புதன், 24 ஜூன், 2026

கவிஞர் வீரவநல்லூர் எம் அப்துல் ரகுமான்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் புகைப்பட நிபுணர்,  கவிஞர்,  பாடலாசிரியர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் அன்பு அண்ணன் எம் அப்துல் ரகுமான் என்கிற வீரை ரஹ்மான் அவர்களுடன்...

இசை முரசு நாகூர் அனிபா அவர்களுக்கு காலத்தால் அழியாத பாடல்கள் பல்வேறு கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.. 

அவர்களில் ஒருவர் திருநெல்வேலி வீரை எம் . அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆவார்கள்.

கைகளை ஏந்தி விட்டேன்..
 கண்ணீரை சிந்தி விட்டேன்... கல்புக்குள் உன்னை நினைத்து இறைவா...
 உன் கருணைக்கு ஏங்குகின்றேன் தலைவா...

இறைவா...
வரம் தருவாய்...
நலம் பெறவே அருள் புரிவாய்...
சரியா...
இது முறையா...
என்னை ஏங்க வைத்து நீ இருப்பது. 

சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே...
கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கணும் நெஞ்சுக்குள்ளே...
ஏந்தல் ரசூலுல்லாஹ் சொன்ன சொல்லை...
கேட்டால் இன்பத்துக்கெல்லை இல்லை...

நினைத்தாலே அருட் கதவு திறந்து விடும்...
உன்னை துதித்தாலே அருள் மழை பொழிந்து விடும்...

வானோங்கும் மார்க்கம்...
வளமான மார்க்கம்...
தீனோரின் நெறி அல்லவா...

இந்த வரிசையில் மிகவும் சிறப்புக்குரிய இன்னொரு பாடலாகிய 

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்....
அத்தனையும் சொர்க்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்...
தீனோரே கேளுங்கள் 
திரு நபிவழி வாருங்கள். 
என்ற பாடல் மிகவும் புகழ்வாய்ந்த ஒன்றாகும்.

இதற்குப் பின்னால்  ஒரு செய்தியும் உண்டு.

1990 காலகட்டங்களில் வருடத்தில் பாதி நாட்கள் சென்னையில் இருந்து எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக ட்ரிபுயூனல்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் ,அதனையும் தாண்டி உச்சநீதி மன்றம் வரையிலும் வழக்குகள் நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்தக் காலகட்டங்களில் இசை முரசு நாகூர் அனிபா அவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள , கென்னட் தெரு, லட்சுமி மோகன் லாட்ஜில் தங்கி இருப்பார்கள். அதுவும் ஒரு வாரம் பத்து நாட்கள் என்று அவர்கள் அங்கே இருப்பார்கள்.

நான் சென்னையில் பணிகள் முடித்து ஓய்வாக இருக்கும் போது அங்கே சென்று விடுவேன். 

பக்கத்தில் எங்காவது இசை நிகழ்ச்சிகள் நடத்த இருந்தால் அங்கும் என்னை அழைத்துக் கொண்டு செல்வார்கள். 

சில நேரங்களில் நான் தங்கி இருக்கும் ரீகல் ஓட்டல் அறைக் கே இசை முரசு அவர்கள் வருகை தந்து விடுவார்கள். 

இரவு 8 மணிக்குப் பின்னர் சென்னை கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் சென்று காற்று வாங்குவது அவர்களின் வழக்கமாக இருந்தது. 

அவரின் புகழ்வாய்ந்த பென்ஸ் காரில் கடற்கரையில் மணலில் சென்று அமர்வதற்கு வசதியாக போர்வைகள்  விரிப்புகள் வைக்கப்பட்டு இருக்கும்.

அத்தகைய கடற்கரை இரவுகளில் சமூக ஊழியரும், முஸ்லிம் குரல் மாத இதழ் ஆசிரியருமான கனிஜிஸ்தி அவர்களும் உடன் வருவார்கள்.

கனி சிஸ்தி அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்கள். 

என்னையும் என் குடும்பத்தினரையும் மிக நன்றாக அறிவார்கள். 

கல்லூரிக் காலங்களில் நான் மேடைகளில் பேசுவதையும், எழுதுவதையும் அவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களுக்கும் இவையெல்லாம் தெரியும். 

ஒருமுறை கனி ஜிஸ்தி அவர்கள் ஏந் தம்பி... நீங்க அண்ணன் பாடுகிற மாதிரி....ஏதாவது பாடல் எழுதக் கூடாதா? என்று என்னிடம் கேட்டார்கள்....
பக்கத்திலிருந்து இசை முரசு அவர்கள் ....இவர் எழுதித் தந்தால்
நான் என்ன பாடவா மாட்டேன்... கொடுங்கத்தா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார்கள். 

நள்ளிரவு வரும் முன்பு கடற்கரையில் இருந்து கிளம்பி  அன்றைய சாந்தி தியேட்டர் அருகில் இருந்த மவுண்ட் ரோடு பிலால் ஹோட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு இருப்பிடம் சென்று விட்டோம். 

மறுநாள் காலையில் 11 மணி அளவில் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களை சந்திப்பதற்காக லட்சுமி மோகன் லாட் ஜ் சென்றேன்.

நிறைய தலையணைகளை முதுகுக்கு தாங்கல் கொடுத்துவிட்டு... இசைமுரசு அன்றைய தினத்தில் வந்த நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாசித்துக் கொண்டிருந்தார்கள். 

நான் அதிகாலையில் சில வரிகள் எழுதி ....இசை முரசு அவர்களிடம் இஸ்லாமிய சரித்திரத்தை ....நபிகளாரை... இன்னும் இறை நேசச் செல்வர்களை.... தமிழை... பெரியாரை .... காயிதே மில்லத் அவர்களை...அண்ணாவை ...கலைஞரை பாடி இருக்கிறீர்கள். 

நபிகள் நாயகத்தின் மகளார் பாத்திமா நாயகி அவர்களைப் பற்றியும் பாடி இருக்கிறீர்கள். 

ஆனால் தாய்மையை ப் போற்றும் வகையில் நீங்கள் பாட வேண்டும்... அதனை நான் கவிதை வடிவில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். 
வாசித்துப் பாருங்கள் என்று அவர்களிடம் கொடுத்தேன். 

பல்லவியாக....

தாய்மை என்றாலே...
தூய்மை அல்லவா....
தியாக நெஞ்சையே 
நானும் சொல்லவா....

பத் துத் திங் கள் உதிரம் கொடுத்து உயிரை வளர்த் தாய் நித் தம் இன் பம் துன் பம் யாவும் ஒன்றாய் நினைத்தாய்

இன்னும் சொல்லவா 
என் உயிரே அல்லவா..

என்று அந்த வரிகள் அமையப்பெற்று இருந்தன. 

ம்ம்ம்ம்... ஹாம்... என்று அந்த வரிகளை சுரம் கூட்டி எனக்கு கேட்கின்ற அளவில் இசை முரசு அவர்கள் பாடிக் காட்டினார்கள்.

நல்லா எழுதி இருக்கியத்தா...
இன்னும் சரணங்களை எழுதிக் கொண்டு வாருங்கள்...
என்று என்னை என் கவிதை வரிகளை வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்கள். 

நான் கிளம்பும் முன்னே...அத்தா பத் துத்...
நித் தம் என்றெல்லாம் சுர வரிசைகள் எழுதியிருக்கிறீர்களே என்று மீண்டும் மீண்டும் பாடி என்னிடம் காட்டிக் கொண்டிருந்தார்கள். 

இந்தப் பாடல் சரணங்கள் அனைத்தையும் ...

வயிற்றில் கரு உண்டானதில் இருந்து...
தவழ்வது.... நடப்பது... பேசுவது பள்ளிக்குச் செல்வது... பட்டம் பெறுவது...மணமகனாக ஆவது..
பெற்றெடுத்த பிள்ளை  பேரனை பெற்றெடுக்கின்ற காலம் வரை உள்ளவற்றை பதினாறு வரி யாக எழுதி அவர்களிடம் கொடுத்து வந்தேன்.

என் மனதில் கண்ணதாசன் ஆகவும் வைரமுத்து ஆகவும் ஒரு நினைப்பு குடி வந்து விட்டது. 

ஒரு பத்து நாட்கள் கழித்து குற்றாலத்திற்கு இசை முரசு அவர்கள் வருகை தந்திருந்தார்கள். 
மெயின் அருவி மேட்டில் உள்ள ஆறாம் எண் அறையில் அவர்கள் இருக்கும் போது அவர்களை சந்திப்பதற்காக நான் சென்றிருந்தேன். 
பக்கத்தில் அருமையான கவிஞர் வீர எம் அப்துல் ரகுமான் அவர்கள் இருந்தார்கள். 

அந்த இடத்தில் இசை முரசு அவர்கள் அவர்களுக்கு நான் எழுதிக் கொடுத்த பாடலை பாடி காட்டினார்கள். 

கவிஞரிடம் தம்பி மீரான்..
நான் இளமையில் இருப்பது போல நினைத்துக் கொண்டு தத் தித் என்று வார்த்தைகள் போட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்... என்று என்னுடைய பாடலைச் சொல்லிக் காட்டினார்கள். 

மறுநாள் காலையில் குற்றாலத்தின் அதே அறையில் கவிஞர் வீரை எம் அப்துல் ரகுமான் அவர்கள்..

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்...
அத்தனையும் சொர்க்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்...
 தீனோரே கேளுங்கள் 
திரு நபிவழி வாருங்கள்..

வித் தகன் அல்லாவின் 
உத் தமத் தூதர் நபி 
இத் தரையோர்க் குரைத்த போதம்..

சத்திய இஸ்லாத்தின்... 
முத்தான கொள்கையில் 
சொத்தாகக் கிடைத்திட்ட வேதம் .....
என்று அந்தப் பாடல் அமைந்திருந்தது. 

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களுக்கு இசை அமைப்பதற்காக இன்பராஜ் என்கின்ற ஹார்மோனிஸ்ட் இருந்தார். 
அவரே மேடை நிகழ்ச்சிகளுக்கும் வாசிப்பார். பாடலின் வரிகளையும் இடை இசையையும் அவரின் ஹார்மோனியம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். 
இன்னொரு ஹார்மோனிஸ்ட் சேதுராமன் மென்மையாக இசைக் கோலங்கள் வரும் படி செய்வார். 

எத்தா... நீங்களும் எழுதி இருக்கிறீர்கள். 
நம்ம ரஹ்மானும் எழுதி இருக்கிறார். இரண்டையும் வைத்துக் கொள்கிறேன். 
பயன்படுத்திக் கொள்வேன் என்று... இசை முரசு சொன்னார்கள். 

அண்ணன் வீரை எம் அப்துல் ரகுமான் எழுதிய பாடல் இசை முரசு அவர்களால் பாடப்பட்டு ஒலிப் பேழையாகவும், கேசட்டாகவும் வெளிவந்து இன்றளவும் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

என்னுடைய பாடல் இன்னும் அரங்கேற்றப்படாமலேயே ஆகிவிட்டது. 
அதனைப் பற்றி பின்னர் பேசுவோம்.

திங்கள், 22 ஜூன், 2026

நெசவுக்கார குடும்பம்

1970 களில்….அப்போதெல்லாம் எங்கள் குடும்பத்தில் நடந்து வந்த நூல் வியாபாரம், கைத்தறி நெசவு வேலைகளைச் செய்வதற்கு சிறிய வயதினரான எங்களையும் ஈடுபடுத்துவார்கள்.

 நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தினர் கைத்தறி நெசவுத் தொழிலில், உற்பத்தியில் இருந்தார்கள்.

 கோடை காலத்து பாவு போடுதல் என்பது மிக அழகாக இருக்கும்.
 எங்கள் தெருவின் மேற்கிலிருந்து குற்றால மலை காற்று இதமாக வீசிக் கொண்டிருக்கும்.
 காலை விடிந்தும் விடியாமலும் உள்ள பொழுதில் பாவு போடும் வேலையைத் தொடங்குவார்கள்.

 தறிக்காரர்கள் வீட்டில் உள்ள பெண் மக்கள் அந்தப் பாவில் முறுமுறுப்பு ஏற்றுவதற்காக நீண்ட துணிப்பையில் சாதாரண மஞ்சள் பை போல சுமார் மூன்றடி நீளத்திற்கு அதே அளவில் இருக்கக் கூடிய பையில், தாங்கள் மண் குடங்களில் கொண்டு வந்துள்ள கஞ்சியை ஊற்றிச்செல்வார்கள். 

பாவுக் களத்தில் நிற்பவர்கள்  நூல் பாவின் மீது வலது கை இடது கை பக்கமாக அந்த கஞ்சிப்பையை  ஆட்டிக் கொண்டு வருவார்கள்.

 நூல் பாவின் மீது படர்ந்த கஞ்சி, தரையில் பட்டு அந்த தரைப்பகுதியை மினுமினுப்பாக வீட்டின் தளத்துக்கு ஒப்ப வைத்து இருக்கும்.

 கொஞ்ச நேரத்தில் சிறுவர்கள் கையில் கம்பை கொடுத்து அந்தப் பாவின் மீது தட்டச் சொல்வார்கள்.
அவ்வாறு தட்டும் போது நீர்த் துளிகள் மேலெழுந்து வானவில்லின் வர்ணஜாலம் காட்டும்.
 மீதமுள்ள ஈரத்தை ஒரு நாலஞ்சு இன்ச்  அகலமும் 3 அடி நீளமும் இருக்கும் ஒரு புல் பிரஷ் மூலமாக துடைத்து எடுப்பார்கள். 

 முறுமுறுப்பாக்கப்பட்ட நூல் பாவை,  தறியில் கொண்டு வந்து இரண்டு விரலால் தேய்த்து முடிச்சு போடுவார்கள்.
 எங்கள் வீட்டைச் சுற்றிலும் இருந்த தறிகளில் இருந்து எழுந்த தறிச் சத்தங்கள் தான் எங்களுக்கும் தாலாட்டாக அமைந்திருந்தது.
 எங்கள் தாய் வீட்டுக்குப் பக்கத்திலும் அவ்வாறே கேட்டுக் கொண்டிருக்கும்.

 என் தாயைப் பெற்றெடுத்த வரும் தரகனார்களில் ஒருவராகவே இருந்தார்.

 வீட்டின் முன் பகுதியில் கணக்குப்பிள்ளைகள் இருப்பார்கள். ஒவ்வொருவரு நெசவாளருக்கும்  ஒரு கையடக்க புத்தகம்  கையில் வைத்திருப்பார்கள். அதனைக் கச்சாத்து என்பார்கள்.

 ஒவ்வொரு நெசவாளரும் வாங்குகிற சம்பள பணத்தையும், கொடுத்திருக்கின்ற நூல் களி விபரத்தையும் எழுதி இருப்பார்கள்.

 எங்கள் குடும்பமும் தரகனார் குடும்பம் என்பதால் இதனை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன்.

நெசவு செய்து கொண்டு வந்துள்ள வேஷ்டியை,  லுங்கியை எங்கள் பக்கம் சாம்பு என்று சொல்வார்கள்.சில நெசவாளர்கள் கைத்தறி சேலையை நெய்து கொண்டு வருவார்கள்.

 ஏதாவது பெருநாள் அல்லது தன்னுடைய குடும்பத் தேவைக்கு  பணம் வேண்டுமென்றால்  தரகனாரிடம்  முன்பணமாக வாங்குவார்கள். இரக்க குணமுடையவர்கள் மட்டும் பெருந்தன்மையாக கொடுத்து உதவுவார்கள். 

தொழிலாளர்களிடம் மிக மோசமாக, கடுமையாக நடந்து கொண்ட தரகன்கள் எவரும் செழித்து வாழ்ந்த வரலாறு இல்லை.

 எங்கள் பக்கம் அதற்குப் பெயர் குத்துமால் என்பதாகும்.

 தனது பட்டறைக்கு உற்பத்தியாகி வந்திருக்கிற வேஷ்டி தரமாக இருக்கிறதா என்பதை முதலாவதாக பெரு விரலும் , சுட்டு விரலும் வைத்து தடவிப் பார்த்தே கண்டுபிடித்து விடுவார்கள்.
 அதில் அவர்களுக்கு திருப்தி இல்லை என்று சொன்னால் சதுர வடிவிலான ஒரு லென்ஸ் வைத்திருப்பார்கள். அதனை வைத்து கூர்ந்து நோக்குவார்கள். ஒரு சதுர இன்ச் கணக்கில் 36 இழைகள் இருந்தால் அதனை சரியாக ஏற்றுக் கொள்வார்கள். குறைவாக இருந்தால் கொசு வலை போல் இருக்கிறது என்று சில தரகன்மார்கள் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
 நல்ல வெட்டி... நெருக்கி நெய்து கொண்டு வா என்றும் சொல்லுவார்கள்.
 எங்கள் ஊரில் இதற்கு சீழி பார்க்குதல் என்று பெயர். 

 பெரும்பாலும் பட்டறை பெட்டியில் இருக்கும் தரகனாரை எவரும் முதலாளி என்று சொல்லி அழைக்க மாட்டார்கள்.

 சின்ன வாப்பா, பெரிய வாப்பா,  மாமா, மச்சான் என்ற உறவு முறை சொல்லி மட்டுமே அழைப்பார்கள். எங்கள் ஊரில் ஆண் மக்கள் மட்டுமே தரகனார் வீடுகளுக்கு சென்று நெய்ந்து முடிந்த வேஷ்டிகளை கொடுத்து வரவு வைத்து வருவார்கள்.

 வேஷ்டிகள் நெய்து வைத்திருக்கக்கூடிய வீடுகளுக்குள் நுழைந்தாலே நூல்.... கஞ்சி.... சாயம் எல்லாம் கலந்த ஒரு விதமான வாசனையடிக்கும்.

 அந்தக் காலத்து சில தரகனார்கள் தான் பெற்ற செல்வத்தை பிறருக்கும் கொடுத்து உதவும் அளவில் பல்வேறு நலக் காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். 

எங்கள் ஊரில் அந்தத் தரகனார்கள் சிலர் ஏற்படுத்தி தந்தது தான் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி....அதனை ஒட்டி இருந்த இடங்களை வாங்கி தந்ததனால்  இன்றைய வளர்ந்து நிற்கின்ற கல்விநிறுவனங்கள் அவர்கள் உருவாக்கித்தந்தது ஆகும்.

 அத்தகைய தரகனார்களின் பிள்ளைகள் ஏற்படுத்தி தந்த வேறு சில நிறுவனங்கள் இன்று இல்லாமல் போனாலும்,  மேலப்பாளையம் தாய் சேய் நல விடுதி என்கிற கொடையும் மிகச்சிறந்ததாகும்.

 கடையநல்லூரில் உள்ள பல்வேறு கல்விக்கூடங்களும் புகழ்பெற்ற தரகனார்கள் உருவாக்கித் தந்தது தான்.
 
 செய்யும் தொழிலே நெய்யும் தொழில்.... என்ற மேன்மைமிக்க அந்த தொழில் திருநெல்வேலி மேலப்பாளையம், கடையநல்லூர், தென்காசி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், புளியங்குடி,  மதுரைக்குப் பக்கம் உள்ள திருமங்கலம், காஞ்சிபுரம் அதனையும் தாண்டி குடியாத்தம் என்று என்று ஒரே கோட்டில் அவர்களை நட்பாக்கி வைத்தது.

 இன்றைய திருவல்லிக்கேணியில் பல தெருக்களில் மேலப்பாளையம் ஊரைச் சார்ந்தவர்கள் சென்று குடியேறி அங்கும் தன்னுடைய நெசவுத் தொழிலையும் பாவு போடுதலையும் வைத்திருந்திருக்கிறார்கள்.

 இவை அத்தனையும் மேலப்பாளையத்தில் சிறப்புக்குரிய நெசவு சார்ந்த நினைவுகள் ஆகும்.

 இந்தச் சிந்தனை எல்லாம் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து என்னை ஆட்படுத்திக் கொண்டே வருகிறது.

 இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடையநல்லூரின் எழுத்தாளர் சிந்தனையாளர் சமூக செயற்பாட்டாளர் இலக்கியவாதி அன்பு அண்ணன் சேயன் இப்ராஹிம் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு எங்கள் ஊர் பக்கம் சொக்கம்பட்டி அருகில் உள்ள சினிமா இயக்குனர் திரி கூட புரம் மீரா கதிரவன் அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். அவர் ஒரு படம் டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு தெரிந்த விவரங்களை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
 அதற்குத்தான் எழுத்தாளர் சேயன் இபுராஹிம் அண்ணன் அவர்களிடம்  சொல்லிய விவரங்களை இந்த பதிவிலும் தந்துள்ளேன்.

 (அத்துடன் அண்ணன் சேயன் இப்ராஹிம்  அவர்கள்  அந்தப் படத்தில் டிராவல்ஸ் நடத்துகிற உரிமையாளராகவும் தோன்றி நடித்திருப்பார்கள்) 

 தமிழ்நாட்டு முஸ்லிம்களை ஒரு காலத்தில் நடுநிலையாளர்களாக, நலம் விரும்பிகளாக, அடுத்தவரின் பணத்தை பாதுகாக்க கூடியவராக,  அடுத்த வீட்டு பிள்ளைகளுக்கு பாதுகாவலராக எம்ஜிஆர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்  காலத்தில் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

 தமிழ்நாட்டு முஸ்லிம்களில் எவரும் பேசாத நம்பள்கி..... நிம்பள்கி..... என்கிற புதுவிதமான பாஷை ஒன்றை முஸ்லிம்கள் பேசுவதாக சில பல படங்களில் 1970களில் காட்டத் துணிந்தார்கள்.

 முதலில் வட்டி வாங்குகிற ஈட்டி காரனாக இந்த பாஷை பேசுபவர்களை காட்டினார்கள்.

 அதற்குப் பின்னர் விஜயகாந்த்,  அர்ஜுன், இன்றைய முதல்வர் விஜய் படங்கள் வரை படத்தை உருவாக்கிய கதாசிரியர்கள் வில்லன் என்றாலே முஸ்லிம் பெயர் தாங்கியவனாக இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஆக்கிக் கொண்டார்கள்.

 கொஞ்சம் எதார்த்தமான முஸ்லிமை காட்ட வேண்டும் என்று திருநெல்வேலி மண்ணின் மைந்தர் சுகா அவர்கள் நடிகர் கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம் படத்தின் டீக்கடைக்காரராக எம் எஸ் பாஸ்கர் என்கிற அற்புதமான கலைஞனை உருவாக்கம் தந்து கிராமத்து முஸ்லிமாக காட்டியிருப்பார்கள். 

மாநாடு படத்தில் முஸ்லிம்களின் வேதனையை கொஞ்சம் சொல்லி இருப்பார்கள்.

 எந்தத் தமிழ் படத்திலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் வாழ்வியலை முழுமையாகக் காட்டியிருக்கவில்லை.

 தமிழ் முஸ்லிம்கள் நெசவு மட்டுமல்லாது பாய் முடைதல், பீடி சுற்றுதல், விவசாயம் செய்தல், ஆடு மாடுகள் வளர்த்து வியாபாரம் செய்தல், என்று சமூகம் சார்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 நெசவாளர் குடும்பம் என்பது எப்பொழுதும் வரவுக்கும்.... வறுமைக்கும் இடையே போராடும் தன்மைக்கு உரியதாகும்.

 அப்படி ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்து ஹபீபி என்ற பெயரில் அன்பு இயக்குனர் மீரா கதிரவன் அவர்கள்  கடந்த காலத்தை அப்படியே கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள்.

 இன்றைக்கு பல்வேறு ஊர்களில் தறி நெசவு சத்தம் முழுமையாக நின்று போய்விட்டாலும், ஒரு காலத்தில் பல்வேறு ஊர்களை வாழ வைத்த அந்த நெசவுத் தொழில் பர்மா.....ஜப்பான் குண்டு போட்டதற்கு பிறகு முழுமையாக இறக்குமதியை நிறுத்திக் கொண்டதாலும்.... 

1964 இலங்கை பிரதமர் பண்டாரநாயக்கா தமிழ்நாட்டு தமிழர்களை இலங்கையில் இருப்பதற்கு பல்வேறு புதிய வணிக சட்டங்களை கொண்டு வந்ததாலும்... 

புதிய பங்களாதேசம் உருவானதற்கு பிறகு கல்கத்தாவிற்கு மேலப்பாளையம் கடையநல்லூர் போன்றவற்றில் இருந்து அனுப்பப்பட்ட கைத்தறி வேஷ்டிகள் முழுமையாக நின்று போனதாலும்.... 
கைத்தறித் தொழிலாளர்கள் குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி மொழி தெரியாத தட்பவெட்ப ம் கூடுதல் குறைவாக இருக்கும் அரபு நாடுகளுக்கு பயணம் ஆனார்கள்.
 சில பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலுக்கு மாறினார்கள்.

 மாதாமாதம் சம்பளம் பெற்றால் போதும் என்று பெற்றெடுத்த குடும்பத்தையும் தான் பெற்ற மனைவி மக்களையும் விட்டு தூர தேசத்தில் பாலைவன வெயிலின் வெம்மையில் வாடி வதங்கி ஊருக்கு பணம் அனுப்பி வைத்தார்கள்.

 ஏதோ ஒரு கனவில் தொழில் இல்லாமல் 1970களில் துபாய் மற்றும் அரபக நாடுகளுக்கு சென்று வேலைக்கு சேர்ந்தவர்கள் இன்றளவிலும் பலர் அங்கே இருந்து கொண்டு தாய் நிலத்தில் சாய்ந்து ஓய்வெடுப்பதற்கு 
 முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 கைத்தறி நெசவுக்கு கேடு செய்தது பவர்லூம் என்று இருந்தாலும்  .... இன்னும் குடியாத்தம் காஞ்சிபுரம் பகுதிகளில் சங்கு மார்க், கிப்ஸ்,  பூட்டு மார்க்,999 வேஷ்டிகள் மிக மெல்லிய நூலில் மிகச்சிறந்த தரத்துடன் நெய்யப்பட்டுக் கொண்டே தான் வருகிறது.

 தமிழ்நாட்டு மண்ணை செழிக்க வைப்பதற்கு திர்ஹம்களும் ரியால்களும் மாத மாதம் அனுப்பி வைத்தவர்களில் சிலர்...,தம்மண்ணில் தன் உடம்பை இறந்த பின்னர் அடக்கம் செய்வதற்கு கூட வாய்ப்பு இல்லாமல்....வெந்து தணிந்த பாலைவனத்து மணலில் மையவாடிகளில்  அங்கேயே அடக்கம் பெற்றும் விடுகிறார்கள்.

 கைத்தறி வேஷ்டிகளை உடுத்து பழகியவர்கள் மில் வேஷ்டிகளை உடுப்பதற்கு தயக்கம் தான் காட்டுவார்கள்.

 1999 வரை கலைஞர் மு கருணாநிதி அவர்கள் கைத்தறியில் நெய்யப்பட்ட சங்குமார்க் எட்டு முழ வேஷ்டியை உடுப்பதையும் சட்டையாக தைத்து போடுவதையும் பெருமையாக வைத்திருந்தார்.

 அதற்குப் பின்னர் தான் வெள்ளை லுங்கி களை... இரு முனைகளையும் இணைத்து தைத்தவற்றை உடுக்கத் துவங்கி இருந்தார்.
 மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் தான் வாழ்ந்த காலம் வரை எட்டு முழ கைத்தறி வேஷ்டிகளையே உடுத்திருந்தார்.

 இன்றுள்ள அரசியல்வாதிகளில் பலர் உடுத்துகின்ற எட்டு முழ வேஷ்டிகள் அசல் கைத்தறிகளில் உருவானவயா என்பது யாருக்கும் சொல்லத் தெரியாது.

கடந்த ஒரு வாரமாக நண்பர்கள் பலர் ஹபீபி திரைப்படம் பற்றி தகவல் தந்து கொண்டே இருந்தார்கள்.

 சினிமா விமர்சனங்களையும், சமூக வலைத்தளங்களில் அவை பற்றி பேசப்படுபவை பற்றியும் கூர்ந்து நோக்கி தான் நான் திரைப்படங்களை பார்ப்பதுண்டு.

 கமர்சியல் நோக்கங்களிலான படங்களை பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.

 ஈரானிய படங்கள்,  பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர்,  கோபாலகிருஷ்ணன், சுகா பாலா.... முதலான இயக்குனர்களின் படங்களைப் பார்த்து கதை தளங்களை வியந்துள்ளேன்.

 அந்தப் பெரிய இயக்குனர்களின் படங்களில் ஏற்பட்ட தாக்கமும் வியப்பும் மீரா கதிரவன் அவர்களின் ஹபீபி படத்தை பார்க்கும்போது எனக்கு ஏற்பட்டது.

 முக்கியமான கதாபாத்திரங்கள் ஒரு ஏழு அல்லது எட்டு.
 அதிலும் குறிப்பாக இயக்குனர் கஸ்தூரிராஜா.... கடையநல்லூர் காரணமாகவே மாறி இருந்த இளைய நடிகர் ஈஷா, தரகனாராக நடித்திருந்த அருமை அண்ணன் தொழிலதிபர் செய்துங்கநல்லூர்  ஏவிஏ கஸ்சாலி இன்னும் ஒரு சில வினாடிகளே முகம் காட்டினாலும் நெஞ்சுக்குள்ள நிறைந்தவர்கள் அந்த படத்தில் 1970 காலத்தை வாழ்ந்தே காட்டி இருந்தார்கள்.

 தமிழ் சினிமாவில் தமிழ் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை அவர்களின் தொழிலை இன்னும் நிரம்ப இயக்குனர்கள் இயக்கம் செய்வதற்கும் நடிப்பதற்கும் வருவார்கள் என்று நம்புகிறேன்.

 பல்வேறு சகோதர சமுதாயத்தின் நண்பர்களுக்கு முஸ்லிம்கள் வாழ்க்கையிலும் இவ்வாறெல்லாம் பிரச்சனை இருக்கிறதா? பண்பாட்டுக் கூறுகள் இருக்கிறதா? துன்பங்கள் இருக்கிறதா? என்பனவற்றையெல்லாம் பற்றி இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

 கருணையோடு பார்க்கத் துவங்கி இருக்கிறார்கள்.

 இது கேரளாவில் என்றோ துவக்கம் பெற்று விட்டது.

 ஹபிபி படத்தில் பல இடங்களில் இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பாடல்களின் வரிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 ஏ ஆர் ஷேக் முகமது பாடிய கப்பலுக்கு போன மச்சான் பாடல் ஒலிக்கும் போது உள்ளம் என்னவோ செய்கிறது.

 காயிதே மில்லத் படத்தை வேறு எந்த தமிழ் திரைப்படத்திலும் இதுவரை எந்த இயக்குனர்களும் காட்டியதாக நான் அறியவில்லை.

 அந்த பிதாமகன் படத்தை இந்த இயக்குனர் காட்டுவது மிகப் பெருமைக்குரியதாகும்.

 அதுபோல ஒரு சில வினாடிகள் மட்டும் ஒலிக்கும் பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடிய இசையமுரசு நாகூர் அனிபாவின் பாடல்....
 முஸ்லிம் லீக்கின் கொடி இதுவெல்லாம் 1970 காலகட்டத்து கடையநல்லூரை காட்டிக் கொண்டே இருக்கிறது அது எங்கள் ஊர் மேலப்பாளையத்திற்கும் இந்த படத்தின் கூறுகள் பொருந்தும்.

இது போன்ற கலாச்சார பெட்டகங்கள் இன்னும் திறக்கப்பட வேண்டும் .இதன் வெற்றி அதற்கு வழி கூறும்.

 ஏழை நெசவாளன் குடும்பத்தின் இளையவர் வெளிநாடு செல்வது...
 அந்தக் குடும்பத்தின் மூத்தவர் பெற்றெடுத்த மகன் வயசு ரசவாத மாற்றத்தால் பெண்ணை நேசிப்பது....
 கட்டுப்பாடு மிக்க சமூகம் அதற்கு ஏறெடுக்கும் பார்வை...
 ஊர் ஜமாத் கூட்டங்கள்...
 அங்கு விதிக்கப்படும் தண்டனைகள்...
 முஸ்லிம்களின் அந்தக் காலத்து திருமணம்...
 இந்தக் காலத்து நிச்சய தாம்பூலம்...
 ஏமாற்றத்தை... பொருளாதார இழப்பை..
 குடும்பத் தலைவனின் 
 இறப்பை சந்திக்கும் குடும்பம்...
 கடைசி தொழுகை...
 தந்தையின் கடனுக்கு மகன் பொறுப்பேற்பது...
 அடக்கம் செய்வது...
 சகோதர வாஞ்சையுடன் பழகும் இந்து முஸ்லிம் நட்பு.... பாரு பல்வேறு கூறுகளை சொல்லுகின்ற படத்தை பார்த்து வந்தால் தான் முஸ்லிம்களின் ஒரு பகுதி...வாழ்வியலும் புரிய முடியும்.