புதன், 16 மே, 2012

இலக்கற்ற பயணங்கள்.

அங்கும் இங்கும் ஊர் சுற்றலாய்     பல பயணங்கள்.

சில பயனுள்ளவை .
பல. பயனற்றவை.
சில .இலக்கற்றவை.
சில இலக்கணமற்றவை.
சில பயணங்கள் கற்றுத் தந்துள்ளன.
சில சொல்லும் தகுதி அற்றவை.

ஆரம்பத்தில் பெற்றவர் உற்றவர்களோடு சென்று வந்தேன்.அவை நினைக்க நினைக்க ஆனந்தம் தருபவை.

.பல நேரங்களில் பல பயணங்கள் சடைவை தந்து,.வெறுப்புக்களோடு .பாடங்களும் தந்ததுண்டு. 

காலதாமதம்கூடவந்த கூட்டாளிகள்  இடத்துல நெருக்கடி, கொசுக்கடி, மூட்டக்கடி, இது போல எதாவது ஒரு கடி அதுக்கு காரணமா இருக்கும்.

அடிக்கடி இப்படி வராது.எப்போவாவது ....

"சீ..... இது ஒரு போக்கா?.......ஒங்கள மாதிரி யார் இப்படி அலைறா?  ஊட்டுல கிடக்க மாட்டியளா?"என்று என் புகாரி காக்கா ரொம்ப கண்டிச்சிருக்கான். 

ராப்படையா .......மோட்டார் சைக்கிளில் யாருகிட்டேயும் சொல்லாம,கொள்ளாம.....  நண்பர்களாச் சேர்ந்து, நாலைந்து மோட்டார் சைக்கிள்ள குத்தாலத்துக்கு போறதை அப்படி சொல்லுவான். ..

வெடவெடக்க வைக்கும் குளிர் காற்றும்.கண்ணுக்குள் ஊசியாக் குத்தும் சாரல் மழையும் மோட்டார் சைக்கிள ஓட்டும் போது நடுங்க வைக்கும்...

மேப்பல்லும்..... கீப்பல்லும்...வெடவெடக்கும்.

பல முறை வாப்பா ,உம்மா, அப்பாம்மா, காக்கா உள்ளிட்ட குடும்பத்துக் காரர்கள் கடுமையாப் பேசுவார்கள்.
."இனிமே வண்டியத் தூக்கு அப்பும் இருக்கு" இது எச்சரிக்கை அறிவிப்பா வரும்.திட்டம் போடுவோம்...போயிடுவோம்.ஆனாலும் பயணம் செய்யப்பிடிக்கிறது.

சின்னஞ்சிறு பிராயத்தில் என் பெத்தும்மா (அப்பாம்மா)உம்மா. வாப்பா சின்ன வாப்பாமார்கள்,மாமிமார்கள்.என் வயதில் இருந்த உறவினர்களின் ஆண், பெண் மக்களுடன் மாட்டு வண்டியில் குற்றாலம் வரை சென்ற நினைவுகள் மாட்டு வண்டிகளைப் பார்க்கும் போதெல்லாம் வந்து செல்லும்.

மற்ற பயணங்கள் எல்லாம்திருநெல்வேலி டவுனுக்கும்.ஜங்ஷனுக்கும் போய் வந்ததுதான்.காச்சல் அது இதுன்னு வந்தா முகைதீன் டாக்டரிடம் மாட்டு வண்டியில் கூட்டிப் போய் தான் காட்டுவார்கள்.

மாடுகள் வண்டியை இழுக்க லாயக்காக மாடுகளின் கழுத்துக்களில் படுக்கை வாக்கில் நோக்கால் இருக்கும்.அதிலிருந்து தான் மாட்டு வண்டியின் சட்டம் துவங்கும்.

கூண்டு ஆரம்பிக்கும் இடத்தில் வண்டியோட்டுகிறவர் இருக்க வசதியான பலகை இருக்கும்.அதுக்குப் பின்னால் கோஸ் பெட்டி இருக்கும். 

அதில் உட்கார எங்க வயசுக்காரர்களிடம் கடும் போட்டி ஏற்படும்.அஞ்சாங் கிளாஸ் படிக்கிற பிள்ளைகளாயிருந்தால் நெருக்கியடித்து நான்கு பேர் அமரலாம்.
சில வண்டிகளில் கணீர்ன்னு சப்தம் வர மணி,ஓட்டுறவர் கால் வைக்கும் இடத்திலும், ராவுல வண்டி ஓட்ட, வெளக்கெண்ணெய் ஊத்தி எரியும் பக்க விளக்குகள் மாட்டிவச்சிருப்பார்கள். 

வண்டி "ஆமவேகத்தில் போனால் எப்ப போய் சேர்வது?"வண்டிஒட்டுபவரை கோஸ் பெட்டி ஆட்கள் உசுப்பேத்துவார்கள்.

"போட்டும்..... போட்டும்...இன்னும் வேகமாப் போட்டும்.".......வண்டிக்காரருக்கு ரோஷம் வந்துரும். 
"எங்க....போற? அன்ன நடை நடக்கிறியாக்கும்."?மாட்ட பேசிக்கிட்டே .கையில் உள்ள சாட்டையால் ரன்ன்டு விளாசு..அம்புட்டு தான்.மாடு ஓட்டம் பிடிக்கும்.
"எப்பா ...உள்ளே வாங்கோ...கீழே விழுந்துடப்டாது"ன்னு சொல்லி கோஸ் பெட்டியிலிருந்து பயணித்தவர்களை பெரியவர்கள் பிடித்து இழுத்து மடியில் வைத்துக் கொள்ளுவார்கள்.

"பெரிய பிள்ளைகளாகிய பிறகு, நீங்கள் கோஸ் பெட்டியில் இருக்கலாம்"என்று தடை உத்திரவு போட்டுடுவார்கள். ரொம்ப வருத்தமாகிவிடும்.

நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும் போது மேலப்பாளையத்தில் பெருநாள் அன்னைக்கி மாட்டுவண்டிப் போட்டி நடக்கும்.தாழையூத்து நவாப் சத்திரத்தில் துவங்கி குறிச்சி வாய்க்கால் பாலத்தில் போட்டி முடியும்.
கொக்கிர குளம் வரும்போது மாடுகள் ஓட்டம் பிடிப்பதைப் பார்க்க பயமா இருக்கும்.வருஷம் தோறும எங்க வீட்ல இருந்து ஒரு வண்டி இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்.


பெரும்பாலும் பெரிய வாப்பா,சின்ன வாப்பா வீட்டு வண்டிகளாயிருக்கும்.
அந்தக் காலத்தில் மாட்டு வண்டி ஜெயிக்கிறதுல கவுரவம் பாத்த மகா ஜனங்கள் இருந்த வீம்பான காலம் அது.

பல ஊர்களில் மாடுகளை விரட்ட.வண்டியை வேகமாக ஓட வைக்கஅதன் வாலைப்பிடித்து இழுத்தும் ,தார்க் கம்பு வச்சி குத்தியும்,ரொம்ப உச்சக் கட்டமா வாலைப் பிடித்து கடித்தும் கொடுமைக்காரர்கள் சிலர் மாடுகளை இம்சைபடுத்துவார்கள்.

எங்க ஊர்ல இதெல்லாம் செய்யக்கூடாது.இதுக்கெல்லாம் தடை போட்டிருந்தார்கள்.ரோட்டோரம் நின்னுக்கிட்டு சில விடலைகள் விசில் அடிப்பார்கள்.அது மாடுகளுக்கோ மனுசாட்களுக்கோ உற்சாகத்தை உண்டு பண்ணும்.

ஒரு முறை போட்டி கடுமை இருந்தது.எல்லைக் கோட்டைத் தொட ஐம்பது அடி தூரமே இருந்த போது வண்டி ஓட்டி வந்த"கொளக்கட்டை சுப்பையா" போட்ட கூச்சல் மாடுகள் மிரண்டு ஓடி வண்டியை வெற்றிக் கோட்டை தொட வைத்ததுஅந்த வெற்றிக் களிப்போடு வீட்டுக்கு வந்த சுப்பையா ஒரு குடம் தண்ணீரை அண்ணாந்து குடித்து முடித்த பின்னர் தொப்பென்று கீழே விழுந்தார்.அங்கேயே இறந்துவிட்டார்.ஊர் முழுதும் இதே பேச்சு தான்.

தொடர்ந்து வண்டிப் போட்டிகளில் கலந்து கொண்டதனால் ஒரு குறிப்பிட்ட வண்டி உரிமையாளர்களுக்குள்  மறை முக பகைமை இருந்து கொண்டே இருந்தது.அது பல பொதுப் பிரச்சினைகளில் திசையையே மாற்றிவிட்டது. ஒருக்கட்டத்தில் அவர்கள் இருவரும் சண்டையை மறந்து  சம்பந்த உறவை வைத்துக் கொண்டார்கள். ஊரே ஆச்சிரியமாய் பார்த்துக்கொண்டது.அது மாட்டு வண்டி போட்டி இணைச்சு வச்சது.

மாட்டுவண்டிகளின் போட்டிகளைப் பார்க்க நாங்கள் போகும்போது, என் தந்தை எங்களுடன் வந்ததே இல்லை. காரணம் போட்டியில் ஓடுகின்ற  எங்கள் வண்டியின் உள்ளே இருந்து கொண்டு , சாரதியை உற்சாகப் படுத்திக்கொண்டே வருவார்.

எங்க வாப்பாவின் கூடப் பிறந்தவர்களுக்கும் அவரது வாப்பாவின் கூடப்பிறந்த பெரிய வாப்பா சின்ன வாப்பா மகன்களுக்கும் இது பிடிக்காது. கடுமையாகப் பேசுவார்கள்.ஏதாவது ஆகிவிடப்போகிறது என்று பயப்படுவார்கள்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூணு-நாலோடு மேலப்பாளையம் வண்டிப் போட்டி சுத்தமா நின்னே போச்சு,

எங்க வாப்பாவிடம் தட்டு வண்டி ஒன்று இருந்தது.அதில் ஒரு மாடு பூட்டி ஓட்டுவார்கள். பக்கத்துக்கு ஊர்களுக்கும் விவசாய வேலைகளுக்கும் அதிலே தான் போவார். வருவார்.மாடுகளைப் பேணுவதிலும் அவருக்குப் பிரியம் அதிகம்.ரேக்ளா வண்டி ஓட்டுவதில் அதிக ஆர்வம அவருக்கு உண்டு.

மாட்டு வண்டிகளுக்குள் ஒரு மாதிரி வாடை அடித்துக்கொண்டே இருக்கும்.காளை மாட்டுச் சாணி.மூத்திரம்,மாட்டு மேலே வருகிற ஒரு வாடை,இதுவெல்லாம் கலந்து ஒரு கலவையான வாடை அடிக்கும்.

உள்ளே விரிக்கப்பட்டுள்ள மெத்தையில் இருந்து வேறு விதமான வாடை வரும்.இன்றுஇந்த மாதிரி வாடைகளைஎல்லாம், காரில் அடிக்கிற துவாலை வாசம் போக்கிவிடும்.ஆனால் மாட்டு வண்டியில் என்ன செய்ய?

எங்க அப்பாம்மா போட்ட வெற்றிலை, பாக்கு, தாம்பூல வாசனை இந்த அத்தனையையும் தாக்கி விரட்டிவிடும்.
பொதுவாக மாடுகளுக்கு ஒரு குணம் உண்டு.”வெளியூருக்கு போவதாக இருந்தால் மெதுவாகச் செல்வதும், மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் போது வேகமாக வருவதும்.“அது எதுக்கு சீக்கிரமா ஊட்டுக்கு வருதுன்னு தெரியாதாக்கும்?”
“பருத்திக் கொட்டை.புண்ணாக்கு தீவனம் வீட்டுக்குப் போனதும் கிடைக்குமே அதுக்குத் தான்”, என்பார் எங்க வீட்டு கோனார்.

பல வேளைகளில் எங்க ஊரை விட்டு எட்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் தருவை கிராமத்தில்;நெல் அறுவடை வேலைகளெல்லாம் முடிய இரவு பத்து மணி கூட ஆகி விடும்.அந்த இருட்டு வேளையில் வண்டிக்குள் சென்று அசதியினால் நாங்கள் எல்லோரும் நெருக்கி அடித்துக்கொண்டு தூங்கிவிடுவோம்.

ஆனால் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துக்கொண்டு ரோடுகள் வழியே பயணித்து, எதிரே கண்ணைக் கூசும் அளவு முகப்பு விளக்கை ஒளிர விட்டு பெரிய லாரிகளும் பஸ்களும் வந்தாலும், பாதையை சரியாக கவனித்து,பல்வேறு பாதைத் திருப்பங்களில் சரியாகத் திரும்பி ஊருக்கு பத்திரமாகக் கூட்டிவரும்..
வீடு வந்து விட்டது என்று ஆளை எழுப்புவார்கள்.அப்போது தான் வந்து சேர்ந்து விட்டோம் என்பது தெரியும்.
எங்களை வீடு கொண்டு சேர்த்த மாடுகள் இதையெல்லாம் கவனிக்காதது போல் அசை போட்டுக் கொண்டிருக்கும்.
பயணத்தைச் சொல்லப்போய் மாட்டு வண்டிப் போட்டிவரைசொல்லவேண்டியதாயிட்டு.

இப்போ மேலப்பாளையத்தில் ஏது மாட்டு வண்டி.
கொஞ்ச காலம் முன்பு வரை பிள்ளைகள் பாளையங்கோட்டை பள்ளிக் கூடங்களுக்கு போய்,வர அரசக் கோனாரும்.கந்தக் கோனாரும் மாட்டு வண்டி "சர்வீஸ்"நடத்தினார்கள்.

ஆட்டோ காரங்க வந்த பிறகு மாட்டு வண்டில போக பிள்ளைகளும் விரும்பல.அவுங்க உம்மா வாப்பா மாரும் விரும்பல.

என் தம்பி, தங்கைகள் மாட்டு வண்டீல தான் பள்ளிக் கூடம் போனாங்க.அவங்க பிள்ளைகளிடம் அதச் சொன்னா நம்ப மாட்டேன் என்கிறார்கள். அதுல மெதுவா போயி. எப்ப பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வர்ரதாம்னு கேட்கிறார்கள்.
இன்னும் சொல்லுவோம்.......
(தொடரும்)
          

3 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

எழுத்துகள் சரியாக வரவில்லை. சரிபார்க்கவும்.

LKS.Meeran Mohideen சொன்னது…

மிக்க நன்றி.சரி செய்கிறேன்.இதற்குக் காரணம்,பாமினி,சாருகேசியை பேஸ்ட் செய்ததுதான்.நீண்ட கட்டுரைகளை கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துருக்கள் மாற்றி டைப் அடித்து திருத்தும் செய்து வெளியிடுகிறேன்.நீங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

நண்பர் ஒருவர் கொடுத்த ஆலோசனை:

You can convert bamini to unicode from thesஎ sites.

http://www.suratha.com/reader.htm

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml

முயற்சித்துப் பார்க்கவும்.