ஞாயிறு, 31 மே, 2020



எங்கள் வீட்டில் என் தந்தை காலத்தில்... அடிக்கடி கேட்ட பெயர்.
சிங்கம்பட்டி ராஜா TNS. முருகதாஸ் தீர்த்தபதி என்கிற அந்த கடைசி ராஜாவின் பெயர் .
தென்னாட்டு வேங்கை நல்லகுத்தி புலிக்குட்டி சிவசுப்ரமணிய கோமதி சங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர TNS முருகதாஸ் தீர்த்தபதி ராஜா என்கிற நீண்ட கம்பீரமான பெயரைப் பெற்றிருந்தார் அவர்.
சிலவேளைகளில் ஊத்து மலை ஜமீன்தார்கள் இருதாலய மருதப்ப பாண்டியன், SM. பாண்டியன், தங்க ராஜ் பாண்டியன்...இப்போதுள்ள முரளி ராஜா என்று பேச்சுக்கள் நடக்கும்.
என் தந்தையை பெற்றெடுத்த எங்கள் பெரியவாப்பா LKS. முகம்மது மீரா முகைதீன் தரகனார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் , 14 கிராமங்களின் நஞ்சை புஞ்சை நிலங்களுக்கு உரிமையாளராக இருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள
சிங்கம்பட்டிக்கு அருகில்...
இன்றைய மணிமுத்தாறு அணைக்கட்டு நீர்தேக்க பகுதியில் உள்ள நிலங்களும், அதனைத்தாண்டி வைராவி குளம் பகுதியிலும் சில ஏக்கர்களில் நிலங்கள் எங்கள் தாத்தாவின் சொந்தமாக இருந்தன.
அதனால் அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்கள்.
அப்போது முதல் சிங்கம்பட்டி அரண்மனை எங்கள் குடும்பத்தோடு தொடர்புடையதாக இருந்தது.
அதுவும் இவர்களது தந்தை 30 ஆம் ராஜா காலம் தொட்டு இருந்தது.
எங்கள் வாப்பா.... ஒரு முறை புதிய ராஜ்தூத் பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு நேராக சிங்கம்பட்டி ராஜாவைக் காண்பதற்காக என்னையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
அப்போது நான் சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன்.
அது தான் எனக்கு அவருடனான முதல் சந்திப்பு.
அந்த பிரமாண்ட அரண்மனைக் கட்டுமானம் கொண்ட...மாளிகையை, அதன் தேக்கு மரப்படிகளை, முந்தைய ராஜாக்களின் படங்ளை, அவர்கள் பயன்படுத்திய பல்லாக்குகளை, வாள் மற்றும் கலைப்பொருட்களை கொஞ்சம் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என் தந்தை அவரகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்...
"யாரங்கே....பண்ணையாருக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாருங்கள்"...என்று அழைக்க கொஞ்ச நேரத்தில் பால் வந்தது.அதுவும் பிரமாண்ட கண்ணாடிக் குவளையில்...
எனக்கு நாடோடி மன்னன் படத்தில் MGR பழ ரசம் அருந்தும் குவளை கண் முன்னே வந்தது.
என் தந்தையுடன் பேசிக்கொண்டே...
என்னை உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்.
" உங்க மகன்...எங்கே படிக்கிறார்?" என்கிற விபரம் கேட்டார்.
நான் எழுந்து நின்று அதற்கு பதில் சொன்னேன்.
"சபாஷ் "....என்றார்.
அவர் இலங்கையில் இளமை க்காலத்தில் கல்வி கற்றக் காலங்களைச் சொல்லிக்காட்டினார்.
உங்களுக்குத் தமிழில் என்னவெல்லாம் தெரியும் ? என்று அவர் கேட்க...
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியதைச் சொன்னேன்.
"ஆஹா....பிரமாதம் "என்றார்.
அவர் ஜாதகம், முன் ஜென்மம் போன்றவற்றில் மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கொஞ்சநேரம் என்னை உற்று நோக்கினார்....பின்னர் பல விஷயங்கள் என்னைப்பற்றி என் தந்தையிடம் சொன்னார்.....அவை எனக்கும் என் தந்தைக்கும் உரியவைகளாகும்.
" இவர் கல்வி, கலை, இலக்கியம், நாடகம் தொடர்பானவர்... ஊருக்கு உரியவர்.அதிகம் படிக்க மாட்டார்...ஆனால் படித்துக்கொண்டே இருப்பார்" என்று.... எனது 21 ஆம் வயதில் சொன்னதை மட்டும்
வெளியே சொல்ல முடியும்.
இன்னும் நிறைய பேசினார்.
என் தந்தை அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டார்.
அவர் ஒரு ஞானி போல பேசிக்கொண்டு இருந்தார்.
ஆமாம்...." மேலப்பளையத்தில் பாத்திமா தர்கா என்று இருப்பது தெரியுமா ? " என்று கேட்டார்....நான் விழித்துக்கொண்டு நின்றேன்.
"ஆமாம்....இருக்கிறது " என்று என் தந்தை சொன்னார்கள்.
அதற்கு அவர் அந்தப் பாத்திமா ஒரு பெண் ஞானி என்று சிலவற்றை சொன்னார்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டு அரண்மனையில் உணவு முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஊருக்குப் புறப்பட்டோம்.
1988 ஆம் ஆண்டில் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ...நாடு திரும்பிய பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவராகவும் திகழ்ந்த பன்னூல் ஆசிரியர், கல்லிடைக்குறிச்சி TMP என்கிற கல்லிடை TM.பீர்முகம்மது அவர்களின் பேத்தி திருமணத்தில்.... என்னைப்பார்த்துவிட்டு அழைத்தார்.
அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். " உட்காருங்க... தலைவரே " என்று என்னைப்பார்த்து சொன்னார்.சுற்றி நின்றவர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
இவர்... LKS மகன் என்று TMP அறிமுகப்படுத்தினார்.
" யாரு...இவரா ? இவருக்கும் எங்க அரண்மனைக்கும் தலைமுறைகள் தொடர்பு ".....என்று அவர் சொல்லி முடித்தவுடன்...பக்கத்தில் நின்றவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
எப்போதாவது....அவரைப்பார்க்கச் செல்வேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மேலப்பாளையம் பரோடா வங்கிக்கு சொந்த அலுவலாக வந்தார். நான் வழக்கம் போல அவர் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
எங்கள் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவிற்கு அழைத்தேன்.அதற்கு வருகை தர அங்கேயே ஒப்புதல் பெற்றேன்.
பள்ளிக்கூடத்தில் விழா நடந்து கொண்டு இருந்தது.
திடீரென....என்னைப்பார்த்து
" செல்வா " என்றார்.
எங்கள் சேர்மன் MAS. அபூபக்கர் சாகிப் ..."அவன் பேர் மீரான் முகைதீன் " என்றார்.
தெரியும்.
" பாத்திமா தர்காவுக்கு போகணும் வா " ...என்றார்கள்.
நான் காஜா நாயகம் தெரு மையவாடியின் கிழக்கு பகுதியில் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.
காருக்குள்ளே இருந்த அரச தலைப்பாகையை கட்டிக்கொண்டு உள்ளே சென்றார்...என்னை வெளியே இருக்கச் சொல்லிவிட்டார்.
நீண்ட நேரத்திற்குப்பின்னர் கதவைத்திறந்து வெளியே வந்து... புறப்படுங்கள் ...என்றார்.
பல்வேறு சந்திப்புக்கள்...
அவருடனான உரையாடல்கள்
இனி நடக்கப்போவதில்லை.
உயர்ந்த அரிதான மனிதர்.அதுவும் சிங்கம்பட்டி ராஜ குடும்பத்தில் கடைசி மன்னராக அரசால் அன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
அவரிடத்தில் சென்று பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் அமைக்க இடங்கள் கேட்டபோதெல்லாம் கைகாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்லியவர்.
சிங்கம்பட்டி ஊர் பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைந்துள்ள நிலம் அவர் கொடுத்த இடங்கள் தாம்.
" எங்கள் சமஸ்தானத்தில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவர்கள் என் மக்கள்.....அவர்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் " என்பார்.
அடிக்கடி மரணம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர்
24.5.2020 அன்று இறந்து போய்விட்டார்.
25.4.2020 அன்று நோன்புப்பெருநாள்...மதியம் ஊரிலிருந்து புறப்பட்டுச்சென்று
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு ...வந்தேன்.
வாழ்க சிங்கம்பட்டி ராஜா புகழ்.

ஞாயிறு, 24 மே, 2020

திருநெல்வேலி மேலப்பாளையம்...
எங்கள் தெரு....
அதன் வயது 125 ....
ஒரு காலத்தில் அதுக்குப்பேர்
ஐயர் தெரு...
ஐயர் தோட்டம்....
அங்கே மேற்கே பிள்ளையார்
கோவிலும் .....
கிழக்கே கந்த கோட்டமும்
இன்றும் உள்ளன.
1895 ஆம் ஆண்டு
ஸ்ரீசுப்பய்யர் என்கிற பெரியவரும்
இன்னும் 2 நபர்களும்
சேர்ந்து என் தந்தையின்
பாட்டனார் உள்ளிட்ட
3 பேர்களிடம்
தெருவை விற்றுவிட்டு
குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே...அக்ரகாரம் அமைத்தார்கள்....
அது ஒரு பெரிய வரலாறு.
எங்கள் வீட்டிலிருந்து 150 அடி தூரத்தில் உள்ள இந்தக்கோவில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அந்தக்கோவிலின் முகப்பு பார்த்துத்தான்
முக்கிய சாலைகளுக்குச் சென்று கொண்டுள்ளோம்...
முஸ்லிம்களைத் தவிர...
வேறு சமூகங்கள் எவரும்
கோவிலைச் சுற்றி இல்லை.
அந்தப் பெரிய ஐயர் அவர்கள் ...நிலத்தை விற்பனை செய்யும் போது எங்கள் முன்னோர்களிடம்....
" இந்தக்கோவிலுக்கு, எந்த மரியாதைக்குறைவும் வாராமல் பார்த்துக்கோங்க...."
என்று கண் கலங்கிச் சொன்னதை ,
எங்கள் முன்னோர்கள் தொடர்ந்து
எங்களிடம் சொல்லிவைத்துச் சென்றுள்ளார்கள்...
அது இன்றும் தொடர்கிறது.
இந்தக் கோவிலுக்குப் பின்னே....50 அடி தூரத்தில் பள்ளிவாசலும் அமைந்துள்ளது...
மாலை நேரங்களில் எங்கள் குடும்ப மூத்தவர்கள்,
முஸ்லிம் குடும்பங்களைச்
சேர்ந்த
பெரியவர்கள், இளைஞர்கள்
இங்கே கூடுவது வழக்கம்.
எங்கள் தெருவின் வரலாறு..... மதநல்லிணக்கத்தை, பிறர்க்கு சொல்லிக்காட்டுகிறது.

மேலப்பாளையம் தெருக்கள்....பெயர் மாறிய கதை



எனக்கும் ....எங்க தெரு காரங்களுக்கும் ...லெட்டர் , கிட்டர் போட்டா...ஆதியில் அய்யர் தெரு அப்படின்னு போட்டு அனுப்புவாங்க.

அதுக்குப் பொறவு உச்சிலி லெப்பைத் தெருவுன்னு போட்டு அனுப்புவாக.... இப்பம் எல்லாம் புகாரி தங்கள் தைக்கா தெருன்னு நெடுப்பமா தெருப்பேர எழுதி போடுறாங்க.

இப்போ உள்ள சின்ன ஊரார்லாம் "அதென்னங்க உங்க தெருவுக்கு இத்ண தினுசா பேரு? "...அப்படின்னு கேள்வி வேற கேட்கிறாங்க .

" எப்பா எங்க தெருவுக்கு மட்டுமில்லே... நம்ம ஊர்ல பல பேருக்கு பழைய தெருவுங்க பேரு தெரியாது" ன்னு ஒரு போடு போட்டேன்.

"என்னத்த இப்பிடி சொல்றிய?
" பழய பேரா?"....

"ஆமாண்டே...பழய பேர் தான்" .
நம்ம ஊருக்கு அசல் பேரே...மங்கை நகர்.அது திரு மங்கை நகர்ன்னு ஆகி...திருவி...மேல் பாளையம், மேலப்பாளையமா ஆகிப்போச்சு.

சரீ... தெருப்பேருக்கு வா...அந்த விஷயத்த பேசுவோம்.

மஞ்சி வீட்டுத்தெரு...சீக்கா லெப்பை தெரு...அதுக்கு ஆதிப்பேரு ஷேக் அப்துல் காதர் லெப்பை என்கிற சிக்கலார் லெப்பை தெரு மாறி....அப்பிடி ஒரு பேர் இருந்து பஷீர் அப்பா தெருன்னு ஆச்சு.

சரக்கி மூப்பன் தெரு...காயிதேமில்லத் தெரு ஆச்சு.

தண்ட லெப்பை தெரு ஜமாலியா தைக்கா தெருன்னு வந்துச்சு.

பள்ளிவாசல் மூப்பன் தெரு உமறுப்புலவர் தெரு....ஆச்சு.
அதுக்கு நம்ம புலவர் .த.மு.சா.காஜா முகைதீன் காரணம்.

தமிழ் இலக்கியத்தில் சீராப்புராணம் பாடிய உமறுப்புலவர் மீது அந்தக்காலத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது....ஆகவே உமறுப்புலவர் தெருன்னு பேர் வந்துச்சு.....இன்றைய உஸ்மானியா அரபிக்கல்லூரி இருந்த பழைய இடத்தில் இலாஹி பிரஸ் என்று அச்சகம் வைத்து இருந்தார். அன்றைய காலத்தில் அவர் அ.தி.மு.க.இயக்கத்தில் அமைப்பாளராக MGR அவர்களால் நியமிக்கப்பட்டு இருந்தார்..

முகம்மது லெப்பைதெரு, ஹஸ்ரத் பிலால் தெரு...ஆச்சு.அதுக்கு MOA. சுக்கூர் மாமா தான். காரணம்.அதுக்கு தனி கதை இருக்கு.

1976-77 ஆம் ஆண்டுகளில் இசைமுரசு நாகூர் ஹனீபா...பெரியார் பிலாலின் தியாக வாழ்வை கூறுவேன் இதோ...என்ற ஒரு பாடலை இசைத் தட்டாகவெளியிட்டார். பொறவு...அது கேசட்டாக பதிஞ்சு ஊர் முச்சூடும் பரவியது.

இசைத்தட்டு பாட்ட விட...மேடைகள்ள  இசைமுரசு நம்ம...நாகூரனிபா அண்ணன் பாடுறது...ரொம்ப உருக்கமா...கடைசில பிலால் பாங்கு சொல்லி...அப்படியே சரிஞ்சு ரூஹ விடுற சரித்திரத்தை.... முழுசும் பார்த்த மாதிரி இருக்கும்....

இந்தப்பாட்டு வர்றதுக்கு முந்திலாம்...யாராவது ஆலிம்சா மாருங்கதான் ஹஸ்ரத் பிலால் வரலாறை கூட்டங்கள்ல சொன்னாத்தான் உண்டு....

பெரும்பாலான அப்பாவிகள் அப்ப மார்க்கம் மற்றும் நபித்தோழர்கள் வரலாறு  தெரியாத ஆட்களாத்தான் இருந்தாங்க....

அந்தக் கேசட்ல இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுனதக்  கேட்டுட்டு பல பேர்கள் கண்ணீர் பொங்க... விக்கி விக்கி அழுவாங்க...அவ்வளவு ஈடுபாட்டோடு பாடுகிற இசைமுரசுவை பார்த்துக் கொண்டு பாடல்களைக் கேட்பார்கள்.குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் கச்சேரி நடக்கும்.அதுவும் நள்ளிரவுகள் தாண்டியும் நடக்கும்.

மேலப்பாளையத்து ஜின்னா மைதானத்துல 1977 ல முஸ்லிம் ஏழைப்பெண்கள் திருமண வாழ்வு அமைப்புச் சங்கம் நிதி வசதி பெற... சங்கத்துக்கு உதவி செய்ய இசைமுரசு அவர்கள் இலவசமாக ஒரு கச்சேரியை நடத்தி...
அதிலே வசூலான தொகை முழுசையும் ஏழைப்பெண்கள் வாழ்வமைப்புச் சங்கத்துக்கு கொடுத்தார்கள் .

அந்த இசை நிகழ்ச்சியில் பெரியார் பிலாலின் தியாக வாழ்வை பற்றி பாடியதைக் கேட்ட ஆண்களும் பெண்களும் அழுது கொண்டே இருந்தார்கள் என்கிற காட்சி இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது.

முஹம்மது லெப்பைத் தெரு MOA.சுக்கூர் மாமா அவர்கள் தன்னுடைய வீட்டு வாசலில் டேப் ரிகார்டரில் இந்த பாடலை போடும் போது.... அவரைச் சுற்றி வயசு வித்யாசம் இல்லாமல் இருந்துகொண்டு இந்த பாடலை ரசித்து கேட்பார்கள். அங்கேயும் கண்ணீர் சிந்துவார்கள்.

காலை.... மாலை... இரவு என்று இந்த காட்சிகள் நடக்கும்.
சுக்கூர் மாமா பக்கத்தில் முகம்மது லெப்பை தெரு மறைந்த பச்சை வேட்டி கச்சா மஸ்தான், காளை மைம்பிச்சை இன்னும் சில பேர்கள் அமர்ந்து கண்ணீர் மல்க இப்பாடலைக் கேட்பார்கள்.

அப்போது தெருப்பேர மாத்த நகராட்சி ஏற்பாடு செஞ்சுது.

இதுதான் ஒரு வாய்ப்பு என்று அந்த முகமது லெப்பை தெரு பேரை நீக்கிவிட்டு ....ஹஸரத் பிலால் தெரு என்று தன்னுடைய செல்வாக்கை ....மேலப்பாளையம் நகர் மன்றத்தில் முன்னிறுத்தி பெயரை மாற்றினார்.

தெருவின் பெயராக தொலங்கிய முகம்மது லெப்பை ஆலிம் அவருக்கு பெத்தவாப்பா என்பது இன்னொரு தகவல்.அவர் பேர தான் அந்தத் தெருவுக்கு வச்சு இருந்தாங்க.

"லட்சுமிபுரம் தெரு தெரியுமா?"...
"லட்சுமிபுரம் தெரா?"
"ஆமோ...வ்"
"அது எங்க இருந்துச்சு?"
"குண்டு தெரு...தெரியுமா"
"ஆமா...நம்ம காஜா நாயகம் தெரு.அதுக்கும் தனி  வரலாறு இருக்கு"....

குட்டி மூப்பன் தெரு செய்யது
" இஸ்மாயீல் தங்கள் தைக்கா தெரு...
ராவுத்தர் லெப்பை தெரு, அத்தியடி தெரு.... பெரிய கொத்துபா மேல, கீழ, வடக்கு, தெற்கு... என்று நீண்ட பெயர்த்தொடரோடு ஆகிவிட்டது.
பள்ளிலெப்பை தெரு
ஆசுரா தெரு ஆச்சு... எங்க தெரு இதுக்கெல்லாம் பேர் வச்சது RMA. அப்துல் சமது மாமா தான்.

வீராத்தெரு...கீழ வீரராகவத்தெரு செய்து லெப்பை தெருவாய் இருந்து செய்குல் அக்பர் தெருவாச்சி.
மூப்பன் பக்கீர் தெரு... அக்பர் தெரு ஆச்சு....

ஹாமீம்புரம் தெற்குத்தெருவுக்கு அப்புறம் உள்ள தெருக்கள் யாவும்...1985 க்கு பிறகே உருவாகின.

சரீ.... எதுக்கு இந்தப் பழைய பேர...எதுக்கு மாத்தினாங்கன்னு தெரியனுமே...

1977 ஆம் ஆண்டு மொத தடவையா மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட MGR ஆட்சிக்கு வந்தார்.... ADMK முதல்வர் .....MGR அவர்கள்   தெருக்களின் பெயர்களில் உள்ள  உள்ள சாதிப்பெயரை எடுக்கப் போறதா சொல்லி  உத்திரவு போட்டார்....அதன் தொடர்ச்சியா.....மேலப்பாளையம் தெருக்களின் பெயரில் இருந்த.....லெப்பை........., பிள்ளை.....,மூப்பன்.... இதுவும் ஜாதி ன்னு சொல்லி அந்த பெயர்களை அரசாங்கம் நீக்கி உத்தரவு போட்டது...

சென்னையில் பல தெருப்பெயர்கள் ஜாதிப்பெயர்களோடு தான் இருந்தன.புரட்சித்தலைவர் MGR குடியிருந்த ஆற்காடு முதலியார் தெரு ஆற்காடு தெரு என்றும்...மல்லன் பொன்னப்ப முதலி தெரு பொன்னப்ப தெரு என்றும்....லெப்பை பள்ளித்தெரு,  பள்ளித்தெரு என்றும் புது நாமங்கள் கொண்டன......அவை சிரிப்பைத்தந்தன.

அத வச்சித்தான்
குட்டி மூப்பன் தெரு,
உச்சிலி லெப்பை தெரு,
மைலக்காதர் லெப்பை தெரு
செல்வக்காதர் லெப்பை தெரு
பள்ளிவாசல் மூப்பன் தெரு
சரக்கி மூப்பன் தெரு
ராவுத்தர் லெப்பை தெரு
அத்தியடி தெரு
பள்ளி லெப்பை தெரு
சப்பாணி லெப்பை தெரு

முன்னாள் சேர்மன்கள் LKM. அப்துர் ரகுமான் சாகிப், MAS. அபூபக்கர் சாகிப், ஆகியோர் முயற்சியால் அவர்கள் வாழ்ந்த தெருக்களில் இருந்த லெப்பைகள் நீக்கப்பட்டு மைலக்காதர் தெரு, சப்பாணி ஆலிம் தெரு என்று ஆகியது....MAS அபூபக்கர் சாகிப் சப்பாணி ஆலிமின் குடும்பம் என்பது கூடுதல் தகவல்.

பிள்ளை, மூப்பன் என்பது இங்கே ஜாதிப்பெயரான்னு கேட்டால் ஆமான்னு தான் சொல்லணும்...சண்டைக்கி கிண்டைக்கி வந்துராதிய...அதிலும் வரலாறு இருக்கு.

ஆலப்பிள்ளை தெரு,
மொத்தை மீராப் பிள்ளைத்தெரு,
மூலன் அகமது பிள்ளை தெரு....
 இன்னும் அந்தப் " பிள்ளை" பெயரில் தான் உள்ளன..
சமாயினா காதர் மீத்தீன் மூப்பன் தெரு, சமாயினா ஷேக் முகமது மூப்பன் தெரு என்கிற பெயரில் மூப்பனை தூக்கிவிட்டார்கள்.

அது போல....மூப்பன் பக்கீர் தெரு என்கிற பெயரை மாற்றித்தான் அக்பர் தெரு என்று வந்தது...பள்ளி வாசல் மூப்பன் தெருவை மாற்றித்தான் உமறுப்புலவரும்,சரக்கி மூப்பனை மாற்றி காயிதேமில்லத் பெயர்களும் வந்தன.

ஞானியார் அப்பா பெரிய தெரு, சின்னத்தெரு...இப்போது வெறும் பெரிய தெரு சின்னத் தெருவா...இருக்குது.

யாதவாள் தெரு, மறக்குடித் தெரு என்பவை .... பாரதியார் தெரு என்றும்
மருது பாண்டியர் தெரு என்றும் ஆட்டுவாணியர் குடியிருப்பு ஆண்டவர் தெரு என்றும்......மரைக்காயர் தெரு முகைதீன் ஆண்டவர்  தெரு என்றும் மாறிப்போனது.

இன்றைய அண்ணா வீதிக்கு....அப்போதெல்லாம் மேல நத்தம் மெயின் ரோடுன்னு  தான் பேர் இருந்தது.MAS.அபூபக்கர் சாகிப் காலத்தில் அது அண்ணா வீதியாக மாறியது.

1969-75 ஆண்டு அன்றைய கால கட்டத்தில் LKM,அப்துர் ரகுமான் சாகிப்
 மேலப்பாளைய நகர்மன்றத்தில் முஸ்லிம் லீக் சேர்மனாக இருந்த போது,
அரசு நடுநிலைப்பள்ளி காயிதே மில்லத் நடு நிலைப்பள்ளியாகி உயர்நிலைப்பள்ளி யாக மாறி...தற்போது மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கிறது.....

அதற்கு முன்னரே அபுல் கலாம் ஆசாத் ரோடும், நகர் மன்றத்தில் மௌலானா முகம்மது அலி மண்டபமும் வந்து விட்டன.

1977ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் MGR அவர்கள் ,அ.தி.மு.க ஆட்சி அமைக்க தேர்தல் பிரச்சாரம் செய்ய மேலப்பாளையம் முனிசிபல் அலுவலகம் மேற்கே இருந்த காலியிடத்தில் மேடை அமைக்கப்பட்டு நள்ளிரவும் தாண்டி பேச  வந்து இருந்தார்.....அதனை அண்ணா திடல் என்று அழைத்தார்கள்....


எந்தப்பேர் எப்பிடிப்போனாலும் எங்க தெருவை ஐயர் தெருன்னு தான் இப்பவும்...கூப்பிடுதாக.

திங்கள், 13 ஜனவரி, 2020

திருநெல்வேலியின் மனித நேய மருத்துவர் Dr.A. V. முகைதீன் அவர்கள்...



திருநெல்வேலியின் மிகச்சிறந்த மனித நேய மருத்துவர்களில் ஒருவரான Dr.A. V. முகைதீன் அவர்கள்...

பிள்ளைப்பருவத்தில் என் போன்றவர்களுக்கு , உடல் நலக்குறைவு ஏற்பட்ட பொழுதெல்லாம் , அவர் தந்த மருத்துவம்...வாழ் நாள் எல்லாம் நினைக்கத் தகுந்தது.

அப்போதெல்லாம் , நெல்லை டவுண், கீழரதவீதி அவரது மருத்துவ மனைக்கு என்னை, என் தங்கைகளை வாப்பும்மா மாட்டு வண்டியில் கூட்டிச்செல்வாள்.....

அவள் மடியில் கிடக்கும் எங்களின் , தலைய கோதி விடுவாள்..

கழுத்தை , நெற்றியைத் தொட்டு....உடல் சூட்டின் அளவை பார்த்துக் கொள்வாள்..

கனத்த கம்பளிப்போர்வைக்குள் கை நுழைத்து நெஞ்சிலும் முதுகிலும் விக்ஸ் களிம்பு வேறு தேய்த்து விடுவாள்.

சுரத்தில் துடித்த காலங்களில் நெற்றியில் வேப்பங் கொழுந்து இலை , மஞ்சள் , வெங்காயம் அரைத்து பத்து போடுவாள்..அதோடு ரெண்டு மூணு பொழுது சுக்கு , அக்கரா கஷாயம் தந்து காச்சல் விடுதான்னு பார்ப்பாள்.

அது " ஓப்பேறா விட்டால் " அடுத்து எங்க தலையில் மிளகு பொடி செய்து தேய்ப்பாள்..
இத்தனையும் செய்து முடித்தே டாகட்டரிடம் கூட்டிப் போவாள்.

தக தகன்னு தண்ணீர் கொதிக்கும் ஒரு எவர்சில்வர் மின் இணைப்பு தொட்டியில் அவர்..இடுக்கியின் மூலம் .சிறிஞ் எடுத்து ஊசியை மாட்டி எடுத்து , பிட்டத்தில் சொருகுவார். ஊசி வலியால் நாங்கள் அழுவோமோ இல்லையோ, எங்க கூட வரும் லெப்பார் மாமா அழுதிடுவார்....

பல மாத்திரைகளை சேர்த்து வேளா வேளைக்கு திங்க , ஒரு வெள்ளை குளவிக்கல்லில் அரைத்து பொட்டலமாக்கி , ரோஸ் நிற தண்ணீர் மருந்தும் ஒரு பாட்டிலில், தந்து அவரது கம்பவுண்டர் லோகு அண்ணா அனுப்பி வைப்பார்.

டாக்டரைப் பார்க்கும் போதெல்லாம் என் பிள்ளைப்பருவ காலமும் எங்க வாப்பும்மா நினைவும் வந்தே போகிறது.

வழக்கறிஞர் அப்துல் வகாப் மாமா பேத்தி திருமணம் நடந்த ஹைகிறவுண்ட் காயிதே மில்லத் அரங்கில் டாக்டரைப் பார்த்து நலம் விசாரித்தேன்.

மெல்லிய அதே அழகான குரலில் , அக மகிழ்ந்து வாழ்த்தினார்.
வாழ்க டாக்டர்.