புதன், 19 மார்ச், 2014

கடைப் பலகை.



கிராமப்புறங்களில் டீக்கடை பலகைகள் என்பவை முக்கியமான ஒரு பகுதியாகும்.  டீக்கடைகளுக்கு வந்தோமா டீய, கீய குடிச்சோமா போனோமான்னு இல்லாம ஊர்கதைகள் உலகத்து நடப்புகள் வரை பேசுவதற்கு ரொம்பத் தோதுவாக இருக்கும்.....

எவம் ஊருக்கு புதுசா,  அசலூரிலிருந்து வந்துருக்கான்?.....யார்வீட்டுல கடன், கன்னிகள் இருக்கு?.....சொத்துக்கள், வண்டி மாடுகள்,,சைக்கிள் ,மோட்டார் வண்டி, மண்டு மனைகள், புதுசா வாங்கிறவன்,  விக்கிறவன், "போனவன்-வந்தவன்"  ‘கதைகள்’  அங்கே தான் அலசப்படும்.

அது போக ‘ஒசுக்கு’ காலையில் வருகிற பத்திரிகைகள் பார்க்க வருகிற கூட்டங்களும் உண்டு.

இப்போ கலைஞர் கொடுத்த டி.வி.புண்ணியத்தில், ஜெயா டி.வி.யோ.கேப்டன் டிவியோ பார்த்துக் கிட்டு, ஊர் வம்பு பேசுற ஆட்கள் நிறைய இருப்பார்கள்..எப்போ முழிச்சாங் களோ? .எப்போ தின்னாங்களோ?.....என்று கேக்கிற அளவு எப்போதும் டீக் கடைகளிலேயே சதா....குடிஇருப்பவர்களும் உண்டு...

ஆனா...மேலப்பாளையத்தில்....டீக்கடை பெஞ்சுகள் உண்டு.அதில் கொஞ்ச நேரத்துக்கு மேல யாரும் நிரந்தரமா இருந்ததை  யாரும் பார்த்ததில்லை..

டீக்கடை வாசலில் டீயக் குடிச்சிட்டு, பக்கத்தில் இருக்கும் கடைப்பலகைகளில் காலை,  ஒரு அறு ,ஏழில் இருந்து,  எட்டுவரை கதை பேசும் சங்காத்திகள் நிறைய பேரை  பார்க்க முடியும்....என்னவோ அந்தக்கூட்டத்தில் பெரும்பாலும் ‘ஐம்பதை’க் கடந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்..

இதுக்கு நேர மாறா, ராத்திரி பத்து மணிக்கு மேல் 'அங்க இங்க' நின்னு பேசுகிற சங்காத்திகளும் உண்டு.
புதுசா கல்யாணமானவன், அரபு நாட்டில் இருந்து வந்தவன், பொண்ணு பேசியதை சொல்பவன், மகனோ மகளோ, பிறந்ததை சொல்பவன்...அப்படீன்னு நிறைய நண்பர்கள் ராத்திரி வேளைகளில், பசார் முகைதீன் ஸ்டோர்அல்லது  சீனி லாலா  அல்வாயைத் தின்னு முடிச்சிட்டு,  அங்கனயே நின்னு,  அல்லது அந்தப்பக்கம் உள்ள கடைப்பலகைகளில் உக்கார்ந்து தம் சொந்தக் கதை சோகக்கதை பேசுகிற நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் அநேகமாக எல்லாக் கடைகளிலும்,


கடைப் பலகைகள் உண்டு.கடையின் அகலத்துக்கு ஒன்றடியில் இருந்து மூனடி வரை கட்டில்களைப் போல நிரந்தரமாகப் போட்டிருப்பார்கள்.

என்னைக்காவது “ஆக்கிரமிப்ப தூக்கப்போறோம்’,.... அப்படின்னு அதிகாரிகள் படையெடுத்து வரும்போது தான் அந்தக் கடைப் பலகைகளை எங்கயாவது, ஒரு ரண்டு நாளைக்கு நவட்டி வைப்பார்கள்.

இப்பவெல்லாம் “எவம் வரப்போரான்னு?” துணிந்து கடைப்பலகைகளை தூக்கிட்டு சிமிண்ட் போட்டு செங்க கட்டே கட்டிட்டாங்க.

பல்வேறு உள்ளாட்சித் தேர்தல் ,மற்றும் சட்ட மன்ற, நாடாளுமன்றத்  தேர்தல் முடிவுகளை, கடைப்பலகைகளே முன்னறிவவிப்புச்  செய்த வரலாறுகள் உண்டு.

கடைப்பலகைகளில் முந்திய நாள் இரவில், பசார் திடலிலோ, ஜின்னா “மைதானத்திலோ” கொட்டிக் குளம் ,அல்லது கொடி மேடை திடலிலோ யாராவது ஒரு பேச்சாளர் பேசியது பற்றி, கார சார விவாதங்கள் நடக்கும்..

ஒவ்வொரு கட்சிக்கும் எங்க சின்ன வயசில், நட்சத்திர பேச்சாளர்கள் இருந்தார்கள். முஸ்லிம் லீக் கட்சியின் அப்துஸ் சமத், ஏ.எம்.யூசுப், காங்கிரஸ் கட்சியின் நெல்லைக் கண்ணன்,சின்ன அண்ணாமலை,பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க.வின்,ஆ.திராவிட மணி,.வெற்றி கொண்டான், நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், (அவர் போகாத கட்சி எதுவுமில்லை) நெல்லை புகாரி, ரகுமான் கான், ஆடலரசு,தஞ்சை கூத்தரசன், அண்ணா தி.மு.க.வின் நெல்லை பாலாஜி, கே.ஆர்.பி.மணி மொழியன், தொடர்ந்து  மூணு மணி நேரம் பேசி கொண்டே இருந்த  ஜனதாக் கட்சியின் நெல்லை ஜெப மணி, கம்யுனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா, தா.பாண்டியன் முதலானோருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

அதுபோல ஊரில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசிய ‘சின்னாமது’ அப்துல் காதர், செ.கா.மு.யூசுப், கி..மீ.காஜா,மணியாச்சி காஜா, பழக்கடை அப்துல்காதர், நாறங்கி அபுல் அசன்,எம்.ஒ.எ.சுக்கூர், இந்தியக்கம்யுனிஸ்ட் அப்துல் ஜப்பார், மார்க்சிஸ்ட் கிருஷ்ணன், பட்டக் கண்ணு ஆசாரி, முத்துக் கண்ணு செட்டியார் போன்றவர்கள்  நிறைய ரசிகர்களைக் கொண்டு இருந்தார்கள்.



லீக் கூட்டத்தில் மணியாச்சிகாஜா "எக்கு தப்பா" பேசினால், அவ்ளோதான்.......ஒரு வாரத்தில் சின்னாமது அப்துல் காதர் கண்டிப்பா காங்கிரஸ் கூட்டத்தில் பதில் சொல்லுவார்.

இரண்டு பேரும் என்ன பேசப் போகிறார்கள்?..... என்பதைக் கேட்க, நூற்றுக் கணக்கில் கூட்டங்களுக்கு திரண்டு வந்தவர்களும் இருந்தார்கள்.

சில வேளைகளில் மணியாச்சியை பிடிக்காத சிலர், சின்னாமது அத்துல் காதரிடம் போய், மணியாச்சி அதப் பேசினார் ,இதப் பேசினார் என்று கொளுத்திப் போடுவதும், அதே போன்றே மணியாச்சியிடம் சென்று சின்னாமது உங்க கிழி கிழின்னு கிழிச்சுத் தள்ளி விட்டார்ன்னு சொல்லி,  “இழுத்து’ விடுவதும்  உண்டு.

அப்புறம் என்ன கச்சேரி களை கட்டிவிடும். இப்படியெல்லாம் “நல்ல வேலைகள்” பல செய்ததில், கடைப்பலகைகள் கோஷ்ட்டிகளுக்கு தனியிடம் உண்டு"......

அவர்கள் பேசிய பேச்சுக்களைப் பற்றி, கடைப் பலகைகளில் காரசார விவாதங்கள் நடக்கும். சில வேளைகளில் மேடைகளில் பேசிய பேச்சுக்கள் ,அடிதடி வரைக் கொண்டு போய் உள்ளது....

1992 க்குப் பிறகு கடைப் பலகைகளில் உட்கார்ந்து பேசவே நடுக்கம் வந்து, யாருமே போகாத நிலைமை வந்துவிட்டது..

“பாழாப்போன டி.வி.வந்துலப்பா மனுஷங்களை, வீட்ட விட்டு வெளியே போக விட மாட்டேங்குது”...இப்படியும் சிலர் அங்கு வாரத மனுஷாட்களைப் பற்றி பேசுவதை நானே கேட்டேன்.

திங்கள், 10 மார்ச், 2014

பாட்டால் கட்டிப் போட்டவர்கள்...


நூறாண்டுகளுக்கும் மேலாக மேலப்பாளையம் மக்களோடு கலந்து, மகிழ்ச்சியையும்,பெருமிதத்தையும் தந்தது  தயிரா இசை...என்கிற ஒரு வகை இசை ஆகும்....தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதை "தப்' அல்லது "தப்ஸ்"  இசை என்றே அழைக்கிறார்கள்..
மேலப்பாளையத்தில்  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை,
நூருல் ஆரிபீன் கம்பெனி,
ஹைத்து ரூசியா கம்பெனி,
முகைதீன் அலங்காரக் கம்பெனி,
தங்கள் கம்பெனி,
கோட்டாத்துக் கம்பெனி,
காளை கம்பெனி,
ஓதி கம்பெனி,
இக்பால் இசைக்குழு ....என்று வரிசையாகத்  தயிரா கம்பெனிகள், நிறைய இருந்து வந்துள்ளன...
ஆனால் காலத்தின் ஓட்டத்தால், அவை எல்லாம் கலைந்து காணாமல் போய்,  "தயிரா" மற்றும் முரசு வடிவத்திலான "டங்கா" என்றால் என்றால் என்ன ?  என்று, அடையாளம் காட்ட, இக்பால் இசைக்குழு மட்டும் தான் கடைசி தருணத்தில், இருக்கிறது... அடுத்தத் தலை முறை இதை வீடியோ பதிவில் தான் பார்க்க முடியும் என்கிற நிலையில் உள்ளது...... 
எம்.கே. தியாக ராஜ பாகவதரும் , பி.யூ.சின்னப்பாவும், கிட்டப்பாவும்,டி.ஆர்.மகாலிங்கமும், பாடல்களால், மனசெல்லாம் ஆட்சி செய்த அந்தக்காலத்தில் நெசவாளிகள்,  சினிமா பாடல்களைப் பாடவில்லை...பிற்காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களும் பாடவில்லை.....மேலப்பாளையம் "வாலை தாசன்"என்கிற மஞ்சி முகம்மது எழுதித்தந்த பாடல்களைத்தான்....பாடி மகிழ்ந்தார்கள்......

பாகவதரின் பாடல்களையும்,எம்.ஜி.ஆர்.,சிவாஜி படப் பாடல்களையும் தாண்டி ,"காக்குழியில்" தறி நெய்த சாமான்யர்களின் பாடல்கள் பல தந்தது, வாலை தாசன் முகம்மது தான்.  அவரின் பாடல்களை இக்பால் இசைக்குழு..மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு தப்ஸ் இசைப் பாடகர்கள்  ,பக்கீர்கள் .ஆண்டுகள் எழுபதையும் தாண்டி, இன்னும் பாடிக்கொண்டு வருகிறார்கள்..
" நெய்யும் போதே ஞானக் கவிகள் பாடிக் கொண்டு நெய்ததால், அந்த வேஷ்ட்டியை உடுத்துக் கொண்டு செல்லும் போதெல்லாம் சிறப்பு" என்று கூறித் தந்த நெசவாளிகள்....நிறைய இருந்தார்கள்...
அந்தக்கால அரசியல் தலைவர்கள் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,அவரது சகோதரர் சட்ட மேதை கே.டி. எம்.அகமது இப்ராகிம், வழக்கறிஞர்கள் எல்.கே.எம்.அப்துல் ரகுமான், முகம்மது ஹுசைன் சாகிப், முதலான மூத்தவர்கள் காத்து நின்றது நெசவுத்தொழில் ஆகும்..........

மேலப்பளையத்தின் தறிகளில் உருவான தரமிக்க கைத்தறி ஆடைகள், பர்மா நாட்டின் ரங்கூன், மாண்ட்லே, அவ்கான், முதலான இடங்களிலும்  பாக்கிஸ்தான் நாட்டில் கராச்சி, பங்களா தேசில்  சிட்ட காங் மேற்கு வங்காளத்தில் கல்கத்தா கேரளத்தில்  ,கொச்சி,கொல்லம் போன்ற இடங்களிலும் புகழ் பெற்று விளங்கியது.

அப்போது மேலப்பாளையத்தில் மாஸ்ட்டர் வீவர்களாக விளங்கிய, என் பெரிய வாப்பாமார்களான LKS. பிரதர்ஸ் என்று அழைக்கப்பட்ட அப்துல்லா லெப்பை, முகம்மது மீரா முகைதீன் தரகனார், ஷேக் மதார், தக்கடி உதுமான் தரகனார் என்கிற T.S.M.O. உதுமான் சாகிப், லேஸ் ஹவுஸ் புகாரி சாகிப், மூளி கலந்தர் லெப்பை, சமாயினா யூசுப் லெப்பை, பருத்தி சாகுல் ஹமீது தரகனார், பருத்தி ஹனீபா தரகனார், முதலான பெரும் ஏற்றுமதியாளர்கள் இருந்தார்கள்....அவர்கள் இந்தக் கம்பெனிகளை ஆதரித்து வந்தார்கள்...
கைகளுக்கும்,கால்களுக்கும் சதா வேலையைக் கொடுத்த தறித்தொழிலின்  நெசவாளர்கள், நெய்யும் போதே பாடிக கொள்வார்கள்.....அவர்கள் பாடுகின்ற பாடல்களுக்கு தறியின் நூலைத்தாங்கிய ஓடம ஓடும் ஒலியும் மிதியின் சப்தமும் ஒரு வகை தாளத்தைக் கொடுக்கும்...மனம் மறந்து பாடுவார்கள்...   

 
சினிமாப் பாடல்களின் மோகத்தில் நெசவாளிகள், மூழ்கி விடாமல் ,ஆனால் அதே ராகத்தில் இஸ்லாமியப் பாடல்கள் பல பாடித்தந்த பெருமை வாலை தாசன் முகம்மது அவர்களுக்கு உண்டு....
அவர் எழுதிய ஒவ்வொரு பாடலிலும் அவரின் பெயர் விளங்கும் வகையில் "வாலை தாசன்" என்கிற பெயரை பதித்திருப்பார்.... வயிற்று வலியின் கடுமையால், 1964 கால கட்டத்தில் இறந்து போய் விட்டார்..
அவர் இருக்கும் போதே அவர் எழுதிய பாடல்களை அவரோடு கல்யாண வீடுகளிலும், ஹஜ் பயண வரவேற்புகளிலும், மார்க்க நிகழ்வுகளிலும் பாடியவர்கள், "காடி" புகாரி, "சமாயினா" முகம்மது ஹுசைன் வாத்தியார் ஆகிய இருவரும் ஆவார்கள்.மேலப்பாளையம் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களுக்கும் அறுபது வயதைத்தாண்டிய இந்த தயிராக்குழு ஹுசைன் வாத்தியார் மகன் சமாயினா சுலைமான் தலைமையில் தற்போது  பாடுவதற்கு சென்று வருகிறது.....

இன்று வயோதிக நிலையில்,  அரசு தரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில்,  தம் மகளோடு வாழ்ந்து வருகிற ஹுசைன் வாத்தியார்,  ஏழு கட்டை சுதியில் அவர் பாடிய பல்வேறு பாடல்களை, நினைவு படுத்தி பாடிக்  காட்டுகிறார்...........
காவேரிதான் சிங்காரி....



சிங்காரித்தான் காவேரி...".........சினிமா பாடல் மெட்டில்,அவர்கள் பாடிய பாடல் ஒன்று, மேலப்பாளையம் ஊரில் திரும்பிய பக்கமெல்லாம்  பெரும் பரபரப்பை கொண்டு வந்ததாம்... சிலர் மேடையேறி அடி தடிக்கும் வந்தார்களாம்...அது ஒரு காலம்.... என்று நீண்ட பெருமூச்சு விட்டு..... பாடிக் காட்டினார்... 
அந்தப்பாடல் இப்படி ஆரம்பித்தது

"மேதாவி போல் மாபாவி ....
மாபாவி போல்  மேதாவி.......

அருளைப் பெற்றவன் மேதாவி.....

அலைந்துகேட்டவன் மாபாவி....."...
அப்புறம் அனு பல்லவியாக ....
அந்தப்பாடலில்............
"சாகிப் என்ற பேரை வைத்து தடுமாறி....
சில....
சாகிபுகள் இருக்கிறார்கள் நிலை மாறி...."
என்று,  அந்தக் காலத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை தயிராவை வைத்துக் கொண்டு அவர் பாட, கடும் கண்டனங்களைச் சந்தித்த வற்றைச்சொல்லிக் காட்டினார்..........
அவரைப்பற்றி வரும் இன்னும் அதிகமாக பதிவிட வேண்டியதுள்ளது...





 

சனி, 22 பிப்ரவரி, 2014

நெஞ்சம் மறப்பதில்லை.......

நெஞ்சம் மறப்பதில்லை.......

கொஞ்ச நாட்களாக....நான் சின்னஞ்சிறிய வயதில் ஓடியாடிய இடங்களைப் பார்க்கவேண்டும், அங்கே கொஞ்சப் பொழுதாவது அமர்ந்து வரவேண்டும் என்கிற தவிப்பு அவ்வப்போது மனதுக்குள் வந்து போகிறது....

அந்த வயதில் எனக்குக் கிடைத்தவாய்ப்புக்கள்., என் பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளதா ?என்றால் இல்லை என்றே சொல்வேன்...

பள்ளிக்கூட கோடை விடுமுறைக்காலங்களில் எங்கள் வீட்டின் பின்புறம் 15 அடி தூரத்தில் உள்ள "நம்ம ஆத்தில்"....அதான் பாளையங்கால்வாயில் தண்ணீர் வறண்டு போகும்.... வருஷத்தில் ஒன்பது மாசம் அந்த வாய்க்காலில் தூய்மையான தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும்.
பங்குனி சித்திரை  மாதங்களில் கால்வாய் வறண்டு போய் கிடக்கும்.

அந்த நேரங்களில் காலை 8 மணிக்கு எங்க வாப்பாவுடன் எங்க வீட்டுக்கு அடுத்துள்ள கரையைத்தொட்டு நடந்து கொண்டே தாமிரபரணி "பெரியாத்துக்கு" ப் போவேன்....

அதுக்கு முந்தி "சின்னப்பையனா" இருந்த காலத்தில் எங்க வாப்பும்மாவுடன் போவேன்....
ஆத்துக்கு போகும்போதே கதைகள் பலவற்றை சொல்லிக் கண்டு கையைப் பிடித்து அழைத்துச் செல்வாள்.
பல நேரங்களில்
.காலில் முள் குத்திவிடக்கூடாது என்பதற்காக, என்னை இடுப்பில் தூக்கிச்சுமந்து, வலது கையில், ஒரு வாளி நிறைய துணிகளை கொண்டு போய் ஆற்றில் துவைத்துக் கடும் சுமையோடு என்னை மீண்டும் சுமந்து கொண்டுவருவாள்.......

அவ கூட போனால், அங்க இங்க, ஆத்து நீருக்குள் என்னை இறங்க,   நீஞ்ச விட மாட்டாள்....

துணிகளெல்லாம்  துவைத்து முடித்துவிட்டு அவள் குளிக்கும் நேரத்தில் தான், ஆத்தில் என்னை இறக்குவாள்....

அது வரையும், அடிக்கிற வெய்யில் என்னை தாக்காமல் இருக்க, அவ போட்டிருந்த துப்பட்டாவால் மூடி,
என்னை ஆத்து மணல் மேட்டில் உட்கார வைப்பாள்..

அந்த துப்பட்டாவில் , அவ தின்னுகிற வெத்திலை, பாக்கு, அங்கு விலாஸ் போயிலை.....மணம்....... சுகமானது....இன்னும் என் நாசியில் நிற்கிறது... ராத்திரி நேரங்களில் அவள் அருகில் நானும் என்னுடைய தங்கையும் தூங்கும் போது ஆளுக்கு ஒரு துப்பட்டாவை அந்த வாசனையை முகத்தில் போட்டுக் கொண்டுதான் தூங்குவோம். அடடா....அதை .நான் எங்க போய்ச்சொல்ல?......

ஆத்தங்கரையில் இளம் காற்று வீசிக்கொண்டு வெயிலும் அதற்கு தக்கபடி அடித்துக் கொண்டிருக்கும். அவளின் மேலாடை என்னை மூடிக்கொள்ள  மெய்மறந்து போய் இருப்பேன்..

அப்போவெல்லாம் மதகடை ஆத்தின் கரையில்பனை மரங்கள் கணக்கு வழக்கில்லாமல் இருக்கும்..

கோடை வெய்யில் காலங்களில், நுங்கும், பட்டையில் குடிக்க பதநீரும் கிடைக்கும்....அந்த வாசமே தனி தான்....
ஆடி மாசக் .'காத்தடி' நேரத்தில், என்னை அந்த பனை மரங்களின் கீழே கூட நடத்தி கூட்டிப் போக மாட்டாள்....என்னவாம்?  'பனை மரங்களில் இருந்து  மட்டை ..அல்லது ஓலை....கீல மண்டையில விழுந்திரக் கூடாது ..அதுக்காக" என்பாள்.

இந்த பனங்காட்டுக்கு தெற்கே உள்ள வயக்காட்டுக்குள் இறங்கி.....போக வைப்பாள்....

அவ இறப்பதற்கு முந்தி  ஒரு வருஷம் வரை,தினமும்  ஆத்தில் போய் குளிக்கிற பழக்கத்தை, அவள் விடவே இல்லை...

கழுத்திலும் கைகளிலும் காதுகளிலும் தங்க நகைகள் ஜொலிக்க ஆத்துக்கு போய் குளிப்பதை நிறுத்தவே இல்லை. 
நீ தனியா போகாத.... கழுத்துல கையில கிடக்கிறதை எவனாவது அறுத்துகிட்டு போய் விடுவான் என்று நான் சொல்லும்போது கூட...
என்னை நம்ம வட்டாரத்துக்காரர்கள் அனைவருக்கும் தெரியும் யாரும் என்கிட்ட வர மாட்டார்கள் என்று சொல்வாள்.
அவளுக்கு சுகரும் இல்லை....பிரஷரும் வந்ததில்லை....ஒரு மாசம் படுத்தாள்.....மூனு நாளு நாள் தான் அவ ரொம்பச் சிரமப் பட்டாள்...

என் கையோடு அவளின் கை சேர்த்து, .....நான் பிடிச்சிக்கிட்டு இருக்கும் போதே, அவ மூச்சும் அடங்கி நின்னது....

வழக்கமா பெரியாத்துக்கு அவ கூட குளிக்க வந்தால், கொஞ்ச தூரத்துல இருக்கிற ஆல மரத்தைப் பார்க்கக் கூட விட மாட்டாள்.....அதன் கிளைகளின் கோலம்...ஒரு மாதிரி மிரட்டலைக் கொடுக்கும்.....

காரணம் அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் எங்களோடுதெருவோடு இணைந்து இருக்கிற, கோனார்கள்,தேவர்கள்,பிள்ளைமார்கள்,ஆசாரிமார்கள்,செட்டியார்களின்  சுடுகாடு இருக்கிறது....

அதனால் தப்பித்தவறி கூட அந்தப்பக்கமே என்னைப் போக விட மாட்டாள்
காலத்தின் போக்கால்.... பல வருஷ காலமா......வீட்டில் குளிக்கிற ஆசாமிகள் பட்டியலில் நானும் சேர்ந்து விட்டேன்...தாமிரபரணி யாரை "இங்க வராதே"ன்னு சொல்லுச்சு?


இப்போ பனைமரங்கள் எதையும் காணோம்....அழகான வயல் வரப்புகளையும் காணோம்...
எங்க வீட்டு பக்கம் பாலம் தாண்டி வயக்காடுகளை தாண்டி போகும்போது 20 அடி உயரத்துக்கு... மண் தரை எழுப்பி... புதுசு புதுசான பாலங்கள் கட்டி... ரயில்வே தண்டவாளங்கள் தலைக்கு மேல் போகின்றன.

எங்க வீட்டு புறவாசக் கதவைத் திறநது... படிக்கட்டில் நின்று பார்த்தால் தாமிரபரணிக் கரைக்கு அருகில் உள்ள பனங் கூடல் வரையும் தெரியும்.
இப்போ ரயில் பாதை உருவாகி வட்டதால்
 ரயில் பாதைக்கு மேற்கு பக்கம் உள்ள எவையும் தெரிவதில்லை. சமீபமா வயக்காட்டுக்குப் போறவங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பாதையின் வழியாகச் செல்வதில்லை.

நத்தம் வழியா போய், தாமிரபரணிக் கரையில் சுடல மாடன் சாமிக் கோவில் வரைக்கும், கான்க்ரீட் ரோடு போட்ட புண்ணியத்துல,அது வரைக்கும் மோட்டார் சைக்கிள்ல போக முடிகிறது....கொஞ்ச தூரம் நடந்தேன்... 

இன்னைக்கி...... அந்தப் பாறையைத் தேடினேன்....அதோ...அங்கே......தெரிந்தது... அந்தப் பாறைக்கு பக்கத்தில் தான் என்னை உட்கார வைப்பாள் அதற்கு அருகில் அழகான மணல்மேடு இருக்கும்..கொஞ்ச நேரம் அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டேன்..... மணல்மேடு இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்தப் பாறை இருந்தது. அதன் அருகில் சென்று முழங் காலுக்கு கீழே தாமிரபரணியின் தண்ணீர் ஓட.... அந்தப் பாறையில் இடுப்பைச் சாய்த்து அமர்ந்து கொண்டேன்.
அந்தப் பாறையை தடவிக் கொண்டே இருந்தேன்.

அவ வழக்கமா அங்க தானே..... சோப்புப் போட்டு என்னை குளிக்க வைப்பாள். குளித்து முடித்த பின்னர் தலையைத் துவட்டுவாள்... ஈர ஆடைகளை மாற்றி எனக்கு வேறு ஆடைகளை அணிவிப்பாள்..
 அந்த இடமும்.... சூழலும் என் வாப்பும்மாவின் நினைவுகளை அதிகப்படுத்தி விட்டது.
 "எம்மா." ...என்று அழைக்கனும்போல தொண்டை குழியில் சப்தம் வந்தது.... அவளோடு நான் சின்ன வயசில் பாறையில் அமர்ந்து .....காத்திருந்த காலமெல்லாம் கண்முன்னே வந்து சென்றது....சோப்பு போடுற அந்தப்பாறையை விட்டு இறங்கினேன்..

கொஞ்சம் வளர்ந்ததற்குப் பின்னர் என் தந்தையுடன் அதே பாறைக்குப் பக்கத்தில் நின்று குளிப்பதற்குச் செல்வேன். என் தந்தையோடு இரண்டு மூன்று நண்பர்கள் ஒன்றாக வருவார்கள். ஊர் உலகத்துக்கு கதைகள் எல்லாம் அங்கே பேசுவார்கள்.... நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை என் மீது காட்டிய பாசம்..... என்னை குளிப்பதற்கு அழைத்து வருகின்ற என் வாப்பும்மா.... அவர்கள் இருவரும் என் நினைவு பூராவும் வந்து அமர்ந்து கொண்டார்கள்...

 ....அதுக்கு மேல என்னால் அவர்கள் இருவரின் நினைவுகளையும் .தாங்கமுடியவில்லை....என்னை இவ்வளவு தூரம்..... வாழவைக்க முயற்சிகள் பல செய்த, எங்க வாப்பாவும்..... வாப்பும்மாவும் மனசெல்லாம் வந்துவந்து போனார்கள். அந்தப் பாறையை விட்டு இறங்க முயற்சி செய்தேன்.......  "எம்மா."... என்று  என் வாப்பும்மாவை அழைத்தேன்......அப்புறம் வாப்பா....என்றேன்....என்னை அறியாமல் .அழுதுவிட்டேன்.....அதுவும் சப்தமாக.... என் உடல் எல்லாம் குலுங்கியது. அழுவதற்கும் சக்தி இல்லை.
.எவ்வளவு நேரம் இதில் போனது என்று தெரியவில்லை....
போயிட்டாங்களே....என்ற நினைவுதான் மறுபடியும் வந்தது...
கொஞ்ச நேரம் கழித்து .....தண்ணீரில் இறங்கினேன்....மூழ்கி மூழ்கி எழுந்தேன்...
என் கூட யாரும் இல்லை....
எங்க வாப்பாவும்,......வாப்பும்மாவும் நான் தண்ணியில் "முங்கும்" போது மீண்டும்  என் நினைப்பில் வந்தார்கள் .......
தண்ணீரில் மூழ்கி எழுந்ததால் நினைவுகள் ....அமைதியாயின...

தூரத்தில் நண்பர்கள் சிலர் வந்து கொண்டு இருந்தார்கள்...

நான் இருந்த பாறைப் பக்கம் வந்து விட்டார்கள்...

என் தலையில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது........ தண்ணீரில் குளிக்கும் போதும் அழுதேன்.... கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு ..
வைத்திருந்த  துண்டால் தலையையும் உடலையும் துடைத்துக் கொண்டேன்....
கண்கள் மட்டும் சிவந்தே இருந்தன. 

அந்த பக்கம் வந்தவங்க போனவங்க எல்லாம்... என்னைப் பார்த்துவிட்டு
."என்ன விஷேசம்....நீங்க இங்க வந்திறிக்கியோ?" .....அப்படீன்னு விசாரிப்பு வேறு.....சிரிக்க முயற்சித்தேன்.... வலுக்கட்டாயமாக சிரித்த முகத்தைக் காட்ட முடியவில்லை.

கிழக்கு பக்கமாக திரும்பிக் கொண்டே....
"இனி அடிக்கடி வர வேண்டியது தான்"...நான் சொன்னது அவங்க காதில்...விழ வில்லை...

நான் அந்த ஆத்துக்குக் குளிக்கப் போனால் ....என் வாப்பும்மாவும் ....வாப்பாவும் வந்து போகிறார்கள். நான் என்ன செய்ய.












வியாழன், 30 ஜனவரி, 2014

“அக்கரைப் பச்சை.”



இன்னும் எத்தனை நாட்கள்......

விவசாயம்-விவசாயி என்று பேசப்போகிறேனோ ?......


தெரியவில்லை...
கல்லூரி முடித்தேன்........
கனவுகள் கண்டேன்....
இரவு-பகல் ஒன்றாய் ஓடி...ஆடிய
சங்காத்திகள்......
என்னை விட்டு ஒவ்வொருவராய்...
வெளி நாடுகள் சென்றார்கள்...
ஒரு சிலரைத்தவிர

தனிமை....அவ்வளவு தனிமை....அப்போதான் .
எப்போதாவது வரும் கடிதங்கள்,
பெருநாட்களில் வரும் தொலைபேசி அழைப்புகள்....
அவைதான் நட்புச்சங்கிலியை பாதுகாத்தன....
 
என்னால் முடியவில்லை......
என் காலில் நானே போட்டு வைத்தேன்...
விலங்குகள்.......
அங்க இங்க ஓடமுடியாமல் .......
சமூகப் பணிஎன்றும்....கல்விப்பணி என்றும்....
நம்மைவிட்டால் யார் செய்வா?”......
நான் கொண்டது .........
என்னை....பித்து நிலை.....கண்டுவிட்டான்
என்றார்கள்.
எல்லா தந்தைக்கும் வரும் கவலைகள்
என் தந்தைக்கும்.

என்னிடம்,
கோபமே கொள்ளாமல்....
வெளிநாடு போறியாப்பா?....” என்று கேட்டுப்பார்த்தார்..
இல்ல....வாப்பா.....நான் இங்கதான்....
இந்தியால தான்.”...என்றே சொல்லிவைத்தேன்..
வேறென்ன செய்யப்போற?.”....
கவலைகள் சூழக்கேட்டார்.

அதான்....நான் விவசாயம் செய்யப்போறேன்என்றேன்...
உனக்கு சரியா வருமாப்பா?”
ஏன்....வாப்பா.?”......
நம்ம சொல்ல மனுஷனும் கேக்க மாட்டான்,
மண்ணும் கேக்காதுப்பா”.....
சலனமே இல்லாமல்....
எங்க வாப்பா சொன்ன போது
கலக்கமாகத் தெரிந்தார்......
இல்லை......நீங்க நினைப்பது தப்பு.”....
நவீன தொழில் நுட்பம்.....கருவிகள் என்று சொல்லி
சம்திக்க வைத்தேன்...
அதைச்செயலிலும் காட்டினேன்.

தினமும்.....நான் பார்க்கிற
விவசாயிகள் வாழ்க்கை
போராட்டங்கள் தான்.......


காடுவெட்டி என்று ஒரு ஊர்..
நெல்லை மாவட்டம் களக்காடுபக்கம்.
அங்கும் பாலைநிலம் போல்....
சில நிலங்கள்....
அதைப் பார்க்கச்சென்றேன்.
அப்போது தண்ணீர் மட்டம் பக்கத்தில்...
அதை வைத்து பயிர் வளர்த்தேன்....
இல்லை....உயிர் வளர்த்தேன்....
செடிகளும்,கொடிகளும்,மரங்களும்.

இரவு-பகல் எந்நேரமும்
பச்சைக் கனவுகள்......
அதே நினைவாய்....

பல நேரம் போன் பேச
மூன்று கிலோ மீட்டர் வரவேண்டும்...
ஒரே நாளில் தோட்டத்துக்கும் வீட்டுக்கும்
பலமைல்கள் படைஎடுத்தேன்...
மங்கம்மா சாலையில் போயிருந்தால்
அதே தூரத்தில் மதுரை.....வந்திருக்கும்.

அவ்வளவு உழைப்பு......
அவ்வளவு வெறி.....
அவ்வளவு ஆர்வம்....

அன்று இருந்த வேகம் என்னிடம் இன்று இல்லை....
துணிவு இல்லாமை என்றும் இல்லை...
இயலாமை...... மட்டும்தான்.
இன்னொரு இல்லாமை
எது?.....
தண்ணீர்....தண்ணீர் தான்..

நம்மில் பலருக்கு
நெல்லும்,வாழையும் எப்படி விளைகிறது என்று
பாலபாடம் கூடத்தெரிவதில்லை......

கடந்த இரண்டு ஆண்டுகளாய்...கிராமத்தில்
பருவமழை பொய்த்து.... பொய் சொல்லிவிட்டது....
இருக்கிற தண்ணீரை உயிர் தண்ணீராய்......
சொட்டு நீராய் ஊற்றிக் கொடுக்கிறோம்.....
ஆறுகளில் மண் எடுத்து போய்விட்டதால்
ஆற்றின் நீரும் ஆழத்துக்கு ....
அதுவும் வறண்டு .......இல்லாமல் போய்விட்டது.
காலம் காலமாய் வற்றாமல் ஓடி வந்த
பச்சை ஆற்றுத் தண்ணீர்
அனைக்கட்டால் தவளவே இல்லை....
அதனால் தண்ணீரும் இல்லை...

மனுஷனுக்கு சாப்பிட பல இடங்கள்....
தண்ணி குடிக்கவும்-அடிக்கவும்
பல இடங்கள்....
கோடை வந்தால் குடிக்க மடங்கள்....
'
ஒருநாள் பெருமை காட்ட'
ஆடம்பரம் காட்டும்
தண்ணீர் பந்தல்கள்...
ஆனால்.....மாடுகளும்,ஆடுகளும்
எந்தக் கடைக்குப் போய்
மினரல் வாட்டர்வாங்கிக் குடிக்க?
பசித்த வயித்துக்கு அதுகள் திங்க
புல் கூட கரைகளில் இல்லாமல் போச்சு.......

அதுங்க கைல என்ன ஒட்டா இருக்கு?
எல்லாரும் பார்த்து கையேந்த?.....

கையேந்தி பவன் முதல், நட்சத்திர ஓட்டல் வரை
பலவகை உணவுகள் .....மனுஷனுக்கு உண்டு.
ஆனால் வாயில்லா ஜீவன்கள்......
வயித்துப் பசி ஆத்த ......
எந்த கடையில்
வைக்கோலும்.....புல்லும் விக்கிறாக?
என்று கேக்குமா?
அதுகளுக்கு வாங்கத்தெரியாதே....

அதுங்க கிட்ட மணி பர்ஸ் ஏது?
எ.டி,எம்.கார்டு ஏது?

ஆனாலும் என்னால் பார்த்துக் கொண்டு
இருக்க முடியாதே....
அதுங்களுக்கு
என்ன விலை கொடுத்தாவது
வாங்கித்தருகிறேன்....
எவ்வளவோ...இழந்துவிட்டேன்.....
அதற்காக.....

அந்த வாயில்லா ஜீவன்களை.....
கசாப்புக்கா நான் அனுப்ப முடியும்?
சொன்னால் நம்ப மாட்டார்கள்
என்னை பார்க்க விட்டால்......
'
கண்ணீர் விடுபவை' அவை....

எய்யா.. நீ இப்படிக் கலங்கி நின்னா?
ஒன்னு மில்லாத விவசாயி
எங்கையா போவான்?.....
எங்க தேவர்; என்கிட்டே கேட்டார்.
பதில் சொல்வார் யாரும் இல்லை...

கடைக்காரர்களுக்கு
தினமும் லாபம் கிடைக்கிறது.

அரசாங்க ஊழியர்கள்...
மாதம்
ஒன்னாம் தேதி வந்துவிட்டால்
கையிலே காசு....
அதையும் தாண்டி.....
பலர் பை நிறைய வாங்குகிறார்கள்
எந்த ஆத்மி வந்தால் நமக்கென்ன ?
அப்புறம் திபாவளி போனஸ்
பொங்கல் பரிசு’.. வேற.....
எத்தனையோ ஓய்வூதியங்கள் வேறு....
திருவிழாக்கள் வராதா?.....
என்று ஏங்குவோர் பலர்.....

இன்னும் மூணு மாசம் தள்ளி வராதா?
என்று தவிப்போர்.......
கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள்...
பாழாப் போன பொருளாதாரம்
நோய் நொடி வந்து,
படிப்புக் கனவுகள் வந்து,
கொடுக்கல் வாங்கலை
வாழ்வித்துக் கொண்டு இருக்கிறது...

பொஞ்சாதியோடும்,பிள்ளை குட்டியோடும்
டவுன் பக்கம்
என்னைக்காவது வந்தால்
தொலைஞ்ஞான்.....

"
எங்கையா......லைசன்சு....
எல்மட்டு ஏய்யா போடல்ல?
கட்டுயா பைன"........
.
"
ஆத்துக்குல குளிக்க வந்தன்.....
அப்புமாயா எல்மட்டு?"....
அவன் குரல் யாருக்கு கேக்கும்?
அதுக்குள்ளே...அவன்
பொண்டாட்டியும் பிள்ளைகளும்
அதைப் பார்க்கும் மிரட்சி
மனசு....தாங்காது.....

சட்டத்தின் காவலர்களுக்கு
சட்டத்தைக் "காக்க வேண்டிய"
'
கடமை" இருக்கிறதே .........
அன்னைக்கு அந்த விவசாயிதான்
"
ஆப்புட்டான்.".......

பாவேந்தர் சொன்னது போல
தன் பெண்டு....தன் பிள்ளை...தன் வீடு,
தன் சுற்றம் வாழ்ந்தால் போதும்
என நினைக்கின்றார்கள் .......

மாசச் சம்பளக் காரர்கள்
கொடுத்து வைத்தவர்கள்.....

ஆனாலும் விவசாயிக்கு
பச்சையையே பார்த்து வளர்ந்ததால்
தூரத்தில் தெரிவதெல்லாம்
பச்சையாய் தெரிகிறதே....

அக்கரைப் பச்சை.
விவசாயிகள் பற்றி பேசிக் கொண்டு இருந்த
அந்த பச்சை தலைப்பாகிழவனும்
இயற்கையோடு
போய் சேர்ந்து விட்டான்
ஈரோட்டுச்சிங்கம் தந்தை பெரியார் போல...

 இந்தப்பழம் ஏரோட்டிகளின் சிங்கம்......

வயக்காட்டுக்கு போக வழியில்லாமல்
முன் முகப்பை எல்லாம்
பிளாட் போட்டு வீடு கட்டி தடுத்தால்....
சோத்த விளைய வைக்க எங்க போக?...
எப்படிப் போக?

அந்த மனைகளில்.......
கட்டப்படும் வீடுகளுக்கு
எந்த நடை முறையும் இல்லாமல்
திட்டமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட
மின் விளக்குகள்
வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
இவ்வளவு கொடுத்து கரண்ட் வந்தது
"
இவ்வளோ கொடுத்து தண்ணி வந்தது."....

பாவம் விவசாயி.....
நானும் தான்.


வியாழன், 9 ஜனவரி, 2014

அன்பின் வலிகள் .....



இயற்கையும் அது சார்ந்த தொழிலிலும் இருக்கும்போது வரும் மகிழ்ச்சியும்,வருத்தமும் இயற்கையாகவே இருக்கும்.

இதென்ன புதுசா ஒரு தத்துவமுன்னு யாரும் கேக்க மாட்டாங்க... வயலில்,வரப்பில் நடக்கும் போது வேளாண் தொழில் இருப்பவர்கள் எறும்புக்கடிகளுக்கும், முள் குத்தல்களுக்கும் ஆளாவது என்பது, தினசரி நடக்கும் மாமூலானவிஷயங்கள் தான்.

அது தேள், நட்டுவாக்களி, பாம்புக்கடி என்பது அசாதாராணமானது...தேள்கடிக்கு மருத்துவம் செய்யாமல் மண்டையைப் போடுபவர்கள் கதை, கிராமங்களில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படியெல்லாம் நடக்கும் என்பதற்காக யாரும் வயல், வரப்புகள் பக்கம் போகாமல் இருப்பதில்லை.
அண்மையில் குற்றாலம்,வைரம்ஸ் நகர், சீனாதானா விருந்தினர் இல்லம் பக்கம், ஒரு மாலை நேரத்தில் சர்வ சாதாரணமாக ஊர்ந்து வந்த மிகப் பெரிய மலைப்பாம்பை பார்த்துவிட்டு, “உதவி,.....ஓடிவாங்க,......பாம்பு.....  அப்படீன்னு வார்த்தைகள் கூட  வெளியே வராமல்,வேர்த்து விறுவிறுத்து,  விக்கித்துப் போன நண்பர் ஒருவரைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பால், அவர் இன்று வரை என்னோடு பேச்சே இல்லாமல் இருக்கிறார்....அடுத்த அஞ்சாவது நிமிஷம், என்னை கூப்பிடக்கூட நேரமில்லாமல் அல்லது பயந்து   அங்கிருந்து புறப்பட்டு  திருனவேலிக்கு.ஓடோடி வந்துவிட்டார்...
"மனுஷன் குற்றாலத்துல  இருப்பானா?"  அப்படீன்னு அவர் கேட்ட கேள்வி என்னை இன்னும் அதிகமாக சிரிக்க வைத்தது....
பாம்புகள் நடமாடும் காட்டில் நாம், இருந்தால் அதுங்க  வரத்தானே செய்யும்...அதுங்க, உங்களுக்காக வெளி ஊருக்கா போக முடியும்?”..... அப்படின்னு அவருக்கு புரிகிற மாதிரி கேட்டாச்சு...”.நீ என்னை தனியா விட்டுட்டு போனப்பாரு ?அத..... அதத்தான் ஏத்துக்க முடியல்லைங்கான்...அடேய் ....உன்ன பாம்பு கடிக்கனும்ன்னு, எனக்கு என்னடா ஆசை?” அப்படி இப்படின்னு எவ்வளவோ சொல்லியாச்சி ஆனாலும் மனுஷன் பேசித்தொலைக்க மாட்டேங்கான்.மசிய மாட்டுக்கான்.
பலருக்குத்  தெரியாது; கடந்த இருபது ஆண்டுகள் காலமாக தாமிரபரணி நதியோரம் பிடிபடுகிற பாம்புகள் குற்றாலம் சித்தருவி பக்கம் தான் விடப்படுகிறது என்பது. அது தெரிஞ்சால்  பலர், அந்தப் பக்கம் கூட வரமாட்டார்கள்..... 
நான் விவசாய வேலைகள் செய்கிற காலம் முதற்கொண்டு, பலவகை பாம்புகளைப் பார்த்து வந்துள்ளேன்....கால் மிதிக்கும் பக்கத்தில், அதைப் பார்த்த அதிர்ச்சியில, சுருண்டு கிடக்கும் பாம்பைத்தாண்டி குதித்து வந்து இதயம் படபடக்க ஓடியும் வந்துள்ளேன்.
பாம்புன்னா நடுக்கம் வரத்தானே செய்யும்..அதுவும் படம் எடுத்து மூஸ்....ஸ்...ஸ்..என்று பாயும்  நாகப் பாம்புகள் பயமுறுத்தும் போது?...வேறு என்ன செய்ய?......அதப் பார்த்து சிரிப்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்....
எங்க தோட்டத்தில் பரம சிவக்கோனார் என்கிறவர்  கொஞ்சம் வயசாளி...அந்த ஆள் பாம்பைக் கண்டால், கையில் கம்பிருந்தாலும் அதை அப்படியே தரையில் போட்டு விட்டு,  பய பக்தியோடு,மேல் துண்டை இடுப்பில் அவசர அவசரமாக கட்டிக் கொண்டு  ....... நாகராசா......எய்யா.....போயிடுய்யாஅப்படீன்னு பாட்டு வேறு படிப்பார்....ஏன்யா...இப்படி?” என்று கேட்டால்...எங்க அப்பாரு...சொல்லி இருக்காங்கையாஅப்படீம்பார்.
எங்க வீட்டில் நான் ராத்திரி வேளைகளில் தோட்டத்தில் தண்ணி பாய்ச்சலுக்காக புறப்படும்போதெல்லாம் எங்க உம்மா சுலைமான் நபியை நினைச்சுக்கோ....அவங்களுக்குத்தான் எல்லா விலங்குகளும் வசப்பட்டுச்சுஅப்படீம்பாள்..எங்க வீட்டம்மாவோ கையில லைட்,கம்பு  இல்லாம அங்க, இங்க போகாதீங்கஎன்று ..ஒரு ஆலோசனையும் தருவார்.
விலங்குகளால், ஊர்வனவற்றால் பகலில் வெளிச்சத்திலும்,இரவில் இருட்டிலும் விவாசாயத்தொழிலில் உள்ளவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டியதுள்ளது....அது பயம் இல்லை...கொஞ்சம் முன்எச்சரிக்கைதான்.
ஆனால.....பறப்பனவற்றால்?...... 

மே மாத இறுதியில் ஒருநாள் மதியம்
,கோடை விடுமுறை முடியப்போகும் நேரம்....பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஐந்து  நாட்கள் இருந்தது. சரி, ”எங்க  போறோம்? எங்க வாறோம்?  இன்னைக்கு பிள்ளைகளோட தோட்டத்துக்கு போவோம்ன்னு எல்லோரையும் அழைச்சிக்கிட்டு போனேன். அன்னைக்கு, காரோட்டியும் நானே.
எம் பிள்ளை சின்னவள் இன்னைக்கு நான் பிறந்தநாள்.....இன்னைக்கு நாம எல்லோரும் தோட்டத்துக்கு போறோம்என்று சந்தோஷமாகச் சொன்னாள்...

வீட்டில் இருந்து கொண்டுபோன சாப்பாட்டைத்  தட்டில் வைக்கச்சொல்லிவிட்டு, பம்ப் செட்டில் இருந்து, செல்லும்  தண்ணீர் , தென்னந் தோப்பில் சரியாகப் பாய்கிறதா? என்று பார்த்து வரப் போனேன்.

ஒரு இடத்தில்  தென்னைக்கு அடியில், சொட்டு நீர் வருகிற அந்தக் குழாயின் மேல்,  ஒரு காய்ந்த தென்னை ஓலை ஒன்று, குறுக்காகக் கிடந்தது..  மட்டையின்  அழுத்தத்தினால் மற்ற மரங்களுக்குத் தண்ணீர் சரியாகப் பாயாதே,என்கிற கவலையால் அந்த ஓலையைத்தூக்கினேன்...

அந்த மட்டை ஒரு,இரு நாட்களுக்கு முன்பாகத்தான் மரத்திலிருந்து கீழே விழுந்திருக்க வேண்டும். அதை நான் தூக்கியவுடன்......நான் எதிர் பார்க்காத ஒன்று நடந்தது......

புஸ்.....என்று கரும்புகை போன்று ஏதோ கூட்டமாகக் கிளம்பியது..முதலில் நான் கொசுக்களோ என்றே நினைத்தேன்....அது தேனீக்களும் அல்ல,குளவிகளும் அல்ல என்பது புரிந்தது...அய்யோ இது விஷ வண்டுகளாச்சே...என்று கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்தேன்... நான் படபடப்புடன் ஓடத்துவங்கினேன்... நூற்றுக்கணக்கான கடந்தைவண்டுகள் என்னைத்தாக்க மூர்க்கமாக பறந்து வந்தன...ட்ராக்டர் மூலம் உழுது போட்ட அந்த நிலத்தில், தட்டுத் தடுமாறி என்னால் முடிந்த மட்டும்  ஓட ஆரம்பித்தேன்.

என் பிள்ளைகளும்,என் மனைவியும் இருந்த திசையில் வந்த போதுதான், நாம் அந்தப்பக்கம் போககக் கூடாது.போனால் அவர்களையும் அந்தக் கூட்டம் கொட்டித்தீர்த்துவிடும் என பயந்து எதிர் திசையில் போகவேண்டுமென முடிவு கட்டி,கிணற்றில் குதிக்க மறுபுறம் ஓடினேன்...ஆனாலும் அந்த வண்டுகள் விடவில்லை...நூற்றுக்கணக்கில் என்னைத்துரத்திக் கொண்டு வந்தன...
என்னால்  ஒருகட்டத்துக்கு மேல் ஓட முடியவில்லை..என் கைகளால் அவைகளை விரட்டினேன்.....பலனளிக்கவில்ல...என் முதுகு,பிட்டம்,தொடைகள் கால்கள்,இன்னும்தலை,கழுத்துப்பகுதிகளில் கொட்டிதீர்த்தது..எல்லா இடங்களிலும் தீக்கங்குளை வைத்து பொசுக்கினால் எப்படி வலிக்குமோ அப்படி ஒரு வேதனை....என்னால் தாங்க முடியவில்லை..

இதற்கிடையே நான் அங்கும், இங்கும் ஒடுவதைப்பார்த்த எங்க பாண்டியன் பதறிப்போய்விட்டார். வயோதிகரான அவர்  நான் ஓடிய திசைக்கு அவரும் ஓடிவந்தார்...என் முதுகில், டி சர்ட்டில்,பேண்ட்டில்  ஒட்டிக்கொண்டு, கொட்டிக் கொண்டு இருந்த அந்த வண்டுகளை தன்,கைகளாளாலும் , மேல் துண்டாலும் அடித்து விரட்டினார்... அது பலனளிக்கவில்லை.

கொஞ்ச வண்டுகள் மட்டும் பறந்து விட்டன..வண்டுகள் கொட்டித்தீர்த்த வலி தாங்காமல்....தரையில் சாய்ந்து துடித்துக் கொண்டு இருந்தேன்.... அவர்  கைதாங்கலாக,என்னைத்தூக்கி , தம் தோள் மீது சாய்த்து .... என்னை கூட்டிவந்தார்..நான் என் உடல் முழுதும் சொரிந்து கொண்டே வந்தேன்....எங்கு தொடுவது என்றே தெரியவில்லை...உடல் முழுதும் வலி மயம் தான்..."என்னய்யா....இப்படிப் பண்ணிப்புட்டீக "  ? என்று கண்ணீரோடு அவரும் கேட்டுக்கொண்டார்...

" யாராவது இங்க ஓடியாங்களேன்....." எங்க பாண்டியன் போட்ட சப்தம் கேட்டு பிறந்தநாள் குதூகலம் பாடி வந்த என் மகளும்,  பிள்ளைகளும், மருமக்களும் என் மனைவியும்,  நான் தள்ளாடியபடி, மெல்ல நடந்து வந்த இடத்துக்கு என்னவோ 

ஏதோன்னு ஓடி வந்து விட்டார்கள்...எல்லோரும் ஒரு சேர அழ ஆரம்பித்தார்கள்....என்னால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை..


திடீரென ஆவேசம் வந்தவராக எங்க இசக்கி முத்து பாண்டியன்...எய்யா....இன்னைக்கு பார்க்க இங்க ஆள் யாரும் இல்லையே......நான் என்ன செய்யட்டும்...?நீங்க உடனே இங்கிருந்து போய் ஆஸ்பத்திரில போய் சேர்ந்துடுங்க......கொஞ்ச நேரத்தில காய்ச்சலும் அதோடு ஜன்னியும்வந்துரும்...நீங்க இங்க நிக்காதியன்னு....என்னை காரில் உள்ளே தள்ளினார்...காரில் உள்ள  எல்லோரும் அழுதபடிஇருந்தார்கள்.......என்னால் கார் ஓட்ட கூட முடியாத வேதனையும் வலியும்....

எங்க தோட்டம் நெல்லை மேலப்பாளையத்தில்  இருந்து  2கிலோ மீட்டர் தூரம். முக்கிய சாலையைத்தொட பத்து கிலோ மீட்டர் தூரம் தாண்ட வேண்டும்..அது வரை எனக்கு உடம்பில் ஓரளவு தெம்பு இருந்தது....

இன்னும் பத்து  கிலோ மீட்டர் தூரத்தில் மேலப்பாளையம்....
அப்போது காரை ஓட்டுவதில் எனக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது....கைகள்  தடுமாறுவதை  உணர முடிந்தது...
பாண்டியன் சொன்னது போல என் உடல் முழுதும் கடும் சூடு ஏறிக்கொண்டு இருந்தது....

தருவை,முன்னீர் பள்ளம்,தாண்டி எங்கள் ஊர், வி.எஸ்.டி.பள்ளிவாசல் சந்திப்பு வந்தது. 

எனக்குத்தெரிந்த ஆட்டோ டிரைவரை தட்டுத்தடுமாறி ......அழைத்து  என் பிள்ளைகள் மற்றும் மருமக்களை என் வீட்டில் விடச்சொன்னேன்..

நாக்கு குழறியபடி நான் சொன்ன அந்த நிலைமையை பார்த்து அந்த ஆட்டோ டிரைவர் காருக்குள் முகம்  நுழைத்து ,   என் முகம் பக்கம் வந்து ,தன் நாசியை சோதித்துக் கொண்டார்....

பக்கத்தில் என்னைத் தடவிய படி  அழுது கொண்டு இருந்த என் மனைவியைப் பார்த்து,  அவர்களின் நண்பர்களிடத்தில் என்னவோ சொல்லிக் கொண்டார்...


அதற்கு மேல் அங்கு நின்று கால தாமதம் செய்யவில்லை....என்னால் இவ்வளவு முடியுமோ அவ்வளவு தெம்பை திரட்டிக் கொண்டு வைராக்கியமாக,பாதி மயக்கத்தில்  டாக்டர் பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னால் போய் நின்றது மட்டுமே தெரியும்...

இரவு 11.00 மணியளவில் கண் விழித்தேன்...அதுவரை மயங்கிய நிலைதான்.....என்னைச்சுற்றிலும் அழுத கண்களோடு என் தாயும்,மனைவியும்,என் தலையைக் கோதியபடி என் அப்பாம்மா......மற்றும் பிள்ளைகள், மருமக்கள்,சகோதரிகள்,மச்சான்கள்,மைத்துனர்கள்,சுற்றிலும் பார்த்தேன்....

அந்தக்காட்சியினைக் கண்டு கலங்கிப் போய்.....  என் சின்ன மகளைத்தேடினேன்....,....அவள் அழுது முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தாள்....


 அவள்,  நான் கண் விழித்தும் என்னைப்பார்த்து அதிகமாக அழுதுவிட்டாள். நானும் தான்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்என்றேன்.....
அவள்....அழுகை கூடிவிட்டது.
இன்றும் அவளது ஒவ்வொரு பிறந்தநாள் தேதி வரும் போதெல்லாம்.....நான் இதையே சொல்லி என் மகளைக் கோபப்படுத்துகிறேன்......அவளாலும், என்னாலும்,......மறக்க முடியவில்லை...அந்த நாளை.
என் உடலில் உள்ள வண்டுகள் கடித்த ஆழமான சில  வடுக்கள் வேறு அவளது பிறந்த நாளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது....