் பலப் பல...அதச்சொல்லிக் காட்டுவது நாகரீகம் இல்லை.
புதுமணத் தம்பதிகள் இப்படிப் பாட்டுக் கேட்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? என்று நான் என் வேலையைப்பார்த்துக்
கொண்டு இருந்தேன்.ஆமாம்.கையோடு கொண்டு போய் இருந்த Dominic Leppiar- Lery kalins எழுதிய Freedom
At Mid Night புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருந்தேன்..
புது டெல்லி ரயில் நிலையம் போய்ச் சேர இன்னும் இரண்டு மணி நேரம்
இருந்தது...ஏதோ ஒரு ஊரில் வண்டி நின்றது..அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.. எங்களிடம்
சிரித்துக் கொண்டே விடை பெற்றுக் கொண்டார்கள்.
அவர்கள் சென்ற பிறகு நம்ம அப்துல் காதர் அந்த ஜோடிகளைப் பற்றியே
சொல்லிக் கொண்டு இருந்தார்...”என்னவொரு ஜோடிப்பொருத்தம்” என்று சொல்லுகிற அளவில்
இருந்தது,அவரின் பேச்சுக்கள்.
கொஞ்ச நேரம் போனது....வண்டி டெல்லியை அடைய இன்னும் ஒரு மணி நேரம்
ஆகுமே என்று அடிக்கடி மணியைப் பார்த்துக் கொண்டேன்.ஓரிடத்தில் வண்டி நீண்ட நேரமாக
நின்று கொண்டு இருந்தது...
அந்த பெட்டியின் வாசல் பக்கம் போய், வண்டி எதற்காக அங்கு நிக்கிறது?
என்று தெரிந்து கொள்ளச்சென்றேன். அப்போது வாசலில், என்னைப் பார்த்து இளைஞன் ஒருவன் தலையை குனிந்து கொண்டான்... ஆஹா....எங்கள்
முன் சீட்டில் பயணித்து எங்களிடம் விடை பெற்றுக்
கீழே இறங்கச்சென்ற அந்த இளைஞர் அல்லவா என்று அவரைப்பார்த்தேன். அவர்
மட்டும் தனியாக அங்கே அமர்ந்து
இருந்தார்...கூட வந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை..
நான் “என்னடா இவம் மட்டும் தனியா இருக்கானே? அந்தப்பெண் ஒரு வேளை
கழிப்பறை பக்கம் போய் இருப்பாளோ?” என்று யோசித்து விட்டு, இன்னொரு இருக்கையில்
அமர்ந்து இருந்தேன்...
வண்டி டெல்லியை
நெருங்கியது....இன்னும் இரு நிமிடத்தில் இறங்க வேண்டியது தான்...
“Brother…Where is your wife?” என்று அந்த இளைஞனிடம் கேட்டேன்.
அதற்கு அந்த இளைஞன் சொன்ன பதிலைக் கேட்டு என் கூட வந்து, கீழே இறங்க வேண்டிய அப்துல் காதர், அவனை ஒரு முறைப்பு முறைத்து
விட்டு மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார்...
“என்னப் பொருத்தம்”...என்று
எல்லோரும் நினைத்து ஏமாந்துதான் போனோம்..
அவள் முந்தைய ரயில் நிலையத்திலேயே இறங்கிக் கொண்டதாகச் சொன்னான்....அப்புறம் அவன் சொன்னது தான் தலையைச்
சுற்ற வைத்தது....
அவன் சொன்னது....No…No…She
is my Girl Friend… அந்தப் பெண் இன்னொருவனின் மனைவியாம்.