சனி, 21 ஏப்ரல், 2012

லெப்பார் மாமா (லெப் பைக் காதர் மாமா)


கூட்டுக்குடும்பம்: அந்த மகிழ்ச்சியும் அதன் கலகலப்பும் உவமை சொல்ல முடியாத தனி ரகம்.எங்க வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய வாப்பா மற்றும்அவர்களின் தம்பிமார்கள்,அதாவது என் சின்ன வாப்பா மார்கள்,மாமிகள், என் தாயார், எனது தங்கைகள்.மற்றும் தம்பி,உள்ளிட்டபேரப்பிள்ளைகள்கூட்டம் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தோம்.எங்கள் குடும்பத்தில் ஆண் மக்கள் மூவர் பெண் மக்கள் மூவர் என எனது பாட்டனாருக்கு பிள்ளைகள் இருந்தார்கள்.
அவர்களோடு என் பாட்டனார் இறந்த பின்னர் எனது பாட்டி தம் கண்மணிகள் என தம் மக்களையும்,அவர்கள் பெற்று எடுத்த பேரன் பேத்திகளையும் பாசமும் பிரியமும் கொண்டு அரவணைத்துக் கொண்டாள்.
.மேலப்பாளையம் முஸ்லிம் குடும்பங்களில் பாட்டியை பெத்தும்மா என்றும் பாட்டன்னாரை பெத்தாப்பா என்றும் அழைப்பார்கள்.எங்கள் குடும்பத்தில் மூன்று பாட்டனார்கள் இருந்து அவர்கள் அனைவரும் இறந்து.அவர்களின் மனைவிமார்களில் இருவர் இறந்து எனது பாட்டி மட்டும் இருந்ததனால் எங்கள் பெத்தும்மாவை குடும்பத்தினர் மற்றும் தெருமக்கள் யாவரும் அப்பாம்மா என்றே அழைப்பார்கள்,
. .எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே எங்களுடனே உண்டு.,உறங்கி.,வளர்ந்து, வாழ்ந்தும் என் வாப்பா மற்றும் சின்ன வாப்பாக்களுக்கு ஒரு சகோதரன் போலவே இருந்தும் வந்தார் ஒருவர்.
நண்பனாய் மந்திரியாய் .பச்சபுள்ளை மனசுடன் வாழும் காலம் முழுதும் இருந்த அவர் பெயர்லெப்பைக்காதர் முஹம்மதுலெப்பை என்பதாகும்.காலப்போக்கில் லெப்பை காதர் என்கிற பெயர் லெப்பார் என்று ஆகி விட்டது. அவரை லெப்பார் மாமான்னு தான் நாங்கள் எல்லோரும் அழைப்போம்.
சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்து எங்க அப்பாம்மவே அவருக்கு தாயும் தந்தையும் என்று ஆனவர். பெரு நாட்களுக்கு எங்களுக்கு சட்டை வேஷ்ட்டி துணிமணிகள்  எடுக்கும் போது அவருக்கும் சேர்த்தே அனைத்தும் எடுத்து வருவார்கள்,
எங்கள் குடும்பமும் லெப்பார் மாமாவின் குடும்பமும் நெருக்கமானதுதான்.என் தாய் வழியில் மிகவும் நெருக்கம் மிகுந்த உறவுக்காரர்.
எங்கள் மீது ஒரு தந்தையைப் போல் பாசம் மிகக் கொண்டவராக இருந்தார். 
எனக்கும் என்னுடைய சகோதர சகோதரிகளுக்கும் ஏதாவது காச்சல் மண்டையிடி என்றால் அழுதே விடுவார். எங்களை டாக்டர்களிடம் சுமந்தே கொண்டு போவார்.
விடிய விடிய கண்விழித்து பார்த்துக்கொள்ளும் எங்க பெத்தும்மா மருந்து மாத்திரை கொடுப்பா.
இவரோ .அடிக்கடி கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்துக்கொள்ளுவார்."அப்பாம்மா, சூடு இல்லம்மா ஜுரம் போயிருச்சு ", அப்பிடீன்னு அவ முகத்தப் பார்த்து சொல்லுவார்.
அப்பவெல்லாம் திருநெல்வேலி கீழ ரத வீதியில் ஆஸ்பத்திரி நடத்திக்கொண்டிருந்த டாக்டர் ஏ.வி.முகைதீன் மாமாக் கிட்ட கூட்டிப் போவார்கள்.சில வேளைகளில் அவரின் பேட்டை ரோட்டு வீட்டுக்கும் அப்பாம்மா தூக்கிட்டுப் போய் விடுவாள்.
எங்களுக்கு டாக்டர்கள் ஏதாவது ஊசி போட்டாகனும் என்றால் "எதுக்கு ஊசி...வேண்டாமே" என்று முடிந்த மட்டும் லெப்பார் மாமா தடுத்துப் பார்ப்பார்.
எப்படியும் ஊசி போட்டு தான் ஆகவேண்டும் என்கிற நிலை வரும்போது நாங்கள் பல்லை கடிச்சிக்கிட்டு அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தாலும் எங்கள் பிட்டியில் ஊசியை சொருகும் போது அவர் சப்தம் போட்டு அழுதுவிடுவார்.முகைதீன் டாக்டர் மாமா இந்தக் காட்சியைப் பார்த்து சிரிப்பார்.
.மாலை இருட்டிவிட்டால் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் இருட்டை தாண்டி பஜார் போய்ஏதாவது ஒரு சாமான் வாங்கிட்டு வா என்றால் அவர்கிட்ட அது நடக்கவே நடக்காது. இருட்டில் போய் வர அவருக்கு அம்புட்டு தைரியம்.
"உங்களுக்கு இந்தப் பொருள் தானே வேண்டும்,நாளைக்கு காலைல முதல் வேலையா வாங்கித்தாறேன் இப்போ எனக்கு வேற வேலை இருக்கு"ன்னு சொல்லி இரவு இஷா தொழுகை முடிந்ததும்,சின்ன வயசுக்காரர்கள் சாப்பிட உட்காரும்போது அவரும் சேர்ந்துஒண்ணா உக்காந்து சாப்பிட்டுட்டு ஒரு எட்டரை மணி அளவில் வேறு வேலை பார்க்கப் போய் விடுவார். அது என்ன வேறு வேலை? தூங்கும் வேலை தான்."காலையில்வெள்ளன முழிக்ககனும் பாரு.அதுக்குத் தாம்லே தூங்கப் போறேன்'
அவரின் முதல் வேலை தொழுகையில் தான் துவங்கும்..
அதி காலை இருட்டில்.தனியா எப்படி பள்ளி வாசலுக்குப் போவது?. சுற்றிலும் இருட்டு.அதுல நாய்கள் வேறு அங்கும்,இங்கும் அலையிது.யாராவது வாராங்களான்னு பாப்பம்ன்னு விளக்கை போட்டுவிட்டு, வீட்டு வாசலில் காத்திருப்பார்.
ஸுபுஹ் தொழுகை ஜமாத்துக்கு போகும் யாராவது ஒருவரோடு எப்படியும் சேர்ந்துக்கொள்ளுவார். காக்கா...சாச்சா.....மாமான்னு... யாரையாவது கூப்பிட்டு அவங்களோடு போனால். சீ,...இவன் பயந்தாங் கொள்ளின்னு அவங்க நினைச்சுடக் கூடாதுன்னு முன் ஜாக்கிரதையாக ஒரு அம்பது அடி பின்னால் தான் நடப்பார். அவரைப்பார்த்து "பயந்தீன்னு" யாரும் சொல்லிடக் கூடாதேங்க்றது தான் அவரது உச்ச கட்ட ஆசையாக இருந்தது.
தினசரி என்ன வேலை எப்படி போனாலும் அப்பாம்மாவுக்கு வெற்றிலை,பாக்கு,அங்குவிலாஸ் புகையிலை வாங்கிவருவது அவரது முக்கிய கடமைகளில் ஒன்றாகவே வைத்திருந்தார். “லெப்பாரு, கைல என்ன வச்சிருக்கே?”ன்னு யார்  கேட்டாலும் மூச் விட மாட்டார்.அதை காட்டாமல் .அப்படி ஒரு பந்தோபஸ்தாக வாங்கி வருவார். நாங்க அவர் கிட்ட “ஏன் மாமா. அவங்க என்ன உங்க கையிலே உள்ளதை பிடுங்கவா போறாங்க? ஏன் காட்ட மாட்ட்றீங்க?”
“உனக்கென்ன தெரியும்ல? .நல்ல வெத்திலையா இருந்தால் அத எங்கிட்ட இருந்து வாங்கிட்டு அப்பாம்மாவுக்கு நீ வேற வெத்தில வாங்கிக் கொடும்பாங்க அது எனக்கு வேணுமா?நான் நாலு கடைக்குப் போய் உம்மாவுக்கு நல்ல வெத்திலை வாங்கித் தந்தா அது ரொம்ப சந்தோசமா சாப்பிடும்” என்பார்.
,வெற்றிலை பாக்கு இரண்டையும் ஒரு சின்ன உரலில் போட்டு இடிச்சுத் தான் வாப்பும்மா  மெல்லுவாள். “லெப்பாரு, நீ எந்தக் கடையிலே இந்த வெத்திலை பாக்க வாங்கினே? ரொம்ப நல்ல வெத்திலை... என்னா ருசி”ன்னு அப்பாம்மா சொல்லுவதை கேட்டால் தான் அவர் முகத்தில் திருப்தி ஏற்படும்.அப்பிடி ஒரு பிரகாசம் வரும். அந்த வார்த்தை இன்னும் வரல்லியேன்னு காத்திருப்பார். கண்டிப்பா அப்பாம்மா சொல்லிருவாள்.
எதோ ஒரு நினைப்பிலே அதச் சொல்ல மறந்திட்டா அந்த ராவு அவர் தூங்கவே மாட்டார். மறுநாள் வெத்திலை கடை காரனிடம் "நீ தந்தது நல்ல வெற்றிலை தானா?"ன்னு நியாயம் கேட்ட பிறகு தான் அவருக்கு மற்றதெல்லாம்.
வெத்திலை இடிக்கும்போது பக்கத்தில் அவர் இருந்தால் “அப்பாம்மா எனக்கும் வெத்துலை தாயே”ண்ணு சொல்லி அந்த சீதேவியிடம் ஒரு வாய் வெற்றிலை வாங்கி தின்னுட்டு தான் மற்ற வேலை பார்ப்பார்.
மத்த யார் கேட்டாலும் வெற்றிலை பாக்கு கொடுக்கும் போது, “ரொம்ப திங்காதிய போதும்” என்பாள். லெப்பார் மாமா கேட்டால் தாராளமாக கொடுப்பாள். காரணம், ஆத்தூர் அசல் வெற்றிலை பாக்கும், சுவையான அங்கு விலாஸ் போயிலையும் தட்டுப்பாடான காலத்திலும் எங்கயாவது ஓடி யாடி மாமா வாங்கிவந்து விடுவாரே.அந்த நன்றிக்காகத் தான் என்பாள்.
தினசரி வீட்டுக்குத் தேவையான உணவுச் சாமான்களை லெப்பார் மாமா தான் கடைகளுக்குப் போய் கை கடுக்க வாங்கி, சுமந்து கொண்டு வருவார்.
உலகச் சுற்றுப் பயணம் போனாலும் நடந்தே தான் செல்லுவது என்கிற வைராக்கிய  லட்சியத்தை மனம், மெய் ,மொழிகளால் கடை பிடித்தவர் அவர்.
 “சைக்கிளில் சீக்கிரம் போயிட்டு வா”ன்னு என் வாப்பா மாதிரி ஆட்கள் சொன்னால்,அவர் அவ்வளவு தான்.
 “என்ன செய்ய? இவர்கிட்ட இப்பிடி இன்னைக்கி மாட்டிக்கிட்டேனே.நடந்து போவது எவ்வளவு வசதியாயிருக்கும். அப்பிடி அவர் சொல்லை கேட்கல்லைன்னு தெரிஞ்சால் கோச்சுக்குவறே”ன்னு நினைச்சுகிட்டே எங்க அப்பாம்மாகிட்டே யோசனை கேட்பார்.
முதலாவது அவருக்கு சைக்கிள் பெடல் மீது காலை வச்சு ஏறத் தெரியாது.யார் வீட்டு படிக்கட்டுலயாவது போய்,ஏறி நின்று லாவகமா சீட் மேல் ஏறி உட்கார்ந்துக் கொள்ளுவார்.ஒரு நூறு அடி தூரத்துக்கு, யாரும் இல்லையே என்று தெரிந்து தான் சைக்கிள் பெடலை மிதிப்பார்.
பெரிய சைக்கிளை நினச்சும் பார்க்க மாட்டார்.எங்க வாப்பாவோ,சின்னாப்பவோ.சின்ன வயசில் ஒட்டிய 18 இஞ்ச் ஹெர்குலிஸ் சைக்கிள் தான் எப்பவாவது தொட்டுப் பார்ப்பார்.
.”பெரியவர் என்னை கடைக்கு சைக்கிள்ள போச்சொல்லிட்டார். எனக்கு சைக்கிள் ஓட்ட ஒரு மாதிரியா இருக்கு...கை கால்லாம் நடுங்குது....இப்பவெல்லாம் சைக்கிள் அங்குமிங்கும் லம்புது. ரோட்டுல போற, வாரவர்கள் எம்மேல் முட்ட வர்ற மாதிரி இருக்கு.....அதுக்குத்தான் இந்த சைக்கிள் சனியனை தொட எனக்கு பயமா இருக்கும்மா”ன்னுவார்.சில வேளை அழுவது போல் ஆகி விடுவார்.பாக்கிறவர்களுக்கு, குறிப்பா சின்ன வயசுக்காரங்களுக்கு பாவமா இருக்கும்...."அச்ச்ச்சோ:ன்னு யாராவது சொல்ல மாட்டார்களான்னு இங்கும் அங்கும் பார்த்துக் கொள்ளுவார். 
"பெரியவன், சொன்னால் சொன்னது தான். உனக்கு சைக்கிளில் ஏற பயமா இருந்தால் சைக்கிளை தள்ளிக்கிட்டே போயி மார்க்கட்டுல சாமானெல்லாம் வாங்கி.... அதுல கொழுவி வச்சிக் கொண்டு வந்திடேன். 
"அவன் சொன்னபடி.நீ சைக்கிள்ள போன மாதிரியும்இருக்கும், உன் ஆசைப்படி நடந்து வந்த மாதிரியும் இருக்கும்லப்பா'ன்னு அவ ஒரு தீர்ப்பு சொல்லுவாள். 
ரொம்ப நேர யோசனைக்குப் பிறகு லெப்பார் மாமா எவ்வளவு மெதுவா சைக்கிளை தள்ளிக்கொண்டு போக முடியுமோ... அம்புட்டு வேகத்துல பஜார் போவார். எப்படியும் ஒரு அம்பது இடங்களிலாவது நின்னு.நின்னு பிறகு தான் வீடு வந்து சேருவார்.ஒருக் காலமும் மீன்மார்கட்டுக்கோ கிடா அறுக்கும் இடத்துக்கோ கூட்டிப் போக மாட்டார்.கேட்டால், "மீனையும்.அதையும்.இதையும் அறுப்பத பார்த்தா... இவனுவ கறி,மீன் திங்க மாட்டாணுவ பாரு அதுக்கு தாம்"பார்.
அவர் சாமான் வாங்க நடந்து போனா, பதினைந்து நிமிஷம். .சைக்கிள்ல போனா ஒரு மணி நேரம் ஆகும்.

எங்கள கூட்டிட்டு போய் பள்ளிக் கூடத்துல விடுவார். ,எப்பவாவது லீவு எடுத்தால் வாத்தியார்கிட்ட பவ்வியமா சொல்லி அடிகிடி விழாம பாதுகாக்கும் பணியையும் அவர் செய்வார். வாத்தியார் அடிக்கலைன்னு தெரிஞ்ச பொறவு தான் அங்கிருந்து போவார்.பொழுகிற வேளையில் பள்ளி முடிந்து நான் வீட்டுக்கு வந்ததும் ."எலே அப்பா,அந்த சார்வாள் உன்ன அடிக்கல்லியே?"
"இல்ல மாமா."
கொஞ்ச தூரம் போவார்..திரும்ப வருவார்.'எலே,முட்டு, கிட்டு போடச் சொல்லலியே?"
"இல்ல, .இல்ல."
என் முகத்தை உற்று நோக்கி "இந்தப் பயல்,பொய் சொல்லலியே" ன்னு பார்த்துட்டு தான் போவார்.அம்புட்டு பாசம்.அவருக்கு. 


அந்தக் காலத்தில் வருஷத்தில் இரண்டு படம் அதாவது சினிமா பார்த்து வருவது எங்க வயசுக் காரர்களுக்கு மிக மிகக் கஷ்ட்டமான விஷயமாகும்.
சினிமா கொட்டகைக்குப் போய் படம் பார்க்க எங்கள் வீட்டில் விடவே மாட்டார்கள்.சம்மதிக்கவும் மாட்டார்கள்.
ஏதாவது பெருநாள் கந்தூரி வந்தால் ஒரு மாதம் முன்பாகவே வீட்டில் அப்பாம்மாவை நச்சரித்துக் கொண்டே இருப்போம். 
பெருநாளைக்கு நம்ம ஊர் கண்ணகி டாக்கீஸில் எங்க வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்.படம் போடுரானாம்...,விடுவியா?
 “சரி பாப்போம்”ன்னு ஒரு தேர்தல் கால வாக்குறுதியை தருவாள்...முதல் பெருநாள் அன்னைக்கி படம் பார்க்க அனுமதி கிடைக்காது.ரண்டாவது அல்லது மூணாவது நாள் தான் கிடைக்கும்.
திருநெல்வேலி டவுணில் பத்து வருஷத்திற்கு முன்னர் ஓடி ஒழிந்த எம்.ஜி.ஆர்.,சிவாஜி.படங்கள் தான் மேலப்பாளையம் கண்ணகி டாக்கீசுக்கு வரும்.படம் ஒரே ஒரு புரஜெக்டரில் போடுவார்கள்.அதனால்.மூன்று இடை வேளைகள் வரும். தப்பித் தவறி மின்சாரம் போய்விட்டால் வீட்டுக்குத் திரும்ப வேண்டியது தான்.இப்படிதான், நாங்கள் வருஷத்தில் ஒன்று அல்லது ரன்ன்டு சினிமா பார்க்க முடியும்.
ஒரு நாளில் எங்க அப்பாம்மாவை ரொம்ப நச்சரித்து நானும் எனது வயது வுடையவர்களும் சினிமா பார்க்க வீட்டில் அனுமதி பெற்றோம். 
சரி பிள்ளைகளுக்கு துணையா யாரை அனுப்புவது?ன்னு யோசித்துவிட்டு லெப்பார் மாமாவுடன் எங்களை சினிமாவுக்கு அனுப்புவது என்று முடிவானது.
முதல் காட்சிக்குப் போக,மாலை நாலு மணிக்கெல்லாம் லெப்பார் மாமாவை தயார் செய்தோம்.முன்னேற்பாடாக அப்பாம்மா எங்களுக்குத தியேட்டரில் பசியெடுத்தால் சாப்பிட பிஸ்கோத்துக்கள்.காளி மார்க் கலர் பானங்கள்.முறுக்கு,கடலை,மிட்டாய்,ஒரு தர்மாஸ் பிளாஸ்க்கில் கருப்பட்டி சாயா என்று சகல தின் பண்டங்களையும் ஒரு கூடையில் போட்டு லெப்பார் மாமாவுடன் அனுப்பிவைத்தார்கள்.
படம் பார்க்கப் போகும் போதே லெப்பார் மாமாவிடம் கண்ணகி டாக்கீஸில் என்ன படம் மாமா ஓடுதுன்னு கேட்டோம். "என்னவோ சிவாஜி படம் தானாம்லே...கலர் படம்ன்னு மட்டும் யாரும் நினைச்சுகிடாதீங்க...கருப்பு வெள்ளைப்படம் தானாம்.....என்ன செய்ய சின்னாமது அப்துல் காதருக்கு இது தெரிய வேண்டாமா? கலர் படம் போடனுன்னு. இவர் தானே மேனேஜரா இருக்காரு.ஊர்ல கந்தூரி பெருநாள் வந்தா நல்ல படம் ஓட ஏற்பாடு பண்ண வேணாமா?. இப்படி எங்களுக்கு அந்த நாளிலே தெரியாத சின்னாமது அப்துல் காதரைப் பற்றி லெப்பார் மாமா சொல்லிக் கொண்டே எங்களை சினிமாக் கொட்டகைக்குள் அழைத்துச் சென்றார்.
பெஞ்ச்டிக்கெட் எடுத்து,மத்தியில் லெப்பார் மாமா இருக்க நாங்கள் அவருக்கு இரு பக்கமும் அமர்ந்து கொண்டோம். எப்போதும் லெப்பார் மாமா மேலப்பாளையம் ஊருக்குள் மேல் துண்டு மட்டுமே அணிந்து வருவார், கழுத்து வரை பனியன் போட்டிருப்பார். அன்றும் அவ்வாறே வந்திருந்தார்.
டைட்டில் ஓடத்துவங்கியது. படத்தின் பெயர் "லெட்சுமி கல்யாணம்".
சிவாஜி கணேசன் கதாநாயகன்.. சிவாஜி பெயர் போடும்போது தியேட்டரில் ஒரே விசில் சப்தம். "எதுக்கு மாமா விசில் அடிக்கிறாங்க?" படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே லெப்பார் மாமாவிடம் கேட்டேன்.
 “நீ ஏன்டா இதையெல்லாம் கேக்கிறே? அதெல்லாம் ஒரு கிருக்குடா. எம்.ஜி.ஆர்.படம் பாக்க வந்தா விசில் சத்தம் 'சொய்ய' கிளிச்சிரும். பேசாமே படத்தை பாருப்பா”ன்னு சொல்லிட்டு படம் பாக்க ஆரம்பிச்சார்..
படத்தில் நடிச்சவர்கள் பெயராகப் போடும்போது நம்பியார் பெயரைப் பார்த்ததும் :இந்தக் கொள்ளைலோவான், இந்தப் படத்திலும் வருவானோ.?வெளங்கவிட மாட்டானே” என்று நம்பியார் பெயரைப் பார்த்ததும் எங்களிடம் நம்பியாரைப் பற்றிச் சொல்லி வெறுப்பேத்தினார். அதில் ஒரு ஆத்திரம் தெரிந்தது.
படம் ஆரம்பம் ஆனதில் இருந்து சோக காட்சிகள் தான் வர ஆரம்பித்தது. பக்கத்தில் யாரோ அழுது. விசும்புவது போல் காதில் லேசாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால்...வேற யாரும் அழவில்லை....லெப்பார் மாமா தான் அந்த மாதிரி முக பாவனையில் இருந்தார்.
தம் தோளில் போட்டிருந்த துண்டினால் வாயைப் பொத்திக்கொண்டு லெப்பார் மாமா ....அவர் 
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதைத் திரைப் படத்தின் வெளிச்சத்தில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 
எனக்கும், என்னோடு வந்தவர்களுக்கும் அவரை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை.சோகம் அப்பிக் கொண்டது.
வேதனையின் உச்சத்தில் இடைவேளை வந்தது. லெப்பார் மாமா யாருடனும்.எதுவும்  பேசவில்லை.அவர் முகம் சோகத்தில் கலங்கிப் போய்இருந்தது.அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயம் கலந்த சோகம் தான் அவரிடம் காணப்பட்டது.
படம் மீண்டும் போட்டார்கள், அவரின் அழுகை இன்னும் கொஞ்சம் சப்தமாக இருந்தது.பக்கத்தில் இருந்த எங்களுக்கும் அழுகை வந்து கொண்டே இருந்தது.அனைவர் கண்களிலும் கண்ணீர் தான். கடைசிக் கட்டத்தில் தான் சோகம் முடிந்தது வணக்கம் போடும் வரை வரை ஒப்பாரி மயம் தான்.
படம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டோம்.”வாங்கலே போலாம்” என்ற வார்த்தைகளைத் தவிர லெப்பார் மாமா வேறு எதுவும் பேசவில்லை.
எங்க வீட்டு வாசலில், சினிமாவுக்கு போன பிள்ளைகளைக் காணவில்லையே என்று எங்கள் அப்பம்மா எங்களை எதிர் பார்த்துக் காத்திருந்தாள்


“என்னலே அப்பா படம் பார்த்தியழா?”
“நல்லா இருந்துச்சா?”ன்னு அப்பாம்மா கேட்டாள்.எங்க கிட்டே பதிலே வரலை.
வீடு வந்த பின்னும் அந்த சோகம் எங்களை விட்டுப் போக வில்லை.
“என்னலே, நான் கேட்கேன் ஒத்தணும்ஒன்னும் சொல்லாமே, மண்ணு மாறி நிக்கானுவோ "என்னலே நடந்துச்சு?.....அப்பா நீ சொல்லே.”ன்னு எங்கிட்ட கேட்டா.
“உங்க யாரையும் லெப்பார் திட்டவாலே செய்தான்?”
"இல்லம்மா"....
“நான் பண்டம், பலகாரம் கொடுத்து விட்டேனே அதெல்லாம் தந்தானாலே?”
 “என்னலே ஒருத்தனும் ஒன்னும் சொல்ல மாட்டுக்கானுவோ ”ன்னு அப்பாம்மா கேட்டாள்.
ஆகா அப்பாம்ம்மா இடைவேளைல சாப்பிடத் தந்த பண்டத்தை சினிமா சோகத்துல யாருக்கும் கொடுக்கல்லியேன்னு லெப் பார் மாமாவுக்கு அப்பம் தான் நினைப்புக்கு வந்தது. “கொடுக்கலை” என்று ஒரே வார்த்தையில் அவர் பதில் சொன்னார்
."எதுக்குல கொடுக்காம புள்ளைகள பட்டினி போட்டே?"
யாரும் எதுவும் பேசவில்லை.
அப்பாம்மா படம் பார்க்கப் போன எங்களையும் கூட்டிப்போன லெப்பார் மாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 
லெப்பார் மாமா சோகமே வடிவாக இருந்தார். நான்தான் பேச ஆரம்பித்தேன்
.”எம்மா இனிமேல் இவர் கூட நீ சினிமாக்கு, எங்களை அனுப்பதேம்மா”ன்னு நான் சொல்லி முடிக்கும் முன்னே “
“வானனத்துருவான் உங்கள அடிச்சசானாலே?” என்று என்னிடம் கேட்டார். “இல்லம்ம்மா”.
“ஒங்க பண்டத்தைஎல்லாம் இவன் தின்னுட்டானாலே”?
“இல்லம்மா”
“அப்பம் என்ன தான் பன்னுனான்?”.......
“எம்மா, படம் போடும் போதே இவர் அழ ஆரம்பிச்சார்ம்மா.”
“எதுக்குல?”
“அதுல நம்பியார் வந்தான்ல.... அதுல இருந்து”..........
“அவன் வந்தா இவனுக்கென்னலே......?”
"படத்துல உள்ளவங்கள் அழுதானுவோல்லியா,அதப பார்த்து, இவர் அழுதார்மா"
“அவர் அழுவுநதைப் பார்த்ததும், எங்க எல்லாருக்கும் அழுகை வந்திருச்சும்மா.எல்லாரும் அழு திட்டோம்”
.அவ்வளவு தான். அப்பாம்மாவுக்கு வந்ததே கோபம்..
லெப்பார் மாமா முதுகில் ரண்டு கையாலும், ஒரு போடு போட்டாள்.
 “நல்ல நாளும் பொழுதுமா இப்பிடி பிள்ளைகளோட சினிமாக் கொட்டாயிலே போய் அழுதுட்டு வந்திருக்கியே நீ ஒரு மனுசனாலே ?”ன்னு அவரிடம் கேட்டாள்.....
லெப்பார் மாமா அசஞ்சிக் கொடுக்கல..
கொஞ்ச நேரம் கழித்து “எலே... லெப்பாரு சாப்பிடவரல்லியாலே? வாலே”ன்னு அப்பாம்மா கூப்பிட, சிரித்த முகத்தோடு அவர் போனார்,
இப்போ எங்க அப்பாம்மாவும் இல்லை.லெப்பார் மாமாவும் இல்லை. இருவரும் மறைந்துவிட்டார்கள்.....
எனக்கு ஒரு நம்பிக்கை.. சொர்க்கத்தில் என் அப்பாம்மா இருப்பாள்.கூடவே லெப்பார் மாமாவும் இருப்பார்.


2 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

லெப்பார் மாமா பேரு கேள்விபட்டிருக்கேன்,அப்பாமாகிட்ட பேசிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியமே.இருவர் பற்றிய பகிர்வும் மனதை தொட்டது.நம்ம ஊர் சொல்வாடையில் மிக அருமையான பகிர்வு.

LKS.Meeran Mohideen சொன்னது…

நான் இன்றும் மிகவும் நேசிக்கும் இருவரைப்பற்றி தாங்கள் சொன்னது என்னை மன நெகிழ்வடையச்செய்துவிட்டது.அந்த இருவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.மிக்க நன்றி