ஞாயிறு, 4 ஜூன், 2017

துபாய் நண்பர்கள் தந்த வரவேற்பு.




துபாய் நாட்டில் அன்பர்கள் தந்த வரவேற்பு
துபாய் நாட்டில், சில தமிழ் நெஞ்சங்கள் தமிழகம் மற்றும் தாய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு உறைவிவிடம் உணவுகள் போக்கு வரத்து மற்றும் அவர்கள் வந்த பணிமுடிக்க மிகப்பெரும் பொறுப்பு ஏற்று இருப்பார்கள்.,..அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தப் பணியினை வைத்திருப்பார்கள்.
ஆனால் துபாய் இ டி ஏ அஸ்கான் நிலைத்தில் பணி செய்யும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பக்கம் உள்ள அரிகேசவ நல்லூர் ஊரைச்சேர்ந்த அன்பு இளவல் செய்யது மீரான் அவர்கள் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் அமீரக துபாய் சார்ந்த நாடுகளுக்கு வருகைதரும் வணிகத்தூதர்கள், அவர் பணி செய்யும் நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள், அதிகாரிகள், இலக்கிய வாதிகள்,எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஉலக மேதைகள், அரசியல் நண்பர்கள், உள்ளிட்ட யாவரையும் இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் அமீரகம் வந்த நோக்கம் முழுமை பெற கடந்த இருபது ஆண்டு காலமாக அரும்பணி செய்து வருகின்றார்.
என் போன்றவர்கள் ஒரு போன் மூலமாகவே அவரைத்தொடர்பு கொண்டு பல்வேறு பொதுக்காரியங்கள்செய்துள்ளோம்.
தமிழகத்தின் எண்ணற்ற இளைஞர்கள் பலருக்கு அவர் மூலமாக பணிவாய்ப்புக்கள் அமீரகத்தில் இன்னும் அரபு நாடுகளில் கிடைத்துள்ளதை பெருமையாகச்சொல்லலாம்.
முதலில் வள்ளல் பி.எஸ்.அப்துல ரகுமான் அவர்களின் உதவியாளராக துபாய் நாட்டில் பணியில் சேர்ந்த செய்யது மீரான் அவர்கள் அடுத்து இ.டி.ஏ.அஸ்கான் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனராக தற்போது துணைத்தலைவராக இருக்கின்ற கீழக்கரை வணிகக் கோமான் , தொட்டதுறைகள் எல்லாம் வெற்றி காணச்செய்த டாக்டர் செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்களின் தனிச்செயலாலரானார்.
எப்போதும் சுறுசுறுப்பு குணம் கொண்ட சகோதரர் மீரான் மீதான நம்பிக்கை, நேரம் காலம் பாராத உழைப்பு, எதனையும் செய்து முடிக்கும் சுறுசுறுப்பான ஆற்றல் இவை தான் சகோதரர் மீரான் அவர்களின் நற்பெயரின் பக்கபலம் என்றே சொல்வேன்.
இந்தியக் குடியரசின் முன்னாள்தலைவர் APJ அப்துல் கலாம் அவர்கள் மீரான் அவர்களை பல்வேறு நிகழ்வுகளில் சந்தித்து அளவளாவியுள்ளார்.
தமிழகத்தின் தனிகரில்லா தனிப்பெரும் தலைவர்களோடு அறிஞர்களோடு,கலையுலக வித்தகர்களோடு கவிஞர்களோடு நெருக்கமான தொடர்பினைப்பெற்றவர்.
எங்கள் பகுதியில் உயர்கல்வி வளர்ச்சி தொடர்பாக ,கடந்த 2014 ஆம் ஆண்டு நானும் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் டி.எஸ்.எம்.ஒ.மஜீத் கல்விக்குழு உறுப்பினர் எம்.ஏ.எஸ்.முகைதீன் அப்துல்காதர் முதலானோர் டெல்லி ராஜாஜி சாலையில் இந்தியக் குடியரசின் முன்னாள்தலைவர் APJ அப்துல் கலாம்அவர்களின் வீட்டுக்கு சென்று சந்திக்க எங்களுக்கு நேரம் கேட்டு வாங்கி ஒதிக்கித்தந்ததே சகோதரர் மீரான் தான்.
அதற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அப்துல்கலாம் அவர்களின் அன்பினைப்பெற்ற நடிகர் விவேக் அவர்களிடமும் , அத்தோடு அப்துல் கலாம் அவர்களின் உதவியாளராக இருந்த பொன் ராஜ் அவர்களிடம் எங்களைப்பற்றி தொலைபேசி வாயிலாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு நலக்காரியங்களில் அவரது பேருதவி மகத்தானது.
என்னிடம் அஸ்கான் டவர்சில் நேரில் சொன்னது போலவே எனக்கு அமீரகத்தில் 26.05.17 அன்று ஒரு பெரிய வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினை ஒரு நட்சத்திர ஓட்டல ஒன்றில் அடுத்த நாளே ஏற்பாடு செய்துவிட்டார்.அவரோடு அன்புத்தம்பி காயிதே மில்லத் பேரவை நிர்வாகி கீழக்கரை ஹமீதூர் ரஹ்மான் ,லால் பேட்டை அன்பு சகோதரர் அப்துல் ரகுமான் , திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தம்பி நியாஸ் அலி,கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி இபுராகிம் அவர்களின் சகோதரர் முஸ்தபா முதலானோர் துணை நிற்க துபாய் தேரா பகுதியில் ஸம்மிட் ஸ்டார் ஹோட்டலில் லிங்க்ஸ் ஹாலில் ஏற்பாடு செய்து இருந்தார்.
நண்பர்கள் சந்திப்பு ஏதாவது ஒரு ஹாலில் இருக்கும் என்று நினைத்தேன்.அங்கே போன பின்னர் நான் மலைத்துப்போய் விட்டேன்....என்னையே நான் திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.
என் குடும்ப மூத்தவர்கள் பெரிய வாப்பமார்கள் அதாவது என் தந்தையை பெற்றெடுத்தவர் மற்றும் அவர்களது சகோதரர்கள் பர்மா கொழும்பு கராச்சி,சிட்டகாங் என்று பறந்து திரிந்து ஜவுளி,நூல்,எண்ணெய் வணிகம் செய்தவர்கள்,
விடுதலைப்போராட்டக் களத்தில் நின்றவர்கள்.
அதன் பின்னர் காயிதே முகம்மது அலி ஜின்னாஹ் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,அவரது தம்பி இந்திய அரசியல் சாசன சபை உறுப்பினர் கே.டி.எம்.அகமது இப்ராகிம் அவர்களின் அரசியல் நட்பில் பயணித்தவர்கள்...
என் தந்தையின் பெரிய வாப்பா அதாவது பெரியப்பா திருநெல்வேலியின் ஜில்லா போர்டு என்று சொல்லப்பட்ட டிஸ்ட்ரிக்ட் போர்டு துணைத்தலைவராக முஸ்லிம் லீக் சார்பாக தேர்வு செய்யப்பட்டவர்.
எனது மாமா வழக்கறிஞர் எல்.கே.எம் அப்துர் ரகுமான் சாகிப் மேலப்பாளையத்தின் முஸ்லிம்லீக் நகர்மன்றத்தலைவராக மூன்றுமுறை பணியாற்றியவர்.
அவர்காலத்தில் தான் நகருக்கு குடிதண்ணீர் வசதிகள் ,மேலப்பாளையம் தாமிரபரணி ஆற்றில் பாலம் , மீன் மார்க்கெட், சாலைகள்,அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முதலானவை ஏற்படுத்தப்பட்டன.
அவர்களின் பிள்ளையாக நான் வளர்ந்தேன். அவர்தான் என்னை மேடைகளில் பேசவும், கவிதைகள் கட்டுரைகள் எழுதவும்,பாடவும் பயிற்றுவித்தார்.
அவர்களாலே தான் என்னால் பள்ளிப்படிப்புக்காலங்களில் நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில் ஏனைய நண்பர்கள் அண்ணாவை, காமராஜரை, கலைஞரை, எம்.ஜி.ஆரை.பேசும் போது காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களை பேசவும் முடிந்தது.
அந்த பயிற்சி தான் என் தந்தைக்கு ஒப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமது, அண்ணன் அப்துல் லத்தீப், அண்ணன் பேராசிரியர் கே,எம்..காதர்முகைதீன்., கல்லிடைகுறிச்சி பன்னூல் அறிஞர் டி.எம்.பீர்முகம்மது , தென்காசி மேடை முதலாளி அவர்களின் மகன்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னூல் ஆசிரியர் ஏ.கே.ரிபாயி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.சாகுல் ஹமீது , கோதர் முகைதீன்,சம்சுல் ஆலம், மேலப்பாளையம் முன்னாள் சேர்மன் எம்.ஏ.எஸ்.முகம்மது அபூபக்கர், ,மற்றும் இளைய தலைமுறை தலைவர்களான சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் அண்ணன் அப்துல் ரகுமான், அண்ணன் காயல் மகபூப், நெல்லை அப்துல் மஜீத் ,கத்தார் நாட்டின் அன்பு நேயர் ஹபீப் முகம்மது, என்று இணைத்தது...
என்னை மாபெரும் மனிதர்களோடு , மாபெரும் சபைகளில் என்னை உட்கார வைத்து அழகு பார்த்த என் தந்தையும், என் தாயாரும் என்னை கைகளில் தாங்கும் என் தம்பியும் ,சகோதரிகளும் என் இக்கட்டான நேரங்களில் எல்லாம் இன்முகம் கொண்டு பாராட்டி நிற்கும் என் அன்பு மனைவியும் , பிள்ளைச் செல்வங்களும் மாசில்லாத குணமுடைய நண்பர்கள் சிலரும்,நினைவில் வந்தார்கள்.
அடிப்படையில் நான் ஒரு விவசாயி....அதற்கப்புறம் கல்விப்பணிகள் செய்பவன்....அப்புறம் இளம் பருவம் முதல் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைத்துக்கொண்டவன்...என்னை எல்லா நிலைகளிலும் அவர்களே. தாங்கிப்பிடிப்பவர்கள்.
என்னை பரிவோடும் கண்ணியத்தோடும் பாசத்தோடும் நடத்தியவர்கள் கீழக்கரை பெருமக்கள்.அவர்களில் வள்ளல் பி.எஸ்.அப்துர் ரகுமான் அவர்கள் முதலாமவர்.
அவரைத்தொடர்ந்து அவர்களின் இளவல்கள் எம்.டி.வாப்பா செய்யது எம்.ஸலாஹுத்தீன் அவர்களும் சின்னவர் சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களும் அதைத்தொடர்கின்றார்கள்.
சீனா தானா வாப்பா அவர்கள் என் தந்தை இருந்தால் என்ன பாசம் பிரியம் காட்டுவார்களோ அதையே தந்து கொண்டு இருக்கிறார்கள்....என்னுடைய வளர்ச்சியின் படிக்கட்டுகள் அல்லாஹ் அவர் மூலமாக அமைத்துத்தந்தான்.
இவையெல்லாம் அந்த மேடையில் நான் அமர்ந்து இருந்த போது என்னுள் கலவையான உணர்வுகளாக வந்து கொண்டே இருந்தது.
எனக்குத்தெரிந்து எனது திருமண மேடைக்குப்பின்னர் என்னை நண்பர்கள் அதிகமாக வாழ்த்தியது இந்த மேடையில் தான் என்பேன்.அல்ஹம்துலில்ல்லாஹ்..
அல்லாஹ் வழிநடத்துவான்...
அந்த மேடையில் என் அன்பிற்கு உரியவர்கள் இருந்தார்கள். வாழ்த்தி பேசினார்கள்.
அவர்களைப்பற்றி தொடர்வேன் .






கருத்துகள் இல்லை: