வெள்ளி, 18 அக்டோபர், 2013

கனவுகள் காணும் கன்னியர்கள் .....




  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு கல்வியின் பேரால் வாழ்க்கைத்துணை அமைய
    தடைகள், இருப்பதில்லை...ஆனால் மேலப்பாளையத்தில் இது...... தாண்டவ மாடுகிறது....

    எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு பெண் மக்களை,படிக்க வைக்கிறார்கள், பட்டதாரிகளாக,என்ஜினியர்களாக்குகிறார்கள்......ஆனால் அவளது பணி?......பெரும்பாலும் அடுப்படியில் தான்.....

    சில சம்பந்தங்களில் "பொண்ணு வேலைக்கெல்லாம் போகக் கூடாது", என்று கண்டிசன் போட்டே திருமணம் நடக்கிறது....

    அண்மையில் "அரசு வேலை கிடைத்த பெண் வேண்டாம்", என்று ஒரு சம்பந்தமே நின்று போய் விட்டது....

    மாப்பிள்ளைகளோடு வெளிநாடுகளில் பணி செய்ய்கிற வாய்ப்பு மிக,மிக குறைவானவர்களுக்கே கிட்டுகிறது..

    நம்மூர் பெண்மக்கள், வெளி ஊர்களில் குடும்பத்துடன் தங்கி படித்து பட்டதாரிகளாகி.... மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை தேடினால்....அந்த சம்பந்தத்தை அந்நியமாக பார்ப்பதைக் கேட்டு மிக வருத்தப் பட்டேன்...

    தந்தை மறைந்து, தாயின் பாதுகாப்பில் படித்து பட்டம் பெற்ற பெண் மக்களின், கண்ணீரும் கேள்விப்படும் போது மனது படாத பாடு படுகிறது.

    பெண்மக்கள் கல்வியில் முன்னேறினால் தான் வீடும் நாடும் முன்னேறும்.
    வரும் காலம் இன்டர்நெட், எல்லாவற்றையும் இணைக்கும் காலம்.

    சாதாரணமான போன் பில் முதல் வங்கிக்கணக்கு ட்ரான்ஸ்பர் வரை,எல்லாவற்றையும் நெட் மூலமாகவே செய்கிற காலம் வந்துவிட்டது....

    அதற்கு ஆங்கில மற்றும் அடிப்படை அறிவு, எல்லோருக்கும் தரவேண்டும் ,அவை குறிப்பாக பெண் மக்கள் பெற வேண்டும் என்று உழைக்கிற கூட்டத்தில் நானும் இருக்கிறேன்..

    படிக்கிற எதிர் கால சந்ததிகளுக்கு, நல்ல கல்வி அதிகம் தர, தாயும் தந்தையும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தால் மென்மேலும் நல்வழி,காட்டமுடியும் என்பதே என் கருத்து.

    இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்...பெற்றோர்களுக்கு எடுத்து வைக்க வேண்டும்.....

    சமீப காலமாக..... அழகும், நிறமும், கொஞ்சம் குறைவான மணப்பெண்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் தடை படுகிறது.

    கொஞ்சம் நிறம் குறைவான பெண்களைப் பெற்றெடுத்தவர்கள்,தம் மகளுக்கு தகுந்த மாப்பிள்ளை தேடி அலைந்து, படும் பாட்டை......சொன்னால் பரிதாபம் தான்..இதயம் தாங்காது...

    இளைஞர்கள் அந்த பெண்மக்களையும் அவர்களின் உள்ளத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும் ...அடுத்த வீட்டுப் பெண்மக்கள் அவர்கள் தம் மாப்பிள்ளைகளோடு மண முடித்துச் செல்லும் போது...."நாமும் இப்படிப் போகவில்லையே?.......அதற்கு நிறம் ஒரு தடையா ?" என்று வேதனைப் பட மாட்டார்களா?

    அவர்கள் சிவப்பாகப் பிறக்காதது யார் குற்றம்.?...ஒவ்வொருவரும் விரும்பியா கருப்பாகவோ,புது நிறத்திலோ,வெளுப்பாகவோ பிறக்கிறார்கள் ? அது தாய் தந்தை முன்னோர் " ஜீன்ஸ்"தருகிற அமைப்பு.அதுதான் உண்மை...

    அண்மைக்காலமாக மகரைக் கொடுத்து மணம் புரியும் இளைஞர்கள் பெரும்பான்மை ஆகி விட்டார்கள்.

    வரதட்சணை கொடுமையை அனாச்சாரங்களை .... தூரவீசி, எறிந்து விட்டார்கள்...லட்சக் கணக்கில் மங்கைக்கு, மஹர் கொடுத்து மனம் புரியும், தைரியத்தை வாய்ப்பை, இன்றைய இளம் தலைமுறைக்கு அல்லாஹ் தந்துள்ளான்.அல்ஹம்துலில்லாஹ்.....

    இக்கால இளைய தலை முறை, இதையும் செய்வார்கள்,... நிற பேதம் பார்க்காமல், அந்தப் பெண்மக்களுக்கு வாழ்வு கொடுப்பார்கள், என்கிற நம்பிக்கை,என் போன்றவர்களுக்கு அதிகம் இருக்கிறது....)


 

       

 

 

 

 

 

வியாழன், 3 அக்டோபர், 2013

1993ஆம் ஆண்டு.மேலப்பாளையம் க முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபுபக்கர் அவர்கள்'மீரான் நீ பள்ளிக் கூட கமிட்டிக்கு உறுப்பினராக,பாரம் தரோம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் புதிய உறுப்பினராஅதுல கையெழுத்துப்போட்டு தப்பா"என்று என்னிடம் சொல்லி பள்ளியின் கல்விக் கமிட்டி உறுப்பினராக என்னை சேர்த்துக்கொண்டார்.
என் வாப்பவிடம் சேர்மன் இப்படிச்சொல்லுகிறார் நான் கைஎழுத்துப்போடவா?என்று கேட்டேன்.
பள்ளிக்கூடத்தை எங்க வாப்பா1941ல் டி.எஸ்.எம்.ஓஉதுமான் சாகிபோட சேர்ந்து ஆரம்பித்தார்கள்.உனக்கு சேர்மன் காக்கா அழைத்து அங்கீகாரம் தருகிறார்.சரின்னு சொல்லு.ஒன்ன மனசில வச்சுக்கோ,நீ அவர் ஆளா போறே,அவர் நாலும் நாலும் பத்துன்னா நீயும் அதத்தான் சொல்லனும்,தெரியுதா?அப்படீன்ன போ.இல்லன்னா வேண்டாம்.அவர் அதிகாரம் செய்யிற இடத்தில அவருக்கு முழு ஆதரவாளனா இருக்கனும்.மனசில வேற எண்ணம் ஏதும் வரக்கூடாது தெரியுதா?என் தந்தை எனக்கு இதைத்தான் சொல்லி அனுப்பினார்.
தன்னுடைய மகன்களைவிட மேலான அன்பு அவருக்கு என் மேல் இருந்தது.
ஒரு முறை பள்ளி வளர்ச்சி நிதி வசூலிக்க மெட்ராஸ் போன இடத்தில எனக்கு கடுமையான காச்சல் வந்து ரொம்பவும் கஷ்ட்டப்பட்டேன்.
சேர்மன் எம்.எ.எஸ்.அவர்கள் நீண்ட தூரம் நடந்து போய் மருந்து மாத்திரைகளை வாங்கி வந்தார்.வேறு நபரிடம் வாங்கி வரச்சொன்னால் மருந்து வந்துவிடும்.ஆனால் நான் பட்ட பாட்டைப் பார்த்து அவரே சென்று அதை வாங்கி வந்து என்னை படுக்கையில் இருந்து தூக்கி உட்ட்கார வைத்து என் வாயில் மாத்திரைகளைப் போட்டு அவரே ஒவ்வொரு மிடக்காக தண்ணீரைத்தந்தார்.அவர் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு கூட இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா?என்றால் சொல்ல முடியாது.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

குற்றாலம் போன கதை.


ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்கள் வரும் முன்னாலேயே..... என் பிள்ளைகள், எங்கயாவது   போவதுக்கு, ,.    ....இங்க ,அங்கன்னு திட்டம் போடுவார்கள். என்னால் பெரும்பாலும் போகமுடிவதில்லை. ஆனாலும் சில வேலைகளைத் தூர ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களோடு தயாராகி விடுவேன்.

ஆண்டு விடுமுறையில் என் தம்பியும் ஊர் வந்து விட்டால், பிள்ளைகள்... கேக்கவே வேண்டாம்......எப்படியாவது அவனைச் சரிக் கட்டிக் கிடுவார்கள். பிறகு அவன் தலைமையில் பயணம் கிளம்புவோம்.,

எனது உம்மாவும்,சகோதர,சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் டூரில் இருப்பார்கள். சின்ன கார்கள் காணாது. ஏதாவது வேன் இருந்தால் கொஞ்சம் தாராளமாய் இருக்கும்.

அப்படி சென்று வரும் போது மனது மிக லேசாகிவிடும்.

எனக்கு புடிச்சது என்னவோ குத்தாலம்தான்.அந்த மலையும்,அருவியும் நான் எத்தனை முறை பார்த்தாலும்,குளித்தாலும் சலிப்பு தந்ததே இல்லை. என்னவோ அந்த ஊர் மேல அம்புட்டு பிரியம். “பார்க்கப் பார்க்க, ஆனந்தம் எனக்கு எது? ன்னு கேட்டால் ,நான் குத்தால மலைஅழகை, மேகங்களை, அருவிகளைத் தான் சொல்லுவேன்.

“உங்களுக்கு குத்தாலத்த விட்டா வேற ஊருக்கு வழியே தெரியாதா?”......என்று “அந்தப்புரத்திலிருந்து” காட்டமான கேள்விகள் கூட அவ்வப்போது வருவதுண்டு.

திருனவேலி காரங்களுக்கு டூர் போக ரொம்பத் தோதுவான இடங்கள் சுத்திச் சுத்தி  நிறைய இருக்கு.....

அனேகமா....எல்லாவீட்டிலேயும் மூணு தலைமுறைக்குள்ளான கால கட்டத்தில், குத்தாலத்திலும்,மணிமுத்தாறு பாவனாசத்திலும் எடுத்த படங்கள் கண்டிப்பா இருக்கும்.

கொஞ்சம் “விவரம் தெரிஞ்சதுகள்” நம்பிக் கோவில், களக்காடு,செங்கல்தேறி,மாஞ்சோலை,கடனாநதி,மேக்கரை.பாலருவி,கும்பாவுருட்டி அருவி,தென்மலை....என்று .அப்படியாப்பட்ட ஊர்களுக்கு போய்வரும்.

எங்க சுத்தி எங்க போனாலும் காலையில் போயிட்டு, பொழுகிற ஊட்டுக்கு வந்துடலாங்ற வசதி இதுல இருக்கு.

அதென்னவோ ஊர் சுத்துரதில, எல்லாருக்கும் பிரியம்தான் . பல சிரமங்கள் பயணத்தில் இருந்தாலும், மனசு என்னவோ அவைகளை விரும்பி ஏத்துக் கிடத்தான் செய்யுது.

இந்தத் தலைமுறை மக்கள் கொடுத்து வச்சவங்க......

இன்னைக்கி டூர் போக  நினைச்சா, விமானம்,கப்பல், ரயில்,பஸ், வேன்,கார்,பைக் அது இதுன்னு நிறைய வசதி வந்துட்டது. நாங்க சின்னவர்களா இருக்கும் போது நிலைமையே வேறு..

ஊரைத்தாண்டி டவுனுக்கு சினிமா போரதுக்குக் கூட, விடாமல் கட்டுப்பெட்டியாக எங்களை வளர்த்திருந்தார்கள் பள்ளிக்கூட சுற்றுலா போரத்துக்கு ரொம்பவே கனவு கண்டிருந்தோம்.

“தினத்தந்தி” அச்சாவது எப்படி என்று பார்க்க, ஒருக்க “வீராவரம்” ஜங்ஷனுக்கும்,”சிமிண்ட் எப்படி தயாரிக்கிறார்கள்?” என்று   காட்ட தாழையூத்து சிமிண்ட் மில்லுக்கும் பள்ளிக் கூடத்தில் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.அதுலாம் நாலாவது,அஞ்சாவது படிக்கிற காலத்தில் தான்.

அப்புறம் ஆறாவது,ஏழாவது படிக்கும் போது அரசு அதிகாரிகள் உத்தரவுப்படி பள்ளிக்கூடத்தில் ஏதாவது அரசு சினிமா படம் காட்ட கூட்டிப் போவாங்க.....

கண்ணகி டாக்கீஸில் காந்தி டாக்கு மென்ட்ரி படம் பார்க்கப்  போயி   வந்து, ” என்ன படமோ?............என்னத்த எடுத்திருக்கானுவோ?..... எம்.ஜி.ஆர். சிவாஜி வராதது ஒரு படமாலே? ஒரு பாட்டு,ஸ்டண்டு இருக்கால?.... ன்னு அந்தக்காலத்தில் எங்க செட்டுக்கே பயங்கர கோபம் வந்து போனது.  “ “இதெல்லாம் எவம்லே பார்ப்பாம்? . இந்த டிராயிங் சாருக்கு வேற படமாலே கிடைக்கல்லே?” என்று பேசிக்கொள்வோம்.

“கப்பலோட்டிய தமிழனில் சிவாஜிய போட்டு, கொன்னு எடுக்குராணுவ” சிவாஜியால அடி தாங்க முடியல்லே......எனக்கு அழுகையா வந்துட்டது”ன்னு எங்க செட்டுல, ஜின்னா சொல்ல.......

“இதுக்கு தாம்லே வாத்தியார் வருணுங்றது.....அந்த போலீசை விட்டு வைப்பாராலே? நொறுக்கித் தள்ளிற மாட்டாரேலே” என்று “ஓப்பீ” சொல்வான்.

எட்டாவது ஓம்பதாவது படிக்கிற காலத்தில் தான் குத்தாலத்துக்கு “எக்ஸ் கர்சன்” போப்போரம்..வர்றவங்க பேர் கொடுங்கன்னு ஒவ்வொரு வகுப்பா பேர் எடுத்தாங்க.....

“எல நீ வந்தா நா வாறன்”......அப்படீன்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல ரொம்ப நெருக்கடி கொடுத்து அனுமதி கேட்டோம்.....

 “மாசிலாமணி சார்வாள் வாறாரா?.”....என்று கேட்டு, அனுமதி கொடுத்த உம்மா வாப்பாவும் உண்டு. 

அந்தக் காலத்துல முஸ்லிம் ஹைஸ்கூலில் அவர் கொடுக்கிற அடிகள்,  அம்புட்டு பிரபலம். மாணவர்களை,சர்வ காலமும்  அடிச்சி அழகு பார்க்கும் அவரை, புதுசா எவனாவது பார்த்தான்னா,பாக்கிறவன் மிரண்டே போயிருவான்........வாட்ட சாட்டமா......ஆஜானு பாகுவா...அப்படி இருப்பார்.  

அவர் கொடுக்கும் பிரம்படி வித்தை, ஒவ்வொருத்தன் வீடு வரைக்கும் தெரியும்....அடி வாங்குனவன் .நடக்க முடியாது. .....அவர் கண்ணசவை, விட்டு பிள்ளைகள்,யாரும் தூரப் போமாட்டங்கன்னு, தாய் தகப்பனுக்கு நம்பிக்கை இருந்தது.

எங்க வாப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி, நேரம் பாத்து அப்ப்ளிகேசன் போட்டேன்.

“பள்ளிக் கூடத்துல குத்தாலம் கூட்டி போறாங்களாம்.....நான் கண்டிப்பா போகணுமாம்.”

“அப்படி யாரு சொன்னா” ?

“சார் தான்...”

“எந்த வாத்தியார்ரா, சொன்னது?”

“கோமதி நாயகம் சார்வாள் தான்”

“அப்படி, எந்த சாரும் சொல்ல மாட்டாங்களே?”

“அவர்தான் சொன்னார். நாங்க அங்க .....போனதிலிருந்து வூட்டுக்கு வரும் வரை, பாத்ததை ,மனசுல தொகுத்து  கட்டுரை எழுதணுமாம்......அதுக்கு கிடைக்கிற  மார்க்க வச்சித்தான் பரிச்சையிலே பாஸ் பண்ணுவாங்களாம்.”......

“சரி,சரி, .....குத்தாலம் போக ரூபா எவ்வளவாம்?”  

“நாலு  ரூவா தான்.”

“எதுல கூட்டி போறாங்களாம்?”

“திருனவேலி ஜங்ஷனில் இருந்து தென்காசி வரை ரயில்.....அப்புறம் வரும் போதும் ரயில் தான்”.....

“சரி சரி ....உன்கூட யார்லாம் வாராங்க?......

“சிந்தா காஜா,..முத்துப் பாண்டி,மயில்.நம்ம தாஜுத்தீன்,ஜின்னா.....ஜாபர்......இவங்கல்லாம்”

."மலைக்கு மேலெல்லாம் போகக் கூடாது.....உம்மாட்ட ரூபா வாங்கிட்டு போயிட்டு வா........எல்லாரும்....பத்திரமா போயிட்டு வாங்க...ஆழம் தெரியாம எங்காவது இறங்காதீங்க”....அப்படீன்னு வாப்பா சொல்லி அனுமதியும் கிடைச்சிது..

“செண்பகாதேவி,தேனருவிக்கேல்லாம் போகப்டாது” ன்னு உறுதி மொழியோடு பணமும் தந்து எங்க உம்மா அனுப்பினாள்.

அன்னைக்கு மதியம் பனிரண்டு மணி சுமாருக்கு திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலைய ரண்டாவது பிளாட் பாரத்தில் செங்கோட்டை பாசஞ்சர் ரயில் தெற்கு நோக்கி புறப்படத்தயாரா நின்னது.

அங்க எப்படி வந்து சேர்ந்தோமுன்னு தெரியல்லே....அம்புட்டு சந்தோசம்..மதிய சாப்பாட்டை பத்தரை மணிக்கெல்லாம் முடிச்சாச்சு.

கருத்த நீண்ட குழாய் வடிவம்; கீழே சக்கரங்களைக் கொண்டு வடிவமைத்தது  போல நீராவி என்ஜின்.அதுக்கு அடுத்த ரண்டு,மூணு பெட்டியில் நாங்கள் சுமார் நூறு பேர் அடித்து பிடித்து உட்கார்ந்து கொண்டோம்.

.ஆத்ம நண்பனா இருந்தாலும் ஜன்னலோர சீட்டை விட்டுக் கொடுக்க யாரும் தயாரா இல்லை .இதப்பார்த்த கோமதி நாயகம் சார்வாள் ”ஆளுக்கு கொஞ்ச நேரம் முறை வச்சி உட்காருங்கப்பா”அப்படீன்னு ஒரு முடிவு சொன்னார்.

நீராவி என்ஜினில் இருந்து வந்த நிலக்கரி புகையும்,ஒரு மாதிரி ஆவி வாடையும் ரயில் நிலையம் முச்சூடும் இருந்தது.அது அப்போதைக்கு ரொம்பப் புடிச்சிருந்தது.

இதற்கிடையே பசிவந்தால் சாப்பிட ஒட்டு மாவு.பணியம்,மிச்சர்,காரச்சேவு,அல்வா எல்லாம் எங்க அப்பாம்மா தந்து விட்டாள்.

“ம்ம்ம்வூம்” என்கிற சங்கு சப்தத்தில் ரயில் புறப்பட தயாரானது. நாங்க இருந்த பெட்டிக்குள்ளே,வாத்தியார்கள் ஒவ்வொருத்தன் பெயரா சொல்லி வருகையை சரி பார்த்துக் கொண்டார்கள். என்ஜினை சுத்தி பக்கவாட்டில் இருந்து ஆவியும் புகையும் கலந்து வெளிவர வண்டி புறப்பட்டது.

மேம்பாலம் தாண்டியும் வண்டி வேகம் புடிக்கல்லே.

.”மீராப்பள்ளி ஆறு வருமாலே?......லெப்ப கேட்டான்.

“அது திருச்செந்தூர் பாதையில் தாம் வரும்.ஒரு மண்ணும் உனக்குத் தெரியல்லியே” அப்படீன்னு ஒப்பீ சொல்லிக்கிட்டான்  .

டக், டக், டக், டக்,...... ஊ......ஸ்.........ஊ....ஸ் ஊஸ் என்று குறுக்குத்துறை ரோட்டு ரயில் கேட் பக்கம் போனது. ரயில் கேட அடைச்சிருந்தது, அங்க நிக்கிற நம்மூர்க்காரர்கள் யாராவது,ரயில்ல நாங்க போறதைப், பார்க்க மாட்டார்களா? என்று தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டோம்.தெரிஞ்ச மூஞ்சி யாரும் இல்லை.

கொஞ்ச தூரத்தில் டவுண் ஸ்டேசன் வந்து அங்க ஒரு அஞ்சு நிமிஷம்.அப்புறம் பேட்டை,கல்லூர்,என்று நின்னுபோனது.

“எலே....சேர்மாதேவி கத்திபாலம் வரும்ல.....எவனாவது தலய, கிலய நீட்டாதிய.....உள்ள வாங்க”...அப்படீன்னு சொல்லிக்கிட்டுருக்கும் போதே,தாமிர பரணி ஆத்தின் மேல் உள்ள அந்த  பாலம் வந்தது. தடா தட சப்ப்தத்துடன் வண்டி போனது...

அங்கும் நிப்பாட்டினான்.

ஒவ்வொரு ஸ்டேசனிலும் என்ஜின் டிரைவர் கையில் கொடுக்க, வட்ட சைசில்ஒரு பெர்ய கவட்டை மாதிரி பேட்,  சடார்ன்னு வண்டி போகிற,அந்த வேகத்திலும் டிரைவர் கையில்,கொடுத்துகிட்டே இருந்தான். அத மாதிரி வண்டி டிரைவரும் ஏதோ எரிஞ்சிக்கிட்டே வந்தான்.

“அம்பாசம்த்திரம் முறுக்கு நல்லாருக்கும் சாப்பிட்டு பார்லே”...என்று சொல்லி எங்க லெப்பார் மாமா எனக்கு நாலணா தந்து விட்டார்.அது டவுசர் பாக்கட்டில் இருந்தது.அந்த ஊர் வந்ததும் மறக்காம வாங்கி சாப்பிட்டுக்கிட்டேன்.

போளின்னு ஒன்னு கொண்டு வந்தான்.அத ரயில்ல தவிர மத்த இடங்கள்ல வாங்க முடியாதோ?என்னவோ.?

எப்பவோ போட்ட போளியை, எங்க தலையில் கட்டிட்டு அந்த கண்ணாடி டப்பா யாவாரி போயிட்டான். மஞ்சக் கலர் சப்பாத்தியில் கொஞ்சம் இனிப்பு கலந்த மாதிரி அது இருந்தது. "நம்ம ஊரில் ஏது?  இந்தப் பண்டமுன்னு" தின்னேன்.

அம்பாசம்த்திரத்துக்கு அடுத்துநாலைந்து ஸ்டேசன் தாண்டி  ரவண சம்த்திரம்..அங்க இறங்கித்தான் பொட்டால் புதூர் போவாங்க.தூரத்தில் அந்த மினாரா தெரியுதான்னு பார்த்தால் ஒண்ணுமே தெரியல்லே.

அங்க சுத்தி இங்க சுத்தி.பொளுகிற அஞ்சு மணி தாண்டி வண்டி தென்காசி வந்து சேர்ந்துச்சு.

கொண்டு வந்த பை,பாக்கட்டுகளோடு,வண்டிய விட்டு  இறங்கி வெளியே வந்தோம்.தூரத்தில் மேக கூட்டத்தோடு குத்தால மலை தெரிந்தது.     அங்கிருந்து  மலை வாசத்தோடு, வந்த குளுந்த காத்து அப்படியே மனசை என்னவோ செய்தது.

ம்ம்ம்.....நடங்கப்பா...அப்படீன்னு சொன்னாங்க.

“சரி பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்காம்”? .

“ கொஞ்ச தூரத்துல”......சரி நடப்போமுன்னு நடந்தோம்.....

நடைப் பயணம்   பஸ் ஸ்டாண்டும் தாண்டி,,குத்தால ரோட்டுக்கு போனது.

வழி நெடுக இருந்த மருத மரங்களில் இருந்து, சொல்லிக் காட்ட முடியாத வாசனை......

"சார்.....குரங்கெல்லாம் எங்க போச்சு?.....ஒன்னையும் காணமே"? அப்படீன்னு நாங்க கேட்டுக்கிட்டோம்.

"நீங்கல்லாம் வாரத தெரிஞ்சு    அதுகள்லாம், மலைக்குள்ள போயிட்டுதோ என்னவோ?  " சொன்னது மாசிலாமணி சார்வாள் தான்
.
அவர்  இந்த மாதிரி ,நடந்து வந்து ரொம்ப நாளாச்சுதோ....என்னவோ? பேசும் போது கொஞ்சம் இளைக்கவும் செஞ்சுது.  அவர் சட்டை,வேஷ்ட்டி  எல்லாம் வேர்வையில் நனைஞ்சிருந்தது.

"எப்போ குத்தாலம்  கண்ணுல தெரியப் போகு தோ?" ன்னு ஆயிடுச்சு...

ஒரு ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு, எங்களை நடத்தியே குத்தாலத்துக்கு கூட்டி வந்துவிட்டார்கள். கை காலெல்லாம் , ஒரே வலி.

அப்பாட......வந்துட்டோமுன்னு அண்ணா சிலை பக்கம் வந்து, அருவிக் கரைக்குள் நுழைந்தோம்.

அக்கடான்னு, ......மெயின் பால்ஸ் கரையில் உட்கார்ந்திட்டு ,. கொஞ்ச நேரம் கழிச்சி .......குளிச்சோம்.குளிச்சோம்.அப்படி ஒரு குளி...

"கரையேறு" ன்னு சொல்ல ஆள் யாரும் இல்லை..... கண்கள் சிவந்து தலை முடியெல்லாம் பஞ்சாய் பறக்க,நடுக்கம் இல்லாமல். வெளியே வந்தோம்.தலை துவட்டும் போது காத்து அடிச்சதால் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது,..

அடுத்து சாப்பிடுறது தான்.....

“யாருக்கு என்ன வேணுமோ?  அதை அவனவன் வாங்கி சாப்பிட்டுக் கங்க.....அதுக்கு அவங்களே துட்டு கொடுத்துக்கங்க “ இதை சார் சொல்லிக் கிட்டார்,

ஒரு ரூபா கொடுத்தா நல்லா சாப்பிடலாம்.......

அன்னைக்கு சாரலோடு குளிரும் இருந்தது.  அருவியில் குளிச்சு நல்லா பசி.. சாப்பிட்டோம்..சாப்பிட்டு முடிச்சுட்டு எங்களை அப்படியே ஐந்தருவி ரோட்டில், தளவாய் பங்களாவுக்கு எதிரே “கங்கா விலாஸ்” என்கிற பழைய பங்களாவுக்கு கூட்டிப் போனார்கள்.

அந்த பங்களா  உள்ளே போய், ஆசிரியர்கள் பேசப் போனார்கள். ரொம்ப நேரம் ஆச்சுது...எங்க யாரையும் உள்ளே கூப்பிடல்லை. பெறகு ஒரு தடிச்ச அம்மாவெளியே வந்து கடுமையான குரலில்  “இங்க நிக்கிற அம்புட்டு பேரும் வெளிய போங்க....என்றார்,
"எம்மா.....வந்துருக்குறது எல்லாம் புள்ளைங்க.....இந்த நேரத்துல அவங்களை நாங்க எங்க கூப்பிட்டுப் போக முடியும்? "கோமதி நாயகம் சார் கெஞ்சுகிற குரலில் பேசினார்.

"நான் கேக்கிற வாடக உங்களாலே தரமுடியாது...போயிருங்க.....இங்க தங்குரதுக்கு இடமில்லை".....வார்த்தைகளில் கொஞ்சம் கூட அந்தப் பெண்ணிடம் இரக்கம் தெரியவில்லை..

என்ன செய்யன்னு ஒருத்தருக்கும் ஓடல்ல......மணி வேற பத்து ஆயிட்டுது....

கொண்டு வந்த குளிர் தாங்கும் டர்க்கி டவல் நனைந்து விட்டது.அதனால் தூக்கி கொண்டு போக,கனம் வேறு.   எங்க வாத்தியார்கள் கெஞ்சிப் பார்த்தார்கள்.அந்த தடி பொம்பள கிட்ட ஒன்னும் நடக்கலை.
அங்க இங்க ஓடி யாடி பார்த்தும் ஒரு இடமும் கிடைக்கவில்லை.

எதிரே இருந்த ஒரு ஹோட்டல் வாசலில், கடும் குளிரில்,சாரல் மழையில் பற்கள், கிடுகிடு என நடுங்க சுவர் ஓரமாக உட்கார்ந்தும், படுத்தும் அந்த இரவைக் கழித்தோம்.   

கொஞ்சம் குண்டு பையன்கள்,   குளிரை தாங்ர மாதிரி, காட்டிக்  கிட்டாங்க..ஒல்லிக் குச்சி ஆசாமிகள்   வெட வெடுத்துப் போனார்கள்...அந்த கோஷ்ட்டியில் நானும் இருந்தேன்.....அப்படி ஒரு கஷ்டத்தை, தூக்க மில்லாத இரவை நான் அனுபவித்ததே இல்லை.    
 
அந்த நிலையைப் பார்த்து கொஞ்சம் அழுகை வந்தது. நல்ல வேளை....நம்ம வீட்டில் இத யாரும் பார்க்கல்லை...தெரிஞ்சா இனி டூர் போக விட மாட்டாங்களே ....என்ற கவலை தான் வந்து போனது..

மறுநாள் அதிகாலையில்,நம்ம ஊர் பிள்ளைகள் இப்படி "மழையில்..... ராவிடிய கஷ்ட்டப்படுகிரார்கள்"  என்பதைத் தெரிந்து கொண்ட குத்தாலம் பள்ளிவாசல் இமாம்,மறைந்த கோஜா லெப்பை யூசுப்  ஆலிம் அவர்கள், ஓடோடி வந்து விட்டார்.     அவரும் ஆசிரியராக இருந்து பல, நூறு பிள்ளைகளுக்கு பாடம் படிச்சிக் கொடுத்தவர்   ஆச்சே......அதனால் "தானாடாவிட்டாலும் அவர் தசை ஆடியது".

"அவ ஒரு பொம்பளையா?  இப்பிடி குளிர்ல போட்டு,பிள்ளைகளை அநியாயம் பன்னிட்டாளே"....கிதிர் சாரும்,மைதீன் லெப்பை சாரும் அழுது விட்டார்கள்.

"வாங்க எல்லோரும் போவோம்"..என்று கையோடு பள்ளிவாசலுக்கு கூட்டி வந்துவிட்டார்..தூக்கக் கலக்கத்தில் இருந்த மாணவர்களை  பள்ளிவாசல் கட்டிடத்தில் ஓய் வெடுக்கச் செய்தார்.

பள்ளிவாசல் எதிரே     சித்தருவிக்குப் போனோம்...அப்புறம் வேற எங்க போகவும் மனசே வரல்லை.

பிறகு மதிய உணவும்   பள்ளிவாசல் திண்ணையில் தந்தார்கள்.பருப்பு சாம்பாரோடு அன்னைக்கு புதுசா ஒரு துவையல் சாப்பிட்டேன். எங்க வீட்டில் சாப்பிடாத கொத்தமல்லி சட்னிதான்.பசியில் உண்ட அந்த உணவும்,சட்னியும்,பள்ளிவாசல் திண்ணையும் இன்னைக்கும் நினைவில் நிற்கிறது.

 

அன்னைக்கு மாலையே ஊருக்கு கூட்டி வந்தார்கள்...தென்காசிக்கு மீண்டும் நடைப் பயணம்....திருனவேலி ரயிலைப் பிடிச்சு ஜங்ஷன் ரயில்வே ஸ்டேசன் வந்தோம்....

அங்கிருந்து,....... தூக்க கலக்கத்துடன் நடந்து வந்து, பத்தாம் நம்பர் பஸ் புடுச்சு கீழாப் பாளயம் வந்து தளர்ந்த நடயுடன் வீடு வந்து சேர்ந்தேன்..

என்னைப் பார்த்துட்டு எங்க உம்மா சொன்னாள் “ஒரு நாள்ல இப்பிடி உணந்துட்டியே “

 .

 

.

:

 

 




(இன்னைக்கும் அந்த “கங்கா விலாஸ்” பங்களாவை நான் பார்க்கும் போதெல்லாம்,................ எனக்கு பள்ளி நாட்களும்,.................எங்க வாத்தியார்களின் கெஞ்சலும் .......இரவெல்லாம் கடும் குளிரில் நடுங்கியதும்,.............எங்களைத் துரத்திவிட்ட அந்த "குண்டு பொம்பிள்ள" உருவமும் தான்,நினைவில் வந்து போகிறது...................அப்போ பார்த்த அதே கட்டிடம், எந்த விதமான வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே நிற்கிறது...)

 

புதன், 31 ஜூலை, 2013

துரத்தித்......துரத்தி.


     நேத்து சின்னத் திரையில்,பல சேனல்களை மாத்திக் கிட்டு இருக்கும் போது, யாரும் பாக்காத ஒரு சேனல்ல, சும்மா............. விதவிதமா நாய்களின் அணிவகுப்பை காட்டிக் கிட்டு இருந்தான்.

   பெரிய கண்ணுக்குட்டி சைசில் இருந்து, பூனை மாதிரி அம்சம் வரை. மூஞ்சி பெருத்தும்.சிறுத்தும் துள்ளி திமிறி வந்து கொண்டு இருந்தன....நீண்ட சடைமுடிகளோடும்,கண்கள் இறுகிச்சொருகியும், நாக்கைத் தொங்கவிட்டும்  நாய்கள் வித விதமாய் காட்சிகள்  தந்தன.

   .சிலதுகளுக்கு என்ன பாவத்துக்காகவோ வாலை.ஓட்ட நறுக்கி  இருந்தார்கள்.

 “ரொம்ப பெரிய மனசுக்காரிகள்” அதுகளில் சிலதை, குளிர் தாக்காமல் இருக்க, சால்வை போட்டு மூடி,அனைத்து லாவகமா  கொண்டுவந்தார்கள்.

    கொடுத்து வச்ச ஒன்னு, ரண்டு  வகையறாக்கள் ஏ.சி. வண்டியில் வந்து இறங்கின. வயசான ஆட்கள் அந்த அழகை 'உச்சு' கொட்டி ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

      யாருக்கும் தெரியாத இடத்தில், ஒன்னு ரண்டு நாய்கள்,மூக்குடன், மூக்கு வச்சி  மூஸ்....மூஸ் என்று உரசிக்கொண்டு இருந்தன. சில.... கொர்.....புர்ர்.........என்று முறைச்சல் பண்ணிக்கொண்டு இருந்தன.

    ஒன்னு மட்டும் தெரிஞ்சது என்னான்னா,வந்த அம்புட்டு பேரும் பணக்காரங்கன்னு மட்டும் தான்.....பெத்த புள்ளையை கூட , இம்புட்டு பக்குவமா வச்சிருப்பாங்களா?...என்னவோ? கொஞ்சம் சந்தேகம் தான்.

        ஹையோ......நாம..... நம்ம ஊரில் இதை,இந்த இனத்தை எப்படியெல்லாம் பார்த்தோமுன்னு மனசுல வந்து போச்சுது....

     எங்க அப்பாம்மா, நாயைத்தொட்டு விட்டேன்னு தெரிஞ்சா  ஏழு முறை தெருவில் வச்சோ,பாளையங் கால்வாய்க்கு கூட்டிப் போயோ, கை.கால் கழுவி முடிச்சால் தான், வீட்டுக்கு உள்ளேயே  விடுவாள். 

   அதுக்கு மேல ,லெப்பார் மாமா...... அதுங்களை கண்டு, அவர் சதா பயந்ததாலோ, என்னவோ,..... “ நாய்களாகப் பிறந்தது  எல்லாம், மத்தவங்களை கடிச்சு முடிச்சுட்டுத்தான் மத்த சோலியை பாக்க போகுமுன்னு”.......... ராத்திரியில கதை சொல்லுகிற நேரமெல்லாம் எங்களை  பயங்காட்டி இருக்கிறார்.

      அதனால் என் சின்ன வயதில் இருந்தே அதுகளைக் கண்டால் ஒரு பயம் இருந்தது,  அதையும் மீறி “ஐயோ...பாவம் .இந்தப் பையங்க ஏன் தான்,இந்த ஜீவனை மட்டும் ,கல்ல வச்சு, அடிச்சு கொடுமை படுத்துறாங்களோ?”....அப்படீங்கற இரக்கமும் என் மனசுல கூடவே எப்பவும் வந்து போகும்.

       எப்போவாவது மாமா அல்லது வாப்பாவுடன் வக்கீல், பண்ணையார் வீடுகளுக்கு போகும்போதெல்லாம் அதுகள்  நிக்கிற இடத்தை விட்டு கூடிய மட்டும்,அதுங்களை திரும்பிக்கூட பார்க்காமல்  வேகமாகவே போய்விடுவேன்.

        நம்ம வீட்டில் நிக்கிற ஆடு மாடுகள் கூட இத்தனை ரகத்தில் இல்லையே: இதுகளில் மட்டும் இத்தனை ரகமாங்ற? ஆராய்ச்சிக்கும், மனசில இடம் இருந்துகிட்டே வந்தது.

  

    எங்க ஊர் பக்கம் எங்க சின்ன பிராயத்திலே “பெர்னாட்ஷா” என்கிற பேரை “பெர்னா சார்” ன்னா தான் மத்தவங்களுக்குத் தெரியும். எங்க தெருவுக்கு கிழக்கே,அம்மன் கோவில் வடக்குத் தெருவில் ஓலைப் பள்ளிக் கூடம் நடத்திக் கொண்டு இருந்தார். அவருக்கு ‘அசல் பேர்’  பகவதியாபிள்ளை, என்று சொல்லுவார்கள். தம்மை பெர்னாட்ஷா என்றே அவர் சொல்லுவார்....

    அந்த பேர் அவராவே வச்சுகிட்டரோ? அல்லது வேற யாராவது வச்சாங்களோ?....இந்த வரலாறை யாரும் சொல்லவில்ல. பெர்னா சார் பள்ளிக் கூடத்தில் படிப்பது என்பது, அந்தக்காலத்தில் ரொம்பப் பெருமைக்குரிய விஷயமாகும். கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகள் அங்கேதான் படிப்பார்கள்.

    “பெர்னா சார்வாள்” கிட்ட “ட்யூசன்” படிக்கிற வயசில், கூட படிச்ச மத்த பையன்கள் அம்மங் கோவில், பவுண்ட் ரோடு குத்துக்கல் தாண்டி போகவே இருட்டில்,பயப்பட்ட காலத்தில், நான் ஏதாவது சிவாஜி,எம்,ஜி,ஆர்.பாட்டை படிச்சிக்கிட்டே தைரியமாப் போயிடுவேன். மத்தவங்க எம் பின்னால தான் வருவாங்க.அதுல ஒரு பெருமை வேறு..... ஆனால் எங்காவது அது..... உறுமுகிற,அல்லது ஊளையிடுகிற மாதிரி  ஏதாவது  கேட்டுட்டா அவ்வளவுதான்....... திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே, ஓட்டமா வந்து சேர்ந்துடுவேன்..

    “என்னடா.?.....என்ன சமாச்சாரம்?.....திரும்பிவந்திட்டே?......என்கிட்டே சல்யூட் அடிச்சிக்கிட்டுதானே போன?......அப்புறம் பயம் வராதேடா”.....என்பார் எங்க வாத்தியார் பெர்னாசார்....   


    ‘சார்வாள்’ வந்து இருட்டைத்தாண்டி,”நான் இங்கயே நிக்கேன்...நீ வீட்டுக்கு போப்பா”என்று சொல்லி  அனுப்பி வைப்பார்..இல்லைனா.....எங்க வீட்டில் இருந்து யாராவது வந்து கூப்பிடனும்.அப்ப தான் போவேன். அவ்வளவு பயம்.....இது நாய்களுக்கும் எனக்கும் இருந்த சின்ன வயசு வரலாறு.

நானும் நண்பர்களும் இளம் வயதில் உடற் பயிற்சிகள் செய்ய கிளப்புகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம்.  சில, நண்பர்களுக்கு கொஞ்ச நாளிலேயே  போரடித்துவிடும். அதற்குள் ஏதாவது மழை,குளிர்,வந்துவிட்டால்,கிளப்புக்கும் லீவுதான். இல்லையென்றால் கிளப்பையே மூடிவிடுவார்கள். கிளப்புகளில் பேரல் பார் ,பெஞ்ச பிரஸ்,மற்றும் எடைக் கற்கள் இருக்கும்.அதுக்கும் நண்பர்கள் புடை சூழ கூட்டமாக சென்றால் தான் போரடிக்காது.

  அது போல கிரிக்கெட் அணி அமைத்து விளையாடிய நண்பர்களைப் பற்றி தனித்தனியே எழுதலாம்.

    உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வதை விட, ஏதாவது விளையாட்டுத்திடலில் சென்று நடையும் ஓட்டமும் கொண்டு பயிற்சிகள் செய்யதால் நல்லா இருக்கும்.அதுக்கு எங்கே போவ?...நம்ம பள்ளிக் கூட மைதானத்திலே காலை வேளைகளில் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதென  நானும் அருமை நண்பன், ஆருயிர்த்தோழன் சர்புதீன் மாப்பிளையும் முடிவு செய்து கொண்டோம்.

    “மாப்பிளை,....காலை விடிகிற வேளையில் நாம ஓடினால்தான் ஆக்சிஜன் தெளிவா கிடைக்கும்.நீ பாட்டுக்கு தூங்கிடாதே”ன்னு சர்புதீன் முதல் நாளிலேயே என்னை தயார் படுத்திக் கொண்டான்.

    ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டு முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி மைதானத்துக்கு வந்தோம். அதுக்குப் பிறகு நான் ஓட, .....சர்புதீன் ஓட........இப்படி ஒரு வாரம் ரொம்ப தெளிவா .....ஓட்டம் பிடிச்சுது..

   ஒரு நாள் காலையில், நான் முன்னால் ஓடிக்கொண்டு இருந்தேன்...அது அப்படி ஒன்னும் பெரிய வேகமில்லைதான்.....வழக்கமா எனக்கு பின்னால் சர்புதீன் வருவான்.  அவனுக்கு ஒரு போதும் ஓடினால் இளைக்காது.ஆனால் எனக்கு பின்னே வேறு யாரோ சிலர், வேகு....வேகு ...என்று இளைக்கிற சப்தத்துடன் ஓடி வருவதைப் போல காதில் கேட்டது.... சர்புதீன் தான் நம்மை முந்த, பக்கத்தில் வருகிறானோ? என்று நினைத்துதிரும்பிப் பார்த்தால் .... ....................நான் முன்னால் ஓட எனக்கு பின்னால், ஒரு நான்கு, ஐந்து நாய்கள்,நாலு கால் பாய்ச்சலில்  என்னை விரட்டிக் கொண்டு வந்தன.....
         நாம சரி......நம்ம சர்புதீன் மாப்பிளை என்ன ஆனான்னு? பார்த்தால்.......... என்னையும் ,துரத்திவந்த நாய்களையும் விட்டுத்தள்ளிவிட்டு எ........................பே........என்று சொல்லிவாறு.....இல்லை அலறியவாறு எனக்கு இடது பக்கம் பார்த்து ஓடத் தொடங்கியிருந்தான்.....

       உலக சேம்பியன் அன்று என்னோடு ஓட்டப்பந்தயம் வந்திருந்தாலும் தோற்றுப் போய் இருப்பான். அவ்வளவு வேகம்.
     நான் ஓடிய ஓட்டம் எனக்குத்தான் தெரியும்....தூரத்தில் தெரிந்த பூவரச மரமே எனக்கு இலக்காகத் தெரிந்தது..நான் ஓட....நாய்கள் துரத்த ....முடிவில் ஜெயித்தது யார்.?......நானே தான்.....மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

   ரொம்ப தூரம் துரத்தி வந்து, நாய்களுக்கு இளைக்க,அதுக்கும் மேலா எனக்கும் இளைக்க, மரத்தில் அமர்ந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறதோன்னு  படபடப்புடன் பார்த்திருந்தேன். தூரத்தில் வைத்திருந்த சைக்கிளோடு சர்புதீன் வர, நாய்கள் ஓட்டம் பிடித்தன.அது ஓடியதும் மாப்பிளை கல்லைத்தூக்கி வீசியதும் ரொம்ப வேடிக்கையானது....
        மாப்பிளை டவ்சரை   கழட்டி விட்டோ,அல்லது உள்ளே போட்டோ, கால்களை மூடி, வேஷ்ட்டி கட்டிக் கொண்டு, பாது காப்பு உணர்வோடு .....வேறு எதுவும் வருகிறதா? என்று அங்க இங்க பார்த்துக் கொண்டு வந்தான்.
.       மரத்தில் இருந்து கீழே இறங்கி நான் அவனைப் பார்க்க, சர்புதீன் மாப்பிளை என்னைப் பார்க்க இரண்டு பேருக்கும் அழுகை வந்து விட்டது...
       "வாங்க மாப்பிளை போயிருவோம்"ன்னு சொன்னதில் அவசரம் தெரிந்தது...,
    மீண்டும் "அதுங்க" வருமோன்னு ,அங்க இங்க பார்த்துக் கிட்டான்.”மாப்பிளை உஷாராத்தான் வந்திருக்கான்” னு தெரிஞ்சிக்கிட்டேன்....அன்னையோடு எங்க “ஜாக்கிங்” ஒரு முடிவுக்கு வந்தது.....அதுவும் நாயால் வந்த வினைதான்.

    காடு வெட்டி கிராமத்தில் தோட்ட விவசாயம், தனியாக நடத்த ஆரம்பித்த காலத்தில் ,நான் தங்கி இருந்த குடிசைக்கு அருகில்  எங்கிருந்தோ வந்த நாய்க்குட்டி ஒன்னு, தள்ளாடி நடந்து  வந்து பாவமாகப் பார்த்தது. அது தாயை விட்டு பிரிஞ்சதா?....அல்லது யாராவது விட்டுட்டு போனதான்னு? தெரியாது. “அது பொட்ட குட்டி. அதனால தான் விட்டுட்டுப் போயிட்டாங்க” ன்னு எங்க பாண்டியன் சொன்னார்.

    ரொம்ப பரிதாபமா முழிச்ச அதுக்கு,  "சாப்பிட என்ன இருக்கு"?ன்னு கேட்டுப் பார்த்தேன். சரி இதையாவது கொடுப்போமுன்னு ,முதலில்  நான் கொடுத்ததே யாக்கோபு நாடார் கடை சாயாவைத் தான். கிஸ்ன சாமி அண்ணாச்சி “இத கொடுங்க”ன்னு  அவராவே தான் அத ஊத்தினார்... அப்புறம் நான் போட்ட எங்க வீட்டு மிச்ச மீதி சாப்பாட்டை உண்டு, தின்னு வாலை ஆட்டி ,பாசம் காட்டி எங்க “தோட்டமே கதி”ன்னு இருந்துகிட்டது.

   இத எப்படித்தான் தெரிஞ்சுதோ? இன்னொரு நாயும் வந்து கூட்டணி அமைத்துக் கொண்டது....அது கொஞ்சம் பெர்சாகவும்,வயசாளியாகவும் இருந்த ஆண் நாய்.   ஒன்னுக்கு கொடுத்து வந்த சாப்பாட்டை ரண்டு  வயிறுகளுக்கு கொடுத்து வந்தேன்.

     மின்சார இணைப்பு கிடைக்கும் வரையில், கிணறு பக்கத்தில் உள்ள ஓலைக் குடிசையில் தான், ஸ்லோ ஸ்பீட் ஆயில் என்ஜின்  ஒரு பெல்ட் மூலம், பம்ப் செட்டை ஒடவைத்துக் கொண்டு இருந்தது.    
        டக்கு....டக்....டக்...என்கிற சப்தத்தை தவிர வேறு சப்தமே கேட்காது....அங்கே தூரத்தில் உள்ள குழாயில் இருந்து, தொட்டியில் தண்ணீர் கொட்டும்....அதை வைத்துத் தான் ஆயிரக்கணக்கில் வாழை விவசாயம் நடந்தது........

    ஏதோ....ஒரு பொருளைத் தேடி அலைந்து முடித்து விட்டு, பம்ப்  செட்.ஓடிக்கொண்டு இருந்த குடிசைக்குள் நுழைந்து ,கையில் இருந்த ஒரு சிறிய மண்வெட்டியை அங்கு இருந்த தகர பீப்பாய்க்குள் போட்டேன். ....எனக்குத் தெரியாது. .அந்த பீப்பாய்க்கு அந்தப் பக்கம்  அந்த பெரிய நாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தது என்பது.

  அந்த பெரிய நாய்க்கு அந்த சப்தம், ஏதோ வெடி விழுந்ததைப் போல் காதில் கேட்டிருக்க  வேண்டும்..முன்ன, பின்ன எங்கேயும்  பார்க்காமல்,கண் மண் தெரியாமல்  விழுந்தடித்துக் கொண்டு ஓடியது....அப்போது யாரும் எதிர்பாராமல்  அந்த விபரீதம் நடந்தது......
        வேறு ஒண்ணுமில்லை......ஆயில் என்ஜின் பெல்ட்டில் அந்த பெரிய நாயின் வால் மாட்டிக் கொண்டது. ஒரு சுழற்று சுழட்டி பம்ப் செட்அந்த நாயை விட்டது.......கண்ணிமைக்கும் பொழுதில், பெல்ட்டில் இருந்து விடுபட்ட அந்த நாய். தமது வாலை உருவிக்கொண்டு......... அது வோ................வள்....வள்... வள்....வள் என்று பெரும் குரல் கொடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.........திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை....நல்ல வேளை, அதுக்கு ஒன்னும் ஆகவில்லை,பிழைத்துக் கொண்டது. " தலை தப்பியது ,தம்பிரான் புண்ணியம்” என்று மனதைத் தேத்திக் கொண்டேன். அன்னைக்கு பார்த்த அந்த நாயை...... அதுக்குப் பிறகு எங்க தோட்டத்துப் பக்கம் நான் பார்க்கவே இல்லை..

   தோட்ட விவசாயத்துக்கு காவல் நாய்கள் வளர்ப்பதில்,வேட்டை நாய்கள் வளர்ப்பதில் உள்ள இஸ்லாமிய சட்ட தகவல்களை எங்க சலீம் மச்சானிடம் பல முறை கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன். ஆடம்பரத்துக்கு நாய்கள் வளர்க்க உள்ள தடைகள் பற்றியெல்லாம் நீண்ட விளக்கங்கள் சொல்வார்கள். அதன் அடிப்படையில் தோட்டத்தில் நாய்கள் கிடக்கும்...

     ஒரு நாள் “ போனவன் போனாண்டி” கதையாக நாய்,ஒன்று காணாமல் போய்விட்டது அந்த நாய்  குறைச்சால் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக் காவது கேட்கும்.  இதை ....அப்போது பஷீர் மாப்பிளை கடைக்கு வந்த ஒரு நண்பரிடம் சொல்லி வைத்தேன்.

அதுக்கு அந்த நண்பர் “நான் ஒருவரிடம் நாய் ஒன்று விலைக்கு வாங்கினேன்.அது பாம்ரேனியன் வகை நாய்.அது உனக்கு வேணுமா பாரு” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் சும்மா மொழுக்,மொழுக் என்று ஒரு இளைய நாய் ஒன்றோடு வந்தார்.......

“மாப்பிளை ,நான் என்ன கொடுத்தாலும், இந்த நாய் தொட்டு பார்க்க மாட்டேங்குது......அதுக்கு என்ன பிரியமோ,?,,, அதைக் கொடுத்துப் பாருன்னு ஒரு கண்டிஷனையும் போட்டு அந்த நாயை என்னிடம் தந்துவிட்டார். மிகுந்த எச்சரிக்கையாக நான் போன ஜீப்பின் உள்ளே  அதையும் கட்டி, தோட்டம் கொண்டு போய் சேர்த்தோம்.

       "வழக்கமா நாய்கள் திங்கிற உணவுகளைப் போடுங்கள் .சாப்பாட்டோடு பால் ஊற்றினால் வேகமாக அவைகள் சாப்பிட்டுவிடும்".இதை மனதில் வைக்கச் சொல்லிவிட்டு ஊருக்கு வந்து விட்டேன்.

      மறுநாள் காலை வழக்கம் போல தோட்டத்துக்கு போன போது அந்த நாயைப் பார்த்தேன்.,ரொம்ப சோர்வாக தெரிந்தது.... “என்ன கொடுத்தாலும் திங்க மாட்டேங்குது....என்ன செய்யன்னு”? தேவர் வந்து கேட்டார்.
     நான் யோசனையில் அந்த நாயையே பார்த்துக் கொண்டு இருந்தேன்....இந்த நாய் ஏதோ பணக்கார வீட்டு நாய் மாதிரி தெரியுதே....அத வளர்த்த ஆள் சாப்பாடு போட்டால் தான் திங்குமோன்னு ஒரு நினைப்பு வந்தது....என்ன செய்யன்னு யோசனை நீண்டது.... எது கொடுத்தாலும் உண்ணுவதில்லை என்று வைராக்கியம் கொண்டதாக அந்த நாய் இருந்தது.எனக்கும்
என்ன செய்ய? இந்த நாயை? அப்படீன்னு எண்ணம வந்து விட்டது..

“ஆமா....ஒரு பத்து பதினைந்து நாளுக்கு முன்னால் ஏதோ ஒரு பேப்பரில் காணவில்லைன்னு ஒரு நாய் படத்தோட விளம்பரம் பார்த்தோமே.....அது இந்த நாயோ என்னமோ தெரியல்லியே.”....?அப்படீன்னு மின்னல்வெட்டாய் நினைப்பில் வந்து  வந்து போனது..

அதுக்கு மேலே எனக்கு எதுவும் தோணவில்லை. அது எந்த நாள்  பேப்பரில் வந்தது? என்று யோசிக்க ஆரம்பித்தேன்..

அப்போது மாலை மணி ஆறைத் தாண்டி இருந்தது....டிசம்பர் மாத கடும் குளிர் வேறு.வாடைக் காற்று லேசா வீசத்துவங்கியது.அந்த நாயை நான் பார்த்தபோது லேசா முனகுவது போல் தெரிந்தது.அதன் கண்களில் கண்ணீர் வேறு..என்னால் அதற்கு மேல் நிலை கொள்ள இயல வில்லை.

எந்த பேப்பரா இருக்கும்?  யாரு கிட்ட கேக்க?  பலரிடம் கேட்டு ம்,உருப்படியான தகவல் ஒன்றும் கிடைக்க வில்லை.

சரி, பத்திரிகைத் துறையில் தான் நமக்கு நல்ல நண்பர்கள் பலர் இருக்கிறார்களே அங்கே போவோமுன்னு,போனேன்.முதலில்,தினகரன்,தினத்தந்தி,,என்று,அலுவலகங்களுக்குப் போய் கேட்டேன். 

        “எது சம்பந்தமாக பார்க்கணும்?” என்று எடிட்டோரியலில் என்னிடம் கேட்டார்கள்....காணவில்லைன்னு ஒருவர் விளம்பரம் வந்தது.அது சம்பந்தமா ஒரு தகவல் இருக்கு...அதுக்குத் தான்.என்றேன்..ஒரு மாத பத்திரிகை புக்கே தூக்கித் தந்தார்கள்.நானும் என்னோடு வந்த ஒருவரும் பக்க வாரியாகத் தேடினோம்.  ஒன்றும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை..

சரி இன்னும் இரு பத்திரிகைகள் உள்ளன.தினமலர்,தினமணி.அதிலும் போய் விசாரித்து விடுவோம் என்று தின மலர் ஆபீஸ் போய் விசாரித்தேன்....என்னை உ ட்கார வைத்து ,அவர்களும் அந்த மாத பத்திரிகை புக் பைண்டிங்கை தந்து விட்டு, “காணல்லைன்னு நீங்க விளம்பரம் பார்த்தது..... ஆம்பிளையா?....இல்ல பொம்பிளையா என்று அந்த தோழர் கேட்டார்.

நான் ரொம்ப திக்கி திணறி ..."அது வேற யாருமில்லீங்க.....அது அது ஒரு நாய்ங்க"...என்றேன்.

அதைக் கேட்டதும் அந்த நண்பருக்கு என்னவோ போல ஆகிவிட்டது..”என்ன தம்பி? என்  நேரத்தையெல்லாம் நீங்க வீணடிக்கீங்களோ ' ?

"இல்ல சார் ,நல்லா நினைப்பில் இருக்கு. தின மலரில் இந்த விளம்பரம் வந்ததாக நான் பார்த்தேன்" என்றேன் விடாப்பிடியாக.

எங்கள் இருவரின் உரையாடலையும்,அங்கே பார்த்துகொண்டிருந்த பத்திரிகை போடும் இளைஞன்  ஒருவன் “சார் நான் தான் சார் அந்த விளம்பரத்தை வாங்கித்தந்தவன்".  என்றான்.

"அப்படியா தம்பி?"என்றேன் இனம் புரியாத மகிழ்ச்சியுடன்.

"ஆமா சார் .போன மாசம் நம்ம பேப்பரில் வந்தது"ன்னு அந்த இளைஞன் மடமடவென சொன்னான்.

   நான் உடனே அவனிடம் ," தம்பி இந்த விளம்பரத்தைக் கொடுத்தவரை உடனே  நான் பார்க்கணும்..கூட்டிட்டுப் போங்க.....சீக்கிரம் வாங்க" ன்னு அவசரப் படுத்தினேன்....."வாங்க சார்..போலாம்"முன்னு....என் பைக்கில் வந்து வழிகாட்டினான்.

"அண்ணே,கே.டி.சி.நகர் போட்டும்னே"....

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாண்டி, கே.டி.சி.நகர் போய் சேர்ந்து அந்த வீட்டைத் தேடினோம்..

ஆல்பர்ட், கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம், (ஓய்வு)  என்று பலகை போடப்பட்ட வீட்டின் முன்பாக நாங்கள் போய் நின்றோம்.  அந்த இளைஞன் பெல்லை அடித்தான்.  ஒரு அறுபது வயது தாண்டிய,  முதியவர் ஒருவர் கதவைத்திறந்தார்.
    “சார் நீங்க தானே, நாயக் கானோமுன்னு விளம்பரம் கொடுத்தீங்க..?என்று கேட்டேன்.

 “ ஆமா தம்பி.அதுக்கு ஏதாவது துப்பு கிடைச்சுதா?” என்று பரிதாப உணர்வோடு கேட்டார்.

“ஆமா சார்.இந்த சார் அது சம்பந்தமா ஏதோ உங்க கிட்ட கேக்கனும்னார்.கூட்டி வந்துட்டேன்”என்று அந்த இளைஞர் சொன்னார்.

வேகமாக வந்து அந்தப் பெரியவர் என் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டார்..

“எய்யா......என்னய்யா சொல்றே....எங்க வீட்டு நாயை நீ பார்த்தீயாய்யா?....அது எங்கைய்யா இருக்கு?.”....என்று அந்த பெரியவர் அழுது கொண்டே கேட்டார்...நான் அதை எதிர் பார்க்கவே இல்லை..

அவர் மனைவியை பெயர் சொல்லி,சப்தமிட்டு கூப்பிட்டுக் கொண்டே, அந்த வீட்டுக்குள் என்னை அழைத்துக் கொண்டு போனார். உள்ளே படுக்கையில் கிடந்த அவர் வயதை உடைய பெரியம்மா  எழுந்து உட்கார்ந்தார்...

“லைட்ட போடுங்க”...என்றார்.

விளக்கு வெளிச்சத்தில் நான் சுற்று முற்றும் பார்த்து..அப்படியே திகைச்சுப் போனேன்....

பெருசா...சிறுசா... நாய் படங்கள்...கையில் வைத்துக் கொண்டும்,பக்கத்தில் அனைத்துக் கொண்டும் விதவிதமாய்.....

“எனக்கு பிள்ளைங்க இல்லைய்யா......இந்த நாய்கள் தான் எல்லாம்”....என்று சொல்லிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.

என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை.....மனசு.. ...என்னவோ போல் ஆகிவிட்டது...

“தம்பி இந்த நாயப் பார்த்தீங்களா?......சொல்லுங்க தம்பி...சொல்லுங்க”.....என்று என் தோள்களை உலுக்கி,  குலுங்கி குலுங்கி சப்தத்துடன் கதறினார்...

“என்னய்யா...இது ? ஒரு நாய் பேர்ல இம்புட்டு பாசமா”ன்னு எனக்கு ஆகிப் போச்சு.

“இந்த போட்டோல நிக்கிற நாய் மாதிரி ஒன்னு எங்க தோட்டத்துல வச்சிருக்கேன்.நீங்க வந்து பார்த்தா  தான், அது உங்க நாயா?,மத்தவங்க நாயா?” என்று  தெரியும்ன்னுசொல்லிட்டு எங்க தோட்டம் இருக்கிற காடு வெட்டி விலாசத்தையும் சொன்னேன். 

"சரி தம்பி.....இப்போவே வாங்க.நான் உடனே அதப பாக்கணும். போலாம்"ன்னு” என்னோடு புறப்பட்டு வர ஆரம்பித்தார்.

“அய்யா,இப்போ ராத்திரி பத்தாச்சு......நான் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கேன்..என்னாலேயே குளிர் தாங்க முடியல்லே...உங்களால்.முப்பது கிலோ மீட்டர் தூரம் இதுல, இந்த நேரம் வரமுடியாது” என்று சொல்லி நிறுத்தினேன்.

“இல்ல தம்பி இந்த ஏக்கத்தில் நானும் எம் பொஞ்சாதியும் கடந்த பதினஞ்சு நாளா சாப்பிடலை,தூங்கலை. எம் பக்கத்துல நின்னதைக் காணோமுன்னு தவிச்சுப் போய் இருக்கோம்.....கூட்டிட்டு போய்யா...”இதக் கேட்டு அந்த வீட்டுக்கு பக்கத்தில் என்னவோ? ஏதோன்னு? கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது.

அடுத்து என்ன செய்யன்னு யோசிக்கும் போதே அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு நண்பர்..”வாங்க தம்பி போலாமுன்னு” அவருடைய காரை எடுத்து வந்து விட்டார்....அதில் அந்தப் பெரியவரும், அவர் மனைவியும், நானும் ஏறிக்கொண்டோம்.வழி நெடுக ஒரே நாய்ப் புராணம் தான்.

..இடையில் பலரிடம் போன் செய்து துப்பு கிடைத்த தகவலை பறிமாறிக் கொண்டும்,"கார் வேகமா போட்டும்" ன்னு மட்டும் அந்தப் பெரியவர் சொல்லிக் கொண்டே இருந்தார்

எனக்கோ உள்ளூர ஒரு பயம்.  நம்மகிட்ட வந்த நாளில் இருந்து அந்த ஜீவன் ஒண்ணுமே சாப்பிடல்லை.அதுக்கு முந்தியும் சாப்பிடல்லை.நாம் ஊருக்கு வரும்போதே பலகீனமா இருந்துச்சே.....என்ன ஆச்சோ?.....நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா, இந்த மனுஷன் அதை தாங்குவாரா?" அப்படீன்ன்னு மனசுல பல்வேறு நினைப்புகள்.

ஒரு அரை மணி நேரத்துல தோட்டத்துக்கு போய் சேர்ந்தோம். தோட்டத்து வாசலில் இன்னும் இரண்டு கார்கள்.அதில் சிலர் இறங்கி வெளியே நிப்பது தெரிந்தது.

“யாருங்க நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று நான் விசாரித்தேன்.

“நாங்க பக்கத்து கோவிந்தப் பேரி  ஊருதான்.. இதோ வந்திருக்காரே ,அவுக எங்க அத்தான் தான். அவங்க சொல்லித்தான் நாங்க இங்க வாரோம்.உங்க தோட்டத்து அட்ரஸ் சொன்னாங்க.. நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு வேற போட்டு இருக்கீங்களே.அதான்.உள்ள போகாம வெளிய நிக்கிறோம்”

ஒரு நாயைத்தேடி இத்தனை பேர்களா ? என்று நினைத்துக் கொண்டேன்.

எல்லோரும் உள்ளே போனோம்..ஒரே அமைதி. நாய் குறைப்பே இல்லை..எனக்கு என்னவோ போல இருந்தது.....

அங்கு இருந்த சிறிய வீட்டுக்குள் ஒரு சாக்கு விரிப்பில் அந்த நாய் பல்கீனமாய் படுத்து இருந்தது...கண்களை விரிக்கக் கூட சிரமத்தில் இருந்தது...இவர்கள் வாசனையை கொஞ்சம் அறிந்து விட்டது என நினைத்தேன்..ஆமாம் வாலை ஆட்டத் தொடங்கியது..

.”ஸ்நோயி” என்று அந்தப் பெரியம்மா குரல் கொடுக்க அந்த சோர்ர்வான நாய் தள்ளாடியபடி வாலாட்டி வந்தது.பிறகு ரண்டு பெரும் மாறி மாறி கூப்பிட்டார்கள்.

அப்படியே வந்து கீழே விழுந்தது....

“ஏதாவது சாப்பிட வச்சிருக்கீங்களா?” அந்தப் பெரியவர் கேட்டார்.

பொளுகிற வச்ச பாலையும், சோத்தையும் கொடுத்தோம்.அதை வாங்கி அந்த நாய்க்கு கொடுத்தார்.

நாங்கள் ஊட்டி விட்டும் உண்ணாத அந்த பழைய சோற்றை, பெரியவர் கொடுத்ததும் ,மிக வேக மாக தின்ன ஆரம்பித்தது.அதோடு கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தார்கள்.

“எய்யா.....உனக்கு என்னய்யா வேண்டும் சொல்லுயா....நீ என்ன கேட்டாலும் தாரேன்” என்றார்,அந்தப் பெரியவர்.

“ஒன்னும் வேண்டாய்யா.”....என்றேன்.

“அது சரியில்லை” என்றார்.

“நான் இந்த நாயை ரூபா முன்னூறு கொடுத்து வாங்கி வந்தேன்.அதை மட்டும் தந்திடுங்க” என்றேன்.

அதை அப்படியே வாங்கி, அங்கு அந்த நாயை இரு நாட்கள் பராமரித்த எங்க இசக்கி முத்து  தேவருக்கும் ,பரமசிவக் கோனாருக்கும் கொடுத்தேன்.அவர்கள் "இந்த பணம் நமக்கே நமக்கா ? "அப்படீன்னு பார்த்தார்கள்.
ஊர் வரும் வரை அந்த முதிய தம்பதிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியை சொல்லிக் காட்ட என்கிட்டே வார்த்தைகளே இல்லை.