திங்கள், 13 ஜனவரி, 2020

திருநெல்வேலியின் மனித நேய மருத்துவர் Dr.A. V. முகைதீன் அவர்கள்...



திருநெல்வேலியின் மிகச்சிறந்த மனித நேய மருத்துவர்களில் ஒருவரான Dr.A. V. முகைதீன் அவர்கள்...

பிள்ளைப்பருவத்தில் என் போன்றவர்களுக்கு , உடல் நலக்குறைவு ஏற்பட்ட பொழுதெல்லாம் , அவர் தந்த மருத்துவம்...வாழ் நாள் எல்லாம் நினைக்கத் தகுந்தது.

அப்போதெல்லாம் , நெல்லை டவுண், கீழரதவீதி அவரது மருத்துவ மனைக்கு என்னை, என் தங்கைகளை வாப்பும்மா மாட்டு வண்டியில் கூட்டிச்செல்வாள்.....

அவள் மடியில் கிடக்கும் எங்களின் , தலைய கோதி விடுவாள்..

கழுத்தை , நெற்றியைத் தொட்டு....உடல் சூட்டின் அளவை பார்த்துக் கொள்வாள்..

கனத்த கம்பளிப்போர்வைக்குள் கை நுழைத்து நெஞ்சிலும் முதுகிலும் விக்ஸ் களிம்பு வேறு தேய்த்து விடுவாள்.

சுரத்தில் துடித்த காலங்களில் நெற்றியில் வேப்பங் கொழுந்து இலை , மஞ்சள் , வெங்காயம் அரைத்து பத்து போடுவாள்..அதோடு ரெண்டு மூணு பொழுது சுக்கு , அக்கரா கஷாயம் தந்து காச்சல் விடுதான்னு பார்ப்பாள்.

அது " ஓப்பேறா விட்டால் " அடுத்து எங்க தலையில் மிளகு பொடி செய்து தேய்ப்பாள்..
இத்தனையும் செய்து முடித்தே டாகட்டரிடம் கூட்டிப் போவாள்.

தக தகன்னு தண்ணீர் கொதிக்கும் ஒரு எவர்சில்வர் மின் இணைப்பு தொட்டியில் அவர்..இடுக்கியின் மூலம் .சிறிஞ் எடுத்து ஊசியை மாட்டி எடுத்து , பிட்டத்தில் சொருகுவார். ஊசி வலியால் நாங்கள் அழுவோமோ இல்லையோ, எங்க கூட வரும் லெப்பார் மாமா அழுதிடுவார்....

பல மாத்திரைகளை சேர்த்து வேளா வேளைக்கு திங்க , ஒரு வெள்ளை குளவிக்கல்லில் அரைத்து பொட்டலமாக்கி , ரோஸ் நிற தண்ணீர் மருந்தும் ஒரு பாட்டிலில், தந்து அவரது கம்பவுண்டர் லோகு அண்ணா அனுப்பி வைப்பார்.

டாக்டரைப் பார்க்கும் போதெல்லாம் என் பிள்ளைப்பருவ காலமும் எங்க வாப்பும்மா நினைவும் வந்தே போகிறது.

வழக்கறிஞர் அப்துல் வகாப் மாமா பேத்தி திருமணம் நடந்த ஹைகிறவுண்ட் காயிதே மில்லத் அரங்கில் டாக்டரைப் பார்த்து நலம் விசாரித்தேன்.

மெல்லிய அதே அழகான குரலில் , அக மகிழ்ந்து வாழ்த்தினார்.
வாழ்க டாக்டர்.

2 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

திருநெல்வேலியின் மனித நேய மருத்துவர் Dr.A. V. முகைதீன் அவர்கள்... - பாசமுள்ள மருத்துவர்கள் கடவுள்கள். நான் எங்கள் குடும்ப மருத்துவர் டாக்டர் கே.காமராஜ். எம்.டி.சிவகாசி, அவர்களைப் பற்றி எழுதினேன். எங்களுக்கு குல தெய்வம் எது எனத் தெரியாது. எனக்கு 2 தெய்வங்கள் - ஒன்று டாக்டர் காமராஜ், இன்னொருவர் எனது மனைவி. இவர்கள் கருணையால் தான் உயிரோடு இருக்கிறேன் என - அற்புதமான அறிமுகம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு LKS.Meeran Mohideen

Jamesha habibullah சொன்னது…

அருமை அண்ணா