செவ்வாய், 27 மே, 2014

சைலப்பன் அண்ணாச்சியும்,அம்பாஸ்டர் காரும்


 

        வழக்கமா எங்க வீட்டுல உள்ள கார்களை, பழுது நீக்கி சரி பண்ண திருனவேலி ஜங்சன் பேராச்சி பட்டறைக்குத் தான் அனுப்புவது வழக்கம். எங்க வாப்பா காலத்திலும், இப்பவும் அதுதான் நடைமுறையில் உள்ளது..

பேராச்சி திருநெல்வேலி ஜங்சன் பிரபு ஹோட்டலுக்கு அடுத்து ஒர்க் ஷாப் வச்சிருந்த நேரத்திலும்,அப்புறம் திருநெல்வேலி வடக்கு பை-பாஸ்  சாலையில் அதை மாற்றிய நேரத்தில் இருந்தும்,




எங்க கார்கள்  அந்தப்பட்டறைக்கே சென்று புதுப்பிக்கப்பட்டு, அல்லது பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

இப்போ பேராச்சி சின்னையா   இல்லை. கடும் உழைப்பாளியான அவர் காலமாகி விட்டார்.ஆனால் அந்த பேராச்சிப் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்,அந்த பழைய ஒர்க்ஷாப் பக்கம் தங்கள் தொழிலை செய்து வருகிறார்கள்.

நேற்று முந்தினம் மைத்துனர் ஹைதர் அலி சென்னையில் இருந்து செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது "உங்களுக்கு விஷயம் தெரியுமா?.......அம்பாஸடர் கார் கம்பெனிய மூடியாச்சு "  அப்படீன்னாம்.

"ஏதாவது ஸ்ட்ரைக்கா இருக்கும்",என்றேன்.
"இல்லங்க,பிளான்டையே குளோஸ் பண்ணிட்டான்.இனி அம்பாஸ்ட்டர் கார் தயாரிப்பு இருக்காது"என்ற சொல்லும் போது மனதை என்னவோ பண்ணியது.
அடடா....இப்படி மூடிட்டாங்களே....என்று மனசில் தோன்றியது..
முதலாவதாக கார் ஓட்டப்பழகிய அம்பாஸ்டர் கார்,அப்புறம் வாப்பா,சின்னவாப்பா,மற்றும் குடும்பத்தில் பல வீடுகளில் நின்ற அந்தக்கார்களின் எண்களும்,நிறங்களும் அதனை ஒட்டிய காரோட்டிகளும் நினைவில் வந்து போனார்கள்.

நீண்ட தூரங்களுக்கு அம்பாஸ்டர் கார் ஓட்டுவது தனித்தன்மை கொண்டது.
காரின் தரம் அதன் இயக்கத்தைப் பொருத்ததே. எத்தனை கார்கள் சந்தையில் புதிதாக வந்தாலும் அம்பாஸ்டர் கார்களின் அந்த "மோரிஸ் ஆக்ஸ் போர்டு"  மாடலுக்கு நிகரான "பழைய"  அழகை,கம்பீரத்தை வேறு எந்த மாடல் கார்களிலும் பார்க்க முடியாது.
எழுபது வருஷமாக முன்பக்க கிரில் மட்டுமே பெரும்பாலும் புறத்தோற்றத்தால் மாறும்.ஆனால் காரின் பின் பக்கம் "லேன்ட் மாஸ்ட்டர்" காலத்துக்கு பிறகு ஒரே மாதிரி தான்..

பெட்ரோல் என்ஜின்,அப்புறம் டீசல், கேஸ், என்று எல்லா வகை என்ஜின்களும் அதுக்கு மாட்டிப் பார்த்துவிட்டார்கள்...
கடைசியில் இசூசு என்ஜின் ஓரளவு நன்றாகவே இருந்தது...ஆனாலும் அந்த என்ஜினை வச்சிக்கிட்டு வேகத்தில் பிக்கப்பில் குட்டிப்பையன் "மாருதி ஸ்விப்ட்"பக்கம் நெருங்கக் கூட முடியவில்லை...

 நேற்று எங்க அம்பாஸ்டரை எடுத்துக் கொண்டு பேராச்சி பட்டறை சைலப்பன்-ராமகிருஷ்ணனிடம் காட்டப்போனேன்...
விஸ்வநாதன்-ராமமூர்த்தி மாதிரி  சைலப்பன்-ராம கிருஷ்ணன் இரட்டையர்கள் தான் தமது கைவண்ணத்தை எங்கள் வண்டிகளில் காட்டுவார்கள்.
அவர்கள் வண்டியை சரிசெய்தால் தான் மனதுக்கு ஒருவகை திருப்தி ஏற்படும்.

நான் போனபோது ராம கிருஷ்ணன் எங்கோ வெளியில் போய் இருந்தார்.

தமது தலையை வண்டியின் பானட்டுக்குள் சொருகி, பலவகை நம்பர்கள் கொண்ட ஸ்பானர்களால் "சைலன்சரை" முறுக்கிக் கொண்டு, வெளியே தலை காட்டிய  சைலப்பன் அண்ணாச்சியிடம் ,"அண்ணாச்சி,அம்பாஸ்டர் கார் கம்பெனிய மூடிட்டாங்க தெரியுமா' என்று கேட்டேன்.
 
 அவர் "என்ன  ஐயா சொல்றீங்க?" ...என்று பதறிய படி திரும்பி என்னிடம் கேட்டார்.

"ஆமா...அண்ணாச்சி.....நஷ்ட்டமாம்.மூடிட்டானுங்க.." என்றேன்.
கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டார்..அப்போது அவரின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.....
கொஞ்ச நேரம் ஒன்னும் என்னிடம் பேசவில்லை...
அப்புறம் சொன்னார்..."நான் பத்து வயசில் வேலைபார்க்க வந்தேன்.எனக்கு சாப்பாடுபோட்டது,என் வீட்டக் கட்ட உதவி செய்ய்தது,பிள்ளைகளை படிக்க வச்சது,கல்யாணம் கட்டிக் கொடுக்கவச்சது எல்லாமே அம்பாஸ்டர் கார் வேலைதான்"....என்றார்.

"இனி அது புதுசா வரவே செய்யாதா? ?...." என்று அப்பாவியாக ஏக்கத்துடன் மீண்டும் கேட்டார். "அண்ணாச்சி....உங்கள மாதிரி வேலை தெரிஞ்ச ஆட்கள் இருக்கும் வரை அம்பாஸ்டர் திருனவேலியில ஓடிக்கொண்டு இருக்கும்" என்றேன்.

சைலப்பன் அண்ணாச்சி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவர் கண்களுக்கு கீழே ஸ்பானரோடு ஒட்டிக கொண்டு இருந்த  கருப்புஆயில் பசை அவர்  முகத்தில் ஒட்டிக கொண்டது...

வழக்கமா....கலகலப்பாக என்னிடம் பேசிக் கொண்டே வேலைகள் செய்யும் சைலப்பன் அண்ணாச்சி....நான் புறப்படுகிறவரை ஒண்ணுமே பேசவில்லை...

அம்பாஸ்டர் கார் கம்பெனியின் மூடல் அவரை அவ்வளவு பாதித்திருந்தது...

நான் ஒரு சைலப்பனைத்தானே பார்த்தேன்....நாட்டில் அம்பாஸடர் காரோடு காதல் கொண்ட எத்தனை சைலப்பன்களோ?
 
.....( இந்தியர்களோடு இணைந்து கடந்த 70 ஆண்டுகளாக பயணித்த அம்பாசிடர் காரின் சகாப்தம் முடிந்தது
இந்திய சாலைகளில் கடந்த 70 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த அம்பாசிடர் கார் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. அந்த காலத்தில் கார் என்றால் அது பணக்காரர்களின் அடையாளமாகவே இருந்தது இந்த கார். தற்போது விதமான,விதமான கார்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், மிக பழமையான அம்பாசிடர் காரின் மவுசு மெல்ல, மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், அரசாங்க கார் என்ற பட்டப்பெயருடன் செல்ல பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டுவிட்டு சொகுசுகார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசிடர் கார் உற்பத்தி நேற்று முன் தினமும் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அம்பாசிடர் கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
'என்ன இருந்தாலும் அம்பாசிடர் கார் போல வருமா' என்று சொன்னவர்களின் நீங்களாக இருந்தால் அதன் நினைவை பகிர்க..என்ற முகநூல் செய்ய்தியைப் பார்த்ததும் என் மனதில் பட்டது....).
`

ஞாயிறு, 18 மே, 2014

எங்க போச்சோ?



“நெய்யும் தொழிலே செய்யும் தொழில்”, என்று வாழ்ந்தவர்கள் மேலப்பாளையம் மக்கள்.அதுவும் 1990ஆம்  ஆண்டு வரை என்றால் இளைய தலைமுறை ஆச்சரியமாகத் தான் கேட்கிறார்கள்.

என்ன செய்ய ? இன்றைக்கு தொழில்கள் பல இங்கே இல்லாமல் போய் விட்டதே.

ஊருக்குள்ளே மண்பானை சட்டி விக்கிற கடைகள் கொடிமேடையிலும்,கொட்டிக் குளத்திலும் இருந்தன. இன்னைக்கு குறிச்சியில் ஏதோ கூட்டுறவு சங்கம் அமைத்து அந்தத் தொழில் குற்றுயிரும், குலை உயிருமாக உள்ளது.

காரணம்,விறகு அடுப்புக்கள் மறைந்து,கேஸ் அடுப்புக்கள் மட்டுமே கதி என்று ஆகிவிட்டதும்,பொறுமையாக சமையல் செய்ய நேரமில்லாததும்,அப்புறம் சமைச்சி முடிச்சு சட்டி பானைகள் பூசி கழுவி வைக்க மலைச்சலால் வந்த சோம்பலும் சேர்ந்து வந்ததுதான் என்று ஆகிவிட்டது.  மண்சட்டி சமையல் சோறு என்று கடைகளில் போர்டு மாட்டி ஜாம ஜாமுன்னு யாபாரம் பிச்சி எடுக்குது.

“ரா வேளை” கல்யாணங்களில் அப்பாவித்தொழிலாளர்கள் தலைச்சுமையாக பெட்ரோமாக்ஸ் லைட் பிடித்து வருவார்கள்.மாப்பிளை ஊர்கோலத்தில் அவை ஒரு அங்கமாக இருந்துச்சு. ராக் கல்யாணங்கள் இல்லாது போனதால், அவங்க தோளிலும் இல்லாமல் போயிட்டுது. இன்னைக்கு பழைய பெட்ரோமாக்ஸ் லைட்டை ரிப்பேர் பார்க்கக் கூட ஆட்கள் இல்லை.

அதுக்குண்டான சாமான்களும் இல்லை. “பதினாலு லாம்பு” என்று ஒரு சிமினி மாட்டிய மண்ணெண்ணெய் விளக்குகள், பல வீடுகளில் இருந்துச்சு. அதுங்களுக்கு உண்டான சிமினி, திரி என்று எதுவும் மார்க்கட்டில் இல்லையே.அதனால் அதுகளும் இல்லாமல் போய்க்கிட்டு இருக்கு.

நட்டி விளக்குகள் அதுவும் இல்லை.

சைக்கிள் ரிப்பேர் பார்க்குற ஆட்கள் கூட இன்னைக்கு ரன்ண்டு மூணு பேர் மட்டுமே இருக்காங்க.

ஓவியர் மைதீன் மாமா எனக்கு தந்த கியர் பாக்ஸ் “ராலி” சைக்கிளை ரிப்பேர் பார்க்க ஆள் இல்லை.

சாவி கொடுத்து ஓடுகிற, மணி அடிக்கும் கிடியாரத்தை ஒக்கிடவும் ஆள் இல்லை. சாவி கொடுத்து ஓடுகிற ரிஸ்ட் வாட்ச் கதையும் அதுதான்.

எங்க வீட்டில் உள்ள பழைய வால்வு ரேடியோ பெட்டியை, "ரிப்பேர் பார்ப்பீங்களா?"ன்னு யார்கிட்டயாவது கேட்டால் "வேற ஆளப் பாருங்க".அப்படீங்குறாங்க..

சமீபத்துல எங்க வீட்டில் இருந்த பழைய "நேசனல் பானா சானிக்" கேசட் டேப் ரிக்கார்டரை ஓட வைக்க "மோட்டாரில் ஒரு பெல்ட் மாட்டிக் கொடுப்பா"ன்னு நம்ம கலீல் கிட்ட கேட்டால்,வேற யார்ட்டயாவது "அத"க் காட்டுங்களேங்கான்.
ஆல் இண்டியா ரேடியோ செய்தி கேக்கிற ட்ரான்ஸ்சிஸ்ட்டர் "கை ரேடியோ"வ சரிக்கட்டித்தர யாருமே இல்லை.கேட்டா "நாங்க செல்போன் ரிப்பேர்தாம் பாக்றோம்"ன்னு சொல்ற பதிலா கேட்டு,பல கடைகளில் ஏறி  இறங்கியாச்சு.

அம்மிக் கொத்தனுமா? என்று கேட்டு  வருகிற கல் ஆசாரிகள், இன்னைக்கு தெருத்தெருவாக யாரும் வாரதில்லை.

ராத்திரி வேளைகளில், கொடிமரம் பக்கம் அம்மன் கோவில் முகப்பில், நட்டிவிளக்கு பந்த வெளிச்சத்தில், போர்வை துப்பட்டியில் இருந்து சீட்டித்துணி பாப்ளின் சட்டை, நேரியல், லேஞ்சி வரை ஏலம் போட்டு வித்த யாபாரிங்க யாரும் வர்றதில்லை.

ஒரு காலத்தில் “சக்கரை காடி” அப்படீன்னு ஒன்ன காய்ச்சி வீடு வீடா 'வெளம்புன' ஒரு குடிப்பு, இன்னைக்கு இல்லாமலே ஆகி விட்டது.

புள்ள பெத்த சீதேவிகளுக்கு கொடுக்க “காயம்” காய்ச்சிறதும் எங்கேன்னு தேட வேண்டியது உள்ளது.  

40 மருந்து சாமான்கள் சேர்த்து ஆக்கிய மருந்துச்சோறு இன்னைக்கு 7 சாமான்களோடு “பண்டாரிகள்” ஆக்குகிறார்கள். பண்டாரிகள் என்றால் அந்தக் காலத்தில் சாப்பாடு தயாரிப்பவர்கள் என்றும் அர்த்தமும்  உண்டு.

மருந்துக் களி “பசியாற” பல வீடுகளில் மாசம் ரண்டு தடவையாவது கொடுப்பார்கள்.இன்னைக்கு பிள்ளைங்க கிட்ட இதப்பத்தி மூச்சு விட முடியல்லை.பசியாறன்னா என்னா?...... அது நாஸ்ட்டா வாகிப்போனதால் அப்படிக் கேக்காக.

மழைக்காலம் வந்துவிட்டால் சுக்கு,  மிளகு, திப்பிலி, அக்கரா, இஞ்சி, வேப்பிலை கொழுந்து சேர்த்து,அத ஒன்னா,மை போல  அரைச்சி.சாறு எடுத்து, "விஷ கஷாயம்" தருவார்கள். அதை பிள்ளைகளுக்கு தம்ளர் மூலம் வாயப் பெழந்து  ஊத்தியோ,மூக்கைப் பொத்தி  சங்கில் வைத்தோ “பூட்டி” யோ விடுவார்கள். இன்னைக்கு பல வீடுகளில், சங்கே இல்லை. காலுக்குள்ள அமுக்கி போட்டு கொடுக்கிற, வித்தைகள் தெரிஞ்ச பெத்தும்மாமார்களும் இல்லை.

நம்ம ஊரில் மார்க்க புஸ்தகக்கடைகள், தொப்பிக் கடைகள், மூணு நாலு இருந்துச்சு, இன்னைக்கு யார் புண்ணியத்திலோ ஒன்னும் இல்லாம போயிடுச்சு.பெருநா ராவைக்கு மட்டும் “ஏதோ கொஞ்சம்”,தொப்பி யாவாரம் அங்க இங்க நடக்குது.

கீழக்கரை, காயல் பட்டணம் தொப்பி போடுரவங்களை, லட்சம் பேர் உள்ள இந்த ஊரில், விரல் விட்டு எண்ணிவிடலாம்.

முந்திலாம் ஒரு விருந்துக்கு போறதா இருந்தாலும், தொப்பி போடாம யாரும் போகமாட்டாங்க.காலத்தில் கோலம் விருந்தில் “பறிமாறுகிற”, பிடிச்சிக் கொண்டுவந்த தம்பி மார்கள் “பாய்” என்றுதான் கூப்பிட்டு “சோத்த வைக்கவா ?,காய ஊத்தவா ? ”ன்னு கேக்கிறான்.

மத்தவங்கள “பாய்”ன்னு கூப்பிடுகிற அந்தப் பையன்கள், தம் கூட பிறந்த அண்ணன் தம்பி, மாமன் சித்தப்பன,ஏன் மச்சான  பாய்ன்னு ஏன் கூப்பிட மாட்டேங்கானுவன்னு, பிடிபட மாட்டேங்குது.அவங்களையும் கூப்பிட்டா தெரியும் அந்த வார்த்தையின் வலி. எங்கேயோ இருக்கிற உருதுக் காரங்களின் கலாச்சாரங்களை ஊரில் இறக்குமதி பண்ணிட்டாங்க.

காக்கா,பெத்தாப்பா, மாமூட்டுவாப்பா,மாமும்மா,அத்தா,பெரியத்தா,சின்னத்தா,அத்தான்,மச்சான், என்கிற அழகு பாச வார்த்தைகளையே அழிச்சிருவாங்கபோல இருக்கு.

பங்காளிகளா பழகிட்டு இருக்கிற இந்து,கிறிஸ்துவ மக்கள், முஸ்லிம் மக்களை, மாப்பிளை,மாமா சாச்சா, சித்தப்பா,தாத்தான்னு தான், கூப்பிடுறாங்க.இவம்மட்டும் புதுசா “பாய்”அப்படீன்னு சொல்லப் படிச்சிருக்கான்.

நான் சொல்ல வந்த கதைக்கு வருகிறேன்.

இருநூறு வருஷத்துக்கும் மேலா ஊருக்கு சோறு போட்ட நெசவுத்தொழில் இன்னைக்கு அழிஞ்சே போய்விட்டது....சரி அந்த காக்குழி,, தறி, பாவு, ஓடம், தாரு,புல்லு,கஞ்சிப்பை,கலைக்கா கம்பு,பண்ணு,ராட்டு,குதிரை,தள்ளு,பூட்டு,அலாம்பு கம்பு,கப்பி,மிதி,புடுத்தலை,சூவை,ஏதாவது ஊரில் இருக்கா? அப்படீன்னு தேடினா ஒண்ணுமே கிடைக்கலே.

நேற்று, என் மச்சினன் வகையில், மொன்னி வீட்டு தெரு நடுவே, ஒரு கல்யாண வீட்டுல சாப்பிடப் போகும் போது,”கருமமே கண்ணாயினார்”கதையில் ஒரு பெத்தாப்பா ராட்டுல,பீடியை சுருட்டிக்கட்ட,  தார் திரிச்சிக்கிட்டு இருந்தார்.. அதைப்பார்த்ததும் நான் நின்னுட்டேன். அப்பறம் அத "செல்லுல", படமா எடுத்துகிட்டு வந்தேன்.

எம் மருமக்கள் “மாமா....எதுக்கு இத எடுக்கிய?” அப்படீன்னு வேறு கேட்டுக் கிட்டாங்க...

நான் சொன்னேன் “ என்ன செய்ய ? இதையாவது பதிஞ்சு வைப்போமே”