இளம் வயசுக் காலம்...... அதை நினைத்தால் மனசில் என்னவெல்லாமோ வந்து போகிறது.
எதைச்சொல்ல?......எதைவிட?......எதை மூடி மறைக்க?......
“ஆத்தில் குளிக்கும்போது, கோவனமாவது கட்டிக் கொண்டு குளிச்சாத்தான்
சரி” ம்பான் கண்ணதாசன். அதுக்காகவாவது
சொல்ல முடிகிறதை மட்டும் சொல்லனும். நான் சொல்லுவதால் யாருக்கும் பாதிப்பு
வரக்கூடாதேங்ற கவலை, கண் முன்னால வந்துகிட்டு போகுது. அதனாலதான் அடக்கி வாசிக்க
வேண்டியது உள்ளது.
ஒரு வேளை இன்னும் கொஞ்சம் வயசானால் அத எழுதுவதுக்கு தெம்பு வருமோ
என்னவோ?
அப்போவெல்லாம் ரிக்கார்டு பிளேயர்கள் மறைஞ்சு, கேசட் பிளேயர்கள்
தலைகாட்டிய நேரம். அரபு நாட்டு புண்ணியத்துலே தெருவில் பாதிக்கு மேற்பட்ட
வீடுகளில் டேப் ரிக்கார்டர்கள் ஒலிச்சுக் கொண்ட நேரம். பத்தாவது படிப்பு முடிச்சக்
காலம் தொட்டே, டேப் ரிக்கார்டர்கள் மீது பைத்தியம், எங்களுக்குப் பிடிச்சது.
இப்ப உள்ள மாதிரி நினைச்ச பாட்டுகள் எல்லாம் அப்போ கேசட்டுல
கிடையாது...எம்.ஜி.ஆர்.சிவாஜி பாட்டு மட்டும் தான்..ஊடாலே ஜெமினி கணேசன்,ஜெய்சங்கர்,
ரவிச்சந்திரன், சந்திர பாபு பாடல்களும் கிடைக்கும்.
மெனக்கெட்டு வேறு பாட்டுக்கள் கேக்கனும்ன்னா திருனவேலி ஜங்சன் “ருக்”எலெக்ட்ரானிக், கடைக்குப்
போய்த்தான் பதிஞ்சு வாங்கி வரணும்..கேசட்டைப் பதியக் கொடுத்தால், குறைஞ்சது ஒருவாரத்துல இருந்து, பத்து நாள்ல தருவாங்க.
C 60, C90 என்று அறுபது,தொண்ணூறு
நிமிஷம் ஓடும் கேசட்டுகள் அங்கே கொண்டு போய்க கொடுத்தால், பத்து
ரூபாய்க்கும்,பதினைந்து ரூபாய்க்கும் பதிஞ்சு தந்தார்கள்.
அத சைக்கிளில் போய் வாங்கி, வீட்டுக்கு கொண்டு வந்து முதல்ல கேக்கும்
ரசனை இருக்கே?....அடடா.....நினைத்தாலே இனிக்கும்....
திரும்பத்திரும்ப நேரம் காலம் பார்க்காமல் கேப்போம்.அப்படி ஒரு
பெருமிதம்.
ராத்திரி வேளைகளில் எங்க வீட்டு திண்ணையில் நானும் எங்க புகாரி
காக்காவும், வெளி நாட்டில் இருந்து எங்க கூட பாட்டுக் கேக்கத்தான் லீவுல
வந்தாரோன்னு “மத்தவங்க” நினைக்கிற. எங்க லெப்ப காக்காவும்,இன்னும் சில நண்பர்களும்
நடுராத்திரி தாண்டியும் பாடலகள் கேப்போம்.
எனக்கு விஸ்வநாதன்-ராம மூர்த்தியும் , எங்க புகாரிக்கு
கே.வி.மகாதேவனும், பெரிய காக்காவுக்கு முகம்மது ரபி,லதா மங்கேஷ்கர்,ஆஷா போன்ஸ்லே கிஷோர்
குமார்,மன்னாடேயும் பிடிக்கும். எங்க எல்லோருக்கும் மொத்தமாக இசைமுரசு நாகூர்
ஹனீபா ரொம்பப்ப்பிடிக்கும்.
ஒரு கேசட்ட போட்டா, குறைஞ்சது ஒரு பக்கம் ஓடி முடிக்க, அரைமணி
நேரமாவது ஆகும். முதல்ல போட்ட கேசட், ஒரு
ஆள் விருப்பம்ன்னா,மறு கேசட் வேற ஆள் விருப்பமா வரும். ரண்டாவது கேசட் கேட்டு
முடிக்கும் போதே, தூக்கம் கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். பெரும் பாலும் மூணாவது கேசட்ட
லெப்ப காக்கா மட்டும்தான் கேப்பார்..
அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே ,எங்க வாப்பா வெளியே வந்து “ஏலே....
தூங்காம என்ன பாட்ட போட்டு கேக்கியோ ? ” அப்படீன்னு ஒரு குரல் கொடுப்பார்.அவ்வளோ
தான். சபை கலைஞ்சிரும். அப்புறம் மறுநாள் தான். பெரும் பாலும், நாளைக்கு
பள்ளிக்கூடம் காலேஜ் லீவுன்ன அன்னைக்கு ராத்திரிதான் இத்தனைக் கூத்தும் நடக்கும்.
வழக்கமா எங்களோடு பாட்டுக்கேக்கிற லெப்ப காக்கா, எங்களுக்கு ஒரு
சேதியச் சொன்னார்.
“அடே..நம்ம ஊட்டுல இருந்த எக்ஸ்டிரா ஸ்பீக்கர் இரண்டை நம்ம மணியாச்சி
காஜா சாச்சா தூக்கிட்டு போய் ஒரு மாசமாச்சு...நீ நாளைக்கு அவர்ட்ட போய் அத வாங்கி,
உன் செட்ல மாட்டி வச்சுக்கோ” அப்படின்னார்.
ரேடியோ,டேப் ரிக்கார்டர்கள்
கனவுகளில்யே சதா கிருக்குப்பிடிச்சு அலைஞ்ச காலம் அது என்பதால் அவர் சொன்னது மிக
ஆனந்தமான ஒன்றாக இருந்தது.காதுல தேன் வந்து பாஞ்சா இப்படித்தான் இருக்கும்ங்ரத
அப்போதான் புரிஞ்சோம்.
அந்த கால கட்டத்தில் தான், தமிழில்
ப்ரியா மற்றும், நினைத்தாலே இனிக்கும், பட பாடல்களும், ஸ்டீரியோ ரிக்கார்டிங்
முறையில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்டு வெளிவந்தது..அத மோனோ செட்டில் கேட்டால்
நல்லாவே இருக்காது. எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்கள் மாட்டி, கேட்டால் அப்படியே சொக்க
வைக்கும்.கொன்னு எடுத்திடும்.
சே....நம்ம வீட்டு ஸ்பீக்கர்கள் மணியாச்சி காஜா சாச்சா வீட்டில்
இருக்கா? நம்பவே முடியல்லியே....அப்படீன்னு நானும், புகாரி காக்காவும் சொல்லிக்
கொண்டு, அத உடனடியாகக் கைப்பற்றி, எங்க வீட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கினோம்...
காலை ஆறு மணிக்கே அவர்
வீட்டுக்குப் போய் விட்டோம்..
மணியாச்சியிடம் விபரம் சொல்லி கேட்டோம்.’லெப்பையே....சொன்னானா?’...அப்படீன்னு
திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டார்...இவனுகளை எப்படி அனுப்ப அப்படீன்னு
யோசிக்காரோன்னு நினைச்சிக்கிட்டோம்.
காரணம் கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்த ஸ்பீக்கர்
பெட்டியல்லவா...அதான் அந்தக் கேள்வி அவர் கேட்டுக்கொண்டார்..மணியாச்சி காஜா
மனைவியும் எங்க பெரியம்மாவும் அக்கா தங்கச்சிங்க அதனால அவர் மீது எங்களுக்கு பயம்
கலந்த மரியாதை உண்டு.
ஒரு இருபது வருஷத்துக்கு முந்தைய மேலப்பாளையத்தில் உள்ள இளைஞன் அரபு நாட்டில் இருந்து எது கொண்டு வந்தாலும்,
அது அவனோ, அல்லது அவன் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அனுபவித்தார்களோ?, தெரியாது.ஆனால்
பெரும்பாலும் அவை உறவினர்களுக்குத்தான் போய்ச்சேரும். அவன் துபாயில் இருந்து கொண்டுவந்த சோப் கேஸ் கூட,
மீண்டும் பயணம் கிளம்பும் நாளில் மிச்சம் இருக்காது. அரபு நாட்டு பொருள் மீது
அம்புட்டு மோகம்.
இப்ப உள்ள “பொன் பிள்ளைங்க” ரொம்ப உஷார்......மாப்பிளை கொண்டு வார
சாமான்கள் பத்திரமா இருக்க, என்ன வேலை
சரியா செய்யணுமோ, அத சரியா செய்யுதுங்க...
பத்து வருஷத்துக்கு முன்பு மாப்பிளை கொண்டு வந்த, ஜன்னத்துல்
பிர்தவ்ஸ் சென்ட் பாட்டில்கள் கூட பல
வீடுகளில் இன்னும் ஸ்டாக்கில் இருக்கிறது.பாவப்பட்ட மாமா மார்கள் எங்காவது வெளியே
போகும்போது அதை பூசிக்கொண்டு செல்லுகிறார்கள்..அல்லது "மவ்த்தா" போன பெறகு, தொளிக்கக்
கொடுக்கிறார்கள்......பல இடங்களில் இதுதான் வாடிக்கை..
“என்னங்க இங்க வாங்க...”
“என்ன.?..என்னா..”?.என்று அரபு நாட்டு மாப்பிளை பதறியபடி பொண்டாட்டி
முன் நாணிக் கோனி நிற்கின்றான்..
.“ஒன் மேன் ஷோ அந்த மனுஷனுக்கு எதுக்கு? ..இது மனைவி
“எந்த மனுஷனுக்கு”? மெல்லிய குரலில்...மாப்பிள காரன்.
“அதுதாங்க...உங்க வாப்பாக்கு....அவர் என்ன மைனரா? எந்தம்பிக்கு இத
நான் கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்......”என்று மாப்பிளைகளிடம் கேள்விமேல் கேள்வி
கேட்டு, கறார் யாபாரம் பேசி,அந்த பழைய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சென்ட் பாட்டிலை மாப்பிளையிடம்
கொடுத்து, மாமாக்களின் தலையில் கட்டிவிடும் மருமக்களை நான் பார்த்துள்ளேன்.
இப்ப, அவனவன் அரபு நாட்டிலிருந்து கொண்டு வருகிற சாமான்கள்,அவனவன்
வீட்டில் இருக்கிறது,என்றால் “பொண்டாட்டி கெட்டிக்காரி” அப்படீன்னு பேரு வேற.
ஆனா உண்மையிலே எல்லா வீடுகளிலும், இப்போ எல்லா நாட்டு சாமான்களும்
தட்டில்லாமல் இருக்கிறது...ஒவ்வொரு வீட்டு பிள்ளையும் தன் வீட்டுக்கு தாராளமா
சாமான்கள் கொண்டு வாரான்.அப்போ இருந்த நிலைமை வேற இப்போ உள்ள நிலைமை வேற.
சரி ஸ்பீக்கர் கதைக்கு வருவோம்...
எங்க இரண்டு பேரையும், மேல கீழ, முழுசா பார்த்த
மணியாச்சி....என்ன செய்ய? இந்த ரண்டு
பயல்களும் பெட்டிய வாங்காமப் போ மாட்டானுவோ...போல இருக்கேன்னு யோசித்து....
”சரீ......நாங்க ஒரு கேசட்டு...கேக்கணும்....அது பாதில
நிக்கி....அதனால....ராத்திரி ஒரு பத்து பத்தரை மணிக்கு வந்து வாங்கிட்டுப்
போப்பா”.....அப்படீன்னு கொஞ்சம் சன்னமான குரலில் சொல்லி எங்களை அனுப்பி
வைத்தார்...
எப்படியும் இன்னைக்கு விடப்படாது....அப்படீன்னு முடிவு கட்டி நானும்
புகாரியும் ராத்திரி ஒன்பது மணிக்கே....அவர் வீட்டுக்கு போய் விட்டோம்..
சொன்ன மாதிரி அந்த வீட்டு டேப் ரிக்கார்டரில் கேசட் ஒன்று ஓடிக்கொண்டு
இருந்தது. ஏதோ கடையநல்லூர் நூர் மைதீன் பாடிய நூர்மசலா....பக்கீர் சாயிபு தப்ஸ் ஒலியோடு நாங்க
வாங்கப் போன ஸ்பீக்கரில் “ஓடிக்கொண்டு” இருந்தது...
நூறு கேள்விகளுக்கு பதில் சொல்லும், “மஸ்அலாக்கள்” அது. வயசான கிழடு
கட்டைகள், அதையே கதி என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள்..
நாங்களும் ,...விதியே...என்று அந்த கேசட் முடிகிற வரைக்கும் இருந்தோம்.
....ஒரு பதினோரு மணிக்கு...அந்தக் கேசட் ஓடி முடிஞ்சதும்....மைக் செட் காரன்
வேகத்தில்....அந்த கனத்த இரண்டு ஸ்பீக்கர் பெட்டிகளையும்,கழற்றி
எடுத்து.....நாங்கள் கொண்டுவந்த சைக்கிள் கேரியரில் வைத்தோம்...
அப்போதான் புகாரி காக்கா சொன்னான்.....”எப்பா நீ சைக்கிள் ஒட்டு..நான்
மடியில் அந்த இரண்டு பெட்டிகளையும் வைத்துக் கொள்கிறேன்”..... என்றான்.
நான் சைக்கிள் ஒட்ட, புகாரி பின்னால் இருக்க ஒரு நூறடி வந்திருப்போம்..
மேலப்பாளையத்தில் இப்போ இருக்கிற மாதிரி,இருட்டை வெளிச்சமாக்குகிற சோடியம் வேப்பர் லைட் எல்லாம் அப்போது கிடையாது....தெருவுக்குத்தெரு
இருக்கிற,எலக்ட்ரிக் கம்பத்தில் 40 வாட்ஸ் பல்புகள் தான் எரியும்...அதுவும்
சில வேளைகளில் தீர்ந்து போய்விட்டால், வார்டு கவுன்சிலர் சொல்லி,சரிசெய்ய
மாதக்கணக்கில் ஆகும்.
காத்தடிக்காலங்களிலும்,கோடைக் காலங்களிலும் பெரும்பாலான மக்கள் தங்கள்
வீட்டு திண்ணைகளில் தான் தூங்குவார்கள்.
சில வீடுகளில் தம் மகனையும் மருமகளையும் வீட்டில் இருக்க வைத்து
விட்டு, தாயும் தந்தையும் திண்ணையில் தூங்கிய குடும்பங்களும் உண்டு.
ஒரு சில பேர்கள் நட்டநடுத் தெருவில் தரைக்கட்டில் போட்டுப்
படுப்பார்கள்.
சில “முன்ன பின்ன” யோசிக்காதவர்கள்,நடுத்தெருவிலேயே பாய் ஜமுக்காளம்
விரித்துத் தூங்குவதும் உண்டு.
நானும் புகாரி காக்காவும் சைக்கிளில் லோடு போட்டு வரும்போதுதான் அப்படி ஒரு விபரீதம் நடந்தது.
சைக்கிளில் லைட் இல்லாமல் போனால் பசாரில் தான் போலிஸ் காரங்க
பிடிப்பாங்க...ஆனா தெருக்குள்ள அதெல்லாம் ஒன்னும் நடக்காதுங்ற தைரியத்தில்
சுவாரஸ்யமாக ஸ்பீக்கர் பெட்டிய எங்க வைக்கலாம் எப்படி மாட்டலாம்ங்ற பல்வேறு
யோசனைகளை செய்து பேசிக்கொண்டு வந்தோம். அந்தப்பகுதிக்கு வரும்போது கொஞ்சம் இருட்டு.
நான் ஒட்டிக கொண்டு போன சைக்கிள் ஏதோ ஒரு நாயின் வயிற்றில் ஏறி இறங்குவது
போல சைக்கிள் பெடலின் மிதியில் உணர முடிந்ததுதான் தாமதம்.......”ஏ ஏ ....எஈ ஏ ....”என்று
கடுமையான அபாயக் குரல் எழுப்பிக் கொண்டு சடார்பிடார்ன்னு ஒருவர் சைக்கிளின் கீழ்
இருந்து எழுந்தார்...
நான் பயந்தே விட்டேன்..
நான் சுதாரிப்பதற்குள் ஒரு சேர பின்னால், இருந்த புகாரி காக்கா வோடு
சைக்கிளோடு அந்த ஆள் மேல் விழுந்தோம்...
“எம்மா” .....என்று ஒரே அழுகைச்சத்தம்..இருட்டில் இப்படி ஒரு விபரீதம்
நடக்கும் என்று கொஞ்சமும் நாங்கள் எதிர் பார்க்கவில்லை...
அக்கம் பக்கம் வீடுகளில் தெருவிளக்கைப் போட்டார்கள்..
அப்போதுதான் பார்த்தேன்....நான் நாய் என்று சைக்கிளை ஏற்றியது
ஒருவரின் வயிற்றில் என்பதை...
அந்த ஆளு எங்க வட்டாரத்துல எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார்...எங்களைப்பார்த்தாவது ஒப்பாரிய நிறுத்தினானா? என்றால் இல்லை...ஏதோ எங்களை உற்றுப்பார்த்துவிட்டு அந்த ராத்திரியில் அந்த ஆள் திறந்த வாயை "ஏதோ ஒரு நினைப்பில்" மூடவில்லை....அம்புட்டுச்சத்தம்.
அந்த ஆளு எங்க வட்டாரத்துல எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார்...எங்களைப்பார்த்தாவது ஒப்பாரிய நிறுத்தினானா? என்றால் இல்லை...ஏதோ எங்களை உற்றுப்பார்த்துவிட்டு அந்த ராத்திரியில் அந்த ஆள் திறந்த வாயை "ஏதோ ஒரு நினைப்பில்" மூடவில்லை....அம்புட்டுச்சத்தம்.
“வானானத்துருவே....என்ன வேல பார்த்தே?.....அடைலெப்பய சாவடிக்கப்
பார்த்தியே?.....” என்று புகாரி காக்கா, ஈனக் குரலில் எனக்கு மட்டும் கேட்கும் அளவில் முனங்கினான்..அவன் குரலில் அடுத்து என்ன நடக்குமோ? அப்படீங்கற பீதி தெரிஞ்சுது....
“அந்த ஆள் நீட்டி, நிமிர்ந்து நடுத்தெருவில் படுப்பான்னு, எனக்கென்னல தெரியும்?”
என்று நான் புகாரியிடம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன்..
அடைலெப்ப அலி பார்ப்பதற்கு,வடிவேல் படத்தில் “கினற்றை காணவில்லை” போலிஸ் இன்ஸ்பெக்ட்டர்
சிவாவைப்போல கொஞ்சம் ஒல்லியாக இருப்பார்.வயிறு உள்ளடங்கி இருக்கும்......ஆள் நல்ல வளர்த்தி..
எங்க தெருவில் இருந்து ஆயிரம் அடிதூரத்தில் இந்த சம்பவம் நடந்தது..தவிரவும்
நாங்கள் நின்று கொண்ட தெருவிலும், எங்கள் உறவினர்கள் நிறையபேர்கள் இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் இந்தக் "காப்ரா" கேட்டு அவர்களும் என்னவோ? ஏதோ? இந்த ரெண்டு பெரும் இருட்டில்
கூட்டத்தின் நடுவே நிக்காங்களேன்னு வந்து,
சூழ ஆரம்பித்தார்கள்.
என்னை நோக்கி வெள்ள மீரான் சம்சுத்தீன் மாமா வேகமாக வந்து கொண்டு
இருந்தார்...ஆள் ஆஜானு பாகு வாக ...அந்தக்கால ஸ்டண்ட் நடிகரைப்போல
இருப்பார்..அனால் கொஞ்சம் வயோதிகம்.எங்கள் இருவர் வீட்டுக்கும் வாரம் மூன்று நாளாவது
வந்து சாயா குடிக்காமல் போக மாட்டார்....
“ஏல...என்னலே நடந்துது? அப்படீன்னு பக்கத்தில் வந்து கேட்டார்.
நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கொண்டு,இருட்டில் நடுத்தெருவில்
அந்த ஆள் படுத்துக் கிடந்ததை.....அப்புறம் சைக்கிள் எறியதை....நடந்ததைச்சொன்னேன்...
அப்புறம் வெள்ள மீரான் சம்சுத்தீன் மாமா ஒரு வேலை செய்தார் பாருங்க...அது தான் எங்களை வீடு வரை
ஓடச்செய்தது..
வயிற்றைப் பிடிச்சிக்கொண்டு வந்த அடைலெப்ப அலியிடம், “...ஏல....படுக்காலிப்பயலே
நீ தூக்கக் கலக்கத்தில், சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்த சின்னப்பையங்க மேல
மோதுவியாலே?” கீழ விழுந்த அவங்க கைய, கால ஓடச்சிக்கிட்டா என்னல பண்ணுவே? அப்படீன்னு
கேட்டுவிட்டு...போட்டாரே ஒரு போடு அவம் முதுகில்...
அப்புறம் எந்த அழுகையும் அவன்கிட்ட இருந்து வரல்லை....
வழக்கு எப்படி ?......... தீர்ப்பு எப்படி?