வெள்ளி, 13 ஏப்ரல், 2012

மேலப்பாளையம் மணியாச்சி காஜா சிலம்பு வித்வான்...
1935 ஆம் ஆண்டு பிறந்த மணியாச்சி காஜா என்றால் மேலப்பாளையத்தில் தெரியாதவர்கள் மிகக்குறைவு தான். 

போட்டா போட்டி, காட்டா குஸ்தி ஒரு காலத்தில் மேலப்பாளையத்தில் ரொம்ப பிரபலம். யாராவது ஒரு பயில்வானை ஒப்பந்தம் செய்துகொண்டு அவருக்கு வேளா வேளை கேக்கிற சோறு போட்டு ,வாய்க்கு ருசியாய் எதுவெல்லாம் கேக்கிறரோ அதுவும்  மற்றும் பசியாற மூக்கு முட்ட கொடுத்து, குஸ்திக்கு முன்பு அவரை தயார் செய்வார்கள். 

பயில்வான் வெற்றி பெற்றால் கூட்டி வந்தவர்களுக்கு அப்பிடி ஒரு மரியாதையை கிடைக்கும். 

அப்படி பயில்வாங்களை தயார் செய்கிறவர்களில் முக்கியமானவர் அவர். காமா பயில்வான். ஆசாத் பயில்வான் போன்றவர்களைமேலப்பாளையத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். 

இப்படிதான் சேப்பிளை காஜா தமது ஆரம்பக் காலத்தில் ஊருக்கு அறிமுகம் ஆனார். 

               போட்டி போட்டுக்கொண்டு தறியில் அதாவது காக்குழியில் இறங்கி ஒரு நாளைக்கி ரெண்டு சாம்பு நெய்து சாதனை உண்டாக்கியவரும் இவர் தான்.
           இளம் பிராயத்தில்  நெஞ்சின் கூட்டின் மேல் ஒரு உரலை தூக்கி வைத்து அதற்கு மேல் ஒருவரை அமரச் செய்து மார்பின் வலிமையை ஊர் அறியச் செய்தவர் இவர். இவரோடு சேர்ந்த சில நண்பர்களும்,இந்த கலையில் வல்லவர்களாக இருந்தார்கள். ,

       இப்போ யாரவது நம் ஊரில் இப்படி ஒரு முயற்சி செய்து பாப்பமேன்னு துணிந்தால் ஆஸ்பத்ரி போய் சேர்ந்து, போக  வேண்டிய இடத்துக்கு போகவேண்டியது தான்.. நெஞ்சில் ஒரு எலும்பு கூட மிஞ்சாது. நொறுங்கிப் போய்விடும். நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

தீரன் திப்பு வின் திண்டுக்கல் படை பிரிவில் சிலம்பம் தெரிந்த வீரர்கள் படை மிக வலிமை கொண்டதாக இருந்ததாம்.பின்னாட்களில் அவர்களில் ஒரு பிரிவினர் கான் சாஹிப் யூசுப் கானின் படை வீரர்களுக்கு அதை சொல்லிக்கொடுத்தரர்களாம். அவர்கள் “ஓதுவார் வகையறா” என்று அழைக்கப்பட்டார்கள். அந்த அணியில் பிரபலமாக அறியப்பட்டவர் வஸ்தாது லட்சுமண பாண்டியர் என்பவராவார்.

சிலம்பம் மட்டுமல்லாது வாள் வீச்சு ,சிலாத்துவரிசை,மலாய்,மான் கொம்பு,வேல்வீச்சு ,குதிரைஏற்றம் ,காளை அடக்குவது போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவற்றை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

அவர் அந்த கலைகள் பலவற்றையும் ரகசியக் கலைகளையும்,  தமது பிரதான சிஷ்யர் மேலப்பாளையம் சேப்பிள்ளை சேக்மதார் வாத்தியார் முதற்கொண்டு பலருக்கு கற்றுக்கொடுத்தார்.

அவற்றில் ஒன்று, நூறு பேருக்கு மத்தியில் மாட்டிக்கொண்டாலும்  அவர்களிடமிருந்து தப்புவது எப்படி என்ற முக்கியமான ஒரு கலையாகும்.
இந்த அரிதான கலையை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த மாட்டோம் என்ற சத்தியம் செய்யும் மாணவர்களுக்கும், வருஷக் கணக்கில் அவருக்கு குருகுல முறையில் பணிவிடை செய்யும் ஒழுக்கமான மாணவர்களுக்கும் மட்டுமே அவர் போதிப்பாராம்.


ஒருவன் மது அருந்துவான் என்று தெரிந்தால் அவனைத் தம் பக்கமே வர விட மாட்டாராம். அவ்வளவு நேர்மையும் வீரமும் கொண்டவராக வஸ்தாது லட்சுமண பாண்டியர் இருந்தாராம். அத்துடன் இஸ்லாமிய சூபிகள் பலரையும் நேசித்தவராகவும் வாழ்ந்தார்.

தமது பிரதான சிஷ்யர் மேலப்பாளையம் சேப்பிள்ளை சேக்மதார் வாத்தியார் அவர்களின் தம்பி என்று மணியாச்சி காஜா லெட்சுமண பாண்டியர் முன் அறிமுக மானார்.

தமது மாணவர்களில் மதார் வாத்தியாரை, வஸ்தாது லட்சுமண பாண்டியர், நாட்டு வைத்தியராகவும் .பாரம்பரிய சித்த,யூனானி எலும்பு முறிவு கட்டு முறைகளையும் தெரிந்தவராகவும் ஆக்கினார்.

வாட்ட சாட்டமான ஆளாக இருந்த காஜாவை வித்தைகள் பல தெரிந்தவனாக ஆக்கினார். வெள்ளந்தி மனமும் கள்ளமில்லாத குணமும் அவரை சிலம்பக் கலையில் மிக்க ஈடுபாடு கொண்டவராக ஆக்கியது.
சிலம்பத்தில் ஸலா வரிசை மிகப் பிரதான மானது. அதில் லட்சுமண பாண்டியர் வரிசை தனியாகத் தெரியும். 

சிலம்பு வித்தை கற்றுக்கொள்ள குருவுக்கு காசு பணம் ஏதும் பெரிதாக கொடுக்கப்படுவதில்லை.
முதலில் குருவுக்கு தேங்காய் உடைத்து சிலம்பு வீச துவக்கம் செய்வார்கள்.அதுக்கு தேங்காய் தட்டுவதுன்னு பேர்.

தேறிய மாணவர்கள் குருவுக்கு விழாக் காலங்களில் வேஷ்டி, சட்டை, மேல் துண்டு கொடுத்து அழகு பார்ப்பதுண்டு. தலையில் பன்னீர் ஊற்றி கழுத்தில் மாலை அணிவிப்பது   உச்ச கட்ட மரியாதையாகும்.

சிலம்பு வித்தையில் “வா. வந்து மோதிப்பார். என்னை வென்றால் காலில் வீரச் சங்கிலி கட்டுகிறேன்” என்று சவால் விட்டு வெற்றி பெற்றவர்கள் இருந்தார்கள். மணியாச்சி காஜாவிடம் வீரச் சங்கிலி ரண்டு மூணு உண்டு,
அந்தக் காலத்தில் சிலம்பு விளையாட்டுக்கு போகும் போது பெத்தும்மாமார்கள் தங்கள் கழுத்துக்களில் இருக்கும் தங்க அட்டியலை சிலம்பு வீரர்களுக்கு அணிவித்து அனுப்புவது உண்டு. சிலர் கழுத்தில் கருப்பு பட்டை கட்டுவார்கள்.அதிலே தங்க மணிகள் தொங்கும்.

சர்க்கஸ் வீரர்கள் அணியும் ஆடைகளை சிலம்பு வீரர்களும் அணிந்து வருவார்கள், காலை கவ்வி பிடித்திருக்கும் பனியன் துணி டைட் பேண்டுகள் போட்டு அதன் மேலே இடுப்பு புஷ்டங்களைச் சுற்றி ஜட்டி போன்ற ஒரு உள்ஆடையை வெளி ஆடையாக அணிந்திருப்பார்கள். அதில் சிலர் ஜரிகை வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்,

ஆரம்பத்தில் குருவி சின்னத்தில் நின்று நகர மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர் 1986 ல் நகர் மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.
   மணியாச்சி காஜாவின் மேலப்பாளையம் பாணி பேச்சு மேலப்பாளையம் மேடைகளில் மிகப் பிரபலம். ஒரு முறை மூன்று மணி நேரம் மேடையில் பேசி பிரமிக்க வைத்தார்.
மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்களான சிராஜுல்மில்லத் அப்துல் சமது, ஷம்சீரே மில்லத் அப்துல் லத்தீப் முதலான தலைவர்களுடன் அன்பை பெற்ற இவர் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களால் மேலப்பாளையம் மாநாட்டில் பாராட்டப் பட்டவர்.

மணியாச்சி காஜாவின் காலத்திலேயே அவருடைய கம்பெனி போல ஆர்.எம்.ஏ.அப்துல் சமத்.,  சித்தர் நாகூர், வளையல் பக்கீர்.,பச்சன்னா கிண்டி இப்றாஹீம், மேத்தமார்பாளையம் மஸ்தான் சிலம்ப கம்பெனிகளும் அந்தந்த பகுதிகளில் மிகப் பிரபலமானவை. 

அவர்கள் ஒவொருவரைப் பற்றியும் பின் வரும் காலங்களில் பார்க்கலாம்.
இக்கலையை பாதுகாக்க  ஏதாவது ஒரு நாளில் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

இல்லை என்றால் மேலப்பாளையத்தில் இந்த மாதிரி ஒரு “வள்ளாட்டு இருந்திச்சுன்னு” கட்டுரையில் படிக்கும் நிலைக்கு எதிர் காலம் இருக்கும்.

கருத்துகள் இல்லை: