புதன், 31 மே, 2017

துபாயில் ......வாழ்க்கை கற்றுக் கொடுத்தவர்கள்.


                              ஐக்கிய அரபு அமீரகம்..துபாய் ETA அஸ்கான் தலைமையகம் .

தமிழர்கள் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் பணியிடங்கள் தந்து இறைவன் வாழ்வளித்த நிறுவனம்.
அதற்கு அடிப்படையாக இருந்தவர்கள் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான். அவர் தம் இளவல் செய்யது எம்.ஸலாஹுத்தீன் முதலான பெருமக்கள் என்றால் மிகையில்லை.மாபெரும் உழைப்பாலும் எண்ணிலடங்கா தியாகத்தாலும் உருவான ஒரு நிறுவனம்.அதற்கு அந்த இரு பெரும் குடும்ப வாரிசுகளும் துணை நின்றார்கள்.
பெரியவர் அப்துல் ரகுமான் அல்-குரைர் என்கிற அமீரகப் பெரு மகன் அவர்களின் வெற்றிக்கு பக்க பலமாக விளங்கினார்.
எத்தனை பேரை பணி நியமனத்திற்கு சிபாரிசு அனுப்பினாலும் கொஞ்சம் கூட மருதலிக்காமல் , அத்தனை பேர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கி ,படித்த பட்டதாரிகள் மற்றும் பணியாட்களின் குடும்பங்களின் இன்னல்கள் நீக்கியவர்கள்.
அதனால் தமிழகதின் பொறியியல் கலை, அறிவியல் பட்டதாரிகள் பல்லாயிரம் பேர்கள் வளம் பெற்றார்கள்.

ETA என்றால் E எல்லாம் T தமிழ் A ஆட்கள் என்று பிறர் சொல்லிக் காட்டுவார்கள்.
ஒருகாலத்தில் வீடு வாசல், மனை, தோட்டம், தாய், தங்கை, தமக்கை நகைகள் இவற்றை அடகு வைத்தோ விற்றோ , வட்டிக்கு கடன் பெற்றோ தான் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற முடிந்தது...அதில் ஏமாந்து நொந்து மாண்டு போனவர்கள் பட்டியல் எண்ணிலடங் காதது..
என்ஜினியரிங் படித்து விட்டு பாலைவன கொடும வெய்யிலில் ஒட்டகம் மேய்க்க அனுப்பப்பட்டு ஏமாந்து இன்னல் பட்ட இளைஞர் கூட்டங்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள்.
ஆனால் ETA என்கிற கம்பெனியின் வந்த பிறகு தான் உரிய வேலைவாய்ப்புக்கள் படித்த பட்டதாரிகளுக்கு கிடைத்தது...வருடத்திற்கு ஒருமாத விடுமுறை கிடைத்தது. அதற்கு முந்தியெல்லாம் 2 வருடங்களுக்கு பின்னரே தாயகம் வர முடிந்தது.
பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்க்கவே இயலாதது.
இவர்களால் பலன் பெற்றவர்கள் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ,கடையநல்லூர், தென்காசி ,மற்றும் கீழக்கரை ,காயல் பட்டினம் ,அதிராம் பட்டினம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர்கள, சேலம் சென்னை திருச்சி ஊரைச்சேர்ந்தவர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.
அவ்வாறு வேலை வாய்ப்புகள் கிடைத்த இளைஞர்கள் , தமது வருவாயைக் கொண்டு தாயகத்தில் தம் இல்லத்தை தூக்கி நிறுத்தினார்கள்.தமோடு பிறந்த பெண் மக்களை வாழ வைக்க திருமணம் செய்து கொடுத்தார்கள்.
வேலை வாய்ப்புக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களுக்கு,அறக்காரியங்களுக்கு, ஆதரவற்ற அனாதைப்பிள்ளைகளை பாது காத்து வளர்க்கும் அன்பு இல்லங்களுக்கு ,பள்ளிவாசல்களுக்கு,சமயநல்லிணக்கம் பேணும் சகோதர சமுதாய பள்ளிக்கூடங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் .
நான் தற்போது தலைவராயிருக்கிற மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்கு அவர்கள் தான பண உதவிகள்....நினைத்துப்பார்க்க இயலாதது.
கலீபா அபூபக்கர் சித்தீக் வகுப்பறைக் கட்டிடம்,யூசுப் சுலைகா புகாரி ஆலிம் கட்டிடம் ,கம்ப்யூட்டர் சாதனங்கள்,, பள்ளியை பாது காத்திட காம்பவுண்ட் சுவர்,பள்ளிக் குழந்தைகள் செல்ல மினி பேருந்து, இன்னும் பள்ளி வளர்ச்சிக்கு கேட்டபோதெல்லாம் நிதி தந்தார்கள்.
1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார்கள் எங்கள் கல்வித்தந்தை சேர்மன் MAS அபூபக்கர் சாகிப்..
" என்ன மீரான்.... சேர்மனைக் கூட்டிக்கிட்டு ....என்ன சொல்ல வந்து இருக்கீங்க.?".என்று துவக்கம் செய்வார்கள்.
என் மீது அவர்கள் கொண்ட பிரியம் சொல்லில் அடங்காதது. 
என் மூலமாக அவர்கள் செய்த பணிக்கு அவர்களின் செயலாளர் வழக்கறிஞர் ஜலால் பெரிதும் உதவிகள் செய்துள்ளார்.

என் மீது கொண்ட அன்பால் மேலப்பாளையம் தக்வா ஜமாஅத் பள்ளி எதிரில் உள்ள அம்பிகா புறம் ஆதி திராவிடர் பள்ளிக்கு ஆறு வகுப்பறைகள் கட்ட என் மூலம் நிதி உதவி செய்ய்தார்கள்.
திருநெல்வேலி முஸ்லிம் அனாதைநிலையம் ,காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் தொழிற் பயிற்சிக்கூடம், வல்லநாடு தொழிற் பயிற்சிக்கூடம், சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி, எட்டையபுரம் அல் முபீன் உமறுப்புலவர் அன்பு இல்லம், சக்கரைக்கோட்டை அன்பு இல்லம், நாகூர் கிரசென்ட் பள்ளி, குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் புதிய பள்ளிவாசல் உருவாக்கம் , கொடைக்கானல் பள்ளிவாசல், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பள்ளிவாசல் , திருநெல்வேலி ஆலங்குளம் பள்ளிவாசல் என்று பட்டியல் நீண்டு செல்லும்.
நாட்டின் தலைநகரில் புது டெல்லியில் இஸ்லாமிக் சென்டர் உருவாக்க இரண்டு கோடிகளுக்கும் மேலாக நிதியளித்துள்ளார்கள்.அவரது இளவல் செய்யது சலாஹுத்தீன் அவர்களும் அவ்வாறே நிதி வழங்கியுள்ளார்கள்.
இன்னும் பலப்பல உதவிகள்....இயக்கங்கள், நாளிதழ், மாத இதழ்கள்,இலக்கியம் என்று உள்ளது.
அவற்றைப்பற்றி எல்லாம் நான் தனிப் புத்தகமாக எழுத வேண்டும்.
நாட்டில் அறக்காரியங்கள் பல செய்ய கீழக்கரை KVMஅப்துல் கரீம் காக்கா ,PSM.அப்துல் காதர் காக்கா உடன் இருந்து ஒத்துழைத்தார்கள்.
அந்தப்பெருமகன் உலாவிய இடத்திற்குச்சென்று இரண்டு சந்திப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன்.
ஒன்று அங்கே இருக்கிற அருமையான களப்பணியாளர்கள், நிர்வாகிகளின் சந்திப்பு,மற்றொன்று Iman Culturals IMAN கல்ச்சுரல் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்திப்பு....
அவற்றை ஒவ்வொன்றாக பதிவிடனும்...

வள்ளல் அப்துல் ரகுமான் அவர்கள் கொண்ட அன்பினைப்போலவே அவர்களின் இளவல்கள் MDவாப்பா செய்யது M. சலாஹுத்தீன் அவர்கள், சின்னவர் சீனாதானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் எனக்குத் தருகிறார்கள்..
அவர்களின் செயலாளர்களும் அவ்வாறே.

நோன்பு காலத்தில் துபாய் வெய்யில் கொளுத்தி எடுக்குது.
ஆனாலும் அங்கே இருக்கிற அன்பு உள்ளங்களால் மனதும் உள்ளமும் உடலும் குளிர்சசியாகவே உள்ளது

(தொடர்வோம்)