திங்கள், 23 ஏப்ரல், 2012

மேலப்பாளையம் V.S.T.@ வி.எஸ்.தம்தாசீன் தரகனார்.


மேலப்பாளையம்நகரில் வாழ்வாங்கு வாழும் தலைமுறையில், வி.எஸ்.டி குடும்பமும் ஒன்று...
 .வி.எஸ்.டி.என்பதன்தமிழாக்கம் வ.செ.த. என்பதாகும்.
 
ஒருமுறை சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்கள் அந்த மூன்று எழுத்து களுக்கு விளக்கம் கூறும்போது வ:வரவு,செ:செலவு ,த:தர்மம் என்றுசொன்னார்கள். அந்த மூன்றெழுத்தின் பிதா மகன் பற்றிக் காண்போம்.

மேலப்பாளையத்துக்கு அணிகலனாய் வாய்த்த, வி.எஸ்.தம்தாசீன் தரகனார். அவர்கள்,ஒரு மாபெரும் வள்ளலாகத் திகழ்ந்தவர்.ஏழை எளியவர்கள் மீது பிரியமும் மாறாத பாசமும் கொண்டவராகத் தம வாழ் நாள் எல்லாம் இருந்தவர். சம்சு தாசீன் என்கிற அந்த கண்ணியப் பெயர் மக்களால் தம்தாசீன் என்று அழைக்கப்பட லாயிற்று.


மேலப்பாளையம் கன்னிமார் குளம் என்ற பெயருடைய குளம் காலப்போக்கில் கனிமாக்குளம்என்று மாறி கலிமாக் குளமாக ஆகி விட்டது.கலிமாக்குளத்தின் வடகரையில் இருந்ததனால் வடகரையார் வீடு என்பது வடகரை தம்தாசீன் தரகரனார் வீடு என்று சொல்லப்பட்டது.

சின்னஞ்சிறு வயது முதற் கொண்டே ஒரு இளவரசன் போல வாழ்வு வாழ்ந்து, இளைஞனான காலம்தொடங்கி, முதுமைப் பருவம் எய்தி மன்னனைப் போல வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார்.

அதற்காக ஆடம்பர வாழ்வு வாழ்ந்தார் என்பது அர்த்தமல்ல.செல்வமும் செழிப்பும் அவர் வீட்டு வாசல் கதவை தட்டி இதோ வருகிறேன் என்று நுழைந்து கொண்டே இருந்தது.

அந்த மாமனிதர் தனக்கு போக இருந்த செல்வங்களைத் தன்னை நாடி, உதவி என்று வந்தவர்களுக்கும், பிறர் கேட்காமல் மற்றவர்களுக்கும், தானே போய் நின்று உதவிகள் செய்தார்.
மேலப்பாளையம் தற்போது உள்ளது போல் குருவிகளை ஒழிச்சுக்கட்டிய கான்க்ரீட் கட்டிடங்கள் நிறைந்த ஊராக இல்லாமல், ஓலைக் குடிசைகள் நிறைந்த ஊராய் இருந்தது ஒரு காலம். விரல் விட்டு எண்ணிடும் அளவு காரைக் கட்டு வீடுகளும்,ஓலை வீடுகளும் மட்டுமே ஆயிரத்து தொளாயிரத்து ஐந்து வரை இருந்துள்ளன. ஓலை வீடுகள் மழைக் காலத்தில் சேதமானால் புது ஓலைகள் மேய வடகரை காட்டுக்குத் தான் செல்லவேண்டும்.
 
மழைக்காலம் ஓட்டையும் ஒழுக்கும் என்றால், கோடைக் காலம் கொடுமையானது.திடீர் திடீர் என்று ஊரில் பல வீடுகள் தீப்ப்பிடித்துக் கொள்ளும்.ஒரு வீட்டில் பற்றும் தீ, மளமளவென பரவி ஊரில் பல வீடுகளை பதம் பார்த்தே அடங்கும்.தீப்பிடித்த வீடுகளைப் புதுப்பிக்க ஓலைகளும் கம்புகளும் வேண்டுமே.பணம் இல்லாதவர்கள் எங்கே போவார்கள்?வடகரையில் இருந்த வற்றாத மனமுடையவரின் வாசல் தேடித் தான் போவார்கள். அவர் “காட்டுக்குப் போய் பணங்கம்புகளும் ஓலைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அனுப்புவாராம்.
.
செழித்து வளர்ந்த பனங் காடுகளில், சின்னச்சின்னக் குளம் குட்டைகளும் அதைச் சுற்றி நரிகளும், மனிதர்களைச் சுற்றி வாழும் காட்டு நாய்,வெருகு பூனை, மயில்கள்,கட்டுக்கோட்டான்களும்,பறவைகளும் குடியிருந்தன.
புதுசா அந்தப்பகுதிக்கு செல்பவர்களுக்கு மிக்க பயம் தரும் சூழ்நிலையில் அந்த வட்டாரம் இருந்தது. களக்காடு புலிகள் சரணாலய மலையில் இருந்து, மேலப்பாளையம் நாற்பது கிலோ மீட்டர் தூரம் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலப்பாளையத்தில் அன்று இருந்த அந்தக்காடு, எங்கேப் போச்சுன்னு யோசிக்க வேண்டாம். அது எங்கேயும் போகாமல் ஒரு எம்பதுக்கும் மேலான வருஷம் சந்தையாகவும். பனங்காடாகவும் மாறிஇருந்து, இப்பம் ஹாமீம் புரமாகவும்,பங்களா அப்பா நகராகவும் ஞானியாரப்பா நகர்.ஹக் காலனி என்றும் மாறிவிட்டது

இன்று சுமார் பத்து வருஷத்துக்கு முன்புவரை மூன்றடைப்பு கிராமத்தின் சாலை ஓரங்களில் வெளி நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பறந்து. பயணித்துவந்து பறவைகள் கூடு கட்டி,முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அங்கே சில காலம் வாழ்வதை முந்தய தலைமுறை கண்டது. ஆனால் தற்போது அந்த மாதிரி பறவைகளின் வாரிசுகள் மூன்றடைப்பை விட்டுவிட்டு கொஞ்சம் கிழக்கே கூந்தன்குளத்திற்குப் போய்விட்டன.

அவைகளை யாரும் வால் போஸ்ட்டர் அடிச்சோ, உண்ணாவிரதம் இருந்தோ ,மெயில் அனுப்பியோ, தந்தி கொடுத்தோ வராதீங்கன்னு அபாய அறிவிப்பு தெரிவிக்கல. பறவைகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் தகவல் சொல்லலை. அதுங்க ஊர் கூட்டம் போட்டும் பேசல்லே.அதுங்களாகவே எடுத்த முடிவு அது.அதுக்கும் காரணம் உண்டு. பாழாப் போன மனுஷங்களில் சில பேரால வந்த வினை அது.

ஊர் பேர் தெரியாத பறவைகளை வறுத்தும்,பொரித்தும் மசாலா தடவி உங்கவும் திங்கவும் வேட்டையாடினான் . அதுக்கும் மேலே கொடுமையாய், அந்த அப்பாவி பறவைகள் காடுகளில் கேட்டறியாத, சப்தமான வெடிகளைப் போட்டு அந்தப் பறவைகளின் நிம்மதியையும் ஒழிய வச்சு அவைகளை அந்த ஊர் பகுதியை விட்டு வெரட்டி அடிச்சான். தூரமாக போக வச்சான்.இப்பம் மூன்றடைப்பில் நடந்த கொடுமை, அந்தக் காலத்தில் கலிமாக் குளத்தின் தெற்கே இருந்த கிராமங்களில் நடந்தது, மேலப்பாளையம் எல்லையில் நடந்தது.

வித விதமான செடிகளும், மூலிகைகளும் கலிமாக் குளத்தின் அருகில் நிரம்பி இருந்தன.வீடுகளில் இருந்து அந்த காட்டுக்குள் தப்பி போய் பெருசா வளர்ந்து ஆடுகளும்,மாடுகளும் மீண்டும் திரும்பி வந்ததும் உண்டு. அதுக்கும் சிலதுகள் “நான் நேம்சம் வச்சேம்ல அதான் திரும்பி வந்துருச்சி.”ன்னு கதைகளும் திரிச்சார்கள்.

எந்நேரமும் மரம் செடி கொடிகளின் வாசமும், மூலிகைகளின் மனமும், காற்றில் கலந்து வந்த அந்தப்பகுதியில் தன்னந்தனியே ஒரு மாளிகை கட்டினார் வள்ளல் சம்சு தாசீன் அவர்கள்.

"சரி.... வீட்டக் கட்டிட்டோம். அதுக்கு பக்கத்தில் பள்ளிவாசலும் பெருசா கட்டுவோம்"னு திட்டமிட்டு. அவர் வாழ்ந்த பங்களாவின் மத்தி வாசலில் இருந்து நேரா கதவை திறந்தாபள்ளிவாசலுக்குத் தொழுகைக்குப் போக வசதியாக தன் சொந்தப் பணத்தில் கல்லால் பள்ளிவாசல் கட்டினார் அந்த புண்ணிய வான் வ.செ.சம்சு தாசீன் தரகனார்.

மேலப்பாளையத்தில் எத்தனையோ பணக்காரர்கள் வாழ்ந்தார்கள்.மறைந்தார்கள். அவர்களில் பலர் சேர்ந்து பள்ளிவாசல் மற்றும் திக்ருகள் செய்ய தைக்காக்கள் பல உருவாக்கினார்கள்.பள்ளிவாசல்கள் பலவற்றிக்குச் சொத்துக்கள் எழுதி வைத்தார்கள்.

ஆனால், தன்னந் தனிமனிதராய், தமது பொருளைக்கொண்டு அவருக்கு சொந்தமான இடத்தில் பள்ளி வாசல் கட்டியது தம்தாசீன் தரகனார் அவர்கள் மட்டுமே.. அந்தக்காலத்தில். அந்தப் பாக்கியம் அவருக்கு மட்டும் தான் கிடைத்தது.அங்கே மார்க்கக் கல்வியை இஸ்லாமியர்கள் கற்றுக்கொள்ள, ,ஆய்வு செய்ய மதரசா ஒன்றையும் தோற்றுவித்தார்.ஹாமீம் பள்ளிவாசல் மதரசா என்று அதற்குப் பெயர். அத்துடன் தாம் வாழ்நாளில் சம்பாதித்த .சொத்துக்கள் முழுவதையும் அந்தப் பள்ளிவாசல்,மற்றும் மதரசாவுக்கே எழுதி வைத்தார்.

அவர்களின் ஆண் வாரிசுகள், அவர்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களின் வருவாயை இன்னின நலகாரியங்களுக்குச் செலவிட கல் வெட்டு உத்திரவிட்டு,மீதி பணத்தை பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று எழுதி வைத்தார் அந்த வள்ளல்.

"பள்ளிவாசலை உருவாக்கிட்டோமே, அதில் தொழுகை நடத்த ஆட்கள் தூரத்தில் இருந்து வருகிறார்களே, என்ன செய்ய?” என்று அந்த மாமனிதர் யோசித்தார். அதன் விளைவு மகத்தானதாக அமைந்தது.
அவர் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களிடம் யார் குடியிருக்க இடம் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் இலவசமாகவே குடியிருக்க இடம் கொடுத்தார், பலர் “வாப்பா, மனையை தந்துட்டீங்க, வீட்டை கட்ட பணமில்லையே”ன்னு மெல்லிய குரலில் அழுதபோது எவ்வளவு பணம் வேணும்? எடுத்துக்கோன்னு சொல்லி பலருக்கு வீடுகளையும் கட்டி கொடுத்தார்.அந்த தெரு தான் ஹாமீம் புரம் தெற்கு தெருவாகும்.இன்று ஒரு தச்சு மனை விலை எவ்வளவு.?கணக்கு போட்டால் நூறு கோடியை தாண்டும்.

பர்மாவில் அவர்களின் வணிகம் மிகச் செழிப்பாகவே நடந்தது. அந்த நாட்டின் மொத்த உணவு எண்ணெய் வணிகமும் அவர் கையில் தான்.கன்னியாகுமரி மாவட்டம்,தாமரை குளத்தில் பரந்து விரிந்திருந்த உப்பளமும் அது தந்த உப்பு மூலமான வருமானமும் கணிசமாகவே அமைந்தது.அத்தோடு பருத்தி பஞ்சு வணிகத்திலும் அவரது லாபம் அபாரமாகவே இருந்தது.இந்த வருமானங் களின் உதவியைக் கொண்டு தாய்நாட்டில்.,திருநெல்வேலியில், மேலப்பாளையத்தில், பலருக்கு நன்மைகள் செய்தார்.

பல்வேறு பகுதிகளில் மக்கள் தாகம் தீர்க்கவும் ஆடு மாடுகளின் தாகம் தீர்க்கவும் நீர் நிலையங்கள் கட்டிவைத்தார்.திருநெல்வேலி மாவட்டம் அப்போது தூத்துக்குடி தாண்டி ராமநாதபுரம் எல்லை வரை பரவி இருந்தது.தூரங்களில் இருந்து திருநெல்வேலி தாலுகா அலுவலகம் வரும் மக்கள்.தாகம் தீர்க்கவும் குழித்து சுத்தம் செய்யவும் சொந்த செலவில் குடிநீர் கிணறு அமைத்து வைத்தார்.அந்தக் காலத்தில் ஆங்கில ஆட்சி நினைத்தால் பல கிணறுகளைத் தோண்ட முடியும்.ஆனால் தாலூக்கா ஆபீசில் அவர் தான் மக்கள் குறை தீர்த்து வைத்தார்.

மக்கள் பசியால், பட்டினியால் வாடிய போதெல்லாம் பல நாட்கள் மூன்று வேளையும் உணவு தந்து ஆதரவுக் கரம் நீட்டியவர் அவர்.. ஒருவர் இருவர் என்றில்லாமல் நூற்றுக்கணக்கில் வந்தவர்களுக்கு தாயாக இருந்து சோறு போட்டவர் அவர்.

நாடெங்கும் தலை விரித்த்தாடிய பஞ்ச நேரத்தில் அரிசி சோறு திங்க வழியோ,வாய்ப்போ இல்லாத வேளைகளில் இருக்கிற கொஞ்ச அரிசியை அனைவரும் கஞ்சியாக உண்ண வேண்டியிருந்தது. அதை மக்கள்.மனைவி,பேரன்கள் பேத்திகள் வாப்பா, உம்மா.பெத்தும்மா.பெத்தாப்பாமார்கள் குடிப்பார்கள். .

ஊர் மக்களுக்காக கஞ்சி காய்ச்சும் இடத்திற்குப் பெயர் கஞ்சித்தொட்டி என்பதாகும். பசியால் சாமான்யர்கள் தவித்தபோது.நெசவுத் தொழில் செய்து வாடிய மக்களுக்கு மட்டுமின்றி, முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் யாராக இருந்தாலும் அவர்களின் பசி பட்டினியைத் தீர்க்க. கஞ்சி தொட்டிகள் பல திறந்த வேளைகள் உள்ளத்தை உருக வைக்கும்.

அத்தோடு காலரா,வாந்தி பேதி நோய்களின் பாதிப்பால், ஊரில் கொத்து கொத்தாக மக்கள் இறந்து மடிந்த காலம் மிகக் கொடுமையானது.ஒரு தெருவில் அடுத்தடுத்து இறந்தவர்களைச் சுமந்து செல்ல முடியாமல், சோர்ந்து போய் மக்கள் மயங்கி விழுந்தார்கள்.பள்ளிவாசல் மைய வாடிகளில் ஒரே நேரத்தில்.ஒரே நாளில் பத்து,அம்பதுன்னு கபர்க் குழிகள் தினமும் தோன்றின..

கபன் துணிகள் வாங்கவும் மையித் செலவுக்கும் பள்ளிவாசல் மற்றும் ஊர் பணத்தில் இருந்து பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இந்தக் கொடுமையான காலத்தில் தன்னோடு செல்வந்தர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு களத்தில் இறக்கி கடமைகள் செய்தவர் அவர்.தமது சொந்த நிதியில் மருந்து மாத்திரைகள் வாங்கி ஒரு அரசாங்கம் போல் செயல் பட்டார் அவர் காட்டிய முன் மாதிரியில் மேலப்பாளையத்தின் மற்ற தனவந்தர்களும் இதைத் செய்தார்கள்.

ஒரு காலத்தில் மேலப்பாளையம் நகரில் வீ.எஸ்.டி. வீட்டில் சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை என்கிற நிலைமை இருந்தது. ஒரு பொது கூட்டத்தில் பேசிய பிரமுகர் ஒருவர் அங்கு கூடி இருந்த மக்களைப் பார்த்து, “இந்த ஊரில் வ,செ.த. வீட்டில் சாப்பிடாதவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று கேட்டார்.
“அந்த வூட்டுலே சோறு உங்காதவங்க யார் இந்த ஊர்ல இருக்கா?” அந்த அளவுக்கு யாவரும் அந்த வீட்டில் உண்டவர்களாகவே இருந்தார்கள்.

ஒரு காலத்தில் பெண்கள் விருந்துக்கு போக வில்லை என்றாலோ, .விருந்துக்கு போன வீட்டில் பெண் மக்களுக்கு சோறு வேண்டும் என்று உரிமையுடன் கேட்டாலோ, செம்பு தாலாவில் சோறு,கறி.கத்திரிக்காயோடு போதுமான அளவில் சாப்பிடப்போன ஆட்களிடம் கொடுத்துவிடுவார்களாம். ஒன்னு ரெண்டு நாட்கள் கழித்து தெருத் தெரு வாக வீ.எஸ்.டி.வீட்டில் இருந்து மாட்டு வண்டியில் வந்து அந்தத் தாலாவை திரும்பி வாங்கிச்செல்லுவார்களாம்.

வள்ளல்கள் என்றால் வாழ்த்தப் புலவர்கள் இருப்பார்கள் என்பது சங்க காலத்திலிருந்து நடந்து வருவது தான்.சம்சுத் தாசீன் வள்ளலை தானே முன் வந்து வாழ்த்தியவர் சதாவதானி செய்குத் தம்பி பாவலராவார்.இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஷம்சுத் தாசீன் கோவை என்பது அக இலக்கியம் பேசுவதாகும். பாட்டுடைத் தலைவனாக வள்ளல் சம்சுத் தாசீனும் துணைவியார் அசன் பாத்திமா தலைவியாகவும் புனயப்பட்டுப் பாடப்பட்ட தாகும்.

கோவை இலக்கிய வகையில் தமிழ் அறிஞர்கள் பலராலும் பாராட்டிப் பேசப்படுவதும் உவமை சொல்லாப்படுவதும் ஷம்சுத் தாசீன் கோவையாகும்.நீண்ட நாட்களாக அரங்கேற்றப் படாமல் இருந்த இந்தக் கோவை பன்நூலாசிரியர், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்கள் ஏற்பாட்டில் வி.எஸ்.டி.குடும்ப வாரிசுகளின் ஒத்துழைப்பில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்களால் வெளியிடப்பட்டது.

வள்ளல் ஷம்சுத் தாசீன் அவர்கள் தலை சிறந்த வணிகராகவும் மனிதாபி மானம் மிக்கவராகவும் இருந்தார் என்பதை அவரது சிறந்த நெறி முறைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவிலிருந்து நீண்ட தொலைவில் இருந்த பர்மா நாட்டின் ரங்கூன் நகரில், அவருடைய தொழில் நிறுவனங்களை ஆய்வுசெய்யவும். பணியாட்களைப் பார்த்து உற்சாகப் படுத்தவும் கடல் வழியே பயணித்துச்சென்றார்கள்.

வழக்கம் போல் அங்கே மாதக் கணக்கில் தங்கி தொழில் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் சொல்லிவிட்டு ஊர் புறப்பட ஆயத்தமானார்கள். தம்மிடம் பணி செய்த பணியாளர்கள் அனைவரிடமும், “ஊர் போகிறேன் ,உங்களின் வீடுகளுக்கு ஏதாவது பொருட்கள் தருகிறீர்களா?“என்று கேட்டார்.

முதலாளி கேட்கிறாரே அவசியம் கொடுத்து அனுப்ப வேண்டியது தான் என்று, அங்கு பணிபுரிந்தோர் யாவரும், தங்களால் முடிந்த அளவு சவக்காரக் கட்டிகள் அதான் சோப்பு, பூஎண்ணெய்பாட்டில்கள்,தலையிடி மருந்துகள்,அந்தக் காலத்திலும் பிரபலமாக இருந்த டைகர் பாம்.செண்டு.,.துப்பட்டாக்கள்.வேஷ்ட்டி.சட்டைகள் கொண்டை ஊசிகள், பிள்ளைகள் விளையாட பொம்மைகள் போன்ற யாவும் கொடுத்து விட்டார்கள்.
ஒரு பணியாள் மட்டும் அவர் மனைவிக்கு ஒரு பழைய துணியால் சுற்றப்பட்ட சிறிய பொட்டலம் ஒன்றைக் கொடுத்து விட்டார்.ஊர் திரும்பியதும் அமானித சாமான்கள் யாவும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப் பட்டன. அந்தப் பழைய துணிப் பொட்டலம் மட்டும் கொடுபடாமல் இருந்தது. அந்த பொருளுக்குரிய பெண் தமது கணவன் பர்மாவிலிருந்து ஏதாவது கொடுத்துவிட்டாரா? எனக்கேட்டு வந்தார். “ஆமாம் உன் கணவன் உனக்கு சாமான்கள் தந்துள்ளான். நீ வீட்டுக்கு போமா. நான் நாளைக்கு கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லி தம் தாசீன் தரகனார் அனுப்பி விட்டார்.

சொன்ன வாக்குப்படி தம்தாசீன் தரகனார் அந்த வீட்டுக்கு தானே நேரில் சென்றார். வீட்டுக்குள் நுழைந்தார்.இந்தப் பொண்ணோட மாப்பிளை தங்களுடைய கம்பெனியில் சின்ன சம்பளக்காரனாகத் தானே இருக்கிறான் என்ன கொடுத்து அனுப்பி உள்ளானோ என்று பலவாறாக யோசித்துவிட்டு தாம் கொண்டு வந்த அந்த பொட்டலத்தை அவ வளிடம் தந்தார்.அதை வாங்கியதும், அந்தப் பெண் முகத்தில் அப்படி ஒரு தக தகன்னு ஒரு பிரகாசம் வெளிச்சம் காட்டியது.நான் போயிட்டு “வாரேன்மா”ன்னு சொல்லிட்டு அவர்கள் புறப்பட்டு வந்து விட்டார்கள்

ஒரு வாரம் போயிருக்கும்.வேறு ஒருநண்பரைப் பார்க்க பக்கத்து தெருவிற்கு வந்த தம்தாசீன் தரகனார் “போன வாரம் பொட்டலம் கொடுத்த வீடும் பக்கத்தில் தானே இருக்கு, ஒரு நடை போய் பாத்துட்டு வருவோமேன்னு அந்த வீட்டுக்கு வண்டியை போகச் சொன்னார். அந்த வீட்டில் உள்ளே சென்று அமர்ந்தார்.அப்போது வளவு வீட்டில் இருந்து பொட்டலம் வாங்கியப் பெண் கழுத்தில் காசு மாலை மின்னலிட சாவாசமா தெரு வீட்டுக்கு வந்தார். வீட்டில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் அவசர அவசரமாக கழுத்தில் உள்ள காசு மாலையை அந்தப் பெண் மூடினார்.
.
"அன்னைக்கி நாம் இந்த பெண்ணை பார்க்கும் போது, சின்ன அளவில் நகை போட்டிருந்தாள்.பரவாயில்லையே, இன்னைக்கு காசு மாலை போடுற அளவில் வந்து இருக்கிறாளே"ன்னு நெனைச்சுகிட்டு “எம்மா,...... நான் உன்னை பாக்கணும் தான் வந்தேன், மற்ற சம்பளக் காரர்கள் எல்லாம் பொன்ஜாதி புள்ளைகளுக்கு சாமான்களைக் கொடுத்து அனுப்பும் போது உன் மாப்பிள்ளை மட்டும், ஒன்னும் கொடுத்து விடல்ல பாரு, அதனாலே நான் கொண்டுவந்த சாமாங்கள்ள சிலத உனக்கு கொண்டுவந்திருக்கேன். வங்கிக்கோமா”ன்னு சில பொருட்களை கொடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு கையும் ஓடல காலும் ஒடல.நாடி நரம்புகள் நடிங்கிக்கொண்டே அந்தப் பொருட்களை வாங்கிக்கொண்டாள்.

ஒரு மூணு மாசம் போச்சுது. .அந்த சம்பளக் காரரும் பர்மாவிலிருந்து ஊர் வந்துவிட்டார். முதலாளியைப் பார்க்க வரும் போது தமது மனைவியையும் கூட்டி வந்தார். இதென்னடா இந்த ஆள் மனைவியையும் கூட்டி வந்திருக்கிறாரேன்னு மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
முதலாளி வந்தார்.”என்னப்பா,பிரயாணமெல்லாம் எப்பிடிப்பா? கப்பல் ரொம்ப ஆட்டமில்லியே?.பசியாற சாப்பாடெல்லாம் ஆச்சுதா”ன்னுவழக்கமாக கேட்கும் கேள்விகளைக் கேட்க, அந்த ஆள் திருதிருன்னு முழிச்சிட்டு இருந்தார்.

“என்ன ஆளுப்பா நீ.... எவ்வளவு நாளா .பர்மாவிலே இருக்க.?புள்ள குட்டிகளுக்கு உங்க திங்க பண்டம் பலகாரம்.ஓடி ஆடி விளையாட பொம்மைகள் நீ கொடுத்து விடலியே.ஆச்சரியமா இருக்கே?சரி ..சொல்லு”..
“முதலாளி....... மன்னிச்சுக்கோங்கோ...... வாப்பா, நீங்க தந்தது, தருவது எல்லாமே எங்களுக்கு அதிகம் தான்.இவ இருக்காளே எம் பொஞ்சாதி, .வானா ..சேனா.வீட்டு கடையில் வேலை பாக்கிற ஒவ்வொருத்தணும் எப்படி இருக்கான்.அங்க வேலைப் பாப்பவம் வீட்டுல உள்ள பொன்னுகள் பொஞ்சாதிகள் கையிலும்,சொய்யிலும்,கழுத்திலும்,மூக்கிலும் நகை நட்டுகளாக தொங்குது.நீங்களும் இருக்கீங்களேன்னு, என்னை சதா தொந்தரவு பண்ணிக் கொண்டே இருப்பா.அதனாலே....... நான் மளிகை கடை காய்கறிக் கடைவெளிகளுக்கு போய்ச்சாமான்கள் வாங்கிவரும் போது....... ஒட்டிக்கு ரட்டியா கணக்கு எழுதி..... கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து...... இவ இதோட ஒழியட்டும்னு,..... நீங்க பர்மா வந்த நேரத்துல மத்தவர்கள் குடுத்த மாதிரி சவக்காரக் கட்டியும்.பண்டம் பிஸ்கோத்தும் கொடுத்து விடாம........ ஒரு காசு மாலை கொடுத்துவிட்டேன் வாப்பா. அது வாங்க னான் கொடுத்தது எம் பணம் இல்லே....... அது உங்க பணம் வாப்பா.”.......
“ம்ம்”,சொல்லு ,
“நீங்க ஊர் வந்ததுக்கு பிறகு, மத்த சம்பள சிப்பந்திகள் ஊட்டுக்கு எல்லாம் சாமான் நீங்க கொடுத்து முடிச்சிட்டு, ஒன்னும் கொடுத்து விடாத என் வீட்டுக்கும் போய் தாய் மனசோட உங்க பண்டம்,பாத்திரங்கள்,எம் பிள்ளைகளுக்கு விளையாட்டு சாமாங்கள்லாம் கொடுத்தியளே.... அது தெரிஞ்சு துடிச்சுப் போயிட்டேன்....எங்களை மன்னிச் சிடுங்க வாப்பா......இந்தாங்க நான் தெரியாமச் சேர்த்த காசு மாலையை பிடிங்க வாப்பா”....ன்னு தம்தாசீன் தரகனார் கிட்ட காசுமாலையை அந்த சிப்பந்தி கொடுத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு சின்ன முதலாளிகள்,.கணக்குப்பிள்ளை மார்களும். “தொலைஞ்சாம்லே இவன்”னு மத்த ஊழியக் காரர்களும் திகைச்சுப்போய் பார்த்துக்கிட்டிருந்தார்கள்.
காசு மாலை ஆசாமி அவம்பொஞ்சாதியோடு மலங்க மலங்க பார்த்துக் கொண்டு, முழிச்சிக் கொண்டிருந்தான்.கண்களில் கண்ணீர் வடிஞ்சி, மூஞ்சி எல்லாம் வாடிப் போய் இருந்தது.அந்த இருவரையும்,முதலாளி முகத்தையும் அந்த சபையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
ரொம்ப நேரம் சபை அமைதியாக இருந்தது.முதலாளி தம் தாசீன் தரகனார் சின்னக் குரலில்.கடுகளவு கோபம் கூட இல்லாமல் ”கணாப் பிள்ளை, இங்க வாரும்.இவங் கைல இருக்கிற நகை எம்ம்புட்டு பொறும்.?சொல்லுவே”.
“சரி முதலாளி.”
“ஒரு இருபது பவுன் தேறும்”.

“அப்பிடியா? சரி: இவங்கைல அதுக்கு உன்டான தொகையை கொடுத்திரும்.அந்த காசு மாலையும் திரும்பக் கொடுத்து அனுப்பிடும்”.
.அங்கு இருந்த யாரும் இந்தத் தீர்ப்ப எதிர் பார்க்கவே இல்லை.கை கால்கால்களெல்லாம். நடுங்கி வாப்பா “எங்கள மன்னிச் ச்ருங்க வாப்பா”ன்னு அந்த சிப்பந்தி போட்ட கூப்பாடு கொட்டி குளம், வரை கேட்டது.
பழைய படி பர்மாக் கடைக்கே அந்த ஊழியர் மீண்டும் அனுப்பப் பட்டார். அதுக்கு பிறகு தம் தாசீன் தரகனார் கிட்ட,”களவாங்க” யாருக்குத் தான் மனசு வரும்?.
“அவம் பொஞ்சாதி படுத்தின பாடு தாங்காம, அவம் அப்பிடி செஞ்சுட்டான்.மத்தபடி அவம் நல்ல வேலைக்காரன் தான்.“ இப்பிடி ஒரு வார்த்தை மட்டுமே தம்தாசீன் வள்ளலின் நாவிலிருந்து வந்தது. .வேற வேலையை பாருங்கப்பா” ன்னு குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டு போய்விட்டார்.

அந்தக் காலத்தில் மாலை நேரங்களில் பணக்காரர்கள் வழக்கமாக கிளப்புக்குப் போவார்கள்.அல்லது எங்கேயாவது போய், பூங்காக்களில் நேரத்தை ஓட்டுவார்கள்.ஆனால் தம்தாசீன் தரகனார் அவர்கள்.தமது பணியாட்களோடு ஒரு ஊரையும் மற்றொரு ஊரையும் இணைக்கும் நெடும் சாலைகளுக்கு.காட்டுவழியில் சாரட்டு வண்டியில் பயணம் செய்வார்.ஆறு குதிரைகள்.நான்கு குதிரைகள்.பூட்டிய வண்டிகள் அவரிடம் சர்வ சாதாரணம்.
அவரைப் பின் தொடர்ந்து வேறு வண்டிகளில் பணியாட்கள் செல்வார்கள்.தண்ணீர் சூழ நிற்கும் குளங்கள்,ஓடைகள்.ஒத்தையடிப்பாதைகள் கண்ணில் தென்பட்டால்.”பாருங்கள்,....நல்லாப் பாருங்கள்” என்று சொல்லுவார்.அவர் என்ன வேட்டைக்கா வந்துள்ளார்.இல்லை.விலங்குகள்.பறவைகள் எதுவும் தட்டுப் படுகிறதா என்று தேடவா சொல்லுகிறார் என்றால் அதுவும் இல்லை.
 
யாராவது வழிப்போக்கர்கள் நோய் வாய்ப்பட்டு மயங்கி கிடக்கிறார்களா?,திருடர்கள் தாக்கி யாவாரிகள் மயங்கிக் கிடக்கிறார்களா? என்று பார்த்து,அவர்களை மீட்டு தமது வண்டியில் தூக்கிக் கொண்டுவருவார்.பாதி பேர்கள் பட்டினியால் இருப்பார்கள்.அப்படி கொண்டு வந்தவர்களை முதலாவதாக குளிக்கச்செய்துவிட்டு விட்டு சைவமோ,அசைவமோ உணவு கொடுத்து ஆசுவாசப் படுத்துவாராம்.
“யாரப்பா நீ? நீ எங்கே வந்தாய்?எந்த ஊர்?”என்கிற விபரம் கேட்டுவிட்டு,அவரவர் வீடு போய்ச் சேர உதவிகள் செய்வாராம்.சிலர் “ஐயா முதலாளி,நான் ஒரு வியாபாரி.என்னுடைய பொருட்கள் கொள்ளை போய் விட்டன”, என்று அழுது புலம்புவோர்க்கு மீண்டும் முதலீடு செய்ய பணம் கொடுத்து அனுப்பி வைப்பாராம்.

வள்ளல் சம்சுதாசீன் தரகனார் அவர்களைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ செய்திகள் உள்ளன.அவையெல்லாம் சொல்லிக்காட்ட வேண்டும்.தனிப் பதிப்பாகக் கூட புத்தகம் போடும் அளவு உள்ளது.முயற்சி செய்வோம்.மேலப்பாளையத்தில் இப்படியும் மனிதர்கள் என்று மாணிக்கங்கள் இருந்தார்கள் என்பது பற்றி பின்னர் காண்போம்.
இவ்வாறு பண்பாடுமிக்க வாழ்வு வாழ்ந்த வள்ளல்,சம்சுதாசீன் தரகனார் அவர்கள் 1936 ஆம் ஆண்டுமறைந்தார்கள்.மேலப்பாளையம் நகரில் அவரது ஜனாஸா நல்லடக்கத்திற்குக்கும் 15000 க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டார்கள்.
இறைவன் அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்த்தருள் புரிவானாகவும்.

அவர்களின் மக்களாகிய,  வி.எஸ்.டி.சேக் மன்சூர்,Ex.M.L.A. வி.எஸ்.டி.செய்து தாமீம், வி.எஸ்.டி.முகம்மது இபுராஹீம் Ex.Melapalaiyam Chaiman ஆகியோர் பற்றியும் பின்னர் தொடர்ந்து காண்போம்.

8 கருத்துகள்:

Senthil சொன்னது…

சகோதரர் திரு எல். கே. எஸ். மீரான் முஹைதீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்!.... நீண்ட நாட்களாக பல்வேறு வலைத்தளங்களை படிக்கும் போது நமது மேலப்பாளையம் மொழி நடையில் யாரவது எழுத மாட்டார்களா என்று நினைத்ததுண்டு. உங்களது பதிவுகளை காணும் போது அந்த ஏக்கம் தீர்ந்ததாக உணருகின்றேன்!... திரு தோப்பில் முஹம்மது மீரான் அவர்களது எழுத்துக்களை வாசித்தது போல இருந்தது, வாழ்த்துக்கள்!...

இன்னும் மண்ணின் மணத்தோடு இதுபோல பல பதிவுகளை தருவீர்கள் என்று நம்புகிறேன்!....

நல்வாழ்த்துக்களுடன்

எஸ். ஏ. செந்தில் கண்ணன்.,
மத்திய புலனாய்வு துறை,
புது தில்லி - 3.

LKS.Meeran Mohideen சொன்னது…

அன்பு சகோதரர் கண்ணன் அவர்களுக்கு,
நலம்.
.நலமே ஆவல்.
தாங்களும்,சகோதரி அவர்களும் இருக்கும் பல்வேறு படங்கள் பேஸ்புக்கில் பார்க்க மிக்க மகிழ்ச்சி.
தங்கள் போன்ற தமிழ் அன்பர்கள் பல்வேறு வலைத் தளங்களைப் பார்வையிட்டு, அத்தோடு இந்தத் தளத்தையும் ஒப்பீடு செய்யும் அளவிற்கு என்னுடைய எழுத்து நடை இருப்பதாக நான் நினைத்தே பார்க்கவில்லை. தகுதி பெறவில்லை.
என் ஆசான், தோப்பிலார் அவர்களின் ஒரு கடலோர கிராமத்தின் கதை,சாய்வு நாற்காலி,துறைமுகம் போன்ற மாபெரும் நூல்களைப் வாசித்துவிட்டு தான் புத்தகம் எழுத ஆசைப் பட்டேன்.
பல் வேறு கட்டுரைகள் 'பாமினி,சாருகேசி வகையிலான எழுதுதுருக்ககளின் வடிவில் எழுதியுள்ளேன்,அவற்றை பிளாக்கிற்கு தக்கவாறு மாற்றம் செய்ய வேண்டயுள்ளது.எவ்வளவோ சிரமம் எடுத்து எழுதுகிற கட்டுரைகளுக்கு உங்கள் போன்ற அன்பு நேசர்கள் என்னை ஊக்குவிப்பது, இன்னும் எழுதத் தூண்டுகிறது.
கரிசல் இலக்கிய மேதை கி.ரா,என் ஆசான் தோப்பில்,சமீப காலங்களில் நெல்லை சுகா,போன்றவர்கள் தமது வட்டார நடைகளில் எழுதுவது போல் நானும் நம் தாய் பேசும் மொழி நடையில் எழுதலாம் என்றே மேலப்பாளையம் நடையில் எழுதுகிறேன்.
தொடர்ந்து உங்களின் கருத்துரைகளை எதிர் பார்க்கிறேன்.
நன்றி.

ஹுஸைனம்மா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். என் போன்ற இளைய தலைமுறை அறிந்திருக்க வேண்டிய, ஆனால் அறியாத வரலாறுகள் இவை. அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி. முதல் பதிவு முதற்கொண்டு அனைத்தும் வாசித்துவிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள், இன்ஷா அல்லாஹ்.

ஒரு ஆலோசனை: தங்கள் பதிவுகளை “தமிழ்மணம்” போன்ற வலைப்பூ திரட்டிகளில் இணைத்தால் அதிகமானவர்கள் வாசிப்பார்கள். பார்க்க: www.tamilmanam.net.

“பல் வேறு கட்டுரைகள் 'பாமினி,சாருகேசி வகையிலான எழுதுதுருக்ககளின் வடிவில் எழுதியுள்ளேன்,அவற்றை பிளாக்கிற்கு தக்கவாறு மாற்றம் செய்ய வேண்டயுள்ளது.”
என்று சொல்லியிருக்கிறீர்கள். அவற்றை ப்ளாக்கில் காப்பி-பேஸ்ட் செய்தாலே போதும் என்று நினைக்கிறேன். முயன்று பாருங்கள்.

Word verification-ஐயும் நீக்கி விட்டால் பின்னூட்டுமிட வசதியாக இருக்கும்.

LKS.Meeran Mohideen சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.
மிக்க நன்றி.முயற்சித்துப் பார்க்கிறேன்.
தவிரவும் மற்ற கட்டுரைகளையும் காப்பி-பேஸ்ட் செய்து பார்க்கிறேன்.

Asiya Omar சொன்னது…

மேலப்பாளையம் மக்கள் அனைவரும் அறியும்படியாக கொடைவள்ளல் V.S.T.தம்தாசீன் தரகனார் அவர்களைப் பற்றிய இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அருமையாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் பல.

LKS.Meeran Mohideen சொன்னது…

மிக்க நன்றி.

Unknown சொன்னது…

அருமை,இதைதான் எதிர் பார்த்தேன் - மிக்க நன்றி
Masthan

சேக்உதுமான் சொன்னது…

அந்த காலத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு