வியாழன், 12 ஏப்ரல், 2012

வாப்பு ஊட்டுக்கு போறது... மாமூட்டுக்கு போறது...

என் தாயார் மேலப்பாளையம் காஜா நாயகம் தெருவை சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தின் பெயர் சாந்து என்பதாகும்.


நான் படிக்கும் காலத்தில் என் தலைமை ஆசிரியர் ஜமால் அஹமது அலி அவர்கள் வகுப்பில் பாடம் நடத்தும் போது எங்கள் ஊரின் பல் வேறு குடும்பங்களை பற்றிச்சொல்லி வரும் போது பெயர்க் காரணம் சொல்வார்கள்.
சாந்துக்காரர்கள் என்றால் வாசனைத் திரவியம் வணிகம் செய்தவர்கள்,என்று பெயர் விளக்கம் தருவார். கீழக்கரையில் இருந்து அவர்கள் வந்தார்கள் என்று அவர்கள் சொல்லச் சொல்ல கேட்க வியப்பாக இருக்கும்.
பெரும்பாலும் மேலப்பாளையம் வாழ் பழைய புதிய பொண்ணுகள் மதியம் கணவர் வீட்டில் சப்ப்பிட்டுவிட்டு ஒரு ரெண்டு மணி வாக்கில் அவர்களின் தாய் வீடு போவார்கள்.அதுக்கு வாப்பா வீட்டுக்கு போவது என்றும் வாப்பூட்டுக்கு போரதுன்னும் சொல்லுவார்கள்.பேரன்,பேத்தி மார்கள் மாமூட்டுக்கு போறதுன்னு சொல்லுவார்கள்.
அங்கே போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து மாலை நேர சாயா குடிச்சிட்டு
மாலை ஒரு ஆறு மணி சுமாருக்கு அதாவது விளக்கு பொறுத்த முன்னே கணவன் வீட்டுக்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள். 
இது மாதிரி போக்கு வரத்தெல்லாம் ஒரு அஞ்சாறு வருஷம் ஓடும். அப்புறம் புள்ள குட்டி வளர்ந்து விட்டால் தாய் வீடு போய்வர நினைச்சும் பார்க்க முடியாது. ராத்திரி ஆகிவிட்டால் தூக்க கலக்கத்தில் உள்ள பிள்ளைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மிகச் சிரம மாக இருக்கும்..
சில வேளைகளில் மாமூட்டில் ராத்திரி சாப்பாட்டு விருந்து என்றால் வசதி உள்ளவர்கள் வீடுகளில் இருந்து மட்டும் மாட்டு வண்டி வந்து புருஷன் வீட்டுக்கு அழைத்த்துச் செல்லும். ஆட்டோவாவது? காராவது.?தெரு விளக்குகளும் குறைவாகவே இருக்கும்.


இப்போ மாதிரி நினைச்ச நேரம் கணவனோ அல்லது அண்ணன் தம்பிகளோ மோட்டார் சைக்கிளில் கூட்டி வருகிற மாதிரியாரும் வர மாட்டார்கள்.அது எதுக்கு ,பெண் மக்கள்;மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து அப்போ நான் பார்த்ததே இல்லை.


காஜா நாயகம் தெருவுக்கு சாதாரணமாக குண்டு தெரு என்று தான் பேர் உண்டு. எதுக்காக இப்படி ஒரு பேர் அந்ததெருவுக்கு வந்ததுன்னு பெத்தாப்பா கிட்ட(உம்மாவின் வாப்பா கிட்ட) அடிக்கடி கேட்டிருக்கேன். "பாளையங் கோட்டை ராஜா காலத்ல யாரோ அந்த தெருவில குண்ட போட்டாளாம் .அதனால் அந்த பேர் வந்துச்சி"ன்னு சொல்லுவாங்க.
இதேகேள்விய எங்க பெத்தும்மாகிட்ட கேக்கும் போது அவ வேற மாதிரி பதில் சொல்லுவா ." நீ எதுக்கு இப்பிடி ஒன்னடக்க ஒன்ன கேக்கரே. எனக்கு ஒன்னும் தெரியாது. எதுக்குத் தான் உதிச்சி ,உதிச்சி இப்பிடியெல்லாம்நீ கேக்கிறியியோ? அந்த தெர்ல அந்த காலத்துலே யாராவது குண்டு போட்டானுவளோ இல்ல யாராவது பெரிய சைஸ் ஆளாஇருந்தாரோ என்னவோ "என்று சொல்லிட்டு வெத்திலை போட ஆரம்பிச்சிடிவா.


அக்காலத்தில் அந்தத் தெரு வின் பெயரான "லட்சுமிபுரம் தெரு" என்றும் பெயர் பலகை "கொடி மரம்" பக்கம் உண்டு. 
வருஷத்தில் ரண்டு மூணு கந்துரிகள் அந்த தெர்ல ரொம்ப விசேசம். .
நாகூர் கந்தூரி அப்புறம் பஞ்சா சப்பர ஊர்வலம்.அதோடு காஜா நாயகம் கந்துரியும் நடக்கும்.
இது மாதிரி கந்தூரி நாட்கள்ல பேரப் பிள்ளைகளை யானை மேல் ஏத்துற திலே பெத்தப்பா,பெத்தும்மா மார்களுக்கு ரொம்ப்பப் பிரியமா இருக்கும்.
டவுசர் போட்ட காலத்துல யானை மண்டை முடிகள்,முன்னால ஏத்தி வச்சா "அங்க இங்க" குத்தி கிச்சம் காட்டும்.சிலர் யானை மூக்கில தண்ணி ஊத்தி மூஞ்சில ஊதச் சொல்லுவாங்க.எங்க அப்பாம்மா இந்த மாதிரி "கொடுமையை" பொறுத்துக்க மாட்டா .பேசித் தள்ளிடுவா.


நாகூர் கந்துரி நாள்,ல அந்த மீராப் பள்ளி பெரிய மினார்ல பெரிய கூம்பு ஸ்பீக்கர்கள் மாட்டி இருப்பார்கள். பெரும்பாலும் கல்வத் ஒலிபெருக்கி என்று அதில் எழுதி இருக்கும். நம்புங்க பெரும்பாலும் எம்.ஜி.ஆர். சிவாஜி படப் பாட்டு . காலை முதல் ராத்திரி வரை. ஓயாமல் ஒலிக்கும்..


திடீர்ன்னு நாகூர் ஹனிபா பாட்டு போடுவாங்க. "சன்மார்ர்க்கம் தந்த பெருமானே" "நானிலம் போற்றிடும் நாகூரா" பாடல்கள் போன்றவை நான் எங்கு கேட்க வாய்த்தாலும் மீரா பள்ளி மினாரா என் நினைவுக்கு வரும்.என் மாமூடு மனதில் வரும்.
ராத்திரி வேளைகளில் புது மனை தெரு விலிருந்து வரும் அபுபைதா லெப்பை பொடி குரலில் பயான்  செய்வார்.( பேசுவார்.)


எங்க மாமூட்டு வளவு கதவை திறந்தா, மீரா பள்ளி மினாரவும் கந்தூரி கடைகளும் தான் தெரியும்.கந்தூரி காலங்களில் மினாரா மின் விளக்குகளால் ஜோடிக்கப் பட்டிருக்கும். அங்கே அலாவுதீன் லாலா கடை ரொம்ப பிரபலம். தகர கூரை போட்டு தற்காலிக கடை அமைத்திருப்பார்கள்.அல்வா வாசனை மூக்கைத் துளை.க்கும்.அருகிலுள்ள கடைகளில் பிளாஸ்டிக்சாமான்கள் ஒரு விதமான வாசனையை தரும். எம்.ஜி.ஆர்.சிவாஜி பொம்மைகள் அப்போது அங்கே பிரபலம்.என் பெத்தும்மா எனக்கு ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் ,கார் பொம்மைகள், எனக்கு வாங்கி தருவாள்.


நவாப் பள்ளிவாசலுக்கு மேற்கே யானை கட்டி போட்டிருப்பார்கள். நீண்ட தந்தங்களுடன் பொட்டல் புதூர் யானை அசைந்தாடி நின்று கொண்டிருக்கும். தும்பிக்கையில் தென்னை ஓலைகள் வாய்க்கு போகத் தயாராக இருக்கும்.அந்தப் பகுதி முச்சூடும் யானை "வாடை" தான்.
அது தூங்கிச்சா.தின்னுச்சான்னு பாக்க ஒரு கோஷ்ட்டி வரும்.
சில யானைப் பாசம் கொண்ட கிருத்தியம் பிடிச்சதுகள் "நெய் உருண்டை"எல்லாம் தயார் செய்து கொண்டு வந்து, யானை வாயிலே ஊட்டுவார்கள்.."எதுக்குலே இது கொடுக்கிறார்கள்?"ன்னு கேட்டால்,"யானைக்கு நடந்தா கால்வலிக்கக் கூடாதில்லையா அதுக்குத்தேன்.......... .சும்மவாலே?........... அறுபத்துநாலு தெரச் சுத்தனுமில்லியாலே".


அதன் பின்னங் கால்கள் மத்தியில் ரொம்ப வருஷங்களாக ஆறாமல் இருக்கும் புண்ணும் அதன் நீர் கோர்வையும் யானை மீது பரிதாபத்தை ஏற்படுத்தும். ......"இந்தபுன்ன வச்சிக்கிட்டு, யானை எப்பிடி சாஞ்சி படுக்கும்?
".பாகவதர் மாதிரி கொண்ட வச்ச அந்த யானைக்காரன் மீது கோபமும்.அந்த ஆளப் பார்க்கும் போது வெறுப்பும் ஒட்டு மொத்தமா வரும்.
"இவனுவ மனுஷனுவளா ?" யானைக்கு இது நோவாதா?அழுவுற மாதிரி கண்ணுல இருந்து தண்ணி வருதே..................பாவமா இருக்கே."
என் பெத்தும்மா கிட்ட போய், "இந்த அநியாயத்தை"பற்றி சொல்வேன். "தூங்குலே அப்பா. யானைக்கு நோவாது .ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்திருப்பனுவோ"நீ தூங்குன்னு அந்த மகராசி சொல்லி ...என்னை தூங்க வைப்பாள்.


கொத்துவா காஜா மாமா வீட்டு வளவில், ராட்டு ஊஞ்சல் வரிசையாக போடப்பட்டு இருக்கும்.
ஊஞ்சாலேஏற .எடம்கிடைக்காது.நூறு ஊதியை ஊதினால் எப்படி சப்தம் வருமோ அப்படி ஒரு சப்தம் அதிலிருந்து வரும்.
துட்ட அள்ளிடுவான்.ஊஞ்சா போட்டவன்.
எப்பவாவது கொடை ராட்டினம் போடுவார்கள்.அதுல மரக்குதிரை எல்லாம் தொங்கும்.மத்தியில் ஒரு ஆள் நின்றுகொண்டு சுத்திவிடுவான்.


இப்போ உள்ள தலைமுறைக்கு கந்தூரிகடை இருந்த இடமோ சுவடோ தெரியாது.ஊஞ்சா போட்டு ஆடிய இடமும் போய் விட்டது.ஊரில்புதுசா வீடு கட்ட, பழைய வீட்டை உடைக்கிற செங்கல்களும்,மண் குவியல்களும் அந்தப்பகுதியில் தான் கொட்டப்படுகிறது."நம்ம வீட்டுல உள்ள மண் குவியலை மீரா பள்ளி வளைவுல தட்டுவோம் .எவனாவது அள்ளிட்டுபபோய் விடுவான்" என்கிற "தத்துவத்தில்" என்று அந்தப் பகுதியே நாசம் செயப்பட்டு வருகிறது.ரட்ட ஆணை கொடி பத்தி தனியா எழுதலாம் .
இன்று அந்தக் கொடி ஆட்டோ ரிக்ஷா விலோ ஒத்த யானையிலோ போகுது. கந்தூரி கடைகளும் ராட்டினங்களும் இல்லை..


ஜமால் செய்யது முகம்மது ஆலிம் நிறுத்தமுடியாத பஞ்சா சப்பர ஊர்வலம் "யாரோ செய்த வேலையால்" நின்று விட்டது. "வசூல் ஆகவில்லை" அதான் என்கிறார்கள் சிலர்.


பல இடிகளும் மின்னலும் தாங்கி அந்த மினாரா மட்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது என் மாமூட்டு தெருவில்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Super sir,
Really nice/necessary information,
Thanks a lot for your effort,

Masthan

Unknown சொன்னது…

அழகு