சனி, 26 நவம்பர், 2016

START……SERIOUS….OUT..அடிச்சாம் பாரு.....தந்தி !


இப்ப உள்ள தம்பிமார்கள் கிட்டே போய்....தந்தி ன்னா என்னான்னு ?... ....கேட்டுப்பாருங்க....

முக்காவாசிப் பேருகளுக்கு ,அது என்னான்னு சொல்லத்தெரியாது......

கொஞ்சம் படிச்ச ஆட்கள் அத...டெலகிராம்ன்னு அழுத்தம் திருத்தமா....சொல்லுவாங்க.... 

.கடன் பத்திர விற்பனை....வி.பி.பி....புஸ்தக விற்பனை, சிறுசேமிப்பு, மணியார்டர்ன்னு போய்க்கிட்டு இருந்த போஸ்ட் ஆபீஸ்ல ,  புதுசு .....புதுசான  புது....யாபாரங்கள்லாம் தபாலாபீஸ்ல...... பார்சல் மூலமா.......செய்றாங்க.....கங்கை நீர் விற்பனை..வரை அங்கே வந்தாச்சு.. 

இப்போ ....500,  1000 ரூபாய் நோட்டுகளை,  செல்லாமல் ஆக்கினதுல புது  2000 ரூபாய் சில்லற மாத்துற வேலையெல்லாம் பண்ணுறாங்க........ஆனா...மக்களுக்கு ஒபயோகமா இருந்த.....தந்திக்கு மத்திய அரசு மூலமா.. மூடு விழா கொடுத்துட்டாங்க ......

கட் கட்....கடா....கட் டட்....என்று தபால் ஆபீஸ்ல ....ஒரு சின்ன விசைய்ல இருந்து சப்தங்கள் வந்து கொண்டு இருக்கும்....அந்தக்கருவி தருகிற ஓசையை....உள்வாங்கிக்கொண்டே...அந்த தபாலாபீஸ் போஸ்ட் மாஸ்ட்டர் அல்லது அவருக்கு இணையானவர் பக்கத்தில் ஒரு தாளில் எழுதி ....யார் விலாசத்திற்கு தந்தி வந்து இருக்கோ....அவுக வீட்டிற்கு அத அனுப்பி வச்சிருவாக....

போன் இல்லாத....செல் போன் இல்லாத.......காலங்களை இளையதலைமுறை கொஞ்சம் கற்பனை பண்ணிக்கொண்டு பார்க்கணும்...நம்பவே முடியாது...ஊர்ல  நாலு அஞ்சு வீட்ல...போன் இருந்ததே பெரிய விஷயம்...

இப்போ செல் இல்லாம யார் இருக்கா.....இளசுகள் முதல் கெளடுகள் வரை ..... வச்சு இருக்குதுக..

“ அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் “....ன்னு.....தந்தி வாசகங்களைப் பார்த்து தான் சொல்ல ஆரம்பிச்சார்கள்...அந்தக்காலத்து வேலை வாய்ப்பு உத்திரவுகள் எல்லாம் தந்தியிலும் தபாலிலும் தான் வந்து சேரும்...

உலகத்தின் எந்த மூலையிலும்  தந்தி அனுப்பவும் பெறவும் முடியும்.
கிராமங்களில்....தபால் காரரர்கள் வருகிற நேரம் தாண்டி.....கைகளில் ஏதாவது தந்தி கொண்டு வந்தார் என்றால்....அது  “ எழவு விழுந்ததை கொண்டு வாராம்ல.”.....என்றே நம்பிக் கொண்டு இருந்தார்கள்....

வந்த தந்திய...பிரிச்சி பார்க்கிற வரை... நெல கொள்ளாது... நூத்துக்கு எம்பது சதமானம்....உசுர் போய்ட்ட செய்திகளைத்தான் தந்தி வாசகங்கள் கொண்டு வரும்.

சில வேளைகளில் ரிப்ளை...டெலிகிராம் மூலம் பணத்தைக் கட்டி தந்தி கொடுத்தவருக்கே.....பதிலும் அனுப்ப முடிந்தது.
பண்டிகை ,பதவியேற்பு, பிறந்த நாள், மணந்த நாள்  வாழ்த்துக்கள்  இறப்புக்கு இரங்கல்,..இப்பிடி பல தரப்பட்ட .... வேலைகளுக்கு தந்தி...என்கிற டெலக்ராம் ரொம்ப வசதியா இருந்துச்சு.
வக்கீல் ஆபீசுகளில் இருந்து ....உயர் அதிகாரிகளுக்கு உள்ள நிலைமையை சொல்ல...அனுப்பப்படும் தந்திகளுக்கு....ரண்டு....மூனு நாட்களில் ...பணம் கட்டி நகல வாங்கிக்கலாம்.. இப்படிலாம் அறிவிச்சோம்....அதல்லாம் மீறி...இப்படி பண்ணிட்டாக ன்னு சொல்ல தந்தி கொடுத்தத காட்டிக்கலாம்..சாட்சிக்கு தந்தி ரொம்ப ஏதுவா இருந்துச்சி..
பல அதிகாரிங்கள....சட்டத்தை சொல்லி வரம்புமீறி கடுமையா போகாம.....நிறுத்தி வச்சது தந்தி தான்னு என்னால் சொல்ல முடியும்....
சட்டப்பூர்வமா....கேப்பதற்கும்,நாசூக்கா மெரட்டுரதற்கும் தந்தி பயன் பட்டுகிட்டது.

நாம....இங்கன ஒரு தந்தி...படுத்தின பாட்டை ...சொல்லித்தான் ஆகணும்.

அப்போவெல்லாம்...நாங்க....கல்லூரி முடிச்ச நேரம்....
ராத்திரியெல்லாம் முழிப்பு.....பகலில் தூக்கம்ன்னு சொல்ல முடியாம...ஒரு காலம்.
நானும் என்னோட சேக்காளிகளும் .....ரண்டாம் பிளே...ஆமா....செகண்ட் ஷோ சினிமா பார்க்கப்போரத வழக்கமா வச்சிருந்தோம்...
ஆனா.... வீட்ல யார்கிட்டயாவது எங்க போறோம் ன்னு  சொல்லிட்டுத்தான் போகணும்....

இப்ப உள்ள விழிப்புணர்வு அப்ப ஏது...?

அப்ப எங்க செட்டில் .....யாருக்கும் கல்யாணம் ஆகாத பருவம். அதனால திருனவேலி டவுன்,  ஜங்சன் , பாளையங்கோட்டை என்று நள்ளிரவுகள்...தாண்டியும் மோட்டார்சைக்கிளில் சுற்றுவோம்...மத்த படியான வில்லங்க,விவகாரங்களுக்கெல்லாம் போக மாட்டோம்... .எங்க அண்ணன் புகாரி எப்பவாவது  எங்களோடு.வருவான்.....

விடிய..... விடிய திருனவேலி ஜங்க்சனில் பஸ் ஸ்டாண்டை சுற்றி....கடைகள் , டீ ஓட்டல்கள், திறந்திருக்கும்....

திருனவேலி ஜங்சன் பழைய பஸ் ஸ்டாண்டில் அப்போ ,  அரசன் பேக்கரி.....ஐஸ்கிரீம் கடை ரொம்ப பிரபலம்....ராத்திரிவேளைகளில் ,  நல்ல டீ குடிக்கனும்ன்னா...அங்க தான் போகணும்...

பசி எடுத்தா....கேக்கு,  பண்ணு, வட்டரொட்டி, தேங்காப்பூ ரொட்டி , சாக்குலேட், பிஸ்கட் ,பப்ஸ் எந்த நேரத்திலும் திங்கலாம். 

ஒரு நாள் நாடு ராத்திரி தாண்டி ஒரு ரண்டு மணி இருக்கும்...நானும் அண்ணனும் அங்கே.....எதோ பசிக்கு  தின்று விட்டு....சூடான  டீயை உரிந்து குடிச்சுகிட்டு இருந்தோம்......

இப்ப உள்ள மாதிரி ...ஒன் வே...டூ வே கதையெல்லாம் அப்போ கிடையாது...அந்த நள்ளிரவு தாண்டியும்...வெளக்குகளாலே ஊரே....வெளிச்சமா இருந்தது. நாங்கள் அம்பேத்கர் சிலை பக்கம் நின்று...கொண்டு இருந்தோம்.

எங்கள் பக்கத்தில் ஒரு லாரி வந்து நின்றது....அதன் முன்புறம் இடது பக்கத்தில் இருந்து ஒருவர்...வேகவேகமாக.. குதித்தார்...அவர் எங்கள் இருவருக்கும் ....சொந்தக்காரர் .. ..அரசுப்பணியில் இருந்தார்.

என்ன...----இவர் லாரில வந்து குதிக்காறேன்னு..ஒன்னு போல ...நாங்களே.......கேட்டுக்கிட்டோம் ...வந்து இறங்கியவர் பதட்டமாக இருந்தார்...அதோடு எங்கள் இருவரையும் பக்கத்திலேயே பார்த்துவிட்டார்....

“ எப்பா....எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?.....”
“ எங்க பெரியப்பா.....நல்லா இருக்கானா ?....”
“ சின்னப்பா...நல்லா இருக்கானா ?....”
“ அந்தப்பிள்ள....நல்லா இருக்காப்பா..?...” என்று படபடப்பாகக் கேட்டுக் கொண்டார்....
“ அந்தப்பிள்ளை “  என்பது....அவரது 25 வயது மகன் வயதைக்  கொண்ட இரண்டாம் மனைவி...
நாங்கள் இருவரும்....” உங்க வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்க..”.என்று எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னோம்...

“ ஆமாப்பா.....நீங்க ஊர்ல இருந்து எப்ப பொறப்பட்டீங்க...?” என்று ஆவல் மேலிட கேட்டார்...

“ நாங்க...ஒரு பத்து மணிக்கு கிளம்பியிருப்போம்....சரி...எங்க இருந்து இந்த லாரில வாறீங்க?...இன்னைக்கு பஸ் ஒடல்லியே?...” அண்ணன் கேட்டான்.
“ நான் விழுப்புரம் பக்கம்...ஒரு கிராமத்தில் இருந்து ரண்டு மூனு இடத்தில் ...லாரி லாரியா மாரி....காலைல ஏழு  மணிக்குப் புறப்பட்டவன்...இப்ப தான் வந்து சேருறேன்....”என்றார் அவர்.

நாங்க வாங்கிக் கொடுத்த கேக்..துண்டுகளைக் கூட வேண்டான்னு சொல்லிட்டு சுடச்சுட கொடுத்த டீயை ....கடகடன்னு குடிச்சு முடிச்சார்.
நாங்க சொன்ன எதையும் நம்புகிற மனப்பக்குவத்தில்  அவர் இல்லை....நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தார்..” போதுமப்பா...கிளம்புங்கப்பா “என்று சொல்லிவிட்டு அந்த அகால வேளையில் ...எங்களோடு மோட்டார் சைக்கிளில் மூன்றாவது ஆளாக அமர்ந்து  கொண்டார்...

“ என்ன...இவர் ஏன் இப்படி துடிக்கிறார்?....ஒன்னையும் சொல்லித்தொலைக்க மாட்டேங்கிறாரே...?  என்னவோ?....ஏதோ?...”....என்று பல்வேறு வில்லங்கமான யோசனைகள் மனதில் விதவிதமாக வந்து போக........ நான் பைக் ஒட்டிக்கொண்டு இருந்தேன்....

எங்கள் வீட்டின் பக்கத்து  தெருவில் தான் அவரும் குடியிருந்தார்...
நாங்கள் அந்த மோட்டார் சைக்கிளில் அவரோடு நாங்கள்...நுழையும் போது....அந்த தெரு அமைதியாக இருந்தது....
அவர் வீட்டு முன்னர் போய் இறங்கினோம்...

“ ஏய்....யார்ரா இருக்காங்க.....கதவத்திறங்க...”.என்று  சொல்லிக்கொண்டே....படபடவென்று....அவரது வீட்டின் கதவைத்தட்டினார்...

கொஞ்சம் மெதுவாக....அவரது மனைவி வந்து கதவைத்திறந்தாள்.

கதவைத் திறக்க அவர் போட்ட..கூப்பாட்டில் ....அடுத்த வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு இருந்த ஒருவரும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார்....நாங்கள் நான்கு பேரும் உள்ளே நுழைந்தோம்...

அவரது மூத்த மனைவிக்கு பிறந்த பெரிய மகன்,  மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துகொண்டு இருந்தான்....

முன் வீட்டில், இரண்டு குழந்தைகள்....பாயின் மீது,  தூங்கிக் கொண்டிருந்தன.  அவர் மனைவியும்....அவசர அவசரமாக கண்களை இடுக்கி .....முழித்துக் கொண்டு ....தூக்கக் கலக்கத்தில் இருந்தாள்....

தன கைகளில் இருந்த பெட்டியை கீழே எறிந்து விட்டு....

” இந்தத் தந்திய....எனக்கு கொடுத்தது...... யாருலே...?”....என்று கடும் குரலில் கோபம் கொப்பளிக்க ஒரு சவுண்ட் கொடுத்தார்.அது அக்கம்பக்கம் பத்து வீடுகளுக்காவது கேட்டு இருக்கும்....

அப்போது தான் நானும் அண்ணனும் அவர் கையைக் கவனித்தோம்....ஒரு தந்தி இருந்தது...எந்த பாக்கட்டில் அந்தத் தந்திய வச்சு இருந்தாரோ தெரியல்லை.....

கொஞ்ச நேரத்தில்...எங்கள் கண் முன்னே...அவரது மூத்த மகனையும் , இளம் மனைவியையும்...மனுஷன் துவச்சு எடுத்திட்டார்...
அவரைத்தடுத்து நிறுத்த நாங்களும்..... பக்கத்து வீட்டு திண்ணையில் படுத்து கிடந்து..... எழுந்து வந்த ஆசாமியும்...போட்ட கூச்சலில் ...அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ,....அந்த அர்த்த ஜாமப் பொழுதில் .......இன்னும் சில பேர்கள் வந்து சேர்ந்தார்கள்....

“  ஏல...நான் கேக்கிரம்ல.....இந்த தந்திய எனக்கு கொடுத்தவம்....எவம்ல?...”அவருடைய குரலில் ஆவேசம் வெளிப்பட்டது..அங்கிருந்த யாரும் பதில் சொல்லவில்லை...
பக்கத்து வீட்டு திண்ணை ஆசாமி....கொஞ்சம் தைரியத்தை


வரவழைச்சுக்கிட்டு.....” நாந்தாங் கொடுத்தேன்...இங்க ஒங்க ஊட்ல...நீங்க ஊருக்கு போன நாளாயில் இருந்து...ஒங்க மகனுக்கும் , இந்தப்புள்ளைக்கும் ஒரே தக்கம்,.தகராறு தான்...

உங்களை உடனடியா.....வரவழைக்கணும்...எப்படியாது ...அவசரமா.....கொடுன்னு  இந்தப்பிள்ளை தான் தந்தி  கொடுக்கச்சொல்லுச்சு....அதனால் நான் தான் வாசகம் அமைச்சு..... கொடுத்தேன் “.... என்றான்....

மனுஷன் அந்த ஆசாமியின் கழுத்தை சுற்றிப் போட்டு இருந்த மேல் துண்டை முறுக்கிகொண்டு .....இழுத்துக் கொண்டு.... “ ஏல நீயால....இப்படி ஒரு தந்தியக் கொடுத்தே...இதுக்கு என்ன அர்த்தம்னாவது ஒனக்குத் தெரியுமாலே.... ? ..”என்றார் ஆத்திரத்தோடு..
ஐயோ....இந்த ஆள இப்படியே அவர் கைகளில் கொடுத்தால்....சங்கு நெரிஞ்சு செத்துடுவான் போல இருக்கேன்னு.....அவனை விடுவித்தோம்....அடுத்த வீட்டு ஆசாமி...மேல்மூச்சு...கீழ மூச்சு வாங்க....இருமலோடு அமைதியானான்...

“  நான் தந்தி கொடுத்தது...தப்பாங்க?...”..என்று என்னிடம் கேட்டுக் கொண்டான்....

அவர் கைகளில் இருந்த தந்தி வாசகங்களைப் பார்த்தேன்....இவன் எழுதிக்கொடுத்த தந்திய அந்த போஸ்ட் மாஸ்ட்டர் எப்படி ...ஒத்துக்கிட்டு வாங்கி அனுப்பினாரோ?......வந்த சிரிப்பை....அடக்கிக் கொண்டு ....ஓடியே வந்து விட்டோம் ..
தந்தி வாசகம் இது தான்..

                                   START……SERIOUS….OUT..







செவ்வாய், 5 ஜூலை, 2016

பெருநாள் வந்தாச்சு.......எங்க ஊர் பெருநாள்


பெருநா கொண்டாட்டம்


அப்போ எல்லாம் ஒரு பத்து பதினான்கு வயசு வரை பெருநாள் சட்டைத்துணி மற்றும் வேஷ்ட்டியை எங்க வாப்பாவும்,உம்மாவும் உடன் வர நாங்களே தேர்ந்தெடுப்போம்.
நினைவு தெரியாத காலத்திலே....அவுக எடுத்து தாரத உடுத்தி இருக்கோம்.
டெரிக்காட்டன், பாலிஸ்டர் துணிகளை சட்டைக்கு எடுத்து விட்டு எங்க பக்கம் யாதவாள் தெரு, கொம்பையா டெய்லர் வீட்டுக்கு போய் சேர்வோம்.
சட்டைக்காலர் எவ்வளவு பெருசா இருக்கோ அவ்வளவு பெருமையா இருக்கும்.
பெல்பாட்டம் எவ்ளோ அகலமா இருக்கோ அந்த அளவில் சட்டையின் வயிறு,முதுகின் கடைசியில் அகலமா விரிந்து இருக்கும்...பட்டி வைத்து பிரெஸ் பட்டன்களோடு தைப்பார்கள்.
" பெருநாளைக்கு மூணு நாளைக்கு முன்னாடியே தாறேன்" னு .....சொன்ன கொம்பையா, பெருநாள் அதிகாலை தான் தருவார்.
பல பெருநாள் ராவு தூக்கங்கள் கொம்பையா வீட்டு திண்ணையில் தான் நடந்தேறும்.
அவர் வீட்டின் தொழுவத்தில் , .... எருமை மாடுகள் மோழுகிற மூத்திர சிதறல்கள் திரேகம் முச்சூடும் தெளிக்கும்...
வீட்டுக்குப் போனால் சட்டை வேஷ்ட்டியில ஒரு மாதிரி வீச்சம் அடிக்கும்.
ஒரு மட்டும் காலை 6 மணிக்கு முன்னால சட்டை கிடைச்சிடிடும்....ரண்ண்டு சட்டை தைக்க கொடுத்தால் இன்னொன்னு 6 நோன்பு பெருநாளைக்குத்தான் கிடைக்கும்.
அந்த சட்டையை போட்டுக்கிட்டு தொழுதுட்டு வந்து கழட்டி வச்சிட்டுத்தான் மறு சோலி.....
உள்ளுக்குள்ளே மஞ்சக்கலரில், அரக்கு பார்டர் வச்ச துபாய் பனியன் நல்லா இருக்கும்..வெய்ட் கிளப் போற வார பையன்களை , அது எடுப்பா காட்டும்
அந்தக் கோலத்தில் என் போன்றவர்கள்,வீட்டுக்கு வெளியே நிப்பதைப் பார்த்தால் ,எங்க வாப்பும்மாவும், அவளோடு சேர்ந்த மீத்தீன் பெத்தும்மாவும் "மூத்தவளே.... இப்பிடி பாடிய போட்டுக்கிட்டு வெளிய , ஆத்துக்கு கீத்துக்கு போகாத..கண்ணு பட போவுதுலே,"என்று செல்லிவைப்பாக....
எங்க வாப்பா அந்தக் கோலத்தை ரொம்ப ரசிப்பா....." இது நல்லா இருக்குப்பா" என்பார்கள்.
பெருநாள ஒட்டித்தான்...கல்லூரி க்கு போக வரதுக்கு ,பேண்ட் தைக்கிற வழக்கம் உண்டு....
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசல் பக்கம், ஒரு மாடியில் பிரின்ஸ் டெய்லர் என்று ஒருவர் இருந்தார்.
திருனவேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை வட்டார இளைஞர்கள் , மாணவர்கள் , நடுத்தர வயசுக்காரர்கள் அங்கே சென்று பேண்ட் தைத்து போடுவதை பெரிய கெளரவமாக வைத்திருந்தார்கள்...
இடுப்புக்கு கீழே இரண்டு கால்களும் பிரியும் இடத்தில்..... அழுத்தி , கைகளில் அளவு டேப் வைத்துக் கொண்டு... அவர் பேண்டின் கால் அளவு எடுப்பார்....கொஞ்சம் கூச்சமாக இருக்கும்...சிலர் நெளிவார்கள்....சிலர் குதிப்பார்கள்....அவ்வளவு சரியாக இருக்கும்...அவர் தைத்து தருகிற பேண்ட்.
இன்றைக்கு கொம்பையா...வாய்க்கால் பாலம் அருகே....ஒரு சின்னக் கடை வைத்து தொழில் நடத்துகிறார்...
"தாஸு...எப்படி போகுது "? என்று கேட்டேன்...
"பொன்பிளைங்க...சட்டை துணி மணி தச்சுக் குடுக்கேன்யா.." என்றார்.
ராம்ராஜ் இருக்கா...?
ஷெல்டன் இருக்கா..?
ஹேரி வில்லியம்ஸ் இருக்கா..?என்கிற கேள்விகள் எழுந்ததனால்...
எங்க ஊர் பக்கம் கொம்பையா....தையக்கடை ஜமால் , கோம்பை டெய்லர் ,திருமலை பேர் எல்லாம் மறந்து போச்சு....
தைய்யக்கடையோடு...சட்டை பேண்ட் துணியும் வச்சு யாவாரம் பண்ணுற டெய்லர்கள் நல்ல முன்னேறியிருக்கிறார்கள்.அதில் பலர் என் நண்பர்கள்.
வளரட்டும் பெருநாட்கள்...
மலரட்டும் மகிழ்ச்சிப் பெருக்கு!முப்பது நோன்பு வச்சு பெருநா பாக்கிற மனசின் குஷி....
அது ஒரு தனி ரகம் தான். அதுக்கு வேற என்னத்த 
பகரமா பார்க்கமுடியும்?நாற்பது வருஷத்துக்கு முந்தி....பாப்ளின் சட்டையும் ...மல்லு வேஷ்ட்டியும் பெரிய ஆட்களுக்கும்.....கலர் துப்பட்டாவும் மூட்டி தச்ச வேஷ்ட்டியும்பொம்பிளைகளுக்கும், ...டவுசர் சட்டை,பாவாடை தாவணிஇதெல்லாம் இள வயசுப்பிள்ளைகளுக்கும்...கிப்ஸ் ,சங்கு மார்க்,கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன்,உஸ்மான் பிராண்ட் லுங்கிகள்,துபாயில் இருந்துவந்த மஞ்சள்....அரக்கு கலர் பனியன்கள்,பிரஸ் பட்டன் வச்சு தச்ச சட்டைகள் இளவட்டங்களுக்கும்  போதுமானதாக இருந்தது.இப்ப மாதிரி ரெடிமேட் சமாச்சாரங்கள் 
எதுவும் அப்போ கிடையாது.டவுன் ஆர்.எம்.கே.வி...அதுக்குப்பக்கத்தில் நாவல்ட்டி கிளாத்,திருநெல்வேலி ஜங்ஷனில்  த.மு.பில்டிங்கில் 
ஜீனத் செல்வ மகால்.அது மாடியில் அதுக்கு கீழே ஏ.பி.சி.துணிக்கடைஅப்புறம் ராஜா காம்ப்ளக்சில் கல்பனா சங்கீதா ஜவுளிக்கடைஎன்று தான் திருனவேலி இருந்தது.


அங்கேயே அப்படி என்றால் மேலப்பாளையத்தை

 சொல்லணுமோ?பசார் ஹக்கீம் ஜவுளிக்கடை, ஆர்.எம்.ஏ. அப்துல் சமத் கடைஇந்த இரண்டும் ஆள் நிக்க இடம் இல்லாமல் 
பெரு நா ராவு வரை இருக்கும்.அதுக்கு பிறகு சாச்சப்பா காஜா கடை,  
காட்டுவா ஜவுளிக்கடை என்று விரிந்தது.வகை வகையா,  கலர் கலரா தொப்பிகள் 
பஜாரில் குவிந்து கிடக்கும்.அரபு நாட்டு புண்ணியத்தில் இன்னைக்கு 
வெள்ளை சீனா தொப்பிபோதும்ன்னு ஆகிப்போச்சு.இன்னும் பல பேருக்கு 
வேண்டாமேன்னு மாறிடுச்சு.இன்னைக்கு திருனவேலியில் உள்ள ஜவுளிக்கடைகளை 
எண்ணி முடிக்கமுடியாது .ஆர்.எம்.கே.வி.,போத்தீஸ்,சென்னை சில்க்ஸ்,
தொடங்கி பேர்சொல்ல த்தெரியாத அல்லது வாயில் 
நுழையாத பெயரில் எல்லாம்ஜவுளிக்கடைகள் வந்து விட்டன.


வியாழன், 2 ஜூன், 2016

அது ஒரு கனாக்காலம் ....

மேலப்பாளையத்தில் நீச்சல் தெரியுமா என்று கேட்கனுன்னா...தப்பட்டா அடிக்கதெரியுமான்னு தான் கேப்பாக..

நாங்கள் சின்ன வயசுப் பய்யங்களா இருந்த போது .....விடுமுறைகள் வந்து விட்டால் எங்க வீட்டுக்குப் பொறத்தாலே ஓடுகிற  பாளையம் கால்வாயில் நீந்தி அழிச்சாட்டியம் பண்ணுவதுதான் எங்க செட்டுகளின்  பொழுது போக்கே.....எங்க ஊரைச்சுத்தி ஓடி....பயிர் பச்சைகளை விளைய வைக்கிற.......அந்தக் கால்வாய்க்கு ஊரு  வச்ச பேருதான் “நம்மாறு”....தாமிரபரணிக்கு பெரியாறுன்னு தான் பேரு.
சேக்காளிகள் ...சங்காத்திகள் ஒன்னு சேர்ந்து கோடைக் காலங்களில் பெரியாத்துலே  தாமிரபரணி ஆத்திலே போய் மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டே  குளிப்பது.....அடடா.....சொல்ல முடியாத சொகத்தைக் கொடுக்கும்....அதுக்கு நிகரா என்னத்த சொல்ல முடியும்?....
டவுசர் போட்டகாலங்களில் அத...... கழ்ட்டி வச்சுட்டு மணிக்கணக்கில் கண்கள் சிவக்க தலைமுடிஎல்லாம் பஞ்சு போலாகி காற்றில் பறக்கும் அளவுக்கு குளிப்போம் குளிப்போம் .....அம்புட்டு நேரம் குளிப்போம்... இதே கோலத்தில் வீட்டுக்கு போனால் அங்கே எங்க வாப்பும்மா தலைமையில் விசாரணை நடக்கும்....
வீட்டுக்கு போக முன்னாலேயே கோணத்து கடையில் மூனு பைசாவுக்கு கரண்டி நிறைய ஸ்டார் ஆயில் வாங்கி தலையில்..... தேச்சிட்டு...அது . ஒழுகி நெத்தி,மூஞ்சி பூராவும் படருகிற அளவில் தான் வீடு போய் சேர்வோம்...
எதுக்காம்?.....குளிச்சது தெரியக்கூடாது என்பதுக்காம்...
ஏதாவது சேட்டை கீட்டை பண்ணி, வழக்கமா எங்களுக்கு விழுகிற அடிகளை தடுத்து நிறுத்தி எங்களைப்  பாதுகாக்கும் வேலைகளை வாப்பும்மா ரொம்ப கவனமா செய்வா.....
ஆனா வாய்க்காலில் குளிச்சு முடிச்சு....தும்மல் விழ வீட்டுக்கு போனால்......அஞ்சாறு அடிகள் அவ கிட்டே இருந்துதான் விழும்..வீட்டுக்குள் நுழைந்தவுடன் கேப்பாள்....
“எலே.....எங்கல போன”?....
“நா....இங்கன தானம்மா நின்னேன்...”
“பொய் சொல்லப்படாது.....மறைக்காம சொல்லு”..... என்று அவ கேக்கும் போது .....வேற எதையும் பேச  முடியாமல் ‘ கல்லூளிமங்கான் ‘ முழி தானாவே வந்துடும்...
போவியா?.....போவியா?....வாயில் இருந்து வார்த்தைகள் வரும்போதே....முதிகில் ரண்டு விழும்......வீராப்பா அடி விழுந்த வலியை..... வெளியே காட்டாமல் .....கண்ணைக் கசக்கிட்டே நிப்பேன்.....கொஞ்சமாவது கண்ணில தண்ணி வந்தாத்தானே....அவ முறைக்கிரதை விடுவா...”.மூஞ்சியப் பாரேன்....மூஞ்சிய...”....அதோடு...... அவளோட.... தாக்குதல் முடிஞ்சிடும்.
“இனி அப்படிப் போகப்டாது...” என்பாள்.
“ உன்ன எங்கனைஎல்லாம் போய்த்  தேட?...நீ ஊடு வந்து சேருற வரைக்கு பயமா இருக்கு.....நெல கொள்ள மாட்டேங்கு........இனிமே இப்பிடி போனே?....அவ்வளோதான் பாத்துக்கோ....பெர்னா சார்கிட்டே போய் சொல்லிடுவேன்.......நீ படிச்சுக் குடுத்த ஆ.....க்கம் இது தானா?....ன்னு   போய் கேட்டுட்டு வந்துடுவேன் ”..... என்று சொல்லி கடும் மிரட்டல் விடுவாள்..
பெர்னா சார் பகவதியா பிள்ளை எங்க பக்கம் கடுமையான வாத்தியார்.....நாங்கல்லாம் அவர்கிட்டே எத்தனை வருஷம் படிச்சோம்னு சொல்லிக்க முடியாது....நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பொளுகிற வேளையில் பள்ளிக் கூடம் விட்டு, வந்து அவர் வீட்டுக்கு டீயுசன் படிக்க அனுப்பிருவாங்க..
அதென்ன பெர்னா சார்?....ஆங்கில மேதை ,அறிஞன் பெர்னாட்ஷா பேர் அவருக்கு யாரும் வச்சாங்களோ?....இல்ல அவராவே அத வச்சிகிட்டரோ?....ன்னு யாருக்கும் விளங்கியதில்லை.அந்த பெர்னாட்ஷா பேருதான் பெர்னா சார்வாள்ன்னு பரவிடுச்சு....


அந்த மாபெரும் மேதை அவர்கிட்ட படிக்கிற பையங்க கையெழுத்தை ரொம்பநல்லாஆக்கிப்புடுவார்.... சும்மா இருக்கிற நேரம்......தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,திருக்குறள்.....பாரதியார் பாடல்கள், விநாயகர் பாடல்கள் பாடுவார்....திருவாசகம் பாடும்போது பல நேரங்களில் குரல் கம்மிப் போய் அழுதுவிடுவார்....சார்வாள் ஒரு கண் பார்வை கொண்டவர்..... ஆகையால்...அந்த நேரம் .......அவர் அழும்போது நாங்களும் சேர்ந்து  அழுதுடுவோம்...மழை வந்தால் பள்ளிக் கூடத்துக்கு லீவு தான்....காரணம் அவர் வீட்டில் வகுப்புகள் நடந்த இடம் ஒலைக்கூரைகளால் ஆனது....எப்படியும் மழைக் காலத்திலேயே மாசம் பாதி நாள்..... வகுப்பு நடந்தாலே ஆச்சரியம் தான்..
இதெல்லாம் எதுக்கு சொல்ல வந்தேன்னா?........வீட்டில பெத்தும்மா.....உம்மா, வாப்பா கண்ணைத்தப்பி நம்மாத்திலே போய் நீச்சலடிச்சு.....குளிச்சு வந்த கதையை சொல்லும் போது வருவது ....
ஒரு ஆறு...... ஏழு  படிக்கிற காலத்தில்....உள்நீச்சல்..... எதிர் நீச்சல்..... மழைக்காலத்தில் வேகமாக பெருகி வெள்ளம் ஓடும் ஆத்தில்  ....நீச்சல் போடும் தைரியம் கொண்டு இருப்போம்...
ஆனா....எல்லா மக்களும் அவ...... அவ வீட்ல பாத்  ரூம் கட்டி.....  குளிக்க ஆரம்பிச்ச பொறவு ....ரண்டு நடந்துது.....ஒன்னு ஒவ்வொரு வீட்டில இருந்தும் ஏராளமா....... கழிவு நீர் பெருகி ஓடி....  மலச்சாக்கடை  தண்ணியும்....வாறுகாலில் சேர்ந்து  மேலப்பாளையம் காட்டுத்தெருல ஆரம்பிச்சு....ஊர் முழுக்க 80 க்கும் மேற்பட்ட கழிவு நீரோடைகள் ....கால்வாய்  தண்ணியில்   கலந்து ....மொத்தமா பெருகி ........ பாளையங்கால்வாயை ...நம்மாத்தை கூவமாக்கிடுச்சு.....இந்தக் கொடுமை 1987 ஆம் வருஷத்தில் தான் துவக்கம் கொண்டது....
இப்போ யாரும் வாய்க்கா பக்கம் போறதும்  இல்லை...சட்டிப்பானைகள் கழுவ.....துணிமணிகள் துவைக்கக் கூட அங்கே செல்வதில்லை...செல இடங்களில் ...தூண்டி போட்டு ...அல்லது வல வீசி மீன் பிடிக்கிற ஆட்கள் கூட ....தூரமாய் போகிற அளவுக்கு நம்மாறு ஆகிவிட்டது... ...இந்த கொடுமைக்கு யார் காரணம்?.....
மையித்துகள் குளிப்பாட்ட....சோறாக்க.....பாளையங்கால்வாயில் ..... இளைஞர்கள்....கொடத்த வச்சு தண்ணி மெத்திக்கிட்டு  போவாங்க..... கல்யாணத்துக்கு மறுநாள் புதுப்பெண்கள்.......குளிச்சு முடிச்சு ....அந்த ஆத்து நீரை செப்புக்குடத்தில்  பிடித்து..... தூக்கி இடுப்பில் கொண்டு போவார்கள்.........
சாக்கடை கலந்த அநியாயம் ..... இப்போது..... அந்தத்  தண்ணிய சீண்டுவார் யாருமில்லை...அந்த தண்ணீர் என்ன பாவம் செய்தது?
இன்னொன்னு 1987க்கு பொறகு பொறந்த மேலப்பாளையத்து....பையங்களுக்கு  நீச்சல் என்பதே தெரியாமப் போச்சு....அதனாலே ஒரு முப்பது வருஷத்திலே....80 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மூச்சு திணறி தாமிரபரணியிலும் ....பாளையங்கால்வாயிலும்  மூழ்கி இறந்து போய் இருக்கிறார்கள்....
வீட்டுக்கு வீடு நீச்சல் தெரிஞ்சவர்கள் இருந்த ஊரா இன்னைக்கு இப்படி  ஆயிடுச்சு?.....இத மாத்த வழியே இல்லையா?....
பாதாள சாக்கடைகள் அமைக்கப்பெற்ற தெரு வாசிகளும் ....அவர்கள் வீட்டு சாக்கடை தண்ணியை வீட்டுக்கு வெளியே தான் விடுறாக...பல வீட்டு கழி ப்பறைகளுக்கு “ செப்டிக் டாங்கே ”.....வச்சு கட்டுறதில்லை...அவன் வீட்டு கழிவுகள் ....அடுத்தவன் வீட்டுக்கு பக்கத்தில் போய் ....நாத்தக் காடாக்குவதை யாரும் கண்டிக்க முடியவில்லை...இதையெல்லாம் ஒட்டு மொத்தமா சரி செய்ய எத்தனை வருஷங்கள் ஆகப் போகுதோ?..தெரியல்லை...அது முடிஞ்சா பொறவு நம்மாத்திலே போய் மக்கள் குளிக்க ஆரம்பிச்சு....எப்பிடி தப்பட்டா அடிக்க பழகுவாங்களோ?.....
ஆனா....ஒன்னு செய்யலாம்.....ஊரில் நீச்சல் குளங்கள் ஏற்படுத்தலாம்....அதிலே பிள்ளைகள் நீஞ்ச..படிக்கலாம்..படிக்கணும்...மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேர்மன் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்களையும் பொருளாளர் டி.எஸ்.எம்.ஒ.மஜீத் அவர்களையும் குற்றாலம் செய்யது உறைவிடப்பள்ளிக்கு அழைத்துப் போய்,அங்கு உள்ள நீச்சல் குளத்தை காட்டி வந்தேன்.....அது போல மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள காலியிடத்தில் நீச்சல் குளம் ஒன்று அமைக்க வேண்டுமென கட்டாயப் படுத்தி  இருக்கிறேன்.....நிதி தான் வேண்டும்....தேவைப்படுகிறது.
நீந்தத்தெரியாததால் நீர்ச்சுழலில் சிக்கி வாழ வேண்டிய இளங்குருத்துக்கள் பலர்  மூச்சடங்கி மாண்டு போய்விட்டார்கள்........ வசதி வாய்ப்புகள் கொண்ட  இளைஞர்கள் நீச்சல் குளங்கள் அமைக்க உதவி செய்யவேண்டும்.... .......அவர்கள் உதவுவது...வருங்காலத்து பிள்ளைகளின்  உயிரைக்  காப்பாற்றச் செய்கிற உதவி என்பதை அறிவார்கள் என ....நம்புகிறேன்..உருவாகும் பயிற்சிக்களத்தில் வீட்டுக்கு ஒருவர் நீச்சல் பயிற்சினை பெறுவார்கள்....வருங்கால இளைய தலை முறைகளை பாதுகாப்பார்கள்..இறைவன் துணை நிற்பான்.

மேலப்பாளையத்தில் இளைஞர்கள்...இளைய தலைமுறையினர் நீச்சல் பயிற்சி பெற,  நீச்சல் குளம் அமையப்பெற வேண்டும்...என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திச்சொல்லுகிறேன்... 




வெள்ளி, 18 மார்ச், 2016

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருவான நாட்கள் (பாகம் 2)


முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருவான நாட்கள் பற்றிய தொகுப்புக்களை முகநூலில்,வலைப்பதிவில்  நான் வெளியிடத் துவங்கியது முதலே , உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும்  உள்ள தம்பிமார்கள்,  என்னிலும் மூத்தவர்கள் என்னைத்தொடர்பு கொண்டு, நிறைய செய்திகளை அறியும் தமது ஆவலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சிலர் தமது ஆதங்கங்கள்,ஆர்வங்கள்  பலவற்றையும் சொல்லிக் கொண்டார்கள்...

எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டேன்....

ஒரு பள்ளிக்கூடத்தின் துவக்கத்தை அறிந்திட இத்தனை வேட்கையா....?..என்று எனக்கு வியப்பு மேலிட்டது...

இது ஒருபுறம் இருக்க.....” இவனுக்கு எத்தனை வயசு ஆகுதாம்?....கூட இருந்து பார்த்த மாதிரி பீலா விட்ருக்கான்........வரலாற்றை புரட்டி எழுதுகிறான்.”.....என்றெல்லாம் எனக்கு வேண்டியவர்களே குற்றம் சாட்டியுள்ளார்கள்.....

எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

என் தந்தையிடம் வளர்ந்ததைப் போன்றே என்னுடைய மாமா மேலப்பாளையம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ,முஸ்லிம் மேல்நிலைப்பள்ளித் தாளாளராக முப்பது ஆண்டு காலங்கள் பணி செய்த வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துல் ரகுமான் சாகிப் அவர்களிடம் வளர்ந்தேன்..

 மாமா... பல நேரங்களில் என்னை கட்டுரைகள் கவிதைகள்,மேடைப் பேச்சுக்கள் எழுதச்சொல்லுவார்கள்...பள்ளிக் கூடத்துப் பேச்சுக்கள் வரும் போதெல்லாம் பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் சொல்லுவார்கள்..
அவைகள் என்னிடம் குறிப்புகளாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்...
என் வாப்பா ,மற்றும் பெரியவாப்பா எல்.கே.எஸ்.எம்.காதர் மீரான் அவர்கள் பாதுகாத்து வைத்து எங்கள் குடும்பத்தில் இருக்கிற பல்வேறு தஸ்தாவேஜுக்களும் பள்ளியின் வரலாற்றை எனக்கு சொல்லுகின்றன.

என்னைப்பொறுத்தமட்டில்....மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்பது தனிப்பட்ட யாருக்கும்  சொந்தமானதல்ல....கமிட்டிக்கு உரியது..யாராலும் தன்னந்தனியே உருவாக்கப்பட்டதல்ல....பலர் அதன் பின் புலமாவார்கள். அதற்குப் பெருமளவில்  உழைத்தது வக்கீல் சாகிப் என்கிற  கொ.அ.மு.ஹமீது சாகிப் ஆவார்...

மேலப்பாளையம் ஊரை வாழ வைத்த , நூல் பாவுகள் ,கைத் தறிகள் கணக்கிட்டு மகமைகள் மூலமாக சல்லிக்காசுகள்....அணாக்கள்....பைசாக்கள் ....ரூபாய் நோட்டுக்கள் .... என்று ஊர் நெசவாளிகள்,வியாபாரிகள்,முதலாளிகளிடமிருந்து  எவை கிடைத்தாலும் ....நன்கொடை வாயிலாக வசூல் செய்தார்.....அதனால் முஸ்லிம் பள்ளி உயிர் பெற்று எழுந்தது...ஒவ்வொரு சல்லிக் காசிற்கும் கணக்குகள் விபரங்கள் வைத்திருந்தார்...


ஒரு காலத்தில் வக்கீல் ஹமீது சாகிப் மேலப்பாளையத்தில் ஏறி இறங்காத படிக்கட்டுகளே ஊரில் இல்லை என்பார்கள்.
.....மிகப்பெரிய வியாபாரக்குடும்பத்தில் பிறந்து, கற்றறிவாளராக உயர்ந்த ஹமீது சாகிப்....தமது இளமைக் காலம் முழுவதையும், அலமாரிகள் முழுக்க கேஸ்கட்டுகளாக இருந்த வழக்கறிஞர் பணியை கைகளில் கொண்டு கோர்ட்டுகளுக்குச் செல்லாமல்.....குடும்பத்திற்கே செல்வாக்கும் பெருமையும் தேடித் தந்த வியாபரத்திற்கும் செல்லாமல் ...விடிந்தால் பொழுதால்...சதா சர்வ காலமும்  பள்ளிக்கூடம் என்றே வாழ்ந்தார்.

அதனால் அவர் இழந்தது ...கோடிக்கணக்கான சொத்துக்கள்.....அவரது வாரிசுகளின் வளமான வாழ்வு என்று துணிந்தே சொல்லலாம்.....

பள்ளி உருவாக, அவரது உழைப்பிற்கு பக்க பலமாக இருந்தவர்கள் மேலப்பாளையம் வள்ளல்கள்  ‘கான் சாகிப் .’...டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன் தரகனார்,கொ.அ.மு.செய்யது முகம்மது ,முகம்மது அலி, ஜமால் செய்யது முகம்மது ஆலிம்,  பருத்தி சாகுல் ஹமீது-ஹனீபா சகோதரர்கள், சமாயினா யூசுப் லெப்பை....மூளி.கலந்தர்லெப்பை...மோத்தைமதார்...ஆ.ம.மீராமுகைதீன்,வ.சே.ஷேக்மன்சூர்,அ.ம.அப்துல்லா,புலவர் செய்யது அகமது,லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப், உள்ளிட்ட முதல் தலைமுறை பெருமக்கள்  ஆவார்கள்...  

இன்னொரு உண்மையையும் சொல்ல வேண்டும்....பள்ளிக்கு உதவிகள் பல செய்த வள்ளல்கள் அனைவரும் இந்திய  நாட்டின்  விடுதலைக்கு முன்னர்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தில் ஒன்றாக சமூகப்பணியாற்றிவர்கள் என்பது தான்...

அவை பற்றிச் சொல்லும் நேரத்தில் ,அரசியல் வெறுப்புகள் வந்துவிடக்கூடாதே என்றும் எண்ண வேண்டியதுள்ளது...

பள்ளிக்கூடம்  முஸ்லிம் கல்விக்குழுவிற்கு முழுக்க உரியது....அக்குழுவில் ஊரைச்சார்ந்த யாரும் உறுப்பினராகலாம் .....யாருக்கும் தடையில்லை .அந்த நாள் எப்போதும் உண்டு.என்கிற விதி முறைகளையும் ஆக்கிவைத்தார்கள்.

இல்லாத.....பொல்லாத அவதூறுகளை தம் வலிமையால் பரப்புவது கண்டு பொறுக்காமல் தான் எழுதத் துவங்கினேன்.....இல்லாவிட்டால் பள்ளிவரலாறு ....எனது வேலைப்பளுவின் காரணமாய் எப்போது வரும் என்று என்னால் குறிப்பிட முடியாமல் போயிருக்கும்.
சிலரைப்பற்றி இன்னும் அதிகமாக அடையாளம் காட்டவேண்டியதுள்ளது....
மறைந்துள்ள  பல்வேறு தகவல்களை வெளியிட்டு,பல பேருள்ளங்களை  உண்மையான தியாகத்தினை வெளிக்கொண்டு வர வேண்டியதுள்ளது...

பள்ளியின் வரலாற்றைத் தொடர்வோம்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி .(பாகம் 1)

1.1.1941 புதன் கிழமை...
அன்று .....மதிய வேளை லுகர்  தொழுகைக்கு இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது......
மேலப்பாளையம் ஊரிலிருந்து தெற்கே .....திருநெல்வேலி-திருவாங்கூர் (திருவனந்தபுரம்) சாலையின் மேல்புறம் .....ஜோதிபுரம்.என்கிற சிறிய குடியிருப்பு.... இப்போதைய டக்கரம்மாள்புரத்திற்கு, தென்புறம்...ரோட்டை ஒட்டி .உள்ள புலவர் செய்யது அகமது தரகனார்.பங்களா.....

கண்ணுக்கெட்டிய தூரம் வரை....நான்கு திசைகளிலும்  பனை மற்றும் புளிய மரங்கள்.....பக்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் சிறிய அளவிலான குளங்கள்.... மட்டுமே..

பெயர் தெரியாத மரங்கள் .....அங்கே  தாராளமாக குட்டிகளோடு நரிகள் நடமாடுகின்ற புதர்கள்.....பொழுது சாய்ந்து விட்டால் அவை எழுப்பும் ஊளைகள்...கேட்பவர்களுக்கு ஒரு மாதிரி பீதியினைக் கொடுக்கும்....
அதற்கு மத்தியில் முதலாளி குடியிருப்பு...

அங்கே மூக்கை துளைத்து வெளியே வருகிற..... பால் மாடுகளின் கொட்டகை வாசம்....

அதற்குப்பக்கத்தில் ......நெடு நெடுவென உயர்ந்த ‘ஒட்டாக் காளை மாடுகள்’...அவைகளை வண்டியில் பூட்டினால் ...அதன் நோக்கால் மாடுகளின் கழுத்துகளில் தாங்கி இருக்க.....வில் வண்டியோ  பின் பக்க வாக்கில் சாய்ந்து இருக்கும்...அந்த வகைக் காளைகள் ஜோடிகளாகக் கட்டப்பட்டு இருந்தன.

இருநூற்றுக்கும் அதிகமான வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ....மேய்ந்து வந்து  அந்த வீட்டை ஒட்டி ,அங்கே இருந்த உயரமான பெரிய வேப்ப மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த பகல் பொழுது....

சர்ர்.....என்று பெரிய .....பெரிய கார்களில் மேலப்பாளையம் முதலாளிகள் ஒவ்வொருவராக அந்த புலவர் வீட்டு பங்களாவில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தார்கள்...


சில முதலாளிகள் குதிரை வண்டிகளில் வந்து இறங்கினார்கள்....

அதே சாலையில் கொஞ்சம் வடக்கே இருந்த தோட்டத்திலிருந்து ஜமால் செய்யது முகம்மது ஆலிம் அவர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் வந்து முதலாவதாக வந்து இறங்க.....மற்றவர்களும் வந்து இறங்கத்தொடங்கி இருந்தார்கள்...

அவர்கள் அனைவரும் ..... அந்த பங்களாவின் முகப்பில் ஒரே வட்டமாக தரையில் ஜமுக்காளத்தில் அமர்ந்து...பல கதைகளை  சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ......

வயதால் கொஞ்சம் பெரியவர்கள்.... சுவற்றில் சாய்ந்து கொள்ள  வசதியாய்....பலகைகளும் ,தலையணைகளும் அங்கே நிறையவே இருந்தன...

யாருக்கும் தெரியாமல் சுருட்டு பிடிக்க ....அல்லது  புகைக்க..... கொஞ்சம் தள்ளி.... சில முதலாளிகள் நின்று கொண்டார்கள்..அவர்கள் இருக்கும் இடத்தை ....மூக்கைத்துளைத்து வந்த சுருட்டு வாடையே காட்டித்தந்தது....அவர்கள் ஆடைகளில் பூசியிருந்த அத்தர்,  ஜவ்வாது வாசனையை விட ....கொஞ்ச நேரத்திற்கு முன்னர் புகைத்த ....சுருட்டு வாடையே முன்னே வந்தது.....அவர்கள் கொண்டு வந்த..... திருக்கு செம்பிலிருந்து தண்ணீரை மொண்டு வாய் கொப்பளித்துக் கொண்டார்கள்...


தூரத்தில் ஒரு ஆஸ்டின் காரில் ‘கான்பகதூர்.’...டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் வந்து கொண்டு இருப்பது பங்களாவில் முன்னமே காத்து இருந்தவர்களுக்குத் தெரிந்தது....

அதே காரைத்  தொடர்ந்து.....ஒரு பெரிய கெடிலாக் காரில்.....நேரு கோட் அணிந்து ....பாக்கட் வாட்ச் அந்த சட்டைப்பையில் இருப்பதைக் காட்டும் ....வண்ணம் தங்க சங்கிலி இணைக்கப்பட்ட கோலத்தில் துருக்கித்தொப்பி அழகில்   பருத்தி சாகுல் ஹமீது-ஹனீபா சகோதரர்கள் வந்து இறங்கினார்கள்..

அந்தக் காரை ஓட்டுவதற்கு என்றே....இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட அந்த சிவந்த நிறமுடைய ....மௌன்ட் பேட்டன் பிரபு போலத் தோற்றம் கொண்ட ......காரோட்டி .....முதலில் காரை நிறுத்தி விட்டு, இறங்கி ....சடாரென பின் பக்க வாசல் அருகே வந்து .....குனிந்து இடப் பக்கக் கதவைத் திறந்து விட்டான்...


அவர்கள் அந்த பங்களாவில் உள்ளே இருந்த  அதே நேரத்தில்....காடுவெட்டி கிராமத்திலிருந்து திருவாங்கூர் சாலையில் பயணித்து, .....எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன் தரகனாரும் வந்து அந்த பங்களாவில் வந்து இறங்கிவிட்டார்....

தாம் வந்த கார் டிரைவரை..... காரோடு அனுப்பி....சமாயினா யூசுப் லெப்பை....மூளி.கலந்தர் லெப்பை...மோத்தை மதார்...வ.சே.ஷேக் மன்சூர் முதலான தோழர்களை.... ஊரில் போய் அழைத்து வரச்செய்து விட்டு உள்ளே நுழைந்தார்...

கலகலப்பான ..அந்த ...வருடத்தின் முதல் நாள் .....அந்த மதிய வேளை.... நண்பகலைத் தொட்டது........லுகர் தொழுகை நடந்தது...ஜமால் செய்யது முகம்மது ஆலிம்...தொழுகையை முடித்தார்கள்.....

ஒவ்வொரு முக்கிய நாட்களின் போதும் நண்பர்கள் முறை வைத்து ஒவ்வொருக்கொருவர் விருந்து கொடுத்துக் கொள்வார்கள்....அன்றைய விருந்து புலவர் செய்யது அகமது ஏற்பாடு செய்து இருந்தார்....

வித விதமான அசைவ வகைகள்.....அரிசி வகை பிரியாணிகள் ....வருத்தவை....பொறித்தவை....தேங்காய்  மற்றும் எண்ணெய் சேர்த்தவை....சேர்க்காதவை... ஆக்கியவை என்று பல வகைகளில் பரப்பி வைத்து ....விருந்தாளிகளை உண்ண அழைக்கிற நேரம்...

"முதலாளி....முதலாளி."......என்று ஒரு குரல்....

“ யாருப்பா....பழனிய்யாபிள்ளையா?....எல்.கே.எஸ்.வீட்டு கணக்குப் பிள்ளை .... என்னய்யா அவசரம்.....இப்போ சோறு வைக்கிற நேரத்தில வந்து இருக்கே?.”....என்று வேகவேகமாக வந்து சைக்கிளில் இறங்கியவரை நோக்கி .....சமாயினா யூசுப லெப்பை விசாரித்தார்;.

“ஆமாம்....முதலாளியை அவசரமா பார்க்கணும்..”....இளம் வயதினரான பழனியா பிள்ளை முகத்தில் பதட்டம் தெரிந்தது....

மேலப்பாளையம் சமாயினா காதர் மீத்தீன் தெரு சமாயினா  யூசுப் லெப்பை வயதில் கொஞ்சம் மூத்தவர்...பிரபல வணிகரும் கூட.....யாரிடத்தும் முகத்திற்கு நேரே எதையும் சொல்லிவிடும் தகுதி பெற்று இருந்தார்...ஊர் ஜமாஅத் பஞ்சாயத்துக்களில் .பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்புக்கள் சொன்னவர்.

அத்தோடு.... தமிழில் செய்யுட் பாக்கள் எழுதும் அளவிற்கு பாண்டித்தியம் கொண்டு இருந்தார்..அரங்கேற்றம் செய்யாமல் நீண்ட நாட்களாக இருந்த ரகுமான் முனாஜாத்து அவர் எழுதியது தான்..

பழனியா பிள்ளையை திண்ணையில் உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று....“எல்.கே.எஸ்.முகம்மது முதலாளி.....உங்களைப் பார்க்க உங்க கணாபிள்ளை....வந்திருக்காம்.....என்னவோ பதட்டமா இருக்காம்...என்னான்னு பாருங்கோ”....என்று எல்.கே.எஸ்.தரகனாரை அழைத்தார்...

கணக்குப் பிள்ளையைப் பார்த்த மாத்திரத்திலேயே ....எதோ ஒரு பெரிய பிரச்சினையா தான் இங்க வந்து இருக்காம் .....என்று நினைத்துக் கொண்டே எல்.கே.எஸ்.தரகனார்,..... பழனியாபிள்ளை பக்கம் வந்தார்...

“என்னய்யா...விஷியம்?..”

“முதலாளி...கல்கத்தா வக்கீல் எக்ஸ்பிரஸ் தந்தி கொடுத்திருக்கார்...”என்றார் பதட்டத்தோடு.

சாதாரணமான காலங்களிலேயே தந்தி என்று வந்தாலே....அது துக்கச்செய்தியைக் கொண்டதாவே இருக்கும் என்பதில் ......முதலாளிமார்களும் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள்.... 

தந்தியைக் கைகளில் வாங்கிப் பார்த்தபோது .....பத்துப் பதினைந்து வரிகளோடு நீண்ட விபரங்களைச்சொல்லுவது போல இருந்தது....ஓரளவுக்கு படித்த பழனியாபிள்ளைக்கும்...”ஒன்னும் புரியவில்லை...”

பர்மாவில் ஒரு இங்க்லீஷ் கம்பெனிக்கும் எல்.கே,.எஸ்.தரகனார்கள் நடத்தி வந்த வியாபார நிறுவனத்திற்கும்,  வியாபாரத்தின் டிரேடு மார்க் சம்பந்தமாக கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருந்தது...

எல்.கே.எஸ்.கம்பெனி டிரேடு மார்க் ...அதாவது விமான சின்னம்...தங்கள் கம்பெனிக்கு உரியது என்றும்... அதை அவர்கள் பயன் படுத்தியதால் தங்களுக்கு , லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தி விட்டார்கள் ..ஆகவே சுமார் இவர்கள் மூன்று ஆண்டுகள் வருமான கணக்கு காட்டிய தொகைகளை நஷ்ட ஈடாகத்தரவேண்டும்.... என்பது....அந்த இங்கிலாந்து கம்பெனி தொடர்ந்த வழக்காகும்... 

கிறிஸ்துமஸ் விடுமுறை நாளுக்கு முன்னர் வெளியான ....அந்த வழக்கின் கல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தான் அந்த நாளில் சுருக்கமாக கல்கத்தா வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து எக்ஸ்பிரஸ் தந்தி மூலம்,ஊரில்  இருந்த முதலாளிக்கு  தெரிவித்து இருந்தார்கள்....

அங்கே கூடி இருந்த.....மேலப்பாளையத்தின் செல்வச்சீமான்கள் யாருக்கும் தந்தியில் கூறியிருந்த .... தீர்ப்பு விபரத்தை  வாசித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை...எல்.கே.எஸ்.மீரான் தரகனாருக்கு ஏற்பட்ட பதட்டம் ....எல்லோருக்கும் வந்துவிட்டது...."வழக்கில் ஆங்கிலக் கம்பெனி வெற்றி பெற்று விட்டால்...சுமார் மூன்று லட்சங்கள் வரை நஷ்ட்ட ஈடு தரவேண்டுமே....கொடுக்கவேண்டுமே...என்ன செய்வது?."...என்று ஒரு இடத்தில் அமர்ந்து படபடத்துக் கொண்டு இருந்தார்...

"நீங்கள் எல்லோரும் சென்று.....சாப்பிடுங்கள்..ஆக்கி வைத்த சோறு வீணா காத்திருக்கிறது".... என்று எல்.கே.எஸ்.தரகனார் சொல்லிப் பார்த்தார்...உடன் இருந்த நண்பர்கள் யாரும் விலகிச்செல்லவில்லை...சுற்றிலும் சோகமயமாய் இருந்தது....

“நம்ம....மருமகப் பிள்ளைகளை உடனே கூப்பிட்டு வாங்களேன்”.....என்றார் எல்.கே.எஸ்.தரகனார்.

“ஆமா....அவங்க தான் இந்த தந்தியைப் பார்த்து ...விளக்கம் சொல்ல முடியும்”எல்லோரும் ஏகோபித்து சொன்னார்கள்..."கூப்பிடுங்க அவங்களை"
.
யார் அந்த மருமகப்பிள்ளைகள்?

பர்மாவில் படித்து..... ஆங்கிலப் புலமை மிகக் கொண்டு வழக்கறிஞரான.... மேலப்பாளையத்தின் முதல் பட்டதாரி கே.எம்.எஸ்.ஹமீது சாகிப்.....


இரண்டாவது மருமகப்பிள்ளை ...எல்.கே.எம். அப்துர் ரகுமான்.ஆவார்.
திருநெல்வேலி.ம.தி.தா.இந்துக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் படித்து, அதே கல்லூரியில் தமிழ்ப் புலமை மிகக்கொண்டு, அந்த வருடத்தில் பி.ஏ.பட்டம் படித்து முடித்து இருந்தார்... 

பின்னர் அதே ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து பின்னர் வழக்கறிஞரான முதல் சுதேசி பட்டதாரி....
எல்.கே.எஸ்.தரகனாருக்கு வக்கீல் ஹமீது சாகிப் சகோதரி மகன் முறையாவார்....வக்கீல் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப் அவர்களோ மகளைக் கட்டிய மருமகன் ஆவார். ஆகவே தான் அவர்கள் இருவரையும் நண்பர்கள் உள்ளிட்ட எல்லோரும் "மருமகப் பிள்ளைகள்" என்றே அழைத்தார்கள்.    தம் மருமக்களாக எண்ணி மரியாதை தந்தார்கள்....

"மருமக்கள் எங்கே?" என்றே எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களில் மூத்தவர் பாபநாசம் மில்லுக்கும்,இளையவர் தூத்துக்குடி மில்லுக்கும் புத்தாண்டு விருந்திற்குப் போயுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்தது..."உடனே அவர்களை அழைத்து வாருங்கள்" என்றார்கள்...
கிழக்கு .....மேற்கு திசைகளில் அவர்களைக் கையோடு  அழைத்து வர கார்கள் புறப்பட்டன.

அன்றைய காலத்தில்  மேலப்பாளையம் நகரில் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு மிகப் பெருமளவில் பருத்தி நூல் வாங்கும் .....தரகனார்களின் குடும்பத்தில் இருந்து.... பிரதிநிதிகளை நூல் உற்பத்தி ஆலைகளுக்கு  அழைத்து ...புத்தாண்டு அன்று பரிசுகள் தந்து ....விருந்தளித்து பாராட்டுவது என்பது ஆங்கிலக் கம்பெனி ஆலையாக இருந்த .....”ஹார்வி மில்”...(இன்றைய மதுரா கோட்ஸ்) நிர்வாகம் கொள்கையாகக் கொண்டு இருந்தது...

மதியம் மூன்று  மணியாகிவிட்டது....நண்பர்கள் யாரும் உணவுண்ணவில்லை.....கவலைகள்  கொண்டு அமர்ந்து இருந்தார்கள்... எல்.கே.எஸ்.என்ன ஆவாரோ?...என்கிற கவலை அங்கே எல்லோருக்கும் இருந்தது...

தூரத்தில்  கார் ஹாரன் சப்தம் கேட்டது....அந்தக் காரில் சிவந்த முகமும் அழகும்,வனப்பும்,விரிந்த மார்பும்,உடற் பயிற்சியினால் கட்டுடலும் பெற்ற வழக்கறிஞர் ஹமீது சாகிப் வேகமாக வந்து இறங்கினார்..

ஏற்கனவே அழைக்கச்சென்றவர்கள் தந்தி வந்த விபரங்கள் யாவையும் அவர்களிடம் தெரிவித்து இருந்தார்கள்...
வந்த வேகத்தில்...சுற்றிலும் நண்பர்கள் புடைசூழ  சோகமாக அமர்ந்து இருந்த எல்.கே.எஸ்.மீர முகைதீன் தரகனார்...படபடப்போடு தந்தியை வக்கீல் ஹமீதுசாகிப் கைகளில் கொடுத்தார்....

வேகவேகமாக.......ஹமீது சாகிப் தந்தியை தனக்குள் படிக்கத்துவங்கினார்..
படித்து முடித்துவிட்டு அங்கே இருந்த நண்பர்கள் அனைவர் முகங்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்...

:”மாமா....இந்த தந்தியில் உள்ள தீர்ப்பு பற்றி...விளக்கம்  சொன்னால்...எனக்கு எவ்வளவு பீஸ் தருவீங்க?...”என்று கேட்டார்..

“நீங்க என்ன கேட்டாலும் தருவோம்” என்றார் எல்.கே.எஸ்.தரகனார்.
“சொல்லுங்க...சீக்கிரம் சொல்லுங்க...”என்றார்கள் சுற்றி இருந்த முதலாளிகள்...

“நீங்க ஜெயிச்சிட்டீங்க.....மாமா...டிரேடு மார்க் கேசில நீங்க ஜெயிச்சீட்டீங்க மாமா...”என்றார் வக்கீல் ஹமீது சாகிப்.
இந்த விளக்கத்தைக் கேட்ட மீரா முகைதீன் தரகானர் ...வக்கீல் சாகிப்பை கட்டிப் பிடித்துத் தழுவிக் கொண்டார்....

அந்த நேரம் இளைய மருமகன் எல்.கே.எம்.அப்துர் ரகுமானும் வந்து சேர்ந்துவிட்டார்...வக்கீல் ஹமீது சாகிப் நடந்த விபரங்கள் யாவையும் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்..

“தந்தியை வாசிக்கத் தெரியாமல் ......நமக்கு சாதகமா வந்த .......இந்த தீர்ப்பு தெரியாமலா....ஆக்கிவச்ச....சாப்பாட்டை தின்னாமல் இவ்வளவு நேரம் பசியோடு தவிச்சுக்கிட்டு இருந்தோம்? “

“கோடிக்கணக்கில் சொத்து இருக்கே....தந்தியை வாசித்து,ஆங்கிலத்தை  புரிந்து கொள்ளத் தெரியல்லியே.... “என்று முதலாளிகள் சொல்லிவிட்டு சாப்பிடத்துவங்கினார்கள்..

உண்டு முடித்து...மாலை நேர  அசர் தொழுகை நடந்து முடிந்தது..

வக்கீல் ஹமீது சாகிப் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப்பை தம் கைகளோடு பற்றிப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் போய் எதோ ஆலோசித்துவிட்டு....தீர்க்கமான முடிவு ஒன்றோடு .....அந்த பங்களாவின் பக்கம் வந்தார்.

 “எல்லோரும் இங்கே வாங்க”....என்று...முன்னதாக அவர்கள் இருந்த அந்த  முன் பக்கத்திற்கு அழைத்தார்..

எல்லோரும் மகிழ்ச்சி பெருக்கோடு வந்து அமர்ந்தார்கள்..

“எனக்கு பீஸ் தரனுமே....எவ்வளோ தரப்போகிறீர்கள்?” வழக்கறிஞர் ஹமீது சாகிப் கேட்டார்......எல்.கே.எம்.சிரித்துக் கொண்டார்.

“என்ன வேண்டுமானாலும் கேளுங்க... தரோம்...வீடுவாசல்கள்  வேண்டுமா.?..நஞ்சை புஞ்சைகள் வேண்டுமா? எது வேண்டும்?சொல்லுங்க.....” என்று கேட்டார்கள்..

“ஆமா.....எனக்கு நிலங்கள் வேண்டும் .அதுவும் டி.எஸ்.எம்.ஒ.உதுமான் சாகிப் மற்றும் எல்.கே.எஸ்.முகம்மது மாமா....இருவரும் சேர்ந்து நிலங்கள் தரவேண்டும்...”என்றார்.
‘மருமகப்பிள்ளை ...நிலத்த வாங்கி என்ன பண்ணப் போறீங்க?
“ஆமாம்...எனக்கு ஒரு பேராசை உள்ளது..”
“பேராசையா?”......
“ஆமாம்.”

“கோடி....கோடியா...வசதி வாய்ப்பில் இருக்கிற உங்களுக்கு உலகக் கல்வி... ஆங்கிலக் கல்வி தெரியல்லியே.....அந்த நிலைமை நம்ம சந்ததிக்கும் இருக்க வேண்டுமா?....”

“இல்லை இல்லை....நாங்க தவியாத் தவிச்சுப் போய்ட்டோம்....என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க....”

“அந்த நிலைமையை மாற்ற ....ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கணும்......அதுல இங்க்லீஷ்....தமிழ்...அரபி....உருது ...ஹிந்துஸ்தானி லாம் சொல்லிக் கொடுக்கணும்...”
“பள்ளிக் கூடத்து பேர் என்ன?”
“ The Muslim Higher Grade School”
அப்படீன்னா? முஸ்லிம் உயர்தர பாடசாலைன்னு அர்த்தம்.....
(தொடரும்)