செவ்வாய், 18 நவம்பர், 2014

நாகரீக போதையில் காதல் பித்துக்கள்.....


எங்க ஊர் பக்கமெல்லாம் நாங்க இளம் பிராயத்துல வளர்ந்த போது இருந்த நிலைமைக்கும், இப்போ உள்ள இளசுகள் வளர்ற காலத்து நிலைமைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது...

காதல், கீதல்ன்னு கனவு தான் காங்க முடியும். பெத்து வளர்த்த தாய் தகப்பனவிட்டு இன்னொருத்தி முந்தானைய பிடிச்சிக்கிட்டு போய்க்கிட அவ்ளோ லேசா, மனசுல துணிச்சல் வந்துடாது....அதிலும் பாட்டி, தாத்தாவ விட்டு ஒருநாள் கூடபிரியமுடியாது....கூடப்பிறந்ததுகளும்அப்படித்தான்..நகழாதுங்க...கொள்ளைப்பிரியம்னு அதத்தான் சொல்லுவாங்க...

“...மெட்ராஸ்ல ஆம்புளையும் பொம்பிளையும், சைக்கிள் மோட்டார்ல....ஒன்னு முதுகில ஒன்னு,..... அப்பி பிடிச்சிக்கிட்டு போறாங்கல....நம்மூர்ல இப்படிப்போனா?....முதுகுத் தொலிய உரிச்சிடுவாங்க” ..... இப்படித்தான் மெட்ராஸப் பத்தி எல்.எஸ். முதல்ல சொன்னான்.  அதுவும் பத்தாவது படிக்கும் போது; .அவன் எனக்கு சித்தப்பு முறை...ஆனாலும் அவனுக்கு எனக்கும் ஒரே வயசு..

அவன் தான் எங்க செட்ல முதன்முதலா,மெட்ராஸ் போயிட்டு வந்தவன்...என்னை  முதன் முதலா பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பார்க்கவும்  அவம்தான் கூட்டிப் போனவன்.

நான்.....ஆறாப்பு படிக்கும்போது மெட்ராஸ் பார்த்தது....அப்புறம் காலேஜ் முடிச்சுதான் அங்க எட்டிப் பார்க்க முடிஞ்சது...அப்புறம் மாசம் மூணு,நாலு  தடவையாவது   போய் வந்துக்கிட்டு இருக்கேன்..

“ கடக்கரை பக்கம் போய்டாதல.....அதுவும் பொழுகிற நேரம் போய்டாத..... மோசமானவனுங்க………. எதுக்குத்தான் இப்படி வெறிபிடிச்சு திரிகிறானுவளோ?.....” நான் காலேஜ் முடிச்ச பிறகு, மெட்ராஸ்  போகப் போறேன்னு தெரிஞ்சு, அதே எல்.எஸ்.அப்பவும் சொல்லி அனுப்பினான்...

”என்னல சொல்லுதே?”.....

“கருமம் புடிச்சவனுங்க....நம்ம கூடப் பிறந்ததுகளை, தப்பித்தவறி அந்தப் பக்கம் கூட்டிப் போய்டாத....கண் கொண்டு அங்கன நடக்கதப்பார்க்க முடியாது....மோசம்ல........”

அப்புறம் சொன்னான், “ஆம்பிளைகள் கூட தன்னந்தனியா அந்தப்பக்கம் போகமுடியாதுடா....”...

எனக்கு “புரிந்தும் புரியாத” நிலை ஆகிவிட்டது...

அன்னையில் இருந்து இன்னை வரையிலும், நண்பர்கள் யாரும் கூட வராமல் கடக்கரை பக்கம் போனது இல்லை....அப்படி எப்போவாவது போன நேரம்  அங்கும் இங்கும் பார்த்தால்....சர்தான்....என்னைக்கோ எல்.எஸ்.சொன்னானே...அது சரிதான்னு இன்னைக்கும் மனசில் வந்து போகிறது...

திருனவேலி பக்கம் பார்த்தறியாத, கூடா ஒழுக்கங்கள் அங்கேசர்வ சாதாரணமாக  அரங்கேறுகின்றன...

‘அத’ வரவிட்டதும், வளரவிட்டதும்  யார்?....

சினிமாக் காரங்களா?

கலாச்சாரத்தை ஒழுங்கா படிச்சிக் கொடுக்காத குடும்பத்தலைவர்களா?...

இல்லை; கல்வியைச் சரியாக்  கற்றுக் கொடுக்காத வாத்தியார்மாருங்களா?

அல்லது இப்போ புதுசா முழைச்சிருக்கிற இன்டர்நெட் வலைப்பின்னலா?....அதுல வார படங்களா?

மொத்தத்தில் இதில் எல்லோருக்குமே பங்கு உண்டு....

எங்க திருனவேலி பரவா இல்லை ....

தெரிஞ்சோ தெரியாமலோ இந்த அழகான ஊரைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் கற்பித்து படம் எடுத்து கேவலப்படுத்திட்டாங்க....”ஏதோ..தினசரி எல்லோரும் வீச்சருவா..வேல்கம்பு வீசிட்டுத்தான் மத்த சோலி”  என்று  எங்க ஊர்க்காரர்களை ஒரு தினுசா மத்தவங்க பார்க்கிறாங்க.

திருனவேலி ஊர் எவ்வாறு பழமை மாறாத ஊரோ, அது போலவே இந்த மண்ணும், மக்களும்...

மூன்று மத தத்துவங்களும் ஒன்னுக்கொன்னு கையைப்பிடிச்சுகிட்டு இன்னைக்கும் பயணப்படுது.

“ மாமா....மாப்பிளை..”.,உறவை எங்க பக்கம் தான் வந்து பார்க்கவேண்டும்.

“மாமா’” என்று முஸ்லிம்களைத்  தேவர்கள், கோனார்கள், ரெட்டியார்கள் நாயக்கர்கள்,நாயிடுகள் அழைப்பார்கள்.

“அப்பு.....சின்னய்யா”....இப்படித்தான் ஆசாரிமார்கள் அழைப்பார்கள். தேவேந்திரர்கள் “தாத்தா” என்று......

கொஞ்சம் கிழக்கே கடற்கரை பக்கம் போனால்....சாச்சா தான்.

டவுணில் பிள்ளைமார்கள்,நாடார்கள், முதலியார்கள், செட்டியார்கள் எல்லோருக்கும் “அண்ணாச்சி” தான்..

இப்படித்தான் எங்க பக்கம் மதநல்லிணக்கம் தாமிரபரணியாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது...

சினிமாக்காரர்கள் பார்த்தப் பார்வை தான், அரிவாள் கலாச்சாரத்தை திருனவேலியில் வளர்த்து விட்டது என்று தெளிவாச்சொல்லலாம்.

“நாங்க என்னத்த புதுசா சொல்லிப்புட்டோம்.....அங்கன நடக்கத தான சொன்னோம்” , எடுத்தோமுன்னு அறிக்கை விடுவான்ங்க....

அவங்க எத படமா எடுத்தாலும் கடைசிக் குறிக்கோள் காசு தான்..

பண்பாட்டைக் காக்கனும்ன்னு சொல்றவங்க, காசு பணத்தை எதிர் பார்த்து எந்த பிரச்சாரங்களையும் செய்வதில்லை...

சொல்லப் போனால்  பண்பாட்டுப் பிரச்சாரம், யார்  செய்கிறார்களோ, அவர்கள் மீது அது மரியாதையைத்தான் ஏற்படுத்தும்...

சரி; சொல்ல நினைச்சதுக்கு  வருவோம்..’

டில்லிக்கு நான் பலமுறை போய் வந்திருக்கேன்...

சொந்தஅலுவல்கள்,யாருக்காவது சிபாரிசு,உச்ச நீதிமன்ற வழக்குகள்,கல்விப்பணிகள் என்று காரணம் இல்லாமல் போனதில்லை.

ஒவ்வொரு முறையும் யாராவது நண்பர்கள்,வக்கீல்கள், பொறியாளர்கள் என்று வருவார்கள்...சில நேரங்களில் சுற்றுலா கூட போயுள்ளேன்...

முதல்நாள் ராத்திரி பத்து மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிடித்து,மறுநாள் பகல் முழுதும் பயணம் செய்து,  அன்னைக்கு இரவும் ரயிலில் தூங்கி, மூன்றாம் நாள் காலை 36 மணி நேரம் பயணம் செய்து இந்தியத் தலைநகர் டில்லி போய் அந்த அழுக்கான சுகாதாரமில்லாத ரயிலடியில்  போய் இறங்கி உள்ளேன்.

சில நேரங்களில் தூரந்தோ அல்லது ராஜதானி விரைவு ரயில்களில்.அதுவும் 29 மணி நேரம் பயணிக்கும் வண்டிகளில் பயணப்பட்டுள்ளேன்.

 டெல்லி போய் இறங்க, விமானங்கள்....3 மணி நேரம் செல்லும். அதிலும் சென்று வந்துள்ளேன்.

என்ன இருந்தாலும் தமிழ்நாடு,ஆந்திரா,மகாராஷ்ட்ரா,மத்திய பிரதேசம்,ராஜஸ்தானின் ஒரு பகுதி,உத்தரபிரதேசம்,என்று பல்வேறு மேடு,பள்ளங்கள் நிறைந்த நிலப்பரப்புக்கள் மீது ரயிலில் பயணப்படும் போதுதான், நம் இந்தியா இப்படி மேடு பள்ளங்கள், வளமை,வறட்சிகள் மீதா இருக்கிறது ? என்கிற உண்மைகள் அவற்றைப் பார்க்கும் போது தெரிய வரும்...நம் தமிழகத்தைப் பற்றி உயர் மதிப்பு பெருகும்.

சமீபத்தில்,கடந்த இரு மாதங்களில்  டெல்லிக்கு பல்வேறு பணிகள் சம்பந்தமாக இரு முறை நண்பர்களோடு சென்று இருந்தேன்..

இடையில் ஒரு மூன்று நாட்கள் ஓய்வு கிடைத்தது...

அஜ்மீர் செல்லுகிற ரயில் டெல்லியிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு,அரண்மனைகளின் நகரம்  ஜெய்ப்பூர்  தாண்டி, மதியம் 12.45 அஜ்மீர் அடைந்து, அங்கிருந்து அதே வண்டி மதியம் 3.45 மணிக்கு மீண்டும் புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு புது டெல்லி வந்து சேர்கிறது. ஆக போக வர 14.00 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

அன்று அஜ்மீர் போய் சேர்ந்து, அங்கிருந்து மதியம் மீண்டும் புறப்பட்டு டெல்லி நோக்கிக் கிளம்பினோம்...

அந்த ரயில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகும். எங்கள் இருக்கைக்கே வந்து  தேநீர் மற்றும் சிற்றுடிகள் வகைகளைத் தந்து செல்கிறார்கள்.. ஆனாலும் ஒரு பெரிய சிரமம், பயண நேரம் முழுதும் உட்கார்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும்.

எங்கள் இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவை.ஆகவே அதில் சென்று அமர எந்தப்பிரச்சினைகளும் இல்லை.பயணம் கலகலப்பாகவே அமைந்து இருந்தது..

முன்பெல்லாம் ரயில் பயணங்கள் புதிய புதிய நட்புகளைத் தேடிதந்தது......கொஞ்ச நேர உரையாடல்,முன்பின் அறிமுக மில்லாதவர்களைக் கூட  வெகு விரைவில் நட்பில் இணைத்து வைத்துவிடும்....ஆனால் “மயக்க பிஸ்கட்” புண்ணியத்தில்’ ,பக்கத்தில் இருக்கிற யாரும், பிறர் தரும் எந்தப் பண்டம் பலகாரங்களையும்  தொட்டுக் கூட பார்ப்பதில்லை...அப்படித் தந்ததைச் சாப்பிட்டால், அப்புறம் மயக்கம் வந்து, கொண்டு வந்த பொருட்களை, கொள்ளை அடித்து சென்று விடுவார்களோ?,என்கிற அச்சம், தானே வந்து விடுகிறது. அதனால் நாசூக்காக எல்லோரும் மறுத்தே விடுகிறார்கள்.

நாங்கள் ஏறி அமர்ந்ததும் எங்கள் இருக்கைக்கு முன்பு, புது மணத்தம்பதிகள் “முளிப்பில்” ஒரு இளம் ஜோடி வந்து அமர்ந்தது...

எங்களைப்பார்த்தாலே “இவங்க தமிழ் நாட்டுக் காரர்கள்” என்று கண்ண மூடிக்கிட்டே சொல்லிவிடலாம்.

அந்தப்பெண் தன் கை பேசியில் இருந்த சேமிக்கப்பட்ட படங்களை,திருமணக் கோலத்திலான பல்வேறு படங்களை, அந்த இளைஞனின் தோளில் சாய்ந்து  கொண்டு அவனிடம் காட்டிக் கொண்டு இருந்தாள்...ஒவ்வொரு படத்தைப் பற்றியும்  அந்த இளைஞன் என்னவோ சொல்ல,அந்தப் பெண் அவனிடம் செல்லமாய் சிணுங்கிக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து அந்தப்பெண் ஏதோ பாடல்கள் அடங்கிய தொகுப்பை அந்த போனில் ஓடவிட்டாள். அந்தப்பாடலின் ஓசையை காதுகளுக்குள் கேட்கும் ஹெட்போனின் இரண்டு முனைகளில் ஒன்றை அவனும், மற்றொன்றை அவளும் மாட்டி நெருக்கமாக சாய்ந்து கொண்டு, கேட்டு ரசித்துக் கொண்டே வந்தார்கள்....

இன்னும் பலப் பல...அதச்சொல்லிக் காட்டுவது நாகரீகம் இல்லை.

புதுமணத் தம்பதிகள் இப்படிப் பாட்டுக் கேட்பதில் ஆச்சரியம் என்ன  இருக்கிறது? என்று நான் என் வேலையைப்பார்த்துக் கொண்டு இருந்தேன்.ஆமாம்.கையோடு கொண்டு போய் இருந்த Dominic Leppiar- Lery kalins  எழுதிய  Freedom At Mid  Night புத்தகத்தை வாசித்துக் கொண்டு இருந்தேன்..

புது டெல்லி ரயில் நிலையம் போய்ச் சேர இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது...ஏதோ ஒரு ஊரில் வண்டி நின்றது..அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.. எங்களிடம் சிரித்துக் கொண்டே விடை பெற்றுக் கொண்டார்கள்.

அவர்கள் சென்ற பிறகு நம்ம அப்துல் காதர் அந்த ஜோடிகளைப் பற்றியே சொல்லிக் கொண்டு இருந்தார்...”என்னவொரு ஜோடிப்பொருத்தம்” என்று சொல்லுகிற அளவில் இருந்தது,அவரின் பேச்சுக்கள்.

கொஞ்ச நேரம் போனது....வண்டி டெல்லியை அடைய இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே என்று அடிக்கடி மணியைப் பார்த்துக் கொண்டேன்.ஓரிடத்தில் வண்டி நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது...

அந்த பெட்டியின் வாசல் பக்கம் போய், வண்டி எதற்காக அங்கு நிக்கிறது? என்று தெரிந்து கொள்ளச்சென்றேன். அப்போது வாசலில், என்னைப் பார்த்து  இளைஞன் ஒருவன் தலையை குனிந்து கொண்டான்... ஆஹா....எங்கள் முன் சீட்டில் பயணித்து எங்களிடம் விடை பெற்றுக்   கீழே இறங்கச்சென்ற அந்த இளைஞர் அல்லவா என்று அவரைப்பார்த்தேன். அவர் மட்டும் தனியாக அங்கே  அமர்ந்து இருந்தார்...கூட வந்த அந்தப் பெண்ணைக் காணவில்லை..

நான் “என்னடா இவம் மட்டும் தனியா இருக்கானே? அந்தப்பெண் ஒரு வேளை கழிப்பறை பக்கம் போய் இருப்பாளோ?” என்று யோசித்து விட்டு, இன்னொரு இருக்கையில் அமர்ந்து இருந்தேன்...

வண்டி டெல்லியை  நெருங்கியது....இன்னும் இரு நிமிடத்தில் இறங்க வேண்டியது தான்...

“Brother…Where is your wife?” என்று அந்த இளைஞனிடம் கேட்டேன்.

அதற்கு அந்த இளைஞன் சொன்ன பதிலைக் கேட்டு என் கூட வந்து,  கீழே இறங்க வேண்டிய  அப்துல் காதர், அவனை ஒரு முறைப்பு முறைத்து விட்டு மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார்...

“என்னப் பொருத்தம்”...என்று  எல்லோரும் நினைத்து ஏமாந்துதான்  போனோம்..

அவள் முந்தைய ரயில் நிலையத்திலேயே இறங்கிக் கொண்டதாகச்   சொன்னான்....அப்புறம் அவன் சொன்னது தான் தலையைச்  சுற்ற வைத்தது....

அவன் சொன்னது....No…No…She is my Girl Friend… அந்தப் பெண் இன்னொருவனின் மனைவியாம்.





 

வியாழன், 9 அக்டோபர், 2014

மோட்டார் சைக்கிள் மாப்பிள்ளை.....



 
சாதாரணமா, இரண்டு பைதா வண்டிகள்ன்னா,..... சின்னஞ்சிறுசுகளில் இருந்து வயசானவங்கள் வரைக்கும் ரொம்பப் பிடித்தம் தான்..

நடு வயசைத்தாண்டிவிட்டாலே,  முன்னாள் இளைஞர்கள் முதுகு “வலிக்குதே” ...”என்ன செய்யன்னு?”... வேற வகை வண்டிகளுக்கு மாறிடுறாங்க..... அல்லது பண வசதி அது இதுன்னு பலதால,  மனுஷங்க மாறிடுறாங்க.

சாமான்யங்கள் வாகனம்ன்னா அது டி..வி.எஸ்.50  தொடங்கி வசதி மற்றும் வாங்குகிற தகுதியைப் பொருத்து மோட்டார் சைக்கிள்கள் வரை போகும்..  புதுப்புது வண்டிகள் வாங்கிக்கிட்டேதான் இருக்காங்க...அதுல சில லட்ச ரூபாயையும் தாண்டுதாம்.

எங்க பக்கம், திருனவேலியில் வாழ்கிற  இளைஞர்களுக்கு, அல்லது குடும்பிகளுக்கு அவரவர் “வீட்டம்மாக்களோடு” அல்லது நண்பர்களோடு, மோட்டார்சைக்கிளில் போக வர, வசதியான சாலைகள் நிறைய உள்ளன.  ....

இள வட்ட பசங்க, பெண்மக்கள் யாரோடாயாவது, வண்டியில வெரிசையா,வேகமா போறதப்பார்த்தா .... ”எதுக்குத்தான் பயபுள்ளைகள், அதுகளை வச்சிக்கிட்டு அம்புட்டு வேகத்தில் போய்த்தொலைக்காங்களோ?...என்று கேக்கவே செய்றாங்க....அது “இயலாமையில்” கேக்கிற கேள்வி இல்லை.. அக்கரை கொண்டு கேட்கிற கேள்வி தான்.

ரொம்ப தூரமும் இல்லாமல், பக்கமும் இல்லாமல் திருனவேலி டவுண், பாளையங்கோட்டை,ஜங்ஷன் இருப்பதுதான் அவங்களுக்கு “அங்க இங்க” போற வழிப்பாதை.. சில பேர் வண்டி ஓட்டுகிற தினுச வச்சே....”இந்தப்பயலுக்கு மூக்கனாங் கயிறு இனிமத்தான் விளனும்டே.......அவம்முதுகில தொங்கிட்டுப்போறது யாருடே?.” என்று அர்த்தமுள்ள கேள்வியை திருனவேலி டவுன் பக்கமும், பாளையங்கோட்டை பக்கமும் கேக்கலாம்....

மிகச்சாதாராணமானவர்களில் இருந்து வசதியானவர்கள்,அதாவது நடுத்தட்டு மக்கள் வரை மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டரில் பயணப்படுகிறவர்கள் ஏதாவது காரியங்கள் இல்லாமல் செல்லுவதில்லை.

“சும்மா ஊர் சுற்றிப் பார்ப்போம்”, என்று போறவர்கள்,  நூத்தில் அஞ்சு பேர் கூட இருக்க மாட்டார்கள்.

கல்யாணமான இளைஞர்கள் வண்டி ஓட்டிச்செல்லும்  விதத்தை வைத்தே  “அந்த வண்டி அவன் உழைச்சு வாங்கியது, அண்ணன் தம்பிக்குள்ளதன்னும் அல்லது மச்சினமார்க்குள்ளதுன்னும்  லேசாக்  கண்டுபிடித்துவிடலாம்.

சிலர் வண்டி ஓட்டும் “கிரித்தியத்தை’ வைத்தே அவங்க அப்பன், பாட்டன் வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லிப்புடலாம்.

பெரும்பாலும் அந்த வண்டிகளில், மாலை நேரத்துப் பயணங்கள் சிரித்த முகங்களோடுதான் ‘”ஓடுகிறது’”.

துபாய் அல்லது வெளிநாடுகளில் இருந்து ஊர் வருகிற இளைஞர்கள் தமது மனைவி மக்களோடு மோட்டார்சைக்கிளில் பயணப்படும் போது அவர்கள் முகங்களைப் பார்க்கணுமே?... இருவர் முகத்திலும்.  அம்புட்டு பிரியம்  தெரியும்,

வண்டி மேக்க உள்ள டவுணுக்குப் போனால் ஏதோ புதுசா சில நகைகள் வீட்டுக்கு வரப்போகுதுன்னு அர்த்தம்.வண்ணார் பேட்டை தாண்டிப் போனால், ஏதோ “புள்ளதாச்சி”டாக்டரை பார்க்க போறதாகவும்,கொஞ்சம் மேக்க,கிழக்க திரும்பிப் போனால் அர்.எம்.கே.வீக்கோ,..போத்தீசுக்கோ ..சென்னை சில்க்கிற்கோ போறா ங்கன்னும் அர்த்தம். ஜங்ஷன் பக்கம் அரசனுக்கும்,பாளயங்கோட்டையில்  இப்போ உள்ள  ஹோட்டல் சாப்பாட்டுக்கோ போவாங்கன்னும் சொல்லிவிடலாம்.

நாப்பது வயசுக்கு மேல உள்ள ஆட்கள் போவது, பெரும்பாலும் மருத்துவமனைகளுக்குத் தான்னு தெளிவா சொல்லலாம்.

காலை,அல்லது முன் மாலை  வேளைகளில் குலவணிகர் புரம் மற்றும்,முருகன்குரிச்சி தாண்டி யாராவது அதமாதிரிப் போனால், கண்ண மூடிக் கிட்டு சொல்லலாம் அவங்க புள்ளைகளைப் பள்ளிக் கூடத்தில் உடவோ கூப்பிடவோ போராங்கலாம்.

அமீரக,அரபக நாடுகளில் உழைக்கும் இளம் வயது மாப்பிளைகள் தமது மனைவி மற்றும் கைக் குழந்தைகளோடு மோட்டார்சைக்கிளில் போகவே பெரும்பாலும் ஆவல் கொள்ளுகிறார்கள். 

ஒரு நாள் நானும் என் மனைவியும் என் சின்ன மகளோடு திருனவேலி வண்ணாரப்பேட்டை மருத்துவ மனையில் இருந்த உறவுக்கார மாமி ஒருவரைப் பார்க்கப்போனோம். சுகம் விசாரித்து விட்டு இரவு சுமார் ஏழு மணிவாக்கில் சூரியன் எப்.எம்.பக்கம் வந்து கொண்டு இருந்தோம்.. கொஞ்சம் இருட்டாக அந்தப்பக்கம் இருந்தது..என் மகளை பெட்ரோல் டேன்ங் மேலே எனக்கு முன்னால் வைத்திருந்தேன்..அவளுக்கு மூன்று வயது இருக்கும்..நான் ஒட்டிக்கொண்டு இருந்த புல்லட் பைக் நிதானமாத்தான் போய்க கொண்டு இருந்தது...

திடீர்ன்னு “நிறுத்துங்க....நிறுத்துங்க....வண்டிய நிறுத்துங்க”  என்று என் மனைவி  பதட்டத்துடன் சொன்னாள்...என்னவோ? ஏதோ? என்ற நடுக்கத்துடன் ஓரமாக வண்டிய நிறுத்தினேன்...

“அங்கப் பாருங்க டி.வி.எஸ்.50  ஒன்னு கீழே கிடக்குது...அது கிட்ட நம்மூர் பிள்ளை மாதிரி ஒரு பெண் ரோட்டுல குப்புறக்கிடக்கு...வாங்க வாங்க “என்றாள்......பதட்டத்துடன் அவள் சொன்ன இடத்தை பார்த்தேன்.

 அங்கே புர்கா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் கீழே மயக்கமாய் கிடக்க,அவளைத் தாங்கிப் பிடித்து, அவள் கணவன்  அழுது கொண்டு இருந்தான்... அவர்களது குழந்தை அந்த இருவரையும் பார்த்து அழுது கொண்டு இருந்தது....

அந்தபெண்ணின் கணவரை எனக்கு நீண்ட நாட்களாகத்  தெரியும்......வெளி நாட்டில் இருந்து  ஊர் வந்து இருந்தார்...இப்பவும் வெளிநாட்டில் தான் இருக்கிறார். என்னைப் பார்த்ததும் பெரும் குரல் கொடுத்து அழ ஆரம்பித்தார்...

நான் “என்ன?...ஆச்சுப்பா“ ? என்று அவரிடம் கேட்டேன்.

.” இந்த ரோட்டுல சின்ன குழி ....என் வண்டியின் பின் வீல் அதில் இறங்கி ஏறுச்சு...அவ கைல பிள்ளை இருந்துச்சு....தடுமாறி கீழே விழுந்துட்டா...இப்ப மூச்சு பேச்சு இல்லாம இருக்கா”,,,,,என்று அழுது கொண்டே சொன்னார்....குழந்தயைப்பார்த்தேன் அதுக்கு சின்ன சிராய்ப்புக் கூட இல்லாமல்,அந்தப்பெண் தாங்கிப் பிடித்துள்ளார்...

அந்த இளைஞரிடம்... “தைரியமாக இருப்பா” என்று சொல்லிவிட்டு அடுத்து,...”அவங்களை ஆஸ் பத்திரிக்கு கூட்டிட்டுப் போவோம்....என்று சொல்லி விட்டு ஆட்டோவை தேடினோம்...உடனடியாக அங்கே போன ஆட்டோ ஒன்று வந்து சேர்ந்தது...

நான் கால்கள் பக்கம் அந்தப்பெண்ணை தாங்கிப்பிடிக்க, என் மனைவி அவள் கைகள் பக்கம், பிடித்து தூக்கி ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றினோம்...”பக்கத்தில் கேலக்ஸி ஆஸ்பத்திரிக்குப் போங்க”....ன்னு சொல்லி அவங்களை அனுப்பி வைத்தோம்..

அந்த சூழ்நிலையில், ,அழுது கொண்டே இருந்த  அவர் மகளை என் மனைவி தூக்கி வைத்துக் கொண்டாள்......சரி,அவங்கள அனுப்பின ஆஸ்பத்திரிக்கு போவோமுன்னு, தயாராகும் போது தான், எங்க கூடவந்த  எங்க மகள் நினைவுக்கு வந்தாள்..

.”.ஆமா, நம்ம ரபிகாவை எங்கே?”...கூட்டத்தில் தேடினேன்...பிள்ளையை காணோம்.... கொஞ்ச தூரத்தில், நாம வண்டியை நிறுத்தின இடத்தில் பார்ப்போமுன்னு...அங்கே ஓடினேன்.... எங்கள் மோட்டார் சைக்கிளில் ,அந்த இருட்டில் என் பிள்ளை பதட்டப்படாமல் உட்கார்ந்து இருந்தாள்...எனக்கு ஏற்பட்ட திடீர் பதட்டம் அவளைப் பார்த்து போதுதான்   குறைந்தது..

  எங்களை விட்டு தனியே போகாமல் எப்போதும் எங்க கூடவே இருக்கிற  என் பிள்ளை...தைரியமாக அந்த இருட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்தாள்.அவள் கழுத்தில், கைகளில் தங்க நகைகள் வேறு.

ஒருமட்டுக்கும் கொஞ்ச நிம்மதியோடு,கேலக்ஸி,ஆஸ்பத்திரி போய் சேர்ந்தோம்...என் மனைவியின்  கைகளில் இருந்த அந்தப் பெண்ணின்  குழந்தை,  அழுகையை நிறுத்தவே இல்லை....ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போன அதன் தாயை நினைத்து....’எம்மா...”என்று பெரும் குரல் எடுத்து, அழுது கொண்டு இருந்தது....அந்த குழந்தைக்கு தாலாட்டு சொல்வதே கடும் சிரமமாய் இருந்தது..அப்புறம் அந்தச்சின்னக் குழந்தைக்கு “தேவையான” காரியங்களை செய்தோம்.

மருத்துவ மனையிலும்,  கீழே விழுந்து விபத்துக்குள்ளான, அந்தப் பெண் கண் விழிக்கவே இல்லை.மயக்க நிலையிலே தான் இருந்தாள்...அவரின் கணவர் அழுத அழுகையை விடவே இல்லை...அவரை அவசர சிகிட்சை அறைக்கு வெளியே உட்காரச்சொன்னேன்..

நல்ல வேளை.  என்னிடம் அப்போது போதுமான பணம் இருந்தது...என் கைகளில் இருந்த பணத்தை, அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காக செலுத்திவிட்டு, டாக்டர் மகபூப் சுபஹாணி எங்கள் குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் சொல்லி உடனடியாக சிகிச்சையை கொடுக்கச்செய்தேன்..

“தலையில் அடி பலமாகப் பட்டிருக்கலாம்”... என்கிற சந்தேகம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது...அடுத்து ஸ்கேன் எடுக்க வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்து அந்தப்பெண்ணை ஸ்டெச்சரில் அங்கிருந்தவர்கள் துணையுடன் நானும் என் மனைவியும் தூக்கிக் கிடத்தினோம்.அந்தப் பெண் அணிந்து இருந்த தங்க நகைகளை கழற்றி வாங்கி,ஒரு கைக் குட்டையில் சுற்றி  நான் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

 

அப்போது அந்தப்பெண் மயக்கம் தெளியத்தொடங்கி இருந்தார்...”நான் எங்கே இருக்கேன்?” ..”எம்புள்ளைய  எங்கே/.”....”எம் புள்ளே...புள்ளே...”.....என்று மெல்லிய குரலில் அழத்தொடங்கினார்..டாக்டர்கள் சிரித்துக் கொண்டார்கள்..”அப்பாட...நாம் பயந்த மாதிரி இல்லை...இவர் கோமா..நிலையில் இல்லை...சுய நினைவு வந்து விட்டார்,என்றார்கள்....

“எம்மா பயப்படாதேம்மா”.....என்றேன்.  என்னையும் என் மனைவியையும் அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.எங்கள் கைகளில் அந்தக் குழந்தை இருந்தது...

“அவர் எங்கே?”.....அந்த வேதனையிலும் கண்ணீரோடு அவரது  கணவரை அந்தப்பெண் தேடினார்..

“அவருக்கு ஒன்றும் ஆகவில்லையே?”.....என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்..

“நல்லா இருக்காரம்மா “...உங்க வீட்டுக்கு நான் முதலில் தகவல் சொல்லிவிட்டேன்...அவங்க வருவதை எதிர் பார்த்து வெளியில் நிற்கிறார் என்றேன்.

கண்விழித்தது தெரிந்ததும் டாக்டர் சுபஹாணி வந்து, அந்தப்பெண்ணிடம் விபத்து நடந்த விபரம் கேட்டு விட்டு...” நாக்க நீட்டும்மா,” “கண்ணைக் காட்டும்மா”...”காலை அசைத்துக் காட்டும்மா”....என்று சொல்லிவிட்டு...”கைகளை தூக்கிக் காட்டும்மா”..என்று படுத்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்..இடது கையை மட்டும் தூக்கிக் காட்டிய அந்தப்  பெண் வலது கையைத்தூக்க முடியாமல் “வலிக்கிறது” என்று சொல்லி அழுதது...

அதை வைத்து டாக்டர்கள், பரிசோதனை செய்தபோது, முன் தோள் பட்டையில் கழுத்துக்குப் பக்கத்தில் “காலர்’எலும்பு முறிந்து இருந்ததைக் கண்டு பிடித்தார்கள். அடுத்து எலும்புமுறிவு சிகிட்சைக்கு அனுப்பி வைத்தார்கள்...

கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்ணின்  மாப்பிளை மற்றும் பெண்ணின் குடும்பத்தார் ஆண்களும் பெண்களுமாக  வந்து சேர்ந்தார்கள்...

வந்ததும் என் மனைவி அவள் கைகளில் இருந்த குழந்தையை கொடுத்தாள்..நான் என் கைக்குட்டையில் இருந்த நகைகளை அப்படியே கொடுத்தேன்...

“ஆமா....நம்ம புள்ளையை எங்கே” ? மீண்டும் பதட்டத்தோடு ,....என் மனைவி கேட்டாள்...

“அதோ என்றேன்..”

என் மகள், அங்கே இருந்தாள்....அங்கே டி.வி.யில் அவள் ரசித்துப் பார்க்கும் POGO 








 
சேனல் ஓடிக கொண்டு இருந்தது...சிரித்துக் கொண்டே அவள் கிட்டே போனேன்......டி.வி.திரையையும் அவளையும் பார்த்தேன்..

அந்தப் படத்தின் பெயர்,, “டோராவின் பயணங்கள்”.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

என்ன சொல்ல ?....எப்படிச்சொல்ல?...



கொஞ்ச நாட்களுக்கு முன்னர், எங்கள் குடும்ப நண்பரும் மிகச்சிறந்த பாடலாசிரியருமான கவிஞர் வீரை.அப்துல் ரகுமான் என்னை காலை ஏழு மணி அளவில், அலைபேசியில் அழைத்தார்..

அப்போது நெல்லை விரைவு வண்டியில், சென்னையில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்..
கவிஞர் வீரை ரகுமான் அவர் கள் ,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக, நிறைய இஸ்லாமிய பாடல்கள் எழுதியுள்ளார்...

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்.......
இறைவா வரம் தருவாய்,......
கைகளை எந்திவிட்டேன்,.....
சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே,கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே...முதலான சிறப்புக்குரிய பாடல்களும் அதில் உண்டு..

தமிழ் மீது மாறாத காதல் கொண்டவர்....
வாசகர் வட்டம் நடத்தி...பாரதியார்,பாரதி தாசனார்.,வ.உ.சிதம்பரனார் , பெரியார்,அண்ணா,காயிதே மில்லத் ,காமராசர்,பசும் பொன் தேவர்,அம்பேத்கர்,பிறந்தநாள் சொற்பொழிவுகள் பல நடத்தியவர்.சமூக நல்லிணக்க இயக்கங்கள் பலவற்றில் பங்கெடுப்பவர். முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணித்தலைவர்களில் அவரும் ஒருவர்....

"என்ன கவிஞரே எப்படி இருக்கீங்க.?."...
வழக்கமான விசாரிப்புக்கள் முடிந்தன...
“அப்புறம்?...”
‘இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு வரணுமே..’
“எங்கே வீரவ நல்லூருக்கா?”....
“ஆமாம்,...அங்கே ஒரு அன்பு இல்லத்துக்கு போகனும்”...என்றார்.

மாலை ஐந்து மணி சுமாருக்கு வீரவநல்லூர் போய் சேர்ந்தேன்...
என்னை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த, கவிஞர் கைகளில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மற்றும் மிச்சர்,பலகாரங்கள் கொண்ட ஒரு பெரிய பை இருந்தது...காருக்குள் நுழைந்ததும் எல்லாம் சேர்ந்த ஒரு வாசனை வந்தது...

“தம்பி....நான் உங்களை ஒரு வாரமா நினைச்சுக்கிட்டு இருந்தேன்....இன்னைக்குத்தான் கிடைச்சீங்க” என்றார் கவிஞர்....

கூட வந்த அவர் மகன், ‘இந்த ரோடு அந்த ரோடு” என்று அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த வீடு ஒன்றுக்கு வழி காட்டிக் கொண்டு இருந்தார்....

ஒரு பழைய பெரிய வீட்டின் வாசலில் நிருத்தச்சொன்னார் . காரை நிறுத்தினேன்...
"வாங்க தம்பி..... போலாம்.."..என்று அந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்...அந்த வீட்டில் முன் பக்கம் இருந்த அறை ஒன்றில் என்னை உட்கார வைத்தார்...

“அண்ணே....இதுதான் நீங்க சொன்ன அன்பு இல்லமா?”... என்று கேட்டேன்..
‘ஆமாம்.’...என்றார்.
“உள்ளே வாருங்கள்”...ஒரு பெரிய அறைக்கு கூப்பிட்டார்.
அங்கே நுழைந்த பின்னர்....மனது என்னவோ போல ஆகி விட்டது....

அந்த அன்பு இல்லத்தில் குழந்தைகளைக் காணோம்...ஆனால்......
எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுத்து....பேரன்கள் பேத்திகளும் கண்ட முதியவர்கள், என் பாட்டி வயதுடைய தாய்மார்கள் அங்கே இருந்தார்கள்...நான் மனதால் நொறுங்கிப்போனேன்....

கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை....
“அண்ணே இவங்கல்லாம் யாருண்ணே?.”...கவிஞர் காதுகளில் மட்டும் விழும் அளவில் கேட்டேன்..
“இவங்கல்லாம் ஆதரவு யாருமே இல்லாத அப்பாவி....முதியோர்கள்”.என்றார்.....அங்கே அமைதி குடிகொண்டு இருந்தது..

நான் உற்று நோக்கிய போது அதில் பலர் நோயாளியாக இருந்தார்கள்...
பலர் இருமிக் கொண்டு இருந்தார்கள்...
யாரும் யாரிடமும் பேசாமல், எங்களைப் பார்த்ததும் ..சிலர் தன தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

நான் பார்த்த அந்தமக்களிடம் குலம் தெரியவில்லை....
மதம் தெரியவில்லை....  ஒரு ஜாதி மட்டும் தெரிந்தது......அது புது ஜாதி...
என்ன ஜாதி?....ஆமாம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் ஜாதி...

கையோடு கொண்டு வந்த பலகாரங்களை கவிஞரும் நானும் கொடுத்தோம்....”வாங்காவிட்டால் வந்திருக்கிறவர்கள் வருத்தப்படுவார்களோ?..” என்கிற நினைப்பில் பட்டும் படாமல் வாங்கிக் கொண்டார்கள்....

அவர்கள் கண்களில் யாரையோ தேடுகிற முழிப்பு இருந்தது....கொஞ்சம் பக்கம் போய் ஆண்கள் பிரிவில் இருந்த பெரியவர்களிடம் மெதுவாக  பேச்சுக் கொடுத்தேன்....

ரொம்ப நேரம் ஒண்ணுமே பேசல்ல....அப்புறம் "சொல்லுங்கையா உங்களைப்பற்றி" ன்னு சொன்னதும்.... ஒரு வயசாளி மெல்லிய குரலில் என்கிட்டே பேசத்துவங்கினார்...
. “ நான் வயல் தோட்டமுன்னு செழிப்பா இருந்தேன்.... ரண்டு பொம்புளை புள்ளைங்கள கட்டிக் கொடுத்தேன்...மூணு பையங்க....எல்லாருக்கும் சொத்து பத்துக்களை பிரிச்சு எழுதிக் கொடுத்தேன்... வீட்டுக்காரி....போய் சேர்ந்துட்டா....கண்ணீரோடு சொல்லி .....கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்...
பாதகத்தி.... அப்பவே சொன்னா......இப்படி செய்யாதிய ....நீ ராசா...ய்யா .....நாம மண்டையை போட்ட பொறகு, அது அதுங்க பிரிச்சுக்கட்டும்...ன்னு. நாந்தான் கேட்டுத்தொலைக்கல்ல....இன்னைக்கு எங் கதியப்பார்த்தியாய்யா ?...எல்லாத்தையும் இழந்து இப்போ இங்க வந்து நிக்கேன்.”...என்னால் பேசமுடியவில்லை...

அவர் தோள்களில் கைகளை வைத்திருந்தேன்...அவர் அதில் தம் முகத்தை சாய்த்துக் கொண்டார்...கொஞ்ச நேரம் கழித்து ...அவரிடம் விடை பெற்று ஆறுதல் சொல்லி அங்கே இருந்து அடுத்த பகுதிக்கு போனேன்.

முழுதும் பெண்மக்கள் அதுவும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அங்கு இருந்தார்கள்..பார்வை ஒன்றே சொல்லியது...
அவர்களின் வேதனையை...

ஒவ்வொருவர் பக்கமும் போய் அவர்களின் நலம் விசாரித்தேன்...அப்போது அந்த அறையின் மூலையில்..... முகத்தில் செழுமை நிறைந்து...அது காணாமல் போய் இருந்த ஒரு பாட்டியைப்பார்த்தேன்...

கொஞ்ச நேரம் என் பார்வை அவரை விட்டு மாறவே யில்லை...அந்த பாட்டியும் என் மீது வைத்த பார்வையை மாற்றவே இல்லை...

மெதுவா பல படுக்கைகளைத்தாண்டி அவர் பக்கம் போனேன்..அவர் இருந்த படுக்கையில் என்னை “உட்காருப்பா”, என்று சொல்லிவிட்டு மீண்டும் என்னையே அந்த அம்மா பார்த்துக் கொண்டே இருந்தார்...

“ மேலப்பாளையமாய்யா நீ ” ? என்று என்னிடம் கேட்டார்.
“ஆமாம்மா .எப்படித்தெரியும்?..” என்று கேட்டேன்.
“உம் பேரை, காலைலயே இங்க எழுதிப் போட்டாங்கப்பா....ந்தா அங்கப்பாரு...”,.என்று என் முதுகுப்பக்கம் இருந்த கரும்பலகையைக் காட்டினார்..., அங்கே சாக்பீசால் என் பெயரும், ஊரும் எழுதி வைத்திருந்தார்கள்..

மீண்டும் அமைதி ....அவர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்...நானும் ஒன்றும் சொல்லவில்லை..மௌனம் கலைக்க....
“அம்மா....”என்றேன் அவர்களைப் பார்த்து ..

“என்னப்பா சொன்னே?...” ...
”அம்மான்னு சொன்னேம்மா.”என்றேன் ..

அவ்வளவு தான்...

எங்கு தான் அடக்கி வச்சிருந்தாரோ...விக்கித்து அழ ஆரம்பித்துவிட்டார்...
"அழாதீங்கம்மா."..என்றேன்..என் கைகளைப்பற்றி பிடித்துக் கொண்டார்...எய்யா....நான் கார் பங்களான்னு, பாளையங்கோட்டையில் ஒரு பகுதியைச்சொல்லி அங்கே வாழ்ந்தவள், என்று சொல்லத்துவங்கினார்...

"என்னம்மா ஆச்சு?"....

"எனக்கு ஒரே ஒரு மகன்...அவனுக்கு வந்தாள் ஒருத்தி... மெட்ராசில இருந்து பிடிச்சிட்டு வந்தான்.வருஷக்கணக்கா காதலிச்சோம்ன்னு சொன்னான்...அவ பூர்வீகம் ஆந்திரா பக்கம்..அவம் விரும்பினானேன்னு, என்ன ஏதுன்னு விசாரிக்காம கட்டி வச்சேன்...சண்டாளி....என்ன அவன்கிட்ட இருந்து பிரிச்சு, இங்க இருந்த வீடு வாசலைஎல்லாம் வித்து முடிச்சு அவனை மெட்ராசுக்கே கூட்டிப்போய் விட்டாள்....அவன் குடிச்சு குடிச்சு முழு போதையிலேயே முடங்கிட்டான்..."

“உங்களை யாருமே தேடல்லியாமா?”...

“என் பேரப்பிள்ளைகள் தான் என்னைத் தேடனும்....அதுங்க தான் என்கிட்டே உயிரா இருந்துச்சுங்க....நானும் அப்படி இருந்தேன்...என்னப்பத்தி அந்தப் பிள்ளைகளிடம் என்ன சொல்லி வச்சிருக்காளோ? .....அவங்க .... எங்க இருக்காங்கன்னே தெரியல்லைய்யா ....அவங்க கிட்ட நாம்பேச, செல் போன் நம்பர் கூட என் கிட்ட இல்லைய்யா.”....

“கண்டிப்பா ஒருநாள் அந்தப்பிள்ளைங்கஉங்களைத்தேடி வருவாங்க பாருங்க....” என்றேன்..அவர் அழுத அழுகை என்னை க் கடுமையாக  வேதனைப்படுத்தியது...என்னாலும் அழுகையை அடக்க முடியவில்லை..
ஒரு அரை மணி நேரம் போனது....நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை...என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்..

“அம்மா.....நான் போயிட்டு வரட்டுமா?...”....கொஞ்ச நேரம் எதுவும் சொல்லாமல்.......அப்புறம் சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டி காட்டினார்..."போய்ட்டுவாய்யா"...என்றார்..

“இந்தப்பக்கம் வந்தா கொஞ்ச நேரம் இந்தக் கிழவி கிட்ட வந்து பேசிட்டு போய்யா...” சரி என்று சொல்லிவிட்டு அவரை நோக்கி கையை அசைத்து காட்டி விட்டு “வர்ரம்மா.....” என்று கண்ணீரோடு கிளம்பினேன்..ஒரு நாலு எட்டு வச்சிருப்பேன்,.

“எய்யா....கொஞ்ச நில்லுய்யா...எனக்கு ஒரு உதவி செய்யணும்...செய்வியாய்யா ”

“என்னம்மா செய்யணும் சொல்லுங்கம்மா ?...”

“நான்....இந்தக் கதியில இருப்பதையும் ....என்ன இங்கப் பார்த்ததையும் எங்கயும் சொல்லிடாதேப்பா"....

அடுத்து அழுகைமேலிட அவர் சொன்னது, என்னையும்
அழ வைத்தது .

.."என் புருஷன் ஊரு மெச்ச வாழ்ந்தவருப்பா...அவருக்கு அசிங்கம் வந்துடக் கூடாதுப்பா...”
என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை .



வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆடு மேய்க்கத்தான் லாயக்கு.....



நாங்க படிக்கிற காலத்திலே வாத்தியாருங்க பிள்ளைகள திட்டுவாங்க. எப்போ? வகுப்பிலே வளவளன்னு பேசிக்கிட்டு இருந்தாலோ,பரீட்சைல மார்க் கொறையா எடுத்திருந்தாலோ கடுமையாத் திட்டுவாங்க..

“மூதேவி.....மூஞ்சியப்பாரு....”

“தடி மாடு மாதிரி இருந்தாப் போதுமால?.”

“படிக்க வேண்டாமாலே?....”

“ஏல நீ நெடுவ அலஞ்சிக்கிட்டு இருந்தா எப்படில படிப்ப?”

இப்பிடி பலவாறா வாழ்த்துக்கள் இருக்கும்.

“மாசிலாமணி சார்வாள் இப்படியெல்லாம் பேசுவதோடு நிக்க மாட்டார்..,சாட்டைக் கம்ப வச்சி, பிச்சித்தள்ளிருவார்....பேச்சும் கிடைக்கும், கூடுதலா அடியும் கிடைக்கும்.

எங்களுக்கு, ஜலீல் வாத்தியார்ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு என்ன ஆகுமோ..... ஏது ஆகுமோ தெரியாது...பெரும்பாலான நேரங்கள் வகுப்பில் பாடங்களே நடத்த மாட்டார்..வகுப்பில் நகங்களைக் கடித்துக் கொண்டே இருப்பார்... ரெண்டு கால்களையும் அப்படியே நாற்காலி மேலே தூக்கி வைத்து முட்டைக் கட்டிக் கொண்டு பல நேரங்கள் இருப்பார்.வேற ஒன்னும் நடக்காது.   திடீர்ன்னு “ஆ...ஆன்ம் பொஸ்சத்த எடு.... பொஸ்சத்த எடு”....ம்பார்....அவர் எங்களுக்கு ஆறாம் வகுப்பு எழாம் வகுப்பு எடுத்தார்.

“சாமுண்டி பாக்ஸ் வச்சிருக்கியால”.?....இருக்கு சார்.

“ஏல.... அதுல காம்பஸ்,கவராயம்லாம் இருக்கால?”....

எதுக்குன்னு சொல்ல மாட்டார்.

நாங்க படிச்ச காலத்தில் தான், கணம், சேர்ப்புக்கணம் வெட்டுக்கணம்....மற்றும் அல்ஜீப்ரா அடிப்படைகள் படிச்சுக் கொடுக்கத் துவங்கினார்கள்...

அவருக்கு அந்த சனியன் தெரியாதோ என்னவோ?.....மனுஷன் அதைக் காட்டிக்க மாட்டார்..

“ஏல எழுதுங்கலே.....ஒன்னு மெய்... ரண்டு மெய்...மூனு மெய்யல்ல, அஞ்சுமெய் ....ஆறு மெய், ஏழு மெய்யல்ல”.....என்பார்.

“சார்.....எனக்கு வெளங்கல்லியே....கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க சார்” என்று எவனாவது கேட்டால், அவ்ளோதான்....தொலஞ்சான்.

“ஏல எழுஞ்சில ”....என்று கேள்வி கேட்டவனை நிக்க வச்சிட்டு...அவனுக்கு அடுத்து இருப்பவனை எழுப்பி “உனக்குத்தெரியுதாலே?”
வாத்தியார்லோ கேக்கார்ன்னு..தெரியாவிட்டாலும் ”சார் ....தெரியுது சார்” என்பான்.

இப்படி ஒரு அஞ்சாறு பேர வகுப்பில் அங்க இங்க எழுப்பி,...இதே பாணியில் கேப்பார்...எல்லாப் பயபுள்ளையலும்,”சார் நல்லா தெரியுது சார் ”அப்படீம்பானுவோ.

கேள்வி கேட்டவன் செத்தான்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவன நிப்பாட்டி .....”உனக்கு தனியா வெளக்கனுமாலே?...மத்தவனுக்கு வெளங்கும் போது உனக்கு ஏம்லே வெளங்கல்ல ?".. “....என்று பேசிப்பேசியே, மனுஷன் அழ வச்சி வேடிக்கைப் பார்ப்பார்... கடைசி வரை அந்தப்புரியாத கணக்க அவர் வெளக்கிச்சொன்னதா.சரித்திரமே இல்ல.

அவரால், கணக்கில் நாசமா போனவங்க நிறைய.....என்னையும் சேர்த்து.

அனந்தையன்னு, எங்களுக்கு கைத்தொழில் வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.அப்போவெல்லாம் “தறி நெய்வது எப்படி?”, என்று பாடம் நடத்துவார்......குழித்தறி, மேடைத்தறி என்றெல்லாம் எழுதிப்போட்டு  மனுஷன் கேள்வி கேட்டுத்தொலைப்பார்.......தக்ளி,ராட்டை,இது மாதிரி சாதனங்களைக் காட்டி பாடம் நடத்துவார்.

தக்ளியில் பஞ்சைச்செலுத்தி நூல் உண்டாக்குவது எப்படி? என்கிற அதிசயத்தை அடிக்கடி நிகழ்த்திக்காட்டுவார்...அந்த நூலை வச்சித்தான் கதர் சட்டை,வேஷ்ட்டிகள் தயாரிக்காங்கன்னு சொல்லுவார்.....

பாவம்.அவருக்கு  கிட்டப்பார்வைதான் உண்டு. தூரப்பார்வை சரியா இருக்காது. அதோடு காதும் சரியா கேட்காது..வகுப்பில் அங்க இங்க பார்த்துக்கிட்டு இருப்பார்.யாராவது பேசிக் கொண்டு இருந்தால்...பேசினவனை நச்சி எடுக்க வேகமா வருவார்.அவர் வருகை பற்றி உஷாராகிற நண்பர்கள்,தொபுகடீர்ன்னு தலையை கீழே “டெஸ்க்கில்” வைத்துக் கொள்வார்கள்.எவம் பேசினானோ? அவனுக்கு நேரா...பின்னால இருந்தவன கொன்னு எடுத்திருவார்...அடிவாங்கினவனுக்கு எதுக்கு இந்த மனுஷன் வெறியா நம்மள வந்து அடிக்கார்?.....ன்னு தெரியாம, ரெண்டு கைகளையும் கொண்டு அடிபட்ட இடத்தை தடவி விட்டுக் கொள்வான்.... அவர் ஏன் அடிச்சார்னு ...தெரியவே செய்யாது..

நாம்ம கதைக்கு வருவோம்.

பொதுவா....ஒலகம் முழுசும் இருக்கிற வாத்தியாருங்க “நீ எல்லாம் படிச்சு என்னத்த கிழிக்கப்போற?...பேசாம மாடு மேய்க்கப் போலே...ஆடு மேய்க்கப்போலே...” என்று சர்வ சாதாரணமாகத் திட்டி?...அல்லது ஆசிர்வதித்து அனுப்புவார்கள்.

என் அனுபவத்துல சொல்றேன்.

மாடு மேய்ப்பதும், ஆடு மேய்ப்பதும் அம்புட்டு லேசில்லை.

எங்க விவசாய கிராமத்திலே, ஆடி மாசம் கோயில்ல கொடை நடக்கும்.
அப்போ எங்க பண்ணையில் வேலை செய்யிற எல்லாரும், லீவு போட்டுட்டு, மூனு நாளைக்கு, ஒக்கொன்னா போயிருவாங்க...

உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், நான் தான் அங்கே வந்து, இருந்து, ராப்பகலா ஆடுகளையும் மாடுகளையும் கவனிச்சுக்கனும். விவசாயத்தொழிலாளர்களுக்கு அப்போதான் தான் ஓய்வு கிடைக்கும். வெளியூர் ஆட்கள் விருந்தாளியா கொடைய ஒட்டித்தான் கிராமங்களுக்கு வருவாக. இன்னைக்கும் அதுதான் நடக்கு.

அந்த மாதிரி நாட்களில் என் மச்சின மார்கள் குறிப்பா நூருல் ஹக்,சிராஜ்,மீரான்,முதலானவர்கள் அவங்க நண்பர்களோடு,ஒரு மூணு நாள் எங்க பண்ணையில் தங்கிக் கொள்வாங்க....அதுவும் வெட்ட வெளியில், மரத்தடியில் கட்டிலிலோ,தரையிலோ இரவு நேரங்களில் படுத்துக் கொள்வார்கள். விதவிதமா சமச்சிப் பார்ப்பது எப்படி?  என்கிற வசதியும்,அனுபவமும், அவங்களுக்கு அப்போ கிடைக்கும்.   மூணு நாள் போவதே தெரியாது.

அந்த மாதிரி நேரங்களில் தோட்டத்த விட்டு மாடுகளையும், ஆடுகளையும் கொஞ்சம் வெளியே “பத்திக்கிட்டு” போவேன்.

ஆட்டையும், மாட்டையும் ஒரு போதும் ஒன்னா கொண்டு போகமுடியாது....

நான் சொல்லுறது கிடையை....மொத்த ஆடுகள் கூட்டத்தை சொல்றேன்.

ஆடுகளை மொத்தமாக மூங்கில் வேலி அமைத்து அடைத்துப் போட்டு இருப்பார்கள்...அதுக்குப் பக்கத்தில் குட்டிகளை பரிசல் மாதிரி அமைப்புள்ள ஒரு பெரிய பெட்டியை கவுத்திப்போட்டு அதுக்குள்ளே.....சின்னஞ் சிறு குட்டிகளை அடைத்துப்போடுவார்கள்..

அங்கிருந்து சின்ன குட்டி “ம்ம்பா.”...என்று கத்த...கிடையில் உள்ள தாய் ஆடு, அந்த சப்தத்தை எப்படித்தான் தெரியுமோ? அது தன் குட்டி சப்தம்ன்னு, ரொம்பச்சரியா,அந்தக் குட்டி ஆட்டின் தாய், சரியா பதிலுக்கு “ம்ப்பே”...என்று பதில் சப்தம் போடும்.

காலையில் பொலபொலன்னு விடிஞ்சப்பொறகு, கொஞ்சம் குளிரான காலங்களில், மூசு மூசுன்னு, ஆடுகள் தும்மல் போடும்.அப்போது மூக்குத்துவாரங்களிலும்,வாயில் இருந்தும் கொஞ்சம் ஆவி பறக்கும்...அந்த இடத்தில் ஆட்டு மூத்திர மற்றும் பிழுக்கை வாடை நாசியில் வந்து சேரும்..

கொஞ்ச நேரத்தில் ,இருபக்கம் இருந்தும்,அதாவது தாய் ஆடுகள் பக்கமும், குட்டிகள் பக்கமும் இருந்து சப்தம் கூடி விடும்.

“ஐயோ பாவம் .நேத்து சாயரச்சே அடச்சுப் போட்டது.ஒன்னும் திங்காம,குடிக்காம குட்டிகள் கிடக்கு.தெறந்து விடப்பா”...... இப்படி யாரவது கண்டிப்பா அந்த சப்தம் கேட்டால், சொல்லாமல் போக மாட்டார்கள்.

குட்டிகளைத்திறந்து விட்டதும்,நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்கும் கிடையில் தாய் ஆடு தம் குட்டியையும்,குட்டி தன் தாயையும் அடையாளம் கண்டு கொள்ளும்.  தப்பித்தவறி மற்ற ஆடுகள் பக்கம் போய் இன்னொரு ஆட்டின் குட்டி மடியில் பால் குடித்துவிடமுடியாது...

குட்டியை அல்லது தாயை இழந்த ஆடுகளை வலுக்கட்டாயமாக பிடித்த பின்னால் இன்னொரு ஆட்டிடம்,   பாலூட்டவோ கொடுக்கவோ முடியும்.

ஒரு நாள் ஆட்டப் பார்க்கிற கோனார் காலையில் எதுக்கோ வராம போயிட்டார்...

என்ன செய்ய? ஆடுகளை திறத்து விடுவோமேன்னு தட்டிகளை எடுத்துத் திறந்து விட்டேன். நான் எங்கேயோ அதுகளைப் பத்த அதுங்க வேற திக்கில போக ஆரம்பிச்சுது. நான் ஒருபக்கத்தை பார்த்து இந்தா....ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....ஹை....ஹை....என்று அதுக்கு புரிகிற ஏதோ ஒரு பாஷைய்ல மாடா சத்தங் காட்டியும் ஒன்னும் வேலைக்கு ஆகல்ல.....அதுகள் தம்பாட்டுல போக ஆரம்பிச்சுது...

பொதுவா நேத்து மேஞ்ச இடத்துல ஆடுகள் இன்னைக்கு மேயாது..அதுக்கு காரணம் ஒரு ஆட்டின் வாய் நீர் எச்சில் பட்ட இடத்தில், இன்னொரு ஆடு புல்ல  கடிக்காது. இயற்கை கொடுத்துள்ள கால இடைவெளி, என்று கூட அதச்சொல்லலாம். அதனால் வேற திசைக்கு மேஞ்சிட்டு,ஒரு மூணு நாள் கழித்து பழையபடி முன்ன மேஞ்ச இடத்துக்கு வரும்.

நானும் போனேன்...... போனேன் அதுங்க போற வழியில், போனேன். போய்க்கிட்டே இருந்தேன்.

காலையில் எழுந்து பல்ல வெளக்கி,ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் தான் குடிச்சிருந்தேன்.சரி யாராவது வாராங்களான்னு பார்த்தா;,யாருமே அன்னைக்கு வரல்லை.”போகுமிடமெல்லாம் நானும் வருவேன்”னு ஒட்டிக்கிட்ட “ஜெல்” போனும், அன்னைக்கு நான் எடுத்திட்டு போகல்லை.

மதியம் ஒரு பன்னிரண்டு மணி ஆகும் போது லேசா கண்ண கட்டுச்சு...சரி....இன்னைக்கு அவ்ளோதான் ..... பார்ப்பம்ன்னு தலையில் கட்டியிருந்த தலைப்பாவோடு போய்க்கிட்டே இருந்தேன்.

அப்போ..... பசி, கூட ஆரம்பிச்சு இருந்தது....

எங்க தோட்டத்தில் இருந்து ஒரு மூணு கிலோ மீட்டர்க்கு மேலே ஆடுகளோடு, நடந்திருப்பேன்.

ஆட்கள் நடமாட்டமே இல்லாத அந்த மணிமுத்தாறு கால்வாய்க் கரையில்  “சூனா பானா” வடிவேலு மாதிரி இருந்த ஒரு கிராமத்து ஆள்,என்னைத்தாண்டி சைக்கிள்ள போனவன், திடீர்ன்னு சைக்கிள நிறுத்தி, திரும்பி வந்து கொண்டு இருந்தான்.

நான் தலைப்பாவை எடுத்து முட்டாக்கு போட்டுக் கொண்டு,முகத்தை மூடி அவனை எதிர் கொண்டேன்.

‘ஏ...ஏ...யாரு நீ?....புதுசா இருக்கே?”

நான் ஒன்றுமே பதில் பேசவில்லை...

“கேக்கன்...பதில் ஒன்னும் சொல்ல மாட்டேங்க...?”

கொஞ்சம் மெதுவான குரலில்...”நானும்.... நம்மூருதான்...”என்றேன்.

“இங்க உன்ன  முன்னபின்ன நான் ஆடு மேக்க பாக்கல்லியே”? என்றான்.

அப்புறம்..... ஆட்காட்டி விரலை பல்லில் வச்சிக்கிட்டு,.....”சரி சரி.....அசலூரு ஆளோ? புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கியோ?” அதச்சொல்ல வேண்டியது தானே? என்றான்.

“ஆ..ஆமாம்,பக்கத்தில எல்க்கேஷ் தோட்டத்தில...”என்று,  நான் சொல்லி முடிக்கும் முன்னே ...

”அதச்சொல்லித் தொலைக்காம எதுக்கு நீ இம்புட்டு மெதுவா சொல்றே?....” என்று சொல்லி விட்டு, என்னையும் என் ஆட்டுக் கூட்டத்தையும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு,,சைக்கிளில் ஏறி..பச்சை  டவுசர் வெளியே தெரிய வேஷ்ட்டியக் தூக்கி கட்டிக்கிட்டு போனவன், ஒரு அஞ்சாறு முறையாவது திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“எலேய் ......  களவானிப்பய எவனும் ....வாரானான்னு சாக்கிரதையா பார்த்துக்கிடுங்கலே ”.....ன்னு ..தூரத்தில மாடு மேச்சிக்கிட்டு இருந்தவரிடம் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டே அந்த ஆள் போய்க்கிட்டு இருந்தான்.

அப்பாட தப்பிச்சோம் என்று நிம்மதியடைதேன்.

கொஞ்சம் வடக்கு பக்கமா மீண்டும் ஆடுகள் போக ஆரம்பித்தது..

என்னால் வெய்யில் தாங்க முடியவில்லை...தலையைச்சுற்றி ஒரு மாதிரியா இருந்தது.

ஏதாவது  குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன்.

கொஞ்ச தூரத்தில் ஒரு பம்பு செட் ரூம் கண்ணில் பட்டது..

நிழல் வாட்டமா இருந்த அந்த பம்ப் செட் ரூமின் திண்ணையில் போய் உட்கார்ந்தேன். கொஞ்சம் சாயலாம் என்று சரிந்தேன்.

மணி எத்தனையோ? தெரியவில்லை.

கொஞ்ச தூரத்தில் ஒரு வயசாளி போய்க் கொண்டு இருந்தார்...

அவரிடம் சென்று “நீங்க போற பாதையில் உள்ள யாக்கோபு நாடார் ஓட்டலில், திங் கிறதுக்கு ஏதாவதும், டீயும் ஒருத்தர் கேக்கான்னு சொல்லிடுங்க”...என்று சொல்லி அனுப்பினேன்.

நாம அனுப்பிய தூதர், யாக்கோப் நாடார் கடைல சொன்னாரோ என்னவோ? என்று ஒரு அரை மணி நேரமா....காத்துக்கிட்டு இருந்தேன்...

தூரத்தில் ஒரு டி.வி.எஸ்.சூப்பர் வாறது தெரிஞ்சுது..அதில சிரிப்பு நடிகர் செந்தில் மாதிரி அசலா “முழிக்கும்” யாக்கோபும், இன்னொருத்தனும் அந்த பம்ப் செட் நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

நான் அவங்க கைகளையே, பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பின்னால் இருந்தவன் கைகளில் ஒரு ‘கைப்பிடி மரக்கட்டையில்’ டீ இருந்தது...நான் பம்ப் செட் திண்ணையில் இருந்தேன்.

யாக்கோபு என்னை பார்க்கும் போதும் நான் தலையில் முக்காடுதான் போட்டு இருந்தேன்.காரணம் அனல் காற்று வேறு அப்போ அடித்துக் கொண்டு இருந்தது...

“ஏல...எவம்ல ஆடு மேய்க்கவன்?.....நான் பாக்கனும்ல உன்ன.....அங்க வந்து டீய குடிக்க மாட்டியால?.....என் தோட்டத்து பம்ப் செட்ல உனக்கு என்னல சோலி?....என்று கோபம மேலிட தொடர் கேள்விகள் கேட்டுக் கொண்டே என்னை நெருங்கினார்..

“யப்பா....இனியும் தாமதிக்கக் கூடாது”ன்னு...தலையில் போட்டிருந்த துண்டை விலக்கினேன்...

“எய்யா....நீங்க எங்க இங்க வந்து படுக்கிய?”....என்று யாக்கோபு ஆச்சிரியம் கலந்த வியப்பில் கேட்டுக் கொண்டார்.

”நாடாரே...முதல்ல டீயைக் கொடுங்க.”...என்று வாங்கும் போது, இல்ல பிடுங்கும் போது கூட வந்த ஆள்  கைல இருந்த பொட்டலத்தைக் கவனித்தேன்..அதில் எங்க பக்கம் போடுகிற முட்டைக்கேக் (வெட்டுக் கேக்) இருந்தது. அத வாங்கி நான் தின்ன வேகத்தைப் பார்த்துட்டு நாடாரும் கூட வந்த ஆளும் பயந்தே போய்ட்டாங்க...

“என்னய்யா..... சும்மா நிதானமா சொல்லுங்க இங்க வந்து எதுக்கு பம்மி இருக்கிய?” என்று கேட்டார்.

நான் கொஞ்ச நேரம் சிரித்துக் கொண்டேன்.டீயைக் குடித்துக் கொண்டே அவரைப்பார்த்தேன்.

“என்ன இந்த ஆள் ?...., நம்ம பம்ப் செட் கிணத்து ரூம்ல, யாருக்கும் தெரியாம எதுக்கோ  பதுங்கி இருக்காரா”? ன்னு ... யாக்கோப் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.

“ நாடாரே... வழக்கமா ஆடு மேய்க்க கோனார் வேலைக்கு வரல்லை...ஆட்டத்தொறந்து விடுவோமேன்னு பத்தினேன். அதுங்க, அங்க சுத்தி இங்க சுத்தி ஒம்ம தோட்டம் பக்கத்துல வந்துட்டுது....நான் காலையில் இருந்து ஒன்னும் உங்க, திங்க இல்லையா அது தான் கிரக்கிடுச்சு” என்று சொல்லி முடித்தேன்.
...
“என்ன வேல செஞ்சீங்க? மணி இப்போ நாலரை ஆகுது....நீங்க போங்கன்னு”...தொரட்டிக் கம்பை வாங்கி ... என்னை அனுப்பி வைத்துவிட்டு ,  யாக்கோபு நாடாரே ஆடுகளைப் பத்திக் கொண்டு வந்தார்...

கூடவந்த பையனோடு, என்னை அவர் கொண்டு வந்த டி.வி.எஸ். சூப்பரையும் கொடுத்து அனுப்பினார்.

காலையில் இருந்து என்னைக் காணாமல், எங்க பண்ணையாட்கள் கலவரமே படவில்லை.

“நீங்க யார் கூடவாவது களக்காடு போயிட்டீங்களோன்னு நினைச்சோம்” என்றார்கள்.

ஆறுமணிக்கு ஆடுகள் திரும்பி வந்தன...வயிறுகள் எல்லாம் நிறைந்து...எனக்குத்தான் பசி மயக்கம்
 இருந்தது...

அப்போ வாத்தியார்கள்...எப்போவோ சொன்னது காதில் கேட்டது.

“நீங்கள்லாம் ஆடுமேய்ய்க்கத்தான் லாயக்கு”........