சனி, 18 ஆகஸ்ட், 2012

ரமலான் பயணம்


         எனக்குத் திருமணமான பொழுதில் வந்த முதல் நோன்புப்பெருநாள்.
அப்போதுநான் சென்னைக்கும் ஊருக்கும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தேன்.
         காரணம் பல்வேறு சிவில் கேஸ்கள் என்னை, என் குடும்பத்தை அலைக்களித்துக்கொண்டு இருந்த கடுமையான வேளை அது.

    ஒருத்தருக்கொருத்தர் கேஸ் நடத்தும் சாதாரண மனிதர்களுக்கே கோர்ட் உத்தியோகம் மோசமானதாக இருக்கும்.ஆனால் நானோ தமிழக அரசை, அதன் நிலச் சட்டத்தை எதிர்த்து என்னுடைய குடும்பத்து உறுப்பினர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.
          சென்னை உயர் நீதி மன்றப் படிக்கட்டுகள் ஏறியதோடு, டெல்லி உச்ச நீதி மன்றம் வரையிலும் சென்றேன்.
      காலமும் பணமும் விரையமானது.நாட்டின் அருமையான சட்டங்கள் பல, அரசு அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தினால், அறியாமையினால் குடிமக்களுக்கு எப்படி எல்லாம் பாதகம் தரமுடியும் என்று, மற்றவர்களிடம் சொல்லிக் காட்ட,  என்னிடம் டாக்ட்டரெட் செய்யும் அளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.

      திருமணமாகி பதினைந்தாம் நாளிலேயே கேஸ் நடத்த சென்னை வந்து விட்டேன்.என் தந்தையும் தாயும் .என்னை நம்பி வந்த மனைவியும் பலநேரம் இதனால் வருந்தி இருக்கிறார்கள்.கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.என்ன செய்வது? கேஸ் நடத்தாவிட்டால் இழப்புக்கள்  நிறைய வருமே..கடமை இருக்கிறதே. குடும்பத்து மற்ற பங்காளிகளும் நான் பார்த்துக்கொள்வேன் என்று இருந்து விட்டார்கள்.
     சென்னையில் பல நேரங்களில் பெரிய வக்கீலை பார்க்கவே முடியாது.கேஸ் கட்டும் கையுமாக ,சில வேளைகளில் புத்தகமும் கையுமாகவே இருப்பார்கள்.
         கத்துக்குட்டி ஜூனியர்கள் கைகளில் அப்பாவிக் கட்சிக் காரன் கிடைத்தால் தொலைந்தான்.நாம் ஒன்னு சொல்ல, அவர்கள் நமக்குத்தெரியாததை கோர்ட்டில் சொல்லுவார்கள்.
     நாம் கேட்காமலே வாய்தா வாங்கி இன்னொரு நாளுக்கு வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள்.
    "வர்ற வாய்தாவுக்கு நீர் வந்துரும்.வரும்போது மறக்காமே திருனவேலி அல்வா கொண்டாரும்வோய்."
"வாய்தா எப்போ?"
" வர்ற மூணாம் நாளைக்குத்தான்."
"சார் நான் ஊருக்குப் போக முடியாதே ?"
"இங்கேயே இரும்மையா" அழகாக பதில் தருவார்கள்.
  வேறு என்ன செய்ய சென்னையிலே இருப்பேன்.
இதற்கு மாற்றமாக சில நல்ல வக்கீல்களும் எனக்குக் கிடைத்தார்கள்.என்னைத் தமது  நண்பனாக,தம்பியாக, மகனாகப் பாவித்த நல்லவர்களும் இருந்தார்கள்.அவர்கள்தான் எனது கண்ணீரைத் துடைத்து கரை ஏறச் செய்தார்கள்.


பீஸ் என்று நான் கொடுத்த மிகச்சிறிய தொகையை மிகப் பெருந்தன்மையோடு  பெற்றுக் கொள்வார்கள்.
       அரிதான குணமுடைய அவர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நெல்லை வழக்கறிஞர் தீன்அவர்கள், அவரதுசீனியர்அப்துல் வஹாப் அவர்கள், சென்னைகொடைஅரசு அவர்கள் ஆகியோரையும் சொல்லலாம்.

           கோர்ட்டுக்குப் போய்இன்னொரு நாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டு "வாய்தா" வந்து விட்டால் எனக்கு வேறு வேலை  இருக்காது.
நேராக வாலஸ் கார்டன் போய்விடுவேன்.
        அங்கே தான் முதல் தெருவில் ,அப்போலோ மருத்துவ மனை பக்கம்,  மணிச்சுடர் நாளேடு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களின் அலுவலகம்  இருந்தது.
       எனது குடும்ப "வழக்குப் போக்குவரத்தை" தலைவர் நன்கு அறிவார். 

அங்கே நான் சோர்வாகப் போய் அமர்ந்தால் "என்ன புது மாப்பிளை எப்படி இருக்கீங்க?" என்று அன்பு மொழி பேசி கலகலப்பாக்குவார். 

    பக்கத்தில் குளிர்ந்த மோர் இருக்கும் அதைப் பருகிடத் தருவார்.
      கொஞ்சநேரத்தில் தலைவர் வீட்டிலிருந்து மதிய சாப்பாடு வரும் அதைத் தலைவரும், நானும் இன்னும் வேறு யாராவது வந்தால் அவர்களும், பகிர்ந்தே சாப்பிட தலைவர் வற்புறுத்துவார்.எல்லோரும் உண்டுமுடிப்போம்.

    ரமலான் மாதம் வந்தது.அப்போதும் வாரக்கணக்கில் சென்னையில் தங்கவேண்டியதிருந்தது.இருபத்து எட்டாம் நாள் ஊருக்குப் புறப்பட ஆயத்த மானேன்.
      ரொம்ப சிரமப்பட்டு எக்மூரில் இருந்து புறப்படும் பஸ் ஒன்றில் பயணிக்க மேலப்பாளையம் பள்ளி காசிம் என்கிற குடும்ப நண்பர் பயணச்சீட்டு எடுத்து வைத்திருந்தார்.அந்த பஸ்சை விட்டால் மறுநாள் பஸ் எதிலும் இடமே இல்லை.சரி ஊருக்குப் போய் விடுவோம் என்று முடிவு செய்து விட்டு தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களிடம் பயணம் சொல்லப் போனேன்.

       அப்போது மாலை ஐந்து மணி இருக்கும் .தலைவர் தொழுது கொண்டிருந்தார்.தொழுகை முடிந்து சலாம் வாங்கியதும் நான் நிற்பதைப் பார்த்தார்.
      "என்னா.தம்பி ?என்ன சேதி "என்று அழகான மெல்லிய குரலில் கேட்டார்கள்.
"வாப்பா நான் ஊருக்குப் போகிறேன்"......
அவர்கள் எதோ ஒதிகொண்டிருந்தார்கள்.கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்.மீண்டும் ஊருக்குப் போவதைச் சொன்னேன்.
"நாளைக்குப் போலாம் தம்பி" என்று சொல்லிவிட்டு,தலைவர் .மீண்டும் தொழுகையைத் தொடர்ந்தார்கள்.




  "இங்க வந்தது தப்பாப் போச்சே,.....அடடா நம்ம ஊரில் ஒரு நாளைக்கு முன்னதாகவே நோன்பு வச்சாங்களே.அங்கே இன்னைக்கு இருபத்து ஒன்பது முடிஞ்சாச்சே..திடீர்ன்னு நாளைக்கு பெருநாள்ன்னு அறிவிச்சுட்டா என்ன செய்ய?.....நம்மள வாப்பா, உம்மா, மனைவி தேடுவாங்களே.இங்க வந்து பயணம் சொன்னது தப்பாப் போச்சே"ன்னு மனசுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். 
     அங்கே மேனேஜராக இருக்கும் நெல்லை ஏர்வாடி மீராசாஹிப் அவர்களிடம் போனேன்."சாச்சா,தலைவர் எதுக்காக என்னை நாளைக்குப் போ ன்னு சொல்லுறாங்க?உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு?"கேட்டேன்."
   "இன்னைக்கு எதோ இப்தார் பார்ட்டிக்கு போறதா தெரியுது.அதுக்கு உங்களைக் கூட்டிட்டு போறதா இருக்குமோ? என்னவோ?"ன்னு அவர் பட்டும் படாமலும் வழக்கம் போல் சொல்லி  முடித்தார்.
நான் என்ன செய்யன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்.
   "சாச்சா.நாளைக்கு நான் ஊரில் இருக்கணும்.எனக்கு தலை பெருநாள்.என்னை எங்க வீட்டில் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் கேட்டால் பஸ் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருப்ப தால் நான்  கிளம்பிட்டேன்னு    சொல்லி விடுங்கள்" என்று  வந்து விட்டேன்.

   அரக்க பறக்க ரூமை காலி செய்ய்துவிட்டு எக்மோர் ரயில் நிலையம் முன்பாக வந்து சேர்ந்தேன்.அந்த பஸ் எனக்காகவே காத்திருந்த மாதிரி தெரிந்தது.காரணம் நான் வண்டிக்குள் ஏறியதும் மற்ற பயணிகள்லாம் ஒரு பார்வை என்னைப் பார்த்த விதத்தில் நான் ஐந்து நிமிட லேட் என்பதைப் புரிந்து கொண்டேன்.
      பஸ் டிரைவருக்குப் பின்னால் இரணடாவது வரிசையில் சன்னலோரத்தில் என்னுடைய இருக்கை.   அதில் என்னை விட இளையவர் ஒருவர் இருந்தார்.'"அண்ணே எனக்கு வாமிட் வரும்னே .அதனாலே நான் ஜன்னலோரமா உங்க  சீட்ட்ல இருக்கேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"எனறதும் அடுத்து உள்ள சீட்டில் அமர்ந்தேன்.

   என்னை அடுத்து நடை பாதை.அதற்கடுத்துள்ள சீட்டில் நெல்லை வழக்கறிஞர்முருகவேல் அவர்களும்,அவருக்கு அடுத்து ஊத்து மலை இளைய ஜமீன்தார் எஸ்.எம்.பாண்டியன் என்கிற சங்கர மருதப்ப பாண்டியன் அவர்களும்.இருந்தார்கள்.
    ஊத்துமலை ஜமீன் தாருக்கு எங்கள் குடும்பத்தையும், என் வாப்பாவையும்,என்னையும் நல்லா தெரியும்.அவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மேலே ரொம்பவும் காதலும் மோகமும் உண்டு.திருநெல்வேலி வட்டாரத்தில் பி.எஸ்.எ.மோட்டார் சைக்கிள் அவர் மட்டுமே வைத்திருந்தார்.

   திருனவேலி பக்கம் அப்போதெல்லாம்1970 களில்மோட்டார் சைக்கிள்களை அவர்மாதிரி ஆட்களும்,பண்ணையார்களும்,போலீஸ் இலாக்காவைச் சேர்ந்தவர்களும் .பெரிய வியாபாரிகளும் தான்  வைத்திருந்தார்கள்.
       அது அந்தஸ்த்தின் சின்னமாக பார்க்கப்பட்டது.அவர்கள் எல்லோரும் திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் தியாகராஜன் ஆட்டோ ஒர்க்ஸ்  பரமன் அண்ணாச்சி கடையில் ஒன்று கூடுவார்கள்.
      அங்கே எங்கள் குடும்பத்தில் இளையவரான எங்கள் வாப்பாவும் அவரின் அண்ணன் வைத்திருந்த ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வார்.அந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தது.
      அந்தக் கடையில் த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி  முதலாளி, ஹரிராம் சேட் படம் இருக்கும்.அவர் தான் அந்த கடையை உருவாக்கியதாகச்சொல்லுவார்கள். எங்க வாப்பா சில நேரங்களில் என்னையும் மோட்டார் சைக்கிளில் அங்கே அழைத்துச் செல்வதுண்டு.அங்கே தான் ஊத்துமலை என்னை பல முறைப்பார்த்துள்ளார்.பாசமுறையில் கொஞ்சுவார். நான் வளர்ந்த பிறகும் போற வாற இடங்களில் கண்டால் விடமாட்டார். .
    "யோவ்... மருமகனே"என்று.தான் பெரும்பாலும் அழைப்பார்.திருநெல்வேலித் தமிழின் பாசம் அதில் இருக்கும்.
   "யோ....வ்வ்...எங்கய்யா  உன்ன ஊர்ல பாக்கவே முடியல்லே?என்னய்யா பண்ணிக்கிட்டுருக்கே?" என்று பார்த்த இடத்தில, பஸ்சில் என்னை விசாரித்துக்கொண்டார்.
    நான் ஒரு கேஸ் விஷயமா மெட்ராசுக்கு வந்ததை மட்டும் சொன்னேன்."ஒங்க அப்பா சுமையை நீர் சுமக்கீராக்கும் ".
    எங்க வாப்பா மற்றும் நில விபரங்கள் கேட்டு முடிக்கும் போது வண்டி தாம்பரத்தை நெருங்கி இருந்தது.
"யோவ்,மருமகனே,........... என்னைய்யா இது .அரை மணி நேரத்துல இந்த டிரைவர் இங்க வந்துட்டாநேய்யா?"
"ஆமாம் ராஜா".
அப்போதுதான் அந்த டிரைவர் பஸ் ஓட்டுகிற 'அழகை' கவனித்தேன்.மோசமான ட்ரைவிங் .மனசு என்னவோ போல் இருந்தது.
"வோய்....... இவன் நம்மள ஊர் கொண்டு சேப்பானாயா"?
"விழுப்புரத்துல பஸ் மாறிட வேண்டியது தான்யா"
இப்படி அவர் சொன்னதும் எனக்கு பக் என்று இருந்தது.

       பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் விழுப்புரத்தில் ஒரு ஓட்டல முன்பாக  வந்து  நின்றது.சுற்றிலும் ஆம்பிளைகள் மூத்திர நெடியில் தங்களுடைய ;கட்டாயக் கடமையை'முடித்துக்கொண்டிருந்தார்கள் .

    மனசு என்னவோ போல் இருந்தது.வேற ஏதாவது பஸ்சில் மூணு டிக்கெட் கிடைக்குமான்னு, 'ஊத்து மலை' அக்கம் பக்கம் நின்ற பஸ்களில் விசாரித்தார்.எல்லாம் புல்.
    "பேசாம திருச்சி போய், வேற பஸ்ல போய் விட வேண்டியது தாங்கற" முடிவுக்கு வந்தோம்.விழுப்புரம் வரையிலும் ஒரு மாதிரியாக வந்த பஸ் அதைத் தாண்டியதும் இன்னும் வேகம் எடுத்தது.
      ஒரு கட்டத்தில்  டிரைவரை சப்தமாக எச்சரித்த ஊத்துமலை, வண்டி ஓட்டுகிற இடத்துக்கே போய் டிரைவரிடம் "எப்பா நீ ஓட்டுவது கொஞ்சமும் சரியில்லை.பாத்துப்போப்பா"என்றார். டிரைவர் எதையும் காதில் வாங்க வில்லை.
    எதிரே கண்கூசும் விளக்குகளோடு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் நாங்கள் பயணித்த வண்டி கடக்கும் வரை, அடிவயிறு ஒரு கலக்கு கலக்கி நின்றது..
     அந்த டிரைவர் யார் சொல்லியும் கேட்கவில்லை.நான் இருந்த இருக்கைக்கு அடுத்து இருந்த இரும்புத் தூணை பக்கவாட்டில் சேர்த்துப் பிடித்துக்கொண்டேன்.தூக்கம் வரவே இல்லை.என்றைக்கும் இல்லாத பீதியும் பயமும் அடிக்கடி வந்து போனது.

     திருச்சி வரப்போகிறது. அப்பாடி இறங்கிட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு மேம்பாலத்தில் வண்டி ஏறியது. பின்னர் கடும் வேகத்தில் பஸ் இறங்கியது.எங்கள் கண் முன்னே, சைக்கிள் டயர் பொருத்திய தள்ளுவண்டியும், அதை ஒருவர் தள்ளிக் கொண்டு போவதும் தெரிந்தது.
  
     அடுத்த கணம் பஸ்சின் முன் கண்ணாடியில் தள்ளுவண்டிக்காரர் வந்து விழுவதும்,பஸ் டிரைவர் சடன்பிரேக் பிடித்ததும் தெரிய முடிந்தது.யாரும் எதிர் பாராத நேரத்தில், இறக்கத்தில் வேகமாக இறங்கிய பஸ் வலது புறமாகச் சாய்ந்தது.ஒரு ஆயிரம் வயலின் சப்தம் ஒரு சேரக் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு
சப்தம் வந்தது.
      இடது கையை அந்த இரும்புத்தூனோடு சுற்றி வளைத்து வலது கையைச் சேர்த்து தலையோடு கட்டிக் கொண்டேன்.முதலில் ஒரு பல்டி அடித்த பஸ் மறுபடியும் உருண்டு பக்கத்தில் இருந்த பள்ளத்தில் பக்கவாட்டில் சரிந்தது.கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே புரியவில்லை.என்ன நடந்தது? என்று அங்கே இங்கே பார்க்கும் போதுதான், தலைக்கு மேலே பஸ்சின் வாசல் படி இருப்பது தெரிந்த்தது.
எனக்கு பக்க வாட்டில் இருந்தவருக்கு இடப்புறம் நான் கிடந்தேன்.என் காலுக்கு ஊடே வேறு இருவர் குப்புறக் கிடந்தார்கள்.எழ  முயற்சித்தேன்.முடியவில்லை.

"தம்பி எழுந்திரியுங்கள் என்று நான் என்பக்கத்து சீட் ஆளை எழுப்பும் போது தான் அவர் உயிருடன் இல்லை என்பது தெரிந்தது.
பாலத்தில் பஸ் முட் செடிகளின் மேல் கவிழ்ந்ததால் அதில் வலுவான ஒரு கிளை அந்த இளைஞரின் நெஞ்சுக்குள்ளே நுழைந்து தெரிந்தது.அவர் இருக்கும் இடம் நாம் இருக்க வேண்டிய இடம் அல்லவா,என்ற அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

எப்படி எழுவது? என்றே புரியவில்லை.ஒரு வழியாக சுதாரித்து தலைக்கு மேலே பார்த்தபோது ஊத்து மலையும்.வக்கீல் முருகவேல் அவர்களும் சீட்டுகளின் மேல் கால வைத்து ஏறி பஸ்சின் வாசல் படிப்பக்கம் நின்று கொண்டு, என்னைத் 'தம்பி' 'தம்பி' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு முன் சீட்டில் இருந்தவர்களும் பிழைக்கவில்லை.

நீ ஏறுகிறாயா?இல்லையா?பஸ் தீப்பிடிச்சுடும்.ஏறுய்யாஎன்று ஊத்து மலை உரத்தகுரலில் என்னை அழைத்தார்.
ஒருவழியாக சமாளித்து மேலே ஏற  எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.இதில் ஊத்து மலை எப்படி ஏறினார் என்று யோசிக்கும் போது தான் அவர் காடு மேடுகளில் வேட்டைக்குப் போன அனுபவம் கொண்டவர் என்பது நினைவில் வந்து போனது.
எங்கய்யா அவன்?நம்மள இப்படி இந்த கதிக்கு ஆக்கின டிரைவரைப் பிடிய்யாஎன்றார் மிடுக்கோடு.".


   பஸ் கவிழ்ந்ததும் ஓட்டம பிடித்தவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை என்றார்கள்.பஸ் விழுந்த இடத்தில் இருந்த S.K.எஜன்ஜீஸ் என்கிற பெட்ரோல் பல்க் காரர்களும் அதுக்கு பக்கத்தில் இருந்த ஒர்க் ஷாப் தொழிலாளிகளும் பஸ்சில் மாட்டிக்கொண்ட ஒவ்வொருவரின் உடைமைகளை எடுத்து வந்து கொடுத்தது வாழ் நாளில் மறக்க முடியாததது


   பின்னர் ஒருவழியாக திருச்சி பஸ் நிலையம் வந்து வேறு பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம்.அது தனிக்கதை.
ஊரில் கிழிந்த சட்டை பேண்டோடு பார்த்த என் வாப்பா அதிர்ச்சி ஆகிவிட்டார்.நடந்ததைச் சொன்னேன்.அழுதேவிட்டார்.


ரமலான் மாதத்தில் அப்படி ஒரு பயணம்

எனக்குத் திருமணமாகி வந்த முதல் நோன்புப்பெருநாள்.
நான் சென்னைக்கும் ஊருக்கும் அலைந்து திரிந்துக் கொண்டு இருந்தேன்.காரணம் பல்வேறு சிவில் கேஸ்கள் என்னை என் குடும்பத்தை அலைக்களித்துக்கொண்டு இருந்த கடுமையான வேளை அது.
ஒருத்தருக்கொருத்தர் கேஸ் நடத்தும் சாதாரண மனிதர்களுக்கே கோர்ட் உத்தியோகம் மோசமானதாக இருக்கும்.அனால் நானோ தமிழக அரசை அதன் நிலச் சட்டத்தை எதிர்த்து என்னுடைய குடும்பத்து உறுப்பினர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.
சென்னை உயர் நீதி மன்றப் படிக்கட்டுகள் ஏறியதோடு டெல்லி உச்ச நீதி மன்றம் வரையிலும் சென்றேன்.
காலமும் பணமும் விரையமானது.
நாட்டின் அருமையான சட்டங்கள் பல, அரசு அதிகாரிகளின் சோம்பேரித்தனத்தினால், அறியாமையினால் குடிமக்களுக்கு எப்படி எல்லாம் பாதகம் தரமுடியும் என்று மற்றவர்களிடம் சொல்லிக் காட்ட  என்னிடம் டாக்ட்டரெட் செய்யும் அளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.
திருமணமாகி பதினைந்தாம் நாளிலேயே கேஸ் நடத்த சென்னை வந்து விட்டேன்.
என் தந்தையும் தாயும் .என்னை நம்பி வந்த மனைவியும் பலநேரம் இதனால் வருந்தி இருக்கிறார்கள்.கண்ணீர் விட்டிருக்கிறார்கள்
என்ன செய்வது கேஸ் நடத்தாவிட்டால் இழப்புக்கள்  நிறைய வருமே.
.கடமை இருக்கிறதே குடும்பத்து மற்ற பங்காளிகளும் நான் பார்த்துக்கொள்வேன் என்று இருந்து விட்டார்கள்.
பல நேரங்களில் பெரிய வக்கீலை பார்க்கவே முடியாது.கேஸ் கட்டும் கையுமாக ,சில வேளைகளில் புத்தகமும் கையுமாகவே இருப்பார்கள்.
கத்துக்குட்டி ஜூனியர்கள் கைகளில் அப்பாவிக் கட்சிக் காரன் கிடைத்தால் தொலைந்தான் .
நாம் ஒன்னு சொல்ல அவர்கள் நமக்குத்தெரியாததை கோர்ட்டில் சொல்லுவார்கள்.
நாம் கேட்காமலே வாய்தா வாங்கி இன்னொரு நாளுக்கு வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள்.
வர்ற வாய்தாவுக்கு நீர் வந்துரும்.வரும்போது மறக்காமே திருனவேலி அல்வா கொண்டாரும்வோய்.
வாய்தா எப்போ
வர்ற மூணாம் நாளைக்குத்தான்.
சார் நான் ஊருக்குப் போக முடியாதே என்ன செய்ய?
இங்கேயே இரும்மையா
வேறு என்ன செய்ய சென்னையிலே இருப்பேன்.
இதற்க்கு மாற்றமாக சில நல்ல வக்கீல்களும் எனக்குக் கிடைத்தார்கள்.
என்னைத் தமது  நண்பனாக,தம்பியாக, மகனாகப் பாவித்த நல்லவர்களும் இருந்தார்கள்.
அவர்கள்தான் எனது கண்ணீரைத் துடைத்து கரை ஏறச் செய்தார்கள்.பீஸ் என்று மிகச்சிறிய தொகையை நான் கொடுத்தால் மட்டுமே பெற்றுக்கொள் வார்கள்.
அரிதான அவர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நெல்லை வழக்கறிஞர் தீன் மற்றும் அவரது சீனியர் அப்துல் வஹாப் ,சென்னை கொடைஅரசு ஆகியோரைச்சொல்லலாம்.
கோர்ட்டுக்குப் போய்வாய்தா வந்து விட்டால் வேறு வேலை இருக்காது.நேராக வாலஸ் கார்டன் போய்விடுவேன்.
அங்கே தான் அப்போலோ மருத்துவ மனை பக்கம்  மணிச்சுடர் நாளேடு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களின் அலுவலகம்  இருந்தது.
எனது குடும்ப வழக்குப் போக்குவரத்தை  தலைவர் நன்கு அறிவார்.ஆகவே அங்கே நான் சோர்வாகப் போய் அமர்ந்தால் "என்ன புது மாப்பிளை" எப்படி இருக்கீங்க என்று அன்பு மொழி பேசி கலகலப்பாக்குவார்.
 பக்கத்தில் குளிர்ந்த மோர் இருக்கும் அதைப் பருகிடத் தருவார்.கொஞ்சநேரத்தில் தலைவர் வீட்டிலிருந்து மதிய சாப்பாடு வரும் அதைத் தலைவரும் நானும் இன்னும் வேறு யாராவது வந்தால் அவர்களும் பகிர்ந்தே சாப்பிட தலைவர் வற்புறுத்துவார்.எல்லோரும் உண்டுமுடிப்போம்.

ரமலான் மாதம் வந்தது.அப்போதும் வாரக்கணக்கில் சென்னையில் தங்கவேண்டியதிருந்தது.இருபத்து எட்டாம் நாள் ஊருக்குப் புறப்பட ஆயத்த மானேன்.ரொம்ப சிரமப்பட்டு எக்மூரில் இருந்து புறப்படும் பஸ் ஒன்றில் பயணிக்க மேலப்பாளையம் பள்ளி காசிம் என்கிற குடும்ப நண்பர் பயணச்சீட்டு எடுத்து வைத்திருந்தார்.
அந்த பஸ்சை விட்டால் மறுநாள் பஸ் எதிலும் இடமே இல்லை.சரி ஊருக்குப் போய் விடுவோம் என்று முடிவு செய்து விட்டு தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களிடம் பயணம் சொல்லப் போனேன்.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும் .தலைவர் தொழுது கொண்டிருந்தார்.சலாம் வாங்கி யதும் நான் நிற்பதைப் பார்த்து விட்டு "என்னா.தம்பி ?என்ன சேதி "என்று அழகான மெல்லிய குரலில் கேட்டார்கள்.
"வாப்பா நான் ஊருக்குப் போகிறேன்"
அவர்கள் எதோ ஒதிகொண்டிருந்தார்கள்.கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்.
"நாளைக்குப் போலாம் தம்பி "என்று தலைவர் சொன்னார்கள்.
"அடடா நம்ம ஊரில் ஒரு நாளைக்கு முன்னதாகவே நோன்பு வச்சாங்களே.அங்கே இன்னைக்கு இருபத்து ஒன்பது முடிஞ்சு போச்சே..திடீர்ன்னு நாளைக்கு பெருநாள்ன்னு அறிவிச்சுட்டா என்ன செய்ய?நம்மள வாப்பா, உம்மா, மனைவி தேடுவாங்களே.இங்க வந்து பயணம் சொன்னது தப்பாப் போச்சே"ன்னு மனசுக்குள் யோசித்து விட்டு அங்கே மேனேஜராக இருக்கும் நெல்லை ஏர்வாடி மீராசாஹிப் அவர்களிடம் போனேன்.
"சாச்சா,தலைவர் எதுக்காக என்னை நாளைக்குப் போ ன்னு சொல்லுறாங்க?உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு?"கேட்டேன்.
இன்னைக்கு எதோ இப்தார் பார்ட்டிக்கு போறதா தெரியுது.அதுக்கு உங்களைக் கூட்டிட்டு போறதா இருக்குமோ? என்னவோ?ன்னு அவர் பட்டும் படாமலும் வழக்கம் போல் சொல்லி  முடித்தார்.
சாச்சா.நாளைக்கு நான் ஊரில் இருக்கணும்.எனக்கு தலை பெருநாள்.என்னை எங்க வீட்டில் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் கேட்டால் பஸ் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருப்ப தால் நான்  புறப்படு கிறேன்னு   சொல்லி விடுங்கள் என்று  வந்து விட்டேன்.
அந்த பஸ் எனக்காகவே காத்திருந்த மாதிரி தெரிந்தது.காரணம் நான் வண்டிக்குள் ஏறியதும் மற்ற பயணிகள் யாவரும் ஒரு பார்வை என்னைப் பார்த்த விதத்தில் நான் ஐந்து நிமிட லேட் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பஸ் டிரைவருக்குப் பின்னால் இரணடாவது வரிசையில் சன்னலோரத்தில் என்னுடைய இருக்கை.   அதில் என்னை விட இளையவர் ஒருவர் இருந்தார்.'"அண்ணே எனக்கு வாமிட் வரும்னே .அதனாலே நான் ஜன்னலோரமா உங்க  சீட்ட்ல இருக்கேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"என்றதும் அடுத்து உள்ள சீட்டில் அமர்ந்தேன்.
என்னை அடுத்து நடை பாதை.அதற்கடுத்துள்ள சீட்டில் நெல்லை வழக்கறிஞர்முருகவேல் அவர்களும்,அவருக்கு அடுத்து ஊத்து மலை இளைய ஜமீன்தார் எஸ்.எம்.பாண்டியன் என்கிற சங்கர மருதப்ப பாண்டியன் அவர்களும்.இருந்தார்கள்.
ஊத்துமலை ஜமீன் தாருக்கு எங்கள் குடும்பத்தையும் என் வாப்பாவையும் நல்லா தெரியும்.அவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மேலே ரொம்பவும் காதலும் மோகமும் உண்டு.
திருநெல்வேலி வட்டாரத்தில் பி.எஸ்.எ.மோட்டார் சைக்கிள் அவர் மட்டுமே வைத்திருந்தார்.
அப்போதெல்லாம்1970 களில்மோட்டார் சைக்கிள்களை அவர்மாதிரி ஆட்களும்,பண்ணையார்களும்,போலீஸ் இலாக்காவைச் சேர்ந்தவர்களும் .பெரிய வியாபாரிகளும் தான்  வைத்திருந்தார்கள்.அவர்கள் எல்லோரும் திருநெல்வேலி பரமன் அண்ணாச்சி கடையில் ஒன்று கூடுவார்கள்.அங்கே எங்கள் குடும்பத்தில் இளையவரான எங்கள் வாப்பாவும் அவரின் அண்ணன் வைத்திருந்த ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வார்.
அந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தது.
அந்தக் கடையில் த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி  முதலாளி ஹரிராம் சேட் படம் இருக்கும்.அவர் தான் அந்த கடையை உருவாக்கியதாகச்சொல்லுவார்கள். எங்க வாப்பா சில நேரங்களில் என்னையும் மோட்டார் சைக்கிளில் அங்கே அழைத்துச் செல்வதுண்டு.அங்கே தான் ஊத்துமலை என்னை பல முறைப்பார்த்துள்ளார்.நான் வளர்ந்த பிறகும் போற வாற இடங்களில் பாசமாக அழைப்பார்."யோவ்... மருமகனே"என்று.

யோவ்...எங்கய்யா  உன்ன ஊர்ல பாக்கவே முடியல்லே?என்னய்யா பண்ணிக்கிட்டுருக்கே? என்று பார்த்த இடத்தில பஸ்சில் என்னை விசாரித்துக்கொண்டார்.நான் ஒரு கேஸ் விஷயமா மெட்ராசுக்கு வந்ததை மட்டும் சொன்னேன்."ஒங்க அப்பா சுமையை நீர் சுமக்கீராக்கும் ".
எங்க வாப்பா மற்றும் நில விபரங்கள் கேட்டு முடிக்கும் போது வண்டி தாம்பரத்தை நெருங்கி இருந்தது.
யோவ்,என்னைய்யா இது .அரை மணி நேரத்துல இந்த டிரைவர் இங்க வந்துட்டாநேய்யா?
ஆமாம் ராஜா மாமா.
அப்போதுதான் அந்த டிரைவர் பஸ் ஓட்டுகிற 'அழகை' கவனித்தேன்.மோசமான ட்ரைவிங் .மனசு என்னவோ போல் இருந்தது.
"யோவ் இவன் நம்மை ஊர் கொண்டு சேப்பானாயா""விழுப்புரத்துல பஸ் மாறிட வேண்டியது தான்யா"இப்படி அவர் சொன்னதும் எனக்கு பக் என்று இருந்தது.

பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் விழுப்புரத்தில் ஒரு ஓட்டல முன்பாக  வந்து  நின்றது.சுற்றிலும் ஆம்பிளைகள் மூத்திர நெடியில் தங்களுடைய கட்டாயக் கடமையை முடித்துக்கொண்டிருந்தார்கள் .
வேற ஏதாவது பஸ்சில் மூணு டிக்கெட் கிடைக்குமான்னு ஊத்து மலை அக்கம் பக்கம் நின்ற பஸ்களில் விசாரித்தார்.எல்லாம் புல்.






ஞாயிறு, 22 ஜூலை, 2012

மேலப்பாளையமும், ரமலான் மாதமும்.


         பெரும் பாலும் முஸ்லிம் மக்கள் ரமலான்  மாதம் வந்து விட்டால், தமது ஊரில் இருந்து நோன்பு வைக்கவே விரும்புவார்கள்.

காரணம்; தமது வசதிக்குத் தக்க   நோம்புக்கு உண்ண, உறங்க ஏற்பாடு வச்சுக்கலாம். அதனாலதான்.

மேலப்பாளையத்து மக்களும் அந்த மாதிரி அவா கொண்டவர்கள் தான்.இதச் சொல்லும்போது  மேலப்பாளையம் மக்கள் வாய்க்கு ருசியா,பல வகை உணவு வகைகளைக் கொண்டு தான் நோன்பு வைப்பாங்களோ? என்று முடிவுக்கு வந்துடாதீங்க.

ரொம்ப ரொம்ப சாதாரணமான வகை உணவுகளே நோன்புக்கும் இருக்கும்.

அரிசிச்சோறுடன்,வார நாட்களை பிரித்து இறைச்சி,மீன்,முட்டை,பருப்பு ஏன் துவையல், புளியாணமும், சோறும் உண்டே நோன்பு வைக்கும் மக்கள் கூட இருக்கிறார்கள்.

"நெய்யும் தொழிலே செய்யும் தொழில்" என்று இருந்த காலத்தில்  அதி காலை ஸகர் வேளைகளில் ......பழைய சோத்தை, வெங்காயம், பச்ச மிளகாயைக் கடித்துக்கொண்டு உண்டு முடித்து நோன்பு வைப்பார்கள்.

மறுநாள் காலை வழக்கம் போல் “காக்குழியில்” தறி நெய்ய இறங்கி ஒரு "சாம்போ"......."ஒன்னரை சாம்போ" நெய்து முடிப்பார்கள். 

மற்ற மாதங்களில் எப்படி தங்கள் வாழ்க்கை நடை முறை இருக்குமோ  அவ்வாறே நோன்பு காலங்களிலும்தொடர்ந்தார்கள்.

இதெல்லாம் அக்கம் பக்க வீடுகளில்  சின்னஞ்சிறிய வயதுக் காலங்களில் பார்த்திருக்கிறேன்.

      ரமலான் மாதத்தில் என்னுடைய அமீரக மற்றும் அரபக நண்பர்களிடம் ஏதாவது விஸா நடைமுறைகள் பற்றிக் கேட்டால் “இப்போ இங்கே ரமலான் மாதம். பாதி நாள் வேலை இருக்காது. பெருநா கழிச்சித்தான் அதெல்லாம் நடக்கும்,அப்படி இல்லேன்னா கொஞ்சம் மெதுவா இருக்கும்” இப்படி ஏதாவது ஒரு தகவல் தருவார்கள்.

நான் அங்க வந்து... இதப் பார்த்த. பொறவுதான் அவங்க சொல்றது    சரியாத்தானே இருக்குன்னு நம்பிக்கிட்டேன்..

எங்க ஊர் பக்கம் அப்படி இல்லை.
என்னுடைய தாய் ஊர்மக்கள், அப்போ  நெசவுத் தொழிலும்,இப்போ பீடித் தொழிலும்  செய்கிற  ரமலான் மாதத்தில்,  தங்களது தொழிலுக்கு, ஒரு போதும் ஓய்வு கொடுத்தது இல்லை.

தொழிலுக்காக மார்க்கக் கடமையை ஒரு போதும் மறந்ததில்லை.

"பா போடுவதும் பாவாத்துவதும்" வழக்கம் போல் நடந்து வரும். 

நோன்பு என்பதற்காக காலை ஆறு மணிக்குப் பதிலாக, பத்து மணிக்கு பா போட்ட கதைகள் எல்லாம் கேள்விப்பட முடியாது.

மத்த நாட்களில் எங்களூர் தாய் மார்கள் எவ்வளவு  கடுமையாகப் பாடு பட்டு பீடித்தொழில் செய்து உழைத்து வருமானம் பார்த்தார்களோ, அதே அளவு ரமலான் காலங்களிலும் உழைத்து வந்தார்கள்;வருகிறார்கள்.

முகைதீன் ஸ்டோர் காரச் சேவையும், இப்ப சீனி லாலா மிச்சர் வகையறாவும், மொன்ன லெப்பை  கடை வடையையும் ,தன்சீத் ஓட்டல்  சம்சாவையும் வைத்து, புளி ஆணம் ஊத்தி அரிசிச்சோறு உண்டு நோன்பு புடிக்கும் மக்கள் எங்க மக்கள். முன்பு ஊரில் பாதி அப்படித்தான்.

இன்னைக்கு பிள்ளைகளின், இளைஞர்களின், உழைப்பால் ஊர் பொருளாதாரம் கொஞ்சம் முன்னேறி யிருக்கிறது.

உம்மா,வாப்பா, பெஞ்ஜாதி, பிள்ளைகள்,தாத்தா,தம்பி,காக்கா,தங்கச்ச்சி பெத்தும்மா,பெத்தாப்பா,மாமூட்டு வாப்பா, மாமூட்டு உம்மா,  மற்றும் நண்பர்கள்,  ஊர் உறவை தூரத்தில் விட்டு விட்டு..... அரபு நாடுகள், தூரக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க, அமெரிக்க, ஜெர்மனி நாடுகளையும் கடந்து....
ஆஸ்திரேலியா,  பின்லாந்து,இங்கிலாந்து நாடுகள் வரை சென்று.... எங்களூர் பிள்ளைகள் பல்வேறு தியாகங்களைச் செய்து நாட்டை, வீட்டை,உறவை,ஊரை வாழ வாழ வைக்கிறார்கள்.

இறைவன் இப்படி அவர்கள் மூலம் இன்று படி அளக்கிறான்.

எதோ வெளி நாடுகள் தருகிற வருமானத்தில் இப்போ நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.  

அதற்காக... உள் நாட்டில் யாரும் வேலை வாய்ப்பில் இல்லையா? என்று கேட்க வேண்டாம்.

இப்போது படித்துப் பட்டம் பெற்ற எங்கள் ஊர் பொறியாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் பரவி  இருக்கிறார்கள்.

பல்வேறு பெருமக்கள் பல மாநிலங்களில் வணிகம் செய்கிறார்கள்,

காலை சகர் வேளை நோன்பு துவக்கம் எளிமையானது என்றால், மாலை நோன்பு திறக்கும் போது இனிமை தான். 

குடும்பத்தில் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க பேரீத்தம் பழம், சம்சா, வடை ஏதாவது கஞ்சியோடு நோன்பைத் திறப்பார்கள்.

மொன்ன  லெப்பை கடை,ஷிகபத்துல்லா கடை,கறிவடைகளுக்கும்  கதிரேசன் கடை மெதுவடைக்கும் நீண்ட வரிசையில் நின்றே வாங்கவேண்டும்.
.

ஏதாவது வெளிஊரில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் என் போன்றவர்கள் கலந்து கொள்ளும் போது.... பரப்பி விரித்து வைக்கப்பட்டுள்ள பல வகைப் பண்டங்கள் , பலகாரங்கள் ,கறிவகைகள் குளிர்ந்த பழச்சாறுகள்,சமீப கால கடல் பாசிக் கட்டிகள்,பரோட்டா வகைகள்,இது போதாதென்று பிரியாணிகள் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எங்களூர் இப்தார் ஞாபகம் வந்து செல்லும்.

மேலப்பாளையத்தில் இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க கஞ்சியும், சில பள்ளி வாசல்களில் சகர் உணவும் ஏற்பாடு செய்யது வழங்குகிறார்கள்.

    குடும்பத்தில் யாவரும் ஒன்றாய் அமர்ந்து,பேரீத்தம் பழச் சுளைகள், கொஞ்சமாய் இருக்கிற வடை ,சம்சா,கஞ்சியை வைத்துக்கொண்டு நோன்பு திறக்கிற மகிழ்ச்சிக்கு நிகரே இல்லை...இந்த சுகம் உலகத்தில் வேறெங்கும் கிடைக்காது. 

அந்த நோன்பின் வருகையை வரவேற்பது எங்க ஊரில் மகத்தானது.

எங்க தெருவின் மேக்கே, பிள்ளயார் கோவில் கட்ட பனை மரம் ஊடாக,, .மேற்குத்தொடர்ச்சி மலைக்கு மேலே....
பெரியவர்கள் சின்னவர்கள் பேதமில்லாமல் நோன்பு தலைபிறை தெரிகிறதா? என்று பார்க்ககூட்டமாய் நிப்பார்கள்.

செருப்பில்லாதவர்கள் பிறை பாத்ததாகச்சொன்னால்  யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
திடீரென மேகக்  கூட்டத்திலிருந்து வெளிவரும் அழகான அந்த வளைந்த புதுப்பிறையை பார்த்து சலாம் சொல்லுவார்கள்.

பிறை பாத்தால்  நோன்பு துவக்கம் கண்டுவிடும்..பல பள்ளிவாசல்களில் "பிறை கண்டாச்சு" ன்னு அறிவிக்க நகரா அடிப்பார்கள்.
அப்புறம் ரமலான் மாத பரபரப்பு வீடுகளில் வந்துவிடும். 

அதிகாலைக்கு முன்னர் சாப்பிட உணவு தயாரிக்கும் பணி வேக வேக மாக நடக்கும்.

கொஞ்ச நேரத்தில் "பக்கீர் சாயபுமார்கள்"  புரியாத பாஷையில்  எதோ பைத்து ஒன்றை இழுவை ராகத்தில் படிச்சிக்கொண்டு போவார்கள்.
பெரும்பாலும் தமிழ் வார்த்தைகள் அவர்களின் பாடல்களில் கோர்வை இல்லாமல் வரும்.  அவர்கள் கூட வர்ற பொம்பிளைகள் கைகளில் நார் பெட்டி இருக்கும்.

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சுடு சோறு போடுவார்கள்.
இப்போதெல்லாம் சுடு சோறுக்கு பதிலாக  காசு பணம் கொடுக்கிறார்கள்.

ரமலான் முன்னிரவில் அவர்கள் பாடும் பாடலில் “ஸல்லியால்லா” மட்டுமே புரியும்.என்ன தான் படிக்கிறார்கள்? என்று ரொம்ப தூரம் பின் தொடர்ந்து போனாலும் அவர்கள் பாடும் பாட்டை விளங்கவே  முடியாது.
பெருநாளைக்குப் பிறகு வீடுதோறும் பக்கீர் சாயபு மார்கள் வந்து சலாம் சொல்லி "கேட்டு" பணம் வாங்கிக் கொள்வார்கள்.சில வீடுகளில் அவர்களுக்கு புது வேஷ்ட்டி சட்டைகள் கொடுப்பதும் உண்டு.

இரவில் தராவீஹ் தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் நிறைந்திருக்கும்   தொழுகைக்கு ஆட்கள் நிறையவருவார்கள்.

திருக்குரான் வேதம் தொழுகையின் போது மனமெல்லாம் ஆட்கொள்ளும்.

சகர் நேரத்தை தெரிவிக்க எங்க பக்கமெல்லாம் பக்கீர் சாய்பு மார்கள் அதிகாலை இரண்டு மணி இருட்டு வேளைகளில் மீண்டும் வருவார்கள்.

அவர்களே கோர்வை செய்து பரம்பரை பரம்பரையாக பாடிவரும்,அரபு தமிழ் கலந்த பாடல்களை உரத்த சப்தத்துடன் , தப்ஸ் அடித்து இசைத்துக் கொண்டுபாடுவார்கள்.

நிமிர்ந்து நடந்தபடி, தெருவின் இரு சிறகுகளிலும்  இருவர் செல்வார்கள்.எப்போவாவது  யாராவது வயசாளி ஒருவர் துணைக்கு வருவார்.

அவர்களின் முகமும், கண்களும் முன்னோக்கியே இருக்கும்.கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.


என்னுடைய சின்ன வயசில் எங்க அப்பாம்மாவிடம் “ராத்திரி இருட்டு வேளைகளில் துரத்தி துரத்தி குலைச்சி ஊழையிடும் நாய்க் கூட்டம்  அவங்களை ஒன்னும் செய்யாதில்லியாமா”? ன்னு கேப்பேன்.

.”நாயாவது? பேயாவது? அவங்ககிட்ட எந்த ஜின்னும் நெருங்கமுடியாது” என்பாள்.

அமைதியான அந்த பொழுதில் அந்த தப்ஸ் மற்றும் பாட்டுச்சப்தம் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் கதவுகள் ஒவ்வொன்றிலும் எதிரொலித்து திரும்பும்.

அவர்கள் தப்ஸ் தட்டும் போதெல்லாம் அவர்கள் தலையின் மீதுள்ள தலைப்பாவின் உச்சியில், விசிறி அமைப்பில் உள்ள துணி ஆடி அசையும்.

சில தெருக்களில் பக்கீர் சாய்புமார்களுக்கு அந்த வேளையிலும் சாயா போட்டுக் கொடுத்து.குடிக்க வச்சி  அனுப்பும் பெத்தும்மாமார்கள் இருந்தார்கள்.

ரமலான் தலை நோன்பு துவங்கி....மாலை நேரங்களில் 30 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் குளித்து வருவது அற்புதமான சுகானுபவம்.அங்க குளிச்சவங்களுக்குத்தான் அதன் அருமை புரியும்...மாலை நேர சூட்டு உடம்பிற்கு தாமிரபரணி ஆத்துக்குளியல் ரொம்ப இதமா இருக்கும்.

" ஏல...முங்கி முங்கி குளிக்கியலே....வயித்து நோம்பாலே?"...இப்படி  யாராவது கேப்பாங்க....சந்தடி சாக்கில் வாய்க்கொப்பளிக்கிற சாக்கில் நா வறட்ச்சியை போக்கிக் கொள்ளவெல்லாம் முடியாது....அவ்வளவு கவனமாக இருப்பார்கள்.

லைலதுல் கத்ர் நாளில் கத்முல் குரான் முடித்து "தமாம்"வரும்.
ஒற்றைப்படை நாளில் லைலதுல் கத்ர் வருவதால் 21,23.நீங்கலாக25,27,29 ஆகிய நாட்களில் பள்ளிவாசல்களில் தமாம் நடக்கும்.ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நாட்கள் வித்தியாசப்படும்.
ஒரு காலத்தில் "தமாமுக்கு வாங்கோ,நேர்ச்சை இருந்தாப் போடுங்கோ"என்று கேட்டு  பள்ளிவாசலுக்கு வருகிற மக்களுக்கு வழங்க வாழைப்பழம் வசூலிக்க மோதீன்கள் தெருத்தெருவாக வருவார்கள்.
பின்னர் வண்டி வைத்து வசூலித்தார்கள். பல முஹல்லாக்களில் இது இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.சின்னவர்களின் சப்தம் பழம் கேட்டு "கோரசாக"ஒலிக்கும்.
அந்தத தமாம்  நாளில் இமாமாகத் தலைமை ஏற்றுதொழுகை நடத்திய, குறிப்பாக ரமலான் மாத தராவீஹ் தொழுகை  நடத்திய ஆலிம்களுக்கும்,பாங்கு சொல்லி அழைக்கும் மோதீன்மார்களுக்கும்  அந்தந்த பகுதி ஜமாத்தின் பொருளாதார வலுவைப் பொருத்து சன்மானம் வழங்குகிறார்கள்.

அதுபோல பெண்களுக்குத் "தராவீஹ்"சிறப்புத் தொழுகை நடத்திய இமாம்களுக்கு,பெண்களே ஒன்று சேர்ந்து வசூல் செய்து இந்த நிதியை வழங்குகிறார்கள்.
தமிழ் நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில்,திருக்குரானை மனனம் செய்து தொழுகை நடத்தும்,ஹாபிலுள் குரான்களில் பெரும்பாலானவர்கள் மேலப்பாளையம் ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது மேலப்பாளையம் ஊருக்கு  கிடைத்த சிறப்புகளில் முதன்மையானதாகும்.
ஏதாவது சிற்றூர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்குச் செல்லும் வேளைகளில், அதில் பணி செய்யும் ஆலிம் பெருமக்கள்  எங்கள் போன்றவர்களைப் பார்த்து விட்டால்,மிக சிறப்பாக உபசரித்துவிட்டு "என்னைத் தெரிகிறதா?எங்க குடும்பப்பெயர் இது.நான் இந்தத் தெரு. இந்த ஊர் மதரசாவில் ஓதினேன்" என்று சொல்லச் சொல்ல ஊர்ப் பெருமை தலை நிமிர்ந்து நிக்க வைக்கும்.
எங்க ஊர் பக்க மெல்லாம் ரமலான் அல்லது பெருநாள்  பிறை பார்த்த தகவல் கிடைக்கவில்லை என்றால் சிலோன் ரேடியோவில் சொல்லுகிரார்களா?என்று விசாரிப்பார்கள்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஒட்டி இலங்கை வானொலியும் தனது வீச்சை குறைத்துக்கொண்டதனால் கொழும்பில் பிறை பார்த்த தகவல் இப்போது தேவைப்படாமல் போன ஒன்றாக ஆகிவிட்டது.

அப்போதெல்லாம் அந்த இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில், சகர் நேர சிந்தனை நிகழ்ச்சிகளும்.மாலையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளும் ரொம்பவும்  தரமாக இருக்கும்.

பெரும்பாலும் ரசீத் பின் ஹபீல் என்கிற அறிவிப்பாளர், தெளிவான, தமிழில், மனதை வருடும்மெல்லிய குரலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்...

அப்பப்போ 'அழகு தமிழ்' பி.எச்.அப்துல் ஹமீதும் நிகழ்ச்சிகளை வழங்குவார். அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

அது போலவே பெருநாள் பிறை அறிவிக்கும் படலமும்.
கொழும்பில் பிறை கண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டால், இலங்கை வானொலியில் பெருநாள் தக்பீர் முழக்கமிடும் ஒலிப்பதிவைப் போடுவார்கள்.
எந்த நிகழ்ச்சி ஒலி பரப்பானாலும் அதை அப்படியே நிப்பாட்டி வச்சிட்டு, தக்பீரையே திரும்பத்திரும்ப  போடுவார்கள். 

தெருவில் பெரும்பாலான வீடுகளில் ரேடியோப் பெட்டி இருக்கும்.அதில் சப்தமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அந்த ஒலிபரப்பை வைப்பார்கள். 

தெருவெல்லாம் அதே முழக்கம் தான்.பெருநாள் காலை தொழுகை நடப்பதையும் அவ்வாறே போடுவார்கள்.

இன்னைக்கி அதுவெல்லாம் தேவை இல்லைன்னு ஆகிப்போச்சு.ரேடியோப் பெட்டிகளெல்லாம் போயே போச்சு.

ராத்திரி வேளைகளில் செய்து வைத்த உணவு வகைகளை, சாப்பிட்டு நோம்பு வைக்க  உம்மா, வாப்பா, ,பெத்தாப்பா,வாப்பும்மா மார்கள் தம் மக்களையும், பேரப்புள்ளைகளையும் எழுப்புவார்கள்.

சிலதுகள் சகர் நேரம் முடிய அஞ்சு நிமிஷம் இருக்கும் போது தான் எழுஞ்சி ,அவசர அவசரமாக நோன்பை வைப்பார்கள்.

இன்னைக்கும் பாளையங்கோட்டையில் கிறிஸ்துவ பள்ளிகளில் சின்னஞ்சிறு முஸ்லிம் மழலைக் குழந்தைகள் வைக்கும் நோன்பைப் பார்த்து, அந்த ஆசிரியைகளும்அங்குஉடன்படிக்கும்மாணவச் செல்வங்களும் ரொம்பவே ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்தப்பிள்ளைகள் உண்ணாமல், தண்ணீர்த் தாகம்  எடுத்தால் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருக்கிறார்கள்?இதை பல்வேறு  மதநல்லிணக்க இப்தார் நிகழ்வுகளில் மறக்காமல் கேட்பார்கள்.

பல்வேறு ஹோட்டல் களில் இப்போ ஸகர் வேளைகளில் உணவு தயார் செய்து கொடுக்கிறார்கள்.

அது தனிமையில் இருக்கிறவர்களுக்கும்.உணவு தயார் செய்ய முடியாதவர்களுக்கும்.வெளியூர் நண்பர்களுக்கும்  உதவியாக இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

இன்னொன்றை கேள்விப்பட்டதை நேரிலேயேநான் பார்த்தேன்.

சில குறிப்பிட்ட ஹோட்டல் அதிபர்கள்,  நோன்பாளிகளுக்கு இலவசமாகவே முழு உணவையும் கொடுக்கிறார்கள்.
வீடுகளில் உண்ண வசதி இருந்தும்.இந்தச் சாப்பாட்டை  உண்ண,.....ரொம்ப பிரயாசை எடுத்து மோட்டார் சைக்கிளில்  வருபவர்களை, அதிகாலை சகர் வேளையின் போது,பாளையங்கோட்டை  புதிய  பேருந்து நிலையம் அருகில், பார்த்தேன். மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்..
உண்ண வசதியில்லாத,சாமான்ய மக்கள்  இதைப் பயன் படுத்தினால் சரிதான்.அதுதான் ஹோட்டல் அதிபர்கள் பலரை இது போன்ற பணிகள் பலருக்குச்செய்ய தூண்டு கோலாய் இருக்கும்.அவர்களுக்கு நலமும் வாய்க்கும்."ருசிக்குப் புசிப்பவர்களை என்ன சொல்லுவது?"
ஒரு காலத்தில் மாலை வேளைகளில், தாமிர பரணி ஆறு முழுதும் நோன்பு பிடிப்பவர்களாலே நிரம்பி இருக்கும்.நண்பர்கள் புடை சூழ அங்கே சென்று குளித்து வருவது மறக்க முடியாதது.சிலர் அதி காலை சகர் வேளைகளில் சென்று குளித்து வருவதும் உண்டு.இன்றைக்கு அதுவெல்லாம் குறைந்துவிட்டது.
பெருநாளைக்கு ஒரு வாரம் முந்தியே பித்ரா அரிசிக் கொடுப்பதும்,சிலர் ஒருநாளுக் குரிய வீட்டு உபயோக  உணவுப் பொருட்களை அல்லது .சேலை வேஷ்ட்டி துணிமணிகளை  பொட்டலமாக்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதும், தற்போது பாராட்டும் அளவு அதிகரித்துள்ளது.
நகரில் பைத்துல் மால் மூலம் வழங்கப்படும் உதவிகளும் நல்ல முறையில் சில ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது.
பெருநாட்களில் சகோதர சமுதாய நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கும் நட்பும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆறு ஒன்று தான் ஊர் ஒன்று தான். ஆனால் மனிதர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.