ஞாயிறு, 22 ஜூலை, 2012

மேலப்பாளையமும், ரமலான் மாதமும்.


         பெரும் பாலும் முஸ்லிம் மக்கள் ரமலான்  மாதம் வந்து விட்டால், தமது ஊரில் இருந்து நோன்பு வைக்கவே விரும்புவார்கள்.

காரணம்; தமது வசதிக்குத் தக்க   நோம்புக்கு உண்ண, உறங்க ஏற்பாடு வச்சுக்கலாம். அதனாலதான்.

மேலப்பாளையத்து மக்களும் அந்த மாதிரி அவா கொண்டவர்கள் தான்.இதச் சொல்லும்போது  மேலப்பாளையம் மக்கள் வாய்க்கு ருசியா,பல வகை உணவு வகைகளைக் கொண்டு தான் நோன்பு வைப்பாங்களோ? என்று முடிவுக்கு வந்துடாதீங்க.

ரொம்ப ரொம்ப சாதாரணமான வகை உணவுகளே நோன்புக்கும் இருக்கும்.

அரிசிச்சோறுடன்,வார நாட்களை பிரித்து இறைச்சி,மீன்,முட்டை,பருப்பு ஏன் துவையல், புளியாணமும், சோறும் உண்டே நோன்பு வைக்கும் மக்கள் கூட இருக்கிறார்கள்.

"நெய்யும் தொழிலே செய்யும் தொழில்" என்று இருந்த காலத்தில்  அதி காலை ஸகர் வேளைகளில் ......பழைய சோத்தை, வெங்காயம், பச்ச மிளகாயைக் கடித்துக்கொண்டு உண்டு முடித்து நோன்பு வைப்பார்கள்.

மறுநாள் காலை வழக்கம் போல் “காக்குழியில்” தறி நெய்ய இறங்கி ஒரு "சாம்போ"......."ஒன்னரை சாம்போ" நெய்து முடிப்பார்கள். 

மற்ற மாதங்களில் எப்படி தங்கள் வாழ்க்கை நடை முறை இருக்குமோ  அவ்வாறே நோன்பு காலங்களிலும்தொடர்ந்தார்கள்.

இதெல்லாம் அக்கம் பக்க வீடுகளில்  சின்னஞ்சிறிய வயதுக் காலங்களில் பார்த்திருக்கிறேன்.

      ரமலான் மாதத்தில் என்னுடைய அமீரக மற்றும் அரபக நண்பர்களிடம் ஏதாவது விஸா நடைமுறைகள் பற்றிக் கேட்டால் “இப்போ இங்கே ரமலான் மாதம். பாதி நாள் வேலை இருக்காது. பெருநா கழிச்சித்தான் அதெல்லாம் நடக்கும்,அப்படி இல்லேன்னா கொஞ்சம் மெதுவா இருக்கும்” இப்படி ஏதாவது ஒரு தகவல் தருவார்கள்.

நான் அங்க வந்து... இதப் பார்த்த. பொறவுதான் அவங்க சொல்றது    சரியாத்தானே இருக்குன்னு நம்பிக்கிட்டேன்..

எங்க ஊர் பக்கம் அப்படி இல்லை.
என்னுடைய தாய் ஊர்மக்கள், அப்போ  நெசவுத் தொழிலும்,இப்போ பீடித் தொழிலும்  செய்கிற  ரமலான் மாதத்தில்,  தங்களது தொழிலுக்கு, ஒரு போதும் ஓய்வு கொடுத்தது இல்லை.

தொழிலுக்காக மார்க்கக் கடமையை ஒரு போதும் மறந்ததில்லை.

"பா போடுவதும் பாவாத்துவதும்" வழக்கம் போல் நடந்து வரும். 

நோன்பு என்பதற்காக காலை ஆறு மணிக்குப் பதிலாக, பத்து மணிக்கு பா போட்ட கதைகள் எல்லாம் கேள்விப்பட முடியாது.

மத்த நாட்களில் எங்களூர் தாய் மார்கள் எவ்வளவு  கடுமையாகப் பாடு பட்டு பீடித்தொழில் செய்து உழைத்து வருமானம் பார்த்தார்களோ, அதே அளவு ரமலான் காலங்களிலும் உழைத்து வந்தார்கள்;வருகிறார்கள்.

முகைதீன் ஸ்டோர் காரச் சேவையும், இப்ப சீனி லாலா மிச்சர் வகையறாவும், மொன்ன லெப்பை  கடை வடையையும் ,தன்சீத் ஓட்டல்  சம்சாவையும் வைத்து, புளி ஆணம் ஊத்தி அரிசிச்சோறு உண்டு நோன்பு புடிக்கும் மக்கள் எங்க மக்கள். முன்பு ஊரில் பாதி அப்படித்தான்.

இன்னைக்கு பிள்ளைகளின், இளைஞர்களின், உழைப்பால் ஊர் பொருளாதாரம் கொஞ்சம் முன்னேறி யிருக்கிறது.

உம்மா,வாப்பா, பெஞ்ஜாதி, பிள்ளைகள்,தாத்தா,தம்பி,காக்கா,தங்கச்ச்சி பெத்தும்மா,பெத்தாப்பா,மாமூட்டு வாப்பா, மாமூட்டு உம்மா,  மற்றும் நண்பர்கள்,  ஊர் உறவை தூரத்தில் விட்டு விட்டு..... அரபு நாடுகள், தூரக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க, அமெரிக்க, ஜெர்மனி நாடுகளையும் கடந்து....
ஆஸ்திரேலியா,  பின்லாந்து,இங்கிலாந்து நாடுகள் வரை சென்று.... எங்களூர் பிள்ளைகள் பல்வேறு தியாகங்களைச் செய்து நாட்டை, வீட்டை,உறவை,ஊரை வாழ வாழ வைக்கிறார்கள்.

இறைவன் இப்படி அவர்கள் மூலம் இன்று படி அளக்கிறான்.

எதோ வெளி நாடுகள் தருகிற வருமானத்தில் இப்போ நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.  

அதற்காக... உள் நாட்டில் யாரும் வேலை வாய்ப்பில் இல்லையா? என்று கேட்க வேண்டாம்.

இப்போது படித்துப் பட்டம் பெற்ற எங்கள் ஊர் பொறியாளர்கள் அனைத்து மாநிலங்களிலும் பரவி  இருக்கிறார்கள்.

பல்வேறு பெருமக்கள் பல மாநிலங்களில் வணிகம் செய்கிறார்கள்,

காலை சகர் வேளை நோன்பு துவக்கம் எளிமையானது என்றால், மாலை நோன்பு திறக்கும் போது இனிமை தான். 

குடும்பத்தில் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க பேரீத்தம் பழம், சம்சா, வடை ஏதாவது கஞ்சியோடு நோன்பைத் திறப்பார்கள்.

மொன்ன  லெப்பை கடை,ஷிகபத்துல்லா கடை,கறிவடைகளுக்கும்  கதிரேசன் கடை மெதுவடைக்கும் நீண்ட வரிசையில் நின்றே வாங்கவேண்டும்.
.

ஏதாவது வெளிஊரில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் என் போன்றவர்கள் கலந்து கொள்ளும் போது.... பரப்பி விரித்து வைக்கப்பட்டுள்ள பல வகைப் பண்டங்கள் , பலகாரங்கள் ,கறிவகைகள் குளிர்ந்த பழச்சாறுகள்,சமீப கால கடல் பாசிக் கட்டிகள்,பரோட்டா வகைகள்,இது போதாதென்று பிரியாணிகள் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எங்களூர் இப்தார் ஞாபகம் வந்து செல்லும்.

மேலப்பாளையத்தில் இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க கஞ்சியும், சில பள்ளி வாசல்களில் சகர் உணவும் ஏற்பாடு செய்யது வழங்குகிறார்கள்.

    குடும்பத்தில் யாவரும் ஒன்றாய் அமர்ந்து,பேரீத்தம் பழச் சுளைகள், கொஞ்சமாய் இருக்கிற வடை ,சம்சா,கஞ்சியை வைத்துக்கொண்டு நோன்பு திறக்கிற மகிழ்ச்சிக்கு நிகரே இல்லை...இந்த சுகம் உலகத்தில் வேறெங்கும் கிடைக்காது. 

அந்த நோன்பின் வருகையை வரவேற்பது எங்க ஊரில் மகத்தானது.

எங்க தெருவின் மேக்கே, பிள்ளயார் கோவில் கட்ட பனை மரம் ஊடாக,, .மேற்குத்தொடர்ச்சி மலைக்கு மேலே....
பெரியவர்கள் சின்னவர்கள் பேதமில்லாமல் நோன்பு தலைபிறை தெரிகிறதா? என்று பார்க்ககூட்டமாய் நிப்பார்கள்.

செருப்பில்லாதவர்கள் பிறை பாத்ததாகச்சொன்னால்  யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
திடீரென மேகக்  கூட்டத்திலிருந்து வெளிவரும் அழகான அந்த வளைந்த புதுப்பிறையை பார்த்து சலாம் சொல்லுவார்கள்.

பிறை பாத்தால்  நோன்பு துவக்கம் கண்டுவிடும்..பல பள்ளிவாசல்களில் "பிறை கண்டாச்சு" ன்னு அறிவிக்க நகரா அடிப்பார்கள்.
அப்புறம் ரமலான் மாத பரபரப்பு வீடுகளில் வந்துவிடும். 

அதிகாலைக்கு முன்னர் சாப்பிட உணவு தயாரிக்கும் பணி வேக வேக மாக நடக்கும்.

கொஞ்ச நேரத்தில் "பக்கீர் சாயபுமார்கள்"  புரியாத பாஷையில்  எதோ பைத்து ஒன்றை இழுவை ராகத்தில் படிச்சிக்கொண்டு போவார்கள்.
பெரும்பாலும் தமிழ் வார்த்தைகள் அவர்களின் பாடல்களில் கோர்வை இல்லாமல் வரும்.  அவர்கள் கூட வர்ற பொம்பிளைகள் கைகளில் நார் பெட்டி இருக்கும்.

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சுடு சோறு போடுவார்கள்.
இப்போதெல்லாம் சுடு சோறுக்கு பதிலாக  காசு பணம் கொடுக்கிறார்கள்.

ரமலான் முன்னிரவில் அவர்கள் பாடும் பாடலில் “ஸல்லியால்லா” மட்டுமே புரியும்.என்ன தான் படிக்கிறார்கள்? என்று ரொம்ப தூரம் பின் தொடர்ந்து போனாலும் அவர்கள் பாடும் பாட்டை விளங்கவே  முடியாது.
பெருநாளைக்குப் பிறகு வீடுதோறும் பக்கீர் சாயபு மார்கள் வந்து சலாம் சொல்லி "கேட்டு" பணம் வாங்கிக் கொள்வார்கள்.சில வீடுகளில் அவர்களுக்கு புது வேஷ்ட்டி சட்டைகள் கொடுப்பதும் உண்டு.

இரவில் தராவீஹ் தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் நிறைந்திருக்கும்   தொழுகைக்கு ஆட்கள் நிறையவருவார்கள்.

திருக்குரான் வேதம் தொழுகையின் போது மனமெல்லாம் ஆட்கொள்ளும்.

சகர் நேரத்தை தெரிவிக்க எங்க பக்கமெல்லாம் பக்கீர் சாய்பு மார்கள் அதிகாலை இரண்டு மணி இருட்டு வேளைகளில் மீண்டும் வருவார்கள்.

அவர்களே கோர்வை செய்து பரம்பரை பரம்பரையாக பாடிவரும்,அரபு தமிழ் கலந்த பாடல்களை உரத்த சப்தத்துடன் , தப்ஸ் அடித்து இசைத்துக் கொண்டுபாடுவார்கள்.

நிமிர்ந்து நடந்தபடி, தெருவின் இரு சிறகுகளிலும்  இருவர் செல்வார்கள்.எப்போவாவது  யாராவது வயசாளி ஒருவர் துணைக்கு வருவார்.

அவர்களின் முகமும், கண்களும் முன்னோக்கியே இருக்கும்.கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.


என்னுடைய சின்ன வயசில் எங்க அப்பாம்மாவிடம் “ராத்திரி இருட்டு வேளைகளில் துரத்தி துரத்தி குலைச்சி ஊழையிடும் நாய்க் கூட்டம்  அவங்களை ஒன்னும் செய்யாதில்லியாமா”? ன்னு கேப்பேன்.

.”நாயாவது? பேயாவது? அவங்ககிட்ட எந்த ஜின்னும் நெருங்கமுடியாது” என்பாள்.

அமைதியான அந்த பொழுதில் அந்த தப்ஸ் மற்றும் பாட்டுச்சப்தம் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் கதவுகள் ஒவ்வொன்றிலும் எதிரொலித்து திரும்பும்.

அவர்கள் தப்ஸ் தட்டும் போதெல்லாம் அவர்கள் தலையின் மீதுள்ள தலைப்பாவின் உச்சியில், விசிறி அமைப்பில் உள்ள துணி ஆடி அசையும்.

சில தெருக்களில் பக்கீர் சாய்புமார்களுக்கு அந்த வேளையிலும் சாயா போட்டுக் கொடுத்து.குடிக்க வச்சி  அனுப்பும் பெத்தும்மாமார்கள் இருந்தார்கள்.

ரமலான் தலை நோன்பு துவங்கி....மாலை நேரங்களில் 30 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் குளித்து வருவது அற்புதமான சுகானுபவம்.அங்க குளிச்சவங்களுக்குத்தான் அதன் அருமை புரியும்...மாலை நேர சூட்டு உடம்பிற்கு தாமிரபரணி ஆத்துக்குளியல் ரொம்ப இதமா இருக்கும்.

" ஏல...முங்கி முங்கி குளிக்கியலே....வயித்து நோம்பாலே?"...இப்படி  யாராவது கேப்பாங்க....சந்தடி சாக்கில் வாய்க்கொப்பளிக்கிற சாக்கில் நா வறட்ச்சியை போக்கிக் கொள்ளவெல்லாம் முடியாது....அவ்வளவு கவனமாக இருப்பார்கள்.

லைலதுல் கத்ர் நாளில் கத்முல் குரான் முடித்து "தமாம்"வரும்.
ஒற்றைப்படை நாளில் லைலதுல் கத்ர் வருவதால் 21,23.நீங்கலாக25,27,29 ஆகிய நாட்களில் பள்ளிவாசல்களில் தமாம் நடக்கும்.ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நாட்கள் வித்தியாசப்படும்.
ஒரு காலத்தில் "தமாமுக்கு வாங்கோ,நேர்ச்சை இருந்தாப் போடுங்கோ"என்று கேட்டு  பள்ளிவாசலுக்கு வருகிற மக்களுக்கு வழங்க வாழைப்பழம் வசூலிக்க மோதீன்கள் தெருத்தெருவாக வருவார்கள்.
பின்னர் வண்டி வைத்து வசூலித்தார்கள். பல முஹல்லாக்களில் இது இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.சின்னவர்களின் சப்தம் பழம் கேட்டு "கோரசாக"ஒலிக்கும்.
அந்தத தமாம்  நாளில் இமாமாகத் தலைமை ஏற்றுதொழுகை நடத்திய, குறிப்பாக ரமலான் மாத தராவீஹ் தொழுகை  நடத்திய ஆலிம்களுக்கும்,பாங்கு சொல்லி அழைக்கும் மோதீன்மார்களுக்கும்  அந்தந்த பகுதி ஜமாத்தின் பொருளாதார வலுவைப் பொருத்து சன்மானம் வழங்குகிறார்கள்.

அதுபோல பெண்களுக்குத் "தராவீஹ்"சிறப்புத் தொழுகை நடத்திய இமாம்களுக்கு,பெண்களே ஒன்று சேர்ந்து வசூல் செய்து இந்த நிதியை வழங்குகிறார்கள்.
தமிழ் நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில்,திருக்குரானை மனனம் செய்து தொழுகை நடத்தும்,ஹாபிலுள் குரான்களில் பெரும்பாலானவர்கள் மேலப்பாளையம் ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது மேலப்பாளையம் ஊருக்கு  கிடைத்த சிறப்புகளில் முதன்மையானதாகும்.
ஏதாவது சிற்றூர்களில் உள்ள பள்ளிவாசல்களுக்குச் செல்லும் வேளைகளில், அதில் பணி செய்யும் ஆலிம் பெருமக்கள்  எங்கள் போன்றவர்களைப் பார்த்து விட்டால்,மிக சிறப்பாக உபசரித்துவிட்டு "என்னைத் தெரிகிறதா?எங்க குடும்பப்பெயர் இது.நான் இந்தத் தெரு. இந்த ஊர் மதரசாவில் ஓதினேன்" என்று சொல்லச் சொல்ல ஊர்ப் பெருமை தலை நிமிர்ந்து நிக்க வைக்கும்.
எங்க ஊர் பக்க மெல்லாம் ரமலான் அல்லது பெருநாள்  பிறை பார்த்த தகவல் கிடைக்கவில்லை என்றால் சிலோன் ரேடியோவில் சொல்லுகிரார்களா?என்று விசாரிப்பார்கள்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஒட்டி இலங்கை வானொலியும் தனது வீச்சை குறைத்துக்கொண்டதனால் கொழும்பில் பிறை பார்த்த தகவல் இப்போது தேவைப்படாமல் போன ஒன்றாக ஆகிவிட்டது.

அப்போதெல்லாம் அந்த இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலியில், சகர் நேர சிந்தனை நிகழ்ச்சிகளும்.மாலையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளும் ரொம்பவும்  தரமாக இருக்கும்.

பெரும்பாலும் ரசீத் பின் ஹபீல் என்கிற அறிவிப்பாளர், தெளிவான, தமிழில், மனதை வருடும்மெல்லிய குரலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்...

அப்பப்போ 'அழகு தமிழ்' பி.எச்.அப்துல் ஹமீதும் நிகழ்ச்சிகளை வழங்குவார். அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

அது போலவே பெருநாள் பிறை அறிவிக்கும் படலமும்.
கொழும்பில் பிறை கண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டால், இலங்கை வானொலியில் பெருநாள் தக்பீர் முழக்கமிடும் ஒலிப்பதிவைப் போடுவார்கள்.
எந்த நிகழ்ச்சி ஒலி பரப்பானாலும் அதை அப்படியே நிப்பாட்டி வச்சிட்டு, தக்பீரையே திரும்பத்திரும்ப  போடுவார்கள். 

தெருவில் பெரும்பாலான வீடுகளில் ரேடியோப் பெட்டி இருக்கும்.அதில் சப்தமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அந்த ஒலிபரப்பை வைப்பார்கள். 

தெருவெல்லாம் அதே முழக்கம் தான்.பெருநாள் காலை தொழுகை நடப்பதையும் அவ்வாறே போடுவார்கள்.

இன்னைக்கி அதுவெல்லாம் தேவை இல்லைன்னு ஆகிப்போச்சு.ரேடியோப் பெட்டிகளெல்லாம் போயே போச்சு.

ராத்திரி வேளைகளில் செய்து வைத்த உணவு வகைகளை, சாப்பிட்டு நோம்பு வைக்க  உம்மா, வாப்பா, ,பெத்தாப்பா,வாப்பும்மா மார்கள் தம் மக்களையும், பேரப்புள்ளைகளையும் எழுப்புவார்கள்.

சிலதுகள் சகர் நேரம் முடிய அஞ்சு நிமிஷம் இருக்கும் போது தான் எழுஞ்சி ,அவசர அவசரமாக நோன்பை வைப்பார்கள்.

இன்னைக்கும் பாளையங்கோட்டையில் கிறிஸ்துவ பள்ளிகளில் சின்னஞ்சிறு முஸ்லிம் மழலைக் குழந்தைகள் வைக்கும் நோன்பைப் பார்த்து, அந்த ஆசிரியைகளும்அங்குஉடன்படிக்கும்மாணவச் செல்வங்களும் ரொம்பவே ஆச்சரியப்படுகிறார்கள்.

இந்தப்பிள்ளைகள் உண்ணாமல், தண்ணீர்த் தாகம்  எடுத்தால் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருக்கிறார்கள்?இதை பல்வேறு  மதநல்லிணக்க இப்தார் நிகழ்வுகளில் மறக்காமல் கேட்பார்கள்.

பல்வேறு ஹோட்டல் களில் இப்போ ஸகர் வேளைகளில் உணவு தயார் செய்து கொடுக்கிறார்கள்.

அது தனிமையில் இருக்கிறவர்களுக்கும்.உணவு தயார் செய்ய முடியாதவர்களுக்கும்.வெளியூர் நண்பர்களுக்கும்  உதவியாக இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

இன்னொன்றை கேள்விப்பட்டதை நேரிலேயேநான் பார்த்தேன்.

சில குறிப்பிட்ட ஹோட்டல் அதிபர்கள்,  நோன்பாளிகளுக்கு இலவசமாகவே முழு உணவையும் கொடுக்கிறார்கள்.
வீடுகளில் உண்ண வசதி இருந்தும்.இந்தச் சாப்பாட்டை  உண்ண,.....ரொம்ப பிரயாசை எடுத்து மோட்டார் சைக்கிளில்  வருபவர்களை, அதிகாலை சகர் வேளையின் போது,பாளையங்கோட்டை  புதிய  பேருந்து நிலையம் அருகில், பார்த்தேன். மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்..
உண்ண வசதியில்லாத,சாமான்ய மக்கள்  இதைப் பயன் படுத்தினால் சரிதான்.அதுதான் ஹோட்டல் அதிபர்கள் பலரை இது போன்ற பணிகள் பலருக்குச்செய்ய தூண்டு கோலாய் இருக்கும்.அவர்களுக்கு நலமும் வாய்க்கும்."ருசிக்குப் புசிப்பவர்களை என்ன சொல்லுவது?"
ஒரு காலத்தில் மாலை வேளைகளில், தாமிர பரணி ஆறு முழுதும் நோன்பு பிடிப்பவர்களாலே நிரம்பி இருக்கும்.நண்பர்கள் புடை சூழ அங்கே சென்று குளித்து வருவது மறக்க முடியாதது.சிலர் அதி காலை சகர் வேளைகளில் சென்று குளித்து வருவதும் உண்டு.இன்றைக்கு அதுவெல்லாம் குறைந்துவிட்டது.
பெருநாளைக்கு ஒரு வாரம் முந்தியே பித்ரா அரிசிக் கொடுப்பதும்,சிலர் ஒருநாளுக் குரிய வீட்டு உபயோக  உணவுப் பொருட்களை அல்லது .சேலை வேஷ்ட்டி துணிமணிகளை  பொட்டலமாக்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதும், தற்போது பாராட்டும் அளவு அதிகரித்துள்ளது.
நகரில் பைத்துல் மால் மூலம் வழங்கப்படும் உதவிகளும் நல்ல முறையில் சில ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது.
பெருநாட்களில் சகோதர சமுதாய நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கும் நட்பும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆறு ஒன்று தான் ஊர் ஒன்று தான். ஆனால் மனிதர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.