திங்கள், 30 ஏப்ரல், 2012

"பாய்"......ன்னு அழைக்கனுமா?................



பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி:  படிப்பு சம்பந்தமானவை  மட்டுமே எங்களுக்குக் கற்றுத்ததந்ததோடு  தம் கடமையைச் செய்து முடிக்க வில்லை..
என் போன்ற "ஒன்னும் தெரியாமல் இருந்தவர்களுக்கு" , எப்படி பழகவேண்டும்?,  எப்படி எழுதவேண்டும்?,.மேடைகளில் தட்டில்லாமல் எப்படி பேசுவது?,போன்றவைகள் பற்றியெல்லாம் பாடம் நடத்தித் தந்தது.
கல்லூரி, கற்றுத் தந்தது என்று சொல்லும் போது அங்குள்ள சுவர்கள், .கரும் பலகைகள் ,பெஞ்ச்சுகள் ,டெஸ்க்குகள் போன்ற உயிரற்றவையா சொல்லிக்கொடுத்ததன? இல்லை.

கல்லூரியில் கடமைக்குப் பணிசெய்யாமல்,நம் மாணவர்கள் தன்மான மிக்கவர்கள் அவர்களுக்கு வாழ்வின் அடிப்படை அமைத்துத் தரவேண்டும் என்று உழைத்த மாமணிகள் எனது பேராசிரியர்கள்,
அவர்கள் ஊட்டிய கல்வி , உயிர் வாழும் வரை நினைவில் நிற்கும். பாடத்தோடு பண்பையும்,பண்பாட்டையும் சேர்த்துக் கற்றுத் தந்தார்களே அது கல்லூரிக் கற்றுத் தந்தது என்று தான் சொல்ல வைக்கும்.
 
எங்கள் கல்லூரியில், எங்கள் காலம் பற்றி தனியே எழுத வேண்டும்.
 
ஒரு நாள் தமிழ்ப் பேராசிரியர் தமிழ்ஆசான்,கா,முகம்மது பாரூக் அவர்களும்.தமிழ் ஆசான்,பேராசிரியர் ராமையா அவர்களும், கல்லூரி முதல்வர் மற்றும் அலுவலகம் இருக்கும் பகுதி, நாங்கள் படிக்கும் காலத்தில் உள்ளரங்கக் கூட்டங்கள் நடக்கும் தரைத் தளத்தின் வகுப்புக்களுக்குப் போகும் பாதை, மாடிப்படி இறங்கி வரும் பாதை ஆகிய மூன்று பாதைகள் சந்திக்கும் இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
பேராசிரியர்கள் வழக்கமாக அங்கே தானே நிற்பார்கள்,என்று நினைத்துக்கொண்டு ஒரு சலாத்தைஅவர்களுக்கு அவசரமாகச் சொல்லிவிட்டு விறுவிறு என கடக்க முயற்சித்தேன். “தம்பி,......கொஞ்சம் நில்லுங்க.”......கணீர் குரலில் பேராசிரியர் பாரூக் அவர்கள் என்னை அழைத்தார்கள்.
“வாங்க.... வாங்க..... வாங்க”...., மீசைக்குள்ளிருந்து அட்சர சுத்தமாக பேராசிரியர் ராமையா சிரித்துக் கொண்டே அழைத்தார்.
."என்ன சார்?"
“என்ன..... உங்கள.... மேடைப் பக்கமே பார்க்க  முடியல்லையே?மேடைன்னா அவ்ளோ பயம் வந்து விட்டதா?
"அப்படில்லாம் இல்லை சார்".
"உங்களுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது......நீங்கள் மாட்டேன் என்றெல்லாம் தப்பிவிடக் கூடாது..
“வலம்புரி ஜான் வர்றார்,கவியரங்கம் இருக்கு.ஆறு பேர் கவி பாடனும்.அஞ்சு பேர் வந்தாச்சு ஆறாவது ஆள் யார் தெரியுமா?”.....
 
“யாரு சார்?....அது"...
“நீங்க தான்”........சார்"
“சார் ...நான் எப்படி சார் கவி அரங்கத்தில் பாடுவது? என்னவோ பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டின்னு கலந்து கொள்கிறேன்..என்னை விட்டுருங்க சார்.” என்று என்னால் முடிஞ்ச மட்டும் தூரத்துல நின்ன மத்தவங்க காதுல,  கேக்காமல் முனங்கிப்பார்த்தேன்.....
“ஆறாவது ஆள் நீங்கதான்,தயாராகிக்கிடுங்க”ன்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டு  போய்விட்டார்கள்.
வகுப்பறைக்குப் போய் பேனாவும்,கையுமா ஒரே சிந்தனை மயம் தான் .
“.....அய்யய்யோ........ எதைப் பாட?...... எப்பிடிப் பாட?
 "ஏய்.....தருமி ஸ்டைலில், தனியே பொலம்புற அளவு போயிட்டியே.....
 கவிதை எழுத உனக்கென்ன தெரியும்?     வைரமுத்து எழுதுற கவிதைகளையே,கண்ணா பின்னான்னு, தப்பு தண்டான்னு சொல்லுவே.... .உனக்கு ரொம்பத் தெரியுமோ?. நீ மட்டும் தப்பா, கவிதை கிவிதையின்னு எதையாவது படிச்சியோ,..... அவ்வளவு தான்.................நானே உன்னை மேடையை விட்டு இறங்க விட மாட்டேன்........ தொலைஞ்சே...... பாத்துக்கோ....”ன்னு நண்பன் முத்துப் பாண்டி எனக்கு பேதியைக் கொடுத்தான்.
 
மேலப்பாளையம் அம்பிகா புரத்தைச் சேர்ந்த நண்பன் முத்துப் பாண்டியன், சின்ன வயதில் இருந்தே என்னுடைய வகுப்புத் தோழன்.பென்ச் மேட்டும் ஆவான்..பின்னாட்களில் அந்த அம்பிக புரம் பள்ளிக்கூடத்துக்கு நான் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.எ.ரகுமான்  அவர்களிடம் ஆறு வகுப்பறைகள் கட்ட நிதி வாங்கித்தர காரணமாக இருந்தவன்.....இன்று நெல்லை ஆவின் பால் பண்ணையில் உயர் அதிகாரியாகப் பணி புரிகிறான்.
    நாங்கள் இருவரும் மேலப்பாளையத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  பாளயங்கோட்டை ,ஹைக்கிரவுண்ட்,ரஹ்மத் நகர் எங்கள் சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு,  தினமும் சைக்கிளில் தான்  செல்வோம்.
பயணத்தின் போதே பல்வேறு வாக்குவாதங்கள், எனக்கும் அவனுக்கும் நடக்கும்.
அவன் எப்போதும் இளைய ராஜாஇசை அமைத்த ,பாடல்களை “ஆஹா...... ஓஹோன்னு.”....... சொல்லுவான்.நான்  எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே இசையில் நேசித்தேன்....
 
“உனக்கு தெரியுமா இந்த டியூன், நாகூர் ஹனீபா பாட்டில் நான் கேட்டது......அந்த சாயலில் இளைய ராஜா பாட்டு இருக்கு...., தெரிஞ்சிக்கோ”ன்னு சொல்லி பாடி ? காட்டுவேன்.அவன் கடுப்பாயிடுவான்.
 சைக்கிளில் வரும் போதும், போகும் சண்டை தான்.
ஆனால்,என்னை அவனும். அவனை நானும் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.
வாதங்கள் செல்லமாக இருக்கும்.......கடுமையா இருக்காது.
 
இப்போ மட்டும் தான் கல்லூரிக் காளைகள், தமது நண்பர்களை “மாப்பிளை”ன்னு கூப்பிடுவதா யாரும் நெனைச்சுக்க வேண்டாம். முத்துப் பாண்டியை நானும்,என்னை அவனும் மாப்பிளை முறை வச்சுத் தான் கூப்பிடுவோம்.
 
அவன் வீட்டிலில் இருந்து வரும் சைவச் சாப்பாட்டை நானும், என் உம்மா கொடுத்துவிடும் அசைவ ஐட்டங்களை, அவனும் எங்கள் வகுப்பறையில் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்வோம்.
 
கவியரங்க நாளும் வந்தது. கவியரங்க சிறப்பு விருந்தினர் வலம்புரி ஜானும் வந்தாச்சு..
அப்போது வலம்புரி ஜான் நாடாளுமன்ற மேலவையில்  .அ.தி.மு.க.உறுப்பினர் என நினைவு.
அப்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், இலங்கைத் தமிழர்கள் படும் துன்பத்தை மத்திய அரசுக்கு உணர்த்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள்,அவரது கட்சிக்காரர்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
வலம்புரி ஜான் அவர்களும் அந்த நேரத்தில், அண்ணா தி.மு.க.வின் நாடறிந்த உரையாளர்.ஆகையால் அவர் கல்லூரியில் நடந்த அந்தக் கவி அரங்கத்துக்குக் கரும் சட்டை அணிந்து வந்திருந்தார்.
 
“அடியே வசந்தா உன் முகத்தைக் காட்டு
என்னை நான் அலங்கரித்துக் கொள்ளட்டும்...”இப்படி அவர் கவியரங்கதைத் துவக்கிவைத்துப் பேசியதாக நினைவு.
நண்பர்கள் பலரும் கவி பாடினார்கள்.
என் முறை வந்தது,
என் தலைப்பு “பாய்” என்பதாகும்.
பாய்....
பாய்...... போனார்
து... பாய் போனார் 
பாய்... ந்து... பாய்... ந்து பாய் போனார்,
து....பாய் போக
பம்...பாய் போனார்,
தெம்....பாய்போனார்,
அன்....பாய் போனார்,
பணம்சேர்த்து
வம்.....பாய்ப் போனார்.......இப்படிப் போயின அந்தக்கவிதைவரிகள் .
கைத்தட்டு அள்ளி எடுத்தது அந்தக் கவிதை.
ஒண்ணுமே இல்லை எல்லாம் சொல்லடுக்குத் தோரணம் தான் 
.சரக்கு குறைவு தான்.ஆனால்....கொடுத்த விதம்?...........
என் தோழன முத்துப் பாண்டி தூரத்தில் எங்காவது தெரிகின்றானா? என்று மேடையில் இருந்து பார்த்தேன்.ஆளையே காணோம்.
மறுநாள் எல்லாம் கேட்டான்.     கவிதைப் பற்றியோ கவியரங்கம் பற்றியோ மட்டும் அவன் கேக்கவில்லை.... நாமே கேப்போமுன்னு ஆரம்பிச்சேன்."ஏம்பா நீ கவியரங்கம் வந்தியா?"
"நான் எதுக்கு வரணும்" முத்து பாண்டி சுரத்தே இல்லாமல் சொன்னான்.
 
 
என் முகம் வாடியதைப் பார்த்ததும்,
 “அட அட ..நாம் போவனா? முழு கவியரங்கமும் பார்த்துட்டுத் தான் போனேன்.நீங தாண்ட நல்லா பாட்டு பாடுன...இல்லையில்லை கவிதை படிச்சே.”.என்று திருத்த வெளியீடு செய்தான்."இவன் நெசமாத்தான் சொல்லுரானா?அப்படீன்னு பார்த்தேன்.
இந்தக்கவிதையை இப்போ எதற்குச் சொல்லிக் காட்ட வேண்டும்?
அதற்க்கு காரணம் என்ன?
முன்னொரு காலத்தில்,அதாவது ரொம்ப வருசத்துக்கு முந்தியெல்லாம் இல்லை ஒரு இருபது வருசத்துக்கு முந்திவரை மேலப்பாளையம் மக்கள் ஒருவருக் கொருவர் யாரைப் பார்த்தாலும் அண்ணன் என்றும் தம்பி.மாமா,மருமகனே,பெத்தாப்பா,பெத்தும்மா,பேரப்பிள்ளை ன்னு தான் கூப்பிட்டு வந்தாங்க... 
 ரொம்ப பாசமாக அண்ணன் வயதைக் கொண்டவர்களை “காக்கா” என்பார்கள்.
“மாமா” என்றால் “மருமகனே”ன்னும்,
“பெத்தாப்பா” ன்னு கூப்பிட்டால் “என்னவே பேரப்பிள்ளை”ன்னும்.
“சின்னாப்ப்பா,சாச்சான்னாலோ என்னப்பா”ன்னு பதில் மரியாதை செய்தார்கள்.
காக்கா என்கிற பிரியமான சொற்றொடர் கீழக்கரை,காயல் பட்டணம்.மேலப்பாளையம்,அதிராம் பட்டினம்,போன்ற பகுதி மக்களால், பண்பாடு மிக்க வார்த்தையாக நீண்ட தலைமுறைகளாய் அழைக்கப் பட்டு வருகிறது.
“ஹக்”என்கிற அரபு பதத்திலிருந்து “ஹக்கான்”....”,ஹாக்கா”....என்று அழைத்து “காக்கா” என்று மருவி விட்டது.
“அண்ணன் என்பவர் தம்பிக்கு “உண்மையாளன்” என்பதைத் தான் காக்கா என்கிற பதம் சொல்லிக் காட்டியது.”
 
கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துல் ரஹ்மான்.மற்றும் அவர்களது சகோதரர்களான செய்யதுசலாஹுத்தீன்,செய்யது அப்துல் காதர் சீனா தானா போன்ற பெரு மக்களை "காக்கா" என்று யாரும் அழைத்தால் அப்படியே உருகிவிடுவார்கள்.
அவர்களிடம் பணிசெய்யும் மிகச் சாமான்யர்கள் கூட “முதலாளி” என்று அழைக்க மாட்டார்கள்.அதை அந்த பெருமக்களும் விரும்ப மாட்டார்கள்.ஆனால் காக்கா என்றே சகலரும் அழைப்பார்கள்.அதற்கு ஒரு தனி பாசம் காட்டுவார்கள்.அது போன்று தான் காயல்  பட்டணம் வாவு,பல்லாக்கு,மற்றும் பாசுல் அஸ்ஹாப் போன்ற பெருமக்களும்.

இன்று காலம் எப்படி ஆகிவிட்டது என்றால்,நம் சகோதர சமுதாய நண்பர்கள் முஸ்லிம் மக்களைப் பார்த்து உறவு முறை சொல்லி அழைக்கிறார்கள்.ஆனால் கலிமா சொல்லி உறவு கொண்டாடும் மேலப்பாளையத்தில் இவர்கள் எப்படி அழைக்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனை தான் வருகிறது.
 
சகோதர மக்களான தேவர்கள்.கோனார்கள்,நாயக்கர்கள்.நாயிடுகள்.ரெட்டியார்கள்,முதலான சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ,முஸ்லிம்களை “மாமா” என்று தான் பாசமாக அழைக்கிறார்கள்.
 
முஸ்லிம் மக்களோடு பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வாழ்கிற தலித் மக்கள் தாத்தான்னு தான் அழைப்பார்கள்.
 
ஆசாரிமார்கள்.அவர்கள் கொல்லுத்தொழில் செய்பவர்களாக இருந்தாலும்,தங்க நகை,தச்சுத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் முஸ்லிம் மக்களை “சின்னையா” என்று தான் கூப்பிடுவார்கள்.
கடற்கரை ஓரம் மீன்பிடித் தொழில் செய்கின்ற பரத குல மக்கள் அதாவது பெர்னாண்டோக்கள் முஸ்லிம் மக்களை “சாச்சா” என்று அழைப்பார்கள்.
தமிழகத்தின் மத்திய பகுதிகளில் முஸ்லிம் மக்களை “ஷியான்” மற்றும் “மாப்பிள்ளை “ என்றே முக்குலத்தோர் அழைக்கிறார்கள்.
இவ்வாறு மற்ற மக்களெல்லாம் உறவு சொல்லி அழைக்கும் போது இந்த சமூகத்திலே பிறந்து, வளர்ந்து, வருபவன் தற்போதெல்லாம்.ஒருவரை ஒருவன் சுருக்கமாக “பாய்” என்றே அழைக்கிறான்.
 
“என்ன பாய் சோறு வைக்கட்டுமா?”
 
“பாய்,உங்களப் பார்க்க.... உங்க ஊட்டுக்கு வந்தேன்,நீங்க இல்ல.”
இதில் "பாய்" மட்டும் தான் இரவல் மொழி.மற்றதெல்லாம் மேலப்பாளையம் பாஷை தான்.
ரோட்டில் போகும் போது பா.................ய்.என்று அழைக்கிற அழகு இருக்குதே அதச் சொல்லி மாளாது.
பொதுவாக “ஹிந்து முசல்மான்.......பாயி பாயி ஹே” என்று காந்தி அடிகள் சொன்ன வாரத்தைகளில் “பாய்”ங்கிற சொல்லை, ரொம்ப்பப் பிடிவாதமா மேலப்பாளையத்து இந்தத் தலைமுறை பின்பற்றத் தொடங்கிட்டதோன்னு நினைக்க வேண்டியதுள்ளது.
 
அதற்காகத்தான் பாய் கவிதை யை நினைவூட்டினேன்.
 
எங்கள் வீட்டில் விருந்தினர்கள் யாரவது வந்தால்,எங்க மாமாகிட்டேயோ வாப்பா கிட்டயோ சொல்லும் போது “ஒரு பெத்தாப்பா வந்திருக்கிறார்”. “ஒரு மாமா டெலி போனில் லைனில் இருக்கிறார்.” “எதிர்த்த வீட்டு காக்கா வந்துட்டுப் போனார்ன்னு” தான் சொல்லணும்.தப்பித் தவறி “ஒரு ஆள் அல்லது ஒருத்தர் அன்தூட்டுக் காரர் வந்துட்டுப் போனார்”ன்னு சொன்னால் கண்டிப்பார்கள்.
 
என் மீது மிக்க அக்கறையும் பாசமும் கொண்ட நெல்லை பேட்டையில் வாழும் ஜமாத்துல் உலமா தலைவர் டி.ஜே.எம்.சலாஹுத்தீன் ஹசரத் அவர்கள் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.” மீரான்.உங்கள் ஊருக்கு சமீபத்திலே ஒரு ஆட்டோவிலே வந்தோம்.. எங்களை ஆலிம்ஷான்னு பண்போடு அழைத்த நிலைமை இன்று எப்படி ஆகிட்டது தெரியுமா? “பாய் எங்க போகணும்?”.
 
“நீங்க எந்த ஊர் பாய்?”
 
“என்ன பாய் .நான் போகட்டுமா”?
இப்படி தொடர்து பாய் மயமான மரியாதைகள் தான்.
 
என்ன  ஒரு அற்புதமான பாசம் காட்டிய பாசமான மக்கள் இப்படி அழைக்கிறார்களேன்னு”ரொம்ப வருத்தப்பட்டார்கள்,அவர்களின் அந்த ஆதங்கம் என்னை மனதளவில் வாட்டியது.
 
“பாய்”ன்னா சகோதரன் தானே?” “உங்கள மாதிரி ஆளுங்கள் இதையும் விடமாட்டீங்களோ? “அப்படீன்னு யாரும் கேட்கமாட்டார்கள்ன்னு நினைக்கிறேன்.மலையாளத்தில் சின்ன வய்துக்கார்கள் யாரையும் பெரிய ஆட்கள் பார்த்தால் "மோனே"..."மோளே" என்றுதான் அழைக்கிறார்கள்...அதில் பாசம் தெரியும்..அங்கு பெரும்பாலும் "பாய்" இல்லை.
 
பாய் என்கிற சொல்லாடல் எங்கிருந்தோ நம் ஊருக்கு இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தை.
உர்து மொழியை தாய் மொழியாகக் கொண்டமக்கள் அப்படி சொன்னால் அது அவர்களுக்கு சரிதான்.
 
“பாய் சாப் எப்படி இருக்கீங்க? “அது அவர்கள் பண்பாடு. “பாய் ஹைரியத் ஹே”
 
அதுக்காக உடன்பிறப்பேன்னு தனித் தமிழ் தாண்டவமாட நான் ஒரு போதும் அழைக்கச் சொல்லவில்லை.
 
நாம் பேசி வருகிற வார்த்தைகள் இஸ்லாமிய கலாச்சாரத்தை பன்மொழித் தன்மைமிக்கவர்கள் ஏற்றுக்கொண்ட அதன் காலத்தையும் வரலாற்றையும் செழுமை மிக்க அதன் பரப்பையும் காட்டுவதாகும்.
காக்கா,பெத்தாப்பா,சின்னாப்பா,போன்ற வார்த்தைகளால் அழைப்பது நம் ஊரின் நல்ல பண்பாடு. அதை மீட்டு நம் மொழி வார்த்தைகளை மீண்டும் உயிர் வாழச் செய்வோம்.நாம் ஒன்னும் குறைந்துவிட மாட்டோம்.இல்லை என்றால் இன்னும் கொஞ்ச நாட்களில் கண்டிப்பா  ஹல்லோ பிரதர்,அங்கிள்,ஆண்டி.மம்மி, டாடின்னு சொல்லித்தான் அழைக்கணும்.  அதுவும் வேறு பாஷை தானே?.






5 கருத்துகள்:

Senthil சொன்னது…

மீரான் அண்ணா!.... மிகவும் அருமையான பதிவு. எனக்கும் நீண்ட நாட்களாக இந்த ஆதங்கம் மனதுக்குள் இருக்கிறது. நம் இளைய தலைமுறையினர்க்கு இது போன்ற விஷயங்களை உங்களைப் போன்றவர்கள் தான் உணர்த்த வேண்டும். தொடர்ந்து இது போன்ற விஷயங்களை தெளிவு பட எழுதுங்களேன்......

அப்துல்ஜப்பார் சொன்னது…

நல்ல அற்புதமான பதிவு குறிப்பாக நமதூரில் வளர்ந்து வரும் சிறுவர்கள் இந்த பாய் வார்த்தையை அதிகம் உபயோக படுத்த காரணமே பீடி கம்பெனியில் வேலை செய்கின்ற நடுத்தர வயதை உடையவர்களால். இன்னும் பெரியவர்கள் காக்கா சின்னாப்பா போன்ற உறவு முறி சொல்லி தான் அழைக்கிறார்கள் மேலும் சிறுவர்கள் மேலப்பாளையத்தின் கலாச்சாரத்தையே மறந்தும் வருகிறார்கள்

Sikkander Kassaali சொன்னது…

Annan miga arumai.. I like kaka

Jafar Dhoufeek சொன்னது…

Annan, maama, eantra Uraugalaiye"BOY" (Muslim boy) eantru Siru Vayathinar Alaippathu Avalanilaiyaga Ullathu

Ky Nijam சொன்னது…

Assalamualaikkum