ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

" நல்லா இருப்ப......நிப்பாட்டு ".

 அப்போவெல்லாம்..... ரயில் பயணங்கள்ன்னா ....கனவுகள் மாதிரி இருக்கும்.

பக்கத்திலே உள்ள ஊர்களுக்கு போறதா இருந்தாலும்...

மணிக்கணக்கில் பயணங்கள் நீண்டு நெடுப்பமா இருக்கும்....

நினைவு தெரிந்து என்னுடைய தந்தையை பெற்றெடுத்த வாப்பும்மா மற்றும் அவளை ஒத்த வயதுக்காரங்களோடு சிறுவயதில் பொட்டல்புதூர் போக...

ரவண சமுத்திரம் ரயில் நிலையம் போய் இறங்கி உள்ளேன்.

திருநவேலி வீராவரம் ஸ்டேஷனில் இருந்து 45 கி.மீ.தூரத்திற்கு.... அந்தக் காலத்தில் குறைந்தது 3 மணி நேரமாவது ரயில் போகும்.

மதியம் 12 மணி சுமாருக்கு புறப்படும் அந்த ரயில் வண்டி மூனு அல்லது மூனரை மணி வாக்கில் அங்கே போய்ச் சேரும்.

அந்த வண்டி போய்க்கிட்டே இருக்கும் போது....வீட்டுல இருந்து கொண்டு போன...சாப்பாட்டை ஊட்டி விடுவாள்...

சேர்மாதேவி கத்திப் பாலம் அம்பாசமுத்திரம் போளி... இது எல்லாம் கண்டது... அப்போதுதான்.

அந்த வண்டியை ....கரி என்ஜின் பெரும் சப்தமிட்டுக்கொண்டு... புகையை கிளப்பிக் கொண்டு இழுத்துச் செல்லும்.... ஒரு அஞ்சு ஆறு பெட்டிகள் இருப்பது அந்த காலத்தில் பெரிய விஷயம்.

அந்த ரயில் பெட்டியின் உள்ளே புகை வாடையும்....நீராவி வாடையும்....

கலந்த ஒரு கலவையான வாசனை மூக்கில் ஏறிக் கொண்டிருக்கும் .

போகிற போக்கில் நீராவி எஞ்சினின் நீராவியை உண்டாக்கும் நிலக்கரி எரியும் போது ....குப்குப்ன்னு புகை பெருகி வந்து ....ஜன்னல் ஓரம் இருக்கக்கூடியவர்களின் கண்களில் கரித்தூசி வந்து விழும் .

ஜன்னலோரம் இருந்து பராக்கு பார்த்துக் கொண்டிருப்பவர்கள் புகை வந்து கொண்டிருக்கும் போது முகத்தை வேற தெசையில் திருப்பிக் கொள்வார்கள். 

அது ஒரு இளம் பிராயக் காலம்.

அதுக்குப் பொறவு.... பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாசிலாமணி சார்வாள் தலைமையில் குற்றாலத்திற்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி இரயில் நிலையம் வரை புகை வண்டியில் சென்று, குற்றாலம் வரை அந்தா இந்தான்னு...

சொல்லி நடத்தியே....

கூப்பிட்டு போன கதை எல்லாம் உண்டு.

அதுக்குப் பொறவு 1981 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது ஜனவரி மாதம் 5 6 தேதின்னு நெனைக்கேன்.... அப்பொழுது எம்ஜிஆர் இரண்டாவது முறையாக ஆட்சியில் ஏறி இருந்தார். நான் பள்ளி மாணவனாக இருந்த காலகட்டத்தில் எங்களை எல்லாம் ஆசிரியர் கோமதிநாயகம் தலைமையில் அன்றைக்கு பணியில் இருந்த அகமது மீரான் , ஹபீப் சார்வாள்கள் பொறுப்பில் கூப்பிட்டுப் போனாங்க....

. மதுரையிலிருந்து புதூர் அருகில் உள்ள அல் அமீன் உயர்நிலைப் பள்ளியில் எங்களை எல்லாம் தங்க வச்சாங்க.....

அப்வவும் கரி வண்டி.... புகையை எழுப்பிக் கொண்டு சென்ற நீராவி எஞ்சின்தான்.

160 கி.மீ.தூர மதுரைக்கு போய்ச் சேருவதற்கு 6 மணி நேரத்திற்கு மேலாக ஆகும். நாங்கள் போன வண்டியோ... இரவில் 11 மணிக்கு புறப்பட்டு விடியக்காலை அஞ்சரை மணி வாக்குல மதுரைல கொண்டு போய் விட்டான்.

அப்படி என்றால் எவ்வளவு நேரம் அந்த கரி வண்டி எடுத்து இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

எனது மாமா மேலப்பாளையம் முன்னாள் சேர்மன், வழக்கறிஞர் எல் கே எம் அப்துல் ரஹ்மான் அவர்கள், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்தவர்கள்.

ஒரு காலகட்டத்தில் கல்லூரியின் பொறுப்பு செயலாளராகவும் இருந்தவர்கள்.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியின் 30 ஆண்டு கால தாளாளராக பணி செய்தவர்கள்.

அவர்களுக்கு மிக நெருக்கமாக காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் ஷாம் சிகாபுதீன் ஹாஜி யார் என்று ஒரு பெருந்தகை அதுவும் இலங்கையில் வணிகம் தொழில் செய்து வந்த பெருந்தனக்காரர் இருந்தார்.

அவர்களை அடிக்கடி சந்தித்து வரக்கூடிய வாய்ப்பு என் மாமா அவர்கள் மூலம் ஏற்பட்டது.

மேலப்பாளையத்தில் இருந்து கடிதம்.... காயல்பட்டினத்தில் இருந்து திரும்பவும் கடிதம் என்று தகவல் தொடர்பு பரிமாற்ற பணியில் என்னை அனுப்பி வைப்பார்கள்.

காயல்பட்டினம் செல்வதற்கு பஸ்ஸை விட.... திருச்செந்தூர் ரயில் வண்டியைத் தான் அதிகம் விரும்புவேன்.

இன்னும் ஆசை அதிகம் கொண்டு.... மேலப்பாளையம் குரிச்சியில் அந்த காலத்தில் ரயில் நிலையம் ஒன்று இயங்கி வந்தது.

அங்கே என்னுடைய பள்ளித் தோழன் கிருஷ்ண னின் தந்தை தான் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். 

ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய காலகட்டங்களில் கிருஷ்ணன் என்னோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் தேர்வு நடக்கின்ற காலங்களில் அந்த ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் 

அது 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்தது .

ஆகவே மேலப்பாளையம் குறிச்சி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து காயல்பட்டினத்திற்கு அல்லது திருச்செந்தூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு அந்த ரயிலில் ஆவலோடு ஏறி அமர்ந்து காயல்பட்டினம் செல்வேன்.

அது ஒரு காலம்.

1981 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தான் திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் என்று ரயில் பாதை அமைந்தது.

முதன்முதலாக நாகர்கோவிலில் இருந்து பெருத்த உருவத்தினுடைய நீராவி எஞ்சின் இரண்டு மூன்று பெட்டிகளோடு திருநெல்வேலி ஜங்ஷனை நோக்கி வந்தது.

கொக்கிறகுளம் ரயில் பாலத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல்.... இந்தக் கரையிலேயே நின்று விட்டது.

காரணம் ...தண்டவாளப் பணிகள் முடியாமல் இருந்த காலம் அது.

அந்த ரயில் பாதை அமைந்ததற்கு பின்னால் நாகர்கோவில் திருவனந்தபுரம் செல்வதற்கும்.... அதையும் தாண்டி கொல்லம், எர்ணாகுளம், கொச்சின் செல்வதற்கும் போய் வந்துள்ளேன்.

இன்னும் பொறுப்புக்கள் பல வந்ததற்குப் பின்னர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாக.... சாவக்காடு பகுதிகள் தாண்டி மலப்புறம், பொன்னானி மஞ்சேரி செல்வதற்கும்... கண்ணனூர் வரை போய் வருவதற்கு அந்த பாதையை பயன்படுத்தி இருக்கிறேன்.

சென்னைக்கு வந்து செல்வது என்பது என்னுடைய மாணவப் பருவத்திலேயே துவக்கம் ஆகி விட்டது .

அதுவும் ரயில் ...பஸ் பயணங்கள் என்பவை என்னோடு பின்னிப்பிணைந்தவை.

ஒரு காலத்தில் திருநவேலியில் இருந்து ரயிலில் மாலை நாலு மணிக்கு புறப்பட்டால் மறுநாள் காலை 8:30 அல்லது 9 மணி அளவில் தான் சென்னை எக்மூர் போய் இறங்க முடியும். 

630 கி.மீ....16 மணி நேரங்கள் ரயில்ல போகணும். அப்படி இருந்த காலங்கள் அகல ரயில் பாதை வந்தபோது 14 மணி நேரம் 12 மணி நேரம் என்று குறைஞ்சி... தற்போது பத்தரை மணி நேரத்தில் சென்னை எழும்பூர் போய் சேர முடிகிறது 

1992 93 காலகட்டங்களில் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு உள்ள விருது நகர் வரை மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் மீட்டர்கேஜ் மூலமாக சென்னை செல்வதற்கு திருநெல்வேலி- பேட்டை- தென்காசி என்று போய் சிவகாசி- ராஜபாளையம் என்று தொடர்ந்து விருதுநகரை தொட்டு அந்தப் பாதையில் சென்னை போய் சேர்ந்த நாட்கள் உள்ளன.

ஒரு காலகட்டத்தில் சென்னை செண்ட்ரலில் இருந்து பயணப்பட்டு ஜோலார்பேட்டை அரக்கோணம் ஜோலார்பேட்டை வழியாக எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டு  திண்டுக்கல் மதுரை வந்து திருநெல்வேலி வரவேண்டிய சூழ்நிலையிலும் இருந்தது.

தற்போது மின் மயமாக்கப்பட்ட பாதையின் மூலமாக மிக வேகமாக ரயில் மூலம் சென்னைக்கு செல்ல முடிகின்றது.

இவையெல்லாம் எதற்காக இங்கே சொல்றேன்னா....ரயில் பயணங்களில் ஒரு காலத்தில் பக்கத்தில் இருப்பவர்களோடு பேசிக் கொண்டிருக்க முடியும். பேச வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளில் கைகளில் கொண்டு செல்லும் புத்தகங்கள் நமக்கு பயணங்களில் அதுவும் குறிப்பாக ரயில் பயணங்களில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவங்களை கொடுக்கும்.

சில சில வேளைகளில் பக்கத்தில் இருக்கின்ற பேர்வழிகள் பேசுகின்ற தொல்லைகள் தாங்க முடியாமல் கூட புத்தகங்களில் கவனம் செலுத்தி வாசிக்க முடியும்.

அதே நேரத்தில் பல்வேறு பயணங்களில் பக்கத்தில் இருக்கின்ற அதிகாரிகள் அலுவலர்கள் மூலமாக பல்வேறு தகவல்களும் ரயில் பயணத்தில் பெற முடியும் .

ரயில் சினேகம் என்பது 12 மணி நேரத்திற்குரியது மட்டுமல்லாமல்.... சில நட்புகள் நீண்ட நெடிய நாட்கள் வருடங்கள் தொடர்ந்தே வந்திருக்கின்றன .

இப்பவெல்லாம் கிழடுகள் முதல்...

குமரிகள்... சிறுசுகள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு செல் போன்ல பாட்டுகள் கேட்டுகிட்டு ..

முகத்தை ஒரு தினுசா வச்சிக்கிட்டு வருகிற லட்சணத்தைப் பார்த்தாலே சிரிப்புகள் வந்து கொண்டிருக்கும்.

கதைக்கு வருவோம்...... நேற்றைய தினம் திருநெல்வேலியில் இருந்து கல்விப் பணிகள் தொடர்பாக சென்னைக்கு பயணப்பட்டேன்.

வரும்போது இருக்கட்டுமேன்னு.... அடிக்கடி நான் வாசித்து மகிழும்... என்னுடைய அருமை சகோதரர் நெல்லை சுகா அவர்களின் புத்தகமாகிய ...தாயார் சன்னதியையும் அன்பு அண்ணன் நாரும்பூ நாதனின் வேணுவன மனிதர்கள், அண்ணன் தீன் அவர்களின்சந்தனத் தம்மை, கலாப்ரியா அவர்களின் பேரருவி புத்தகங்களையும் எடுத்து வந்தேன்.

என்னை விட ஓரிரு வயதுகள் இளையவரான சுகா அவர்கள் திருநவேலி ஊரைச் சேர்ந்தவர்.


அவர் குடும்பத்தோடு.... தலைமுறைகளான தொடர்பை கொண்டவன்.


அவருடைய தந்தை தமிழ்க் கடல் ஐயா  நெல்லை கண்ணன் அவர்களை... நாங்கள் எல்லாம் வாப்பா முறை வைத்து அழைப்போம்.... அவரும் எத்தனையோ இடங்களில் என்னை மகனே என்று தான் அழைப்பார்.

என்னுடைய பிள்ளைகள் திருமணத்திற்கு முன்னதாகவே வருகை தந்து... ஒரு பாட்டன் அந்தஸ்திலிருந்து குழந்தைகளை எவ்வளவு தூரம் வாழ்த்தி மகிழ்விக்க முடியுமோ அவரெல்லாம் செய்தார்.

அதுபோல எங்களுடைய வீட்டில் எத்தனையோ முறை அவர்கள் உணவருந்தி சென்றதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பினை எங்களுக்கு.

அன்புத் தம்பி சுகா அவர்கள் தன்னுடைய சிந்தனையாலும், உழைப்பாலும், எழுத்தாலும், தமிழ்த் திரையுலகத்தின் தகுதியான ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.

இயக்குனர் பாலு மகேந்திராவின் அறிமுகம் பெற்று ...அவர்களுடனே பல்வேறு திரைப்படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். அதற்குப் பின்னர் ஓரிரு படங்கள் இயக்கி ...முழு நேரமும் கதை வசனகர்த்தாவாக தன்னுடைய பணியை சென்னையில் நெல்லையில் தொடர்கிறார் .

அவருடைய கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம், தனுஷ் நடித்த அசுரன் முதலானவை அவருடைய எழுத்தின் எழுச்சியை வசனங்களில் காட்டித் தந்தன.

திருநெல்வேலி பாஷையில் அவர் எழுதுகின்ற அந்த எழுத்துக்கள் சினிமாவில் மட்டுமல்லாது பார்ப்பவர் கேட்பவர்கள் மனசில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த மூங்கில் மூச்சு என்கின்ற கட்டுரைத் தொகுப்பு உலகளாவிய அளவில் பெருமை சேர்த்தது.

அதனைப் போலவே தாயார் சன்னதி என்கின்ற திருநெல்வேலி பதிவுகள் அற்புதமானவை .

வாசித்து ....வாசித்து மகிழத்தக்கவை.

அதனை நேற்றைய தினம் ரயிலில் வரும்போது வாசித்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் புத்தகத்தில் ஜெயன்ட் வீல் என்கின்ற ஒரு பதிவு உள்ளது.

திருநவேலி பகுதியில் உள்ள குடும்பங்கள் பலவற்றில்...

சினிமா.... பொருட்காட்சி... சர்க்கஸ் ....பார்க்க சின்ன ஊரார் போகனும்ன்னா....குடும்பத்தில் உள்ளவர்கள் போக அக்கம் பக்கத்தில் உள்ள பெரிய மனுஷாட்களிடம் ஒப்படைத்து பத்திரமாக கூப்பிட்டு போய்ட்டு வாங்கன்னு.... அனுப்பி வைப்பார்கள்.

என்னையும் அவ்வாறு பலமுறை பொருட்காட்சி, சர்க்கஸ் ,சினிமா.... குறிப்பா எம்ஜிஆர் சிவாஜி சினிமா பார்க்க அனுப்பிச்சு வச்சு இருக்காங்க.

அத மாதிரி ....சுகாவை இளம் வயதில் பொருட்காட்சிக்கு அழச்சிக் கிட்டுபோன பெரியப்பா பற்றி

ஜெயண்ட் வீல் ராட்டிணம்....ங்கிர பதிவை வாசிச்சுக் கிட்டிருந்தேன்.

அதிலே சுந்தரம் பிள்ளை பெரியப்பா என்கின்ற ஒரு கமிஷன் கடை பெரியவர்...

சிவப்பழம் டி எஸ் பாலையா மாதிரி முழிப்பு உள்ளவர் ... பனியன் மாதிரி மூன்று பித்தான்கள் மட்டும் உள்ள கழுத்தில் வழியாக போடும் ச ... அந்தச் சட்டையை அணிந்து திருநெல்வேலி பொருட்காட்சிக்கு அழைத்து செல்கிறார்.

பொருட்காட்சியில் இருக்கின்ற அந்த பெரிய ராட்டினத்தில் ஏறுவதற்கு கொஞ்சம் பெரியவனாக இருந்த சுகா ஆசைப்பட்டதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு.... அதில் ஏறி விட்டார்.

மனதளவில் மிகப் பயந்த குணமுடைய சுந்தரம் பிள்ளை பெரியப்பா அந்தராட்டில் ஏறி உட்காரும்போது... ஆண்டவனை துணைக்கு அழ ச்சிகிட்டு... அவருடைய வழக்கப்படி சிவாய நம என்று சொல்லி... கண்களை இறுக்கமாக மூடி ராட்டினம் சுற்றுவத எதிர்கொண்டு இருந்திருக்கிறார்....

ஒரே ஒரு சுற்று தான் போயிருக்கும்...

அந்தப் பெரியப்பா.... ஏ நிறுத்து சின்னப் பையன் பயப்படுதான் னு. பக்கத்தில் இருந்த சுட்டியான சுகாவ பார்த்துக்கிட்டே சொல்லி இருக்கார்.

பெரியப்பா எனக்கு ஒன்னும் பயமில்லை ...ஜாலியாத் தான் இருக்கு ...என்று சொல்லவும் அவர் பார்த்த பார்வை வேறுவிதம் .

இன்னும் கொஞ்சம் வேகம் பிடிச்சதும்.... ஏய் நிறுத்த போறியா இல்லியா? ..ன்னு ஒரு சவுண்டு கொடுக்க... அது ராட்டுக்காரன் காதில் விழவே இல்லை.

இன்னும் வேகம் கூடியதும் ....ஏ ஐயா ....நல்லா இருப்ப.... கூட கொஞ்சம் துட்டு தரேன்... இறக்கி விடுறான்னு சொல்லி.... அழுகை...பீதி....வியர்வை வடிய அவர் போட்டக் கூச்சல் கீழே நின்ற ....மோட்டார் மூலமாக ராட்டு ஓட்டுநவன் காதில் விழவே இல்லை.

அவருக்கு பயத்தில் வேர்த்து விறுவிறுத்து ...இறங்கிப் போய் இருந்த விதத்தை ....அன்பு இளவல் சுகா அவர்கள் தன்னுடைய தாயார் சன்னதி புத்தகத்தில் உள்ள கட்டுரை பதிவு ஒன்றில் ....சிரிக்க சிரிக்க எழுதி இருந்ததை பார்த்து படித்து வாசித்துக் கொண்டிருக்கும் போது.... திருநெல்வேலி பொருட்காட்சிக்கு நான் நேரில் சென்றது.... பார்த்தது போல் உணர்ந்தேன் ....

என்னை அறியாமல் நீண்ட நெடிய நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்.

என் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மனிதர் அவரைப் பார்த்தால் பிராமண குடும்பத்தில் உள்ளவர் போல் தெரிந்தது.

அவரும் அவருக்கு எதிரே அவருடைய மனைவியும்  என்னைப் பார்த்துக்கொண்டு ....தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.

நான் சிரிச்ச சிரிப்பை பார்த்துவிட்டு.... அடக்க முடியாமல் இருந்த என்னுடைய நிலையை பார்த்துவிட்டு.... அவர்கள் இருவரும் என்னை பார்த்து முறைச்ச முறைப்பு இருக்கே...


புத்தகத்தை மூடி வச்சுக்கிட்டு அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தேன்.

.. சுகா என் கண் முன்னே கதை சொல்லிக் கொண்டிருந்தார் .

சுந்தரம் பெரியப்பா முழுசா.... பே முழி... முழிச்சது என் கண் முன்னே வந்து போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்தவர் தலையில் அடிச்சிக்கிட்டு...மூஞ்சியை வேற பக்கமா திருப்பிக்கிட்டார்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

10 ஆம் நம்பர் 22 ஆம் நம்பர் பஸ்


 அப்போவெல்லாம் திருநெல்வேலி டவுணுக்கு எங்க ஊர் மேலப்பாளையத்திலிருந்து  போக....22  ஆம் நம்பர் பஸ்ஸில் ஏற வேண்டும்.

 அந்த பஸ் வி.எஸ்.டி பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு.... அப்படியே அபுல் கலாம் ஆசாத் வீதி, அண்ணா வீதி, கொடிமரம்,  வாய்க்கால் பாலம், என்று  போய்..... நத்தம் ,கருப்பந்துறை, குறுக்குத்துறை, வாகையடி முக்கு, மேலரதவீதி என்று தளவாய்  அரண்மனை வாசல் முன்பாக நிற்கும்.

கருப்பன் துறை ஏற்றத்தில் இருந்து ,குறுக்குத்துறை திருப்பம் வரை, ரோடு மிகக் குறுகலாகவும்....  கிழக்குப் பகுதி  பள்ளமாகவும், மேலப் பகுதி வயக்காடாகவும் இருக்கும்.

பஸ் முழுக்க ஆள் நெருக்கடி அதிகமாகி...ஒரு பக்கமா சாஞ்ச படி திக்கித் திணறி....போகும்.

சாலையின் விளிம்பை தொட்டுக்கொண்டு பஸ் செல்வதை , உள்ளிருந்து பார்ப்பதற்கு கொஞ்சம் பீதியாகவே இருக்கும்.

 அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, இன்றைய வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி,வாகையடி முக்கு, குறுக்குத்துறை தொட்டு.... பழையபடி மேலப்பாளையம் ஊருக்குள் அண்ணா வீதியில் நுழைந்து... இடது புறம் திரும்பி பஸ்டாண்ட் மருத்துவமனை வாசலில் நின்று, குறிச்சி   இப்போதைய ரவுண்டானா ,விஎஸ்டி பள்ளிவாசல்..... என்று போய்க்கொண்டிருக்கும்.

 அந்தக் காலத்தில் தாஜ்மஹால் டிரான்ஸ்போர்ட் என்று பெயரை வைத்து அந்த பஸ் ஓடிக்கொண்டிருந்தது...

 அந்த பஸ் ஒரு டிரைவர் பாட்டையா ஓட்டிக்கொண்டு இருப்பார்.

 அதற்குப் பிறகு பேரின்பவிலாஸ் பஸ் ஓடத்துவங்கியது.  பின்னர் MPR ட்ரான்ஸ்போர்ட் , அரசு  பஸ்... அதுவும் கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்தில் இருந்து ஒரேநேரத்தில் பஜார் அண்ணா வீதியில் எதிரும் புதிருமாக 2 பஸ்கள் நுழைந்து செல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

 இன்றைக்கு 2 கார்கள் சிக்கி முக்கிக் கொண்டு செல்வதை உணர்கின்றோம்.

மேலப்பாளையத்தில் மேற்கு புறத்தில் உள்ள எங்கள் தெருவில் இருந்து  கொடி மரம், அண்ணா வீதி, காயிதே மில்லத் பள்ளிக்கூடம் ரோடு.... உள்ளே நுழைந்து, எதிரே இன்னொரு வேன் அல்லது சிறிய வகை லாரி வந்து விட்டால் அந்த சாலையில் இருந்து வெளியேறுவதற்கு போக்குவரத்தின நெருக்கடியினால் பத்து நிமிடங்கள் ஆகின்றன.

அதற்காகவே வாய்க்கால் பாலம் சென்று கால்வாய் கரை உள்ள சாலையின் வழியாக குறிச்சி வந்து முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி... ஜங்சன், பாளையங்கோட்டை அல்லது அம்பை ரோடு செல்வதற்கு முடிகிறது. 

இந்தச் சாலை விரிவு படுத்தப் பட்டு வருவது.... மேலப்பாளையத்தில் மேற்கு பகுதியில் உள்ள மக்களுக்கு, இன்னும் நத்தம் பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் பாளையங்கோட்டை போய் வருபவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக உள்ளது

 இதற்கெல்லாம் காரணம் அண்ணா வீதி பழைய வீதியாக இருப்பதே.....

அதே நேரம் முன்னர் நடந்தோ....

 சைக்கிளிலோ வந்துதான்  மீன், இறைச்சி, காய்கறிகள் ,பல சரக்குகள் வாங்கி செல்வார்கள்.

 இன்றைய காலம் அனைத்து வீடுகளிலும் ஒன்று இரண்டு பைக்குகள் உள்ளன.

 அந்த பைக்கு களில் வரக்கூடியவர்கள்.... எங்கெல்லாம் செல்கிறார்களோ.... அந்தக் கடை வாசல்....சாலை, அவர்களுக்கு பார்க்கிங் ஆக மாறிவிடுகிறது.

அதுவே அனைத்து போக்குவரத்துகளுக்கும் இடையூராய் மாறிப்போகிறது...

அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்வது ஒரு நாளைக்கு  பகலில் 12 முறையும்  இரவில் 5 முறையும் வந்து செல்ல வேண்டும் என்பது குறைந்த பட்ச விதியாகும்....

 ஊரில் நெருக்கடியான போக்குவரத்து உள்ளதால்  அரசு பஸ்சை ஓட்டக்கூடிய டிரைவர்கள் எவரும் மேலப்பாளையம் ரூட்டில் வந்து ஓட்ட விரும்புவது இல்லை.

 அண்ணா வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு முன்பாக மாலை 7 மணிக்கு பிறகு மிகுந்த சிரமப்பட்டே செல்ல முடிகிறது.

 காரணம் அங்கும் நிறுத்தப்பட்டு உள்ள பைக்குகள் தாம். யாரையும் எதுவும் கேட்க முடிவதில்லை.

 மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக 10 ஆம் நம்பர் பஸ் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு கொக்கிரகுளம் வழியாகச் செல்லும். 

ஒவ்வொரு மணி நேரமும் சொல்லி வைத்தாற் போல் சரியாக வந்து செல்லும் டிவிஎஸ் பஸ் சர்வீஸ் இருந்தது.

 அப்புறம்....  IR, SGKR, GMT கம்பெனி பஸ்கள்.... பாளையங்கோட்டை வழியாகச் சென்று.... திரும்பி... மீண்டும் அதே வழியில் வரும்.

 ஐ ஆர் பஸ் ஓட்டக்கூடிய டிரைவர்கள் பெரும்பாலும் மிக வேகமாக ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

 ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் இருந்து 18 ஆம் நம்பர் பஸ் என்று ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு பஸ் சர்வீஸ் இருந்தது.

 அந்த  பஸ் ஏறி ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சென்று வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

 இன்றைக்கு 18 ஆம்  நம்பரையும் காணோம்.

 10 /30 என்று ஒரு பஸ் இருந்தது.

 அந்த பஸ் மேலப்பாளையத்திலிருந்து கோபாலசமுத்திரம் வரை சென்று வரும்.

 நான் விவசாயம் செய்து வருகின்ற காடுவெட்டி கிராமத்திற்கு பஸ் வேண்டும் என்று கேட்டு 14 என்கிற ஒரு பஸ் சர்வீஸ் மேலப்பாளையத்தில் இருந்து சிங்கிகுளம் காடுவெட்டி...

வெங்கட்ரங்காபுரம் வரை சென்று வந்தது.இப்போது 14 A என்று போய் வருகிறது...

 படத்தில் உள்ள பஸ் போன்றே தான் ....தாஜ் மஹால் டிரான்ஸ்போர்ட் பஸ் மேலப்பாளையத்தை சுற்றி வரும்.

 அந்த நினைவுகள் எல்லாம் மனதில் வந்தன.

ஞாயிறு, 31 மே, 2020



எங்கள் வீட்டில் என் தந்தை காலத்தில்... அடிக்கடி கேட்ட பெயர்.
சிங்கம்பட்டி ராஜா TNS. முருகதாஸ் தீர்த்தபதி என்கிற அந்த கடைசி ராஜாவின் பெயர் .
தென்னாட்டு வேங்கை நல்லகுத்தி புலிக்குட்டி சிவசுப்ரமணிய கோமதி சங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர TNS முருகதாஸ் தீர்த்தபதி ராஜா என்கிற நீண்ட கம்பீரமான பெயரைப் பெற்றிருந்தார் அவர்.
சிலவேளைகளில் ஊத்து மலை ஜமீன்தார்கள் இருதாலய மருதப்ப பாண்டியன், SM. பாண்டியன், தங்க ராஜ் பாண்டியன்...இப்போதுள்ள முரளி ராஜா என்று பேச்சுக்கள் நடக்கும்.
என் தந்தையை பெற்றெடுத்த எங்கள் பெரியவாப்பா LKS. முகம்மது மீரா முகைதீன் தரகனார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் , 14 கிராமங்களின் நஞ்சை புஞ்சை நிலங்களுக்கு உரிமையாளராக இருந்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள
சிங்கம்பட்டிக்கு அருகில்...
இன்றைய மணிமுத்தாறு அணைக்கட்டு நீர்தேக்க பகுதியில் உள்ள நிலங்களும், அதனைத்தாண்டி வைராவி குளம் பகுதியிலும் சில ஏக்கர்களில் நிலங்கள் எங்கள் தாத்தாவின் சொந்தமாக இருந்தன.
அதனால் அப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்கள்.
அப்போது முதல் சிங்கம்பட்டி அரண்மனை எங்கள் குடும்பத்தோடு தொடர்புடையதாக இருந்தது.
அதுவும் இவர்களது தந்தை 30 ஆம் ராஜா காலம் தொட்டு இருந்தது.
எங்கள் வாப்பா.... ஒரு முறை புதிய ராஜ்தூத் பைக் ஒன்றை வாங்கிக்கொண்டு நேராக சிங்கம்பட்டி ராஜாவைக் காண்பதற்காக என்னையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
அப்போது நான் சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருந்தேன்.
அது தான் எனக்கு அவருடனான முதல் சந்திப்பு.
அந்த பிரமாண்ட அரண்மனைக் கட்டுமானம் கொண்ட...மாளிகையை, அதன் தேக்கு மரப்படிகளை, முந்தைய ராஜாக்களின் படங்ளை, அவர்கள் பயன்படுத்திய பல்லாக்குகளை, வாள் மற்றும் கலைப்பொருட்களை கொஞ்சம் நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என் தந்தை அவரகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்...
"யாரங்கே....பண்ணையாருக்கு ஏதாவது குடிக்க கொண்டு வாருங்கள்"...என்று அழைக்க கொஞ்ச நேரத்தில் பால் வந்தது.அதுவும் பிரமாண்ட கண்ணாடிக் குவளையில்...
எனக்கு நாடோடி மன்னன் படத்தில் MGR பழ ரசம் அருந்தும் குவளை கண் முன்னே வந்தது.
என் தந்தையுடன் பேசிக்கொண்டே...
என்னை உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்.
" உங்க மகன்...எங்கே படிக்கிறார்?" என்கிற விபரம் கேட்டார்.
நான் எழுந்து நின்று அதற்கு பதில் சொன்னேன்.
"சபாஷ் "....என்றார்.
அவர் இலங்கையில் இளமை க்காலத்தில் கல்வி கற்றக் காலங்களைச் சொல்லிக்காட்டினார்.
உங்களுக்குத் தமிழில் என்னவெல்லாம் தெரியும் ? என்று அவர் கேட்க...
தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியதைச் சொன்னேன்.
"ஆஹா....பிரமாதம் "என்றார்.
அவர் ஜாதகம், முன் ஜென்மம் போன்றவற்றில் மிகப்பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கொஞ்சநேரம் என்னை உற்று நோக்கினார்....பின்னர் பல விஷயங்கள் என்னைப்பற்றி என் தந்தையிடம் சொன்னார்.....அவை எனக்கும் என் தந்தைக்கும் உரியவைகளாகும்.
" இவர் கல்வி, கலை, இலக்கியம், நாடகம் தொடர்பானவர்... ஊருக்கு உரியவர்.அதிகம் படிக்க மாட்டார்...ஆனால் படித்துக்கொண்டே இருப்பார்" என்று.... எனது 21 ஆம் வயதில் சொன்னதை மட்டும்
வெளியே சொல்ல முடியும்.
இன்னும் நிறைய பேசினார்.
என் தந்தை அதனை அப்படியே உள்வாங்கிக்கொண்டார்.
அவர் ஒரு ஞானி போல பேசிக்கொண்டு இருந்தார்.
ஆமாம்...." மேலப்பளையத்தில் பாத்திமா தர்கா என்று இருப்பது தெரியுமா ? " என்று கேட்டார்....நான் விழித்துக்கொண்டு நின்றேன்.
"ஆமாம்....இருக்கிறது " என்று என் தந்தை சொன்னார்கள்.
அதற்கு அவர் அந்தப் பாத்திமா ஒரு பெண் ஞானி என்று சிலவற்றை சொன்னார்.
நீண்ட நேரம் பேசிக்கொண்டு அரண்மனையில் உணவு முடித்துக்கொண்டு மதிய வேளையில் ஊருக்குப் புறப்பட்டோம்.
1988 ஆம் ஆண்டில் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ...நாடு திரும்பிய பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவராகவும் திகழ்ந்த பன்னூல் ஆசிரியர், கல்லிடைக்குறிச்சி TMP என்கிற கல்லிடை TM.பீர்முகம்மது அவர்களின் பேத்தி திருமணத்தில்.... என்னைப்பார்த்துவிட்டு அழைத்தார்.
அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். " உட்காருங்க... தலைவரே " என்று என்னைப்பார்த்து சொன்னார்.சுற்றி நின்றவர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
இவர்... LKS மகன் என்று TMP அறிமுகப்படுத்தினார்.
" யாரு...இவரா ? இவருக்கும் எங்க அரண்மனைக்கும் தலைமுறைகள் தொடர்பு ".....என்று அவர் சொல்லி முடித்தவுடன்...பக்கத்தில் நின்றவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
எப்போதாவது....அவரைப்பார்க்கச் செல்வேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மேலப்பாளையம் பரோடா வங்கிக்கு சொந்த அலுவலாக வந்தார். நான் வழக்கம் போல அவர் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
எங்கள் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவிற்கு அழைத்தேன்.அதற்கு வருகை தர அங்கேயே ஒப்புதல் பெற்றேன்.
பள்ளிக்கூடத்தில் விழா நடந்து கொண்டு இருந்தது.
திடீரென....என்னைப்பார்த்து
" செல்வா " என்றார்.
எங்கள் சேர்மன் MAS. அபூபக்கர் சாகிப் ..."அவன் பேர் மீரான் முகைதீன் " என்றார்.
தெரியும்.
" பாத்திமா தர்காவுக்கு போகணும் வா " ...என்றார்கள்.
நான் காஜா நாயகம் தெரு மையவாடியின் கிழக்கு பகுதியில் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.
காருக்குள்ளே இருந்த அரச தலைப்பாகையை கட்டிக்கொண்டு உள்ளே சென்றார்...என்னை வெளியே இருக்கச் சொல்லிவிட்டார்.
நீண்ட நேரத்திற்குப்பின்னர் கதவைத்திறந்து வெளியே வந்து... புறப்படுங்கள் ...என்றார்.
பல்வேறு சந்திப்புக்கள்...
அவருடனான உரையாடல்கள்
இனி நடக்கப்போவதில்லை.
உயர்ந்த அரிதான மனிதர்.அதுவும் சிங்கம்பட்டி ராஜ குடும்பத்தில் கடைசி மன்னராக அரசால் அன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
அவரிடத்தில் சென்று பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் அமைக்க இடங்கள் கேட்டபோதெல்லாம் கைகாட்டி எடுத்துக் கொள்ளச் சொல்லியவர்.
சிங்கம்பட்டி ஊர் பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைந்துள்ள நிலம் அவர் கொடுத்த இடங்கள் தாம்.
" எங்கள் சமஸ்தானத்தில் இந்து, முஸ்லிம், கிருஸ்துவர்கள் என் மக்கள்.....அவர்கள் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் " என்பார்.
அடிக்கடி மரணம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர்
24.5.2020 அன்று இறந்து போய்விட்டார்.
25.4.2020 அன்று நோன்புப்பெருநாள்...மதியம் ஊரிலிருந்து புறப்பட்டுச்சென்று
கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு ...வந்தேன்.
வாழ்க சிங்கம்பட்டி ராஜா புகழ்.

ஞாயிறு, 24 மே, 2020

திருநெல்வேலி மேலப்பாளையம்...
எங்கள் தெரு....
அதன் வயது 125 ....
ஒரு காலத்தில் அதுக்குப்பேர்
ஐயர் தெரு...
ஐயர் தோட்டம்....
அங்கே மேற்கே பிள்ளையார்
கோவிலும் .....
கிழக்கே கந்த கோட்டமும்
இன்றும் உள்ளன.
1895 ஆம் ஆண்டு
ஸ்ரீசுப்பய்யர் என்கிற பெரியவரும்
இன்னும் 2 நபர்களும்
சேர்ந்து என் தந்தையின்
பாட்டனார் உள்ளிட்ட
3 பேர்களிடம்
தெருவை விற்றுவிட்டு
குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே...அக்ரகாரம் அமைத்தார்கள்....
அது ஒரு பெரிய வரலாறு.
எங்கள் வீட்டிலிருந்து 150 அடி தூரத்தில் உள்ள இந்தக்கோவில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அந்தக்கோவிலின் முகப்பு பார்த்துத்தான்
முக்கிய சாலைகளுக்குச் சென்று கொண்டுள்ளோம்...
முஸ்லிம்களைத் தவிர...
வேறு சமூகங்கள் எவரும்
கோவிலைச் சுற்றி இல்லை.
அந்தப் பெரிய ஐயர் அவர்கள் ...நிலத்தை விற்பனை செய்யும் போது எங்கள் முன்னோர்களிடம்....
" இந்தக்கோவிலுக்கு, எந்த மரியாதைக்குறைவும் வாராமல் பார்த்துக்கோங்க...."
என்று கண் கலங்கிச் சொன்னதை ,
எங்கள் முன்னோர்கள் தொடர்ந்து
எங்களிடம் சொல்லிவைத்துச் சென்றுள்ளார்கள்...
அது இன்றும் தொடர்கிறது.
இந்தக் கோவிலுக்குப் பின்னே....50 அடி தூரத்தில் பள்ளிவாசலும் அமைந்துள்ளது...
மாலை நேரங்களில் எங்கள் குடும்ப மூத்தவர்கள்,
முஸ்லிம் குடும்பங்களைச்
சேர்ந்த
பெரியவர்கள், இளைஞர்கள்
இங்கே கூடுவது வழக்கம்.
எங்கள் தெருவின் வரலாறு..... மதநல்லிணக்கத்தை, பிறர்க்கு சொல்லிக்காட்டுகிறது.

மேலப்பாளையம் தெருக்கள்....பெயர் மாறிய கதை



எனக்கும் ....எங்க தெரு காரங்களுக்கும் ...லெட்டர் , கிட்டர் போட்டா...ஆதியில் அய்யர் தெரு அப்படின்னு போட்டு அனுப்புவாங்க.

அதுக்குப் பொறவு உச்சிலி லெப்பைத் தெருவுன்னு போட்டு அனுப்புவாக.... இப்பம் எல்லாம் புகாரி தங்கள் தைக்கா தெருன்னு நெடுப்பமா தெருப்பேர எழுதி போடுறாங்க.

இப்போ உள்ள சின்ன ஊரார்லாம் "அதென்னங்க உங்க தெருவுக்கு இத்ண தினுசா பேரு? "...அப்படின்னு கேள்வி வேற கேட்கிறாங்க .

" எப்பா எங்க தெருவுக்கு மட்டுமில்லே... நம்ம ஊர்ல பல பேருக்கு பழைய தெருவுங்க பேரு தெரியாது" ன்னு ஒரு போடு போட்டேன்.

"என்னத்த இப்பிடி சொல்றிய?
" பழய பேரா?"....

"ஆமாண்டே...பழய பேர் தான்" .
நம்ம ஊருக்கு அசல் பேரே...மங்கை நகர்.அது திரு மங்கை நகர்ன்னு ஆகி...திருவி...மேல் பாளையம், மேலப்பாளையமா ஆகிப்போச்சு.

சரீ... தெருப்பேருக்கு வா...அந்த விஷயத்த பேசுவோம்.

மஞ்சி வீட்டுத்தெரு...சீக்கா லெப்பை தெரு...அதுக்கு ஆதிப்பேரு ஷேக் அப்துல் காதர் லெப்பை என்கிற சிக்கலார் லெப்பை தெரு மாறி....அப்பிடி ஒரு பேர் இருந்து பஷீர் அப்பா தெருன்னு ஆச்சு.

சரக்கி மூப்பன் தெரு...காயிதேமில்லத் தெரு ஆச்சு.

தண்ட லெப்பை தெரு ஜமாலியா தைக்கா தெருன்னு வந்துச்சு.

பள்ளிவாசல் மூப்பன் தெரு உமறுப்புலவர் தெரு....ஆச்சு.
அதுக்கு நம்ம புலவர் .த.மு.சா.காஜா முகைதீன் காரணம்.

தமிழ் இலக்கியத்தில் சீராப்புராணம் பாடிய உமறுப்புலவர் மீது அந்தக்காலத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது....ஆகவே உமறுப்புலவர் தெருன்னு பேர் வந்துச்சு.....இன்றைய உஸ்மானியா அரபிக்கல்லூரி இருந்த பழைய இடத்தில் இலாஹி பிரஸ் என்று அச்சகம் வைத்து இருந்தார். அன்றைய காலத்தில் அவர் அ.தி.மு.க.இயக்கத்தில் அமைப்பாளராக MGR அவர்களால் நியமிக்கப்பட்டு இருந்தார்..

முகம்மது லெப்பைதெரு, ஹஸ்ரத் பிலால் தெரு...ஆச்சு.அதுக்கு MOA. சுக்கூர் மாமா தான். காரணம்.அதுக்கு தனி கதை இருக்கு.

1976-77 ஆம் ஆண்டுகளில் இசைமுரசு நாகூர் ஹனீபா...பெரியார் பிலாலின் தியாக வாழ்வை கூறுவேன் இதோ...என்ற ஒரு பாடலை இசைத் தட்டாகவெளியிட்டார். பொறவு...அது கேசட்டாக பதிஞ்சு ஊர் முச்சூடும் பரவியது.

இசைத்தட்டு பாட்ட விட...மேடைகள்ள  இசைமுரசு நம்ம...நாகூரனிபா அண்ணன் பாடுறது...ரொம்ப உருக்கமா...கடைசில பிலால் பாங்கு சொல்லி...அப்படியே சரிஞ்சு ரூஹ விடுற சரித்திரத்தை.... முழுசும் பார்த்த மாதிரி இருக்கும்....

இந்தப்பாட்டு வர்றதுக்கு முந்திலாம்...யாராவது ஆலிம்சா மாருங்கதான் ஹஸ்ரத் பிலால் வரலாறை கூட்டங்கள்ல சொன்னாத்தான் உண்டு....

பெரும்பாலான அப்பாவிகள் அப்ப மார்க்கம் மற்றும் நபித்தோழர்கள் வரலாறு  தெரியாத ஆட்களாத்தான் இருந்தாங்க....

அந்தக் கேசட்ல இசைமுரசு நாகூர் ஹனீபா பாடுனதக்  கேட்டுட்டு பல பேர்கள் கண்ணீர் பொங்க... விக்கி விக்கி அழுவாங்க...அவ்வளவு ஈடுபாட்டோடு பாடுகிற இசைமுரசுவை பார்த்துக் கொண்டு பாடல்களைக் கேட்பார்கள்.குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணி நேரங்கள் கச்சேரி நடக்கும்.அதுவும் நள்ளிரவுகள் தாண்டியும் நடக்கும்.

மேலப்பாளையத்து ஜின்னா மைதானத்துல 1977 ல முஸ்லிம் ஏழைப்பெண்கள் திருமண வாழ்வு அமைப்புச் சங்கம் நிதி வசதி பெற... சங்கத்துக்கு உதவி செய்ய இசைமுரசு அவர்கள் இலவசமாக ஒரு கச்சேரியை நடத்தி...
அதிலே வசூலான தொகை முழுசையும் ஏழைப்பெண்கள் வாழ்வமைப்புச் சங்கத்துக்கு கொடுத்தார்கள் .

அந்த இசை நிகழ்ச்சியில் பெரியார் பிலாலின் தியாக வாழ்வை பற்றி பாடியதைக் கேட்ட ஆண்களும் பெண்களும் அழுது கொண்டே இருந்தார்கள் என்கிற காட்சி இன்றும் என் கண் முன்னே நிழலாடுகிறது.

முஹம்மது லெப்பைத் தெரு MOA.சுக்கூர் மாமா அவர்கள் தன்னுடைய வீட்டு வாசலில் டேப் ரிகார்டரில் இந்த பாடலை போடும் போது.... அவரைச் சுற்றி வயசு வித்யாசம் இல்லாமல் இருந்துகொண்டு இந்த பாடலை ரசித்து கேட்பார்கள். அங்கேயும் கண்ணீர் சிந்துவார்கள்.

காலை.... மாலை... இரவு என்று இந்த காட்சிகள் நடக்கும்.
சுக்கூர் மாமா பக்கத்தில் முகம்மது லெப்பை தெரு மறைந்த பச்சை வேட்டி கச்சா மஸ்தான், காளை மைம்பிச்சை இன்னும் சில பேர்கள் அமர்ந்து கண்ணீர் மல்க இப்பாடலைக் கேட்பார்கள்.

அப்போது தெருப்பேர மாத்த நகராட்சி ஏற்பாடு செஞ்சுது.

இதுதான் ஒரு வாய்ப்பு என்று அந்த முகமது லெப்பை தெரு பேரை நீக்கிவிட்டு ....ஹஸரத் பிலால் தெரு என்று தன்னுடைய செல்வாக்கை ....மேலப்பாளையம் நகர் மன்றத்தில் முன்னிறுத்தி பெயரை மாற்றினார்.

தெருவின் பெயராக தொலங்கிய முகம்மது லெப்பை ஆலிம் அவருக்கு பெத்தவாப்பா என்பது இன்னொரு தகவல்.அவர் பேர தான் அந்தத் தெருவுக்கு வச்சு இருந்தாங்க.

"லட்சுமிபுரம் தெரு தெரியுமா?"...
"லட்சுமிபுரம் தெரா?"
"ஆமோ...வ்"
"அது எங்க இருந்துச்சு?"
"குண்டு தெரு...தெரியுமா"
"ஆமா...நம்ம காஜா நாயகம் தெரு.அதுக்கும் தனி  வரலாறு இருக்கு"....

குட்டி மூப்பன் தெரு செய்யது
" இஸ்மாயீல் தங்கள் தைக்கா தெரு...
ராவுத்தர் லெப்பை தெரு, அத்தியடி தெரு.... பெரிய கொத்துபா மேல, கீழ, வடக்கு, தெற்கு... என்று நீண்ட பெயர்த்தொடரோடு ஆகிவிட்டது.
பள்ளிலெப்பை தெரு
ஆசுரா தெரு ஆச்சு... எங்க தெரு இதுக்கெல்லாம் பேர் வச்சது RMA. அப்துல் சமது மாமா தான்.

வீராத்தெரு...கீழ வீரராகவத்தெரு செய்து லெப்பை தெருவாய் இருந்து செய்குல் அக்பர் தெருவாச்சி.
மூப்பன் பக்கீர் தெரு... அக்பர் தெரு ஆச்சு....

ஹாமீம்புரம் தெற்குத்தெருவுக்கு அப்புறம் உள்ள தெருக்கள் யாவும்...1985 க்கு பிறகே உருவாகின.

சரீ.... எதுக்கு இந்தப் பழைய பேர...எதுக்கு மாத்தினாங்கன்னு தெரியனுமே...

1977 ஆம் ஆண்டு மொத தடவையா மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்ட MGR ஆட்சிக்கு வந்தார்.... ADMK முதல்வர் .....MGR அவர்கள்   தெருக்களின் பெயர்களில் உள்ள  உள்ள சாதிப்பெயரை எடுக்கப் போறதா சொல்லி  உத்திரவு போட்டார்....அதன் தொடர்ச்சியா.....மேலப்பாளையம் தெருக்களின் பெயரில் இருந்த.....லெப்பை........., பிள்ளை.....,மூப்பன்.... இதுவும் ஜாதி ன்னு சொல்லி அந்த பெயர்களை அரசாங்கம் நீக்கி உத்தரவு போட்டது...

சென்னையில் பல தெருப்பெயர்கள் ஜாதிப்பெயர்களோடு தான் இருந்தன.புரட்சித்தலைவர் MGR குடியிருந்த ஆற்காடு முதலியார் தெரு ஆற்காடு தெரு என்றும்...மல்லன் பொன்னப்ப முதலி தெரு பொன்னப்ப தெரு என்றும்....லெப்பை பள்ளித்தெரு,  பள்ளித்தெரு என்றும் புது நாமங்கள் கொண்டன......அவை சிரிப்பைத்தந்தன.

அத வச்சித்தான்
குட்டி மூப்பன் தெரு,
உச்சிலி லெப்பை தெரு,
மைலக்காதர் லெப்பை தெரு
செல்வக்காதர் லெப்பை தெரு
பள்ளிவாசல் மூப்பன் தெரு
சரக்கி மூப்பன் தெரு
ராவுத்தர் லெப்பை தெரு
அத்தியடி தெரு
பள்ளி லெப்பை தெரு
சப்பாணி லெப்பை தெரு

முன்னாள் சேர்மன்கள் LKM. அப்துர் ரகுமான் சாகிப், MAS. அபூபக்கர் சாகிப், ஆகியோர் முயற்சியால் அவர்கள் வாழ்ந்த தெருக்களில் இருந்த லெப்பைகள் நீக்கப்பட்டு மைலக்காதர் தெரு, சப்பாணி ஆலிம் தெரு என்று ஆகியது....MAS அபூபக்கர் சாகிப் சப்பாணி ஆலிமின் குடும்பம் என்பது கூடுதல் தகவல்.

பிள்ளை, மூப்பன் என்பது இங்கே ஜாதிப்பெயரான்னு கேட்டால் ஆமான்னு தான் சொல்லணும்...சண்டைக்கி கிண்டைக்கி வந்துராதிய...அதிலும் வரலாறு இருக்கு.

ஆலப்பிள்ளை தெரு,
மொத்தை மீராப் பிள்ளைத்தெரு,
மூலன் அகமது பிள்ளை தெரு....
 இன்னும் அந்தப் " பிள்ளை" பெயரில் தான் உள்ளன..
சமாயினா காதர் மீத்தீன் மூப்பன் தெரு, சமாயினா ஷேக் முகமது மூப்பன் தெரு என்கிற பெயரில் மூப்பனை தூக்கிவிட்டார்கள்.

அது போல....மூப்பன் பக்கீர் தெரு என்கிற பெயரை மாற்றித்தான் அக்பர் தெரு என்று வந்தது...பள்ளி வாசல் மூப்பன் தெருவை மாற்றித்தான் உமறுப்புலவரும்,சரக்கி மூப்பனை மாற்றி காயிதேமில்லத் பெயர்களும் வந்தன.

ஞானியார் அப்பா பெரிய தெரு, சின்னத்தெரு...இப்போது வெறும் பெரிய தெரு சின்னத் தெருவா...இருக்குது.

யாதவாள் தெரு, மறக்குடித் தெரு என்பவை .... பாரதியார் தெரு என்றும்
மருது பாண்டியர் தெரு என்றும் ஆட்டுவாணியர் குடியிருப்பு ஆண்டவர் தெரு என்றும்......மரைக்காயர் தெரு முகைதீன் ஆண்டவர்  தெரு என்றும் மாறிப்போனது.

இன்றைய அண்ணா வீதிக்கு....அப்போதெல்லாம் மேல நத்தம் மெயின் ரோடுன்னு  தான் பேர் இருந்தது.MAS.அபூபக்கர் சாகிப் காலத்தில் அது அண்ணா வீதியாக மாறியது.

1969-75 ஆண்டு அன்றைய கால கட்டத்தில் LKM,அப்துர் ரகுமான் சாகிப்
 மேலப்பாளைய நகர்மன்றத்தில் முஸ்லிம் லீக் சேர்மனாக இருந்த போது,
அரசு நடுநிலைப்பள்ளி காயிதே மில்லத் நடு நிலைப்பள்ளியாகி உயர்நிலைப்பள்ளி யாக மாறி...தற்போது மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கிறது.....

அதற்கு முன்னரே அபுல் கலாம் ஆசாத் ரோடும், நகர் மன்றத்தில் மௌலானா முகம்மது அலி மண்டபமும் வந்து விட்டன.

1977ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் MGR அவர்கள் ,அ.தி.மு.க ஆட்சி அமைக்க தேர்தல் பிரச்சாரம் செய்ய மேலப்பாளையம் முனிசிபல் அலுவலகம் மேற்கே இருந்த காலியிடத்தில் மேடை அமைக்கப்பட்டு நள்ளிரவும் தாண்டி பேச  வந்து இருந்தார்.....அதனை அண்ணா திடல் என்று அழைத்தார்கள்....


எந்தப்பேர் எப்பிடிப்போனாலும் எங்க தெருவை ஐயர் தெருன்னு தான் இப்பவும்...கூப்பிடுதாக.

திங்கள், 13 ஜனவரி, 2020

திருநெல்வேலியின் மனித நேய மருத்துவர் Dr.A. V. முகைதீன் அவர்கள்...



திருநெல்வேலியின் மிகச்சிறந்த மனித நேய மருத்துவர்களில் ஒருவரான Dr.A. V. முகைதீன் அவர்கள்...

பிள்ளைப்பருவத்தில் என் போன்றவர்களுக்கு , உடல் நலக்குறைவு ஏற்பட்ட பொழுதெல்லாம் , அவர் தந்த மருத்துவம்...வாழ் நாள் எல்லாம் நினைக்கத் தகுந்தது.

அப்போதெல்லாம் , நெல்லை டவுண், கீழரதவீதி அவரது மருத்துவ மனைக்கு என்னை, என் தங்கைகளை வாப்பும்மா மாட்டு வண்டியில் கூட்டிச்செல்வாள்.....

அவள் மடியில் கிடக்கும் எங்களின் , தலைய கோதி விடுவாள்..

கழுத்தை , நெற்றியைத் தொட்டு....உடல் சூட்டின் அளவை பார்த்துக் கொள்வாள்..

கனத்த கம்பளிப்போர்வைக்குள் கை நுழைத்து நெஞ்சிலும் முதுகிலும் விக்ஸ் களிம்பு வேறு தேய்த்து விடுவாள்.

சுரத்தில் துடித்த காலங்களில் நெற்றியில் வேப்பங் கொழுந்து இலை , மஞ்சள் , வெங்காயம் அரைத்து பத்து போடுவாள்..அதோடு ரெண்டு மூணு பொழுது சுக்கு , அக்கரா கஷாயம் தந்து காச்சல் விடுதான்னு பார்ப்பாள்.

அது " ஓப்பேறா விட்டால் " அடுத்து எங்க தலையில் மிளகு பொடி செய்து தேய்ப்பாள்..
இத்தனையும் செய்து முடித்தே டாகட்டரிடம் கூட்டிப் போவாள்.

தக தகன்னு தண்ணீர் கொதிக்கும் ஒரு எவர்சில்வர் மின் இணைப்பு தொட்டியில் அவர்..இடுக்கியின் மூலம் .சிறிஞ் எடுத்து ஊசியை மாட்டி எடுத்து , பிட்டத்தில் சொருகுவார். ஊசி வலியால் நாங்கள் அழுவோமோ இல்லையோ, எங்க கூட வரும் லெப்பார் மாமா அழுதிடுவார்....

பல மாத்திரைகளை சேர்த்து வேளா வேளைக்கு திங்க , ஒரு வெள்ளை குளவிக்கல்லில் அரைத்து பொட்டலமாக்கி , ரோஸ் நிற தண்ணீர் மருந்தும் ஒரு பாட்டிலில், தந்து அவரது கம்பவுண்டர் லோகு அண்ணா அனுப்பி வைப்பார்.

டாக்டரைப் பார்க்கும் போதெல்லாம் என் பிள்ளைப்பருவ காலமும் எங்க வாப்பும்மா நினைவும் வந்தே போகிறது.

வழக்கறிஞர் அப்துல் வகாப் மாமா பேத்தி திருமணம் நடந்த ஹைகிறவுண்ட் காயிதே மில்லத் அரங்கில் டாக்டரைப் பார்த்து நலம் விசாரித்தேன்.

மெல்லிய அதே அழகான குரலில் , அக மகிழ்ந்து வாழ்த்தினார்.
வாழ்க டாக்டர்.

செவ்வாய், 12 நவம்பர், 2019

நெய்யும் தொழிலே செய்யும் தொழில்....

நெய்யும் தொழிலே செய்யும் தொழில்.... என்று வாழ்ந்தவர்கள் மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெசவாளப் பெருமக்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவந்த செய்யும் தொழில் நெசவுத் தொழில் 1977 களோடு அழிந்தே போய்விட்டது.

15க்கும் மேற்பட்ட மாஸ்டர் வீவர்கள் என்று சொல்லப்பட்ட தரகனார்களின்.... அந்த தொழில் 1944 பர்மாவில் ஜப்பான்காரன் போட்ட விமான தாக்குதல் குண்டுகளால் அழிந்தது.

1964இல் இலங்கையில் பண்டாரநாயகா அறிவித்த அறிவிப்பால் அங்கும் வியாபாரம் இல்லாமல் போனது.

64 லிருந்து 70 வரை ஏதோ தாக்குப் பிடித்துக் கொண்டு சில வியாபாரிகள் அங்கே இருந்தார்கள்.

சில வியாபாரிகள் கல்கத்தாவில் தஞ்சம் புகுந்தார்கள். அதையும் தாண்டி சில பேர்கள் சிட்டகாங் வரை தொடர்ந்தார்கள்.

1975-க்குப் பிறகு அண்ணா கூட்டுறவு நெசவாளர் சங்கம் என்று மேலப்பாளையம் RMA. அப்துஸ்ஸமத் அவர்கள் ஏற்பாட்டில் அன்றைய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் அவர்களுடைய காலத்தில் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசில் ஏற்படுத்தப்பட்டது.

அதற்கு முன்னர் O.846, O.1026 ஆகிய சங்கங்கள் இருந்தன.

இந்த இரு சங்கங்களில் O.846 சங்கம் மட்டுமே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகள் வரை கொஞ்சம் உயிரைப் பிடித்துக் கொண்டு நடந்தது, இயங்கியது.

இன்றைக்கு அந்தச் சங்கம் தொழில் எதுவும் இல்லாமல், நேதாஜி சாலையில் அதன் கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்து வருகிறது.

சுத்தமாக நெசவுத்தொழில் மேலப்பாளையத்தில் அழிந்தே விட்டது .

கடையநல்லூர் இதுபோல நெசவுத் தொழில் செய்து வந்து, கைகுட்டை நெசவு செய்து வந்தது .
இன்றைக்கு அங்கும் இல்லை.

ஒரு காலத்தில் மேலப்பாளையம் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், தென்காசி, கடையநல்லூர் என்று திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவுத்தொழில் சீரோடும் சிறப்போடும் விளங்கி கொண்டிருந்தது.

அந்தத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான வருவாய் கிடைத்தது.

ஆனாலும் அந்த வருவாயைக் கொண்டு அவர்கள் கண்ணியமாக வாழ்ந்து வந்தார்கள்.

1975-க்குப் பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் வந்ததால் கைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் துபாய் நோக்கி படையெடுத்தார்கள். சவுதி அரேபியா, கத்தார், குவைத் நாடுகளுக்கும் சென்று அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மிகச் சிரமப்பட்டு படிக்கவைத்தார்கள்.

தாயகத்தில் பீடித்தொழில் ஒருபக்கம் பெண்மக்கள் செய்து வந்தார்கள்.

இன்று ஏறத்தாழ பீடித்தொழில் 75% இல்லாமல் போய் 25% மட்டுமே நடந்து வருகின்றது.

நெசவாளர்களும், பீடித் தொழிலாளர்களும் உருவாக்கிய பிள்ளைச் செல்வங்கள் இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில், மிக உயர்ந்த பதவிகளிலும், நடுத்தர பதவிகளிலும், சாதாரண பதவிகளிலும் இருந்து பொருளீட்டி நாட்டை ஊரை மேலப்பாளையத்தில் புகழை பாது காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரும்பாலும் கைத்தறி வேஷ்டிகள் கட்டுகின்ற கலாச்சாரம், இன்றைக்கு ஊருக்கு ஊர் குறைந்து ,இரவில் தூங்கும்போது கூட ஜீன்ஸ் போட்டு கொண்டு தூங்கும் முஸ்லிம் இளைஞர்கள் பெருத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே கைத்தறி தொடர்பான அதன் ரகங்கள் பற்றி இந்த பதிவை படிக்கும்போது, எங்கள் முன்னோர்கள் செய்து வந்த கைத்தறி வணிகம் பற்றிய நினைவுகளும் என் கண்முன்னே வந்து போனது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

லுங்கியில் (கைலிகளில்) எத்தனை வகை இருக்கிறது உங்களுக்கு தெரியுமா??

* 60க்கு 40 கொஞ்சம் முரட்டு ரகம் ஜட்டி அணிய தேவையில்லை!

* 60க்கு 60 முரட்டு ரகத்தில் கொஞ்சம் நைஸ்!

* 80க்கு 80 நைசாக இருக்கும் ஜட்டி அவசியம் வேண்டும்!

* 100க்கு 100 அதிக நைஸ் ரகத்தை சேர்ந்தது புது மாப்பிள்ளைகள் கட்டுவது!

*120க்கு 120 பணக்கார வர்க்கம் கட்டுவது விலை அதிகம்!

இதெல்லாம என்ன என்கிறீர்களா? நூலின் தரத்தை வைத்து லுங்கிகள் நெய்யப்படுவது.

நெட்டையாக இருப்பவர்களுக்கென்றே ஒரு வகை கைலி உள்ளது. அதன் பெயர் ரெட்டை மூட்டு கைலி உயரம் அதிகமாக இருக்கும்.
நன்றி: @ Sadayan Sabu

உயரமாக உள்ளவர்களுக்கு இரட்டை மூட்டு கைலி மற்றும் 54 இஞ்ச் கைலி்..

54 இஞ்ச் கைலி இப்போது அதிகம் உற்பத்தி செய்வதில்லை. அப்படியே வந்தாலிம் 80 க்கு 80 மட்டும் தான். அதன் விலையோ இப்போது 975 ரூபாய்..

புதன், 23 அக்டோபர், 2019

மத நல்லிணக்க மேலப்பாளையத்திற்கு கீழக்கரை வள்ளல் B.S.அப்துல் .ரகுமானின் பரிசு.


நட்பின் பரிசு.
" நீங்க எல்லாம் இருந்துமா  ஒரு பள்ளிக்கூடத்தை இப்படி வச்சிருக்கீங்க.?"

" என்னத்த கேக்க ...சொல்லு மாப்பிள்ளை...." என்று கேட்டான் என் அருமை நண்பன் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன். 1992ஆம் ஆண்டு நான் இந்த கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன்.

 நாங்கள் இருவரும் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ,ஆறாம் வகுப்பு தொடங்கி......,  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பட்டம் முடிகின்ற வரையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகப் படித்தவர்கள்.

கல்லூரி வகுப்புகளின்  மதிய இடைவேளையில் , என் வீட்டு உணவை அவனும், அவன் வீட்டு உணவை நானும் ஒன்றாக அமர்ந்து உண்டு பரிமாறி பாசத்தை வளர்த்துக் கொண்டோம்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகர் பெரும்பான்மையான அளவில் முஸ்லிம் மக்களைக் கொண்டது. அதே ஊரில் இரண்டு தெருக்களோடு ,அம்பிகாபுரம் ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியும் உள்ளது.

" நான் நேற்று உங்கள் அம்பிகாபுரம் தொடக்கப்பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு மேற்கே உள்ள ரோட்டில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது வகுப்பறையில் பாடம் நடத்த இடமில்லாமல் பிள்ளைகளோடு ஒரு ஆசிரியை அந்தக் கோயிலுக்கு மேற்புறம் உள்ள மரத்தடியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் .

தரையில் 20 அல்லது 25 பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பொழுதில் அவர்கள் இருந்த இடத்திற்கு ஒரு 20 அடி தொலைவில் சாக்கடைக்கு பக்கம் இரண்டு பன்றிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு கடும் சீற்றத்துடன் ஊளையிட்டுக்கொண்டே...பிள்ளைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன .
இதனைப் பார்த்த பிள்ளைகள்.... ஓவென்று கத்தவும்.... அந்த ஆசிரியை கைகளில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நிலைமையும் ....பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்." இதைத்தான் என்னுடைய நண்பனிடம் சொன்னேன்.

" என்னசெய்வது மாப்பிள்ளை?.... எங்கள் பள்ளிக்கு போதுமான இடங்கள் இருந்தும் வகுப்பறைகள் இல்லையே கட்டுவதற்கு பணம் ஒன்றுமே இல்லையே" என்று சொன்னான்.
" ஏன் நீங்கள் சென்று வசூல் செய்தால் நன்றாக இருக்குமே" என்று கேட்டபோது இல்லை... "நாங்கள் இங்குள்ள முதலாளிகளிடத்தில் சென்று நன்கொடைகள் கேட்டால் ....மிக குறைந்த தொகையை தந்து எங்களை அனுப்பிவிடுகிறார்கள்" என்று சொன்னான்.
" நாங்களும் எங்களால் இயன்ற அளவு போய்விட்டோம்.... ஒரு உதவி செய்வியா ? நீ எங்களோடு வந்து பணம் வசூல் வசூல் செய்து தர முடியுமா? என்று என் அருமை நண்பர் முத்து பாண்டியன் கேட்டார்.

 "அப்படியா நான் ....வருகிறேன் நாம் சென்று வசூல் செய்வோம் என்றேன்.
நண்பர் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன் இன்றைக்கு நெல்லை ஆவின் பால் நிலையத்தில் மிகப்பெரிய தணிக்கை அதிகாரியாகப் பணி செய்து வருகிறார் .

அன்றைக்கு அவரோடு என்னுடைய நண்பர்கள் சிவாஜி திருநாவுக்கரசு, மயில்வாகனன் முதலானவர்கள் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள்.

என்னை அவர்கள் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். நானும் அவர்களை மாப்பிள்ளை என்றுதான் மறுமொழி அழைப்பேன்.
நானும் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு நிர்வாகிகளாக அன்றைக்கிருந்த என்ஆசிரியர் கோமதி நாயகம் அவர்களின் அண்ணன் கருப்புசாமி , அன்றைய அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் நல சங்கத்தின் செயலாளர் அருணாசலம் உள்ளிட்டவர்களையும் சேர்த்துக்கொண்டு நன்கொடைகள் கேட்கச் சென்றேன்.

நன்றாக நினைவில் இருக்கிறது அன்றைய பொழுதில் இன்ஜினியர் எஸ்கே செய்யது அகமது அவர்கள் மேலப்பாளையம் ஆசாத் ரோட்டில் சப்பாணி ஆலிம் தெரு விற்கும் , எக்கின் பிள்ளை தெருவிற்க்கும் இடையே, மாடியில் ஒரு அலுவலகத்தை வைத்திருந்தார்கள் .
அவர்கள் மட்டும் ஓரளவு கண்ணியமான முறையில் நிதி உதவி செய்தார்கள்.

மற்றவர்களெல்லாம் 500 ரூபாய்க்கு கீழே உதவிசெய்து அன்றைய பொழுதில் எனக்கு மனதளவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி தந்தார்கள்.

என்ன செய்யலாம்? என்று யோசித்தோம் .

"எனக்காக ஒன்று செய்ய வேண்டும் .சென்னையிலிருந்து மணிச்சுடர் என்று ஒரு நாளிதழ் வருகிறது .அதற்கு முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்கள் ஆசிரியராக இருக்கிறார்கள் .அந்த நாளிதழில் நம்முடைய பள்ளிக்கூட தேவையை வெளியிட்டு நாம் நிதி கேட்கவேண்டும்" என்று சொன்னபொழுது... நண்பர்களும் அந்த பெரியவர்களும் உடன் பட்டார்கள் .
அன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் அளவில் கடைசிப் பக்கத்தில் மேலப்பாளையம் அம்பிகாபுரம் துவக்கப் பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு விளம்பரம் செய்தோம்.
"கல்விப் பணிக்கு கனிவான வேண்டுகோள்" என்கின்ற தலைப்பில் வேண்டுகோள் விளம்பரம் செய்தோம்.

நம்புங்கள் தோழர்களே அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நிதி வரும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு புதையலே வந்தது. அதுவும் ஓரிடத்திலிருந்து மட்டும்.

1992 ஆம் ஆண்டு மத்தியில் நான் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழு உறுப்பினராக மறைந்த சேர்மன் அல்ஹாஜ் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர் ஆனேன்.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேர்மன் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் பள்ளியின் தாளளராக தேர்வு செய்யப்பட்டார்கள் .
அதற்குப் பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்காக தமிழகமெங்கும் அதையும் தாண்டி , அண்டை மாநிலங்களிலும் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம் .
அவ்வாறு நிதி திரட்டுவதற்கு ஒரு குழுவாக சென்று பணியைத் தொடர்ந்தோம்.
செலவை மிச்சப்படுத்த சேர்மன் அவர்கள் வைத்திருந்த, அம்பாசிடர் காரில், எரிபொருளை மட்டும் பள்ளிக்கூட செலவில் போட்டுக்கொண்டு, தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகம் என்று சுற்றி வந்தோம் .
கார் ஓட்டுவதற்கு ஆள் இல்லை. அதனால்...நானே கார் ஓட்டி ஆனேன். பல மாதங்கள் அப்பணியை செய்தேன் .
அதனால் மேலப்பாளையத்தில் "காரோட்டி ...தேரோட்டி" என்று பட்டம் கொடுத்து முஸ்லீம் கல்விக்கமிட்டியை கிண்டல் செய்து ஒருவர் போர்டு... கூட வைத்தார்.

சென்னையில் கீழக்கரை வள்ளல் ஈடிஏ கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களைச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டோம் .

நாங்கள் சேர்மன் அபூபக்கர் சாஹிப் அவர்கள் தலைமையில் பள்ளியின் பொருளாளர் உசேன் உதுமான் , பேராசிரியர் முஹம்மது பாரூக் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம், வயதில் இளையவனான நானும் சென்று இருந்தோம்.

 பி எஸ் ஏ ரகுமான் அவர்களை சந்திக்க காத்திருந்த பொழுதில், மதுரை பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களுடன், நீண்ட நெடிய நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் சென்றதும் நாங்கள் பி.எஸ்.ஏ. அவர்களை பார்ப்பதற்கு உள்ளே நுழைந்தோம்.

எங்களை கல கலப்போடும், மகிழ்ச்சியோடும் பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் வரவேற்றார்கள். மேலப்பாளையம் பள்ளிக்காக, உங்களிடம் நிதி கேட்க வந்து இருக்கின்றோம் என்பதையும் சொன்னோம்.
"அப்படியா மிக்க மகிழ்ச்சி.... நானும் மேலப்பாளையம் பள்ளிக்குத் தான் உதவி செய்யப் போகிறேன்" என்றார்.
என்னோடு வந்தவர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிக் கடலில் இருந்தார்கள்.

நாம் கேட்கும் முன்பாகவே பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் , நம் பள்ளிக்கு உதவிகள் செய்யப் போகிறார் என்கிற எண்ணம் குடி கொண்டு இருந்தது .

"சேர்மன் அவர்களிடம் உங்களுடைய ஊரில்.... யாரெல்லாம் கல்விப் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ? "
என்று கேட்டார் .

" நாங்கள் 1941இல் இருந்து கல்வி குழு மூலமாக கல்விப்பணிசெய்து வருகிறோம். முகம்மது லெப்பை தெருவைச் சேர்ந்த MLM.முகம்மது லெப்பை அவர்கள் 1988 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் .வேறு சில தனியார்களும்  உயர்நிலை, நடுநிலை, துவக்கப்பள்ளி களை நடத்தி வருகின்ற விதத்தையும் சொல்லி காட்டினோம்.

" இல்லை.... இல்லை... இன்னொருவர் பெயர்... எனக்கு நினைவில் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறது... அவர் யார்?" என்று கேட்டார் .
அப்போது அருகில் வந்த அவரது உதவியாளர் ஹஸன் அவர்களிடம், "அந்தப் பேப்பரை எடுத்து வாருங்கள்" என்றார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவரது உதவியாளர் கைகளில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நாளிதழ் இருந்தது .
அது ஆயிரம் ரூபாய் செலவழித்து விளம்பரம் கொடுக்கப்பட்ட மணிச்சுடர் நாளிதழ். அதனைப் பிரித்து பார்த்தார்கள். படபடப்போடு நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மீரான் முகைதீன் என்றால் யார் அவர் ? "என்று கேட்டார்.
எங்கள் சேர்மன் "எந்த மீரான் முகைதீன் ?"என்று திரும்ப அவரிடத்தில் கேட்டார்.
" எல் கே எஸ் மீரான் முகைதீன் என்றால் யார் அவர்?" என்று கேட்டார்.
என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த விஎஸ்டி சம்சுல் ஆலம் அவர்கள்..." நீங்கள் சொல்லுகிற மீரான் மைதீன் ...சாட்சாத் இவர் தான்" என்று என்னை தூக்கி நிறுத்தி அவர்கள் முன்னால் நிற்க வைத்தார்.
" தம்பி நீங்களா இந்த விளம்பரத்தை கொடுத்தீர்கள்? "உங்க வயசு என்ன ?"
"என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று புன்னகையோடு அடுக்கடுக்கான கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
நான் படபடப்போடு... பயந்து... வார்த்தைகளை மென்று.... விழுங்கி... பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

" நான் பெரிதாக ஒன்றும் தொழில் செய்யவில்லை. எங்கள் குடும்பத்து முன்னோர் பெரியவர்கள் வைத்து சென்றிருக்கிற நிலங்களில், வயல்களில், நெல், வாழை முதலான விவசாயம் செய்து வருகிறேன். ஆடுமாடுகள் வளர்த்து வருகிறேன். என்று சொன்னேன்"

என்னை அவர்கள் இருந்த இருக்கையில் பக்கத்தில் வரவைத்து ,அமர்த்திஅவர்கள் சிரித்துக் கொண்டார்கள்.

அம்பிகாபுரம் பள்ளிக்கூடத்தை பற்றி அதில் படிக்கின்ற 710 மாணவர்களைப் பற்றி..... மேலப்பாளையத்தில் நகரில் அமைந்துள்ள அதன் நிலைமையை பற்றி ....என்னிடத்தில் கேட்கும்போது ஒவ்வொன்றாகச் சொன்னேன்.
" சரி ....நான் இந்த தம்பிக்கு தான் உதவி செய்ய போகிறேன். முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு அடுத்து பார்க்கலாம் என்றார்கள். என்னோடு வருகைதந்த பொருளாளர் உசேன் உதுமான் அவர்கள் "என்னப்பா இது? நம்ம பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டிய பணம், உன்னுடைய விளம்பரத்தால் மாறிப் போய்விடும் போலிருக்கிறதே.. என்று என்னோடு காதோடு கேட்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒரு கட்டாக கட்டி என்னிடம் தந்து ,இந்தப் பணத்தைக் கொண்டு அரைகுறை நிலையில் இருந்த மூன்று வகுப்பறை களுக்கும் கான்கிரீட் கூரை அமைத்து , அதற்கு மேல் மூன்று வகுப்பறைகளும் எழுப்பி கட்டிடத்தை முடிக்கவேண்டும் என்று சொன்னார்கள் .

நான் மகிழ்ந்து போனேன். ஆனால் அவர்களிடம் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டேன்.

இதனை மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நேரடியாக அனுப்பி வையுங்கள். நான் இதனை வாங்கி கொண்டு செல்வது சரியாக இருக்காது. வீணான சந்தேகங்களை ஏற்பட்டுவிடும் .என்று திரும்ப கொடுத்து விட்டேன்.

" பணத்தை சும்மா கொண்டு போங்க தம்பி ....பணம் தருபவன் நான்.... உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. யார் கேட்டாலும் நான் பதில் சொல்வேன்." என்று சொன்னார்கள்.
" இல்லை வாப்பா" என்று மீண்டும் மறுத்த உடன், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் நான் சொன்னது போல் நான்கு பிரிவுகளாக அந்த பணத்தை கட்டிடம் கட்டுவதற்கு மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரே ஒரு நிபந்தனை மட்டும் என்னிடம் சொன்னார்கள்.....

 இந்தக் கட்டிடத்தை திறக்கும்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களை அழைத்து அதனை திறந்து வைத்தால் , முஸ்லிம் சமுதாயமும், ஆதிதிராவிடர் சமுதாயமும் நெருக்கமாக இருக்கக்கூடிய நிலைமையை உலகமெல்லாம் அவர் சொல்லிக் கொள்வார். செய்யுங்கள் என்றார்கள்.

அவ்வாறு அவர்கள் ஆசைப்பட்ட படியே அமைச்சர் எம் அருணாசலம் அவர்கள் அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்கள் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய பெயரும் , திறந்து வைத்த அமைச்சர் அருணாசலம் அவர்களுடைய பெயரும் மட்டுமே அந்த கல்வெட்டில் அமைந்திருக்கும் .

என்னுடைய பெயர் என்னுடைய நண்பர்களின், இதயத்தில் மட்டும் என்ற அளவில் உள்ளது.
இதனைத் தெரிந்த நண்பர்கள் குறிப்பாக முத்துப்பாண்டியன், சிவாஜி திருநாவுக்கரசு , பெரியவர் கருப்பசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம் என்று சிலர் இருக்கிறார்கள்.

இத்தனையும் செய்து கொடுத்த பின்னர்.... நான் எந்த நிர்வாகத்தில் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்தேனோ.... அந்த நிர்வாகம் கட்டிடத் திறப்பு விழாவில் இல்லை .
வேறு ஒரு நண்பர் நிர்வாகியாக மாறி விட்டார்.
நான் அந்தத் திறப்பு விழா மேடையில் அமர்வதற்கு கூட எனக்கு நாற்காலி எதுவும் இல்லை. தூரத்தில் காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள் .
அப்போது அவர்கள் கேட்டார் "எங்கே எல் கே எஸ் மீரான்?... அவருக்குத்தான் இந்த பொன்னாடை பரிசு அளிக்கப்படவேண்டும் .
அவர் பெயரைகூட இந்தப்பட்டியலில் காணோமே? சரி போய் வருகிறேன்... என்று சில வார்த்தைகள் முடித்து விட்டு என்னோடு கிளம்பி வந்து விட்டார்.

கிளம்பி கீழே வரும்போது... அங்கே போர்த்தப்பட்ட பொன்னாடையை எனக்கு போர்த்தி அழகு பார்த்தார்.
கட்டி அணைத்துக்கொண்டார்.

அதற்குப் பின்னர் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக அவர்கள் தந்த லட்சோபலட்சங்கள் என் மூலமாகவே தாளாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்டன, என்பது காலமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டியவையாகும்.

இன்றைக்கும் மேலப்பாளையம் ஆசாத் ரோடு வழியாகச் செல்லும் போதெல்லாம், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் உதவியால், அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் பள்ளிக்கூடத்திற்கு, "யுனைடெட் எக்கனாமிக் போரம் பிளாக்" என்கிற பெயரில், சீதக்காதி அறக்கட்டளை சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்ட அந்த வாசகம் என்னை மகிழ்வு படுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வள்ளல் BS.அப்துல் ரகுமானின் கொடைத் தன்மையை புரட்சித் தலைவர் MGR. அவர்கள் தாம் நடித்த, சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தில்
 ஒன்றே சொல்வான்...நன்றே செய்வான்...
அவனே அப்துல் ரகுமானாம்....என்று கவிஞர் வாலியை வைத்து பாட்டெழுதி  மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் இசையமைத்து TM.சவுந்தார் ராஜனை வைத்து பாட வைத்தார்..



புதன், 5 ஜூன், 2019

பெருநா ராத்திரி

முப்பது நோன்பு வச்சு பெருநா பாக்கிற மனசின் குஷி....அது ஒரு தனி ரகம் தான். அதுக்கு வேற என்னத்த பகரமா பார்க்கமுடியும்?

நாற்பது வருஷத்துக்கு முந்தி....பாப்ளின் சட்டையும் ...மல்லு வேஷ்ட்டியும் பெரிய ஆட்களுக்கும்.....கலர் துப்பட்டாவும் மூட்டி தச்ச வேஷ்ட்டியும் பொம்பிளைகளுக்கும், ...டவுசர் சட்டை,பாவாடை தாவணி இதெல்லாம் இள வயசுப்பிள்ளைகளுக்கும்...கிப்ஸ் சங்கு மார்க்,கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன், உஸ்மான் பிராண்ட் லுங்கிகள்,துபாயில் இருந்து வந்த மஞ்சள்....அரக்கு கலர் பனியன்கள்,பிரஸ் பட்டன் வச்சு தச்ச சட்டைகள்  இளவட்டங்களுக்கும்  போதுமானதாக இருந்தது.

இப்ப மாதிரி ரெடிமேட் சமாச்சாரங்கள் எதுவும் அப்போ கிடையாது.
டவுன் ஆர்.எம்.கே.வி...அதுக்குப்பக்கத்தில் நாவல்ட்டி கிளாத், திருநெல்வேலி ஜங்ஷனில்  த.மு.பில்டிங்கில் ஜீனத் செல்வா மகால்.அது மாடியில் அதுக்கு கீழே ஏ.பி.சி.துணிக்கடை அப்புறம் ராஜா காம்ப்ளக்சில் கல்பனா சங்கீதா ஜவுளிக்கடை என்று தான் திருனவேலி இருந்தது.

அங்கேயே அப்படி என்றால் மேலப்பாளையத்தை சொல்லணுமோ?
பசார் ஹக்கீம் ஜவுளிக்கடை, ஆர்.எம்.ஏ. அப்துல் சமத் கடை இந்த இரண்டும் ஆள் நிக்க இடம் இல்லாமல் பெரு நா ராவு வரை இருக்கும்.
அதுக்கு பிறகு சாச்சப்பா காஜா கடை,  காட்டுவா ஜவுளிக்கடை என்று விரிந்தது.
வகை வகையா,  கலர் கலரா தொப்பிகள் பஜாரில் குவிந்து கிடக்கும்.அரபு நாட்டு புண்ணியத்தில் இன்னைக்கு வெள்ளை சீனா தொப்பி போதும்ன்னு ஆகிப்போச்சு.இன்னும் பல பேருக்கு வேண்டாமேன்னு மாறிடுச்சு.


வியாழன், 18 ஏப்ரல், 2019

ஓங்க கூட ..மனுஷன் வருவானா?



நாய்க்கும் நம்மளுக்கும் ...அதென்ன நம்மளுக்கும் ? இல்லையில்லை.... நமக்கும் .....நமக்கும் எதுக்கு? நாய்க்கும் எனக்கும் உள்ள தொடர்பு  கொஞ்சம் .....நீட்டமானது.

எங்க ஊர் பக்கம் நீளத்தை நீட்டம்ன்னு சொல்லுவாக....அதுங்க பேர்ல எனக்கு பாசம் கூடுதலாகவே உண்டு.

ஏற்கனவே ஒரு நாயை வளக்க நான் வாங்கி....அது தப்பி வந்த நாய்ன்னு தெரிஞ்சு அத அந்த நாய் ஐயாக் கிட்ட சேர்க்கிறதுக்குள்ளே ....எச்சிப்போச்சு....அது தனிக்ககதை.
ஆனா இந்தக்கதை வேற......
எங்க வீட்ட்ல உள்ளாளுங்க.... நாயை நான் தொட்டேன்னு தெரிஞ்சாலே சம்மதிக்க மாட்டாக.எழு முறை கைகால்களைக் கழுவிவிட்டு தான் சோறு திங்க வரணும்ன்னு  சொல்லிடுவாக.
ஆடம்பரத்துக்காக நாய் வளர்க்கக் கூடாது....தோட்டக்காவலுக்கு.... நாய் வளக்கலாம்ன்னு....மார்க்க வெவரம் சொன்ன பிறகே ....கொஞ்ச காலத்துக்கு பெறகே சத்தங்காட்டாம இருகிறாக.

ஒரு நாள் தருவை வயக்காட்டுல.... வரப்பு ஓரமா.... என் கால் பக்கம் ....நின்ன நல்ல பாம்பு வேகமா வந்துக்கிட்டு இருந்துச்சு  ....அத பார்த்த பொறவு...நான் அதிர்ச்சியில நிக்க ... எங்கிட்ட பாம்பு வாறதுக்கு முந்தியே....கிட்ட நின்ன நாய் ஒன்னு....அத ஒரே கவ்வு தான்...தலையில்  இருந்து ஒரு சாண்....தூரத்தில் அந்த பாம்பை வாயில் வச்சிக்கிட்டு ...அங்குமிங்கும் உலுப்பிக்கிட்டு ....ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.      அந்த நாயால் வேற யாரையும் கூப்பிடக் கொள்ள முடியாம.....அதுக்கப்புறம் ஆங்காரமா ஆக்ரோஷமா ...கடிச்சுக் கொதரிக்கொண்டு இருந்தது.....நாய் பிடிச்ச பிடிப்பில் கடிச்ச கடிப்பில்....அந்த பாம்பின் வாழ்வு முடிஞ்சே போச்சு.

அந்த சாயங்காலப் பொளுதில் பாம்பை புடிச்சு , கடிச்சு என்னை நிக்க வச்ச நாய்க்கும் எனக்கும் பெருசா எந்த பந்த பாத்தியமும் இல்லை....எப்பவாச்சும் நான் வக்கிற சோத்தை....பிஸ்கோத்தை திங்கும்.அப்புறம் போய்டும்.ஆனாலும் அன்னைக்கு அந்த நாய் தான் பாம்புக்கடியில் இருந்து .....அது வாய்ல புடிச்சிட்டு போச்சுது. ஏற்கனவே நாய்ங்க பேர்ல இருந்த பாசம் இன்னும் கூடி விட்டது.
ஒரு நாள் எங்க ஊர்ல ஒரு கடையடைப்பு....அன்னைக்கு பார்க்க ஊரே அடங்கிப்போய் .....ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாமல், அமைதியாய் ....இருந்தது.

அதுவும் ராத்திரி எட்டரை மணிக்கே அந்த நிலைமை.
நான் எங்கோ போய்விட்டு அம்பாஸிடர் காரில் எங்க ஊர்  ..பசார்ல கார்கள் நிறுத்தப்படுகிற இடத்தில் ..எங்க புகாரி அண்ணன் நிக்கிறதை பார்த்துவிட்டு காரை நிறுத்திவிட்டு இறங்கினேன் .
எங்க அண்ணனிடம்   .எதோ பேசிமுடித்துவிட்டு கார்கதவை திறந்து நாங்கள் இருவரும்  உள்ளே ஏறப்போற சமயம்......எங்கிருந்தோ ஒரு நாய் வந்து உரிமையோடு...... நிதானமாக உள்ளே ஏறி ....பின் இருக்கையில் பின்னங்கால்களை  மடக்கிக்கொண்டு ...முன்னங்கால்கள் இரண்டையும் நிறுத்தி .....உட்கார்ந்து கொண்டது.....அது உட்கார்ந்து இருந்த தோரணை....என்னவோ அது வளர்ந்த வீட்டுக்காரில் அப்படி உட்காருமோ அப்படி இருந்தது .

கொஞ்சம் சந்தன நிறம்கொண்ட வனப்பில்  அது.....நல்ல வளர்த்தியா.....ஒசரமா....இருந்தது...நல்ல பசியில் இருப்பது போல கெறங்கிப் இருந்தது..நாக்கை வெளியே தள்ளி மெல்லிய குரலில் முனங்கிக்கொண்டு இருந்தது.

இது வெல்லாம் பார்த்து எங்க அண்ணன் .....காரைவிட்டு தூரமா....கொஞ்சம் உஷாரா....முன் ஜாக்கிரதையா..... நின்னுக்கிட்டு இருந்தான்.


நான் எவ்வளவோ சத்தங்காட்டியும் ,  கதவைத் திறந்து விட்ட பின்னரும் அந்த நாய் வெளியே வராமல் சத்யாக்கிரகம் செய்தது....

அவனும் சப்தம்  போட்டு பார்த்தான்..தோ...தோ...ன்னு கூப்பிட்டுப்பார்த்தான்.

 ம்ஹும் ஒன்னும் நடக்கவில்லை.

மிரட்டி,வெரட்டி பார்க்க கம்புகள் ஏதும் அங்கு கிடைக்கவும் இல்லை.
அதுவும்  உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.
அப்புறம் நானும் அவனும் என்ன செய்யலாம்ன்னு ஆலோசனை செய்தோம்.

இந்த நாயை என்ன செய்ய?....
" டே....நம்ம தோட்டத்தில் கொண்டு போய்விட்டுருவோம்.....அங்கே நிக்கிற மத்த நாய்களோடு இதுவும் ஒன்னுமன்னா இருந்துவிட்டு போகட்டும்."....அப்படீங்கிற ஒரு முடிவுக்கு வந்தோம்...

 " சரி கெளம்பலாம் ...உள்ள ஏறு " என்று நான் சொன்னேன்.

" ஏய்...என்ன வெளாடுரியா?.....நான் வரல்ல.....அது நாக்க நீட்டிக்கிட்டு நிக்கிற நெலையே..... ஒரு மாதிரியா இருக்கு ........அது பார்க்குற பார்வையே சரியில்லை...அந்த நாய் கூட ....இல்ல... நான் உங்கூட வரமாட்டேன்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

எவ்வளவோ தைரியம் சொல்லி ப்பார்த்தேன்...ஆனால் அவனோ அந்த நாய் பார்த்த பார்வையில் முன் சீட்டில் அமரவே முடியாதுன்னுட்டான்.

எந்த வகையிலும் நம் காரை தன் காராக நினைத்துக்கொண்ட அந்த ஜீவனை , எப்படியாகிலும் நம்ம தோட்டத்திற்கு கூப்ப்பிட்டு போய்டனும்ன்னு....முடிவு பண்ணிட்டு வண்டியை நகட்டினேன்.

எங்க தோட்டம் போக ஒரு அரை மணி நேரமாவது  ஆகும்....இந்த நாய்க்கு நம்ம தோட்டத்தில் சாப்பிட இந்த நேரத்தில் என்ன இருக்கும்?.....அங்கு இருக்கிற நாய்கள் எல்லாம் தின்னு முடிச்சு இருக்குமே.....என்ன பன்னுவோம்ன்னு பலவாறா யோசிச்சுக்கிட்டு .....பாளையங்கோட்டை பெட்ரோல் பல்க் பக்கம் உள்ள ஒரு ஓட்டலில் போய்....ஒரு பிரட் பாக்கெட் வாங்கிக்கிட்டேன்.....

கொஞ்சம் நிதானமான வேகத்தில் காரை ஒட்டிக்கிட்டு போனேன்.சில திருப்பங்களில் காருக்குள்ளே அந்த நாயால் பேலன்ஸ் செய்ய முடியாமல் காரின் உள்ளுக்குள்ளே விழுந்தது....அப்புறம் முனகியது.அங்கு போய்ச்சேர்கிற வரையில் அதன் மூலமாக ஒரு பிரச்சினையும் இல்லை.

தோட்டம் போய் சேர்ந்தேன்..கார் கதவைத் திறந்தேன்.அந்த நாய் இறங்கியது. மிரட்சியோடு அங்குமிங்கும் பார்த்தது....அதனை வளர்த்தவன் யாரோ?.....அவனைத்தான் அது அங்கே தேடி இருக்க வேண்டும்.கண்களின் ஓரத்தில்  ஒரு ஏக்கம் தெரிந்தது.

என்னால் முடிந்தது அந்த வேளையில்...நான் வாங்கிக்கொண்டு போய் இருந்த ரொட்டிப் பாக்கெட்டை பிரித்து.... அங்கு இருந்த பாலை அதன் மீது ஊற்றி ....ஒரு தட்டில் வைத்தேன்.   பசியோடு  இருந்த அந்த ஜீவன் ...அதனை ருசித்து உண்டது.

அப்புறம் எங்க இசக்கி முத்து தேவரிடம்....." இதக்  கவனமா பார்த்துக்கோங்க ....மத்த நாய்ங்களுக்கும் வக்கிற மாதிரி சாப்பாடு போடுங்க" என்று சொல்லிட்டு ஊருக்குப் புறப்பட்டேன்....

தனிமையில் ஊரை நோக்கி என் பயணம்...." எல்லாம் சரிதான்.    நாம கூப்பிடல்லை.....இந்த நாய் தானா வந்துச்சு....வண்டியில் ஏறுச்சு....இங்க வந்து உட்டுட்டோம்.....ஆனா நம்ம அண்ணன் வர மாட்டேன்னு சொல்லிட்டானே.....அத மட்டும் சொல்லியிருந்தாலும் பரவாயில்ல...
அதோடு   சொன்னானே ஒரு சொல்லு...":உன்னோடவும்....இந்த  நாயோடவும் ...மனுஷன் ஒன்னா வருவானா?

புதன், 6 பிப்ரவரி, 2019

எண்ணங்கள் ஆயிரம்

வசந்த கால நினைவலைகளில்.......
முஸ்லிம் லீக்
தலைவர்களின் எண்ணங்கள்  அடிக்கடி
வந்து செல்லும்.

எங்களுடைய குடும்ப மூத்த
தலைமுறையினர்,
விடுதலைப்போராட்டத்தில்
கலந்து கொண்டு
பல்வேறு அடக்குமுறைகளுக்கு
ஆளானவர்கள்.

மறைந்த தலைவர்கள்
காயிதேஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ்,
லியாக்கத் அலி கான், தந்தை பெரியார்,
கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,
சட்ட மேதை KTM. அகமது இப்ராஹிம்...M.S.அப்துல் மஜீத்
தென்காசி மேடை முதலாளிகள்
மு.ந. அப்துர்ரகுமான் சாஹிப், மு.ந. முஹம்மது சாகிப், சென்னை ரஹீம் சாகிப், கடையநல்லூர் வெ. கா .உ.அ.அப்துர்ரகுமான் சாகிப், கல்லிடைக்குறிச்சி TM.பீர்முகம்மது சாகிப் உள்ளிட்ட  பெரு மக்களோடு தொடர்புடையவர்கள்.

திருநெல்வேலி District Board என்கிற மாவட்ட உயர் பதவியில்  எங்கள் குடும்பத்தின் மூத்தவர் LKS. அப்துல்லாஹ் லெப்பை Vice. President ஆக முஸ்லிம் லீக் சார்பாகத் தேர்வுகள் பெற்றவர்.

சொக்கலால் ராம்சேட் பீடி குடும்பத்தின் முக்கூடல் பாலகன் பீடிஅதிபர் D.S. ஆதிமூலம், விஸ்வநாதராவ் முதலானோர் அதன் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.
DS.ஆதிமூலம் அவர்களின் மகன் சிவப்பிரகாசம் அவர்கள் பின்னாட்களில் தி.மு.கழக நாடாளு மன்ற உறுப்பினராக இருமுறைகள்திருநெல்வேலித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

அந்தக்கால திருநெல்வேலி என்பது மேற்கே சிவகிரி தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் கன்னி ராஜ புரம் வரை நீண்டு பரந்து விரிந்து இருந்ததாகும்.... இந்தப்பரப்பில் உள்ளவர்கள் வாக்களித்து அவர்கள் பதவியில் தேர்வு பெற்றவர்கள் ஆவார்கள்.

மேலப்பாளையம் நெசவாளர்கள் சார்பாக தங்கத்தில் இந்தியப் படம் செய்து,  அதனை  முகம்மது அலி ஜின்னாஹ்விடம் கொடுத்தவர்கள் எங்கள் குடும்பப் பெரியவர்கள்.

அந்தத் தொடரில் தான்,  எங்கள் மீது அன்பும் பாசமும்,  மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப், அப்துல் லத்தீப் சாகிப், திருச்சி நாவலர் AM.யூசுப் சாகிப், AK. ரிபாயி சாகிப் Ex. MP,  எங்கள் உறவினர் SA. காஜா முகைதீன் Ex.MP என்று தொடர்ந்து வந்தது.

எங்கள் மாமா வழக்கறிஞர் LKM. அப்துர் ரகுமான் சாகிப் மேலப்பாளையத்தில் 3 முறை முஸ்லிம் லீக் நகர்மன்ற தலைவர் பொறுப்பில் இருந்தார்.

அவர்காலத்தில்  நத்தம்  தாமிரபரணி  ஆற்றில் பாலம் கட்ட ஏற்பாடுகள் செய்து திறந்தார்.

மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவப் பிரிவு கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் நிதித்திரட்டி ஏற்படுத்தினார்...

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளராக 32 ஆண்டுகள் பணியாற்றினார்.
சத்தக்கத்துல்லா அப்பாக் கல்லூரி நிறுவ மறைந்த மக்கள் தொண்டர் ஜமால் முகம்மது முதலாளியோடு, கடும்பணிகள் செய்தவர்.
 எங்கள் குடும்ப நிலங்கள் பல.... கோவில்கள்,  சர்ச்,பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் முதலானவற்றிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டவை....இன்னும் திருமண மண்டபங்கள், பொதுமக்கள் பணிக்காக கொடுத்தவையும் சேரும்.

இதுவெல்லாம் எங்களின் பொதுவாழ்வு.
அதனால் இழந்தது சொல்லிமாளாது.

அது எனது தலைமுறை வரை தொடர்கின்றது.

ஆனாலும் எல்லாம் தாண்டி....எங்களால் முடிந்த பணிகள் செய்து வருகிறோம்.

மனம் வாடுகிற நேரங்களில் வாழ்த்துக்கள் வளம் சேர்க்கின்றன தோழர்களே...

(இந்தப்படம் 1987 ஆம் ஆண்டு MLM.முகம்மது லெப்பை  மாமா குடும்ப நிகழ்வில் எடுத்ததாகும்.
படத்தில் தலைவர் சிராஜுல்மில்லத் அப்துஸ்ஸமதுசாகிப் , SA. காஜாமுகைதீன் சாகிப் Ex. MP, அவர்களோடு மாமா சாந்து. செய்யது அலி சாகிப், ஹாபிஸா முஹைதீன் அப்துல் காதர்,மைத்துனர் KAO. புகாரி முதலானோரோடு நானும் இருந்தேன் )

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

” டே...மீரா “.


அருந்தலைவர் முன்னாள் வெளிவிகாரத்துறை , ரயில்வே துறை அமைச்சர் E.அகமது அவர்கள்
My Dear Young Friend….What is your name….?
இது தான் அவர் என்னிடம் பேசி ......நான் அவரிடம் அறிமுகமானது.
1983 ஜூன் மாதம் 4,5 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டை ஒட்டி , ஒரு சமூக நல்லிணக்க ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மேலரத வீதி காந்தி சதுக்கத்தில் அந்த ஊர்வலத்தை ....சிவந்த நிறமும் அழகும் நிறைந்த.... இளைஞர் வயதைக்கடந்து முதிர் இளைஞர் வயதை தொட்ட ஒருவர் , துவக்கம் செய்ய , உரையாற்றும் மேடையில் நின்று கொண்டு இருந்தார்.
அவர் தலையில் , தமிழக இஸ்லாமியர்கள் வழக்கமாகப் போடும் தொப்பியைப் போலல்லாமல் எம்.ஜி.ஆர்.போட்டு அவருக்கு அழகு சேர்த்த புஷ் குல்லாவைப் போல் தொப்பி இருந்தது..
சரளமான ஆங்கிலத்தில் அந்தப்பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார்...அவரது உரையை அன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் ,மிகச்சிறந்த ஆங்கிலப்புலமை பெற்ற அப்துல் லத்தீப் சாகிப் தமிழாக்கம் செய்து , மொழி பெயர்த்துக் கொண்டு இருந்தார்.
லத்தீப் சாகிப் பக்கத்தில் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் பிரபலங்களான முன்னாள் எம்.எல்.ஏ. தென்காசி மேடை முதலாளி மகன் சாகுல் ஹமீது, அவரது சகோதரர் முன்னாள் எம்.பி. ஏ.கே.ரிபாஈ , முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் கோதர்முகைதீன் ,சம்சுல் ஆலம் உள்ளிட்டோர் நின்று கொண்டு இருந்தார்கள்.
இன்னொரு பக்கத்தில் அன்றைய இளைஞர் களான காயல் மகபூப், கடையநல்லூர் கமருதீன் , மேலப்பாளையம் நிஜாமுதீன் ஆலிம் ,தீன் சுடர் சம்சு ஆகியவர்களோடு, மிக இளைய வயதினனான நானும் நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு...பக்கத்தில் நின்ற காயல் மகபூபிடம் ....” யாருண்ணா....இவர்” என்று கேட்டேன்.
“ டே...அவர் அகமது சாகிபுப்பா...கேரள அமைச்சர் ...அருமையா பேசுவார்....வக்கீல் வேற.” என்றார்.
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்ட அந்த அழகான தலைவர் “My Dear young Friend….What is your name…. என்று ஆங்கிலத்திலும் ....எடோ...பேர் என்னோ ?..என்று மலையாளத்தில் கேட்டார்....நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன்...பேரைச்சொன்னேன்...அது எந்தா மீரான்....மீனிங் என்னோ?....” ஞான் அறியில்லா..”.என்றேன்.
மலையாள பட வசனங்கள் தந்த தைரியத்தில் ..குறைந்த மலையாளத்தில் பேசினேன்....பக்கத்தில் நின்ற சாகுல் ஹமீது எம்.எல்.ஏ....இதனைப்பார்த்து விட்டு என்னை அவரிடம் என்னுடைய குடும்பத்தைச்சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். அப்புறமா என் முதுகில்.... செல்லமாக ஒரு தட்டு தட்டினார்....
அதிலிருந்து என்னை எங்கே பார்த்தாலும்...” டே...மீரா “....என்று மட்டுமே அழைப்பார்....எப்படித்தான் என்னை இவ்வளவு தூரம் நினைவில் வைத்துள்ளார் என்று ஆச்சரியப்பட வைக்கும்.
என்னை வேறு யாரும் அவ்வாறு அழைத்ததே இல்லை. முகம்மது....... மீரான்..........மீரா முகைதீன் என்று தான் மற்றவர்கள் அழைப்பார்கள்..மிக நெருக்கமானவர்கள் மட்டும் எல்.கேஸ் என்று அழைப்பார்கள்.
அன்று தொடங்கிய பாசம் தான்...பல்வேறு மாநாடுகள்...பொதுக்கூட்டங்கள்....கல்லூரி பட்டமளிப்புக்கள்....புது டெல்லி, கேரள பயணங்களின் போது ....சந்திப்பேன்...மிக மகிழ்வாக என்னிடம் நலம் விசாரித்துக்கொள்ளுவார்.
1993 ஆம் வருடத்தை ஒட்டி முஸ்லிம் லீக்கின் அன்றைய தமிழகத்தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப் அவர்களோடு கேரளாவின் வட மாவட்டங்களுக்கு , ஒரு வார கால பயணமாக உடன் சென்ற என்னோடு....மிக நெருக்கமாகிவிட்டார்....” ஏ டோ..மீரா...... கெட் ரெடி சமத் சாப் “ ...என்று சொல்லிக்கொள்ளுவார் .
அந்தப் பயணத்தில் மங்களூர் ஓட்டல் ஒன்றில் லிப்ட் உடைந்து....நாங்கள் கீழே தரையில் மாட்டிக்கொண்டு....வெளியே வரமுடியாமல் தவித்த சம்பவங்கள் எல்லாம் தொடர்ந்து என்னைப்பார்க்கும் போதெல்லாம் ...சொல்லிக்காட்டுவார்.....
கிண்டல் செய்வார்.
நான் பாளையங்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது , இன்றைய காலம் வரை என்னைப்பற்றி அறிவார்.
அவரைப்பற்றிச் சொல்ல நிறைய உள்ளது.
2006 ஆம் ஆண்டில், அகமது அவர்கள் ரயில்வே துறை இணை அமைச்சராயிருந்தார்... காயல் பட்டினம் ரயில் நிலையத்தைப் பார்வையிட , தற்போதைய கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மாநிலப் பொதுதச் செயலாளருமாகிய முகம்மது அபூபக்கர் ஏற்பாடுகள் செய்து வருகின்றார் என்பதனை அறிந்து ,திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ரயில் நிலையத்தின் கதியினையும் அவரிடம் காட்ட நினைத்து....அவரை அழைத்தோம்....எப்படியும் வந்து விடுவேன் என்று சொன்னதோடு , இருட்டையும் பொருட்படுத்தாது மேலப்பாளையம் ஊருக்கு வருகை தந்து , நூருல் ஆரிபீன் அரங்கில் , நான் உட்பட பல்வேறு இயக்கங்கள் கொடுத்த மனுக்களைப்பெற்றுகொண்டு உரையாற்றினார்.
எங்கள் ஊரில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் வழித்தடம் போட்டு 25 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் ஒன்றுமே இல்லை என்று.... நான் கோரிக்கைவைத்து பேசியதை எடுத்துக்கொண்டு....இவ்வளவு காலம் அந்த ரயில் வே நிலையத்திற்கு எவ்விதமான வளர்ச்சியும் செய்யாத , முன்னாள் , இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை , நீயும் உங்க ஊரும் என்னசெய்ய முடிந்தது....என்று கேட்டு விட்டு அவர்களை ஒரு பிடி பிடித்தார்...
அதோடு நிற்காமல் , அந்தப்பகுதி மாமன்ற உறுப்பினராக இருந்த என்னுடைய மனைவி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கொடுத்த மனுக்கள் யாவற்றுக்கும் ஆவண செய்வதாக பதில் கடிதமும் எழுதினார்.
அதன் அடிப்படையில் மேலப்பாளையம் கிராசிங் ஸ்டேசன் என்கிற தகுதியைப் பெற்றதோடு , அது வரை அமையப்பெறாத நடைமேடை, கழிப்பறை , தண்ணீர் வசதி இவையாவும் செய்ய ரூபாய் 2 கோடி கிடைக்க பணிகள் செய்தார்....
அடிப்படை பணிகள் நடைபெற்றன...தற்போது ஏனோ பணிகள் தொடராமல் கால தாமதமாகின்றது .
இந்திய நாட்டிலிருந்து சவூதி அரபியாவிற்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகிற ஹாஜிகள் எண்ணிக்கை வரம்புகள் , இவர் காலத்தில் தான் இரட்டிப்பாகியது.
இந்தியாவுக்கும் , பாலஸ்தீனத்திற்கும் இணைப்புப் பாலமாக இருந்த யாசர் அராபாத்தோடு மிக நெருக்கமான நட்பினைபெற்று இருந்தார்.
அகமது அவர்களின் ராஜ தந்திர நடவடிக்கைகள் மூலம் சிரியா நாட்டில் போராளிகளிடம் சிக்கித் தவித்த இந்தியத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள்.
பல்வேறு அரபு நாடுகளில் பணி செய்கின்ற பல லட்சம் பேர்களுடைய வேலைவாய்ப்புக்கள் பறி போய் விடாமல் பாது காக்க பல்வேறு பாது காப்புச்சட்டங்கள் வர உழைத்தார்.
பல்வேறு அரபு நாடுகளின் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அழுது கிடந்த ஆயிரக்கணக்கான , சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களை , தாய் நாட்டிற்கு வரச்செய்தார்.
இன்னும் அவரைப்பற்றிச் சொல்ல நிறைய உள்ளது.அவரது மறைவு நாட்டிற்கு , மத நல்லிணக்கம் பேணுகின்ற நட்புகளுக்கு பேரிழப்பாகும்.
அவரைப்பற்றிய குறிப்பு.:
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாளன்று E.அகமது அவர்கள் பிறந்தார்.
தனது இளங்கலை பட்டப்படிப்பை கேரள மாநிலம் தெள்ளிச்சேரியிலுள்ள அரசு ப்ரென்னென் கல்லூரியிலும், பின்னர் சட்டப்படிப்பை திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்துப் பட்டம் பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக குலாம் மஹ்மூத் பனாத்வாலா இருந்தபோது, இவர் தேசிய பொதுச் செயலாளராகவும், அவரது மறைவுக்குப் பின் அதன் தேசிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
1967, 1977, 1980, 1987 ஆகிய பருவங்களில் நான்கு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலத்தின் தொழிற்சாலைகள் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1971 முதல் 1977 வரை, கேரள மாநிலத்தின் Rural Development Boardஇன் நிறுவனத் தலைவராகவும்,
1979 முதல் 1980 வரை, கேரள மாநிலத்தின் சிறுதொழில் வளர்ச்சித் துறை செயல் தலைவராகவும்,
1981 முதல் 1983 வரை - கேரள மாநிலம் கண்ணூர் நகர்மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய பருவங்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004-2014 பருவத்திலான இந்திய நாடாளுமன்றத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்திருந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில், தொடர்வண்டித் துறை (ரயில்வே) இணையமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2004-2009 பருவத்தில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும், 2009 ஏப்ரல் முதல் 2011 ஜனவரி வரை இந்திய ரயில்வேயின் இணையமைச்சராகவும், மீண்டும் வெளியுறவுத் துறை இணையமைச்சராக 2011 ஜனவரி 24ஆம் நாளன்றும் பொறுப்பேற்றிருந்தார். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக ஜூலை 2011 முதல் அக்டோபர் 2012 வரை பொறுப்பு வகித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் அங்கம் வகித்த காலங்களில், வெளியுறவுத் துறை, ரயில்வே, விமானப் போக்குவரத்து & சுற்றுலா, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் & காடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான சிறப்புக் குழுக்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியாவின் Government Assurance குழுவின் தலைவராகவும், இந்தியா - கத்தர் நாடுகளுக்கிடையிலான High Level Monitoring Mechanism (HLMM)இன் துணைத் தலைவராக நவம்பர் 2011இலும் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய அரசின் பிரதிநிதியாக 1991 முதல் 2014 வரை 10 முறை பங்கேற்றுள்ளார். GCC நாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டிருந்தார்.
பலமுறை புனித ஹஜ் செய்துள்ள இவர், இந்திய அரசின் ஹஜ் நல்லிணக்கக் குழு உறுப்பினராக 5 முறை சென்றுள்ளார்.
ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் 4 நூல்களை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்ல அல்லாஹ் அவரின் பிழை பொறுத்து மேலான சுவன பதி அருள்வானாகவும்.