வியாழன், 11 ஜூலை, 2013

கீழக்கரை.சீனா தானா. செய்யது அப்துல் காதர் அவர்களின் பேருள்ளம்.


      
இம்மாத முதல்வாரத்தில், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்துக்கு, கீழக்கரை சீனா தானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்கள், தமது குடும்பத்தாருடன் சீசனை ஒட்டி வருகை தந்திருந்தார்கள்..

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜும்மா நாள்.அதற்காக செங்கோட்டை 'தஞ்சாவூர் முஸ்லிம் ஜமாஅத்' பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த அவர்களை ,உரையாற்ற ஜமாஅத் நிர்வாகிகள் அழைத்தார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லாக்  கடன்வழங்கும் பைத்துல்மால்கள்  அந்தப்பள்ளி வாசலில் தாம், துவக்கி வைத்ததையும், அவை  தற்போது நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில், பரவிப் பலன் தருவதையும்,  தமது உரையின்போது சீனா தானா அவர்கள் குறிப்பிட்டார்கள்...

தொழுகைக்குப் பின்னர் அவர்களின் நண்பர் மறைந்த 'மெடிக்கல்' அஷ்ரப் அவர்களின் மகன், அவரது வீட்டில் மதிய உணவு உண்ண அழைத்திருந்தார்.

தமது குடும்பத்தாருடன்,நண்பர்களுடன் உணவருந்திவிட்டு வெளியே காரில் ஏறப்போகும் வேளையில்,அந்த வீட்டிலிருந்து, கொஞ்ச தூரத்தில் தெரிந்த குடிசையைப் பார்த்தார்கள்.

அது ஒரு கொல்லுப்பட்டறை. அதனுள் தன்னந் தனியாக முதுமையுடன் ஒருவர் வியர்க்க வியர்க்க வேலை செய்வதையும், இரும்பை உருக்கி தட்டி,நிமிர்த்தி பொருட்கள் செய்வதையும் பாத்துக்கொண்டே அந்தக் குடிசையினுள் நுழைந்தார்கள்.

உள்ளே அந்தத் தகரக் கொட்டகைக் குடிலில், நிமிர்ந்தால் தலைதட்டுகிற அளவில்  கூரை இருந்தது. அங்கே அந்த முதியவரைத் தவிர தீ மூட்டும்”துருத்தியை” சுற்றுவதற்குக் கூட, வேறு துணை யாரும் இல்லை.

, அந்த உழைப்பாளியின்  முகத்தில் மட்டுமே வயோதிகம் தெரிந்தது. உடலோ, உழைத்து உரமேறிய, வைரக்கட்டையாகவும் ,......வார்த்தைகள் நெஞ்சில் இளமை கொலுவிருக்கும் வெளிப்பாடகவும்  இருந்தது.

வாப்பாவோடு அவர்களது மகளார் சுமையாவும் சென்றார்கள்.

"கருமமே கண்ணாக இருந்த" அந்த உழைப்பாளி, உள்ளே நுழைந்த ,அந்த  இருவரை ஒன்றும் புரியாமல், மகிழ்ச்சி பொங்க பார்த்தார்.

அவர் கண்களில்தான் அத்தனை ஆனந்தம்.அவ்வளவு வரவேற்பு.

 “வாங்க, வாங்க சின்னையா” என்று கைலி,தொப்பி கோலத்தில் வந்திருந்த வாப்பாவையும்,முக்காடு அணிந்து வந்த சகோதரி சுமையாவையும் வரவேற்றார்.

“யார் இவுக? என்ன வேணும்?” உடன் போன என்னிடம் கேட்டார்?

“அப்பு,............. அவங்க கீழக்கரை.உங்க பட்டறைய, உங்களப் பார்த்ததும் உள்ளே வந்துட்டாங்க”என்றேன். எங்க பக்கமெல்லாம்,தங்க ஆசாரியோ,கொல்லாசாரியோ  அப்பு,அல்லது சின்னையானுதான் கூப்பிடுவோம். அதுல உச்சி குளிர்ந்து போவாங்க...

தமது குடிசைக்கு வந்த அந்த செல்வந்தர்கள்  இருவரையும் அவர் வேறு எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

வாப்பாவே பேச்சை துவக்கினார்கள்.

"சாப்பிடல்லியா?"

"இல்ல சின்னையா.......இனிதான் சாப்பிடனும்"

“உங்களுக்கு துணையா வேறு வேலைக்காரங்க யாரும் இல்லையா?”

“இல்லியே”

“உங்க பிள்ளைகள்?”

“எனக்கு ஆம்பிளை பிள்ளை இல்ல......பொம்பிள்ள தான் மூணு  பேர் இருக்காக...பேரப்பிள்ளைகள கூப்பிட மனசு வரமாட்டேங்குது...”

“இந்த வயசில இப்படி கஷ்ட்டப் படுரீங்களே துணைக்கு,வேலைக்கு  யாரையாவது வச்சிக்கக் கூடாதா?”

“யாரு வேலைக்கு வாராக?..........இப்பவெல்லாம் எல்லாப் பையங்களும்.படிக்கப்ப் போயிடுறாங்க...மத்ததுங்க கொத்தன்,சித்தாள்  வேலைக்கும், போயிடுதுக...”

“உமக்கு இந்தத் தொழிலில் தினமும் எவ்வளவு கிடைக்கும்?”

“அம்பதும், நூறும் கிடைக்கும்,.......பல  நேரம் ஒன்னுமில்லாமலும் இருக்கும். காலம் போயிடுச்சு..... என்காலத்துக்குப் பிறகு இந்த கொல்லுப் பட்டறையை யார் நடத்தப் போறாங்க? .............என்னவோ ஓடுதுங்க.....என்னையும் ஒரு மனுஷனா நினைச்சு உள்ள வந்தீங்களே....ரொம்ப பெரிய மனசு முதலாளி”......என்று முடித்தார் அந்த தொழிலாளி.

வாப்பாவுடன் பேசும் போது அந்த தொழிலாளி  முகத்தில் அம்ம்புட்டு சந்தோசம்...பின்னர் வாசல் வரை வந்து வாப்பாவை அனுப்பிவைத்தார்.....

“மீரான் ,ஒரு காலத்தில் இப்படி கைத்தொழில் செய்யவே ஆள் இருக்க மாட்டார்களோன்னு வந்துட்டு....அப்படித்தானே? என்றார்கள்....

என்னால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.....

3 கருத்துகள்:

அமீர் கான்,அம்பை. சொன்னது…

ஏழை மக்களோடும்,இல்லாத வர்களோடும்,சமூகத்தின் விளிம்பு நிலை மக்களோடும் நட்பு பாராட்டி அன்புகாட்டுகிற இவர் மாதிரி செல்வந்தர்கள் ஊருக்கு ஒரு பத்து பேர் இருந்தால் ஏழ்மை எதற்கு இருக்கும்.
சீனாதானா அவர்களின் குற்றாலம் தொழில் பயிற்சிக் கூடத்தில் படித்து அவர்களால் நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன்.
என்னை மனிதனாக்க உழைத்த அருமை அண்ணன் எல்.கே.எஸ்.மீரான் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அருமையான மனிதர்.சீனதானாவால் உயர்வு பெற்றவர்கள் அவர்களை மறக்க மாட்டார்கள்.

aarif. சொன்னது…

Nalla karuthu.

MAALIK சொன்னது…

Avar eppothum ippadithaan iruppaar.Thanks LKS.Annan.Innum Niraiya eluthungal.Ennai njaapakam irukkaa .naan2012 set.Maalik.Senathaana waappaa thantha parisu panam 300 innum vaiththirukkiren.Neenga thaan scholarship vaangi thantheerkal.ungalai marakka koodaathu.