ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

இசைமுரசு நாகூர் ஹனீபா என்னும் சகாப்தம்.கடந்த  எட்டாம் தேதி இரவு இஷா தொழுகை நேரத்திற்குப் பின்னர்...முக்கியமான சில மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டு இருந்தேன்...அப்போது செல் போனில் ஒரு அழைப்பு... மருமகன் அப்துல் ஜப்பார் பதட்டத்தோடு அலைபேசியில் பேசத் துவங்கினார்..
"நாகூர் அனீபா இறந்து விட்டாராமே?...."
"அப்படியா?....யார் சொன்னது?....யாராவது வதந்திகளைப் பரப்பி இருப்பார்கள்." என்று வழக்கம் போல நான் சொன்னேன்.
"இல்லைங்க...ஆடுதுறை ஷாஜஹான் ஸ்டேடஸ் போட்டு இருக்கிறார்." ....என்றதும் பகீர் என்று ஆகிவிட்டது...
அடுத்த நிமிடம் இது வழக்கம் போல வதந்தியா...இருக்கட்டும் என்று மனதை வைத்துக் கொண்டு ....நாகூரில் இருந்த இசைமுரசுவின் மகன், அண்ணன் நாசருக்கு போன் செய்தேன்...அங்கே ..மறுமுனையில் நாசர் வந்தார்....
"அண்ணே...அத்தா  போய்ட்டாங்கண்ணே ."...அழுகை மேலிட  என்னிடம் சொன்னார்...
என்னால் பதில் வார்த்தைகள் கூட சொல்ல முடியவில்லை... இருவரும் வேறு எதையும் பேசவில்லை...” சபூர் செய்யுங்கள்”.... என்று சொல்லிவிட்டு...உடல் அடக்கம் எங்கே நடைபெறுகிறது?....என்று கேட்டேன்..
"நாளை நாகூரில் வைத்துத் தான் நடத்தனும்...நேரத்தை அப்புறம் சொல்லுகிறேன்"... என்றார்..

அவ்வளவு அதிர்ச்சியான தகவலாக இருந்தது...
என் மனதில் எனக்கு ஏற்பட்ட இசைமுரசுவின் தொடர்பு....என்மீது அவர் வைத்திருந்த பாசம்...அன்பு....பொழிந்த அன்பான வாழ்த்துக்கள்...அவர்களோடு உண்டு களித்தப் பொழுதுகள்...பயணம் செய்த தூரங்கள்....மேடைகளில் அவரோடு அமர்ந்து...அவர் பாட இசைக்கலைஞர்கள் கருவிகளை மீட்டெடுக்க...மனதில் அவையாவும்  வந்து போனது...
ஒன்றா இரண்டா....நினைத்துப்பார்க்க?...
.
நாகூர் ஹனீபா லாட்ஜ் திறப்புவிழா....

கவிஞர் த.காசிம் மகள் திருமண நிகழ்வு....

குற்றால இல்லத்திறப்பு....
குற்றாலம் மெயின் அருவிச்சாலையில் ஆறாம் எண் வீடு ...அங்கே கோர்வை செய்யப்பட்ட பாடல்கள்..
2002 ஆம் வருடம் ஜூன் மாதம் அவர்களின் மனைவி இறப்பு.
.”அத்தா...நானும் கூடிய சீக்கிரம் போயிடனும்பா...பொஞ்சாதி இறந்த பின்னாலே ....வயசான புருஷன் துனியா வில இருக்கக் கூடாதுப்பா....ஆண்டவன் சீக்கிரமா....அழைச்சுக் கிடனும்பா.”என்று உருகிய வார்த்தைகள் .....
அவர்களின் காதுகள் பாதிக்கப்பட்ட  நேரங்கள்...
முதுகு வலியால் அவதிப்பட்டது.......
நாகூர்..மற்றும் சென்னையில் ....இருந்தத் தனிமைப் பொழுதுகள்...எல்லாம் கண் முன் வந்தது...
மேலப்பாளையத்தில் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில்,முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்கள் தலைமையில் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 22.7.1993 அன்று கலைமாமணி இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் சமூக, இலக்கிய இசைப்பணியினை பாராட்டு விழா நடத்தி இசைமுரசுவுக்கு நாங்கள் பொற்கிழியும் வழங்கினோம்..

தி.மு.க தலைவர் கலைஞர்....முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப்.....லத்தீப் சாகிப், வைக்கோ, தினகரன் கே.பி.கந்தசாமி..மெஜெஸ்டிக் கரீம் காக்கா, பத்ஹூர் ரப்பானி சாகிப்,...எ.கே.ரிபாயி சாகிப்..பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முஸ்லிம் லீக்...தி.மு.க...காங்கிரஸ்... மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.....
அவையும் மறக்கமுடியாமல் என்னை அவர் நினைவுகளோடு ....அலையலையாய் என்னைக் கொண்டு  போனது...

தமிழகத்தின் இக்கட்டான சில அரசியல் சூழ்நிலைகளை, அவர் எதிர்கொண்ட விதங்கள்...அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் ....மிகப்பெரும் தகுதிக்குரியவை...

சென்னை தீவுத்திடலில் நடந்த...முஸ்லிம் லீக் மாநாட்டில் அவர் பேசிய ..உருக்கமான உரை....அதே நாள் காலையில் அவர் பெற்ற விருதுகள்...என்று எவ்வளவோ நினைவில் வந்து வந்து சென்றது...

பொதுவாக இசைமுரசு நாகூர் ஹனீபா என்றதும் அவர் பாடிச்சென்ற காலத்தால் அழியாத பாடல்கள்தான் முதலில் நினைவுக்கு வரும்..
 எண்ண எண்ண ...இனிக்கிற பாடல்கள் பல அவர் தந்தவை...
நபிகள் நாயகம் சொல்லிச்சென்றவற்றை.......
நாயகத் தோழர்களின் வரலாற்றை..."இஸ்லாத்தில் ஆகும் நெறி எது?....ஆகா நெறி எது..என்பதை.... சகோதர சமுதாய மக்களிடம்  சென்று சொல்ல முடியாததை இசை முரசு நாகூர் ஹனீபா பாடல்கள் வடிவில் ஒலித்தட்டாக..ஒலிப் பேழையாக வடித்து  வைத்தார்...
அது மிக எளிதில் அவர்களின் உள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டது...
நானிலத்தை  வாழ வைக்க நாயகம் பிறந்தார் பாடல், நபிகள் நாயகத்தில் பிறப்பு தாய் தந்தை...அன்றைய அரபகத்தின் கோலம்.... இவை பற்றி எல்லாம்  பத்து நிமிடத்தில் வரலாறு   சொல்லி நின்றது...

ஆளும் இறைவன் தூதர் நபி.அன்பே வடிவாம் நாதர் நபி பாடலின் ஒவ்வொரு வரியும் நாயத்தின் ஒவ்வொரு கால கட்டத்தை சொல்லிக் காட்டியது...

அண்ணல் நபிகளின் வண்ண மகள் எங்கள் பாத்திமா...
பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?...
தீன் குலக்கண்ணு...நல்ல திருமறைப்பெண்ணு ....
விண்ணகமும் மண்ணகமும்..வியந்துரைக்க வந்துதித்த....அண்ணலாரின் நபி மகளார் அருமையான பாத்திமா...
என்று பல பாடல்கள் பெண்கள் திலகம் நபிகள் நாயகத்தின் மகளார் பாத்திமா அவர்களின் புகழைப் பாடி நின்றன....
பொன்மொழி கேளாயோ...நபிகளின் பொன்மொழி கேளாயோ...
சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே...கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே.....
என்று நபிகளின் நற்போதனைகளைப் பாடிக்காட்டினார்.... குரானைப்பற்றி...
நபிகள் நாயகம் திருவாய் மலர்ந்தருளிய ஹதீஸ்களைப்பற்றி...
ஐந்து கடமைகளில் எத்தனைத் தத்துவங்கள்....
பள்ளிவாசல்...பற்றியும்..
அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததைக் கேளுங்கள்...
இஸ்லாத்தின் தத்துவங்களை எடுத்து வைத்த அல்லாஹ்வின் மெய்யடியார்களை...பாட்டால் பாடிக்காட்டினார்...
மக்கத்து மன்னர் தர்பார் வாசல்...என்று அந்தக்காலத்தையே கண்முன்னே காட்டினார்.
வட்டிக் கொடுமையைத் தட்டிக் கேட்டார்...தீனோரே நியாயமா? என்று நீதி கேட்டார்...
பெண்களை மணமுடிக்க மாப்பிள்ளைகள் கேட்கும் ....கைக்கூலியாம் வரதட்சணை ஒழிப்பை பாடல்களில் கொண்டு வந்து பிரச்சாரம் செய்தார்...அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்...

முதலில்...முஸ்லிம் லீக் இயக்கத்தில் தன்னை ஆட்படுத்தி....
பின்னர் திராவிட கழகத்தில்...தி.மு.க.வில் தம்மை இணைத்து வாழ் நாள் எல்லாம் அந்தபாதையிலே பயணித்தார்...

அவரின் பாடல்களைப் பற்றி நினைக்கும் போது இரு கேள்விகள் மனதில் வரும்..அவர் பாடியது போல இன்னொரு பாடகர் இத்தனை தலைப்பிலும் பாட முடியுமா?என்பதும்...அப்படியே பாடி வைத்தாலும் ...மக்களிடம் அந்தப்பாடலின் கருத்துக்கள் சென்று சேருமா? என்பதும் தான் ...

யாரையும் நோக வைக்காத பழக்கத்திற்கு சொந்தக்காரர்...
இன்றைய காலத்தில் விருந்தோம்பலை...அடடா...அவரிடம் தான் கற்க வேண்டும்....இன்னும்  நிறைய அவரைப்பற்றி மனதுக்குள் வந்து போனது...

எப்படியாவது அவரது முகத்தை பார்த்தாகனும்...என்கிற ஆவலில் திருநெல்வேலியில் இருந்து காலையில் 8.30 மணிக்கு புறப்பட்டு..மதியம் 2.30 மணியளவில் நாகை சென்று அடைந்தோம்..

நாகூருக்குச்சென்றால் அவரைப் பார்க்காமல் வந்ததில்லையே....இனி எப்படியோ?....என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள்...என் மனதில் வந்துபோனது...

எத்தனையோ முறைகள்...நான் சென்று...உரையாடி....உணவுகள் உண்டு....வரலாறுகள் கேட்ட நாகூர் நவ்சாத் கார்டன் வீடு...ஷாமியானா பந்தல் போடப்பட்டு...களையிழந்து போய் இருந்தது...

புத்தம் புதிய பாடல்களின் கேசட்டுகளை...சி.டி.க்களை எனக்கு அன்பளிப்புத்தந்து அதை டேப் ரிக்காடர்களிலோ...பிளேயர்களிலோ...பாடவிட்டும் காட்டிய அந்த வீட்டின் நடுக் கூடத்தில் .....அசைவற்ற உடலாய்....எங்கள் இசைமுரசு...

பல்லாயிரம் பாடல்வரிகளை உச்சரித்த அந்த உதடுகள்....கூரிய பார்வை கொண்ட அந்த விழிகள்...இசைக் கச்சேரிகளில் சுட்டிக்காட்டும் நீண்ட  விரல்கள்  கொண்ட கைகள்...
அழகான வெண்மைத்தாடி....தொப்பிக்குள் அடங்காத வெண்மைநிற முடிக்கற்றைகள்....இவையாவும் அடங்கிப்போய் ஐஸ் பெட்டிக்குள் ....அவர் உடல்...

அந்தக்கோலத்தில் அவரைப்பார்க்க.முடியாமல் ...
வெளியே வந்தேன்...அண்ணன் நாகூர் கவிஞர் ஜபருல்லா "மாமா...மாமா" என்று இசைமுரசை அழைத்து ,  கண்ணீர் வடித்து கதறி அழுது கொண்டு இருந்தார்.. என்னால் தாங்கவே முடியவில்லை...

அங்கே அவரது பிள்ளைகள் நாசரும்..... நவ்சாத்தும்... மாப்பிள்ளைகளும்..அவர்களை கட்டிப்பிடித்து ....ஆறுதல் சொன்னேன்.....

அன்றைய தினத்தில் நாகூரில் அங்கே வந்தவர்கள்....அனைவரும் அவரின் அன்பில் மூழ்கியவர்கள் தாம்.

நெல்லையில் இருந்து நானும் வழக்கறிஞர் தீனும் போயிருந்தோம்..

தென்காசியிலிருந்து சகோதரர்கள் வி.டி,எஸ்.ஆர்.இஸ்மாயில்,ஹாஜி முஸ்தபா கமால்,வீராணம் ஊரைச்சேர்ந்த திருச்சி ராஜா ஓட்டல் கமால்,தென்காசி லத்தீப், பைம்பொழில் முஹம்மதலி ஜின்னாஹ்...மற்றும் தி.மு.க.மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள்,த.மு.க.மு...மனித நேய மக்கள் கட்சித்தலைவர்கள்..வந்திருந்தார்கள்
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து மாநிலப் பொருளாளர் ராமநாதபுரம் ஷாஜஹான், கவிஞர் நாகூர் ஜபருல்லா,  ஆடுதுறை ஷாஜஹான்,ஜமால் முஹம்மது இப்ராஹீம்,நாகை செய்யதலி,நூருல்லாஹ், அபுலசன்  அறமுரசு அப்துல காதர்,தம்பி கடையநல்லூர் ஹபிபுல்லா  வழுத்தூர் மக்கி பைசல் ஹபீப் ரகுமான்,  திருச்சி மாவட்ட தலைவர் K.M.K.ஹபீப் ரஹ்மான்,திருச்சி மாவட்ட செயலாளர் V.M.பாரூக்,நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சம்சுதீன்,நாகூர் ஜான் சாப் , ,நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் திட்டச்சேரி அன்வர் , நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் Aஅபூபாரிஸ்,தஞ்சை இளைஞர் லீக் நாகூர் இஸ்மாயில் ,நாகூர் சுலைமான் ,உள்ளிட்ட முஸ்லிம் லீக் தோழர்கள் வந்திருந்தார்கள்..
 த.மு.மு.க,மற்றும் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், அண்ணன்  ஹைதர் அலி , அண்ணன் ஜே.எஸ்.ரிபாயி,  பேராசிரியர் காஜா கனி முதலான தோழர்களும்அவர்களைச் சேர்ந்தவர்களும்.
,தி.மு.க.விலிருந்து,ஆயிரம் விளக்கு ஹுசைன் , தி.மு.க தமிழக முன்னாள் அமைச்சர்கள்  பெரியவர் கோ.சி.மணி நெல்லை டி.பி.எம் மைதீன்கான், உபையத்துல்லா மாநில தி.மு.க துணைச்  செயலாளர் ஐ.பெரியசாமி , முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கோட்டை அன்பழகன் ,கோவி.செழியன் , , மதிவாணன்,தமிழக  வக்பு வாரிய உறுப்பினர் சிக்கந்தர் , ,ஜமா அத்துல் உலமா சபையின் கொள்கை பரப்பு செயலாளர் தேங்கை  சர்புத்தீன் ஆலிம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுத்தீன்,உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இயக்கத்தொண்டர்களும் பொதுமக்களும், ,ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்கா வளாகத்தில் அமையப்பெற்றுள்ள அந்தப்பள்ளிவாசல் நிரம்பி இருந்தது...அங்கேயே உள்ள மையவாடியில் இசைமுரசு அவர்கள் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்..
நாகூரில் தொடங்கி...நாகூரில் வளர்ந்து....நாகூரிலேயே  மண்ணறை வாழ்வையும் கொண்டுவிட்டார்...
வாழ்க இசைமுரசுவின் புகழ்!.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை ஏற்றுக் கொள்வானாகவும்..அவர் பிழைகளைப் பொறுப்பானாகவும்..!  .(இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களும் திராவிட இயக்கமும் என்பது..தனி வரலாறு ஆகும்.அதுவும் தொடர்ந்து வரும்)