மேலப்பாளையம் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் (முன்னாள் மேலப்பாளையம் நகர்மன்றத்தலைவர்) அவர்கள் எனது மாமா என்பதில் எங்களுக்கெல்லாம் மிகப் பெரும் கண்ணியம் உண்டு....
எனது தந்தையின் உடன் பிறந்த சகோதரி எல்.கே.எஸ்.ரபீகா அவர்களை மணமுடித்த வகையிலும்,எங்கள் வீட்டில் சம்பந்தம் செய்து கொண்டதிலும் எனக்கு அவர்கள் மாமா ...என் தாயாருக்கோ அவர்கள் தாய் மாமன் ஆவார்கள்.
சின்னஞ்சிறு வயதில் அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாகவே நான் அவர்கள் வீட்டில் வளர்ந்தேன்.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியை உருவாக்கிய தலைவர்களின் வரிசையில் அவர்களும் உண்டு....அதன் நிர்வாகியாக 30 ஆண்டுகள் பணி செய்துள்ளார்கள்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியின் அமைப்புக்குழு உறுப்பினராக இருந்ததோடு 37 ஆண்டுகள், அதன் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணி செய்தார்கள்., மேலப்பாளையத்தில் பல நூறு பட்ட தாரிகள் உருவாக, மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் கல்லூரிப்படிப்புக் கிடைக்க அரும்பணியாற்றி உள்ளார்கள்...
மேலப்பாளையம் நகர் மன்றத்தலைவராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிட்டு நகர் மன்றத்தலைவராக 3 முறை தேர்வு செய்யப்பட்டு நேர்மையான முறையில் மக்கள் பணி செய்தவர்கள் ஆவார்கள்...
மேலப்பாளையம் குடிநீர் திட்டம்,நகரின் முக்கிய பகுதிகளில் காங்ரீட் சாலைகள், காயிதே மில்லத் பெயரால் பள்ளிக்கூடம்,யாருக்கும் வளையாத நிர்வாகம்,,...எளிய மக்களுக்கு குறைந்த வீட்டு வரி விதிப்பு முதலானவை அவர்களின் பதவிக்காலத்தின் முக்கிய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்..
1961 ஆம் ஆண்டு மேலப்பாளையம்- திருநெல்வேலியை இணைக்கும் தாமிரபரணி ஆற்றில் மேல நத்தம் தாம்போதிப் பாலம் அவர்கள் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும் .தமிழக ஆளுநராக இருந்த வி ஷ்ணு ராம் மோதி இப்பாலத்தினை திறந்து வைத்தார்..அதற்கு முந்தைய காலத்தில் தண்ணீரில் நனைந்தே திருநெல்வேலிக்கு செல்லும் நிலை இருந்தது.
தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை
1961 ஆம் ஆண்டு மேலப்பாளையம்- திருநெல்வேலியை இணைக்கும் தாமிரபரணி ஆற்றில் மேல நத்தம் தாம்போதிப் பாலம் அவர்கள் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும் .தமிழக ஆளுநராக இருந்த வி ஷ்ணு ராம் மோதி இப்பாலத்தினை திறந்து வைத்தார்..அதற்கு முந்தைய காலத்தில் தண்ணீரில் நனைந்தே திருநெல்வேலிக்கு செல்லும் நிலை இருந்தது.
தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை
மேலப்பாளையத்திற்கு விருந்திற்கு அழைத்து, வி.எஸ்.டி.வீட்டின் நடுக் கூடத்தில் மேலப்பாளையம் நன்குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றது தனி வரலாறு ஆகும்.
மேலப்பாளையம் குடிநீர் திட்டம் 1958 ஆம் ஆண்டில் அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு, .முன்னாள் நகர் மன்றத்தலைவர் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்களின் காலத்தில் நகரில் எல்லாப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது..
மேலப்பாளையம் அம்பை சாலையில், வி.எஸ்.டி.குடும்பத்தினர் நன்கொடையாகத்தந்த இடத்தில் தான் மேலப்பாளையத்தின் மேல் நிலை நீர்தேக்கத்தொட்டிகள் இன்றும் உள்ளன..
மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமையப் பெற்றுள்ள மிகப்பெரிய இடங்களும் வி.எஸ்.டி.குடும்பத்தாலே தான் நன்கொடையாக அளிக்கப்பட்டவை ஆகும்.
மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமையப் பெற்றுள்ள மிகப்பெரிய இடங்களும் வி.எஸ்.டி.குடும்பத்தாலே தான் நன்கொடையாக அளிக்கப்பட்டவை ஆகும்.
கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப், அரசியல் சட்ட மேதை கே.டி.எம்.அகமது இப்ராகிம்,தென்காசி மேடைமுதலாளிகள் மு.ந.அப்துர் ரகுமான் சாகிப்,மு.ந.முஹம்மது சாகிப்,சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப், சின்ன முதலாளிகளான ஜமால் முஹம்மது சாகிப்,அ.க.ரிபாயி சாகிப் Ex.M.P.,.அ.சாகுல் ஹமீது சாகிப் Ex.M.L.A. ,காயல் பட்டணம் பல்லாக்கு அப்துல்காதர்,எஸ்.ஒ.ஹபீப்,செய்யது பீடி நிறுவனங்களின் தலைவர் பத்ஹூர் ரப்பானி,பேராசிரியர் நசீருதீன்,பேராசிரியர் முஹம்மது பாசி,டாக்டர்.முஹம்மது தம்பி முதலான பெருமக்களோடு அணுக்கமான நட்பினைப்பெற்றவர்களாக இருந்தார்கள்.
தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும், மேடைகளில் பேசுவதிலும், கட்டுரைகள் வடிப்பதிலும், தனிப்பெரும் திறமை கொண்டு விளங்கினார்கள். மாநிலத்தமிழ்ச் சங்கத்தில் துணைத்தலைவராக தமிழ்த்தொண்டு புரிந்துள்ளார்கள்
இளம் பருவத்தில் மேலப்பாளையத்தில் பஞ்சா எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்கள்....இஸ்லாமிய நெறிகளுக்கு மாறாக பஞ்சா எடுப்பது தொடர்ந்த போது அதற்கு கருப்புகொடி காட்டி பரபரப்பை அவர்களும் அவர்தம் நண்பர்களும் ஏற்படுத்தினார்கள்.
சின்னஞ்சிறு வயதில் எங்களை ஒருபோதும், பஞ்சா சப்பரம் பார்க்க அவர்கள் அனுமதித்ததே இல்லை...
அவர்களைப் பற்றி தனி புத்தகமே எழுதலாம்.அவ்வளவு செய்திகள் என்னிடம் உண்டு..
அவர்களின் வாழ்நாளின் கடைசி வருடங்களில் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு, இருந்தார்கள்....என்னையும் என் தம்பி கல்வத் பீர் முகம்மதுவையும் அவர்கள் அழைத்து அன்றைய நாளிதழ்களை வாசிக்கச்சொல்லுவார்கள்...
நானாவது எப்போதாவது சில முறை செல்வேன்.அதுவும் தி ஹிந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைகள் படிக்க மட்டுமே போவதுண்டு.ஆனால் எனது மாமனார் சாந்து அக்பர் சாகிப், சாந்து செய்து முகைதீன்,பத்ருதீன் வாப்பா,என் மைத்துனர் செய்யது முகம்மது முதலானோர் அவர்களுக்கு நாளிதழ்களை வாசித்து உதவிடும் பணியினை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள்..
என் சகோதரிகளும் அந்தப்பணியினை அவ்வப்போது செய்து வந்தார்கள்..
அகில இந்திய வானொலி வழங்கும் செய்திகளைக் கேட்காமல் அவர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை...இறப்பதற்கு முந்தைய நாள் வரை அந்தப்பழக்கம் அவர்களிடம் இருந்தது..
அவர்கள் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் என்னை அழைத்து ‘பாளையங்கோட்டையில் உள்ள காதுகேட்கும் திறன் இல்லாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு போய் வந்து இருக்கியா?” ....என்று கேட்டார்கள்...
“இல்லை...எனக்கு அதைப்பற்றி ஒன்று தெரியாதே”... என்றேன்...
“தெரிஞ்சிக்கோ....அது Florence Swainson பிளாரன்ஸ் ஸ்வேய்ன்சன் என்கிற ஆங்கிலேயப் பெண் மணியால் ஏற்படுத்தப்பட்டதாகும்...அவர்கள் பெயராலேதான் இன்றும் பாளயங்கோட்டை சிறைச்சாலைக்கு எதிரே உள்ளது..அங்கே ஜாதி,இனம், மதம் பாராமல்..... காதுகள் கேட்காத,வாய்பேச முடியாத ஊமைக் குழந்தைகளுக்கு பேச்சினைப் புரிந்து கொள்ளவும் .....தொழில் செய்யவும் கற்றுக் கொடுக்கிறார்கள்....அங்கே நானும் உங்கள் மாமியும் பல முறை பல்வேறு விழாக்களில் கலந்து வந்துள்ளோம்..என்றைக்கோ என் மனதில் ஒரு எண்ணம் வந்தது..வருஷத்தில் ஒரு நாள் அந்தக் குழந்தைகளுக்கு நம்ம வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும்...ஒவ்வொரு வருஷமும் அதுக்கு ஆகிற செலவிற்கு பணம் போட்டு ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும்......இப்போது ஒரு வார காலமாக என் மனதில் அந்த நினைவு அடிக்கடி வந்து போகிறது...இன்னைக்கு அந்தப்பணத்தை வங்கியில் போட்டாச்சு....கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காமல் .............நம்ம ஸமான் வருவார்,...அவர் கூட நம்ம வீட்டின் ஆண், பெண் பிள்ளைகள் எல்லோரும் அங்கே போய் உணவு உண்டு வாருங்கள்” என்றார்கள்..
கொஞ்ச நேரம் நானும் அவர்களும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை...
“உங்க மாமி இறந்த மாதம் ...இந்தப் பிப்ரவரி ஆகும்..அதனால் வருஷத்தில் எப்போதும் இந்த மாதத்தில் அங்கே போய் அந்தப் பிள்ளைகளோடு ஒரு நாள் இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்...குடும்பத்தோடு நீ கண்டிப்பா போகணும்......போலாம்ல?...”.... என்று கேட்டார்கள்..
“சரி மாமா...கண்டிப்பா போவேன் ...”என்று சொன்னேன்...2006 ஆம் ஆண்டில் இருந்து அங்கே ,அந்தக் குழந்தைகளோடு உணவு உண்ண, ஒவ்வொரு ஆண்டும் போய் வருகிறேன்...ஒரு ஆண்டு மட்டும் வெளியூரில் இருந்ததால் போகவில்லை.
கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல நானும், என் தாயார்,சகோதரிகள், என் மனைவி...மற்றும் என் தாய் மாமான்களோடு அந்தப் பள்ளிக்குப் போய் அந்தக் குழந்தைகளோடு மதிய உணவு உண்டு வந்தோம்...
அங்கே போய்வரும் போது, அந்த நிறுவனத்தை உருவாக்கிய எங்கிருந்தோ வந்த அந்த ஆங்கிலச்சீமாட்டியும்,....இந்த ஏற்பாடுகளைச் செய்த என் மாமாவும்,...அவர்களின் மனதில் நீங்கா இடம் கொண்ட என் மாமியும்,...நினைவில் வருகிறார்கள்...
காது கேட்காமலும்,வாய் பேச முடியாமலும் தவிக்கிற அந்த அப்பாவிப் பிள்ளைகளுக்கு...ஊக்கமும் வாழ்வில் தைரியமும் கற்றுக் கொடுக்கிற அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியப்பெருமக்களின் கனிவான உபசரிப்பே உள்ள மெல்லாம் நிறைந்து நிற்கிறது