செவ்வாய், 12 நவம்பர், 2019

நெய்யும் தொழிலே செய்யும் தொழில்....

நெய்யும் தொழிலே செய்யும் தொழில்.... என்று வாழ்ந்தவர்கள் மேலப்பாளையத்தைச் சேர்ந்த நெசவாளப் பெருமக்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவந்த செய்யும் தொழில் நெசவுத் தொழில் 1977 களோடு அழிந்தே போய்விட்டது.

15க்கும் மேற்பட்ட மாஸ்டர் வீவர்கள் என்று சொல்லப்பட்ட தரகனார்களின்.... அந்த தொழில் 1944 பர்மாவில் ஜப்பான்காரன் போட்ட விமான தாக்குதல் குண்டுகளால் அழிந்தது.

1964இல் இலங்கையில் பண்டாரநாயகா அறிவித்த அறிவிப்பால் அங்கும் வியாபாரம் இல்லாமல் போனது.

64 லிருந்து 70 வரை ஏதோ தாக்குப் பிடித்துக் கொண்டு சில வியாபாரிகள் அங்கே இருந்தார்கள்.

சில வியாபாரிகள் கல்கத்தாவில் தஞ்சம் புகுந்தார்கள். அதையும் தாண்டி சில பேர்கள் சிட்டகாங் வரை தொடர்ந்தார்கள்.

1975-க்குப் பிறகு அண்ணா கூட்டுறவு நெசவாளர் சங்கம் என்று மேலப்பாளையம் RMA. அப்துஸ்ஸமத் அவர்கள் ஏற்பாட்டில் அன்றைய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் அவர்களுடைய காலத்தில் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசில் ஏற்படுத்தப்பட்டது.

அதற்கு முன்னர் O.846, O.1026 ஆகிய சங்கங்கள் இருந்தன.

இந்த இரு சங்கங்களில் O.846 சங்கம் மட்டுமே ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகள் வரை கொஞ்சம் உயிரைப் பிடித்துக் கொண்டு நடந்தது, இயங்கியது.

இன்றைக்கு அந்தச் சங்கம் தொழில் எதுவும் இல்லாமல், நேதாஜி சாலையில் அதன் கட்டிடங்களை வாடகைக்கு கொடுத்து வருகிறது.

சுத்தமாக நெசவுத்தொழில் மேலப்பாளையத்தில் அழிந்தே விட்டது .

கடையநல்லூர் இதுபோல நெசவுத் தொழில் செய்து வந்து, கைகுட்டை நெசவு செய்து வந்தது .
இன்றைக்கு அங்கும் இல்லை.

ஒரு காலத்தில் மேலப்பாளையம் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், தென்காசி, கடையநல்லூர் என்று திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவுத்தொழில் சீரோடும் சிறப்போடும் விளங்கி கொண்டிருந்தது.

அந்தத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான வருவாய் கிடைத்தது.

ஆனாலும் அந்த வருவாயைக் கொண்டு அவர்கள் கண்ணியமாக வாழ்ந்து வந்தார்கள்.

1975-க்குப் பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் வந்ததால் கைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் துபாய் நோக்கி படையெடுத்தார்கள். சவுதி அரேபியா, கத்தார், குவைத் நாடுகளுக்கும் சென்று அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மிகச் சிரமப்பட்டு படிக்கவைத்தார்கள்.

தாயகத்தில் பீடித்தொழில் ஒருபக்கம் பெண்மக்கள் செய்து வந்தார்கள்.

இன்று ஏறத்தாழ பீடித்தொழில் 75% இல்லாமல் போய் 25% மட்டுமே நடந்து வருகின்றது.

நெசவாளர்களும், பீடித் தொழிலாளர்களும் உருவாக்கிய பிள்ளைச் செல்வங்கள் இன்றைக்கு உலகின் பல்வேறு நாடுகளில், மிக உயர்ந்த பதவிகளிலும், நடுத்தர பதவிகளிலும், சாதாரண பதவிகளிலும் இருந்து பொருளீட்டி நாட்டை ஊரை மேலப்பாளையத்தில் புகழை பாது காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரும்பாலும் கைத்தறி வேஷ்டிகள் கட்டுகின்ற கலாச்சாரம், இன்றைக்கு ஊருக்கு ஊர் குறைந்து ,இரவில் தூங்கும்போது கூட ஜீன்ஸ் போட்டு கொண்டு தூங்கும் முஸ்லிம் இளைஞர்கள் பெருத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே கைத்தறி தொடர்பான அதன் ரகங்கள் பற்றி இந்த பதிவை படிக்கும்போது, எங்கள் முன்னோர்கள் செய்து வந்த கைத்தறி வணிகம் பற்றிய நினைவுகளும் என் கண்முன்னே வந்து போனது.
--------------------------------------------------------------------------------------------------------------------------

லுங்கியில் (கைலிகளில்) எத்தனை வகை இருக்கிறது உங்களுக்கு தெரியுமா??

* 60க்கு 40 கொஞ்சம் முரட்டு ரகம் ஜட்டி அணிய தேவையில்லை!

* 60க்கு 60 முரட்டு ரகத்தில் கொஞ்சம் நைஸ்!

* 80க்கு 80 நைசாக இருக்கும் ஜட்டி அவசியம் வேண்டும்!

* 100க்கு 100 அதிக நைஸ் ரகத்தை சேர்ந்தது புது மாப்பிள்ளைகள் கட்டுவது!

*120க்கு 120 பணக்கார வர்க்கம் கட்டுவது விலை அதிகம்!

இதெல்லாம என்ன என்கிறீர்களா? நூலின் தரத்தை வைத்து லுங்கிகள் நெய்யப்படுவது.

நெட்டையாக இருப்பவர்களுக்கென்றே ஒரு வகை கைலி உள்ளது. அதன் பெயர் ரெட்டை மூட்டு கைலி உயரம் அதிகமாக இருக்கும்.
நன்றி: @ Sadayan Sabu

உயரமாக உள்ளவர்களுக்கு இரட்டை மூட்டு கைலி மற்றும் 54 இஞ்ச் கைலி்..

54 இஞ்ச் கைலி இப்போது அதிகம் உற்பத்தி செய்வதில்லை. அப்படியே வந்தாலிம் 80 க்கு 80 மட்டும் தான். அதன் விலையோ இப்போது 975 ரூபாய்..

புதன், 23 அக்டோபர், 2019

மத நல்லிணக்க மேலப்பாளையத்திற்கு கீழக்கரை வள்ளல் B.S.அப்துல் .ரகுமானின் பரிசு.


நட்பின் பரிசு.
" நீங்க எல்லாம் இருந்துமா  ஒரு பள்ளிக்கூடத்தை இப்படி வச்சிருக்கீங்க.?"

" என்னத்த கேக்க ...சொல்லு மாப்பிள்ளை...." என்று கேட்டான் என் அருமை நண்பன் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன். 1992ஆம் ஆண்டு நான் இந்த கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன்.

 நாங்கள் இருவரும் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் ,ஆறாம் வகுப்பு தொடங்கி......,  சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பட்டம் முடிகின்ற வரையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகப் படித்தவர்கள்.

கல்லூரி வகுப்புகளின்  மதிய இடைவேளையில் , என் வீட்டு உணவை அவனும், அவன் வீட்டு உணவை நானும் ஒன்றாக அமர்ந்து உண்டு பரிமாறி பாசத்தை வளர்த்துக் கொண்டோம்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நகர் பெரும்பான்மையான அளவில் முஸ்லிம் மக்களைக் கொண்டது. அதே ஊரில் இரண்டு தெருக்களோடு ,அம்பிகாபுரம் ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளியும் உள்ளது.

" நான் நேற்று உங்கள் அம்பிகாபுரம் தொடக்கப்பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு மேற்கே உள்ள ரோட்டில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது வகுப்பறையில் பாடம் நடத்த இடமில்லாமல் பிள்ளைகளோடு ஒரு ஆசிரியை அந்தக் கோயிலுக்கு மேற்புறம் உள்ள மரத்தடியில் வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் .

தரையில் 20 அல்லது 25 பிள்ளைகள் இருந்தார்கள். அந்தப் பொழுதில் அவர்கள் இருந்த இடத்திற்கு ஒரு 20 அடி தொலைவில் சாக்கடைக்கு பக்கம் இரண்டு பன்றிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு கடும் சீற்றத்துடன் ஊளையிட்டுக்கொண்டே...பிள்ளைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன .
இதனைப் பார்த்த பிள்ளைகள்.... ஓவென்று கத்தவும்.... அந்த ஆசிரியை கைகளில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நிலைமையும் ....பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்." இதைத்தான் என்னுடைய நண்பனிடம் சொன்னேன்.

" என்னசெய்வது மாப்பிள்ளை?.... எங்கள் பள்ளிக்கு போதுமான இடங்கள் இருந்தும் வகுப்பறைகள் இல்லையே கட்டுவதற்கு பணம் ஒன்றுமே இல்லையே" என்று சொன்னான்.
" ஏன் நீங்கள் சென்று வசூல் செய்தால் நன்றாக இருக்குமே" என்று கேட்டபோது இல்லை... "நாங்கள் இங்குள்ள முதலாளிகளிடத்தில் சென்று நன்கொடைகள் கேட்டால் ....மிக குறைந்த தொகையை தந்து எங்களை அனுப்பிவிடுகிறார்கள்" என்று சொன்னான்.
" நாங்களும் எங்களால் இயன்ற அளவு போய்விட்டோம்.... ஒரு உதவி செய்வியா ? நீ எங்களோடு வந்து பணம் வசூல் வசூல் செய்து தர முடியுமா? என்று என் அருமை நண்பர் முத்து பாண்டியன் கேட்டார்.

 "அப்படியா நான் ....வருகிறேன் நாம் சென்று வசூல் செய்வோம் என்றேன்.
நண்பர் அம்பிகாபுரம் முத்துப்பாண்டியன் இன்றைக்கு நெல்லை ஆவின் பால் நிலையத்தில் மிகப்பெரிய தணிக்கை அதிகாரியாகப் பணி செய்து வருகிறார் .

அன்றைக்கு அவரோடு என்னுடைய நண்பர்கள் சிவாஜி திருநாவுக்கரசு, மயில்வாகனன் முதலானவர்கள் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள்.

என்னை அவர்கள் மாப்பிள்ளை என்று அழைப்பார்கள். நானும் அவர்களை மாப்பிள்ளை என்றுதான் மறுமொழி அழைப்பேன்.
நானும் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு நிர்வாகிகளாக அன்றைக்கிருந்த என்ஆசிரியர் கோமதி நாயகம் அவர்களின் அண்ணன் கருப்புசாமி , அன்றைய அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் நல சங்கத்தின் செயலாளர் அருணாசலம் உள்ளிட்டவர்களையும் சேர்த்துக்கொண்டு நன்கொடைகள் கேட்கச் சென்றேன்.

நன்றாக நினைவில் இருக்கிறது அன்றைய பொழுதில் இன்ஜினியர் எஸ்கே செய்யது அகமது அவர்கள் மேலப்பாளையம் ஆசாத் ரோட்டில் சப்பாணி ஆலிம் தெரு விற்கும் , எக்கின் பிள்ளை தெருவிற்க்கும் இடையே, மாடியில் ஒரு அலுவலகத்தை வைத்திருந்தார்கள் .
அவர்கள் மட்டும் ஓரளவு கண்ணியமான முறையில் நிதி உதவி செய்தார்கள்.

மற்றவர்களெல்லாம் 500 ரூபாய்க்கு கீழே உதவிசெய்து அன்றைய பொழுதில் எனக்கு மனதளவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி தந்தார்கள்.

என்ன செய்யலாம்? என்று யோசித்தோம் .

"எனக்காக ஒன்று செய்ய வேண்டும் .சென்னையிலிருந்து மணிச்சுடர் என்று ஒரு நாளிதழ் வருகிறது .அதற்கு முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது அவர்கள் ஆசிரியராக இருக்கிறார்கள் .அந்த நாளிதழில் நம்முடைய பள்ளிக்கூட தேவையை வெளியிட்டு நாம் நிதி கேட்கவேண்டும்" என்று சொன்னபொழுது... நண்பர்களும் அந்த பெரியவர்களும் உடன் பட்டார்கள் .
அன்றைய காலகட்டத்தில் ஆயிரம் ரூபாய் அளவில் கடைசிப் பக்கத்தில் மேலப்பாளையம் அம்பிகாபுரம் துவக்கப் பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று ஒரு விளம்பரம் செய்தோம்.
"கல்விப் பணிக்கு கனிவான வேண்டுகோள்" என்கின்ற தலைப்பில் வேண்டுகோள் விளம்பரம் செய்தோம்.

நம்புங்கள் தோழர்களே அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நிதி வரும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு புதையலே வந்தது. அதுவும் ஓரிடத்திலிருந்து மட்டும்.

1992 ஆம் ஆண்டு மத்தியில் நான் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழு உறுப்பினராக மறைந்த சேர்மன் அல்ஹாஜ் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு உறுப்பினர் ஆனேன்.
1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேர்மன் எம் ஏ எஸ் முஹம்மது அபூபக்கர் சாஹிப் அவர்கள் பள்ளியின் தாளளராக தேர்வு செய்யப்பட்டார்கள் .
அதற்குப் பின்னர் பள்ளியின் வளர்ச்சிக்காக தமிழகமெங்கும் அதையும் தாண்டி , அண்டை மாநிலங்களிலும் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம் .
அவ்வாறு நிதி திரட்டுவதற்கு ஒரு குழுவாக சென்று பணியைத் தொடர்ந்தோம்.
செலவை மிச்சப்படுத்த சேர்மன் அவர்கள் வைத்திருந்த, அம்பாசிடர் காரில், எரிபொருளை மட்டும் பள்ளிக்கூட செலவில் போட்டுக்கொண்டு, தமிழ்நாடு, கேரளா ,கர்நாடகம் என்று சுற்றி வந்தோம் .
கார் ஓட்டுவதற்கு ஆள் இல்லை. அதனால்...நானே கார் ஓட்டி ஆனேன். பல மாதங்கள் அப்பணியை செய்தேன் .
அதனால் மேலப்பாளையத்தில் "காரோட்டி ...தேரோட்டி" என்று பட்டம் கொடுத்து முஸ்லீம் கல்விக்கமிட்டியை கிண்டல் செய்து ஒருவர் போர்டு... கூட வைத்தார்.

சென்னையில் கீழக்கரை வள்ளல் ஈடிஏ கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களைச் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டோம் .

நாங்கள் சேர்மன் அபூபக்கர் சாஹிப் அவர்கள் தலைமையில் பள்ளியின் பொருளாளர் உசேன் உதுமான் , பேராசிரியர் முஹம்மது பாரூக் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம், வயதில் இளையவனான நானும் சென்று இருந்தோம்.

 பி எஸ் ஏ ரகுமான் அவர்களை சந்திக்க காத்திருந்த பொழுதில், மதுரை பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்களுடன், நீண்ட நெடிய நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் சென்றதும் நாங்கள் பி.எஸ்.ஏ. அவர்களை பார்ப்பதற்கு உள்ளே நுழைந்தோம்.

எங்களை கல கலப்போடும், மகிழ்ச்சியோடும் பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் வரவேற்றார்கள். மேலப்பாளையம் பள்ளிக்காக, உங்களிடம் நிதி கேட்க வந்து இருக்கின்றோம் என்பதையும் சொன்னோம்.
"அப்படியா மிக்க மகிழ்ச்சி.... நானும் மேலப்பாளையம் பள்ளிக்குத் தான் உதவி செய்யப் போகிறேன்" என்றார்.
என்னோடு வந்தவர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சிக் கடலில் இருந்தார்கள்.

நாம் கேட்கும் முன்பாகவே பிஎஸ்ஏ ரகுமான் அவர்கள் , நம் பள்ளிக்கு உதவிகள் செய்யப் போகிறார் என்கிற எண்ணம் குடி கொண்டு இருந்தது .

"சேர்மன் அவர்களிடம் உங்களுடைய ஊரில்.... யாரெல்லாம் கல்விப் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ? "
என்று கேட்டார் .

" நாங்கள் 1941இல் இருந்து கல்வி குழு மூலமாக கல்விப்பணிசெய்து வருகிறோம். முகம்மது லெப்பை தெருவைச் சேர்ந்த MLM.முகம்மது லெப்பை அவர்கள் 1988 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் .வேறு சில தனியார்களும்  உயர்நிலை, நடுநிலை, துவக்கப்பள்ளி களை நடத்தி வருகின்ற விதத்தையும் சொல்லி காட்டினோம்.

" இல்லை.... இல்லை... இன்னொருவர் பெயர்... எனக்கு நினைவில் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறது... அவர் யார்?" என்று கேட்டார் .
அப்போது அருகில் வந்த அவரது உதவியாளர் ஹஸன் அவர்களிடம், "அந்தப் பேப்பரை எடுத்து வாருங்கள்" என்றார்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவரது உதவியாளர் கைகளில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு நாளிதழ் இருந்தது .
அது ஆயிரம் ரூபாய் செலவழித்து விளம்பரம் கொடுக்கப்பட்ட மணிச்சுடர் நாளிதழ். அதனைப் பிரித்து பார்த்தார்கள். படபடப்போடு நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மீரான் முகைதீன் என்றால் யார் அவர் ? "என்று கேட்டார்.
எங்கள் சேர்மன் "எந்த மீரான் முகைதீன் ?"என்று திரும்ப அவரிடத்தில் கேட்டார்.
" எல் கே எஸ் மீரான் முகைதீன் என்றால் யார் அவர்?" என்று கேட்டார்.
என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த விஎஸ்டி சம்சுல் ஆலம் அவர்கள்..." நீங்கள் சொல்லுகிற மீரான் மைதீன் ...சாட்சாத் இவர் தான்" என்று என்னை தூக்கி நிறுத்தி அவர்கள் முன்னால் நிற்க வைத்தார்.
" தம்பி நீங்களா இந்த விளம்பரத்தை கொடுத்தீர்கள்? "உங்க வயசு என்ன ?"
"என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று புன்னகையோடு அடுக்கடுக்கான கேள்விகளை என்னிடம் கேட்டார்கள்.
நான் படபடப்போடு... பயந்து... வார்த்தைகளை மென்று.... விழுங்கி... பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

" நான் பெரிதாக ஒன்றும் தொழில் செய்யவில்லை. எங்கள் குடும்பத்து முன்னோர் பெரியவர்கள் வைத்து சென்றிருக்கிற நிலங்களில், வயல்களில், நெல், வாழை முதலான விவசாயம் செய்து வருகிறேன். ஆடுமாடுகள் வளர்த்து வருகிறேன். என்று சொன்னேன்"

என்னை அவர்கள் இருந்த இருக்கையில் பக்கத்தில் வரவைத்து ,அமர்த்திஅவர்கள் சிரித்துக் கொண்டார்கள்.

அம்பிகாபுரம் பள்ளிக்கூடத்தை பற்றி அதில் படிக்கின்ற 710 மாணவர்களைப் பற்றி..... மேலப்பாளையத்தில் நகரில் அமைந்துள்ள அதன் நிலைமையை பற்றி ....என்னிடத்தில் கேட்கும்போது ஒவ்வொன்றாகச் சொன்னேன்.
" சரி ....நான் இந்த தம்பிக்கு தான் உதவி செய்ய போகிறேன். முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு அடுத்து பார்க்கலாம் என்றார்கள். என்னோடு வருகைதந்த பொருளாளர் உசேன் உதுமான் அவர்கள் "என்னப்பா இது? நம்ம பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டிய பணம், உன்னுடைய விளம்பரத்தால் மாறிப் போய்விடும் போலிருக்கிறதே.. என்று என்னோடு காதோடு கேட்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒரு கட்டாக கட்டி என்னிடம் தந்து ,இந்தப் பணத்தைக் கொண்டு அரைகுறை நிலையில் இருந்த மூன்று வகுப்பறை களுக்கும் கான்கிரீட் கூரை அமைத்து , அதற்கு மேல் மூன்று வகுப்பறைகளும் எழுப்பி கட்டிடத்தை முடிக்கவேண்டும் என்று சொன்னார்கள் .

நான் மகிழ்ந்து போனேன். ஆனால் அவர்களிடம் அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டேன்.

இதனை மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நேரடியாக அனுப்பி வையுங்கள். நான் இதனை வாங்கி கொண்டு செல்வது சரியாக இருக்காது. வீணான சந்தேகங்களை ஏற்பட்டுவிடும் .என்று திரும்ப கொடுத்து விட்டேன்.

" பணத்தை சும்மா கொண்டு போங்க தம்பி ....பணம் தருபவன் நான்.... உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. யார் கேட்டாலும் நான் பதில் சொல்வேன்." என்று சொன்னார்கள்.
" இல்லை வாப்பா" என்று மீண்டும் மறுத்த உடன், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் நான் சொன்னது போல் நான்கு பிரிவுகளாக அந்த பணத்தை கட்டிடம் கட்டுவதற்கு மேலப்பாளையம் அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரே ஒரு நிபந்தனை மட்டும் என்னிடம் சொன்னார்கள்.....

 இந்தக் கட்டிடத்தை திறக்கும்போது ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களை அழைத்து அதனை திறந்து வைத்தால் , முஸ்லிம் சமுதாயமும், ஆதிதிராவிடர் சமுதாயமும் நெருக்கமாக இருக்கக்கூடிய நிலைமையை உலகமெல்லாம் அவர் சொல்லிக் கொள்வார். செய்யுங்கள் என்றார்கள்.

அவ்வாறு அவர்கள் ஆசைப்பட்ட படியே அமைச்சர் எம் அருணாசலம் அவர்கள் அந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்கள் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய பெயரும் , திறந்து வைத்த அமைச்சர் அருணாசலம் அவர்களுடைய பெயரும் மட்டுமே அந்த கல்வெட்டில் அமைந்திருக்கும் .

என்னுடைய பெயர் என்னுடைய நண்பர்களின், இதயத்தில் மட்டும் என்ற அளவில் உள்ளது.
இதனைத் தெரிந்த நண்பர்கள் குறிப்பாக முத்துப்பாண்டியன், சிவாஜி திருநாவுக்கரசு , பெரியவர் கருப்பசாமி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ்டி சம்சுல் ஆலம் என்று சிலர் இருக்கிறார்கள்.

இத்தனையும் செய்து கொடுத்த பின்னர்.... நான் எந்த நிர்வாகத்தில் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்தேனோ.... அந்த நிர்வாகம் கட்டிடத் திறப்பு விழாவில் இல்லை .
வேறு ஒரு நண்பர் நிர்வாகியாக மாறி விட்டார்.
நான் அந்தத் திறப்பு விழா மேடையில் அமர்வதற்கு கூட எனக்கு நாற்காலி எதுவும் இல்லை. தூரத்தில் காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன் .
வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்கள் .
அப்போது அவர்கள் கேட்டார் "எங்கே எல் கே எஸ் மீரான்?... அவருக்குத்தான் இந்த பொன்னாடை பரிசு அளிக்கப்படவேண்டும் .
அவர் பெயரைகூட இந்தப்பட்டியலில் காணோமே? சரி போய் வருகிறேன்... என்று சில வார்த்தைகள் முடித்து விட்டு என்னோடு கிளம்பி வந்து விட்டார்.

கிளம்பி கீழே வரும்போது... அங்கே போர்த்தப்பட்ட பொன்னாடையை எனக்கு போர்த்தி அழகு பார்த்தார்.
கட்டி அணைத்துக்கொண்டார்.

அதற்குப் பின்னர் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக அவர்கள் தந்த லட்சோபலட்சங்கள் என் மூலமாகவே தாளாளர் அவர்களிடம் கொடுக்கப்பட்டன, என்பது காலமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டியவையாகும்.

இன்றைக்கும் மேலப்பாளையம் ஆசாத் ரோடு வழியாகச் செல்லும் போதெல்லாம், வள்ளல் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள் உதவியால், அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் பள்ளிக்கூடத்திற்கு, "யுனைடெட் எக்கனாமிக் போரம் பிளாக்" என்கிற பெயரில், சீதக்காதி அறக்கட்டளை சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்ட அந்த வாசகம் என்னை மகிழ்வு படுத்திக் கொண்டே இருக்கிறது.

அந்த வள்ளல் BS.அப்துல் ரகுமானின் கொடைத் தன்மையை புரட்சித் தலைவர் MGR. அவர்கள் தாம் நடித்த, சிரித்து வாழ வேண்டும் என்ற படத்தில்
 ஒன்றே சொல்வான்...நன்றே செய்வான்...
அவனே அப்துல் ரகுமானாம்....என்று கவிஞர் வாலியை வைத்து பாட்டெழுதி  மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் இசையமைத்து TM.சவுந்தார் ராஜனை வைத்து பாட வைத்தார்..



புதன், 5 ஜூன், 2019

பெருநா ராத்திரி

முப்பது நோன்பு வச்சு பெருநா பாக்கிற மனசின் குஷி....அது ஒரு தனி ரகம் தான். அதுக்கு வேற என்னத்த பகரமா பார்க்கமுடியும்?

நாற்பது வருஷத்துக்கு முந்தி....பாப்ளின் சட்டையும் ...மல்லு வேஷ்ட்டியும் பெரிய ஆட்களுக்கும்.....கலர் துப்பட்டாவும் மூட்டி தச்ச வேஷ்ட்டியும் பொம்பிளைகளுக்கும், ...டவுசர் சட்டை,பாவாடை தாவணி இதெல்லாம் இள வயசுப்பிள்ளைகளுக்கும்...கிப்ஸ் சங்கு மார்க்,கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன், உஸ்மான் பிராண்ட் லுங்கிகள்,துபாயில் இருந்து வந்த மஞ்சள்....அரக்கு கலர் பனியன்கள்,பிரஸ் பட்டன் வச்சு தச்ச சட்டைகள்  இளவட்டங்களுக்கும்  போதுமானதாக இருந்தது.

இப்ப மாதிரி ரெடிமேட் சமாச்சாரங்கள் எதுவும் அப்போ கிடையாது.
டவுன் ஆர்.எம்.கே.வி...அதுக்குப்பக்கத்தில் நாவல்ட்டி கிளாத், திருநெல்வேலி ஜங்ஷனில்  த.மு.பில்டிங்கில் ஜீனத் செல்வா மகால்.அது மாடியில் அதுக்கு கீழே ஏ.பி.சி.துணிக்கடை அப்புறம் ராஜா காம்ப்ளக்சில் கல்பனா சங்கீதா ஜவுளிக்கடை என்று தான் திருனவேலி இருந்தது.

அங்கேயே அப்படி என்றால் மேலப்பாளையத்தை சொல்லணுமோ?
பசார் ஹக்கீம் ஜவுளிக்கடை, ஆர்.எம்.ஏ. அப்துல் சமத் கடை இந்த இரண்டும் ஆள் நிக்க இடம் இல்லாமல் பெரு நா ராவு வரை இருக்கும்.
அதுக்கு பிறகு சாச்சப்பா காஜா கடை,  காட்டுவா ஜவுளிக்கடை என்று விரிந்தது.
வகை வகையா,  கலர் கலரா தொப்பிகள் பஜாரில் குவிந்து கிடக்கும்.அரபு நாட்டு புண்ணியத்தில் இன்னைக்கு வெள்ளை சீனா தொப்பி போதும்ன்னு ஆகிப்போச்சு.இன்னும் பல பேருக்கு வேண்டாமேன்னு மாறிடுச்சு.


வியாழன், 18 ஏப்ரல், 2019

ஓங்க கூட ..மனுஷன் வருவானா?



நாய்க்கும் நம்மளுக்கும் ...அதென்ன நம்மளுக்கும் ? இல்லையில்லை.... நமக்கும் .....நமக்கும் எதுக்கு? நாய்க்கும் எனக்கும் உள்ள தொடர்பு  கொஞ்சம் .....நீட்டமானது.

எங்க ஊர் பக்கம் நீளத்தை நீட்டம்ன்னு சொல்லுவாக....அதுங்க பேர்ல எனக்கு பாசம் கூடுதலாகவே உண்டு.

ஏற்கனவே ஒரு நாயை வளக்க நான் வாங்கி....அது தப்பி வந்த நாய்ன்னு தெரிஞ்சு அத அந்த நாய் ஐயாக் கிட்ட சேர்க்கிறதுக்குள்ளே ....எச்சிப்போச்சு....அது தனிக்ககதை.
ஆனா இந்தக்கதை வேற......
எங்க வீட்ட்ல உள்ளாளுங்க.... நாயை நான் தொட்டேன்னு தெரிஞ்சாலே சம்மதிக்க மாட்டாக.எழு முறை கைகால்களைக் கழுவிவிட்டு தான் சோறு திங்க வரணும்ன்னு  சொல்லிடுவாக.
ஆடம்பரத்துக்காக நாய் வளர்க்கக் கூடாது....தோட்டக்காவலுக்கு.... நாய் வளக்கலாம்ன்னு....மார்க்க வெவரம் சொன்ன பிறகே ....கொஞ்ச காலத்துக்கு பெறகே சத்தங்காட்டாம இருகிறாக.

ஒரு நாள் தருவை வயக்காட்டுல.... வரப்பு ஓரமா.... என் கால் பக்கம் ....நின்ன நல்ல பாம்பு வேகமா வந்துக்கிட்டு இருந்துச்சு  ....அத பார்த்த பொறவு...நான் அதிர்ச்சியில நிக்க ... எங்கிட்ட பாம்பு வாறதுக்கு முந்தியே....கிட்ட நின்ன நாய் ஒன்னு....அத ஒரே கவ்வு தான்...தலையில்  இருந்து ஒரு சாண்....தூரத்தில் அந்த பாம்பை வாயில் வச்சிக்கிட்டு ...அங்குமிங்கும் உலுப்பிக்கிட்டு ....ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.      அந்த நாயால் வேற யாரையும் கூப்பிடக் கொள்ள முடியாம.....அதுக்கப்புறம் ஆங்காரமா ஆக்ரோஷமா ...கடிச்சுக் கொதரிக்கொண்டு இருந்தது.....நாய் பிடிச்ச பிடிப்பில் கடிச்ச கடிப்பில்....அந்த பாம்பின் வாழ்வு முடிஞ்சே போச்சு.

அந்த சாயங்காலப் பொளுதில் பாம்பை புடிச்சு , கடிச்சு என்னை நிக்க வச்ச நாய்க்கும் எனக்கும் பெருசா எந்த பந்த பாத்தியமும் இல்லை....எப்பவாச்சும் நான் வக்கிற சோத்தை....பிஸ்கோத்தை திங்கும்.அப்புறம் போய்டும்.ஆனாலும் அன்னைக்கு அந்த நாய் தான் பாம்புக்கடியில் இருந்து .....அது வாய்ல புடிச்சிட்டு போச்சுது. ஏற்கனவே நாய்ங்க பேர்ல இருந்த பாசம் இன்னும் கூடி விட்டது.
ஒரு நாள் எங்க ஊர்ல ஒரு கடையடைப்பு....அன்னைக்கு பார்க்க ஊரே அடங்கிப்போய் .....ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாமல், அமைதியாய் ....இருந்தது.

அதுவும் ராத்திரி எட்டரை மணிக்கே அந்த நிலைமை.
நான் எங்கோ போய்விட்டு அம்பாஸிடர் காரில் எங்க ஊர்  ..பசார்ல கார்கள் நிறுத்தப்படுகிற இடத்தில் ..எங்க புகாரி அண்ணன் நிக்கிறதை பார்த்துவிட்டு காரை நிறுத்திவிட்டு இறங்கினேன் .
எங்க அண்ணனிடம்   .எதோ பேசிமுடித்துவிட்டு கார்கதவை திறந்து நாங்கள் இருவரும்  உள்ளே ஏறப்போற சமயம்......எங்கிருந்தோ ஒரு நாய் வந்து உரிமையோடு...... நிதானமாக உள்ளே ஏறி ....பின் இருக்கையில் பின்னங்கால்களை  மடக்கிக்கொண்டு ...முன்னங்கால்கள் இரண்டையும் நிறுத்தி .....உட்கார்ந்து கொண்டது.....அது உட்கார்ந்து இருந்த தோரணை....என்னவோ அது வளர்ந்த வீட்டுக்காரில் அப்படி உட்காருமோ அப்படி இருந்தது .

கொஞ்சம் சந்தன நிறம்கொண்ட வனப்பில்  அது.....நல்ல வளர்த்தியா.....ஒசரமா....இருந்தது...நல்ல பசியில் இருப்பது போல கெறங்கிப் இருந்தது..நாக்கை வெளியே தள்ளி மெல்லிய குரலில் முனங்கிக்கொண்டு இருந்தது.

இது வெல்லாம் பார்த்து எங்க அண்ணன் .....காரைவிட்டு தூரமா....கொஞ்சம் உஷாரா....முன் ஜாக்கிரதையா..... நின்னுக்கிட்டு இருந்தான்.


நான் எவ்வளவோ சத்தங்காட்டியும் ,  கதவைத் திறந்து விட்ட பின்னரும் அந்த நாய் வெளியே வராமல் சத்யாக்கிரகம் செய்தது....

அவனும் சப்தம்  போட்டு பார்த்தான்..தோ...தோ...ன்னு கூப்பிட்டுப்பார்த்தான்.

 ம்ஹும் ஒன்னும் நடக்கவில்லை.

மிரட்டி,வெரட்டி பார்க்க கம்புகள் ஏதும் அங்கு கிடைக்கவும் இல்லை.
அதுவும்  உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.
அப்புறம் நானும் அவனும் என்ன செய்யலாம்ன்னு ஆலோசனை செய்தோம்.

இந்த நாயை என்ன செய்ய?....
" டே....நம்ம தோட்டத்தில் கொண்டு போய்விட்டுருவோம்.....அங்கே நிக்கிற மத்த நாய்களோடு இதுவும் ஒன்னுமன்னா இருந்துவிட்டு போகட்டும்."....அப்படீங்கிற ஒரு முடிவுக்கு வந்தோம்...

 " சரி கெளம்பலாம் ...உள்ள ஏறு " என்று நான் சொன்னேன்.

" ஏய்...என்ன வெளாடுரியா?.....நான் வரல்ல.....அது நாக்க நீட்டிக்கிட்டு நிக்கிற நெலையே..... ஒரு மாதிரியா இருக்கு ........அது பார்க்குற பார்வையே சரியில்லை...அந்த நாய் கூட ....இல்ல... நான் உங்கூட வரமாட்டேன்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

எவ்வளவோ தைரியம் சொல்லி ப்பார்த்தேன்...ஆனால் அவனோ அந்த நாய் பார்த்த பார்வையில் முன் சீட்டில் அமரவே முடியாதுன்னுட்டான்.

எந்த வகையிலும் நம் காரை தன் காராக நினைத்துக்கொண்ட அந்த ஜீவனை , எப்படியாகிலும் நம்ம தோட்டத்திற்கு கூப்ப்பிட்டு போய்டனும்ன்னு....முடிவு பண்ணிட்டு வண்டியை நகட்டினேன்.

எங்க தோட்டம் போக ஒரு அரை மணி நேரமாவது  ஆகும்....இந்த நாய்க்கு நம்ம தோட்டத்தில் சாப்பிட இந்த நேரத்தில் என்ன இருக்கும்?.....அங்கு இருக்கிற நாய்கள் எல்லாம் தின்னு முடிச்சு இருக்குமே.....என்ன பன்னுவோம்ன்னு பலவாறா யோசிச்சுக்கிட்டு .....பாளையங்கோட்டை பெட்ரோல் பல்க் பக்கம் உள்ள ஒரு ஓட்டலில் போய்....ஒரு பிரட் பாக்கெட் வாங்கிக்கிட்டேன்.....

கொஞ்சம் நிதானமான வேகத்தில் காரை ஒட்டிக்கிட்டு போனேன்.சில திருப்பங்களில் காருக்குள்ளே அந்த நாயால் பேலன்ஸ் செய்ய முடியாமல் காரின் உள்ளுக்குள்ளே விழுந்தது....அப்புறம் முனகியது.அங்கு போய்ச்சேர்கிற வரையில் அதன் மூலமாக ஒரு பிரச்சினையும் இல்லை.

தோட்டம் போய் சேர்ந்தேன்..கார் கதவைத் திறந்தேன்.அந்த நாய் இறங்கியது. மிரட்சியோடு அங்குமிங்கும் பார்த்தது....அதனை வளர்த்தவன் யாரோ?.....அவனைத்தான் அது அங்கே தேடி இருக்க வேண்டும்.கண்களின் ஓரத்தில்  ஒரு ஏக்கம் தெரிந்தது.

என்னால் முடிந்தது அந்த வேளையில்...நான் வாங்கிக்கொண்டு போய் இருந்த ரொட்டிப் பாக்கெட்டை பிரித்து.... அங்கு இருந்த பாலை அதன் மீது ஊற்றி ....ஒரு தட்டில் வைத்தேன்.   பசியோடு  இருந்த அந்த ஜீவன் ...அதனை ருசித்து உண்டது.

அப்புறம் எங்க இசக்கி முத்து தேவரிடம்....." இதக்  கவனமா பார்த்துக்கோங்க ....மத்த நாய்ங்களுக்கும் வக்கிற மாதிரி சாப்பாடு போடுங்க" என்று சொல்லிட்டு ஊருக்குப் புறப்பட்டேன்....

தனிமையில் ஊரை நோக்கி என் பயணம்...." எல்லாம் சரிதான்.    நாம கூப்பிடல்லை.....இந்த நாய் தானா வந்துச்சு....வண்டியில் ஏறுச்சு....இங்க வந்து உட்டுட்டோம்.....ஆனா நம்ம அண்ணன் வர மாட்டேன்னு சொல்லிட்டானே.....அத மட்டும் சொல்லியிருந்தாலும் பரவாயில்ல...
அதோடு   சொன்னானே ஒரு சொல்லு...":உன்னோடவும்....இந்த  நாயோடவும் ...மனுஷன் ஒன்னா வருவானா?

புதன், 6 பிப்ரவரி, 2019

எண்ணங்கள் ஆயிரம்

வசந்த கால நினைவலைகளில்.......
முஸ்லிம் லீக்
தலைவர்களின் எண்ணங்கள்  அடிக்கடி
வந்து செல்லும்.

எங்களுடைய குடும்ப மூத்த
தலைமுறையினர்,
விடுதலைப்போராட்டத்தில்
கலந்து கொண்டு
பல்வேறு அடக்குமுறைகளுக்கு
ஆளானவர்கள்.

மறைந்த தலைவர்கள்
காயிதேஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ்,
லியாக்கத் அலி கான், தந்தை பெரியார்,
கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்,
சட்ட மேதை KTM. அகமது இப்ராஹிம்...M.S.அப்துல் மஜீத்
தென்காசி மேடை முதலாளிகள்
மு.ந. அப்துர்ரகுமான் சாஹிப், மு.ந. முஹம்மது சாகிப், சென்னை ரஹீம் சாகிப், கடையநல்லூர் வெ. கா .உ.அ.அப்துர்ரகுமான் சாகிப், கல்லிடைக்குறிச்சி TM.பீர்முகம்மது சாகிப் உள்ளிட்ட  பெரு மக்களோடு தொடர்புடையவர்கள்.

திருநெல்வேலி District Board என்கிற மாவட்ட உயர் பதவியில்  எங்கள் குடும்பத்தின் மூத்தவர் LKS. அப்துல்லாஹ் லெப்பை Vice. President ஆக முஸ்லிம் லீக் சார்பாகத் தேர்வுகள் பெற்றவர்.

சொக்கலால் ராம்சேட் பீடி குடும்பத்தின் முக்கூடல் பாலகன் பீடிஅதிபர் D.S. ஆதிமூலம், விஸ்வநாதராவ் முதலானோர் அதன் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள்.
DS.ஆதிமூலம் அவர்களின் மகன் சிவப்பிரகாசம் அவர்கள் பின்னாட்களில் தி.மு.கழக நாடாளு மன்ற உறுப்பினராக இருமுறைகள்திருநெல்வேலித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

அந்தக்கால திருநெல்வேலி என்பது மேற்கே சிவகிரி தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் கன்னி ராஜ புரம் வரை நீண்டு பரந்து விரிந்து இருந்ததாகும்.... இந்தப்பரப்பில் உள்ளவர்கள் வாக்களித்து அவர்கள் பதவியில் தேர்வு பெற்றவர்கள் ஆவார்கள்.

மேலப்பாளையம் நெசவாளர்கள் சார்பாக தங்கத்தில் இந்தியப் படம் செய்து,  அதனை  முகம்மது அலி ஜின்னாஹ்விடம் கொடுத்தவர்கள் எங்கள் குடும்பப் பெரியவர்கள்.

அந்தத் தொடரில் தான்,  எங்கள் மீது அன்பும் பாசமும்,  மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப், அப்துல் லத்தீப் சாகிப், திருச்சி நாவலர் AM.யூசுப் சாகிப், AK. ரிபாயி சாகிப் Ex. MP,  எங்கள் உறவினர் SA. காஜா முகைதீன் Ex.MP என்று தொடர்ந்து வந்தது.

எங்கள் மாமா வழக்கறிஞர் LKM. அப்துர் ரகுமான் சாகிப் மேலப்பாளையத்தில் 3 முறை முஸ்லிம் லீக் நகர்மன்ற தலைவர் பொறுப்பில் இருந்தார்.

அவர்காலத்தில்  நத்தம்  தாமிரபரணி  ஆற்றில் பாலம் கட்ட ஏற்பாடுகள் செய்து திறந்தார்.

மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவப் பிரிவு கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் நிதித்திரட்டி ஏற்படுத்தினார்...

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளராக 32 ஆண்டுகள் பணியாற்றினார்.
சத்தக்கத்துல்லா அப்பாக் கல்லூரி நிறுவ மறைந்த மக்கள் தொண்டர் ஜமால் முகம்மது முதலாளியோடு, கடும்பணிகள் செய்தவர்.
 எங்கள் குடும்ப நிலங்கள் பல.... கோவில்கள்,  சர்ச்,பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் முதலானவற்றிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டவை....இன்னும் திருமண மண்டபங்கள், பொதுமக்கள் பணிக்காக கொடுத்தவையும் சேரும்.

இதுவெல்லாம் எங்களின் பொதுவாழ்வு.
அதனால் இழந்தது சொல்லிமாளாது.

அது எனது தலைமுறை வரை தொடர்கின்றது.

ஆனாலும் எல்லாம் தாண்டி....எங்களால் முடிந்த பணிகள் செய்து வருகிறோம்.

மனம் வாடுகிற நேரங்களில் வாழ்த்துக்கள் வளம் சேர்க்கின்றன தோழர்களே...

(இந்தப்படம் 1987 ஆம் ஆண்டு MLM.முகம்மது லெப்பை  மாமா குடும்ப நிகழ்வில் எடுத்ததாகும்.
படத்தில் தலைவர் சிராஜுல்மில்லத் அப்துஸ்ஸமதுசாகிப் , SA. காஜாமுகைதீன் சாகிப் Ex. MP, அவர்களோடு மாமா சாந்து. செய்யது அலி சாகிப், ஹாபிஸா முஹைதீன் அப்துல் காதர்,மைத்துனர் KAO. புகாரி முதலானோரோடு நானும் இருந்தேன் )

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

” டே...மீரா “.


அருந்தலைவர் முன்னாள் வெளிவிகாரத்துறை , ரயில்வே துறை அமைச்சர் E.அகமது அவர்கள்
My Dear Young Friend….What is your name….?
இது தான் அவர் என்னிடம் பேசி ......நான் அவரிடம் அறிமுகமானது.
1983 ஜூன் மாதம் 4,5 தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டை ஒட்டி , ஒரு சமூக நல்லிணக்க ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மேலரத வீதி காந்தி சதுக்கத்தில் அந்த ஊர்வலத்தை ....சிவந்த நிறமும் அழகும் நிறைந்த.... இளைஞர் வயதைக்கடந்து முதிர் இளைஞர் வயதை தொட்ட ஒருவர் , துவக்கம் செய்ய , உரையாற்றும் மேடையில் நின்று கொண்டு இருந்தார்.
அவர் தலையில் , தமிழக இஸ்லாமியர்கள் வழக்கமாகப் போடும் தொப்பியைப் போலல்லாமல் எம்.ஜி.ஆர்.போட்டு அவருக்கு அழகு சேர்த்த புஷ் குல்லாவைப் போல் தொப்பி இருந்தது..
சரளமான ஆங்கிலத்தில் அந்தப்பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார்...அவரது உரையை அன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் ,மிகச்சிறந்த ஆங்கிலப்புலமை பெற்ற அப்துல் லத்தீப் சாகிப் தமிழாக்கம் செய்து , மொழி பெயர்த்துக் கொண்டு இருந்தார்.
லத்தீப் சாகிப் பக்கத்தில் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் பிரபலங்களான முன்னாள் எம்.எல்.ஏ. தென்காசி மேடை முதலாளி மகன் சாகுல் ஹமீது, அவரது சகோதரர் முன்னாள் எம்.பி. ஏ.கே.ரிபாஈ , முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் கோதர்முகைதீன் ,சம்சுல் ஆலம் உள்ளிட்டோர் நின்று கொண்டு இருந்தார்கள்.
இன்னொரு பக்கத்தில் அன்றைய இளைஞர் களான காயல் மகபூப், கடையநல்லூர் கமருதீன் , மேலப்பாளையம் நிஜாமுதீன் ஆலிம் ,தீன் சுடர் சம்சு ஆகியவர்களோடு, மிக இளைய வயதினனான நானும் நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு...பக்கத்தில் நின்ற காயல் மகபூபிடம் ....” யாருண்ணா....இவர்” என்று கேட்டேன்.
“ டே...அவர் அகமது சாகிபுப்பா...கேரள அமைச்சர் ...அருமையா பேசுவார்....வக்கீல் வேற.” என்றார்.
எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்ட அந்த அழகான தலைவர் “My Dear young Friend….What is your name…. என்று ஆங்கிலத்திலும் ....எடோ...பேர் என்னோ ?..என்று மலையாளத்தில் கேட்டார்....நான் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன்...பேரைச்சொன்னேன்...அது எந்தா மீரான்....மீனிங் என்னோ?....” ஞான் அறியில்லா..”.என்றேன்.
மலையாள பட வசனங்கள் தந்த தைரியத்தில் ..குறைந்த மலையாளத்தில் பேசினேன்....பக்கத்தில் நின்ற சாகுல் ஹமீது எம்.எல்.ஏ....இதனைப்பார்த்து விட்டு என்னை அவரிடம் என்னுடைய குடும்பத்தைச்சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். அப்புறமா என் முதுகில்.... செல்லமாக ஒரு தட்டு தட்டினார்....
அதிலிருந்து என்னை எங்கே பார்த்தாலும்...” டே...மீரா “....என்று மட்டுமே அழைப்பார்....எப்படித்தான் என்னை இவ்வளவு தூரம் நினைவில் வைத்துள்ளார் என்று ஆச்சரியப்பட வைக்கும்.
என்னை வேறு யாரும் அவ்வாறு அழைத்ததே இல்லை. முகம்மது....... மீரான்..........மீரா முகைதீன் என்று தான் மற்றவர்கள் அழைப்பார்கள்..மிக நெருக்கமானவர்கள் மட்டும் எல்.கேஸ் என்று அழைப்பார்கள்.
அன்று தொடங்கிய பாசம் தான்...பல்வேறு மாநாடுகள்...பொதுக்கூட்டங்கள்....கல்லூரி பட்டமளிப்புக்கள்....புது டெல்லி, கேரள பயணங்களின் போது ....சந்திப்பேன்...மிக மகிழ்வாக என்னிடம் நலம் விசாரித்துக்கொள்ளுவார்.
1993 ஆம் வருடத்தை ஒட்டி முஸ்லிம் லீக்கின் அன்றைய தமிழகத்தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப் அவர்களோடு கேரளாவின் வட மாவட்டங்களுக்கு , ஒரு வார கால பயணமாக உடன் சென்ற என்னோடு....மிக நெருக்கமாகிவிட்டார்....” ஏ டோ..மீரா...... கெட் ரெடி சமத் சாப் “ ...என்று சொல்லிக்கொள்ளுவார் .
அந்தப் பயணத்தில் மங்களூர் ஓட்டல் ஒன்றில் லிப்ட் உடைந்து....நாங்கள் கீழே தரையில் மாட்டிக்கொண்டு....வெளியே வரமுடியாமல் தவித்த சம்பவங்கள் எல்லாம் தொடர்ந்து என்னைப்பார்க்கும் போதெல்லாம் ...சொல்லிக்காட்டுவார்.....
கிண்டல் செய்வார்.
நான் பாளையங்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது , இன்றைய காலம் வரை என்னைப்பற்றி அறிவார்.
அவரைப்பற்றிச் சொல்ல நிறைய உள்ளது.
2006 ஆம் ஆண்டில், அகமது அவர்கள் ரயில்வே துறை இணை அமைச்சராயிருந்தார்... காயல் பட்டினம் ரயில் நிலையத்தைப் பார்வையிட , தற்போதைய கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , மாநிலப் பொதுதச் செயலாளருமாகிய முகம்மது அபூபக்கர் ஏற்பாடுகள் செய்து வருகின்றார் என்பதனை அறிந்து ,திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ரயில் நிலையத்தின் கதியினையும் அவரிடம் காட்ட நினைத்து....அவரை அழைத்தோம்....எப்படியும் வந்து விடுவேன் என்று சொன்னதோடு , இருட்டையும் பொருட்படுத்தாது மேலப்பாளையம் ஊருக்கு வருகை தந்து , நூருல் ஆரிபீன் அரங்கில் , நான் உட்பட பல்வேறு இயக்கங்கள் கொடுத்த மனுக்களைப்பெற்றுகொண்டு உரையாற்றினார்.
எங்கள் ஊரில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் வழித்தடம் போட்டு 25 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் ஒன்றுமே இல்லை என்று.... நான் கோரிக்கைவைத்து பேசியதை எடுத்துக்கொண்டு....இவ்வளவு காலம் அந்த ரயில் வே நிலையத்திற்கு எவ்விதமான வளர்ச்சியும் செய்யாத , முன்னாள் , இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை , நீயும் உங்க ஊரும் என்னசெய்ய முடிந்தது....என்று கேட்டு விட்டு அவர்களை ஒரு பிடி பிடித்தார்...
அதோடு நிற்காமல் , அந்தப்பகுதி மாமன்ற உறுப்பினராக இருந்த என்னுடைய மனைவி மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கொடுத்த மனுக்கள் யாவற்றுக்கும் ஆவண செய்வதாக பதில் கடிதமும் எழுதினார்.
அதன் அடிப்படையில் மேலப்பாளையம் கிராசிங் ஸ்டேசன் என்கிற தகுதியைப் பெற்றதோடு , அது வரை அமையப்பெறாத நடைமேடை, கழிப்பறை , தண்ணீர் வசதி இவையாவும் செய்ய ரூபாய் 2 கோடி கிடைக்க பணிகள் செய்தார்....
அடிப்படை பணிகள் நடைபெற்றன...தற்போது ஏனோ பணிகள் தொடராமல் கால தாமதமாகின்றது .
இந்திய நாட்டிலிருந்து சவூதி அரபியாவிற்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகிற ஹாஜிகள் எண்ணிக்கை வரம்புகள் , இவர் காலத்தில் தான் இரட்டிப்பாகியது.
இந்தியாவுக்கும் , பாலஸ்தீனத்திற்கும் இணைப்புப் பாலமாக இருந்த யாசர் அராபாத்தோடு மிக நெருக்கமான நட்பினைபெற்று இருந்தார்.
அகமது அவர்களின் ராஜ தந்திர நடவடிக்கைகள் மூலம் சிரியா நாட்டில் போராளிகளிடம் சிக்கித் தவித்த இந்தியத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள்.
பல்வேறு அரபு நாடுகளில் பணி செய்கின்ற பல லட்சம் பேர்களுடைய வேலைவாய்ப்புக்கள் பறி போய் விடாமல் பாது காக்க பல்வேறு பாது காப்புச்சட்டங்கள் வர உழைத்தார்.
பல்வேறு அரபு நாடுகளின் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அழுது கிடந்த ஆயிரக்கணக்கான , சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களை , தாய் நாட்டிற்கு வரச்செய்தார்.
இன்னும் அவரைப்பற்றிச் சொல்ல நிறைய உள்ளது.அவரது மறைவு நாட்டிற்கு , மத நல்லிணக்கம் பேணுகின்ற நட்புகளுக்கு பேரிழப்பாகும்.
அவரைப்பற்றிய குறிப்பு.:
1938ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாளன்று E.அகமது அவர்கள் பிறந்தார்.
தனது இளங்கலை பட்டப்படிப்பை கேரள மாநிலம் தெள்ளிச்சேரியிலுள்ள அரசு ப்ரென்னென் கல்லூரியிலும், பின்னர் சட்டப்படிப்பை திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்துப் பட்டம் பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக குலாம் மஹ்மூத் பனாத்வாலா இருந்தபோது, இவர் தேசிய பொதுச் செயலாளராகவும், அவரது மறைவுக்குப் பின் அதன் தேசிய தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
1967, 1977, 1980, 1987 ஆகிய பருவங்களில் நான்கு முறை கேரள சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலத்தின் தொழிற்சாலைகள் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1971 முதல் 1977 வரை, கேரள மாநிலத்தின் Rural Development Boardஇன் நிறுவனத் தலைவராகவும்,
1979 முதல் 1980 வரை, கேரள மாநிலத்தின் சிறுதொழில் வளர்ச்சித் துறை செயல் தலைவராகவும்,
1981 முதல் 1983 வரை - கேரள மாநிலம் கண்ணூர் நகர்மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
1991, 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய பருவங்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004-2014 பருவத்திலான இந்திய நாடாளுமன்றத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்திருந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில், தொடர்வண்டித் துறை (ரயில்வே) இணையமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2004-2009 பருவத்தில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராகவும், 2009 ஏப்ரல் முதல் 2011 ஜனவரி வரை இந்திய ரயில்வேயின் இணையமைச்சராகவும், மீண்டும் வெளியுறவுத் துறை இணையமைச்சராக 2011 ஜனவரி 24ஆம் நாளன்றும் பொறுப்பேற்றிருந்தார். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக ஜூலை 2011 முதல் அக்டோபர் 2012 வரை பொறுப்பு வகித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் அங்கம் வகித்த காலங்களில், வெளியுறவுத் துறை, ரயில்வே, விமானப் போக்குவரத்து & சுற்றுலா, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் & காடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான சிறப்புக் குழுக்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியாவின் Government Assurance குழுவின் தலைவராகவும், இந்தியா - கத்தர் நாடுகளுக்கிடையிலான High Level Monitoring Mechanism (HLMM)இன் துணைத் தலைவராக நவம்பர் 2011இலும் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய அரசின் பிரதிநிதியாக 1991 முதல் 2014 வரை 10 முறை பங்கேற்றுள்ளார். GCC நாடுகளில் இந்தியப் பிரதிநிதியாக - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்டிருந்தார்.
பலமுறை புனித ஹஜ் செய்துள்ள இவர், இந்திய அரசின் ஹஜ் நல்லிணக்கக் குழு உறுப்பினராக 5 முறை சென்றுள்ளார்.
ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் 4 நூல்களை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வல்ல அல்லாஹ் அவரின் பிழை பொறுத்து மேலான சுவன பதி அருள்வானாகவும்.







புதன், 16 ஜனவரி, 2019

அன்பின் அழைப்புக்கள்


அன்று......கீழக்கரையிலிருந்து ஊருக்குப் புறப்படத் தயாராக இருந்த போது, நெல்லையின் பரந்த அறிமுகமான, கல்வியாளர் , பட்டிமன்ற நடுவர், இலக்கியவாதி, கவிஞர், ரோட்டேரியன் , தொலைக்காட்சி தொடர்களில் நடிகர் என்று பல்வேறு தளங்களில் தடங்கள் பதித்தவருமான,  எங்கள் குடும்ப நண்பர் , மாமா புத்தனேரி கோ.செல்லப்பா அவர்கள் அலைபேசியில் என்னை அழைத்தார்கள்....

"மாமா...எங்க இருக்கிய ? "

" இப்போ கீழக்கரையில் இருந்து கிளம்புறேன் மாமா " என்றேன்  ...
" எந்த வழியா வாரிய ? "
 "சாயல்குடி , தூத்துக்குடி ரோட பிடிச்சு நம்ம ஊர் வாறன்."

" அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு......வல்லநாடு தாண்டி, வசவப்பபுரத்துக்கு அடுத்து பாறைக்குளம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ரோட்டோரமா...எங்க தோட்டம் இருக்கு...அங்க வந்துடுவீங்களா..." ?என்று கேட்டார்..

" மாமா...என்ன விசேஷம்...உங்க தோட்டத்துல ? "

" வருஷா வருஷம் நடக்கிற..பொங்கல் சந்திப்பு அங்க  நடக்கு...எங்க வீட்டுல எல்லோரும் வாரங்க...நம்ம வக்கீல் தீன் சார்வாள்... வாரா.. நீங்களும் வந்துடனும்.சாப்பாடெல்லாம் அங்க தாம் ".. என்றார்.

" அவசியம் வந்துருதேன்...ஆனா...சாப்பிட ஊருக்குப் போகணும்..எங்க மச்சினன் வகைல உள்ள கல்யாணத்துக்கு...காலைல போக முடியல....உறவுகள் எல்லாம் சேரும் விருந்துக்காவது போகணும்...என்னை உட்டுருவியளா ?." என்று கேட்டேன்.

" தாராளமா...போங்க.." என்று அனுமதித்தார்.

முன்னெல்லாம்...திருனவேலியில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் பக்கம் உள்ள கீழக்கரைக்கு போகனும்ன்னா,சுமார் 6 மணி நேரமாவது...ஆகும்.
அம்புட்டு பள்ளம் மேடு..பள்ளம் ...நொடி இருக்கும்.

இப்போ...கிழக்கு கடற்கரைச் சாலை T. R. பாலு மத்திய அமைச்சராயிருந்த காலத்தில் ...ஜம்முன்னு பள பளன்னு ரோடாக்கி வச்சதால்.. இரண்டரை மணி நேரத்தில் போகலாம் , வரலாம்.

ஒரு...12.30 மணி இருக்கும்...மாமா சொன்ன இடத்துக்கு... பக்கமா நின்னு...போன்ல கூப்பிட்டேன்...
அடுத்தநிமிஷம் பன்னூல் ஆசிரியர் வக்கீல் தீன் சார், தோழர் பிரின்ஸ் சகிதம் , திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் என் வருகையை எதிர் பார்த்து நிற்பதைப் பார்த்து அவர் பக்கம் போய் நின்றேன்
மாமாவுக்கு அம்புட்டு சந்தோசம். நண்பர்களுக்கும் தான்.

காரை..ஒரு ஓரமா...நிப்பாட்டிவிட்டு அந்தத் தோட்டதுக்குள் நுழைந்தோம்...

புத்தனேரி செல்லப்பா மாமா குடும்ப ஆண் பெண் மக்கள் , பேரன்,  பேத்திகள் , முன்னாள் இந்நாள் இளைஞர்கள் , குழந்தைகள் என்று அந்தக் குடும்பத்தின் தலைமகன் 93 வயது பெரியவர் கோபால் ஐயா  தலைமையில் கூடி குதூகல மகிழ்வுடன் அங்கே இருந்தார்கள்.

மாமா குடும்பமும் திருனவேலியில் செல்வாக்கு மிக்க பண்ணையார் குடும்பம் தான்; இவர்களின் நிறுவனமும்,  பொறியாளர்களும் ஸ்ரீ வைகுண்டம் அணை க்கட்டினை உருவாக்கத் துணை நின்றார்கள்.


முந்தைய தலை முறையிலிருந்து தான் இளைய தலைமுறையினருக்கு ,  பண்பாடு கற்றுத்தரப்படுகின்றது..வயதில் சிறியவர்களான எங்களை அந்த மூத்த ஆசிரியர் ,  கல்வியாளர் எழுந்து நின்று கரங்குவித்து வரவேற்றார்...நான் குறுகிப்போனேன்....

அத்தோடு 70 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் குடும்ப மூத்தவர்கள் District Board தேர்தலில் நின்ற ...காலம் பற்றியெல்லாம் அவர்கள் சொன்னது...என்னை பிரமிக்க வைத்தது.அவ்வளவு நினைவாற்றல்...
அங்கே தோழர்கள் வீரபாகு , ராமலிங்கம் இருந்தார்கள்.

அந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முத்தாலங்குறிச்சியில் எங்கள் குடும்ப நிலங்கள் பற்றி நண்பர் வழக்கறிஞர் தீன் அவர்கள் ,  அங்கே இருந்தவர்களிடம் சொல்லிக்காட்டினார்கள்.

புத்தனேரி மாமா அந்தத் தோட்டத்தை சுற்றிக்காட்டினார்...பம்பு செட்டை போடச்சொன்னார்...பெருகி சீறிவந்த அந்தக் குழாய்த் தண்ணீரை என்னுடைய கரங்களைக் குவித்து குடித்துப் பார்த்தேன்...தாமிரபரணியின் சுவை...அந்தத் தண்ணீரில் இருந்தது.

மாமாவின் குடும்ப உறுப்பினர்கள், புதுமாப்பிள்ளைகள் ,  புது மணப்பெண்கள் தத்தம் துணைகளோடு அந்தத் தோட்டத்திற்கு  கார்களிலும் மோட்டார் சைக்கிள் களிலும் வந்து இறங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வருகை தந்த எல்லோருக்காகவும் மேலப்பாளயத்தின் இஸ்லாமிய பண்டாரிகள் இருவர் பிரியாணி தயாரித்துக்கொண்டு இருந்தார்கள்.

முன்னதாக வந்தவர்கள் ,  அங்காங்கே விரிப்புகள் விரித்து அமர்ந்து இருந்தார்கள்.


சிலர் பம்ப் செட் கிணற்றில் ஆனந்தமாக குளித்தபடி இருந்தார்கள்...சிலர் வயல் ,  தோட்டத்தின் ஒவ்வொரு கோணத்திலும் நின்று,  படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
இவற்றை பார்த்துக்கொண்டே நானும் அண்ணன் தீன் அவர்களும் ஒரு மரத்தடியில் புல் தரையில் அமர்ந்து கொண்டோம்...எங்களைப்பார்த்து மாமா புத்தனேரி செல்லப்பா அவர்களும் தரையில் அமர்ந்து கொண்டார்கள்...

நான் வழக்கமாக எங்கள் தோட்டத்தில் இவ்வாறு பல நேரங்களில் புல் தரையில் இருப்பேன் என்றேன்...

" காலையில் கல்லும் , மாலையில் புல்லும் அமர்வதற்கு உகந்தது " என்று... எங்க வாப்பா சொல்லுவார்கள்...நன் பகலில் நாங்கள் அமர்ந்து இருந்த புல் தரை...நீண்ட பயணம் தந்த சூட்டைத் தணித்து... குளிர்ச்சியை வழங்கியதை உணர முடிந்தது.ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அங்கிருந்தேன்.

" மாமா...கல்யாண வீட்டு நிக்காஹ் அரங்கில்,  என்னைக் காணாத உறவினர்கள்..
என்னவோ ஏதோ என்று போனில்  விசாரிக்கின்றார்கள்...நான் கிளம்பட்டுமா ? "
என்று கேட்டு விடை பெற்றேன்.

" சைவமாவது சாப்பிட்டு போங்களேன்.. என்று சொன்னார்கள்."
"..இல்ல மாமா ....போய்...  கல்யாண வீட்ல சாப்பிடணும் " என்று வந்துவிட்டேன்.

Family Getogether எல்லாம் கீழக்கரை ,  காயல்பட்டினம் , அதிராம் பட்டினம் தாண்டி முஸ்லிம் குடும்பங்களில் இல்லாமல் போய்...எங்காவது சில குடும்பங்களில் மட்டுமே நடக்கிற கதை ஆகிவிட்டது...

எதையாவது ஒன்றை  வைத்து குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இருப்பது... விருந்து உண்பது.....என்பதெல்லாம் ஒய்ந்தே போய் விட்டது....

என் மனசெல்லாம் நிறைந்த , அந்த மூத்த 93 வயது  பெரியவர்...கோபால் மாமா தான் குடும்ப ஒற்றுமை சின்னமாக என் கண் முன்னே தெரிகின்றார். அந்த ஆல மரத்தில் கிளைகளாக.... விழுதுகளாக அங்கே பூட்டன் பூட்டி வரை அந்த உறவுகள் ...உள்ளன.

அதற்கு சாட்சிகூற அங்கே நின்ற பல கார்களில் அவரது பெயரே கண்ணாடியில் ஜொலிக்கிறது....மகன்கள் , மகள்கள் பேரப்பிள்ளைகள் தாத்தாவின் பெயரை வெளிப்படுத்தி பெருமை அடைகிறார்கள்.

இன்னும் சொல்வேன்.

பொங்கல் 2018







புதன், 29 ஆகஸ்ட், 2018

" போதம் மாறிப்போச்சா?...


நடந்து ஊரை சுற்றுவது என்பது ஒரு காலம்.
 சைக்கிளில் ஊர் சுற்றியது என்பது ஒரு காலம்.

 இரண்டுக்கும் பிறகு,  மோட்டார் பைக்குகளில் ஓட்டிக்கொண்டு..... அல்லது ஒட்டிக்கொண்டு.... பின்னால் அமர்ந்து கொண்டு  போவதென்பது இப்ப உள்ள  காலம்ன்னு  ஆகிப்போச்சு.


 கொஞ்சம்.... தூர தொலைவுகளுக்கு,  கார் , பஸ் , ரயில் பயணங்கள் என்பது இருந்து , அதையும் தாண்டி விமானம் மூலம் செல்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.


 பெரும்பாலும் பெரியாத்துக்கு , அதான் நம்ம தாமிரபரணிக்கு நடந்தே சென்று குளித்து வருவதிலிருந்த ஆனந்தம் இப்போது கிடைப்பது இல்லையே ...என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

 காரணம்; சோம்பேறித்தனம் அல்லது நேரமின்மை.

 ஒரு காலத்துல.... காலங்காத்தால கருப்பட்டி சாயா குடிச்சிட்டு,  விறுவிறுன்னு பெரியாத்துக்குப் போய் குளிக்கிறேன்னு சொல்லி,....  அழிச்சாட்டியம் பண்ணுவது ...அந்தக் காலத்துல மாறாமல்  ஒரு மரபாக இருந்தது.

 அது தலைமுறைக்கு தலைமுறை மாறிக்கொண்டே இருந்தது....

 அப்படியாப்பட்ட பையங்களை,.... கல்யாண வீடுகளில் ....மாப்பிள்ளையாகி .... தொப்பி போட்டு.... தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்த .....அந்தக் காலத்து இளந்தாரி மாப்பிள்ளைகளைப்  பார்த்து ...." இந்தப்பயபுள்ள என்னா..... சேட்டை பண்ணுவான் ...இன்னைக்கு இம்புட்டு அமைதியா இருக்கான்..... வாரவ ... நல்லா... இவன  கவனிச்சுடுவா ....சூடு வச்சுடுவா பாருங்களேன் "  என்று சேட்டைக்காரனுகள பத்தி அந்தக் கால பெரிசுகள் சொல்லி.... சிரிச்சி.... கொளுத்தி விடுவாங்க.

காலாலே ஊரை யளந்தது ஒரு காலம்.... இப்போ உடம்புக்காக நடப்பது தவிர வேற எதுக்கும் நடக்க முடியல்ல.
அது தான் தொலையுது ....சைக்கிளிலாவது போலாமான்னு போனா.....என்னத்தையோ ......எதையோ தொலச்சவனை பார்க்கிறது மாதிரி பார்க்கிறாங்க.

மோட்டார் பைக்கில் ஊரைச்சுற்றுவது இப்பவெல்லாம் சவுகரியமா போச்சு.....ஸ்கூட்டார் சத்தங்காட்டாம போறதுக்கு லாயக்கு.

ஊருக்குள்ள ஞாயிற்று கிழமை  காலையில் குறிப்பா கல்யாணக்காலங்களில் பைக்கில் போய் வருவதற்கு ரொம்பா பொறுமை அவசியம்.

பிரஷர் மாத்திரை போட்டுக்கிட்டு ஊர்ல.... லாந்துகிற ஆசாமிகள்.... ஒட்டிக்கு ரட்டியா ...மாத்திரைகள் போட்டாத்தான் கோபம் வராது....எங்க இருந்து எவன் வாறான்னே தெரியல்லே.... . பசார் ரோடு முச்சூடும் கண்ட இடங்களில் எல்லாம் வண்டிகளை விட்டுட்டு போறோமேன்னு.... கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி வருவதில்லை.

முன்னவும் போகாம....பின்னவும் உடாம.... ரோடுகளில் அம்புட்டு நெருக்கடி.

ஊர்ல....மோட்டார் சைக்கிள் பெருத்துட்டு...." ஊட்டுக்கு ....ரவ்வண்டு...மும்மூனு பைக் இருந்தா....யா..ன் இவ்வளோ நெருக்கடி வராது?....இது ஹயாத் நூர் ஆட்டோ மாமா சொல்லுறது.

" இல்லங்கோ.....ஆட்டோவும்.... சேர் ஆட்டோவும் ....தான்" இடையில் ஒரு குரல். .

இதுக்கிடையே....காயிதே மில்லத் பள்ளிக்கூட ரோட்டில் குண்டுத்தெரு  வளவில் வேணி பஸ்காரன் வந்துட்டா.....கேக்கவே வேணாம்.....சண்டையில்லாமல் ஒரு நாள் கூட கழியாது.

கிட்டத்துல எங்காவது போறதுக்கும்....ஊர்ல கல்யாணம் காட்சின்னு வந்துட்டா....அங்க போறதுக்கும் வீட்ல  பைக்  இருக்கு.

பைக் கிடைக்காம பட்ட பாடு பத்தி ....அந்தக்  கதைக்குத் தான் நான் இப்ப வாறன்.

ஒரு நாள் ..ஒரு முக்கியமான கல்யாணம்.
நிக்காஹ் எங்கன்னா.....ஜின்னா திடல் மேக்கே....மகுனால் அஸ்பியா மதரசா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பள்ளிவாசலில்.....அதுக்குத் தயாராயி ....வெளிய வந்தா...அங்க போறதுக்கு எனக்கு பைக் இல்ல.....எங்க மகன் அத தூக்கிட்டு போயாச்சு.

கல்யாணம் நடக்கிற இடம் பக்கம் தான.... அங்க போறதுக்கு.... எதுக்கு கார்?....அப்படீன்னு மனசில் ஒரு எண்ணம்.
என்ன செய்யன்னு யோசிச்சேன்.

அப்பத்தான்.....மேற்க பார்த்தேன்.எங்க பெரியப்பா வீட்ல புகாரி அண்ணன் வாசலில் நின்னுகிட்டு இருந்தான்.

" உங்கிட்ட ...வண்டி ஏதாச்சும் இருந்தா...கொடம்பா ....பக்கத்தில் ஒரு கல்யாண வீட்டுக்குப்  போகணும்."

"எடுத்துக்கோ....உனக்கு சரிவருமான்னு....பார்த்துக்கோ, ஸ்கூட்டி தான் இருக்கு.....அத ஒட்டுவல்ல....?"என்று அந்த பழைய  வண்டியை தந்து விட்டான்.
அது பொம்பள பிள்ளைகள் புழங்குவது ...என்று பார்த்தவுடன் தெரிஞ்சுது.

" வேற வண்டி இல்லியாடே?..."

" இல்லியப்பா..." என்றான் அண்ணன்.

மதரசா....போயாச்சு.அங்கே வாசலில் ....அந்த வண்டிய நிறுத்திட்டு....நிக்காஹ் ல கலந்துகிட்டு....அங்கு வந்த நட்புகளிடம் பேசிவிட்டு....அங்கு நின்ற வண்டியில் ஏறி ...எங்கிட்ட இருந்த சாவியை போட்டு....ஸ்டார்ட்  பண்ணி ....பழையபடி வீட்டுக்கு வந்தாச்சு.

தெரு முகப்பில் இருந்த அண்ணன் வீட்டு வாசல் பக்கம் நிழலில்  வண்டியை நிப்பாட்டிட்டு....அவங்கிட்ட சாவியை கொடுத்தேன்.

" எப்பா....ஓன் வண்டி...பழசா இருந்தாலும் ....என்னமா போகுது....என்ன வச்சு ...நல்ல வேகமாத்தான் இழுக்குது என்றேன்.

அப்போது தான் அவன்...நான் கொண்டு வந்தா வண்டியை உத்து பார்த்தான்....
"ஏ...இது யார்வண்டி?....."என்று கொஞ்சம் அதிர்ச்சி கொண்டு கேட்டான்.

" போதம் மாறிப்போச்சா?....ஓங்கிட்டத்தானே வாங்கிட்டுப்போனேன்"

:" அடேய்.....அது வேற வண்டி...நீ இப்ப கொண்டு வந்துறக்கியே இது வேற வண்டி....."
"யாரு சொன்னா?....நீ தான இந்த வண்டிய தந்தே"....
. " அய்யய்யய்யோ...இந்த வண்டி நம்பர பாரு...இத வேற வண்டின்னு சொன்னா நம்ப மாட்டுக்கிறியே...."

எனக்கு...கொஞ்சம் கொழப்பம் ...வர ஆரம்பிச்சுது....என்ன இப்படி ஒரு குண்ட தூக்கி போடுறான்?....
இவன் வண்டி இல்லன்னா இது யாரு வண்டி?

அவன் தந்த சாவியைப் போட்டுத்தானே   ஸ்டார்ட் பண்ணுனோம்...?

" என்ன.... எடக்கா பண்ணுதே....இந்தப்பாரு.....இந்த சாவி நீ தந்தது தான? "

" ஆமா...நான் தந்தது தான்....ஆனா வண்டி எங்க வண்டி இல்லையே...."என்றான்.

என்ன ஆச்சுது?....என்ன நடந்தது....என்ன செய்வோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

" சரி ...வா.... நான் எங்கே  இந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன்னு காட்டுதேன் வா" ...என்றேன்.நான் அந்த வண்டியை எடுத்த இடத்தைக்காட்ட கூட்டிச்சென்றேன்.

" டே...இங்க பாரு,  வண்டி புதுசா வேற இருக்கு....நல்லா யோசிச்சுப் பார்த்துக்கோ...ஓன் வண்டி தானான்னு?... ஏன்னா....உங்க வீட்ல அஞ்சாறு வண்டி இருக்கு...." என்று என் முதுகுப்பக்கம் இருந்த அண்ணனிடம் சொன்னேன்.

" என்னடா...உன்னோட வம்பாப் போச்சு....இல்ல....இது நம்ம வண்டி இல்லப்பா" ...என்று சொல்லி முடித்தான்.

கொஞ்ச நேரத்தில் ....மகுனல் அஸ்பியா போய் சேர்த்தோம்..போய் சேருகிற வரையும் பொலம்பித் தள்ளிட்டான்...எப்பிடி வண்டி தெரியுமா?....என்ன மைலேஜ் கொடுக்கும் தெர்யுமா?....நான் பதிலே பேசாமல்...அடுத்து நடக்க வேண்டியதை யோசித்துக்கொண்டு ....இருந்தேன்.
மீராப்பள்ளி ....அந்த முக்குச்சந்து திரும்பி ....மதரசா மரத்து நிழலைப் பார்த்தேன்....

அங்கே.....இந்த மாதிரி ஒரு  வண்டி மட்டும் ...அப்படியே...தனியே  நின்று கொண்டு இருந்தது.

வேற எவராவது...வண்டிய காணோம்ன்னு ...நிக்காங்களான்னு...நைசா ஒரு பார்வை பார்த்துக்கிட்டான்.....அந்த முழியில் அவனையும்....அவன் வண்டியையும் பார்த்து ...நான் சிரிச்ச சிரிப்பு...
எங்க புகாரி காக்கா....காலமெல்லாம் மறக்க மாட்டான்.

" என்ன எழவு வேலைப்பார்த்தே .....எவன் வண்டிய மாத்தி எடுத்துட்டு வந்தே...?"


ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஐக்கிய அரபு அமீரகம்..
துபாய் ETA அஸ்கான் தலைமையகம் .

தமிழர்கள் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் பணியிடங்கள் தந்து இறைவன் வாழ்வளித்த நிறுவனம்.

அதற்கு அடிப்படையாக இருந்தவர்கள் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான். அவர் தம் இளவல் செய்யது எம்.ஸலாஹுத்தீன் முதலான பெருமக்கள் என்றால் மிகையில்லை.மாபெரும் உழைப்பாலும் எண்ணிலடங்கா தியாகத்தாலும் உருவான ஒரு நிறுவனம்.அதற்கு அந்த இரு பெரும் குடும்ப வாரிசுகளும் துணை நின்றார்கள்.

பெரியவர் அப்துல் ரகுமான் அல்-குரைர் என்கிற அமீரகப் பெரு மகன் அவர்களின் வெற்றிக்கு பக்க பலமாக விளங்கினார்.

எத்தனை பேரை பணி நியமனத்திற்கு சிபாரிசு செய்து அனுப்பினாலும் கொஞ்சம் கூட மருதலிக்காமல் , அத்தனை பேர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள்  வழங்கி ,படித்த பட்டதாரிகள் மற்றும் பணியாட்களின் குடும்பங்களின் இன்னல்கள்  நீக்கியவர்கள்.
அதனால் தமிழகதின்  பொறியியல் கலை, அறிவியல் பட்டதாரிகள் பல்லாயிரம் பேர்கள்  வளம் பெற்றார்கள்.

ETA என்றால் E எல்லாம் T தமிழ் A ஆட்கள் என்று பிறர் சொல்லிக் காட்டுவார்கள்.

ஒருகாலத்தில் வீடு வாசல், மனை, தோட்டம், தாய், தங்கை, தமக்கை நகைகள் இவற்றை அடகு வைத்தோ விற்றோ , வட்டிக்கு கடன் பெற்றோ தான் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற முடிந்தது...அதில் ஏமாந்து நொந்து மாண்டு போனவர்கள் பட்டியல் எண்ணிலடங் காதது..

என்ஜினியரிங் படித்து விட்டு பாலைவன கொடும வெய்யிலில் ஒட்டகம் மேய்க்க அனுப்பப்பட்டு ஏமாந்து இன்னல் பட்ட இளைஞர் கூட்டங்கள் ஊருக்கு ஊர் இருந்தார்கள்.

ஆனால் ETA என்கிற கம்பெனியின் வேலைவாய்ப்புகள் , அழைப்புக்கள்  வந்த பிறகு தான் உரிய வேலைவாய்ப்புக்கள் படித்த பட்டதாரிகளுக்கு கிடைத்தது...வருடத்திற்கு ஒருமாத விடுமுறையாவது கிடைத்தது. அதற்கு முந்தியெல்லாம் 2  அல்லது 3 வருடங்களுக்கு பின்னரே தாயகம் வர முடிந்தது.

பிற நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கள் பெற்றவர்களின்  எண்ணிக்கை இந்த நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்க்கவே இயலாதது.

இவர்களால் பலன் பெற்றவர்கள் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ,கடையநல்லூர், தென்காசி ,மற்றும்       கீழக்கரை ,காயல் பட்டினம் ,அதிராம் பட்டினம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர்கள, சேலம் சென்னை திருச்சி ஊரைச்சேர்ந்தவர்கள் என்று தாராளமாக சொல்லலாம்.

அவ்வாறு வேலை வாய்ப்புகள் கிடைத்த இளைஞர்கள் , தமது வருவாயைக் கொண்டு தாயகத்தில் தம் இல்லத்தை தூக்கி நிறுத்தினார்கள்.தமோடு பிறந்த பெண் மக்களை வாழ வைக்க திருமணம் செய்து கொடுத்தார்கள்.

வேலை வாய்ப்புக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் கல்வி நிறுவனங்களுக்கு,அறக்காரியங்களுக்கு, ஆதரவற்ற அனாதைப்பிள்ளைகளை பாது காத்து வளர்க்கும் அன்பு இல்லங்களுக்கு ,பள்ளிவாசல்களுக்கு,சமயநல்லிணக்கம் பேணும் சகோதர சமுதாய பள்ளிக்கூடங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள் . வாரி வாரி வழங்கினார்கள்.

நான்  தற்போது தலைவராயிருக்கிற மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்கு  அவர்கள் தான பண உதவிகள்....நினைத்துப்பார்க்க இயலாதது.

கலீபா அபூபக்கர் சித்தீக் வகுப்பறைக்  கட்டிடம்,யூசுப் சுலைகா புகாரி ஆலிம் கட்டிடம் ,கம்ப்யூட்டர் சாதனங்கள்,, பள்ளியை பாது காத்திட காம்பவுண்ட் சுவர்,பள்ளிக் குழந்தைகள் செல்ல மினி பேருந்து, இன்னும் பள்ளி வளர்ச்சிக்கு கேட்டபோதெல்லாம் நிதி தந்தார்கள்.

1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வள்ளல் பி.எஸ்.அப்துல் ரகுமான்  அவர்களை சந்திக்கும் போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார்கள் எங்கள் கல்வித்தந்தை சேர்மன் MAS அபூபக்கர் சாகிப்..

" என்ன மீரான்.... சேர்மனைக் கூட்டிக்கிட்டு ....என்ன சொல்ல வந்து இருக்கீங்க.?".என்று துவக்கம் செய்வார்கள்.

என் மீது அவர்கள் கொண்ட பிரியம் சொல்லில் அடங்காதது.
என் மூலமாக அவர்கள் செய்த பணிக்கு அவர்களின் செயலாளர் வழக்கறிஞர் ஜலால் பெரிதும் உதவிகள் செய்துள்ளார்.

என் மீது கொண்ட அன்பால் மேலப்பாளையம் தக்வா ஜமாஅத் பள்ளி எதிரில் உள்ள அம்பிகா புறம் ஆதி திராவிடர் பள்ளிக்கு ஆறு வகுப்பறைகள் கட்ட என் மூலம் நிதி உதவி செய்ய்தார்கள்.

திருநெல்வேலி   முஸ்லிம் அனாதைநிலையம் ,காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் தொழிற் பயிற்சிக்கூடம்,  வல்லநாடு தொழிற் பயிற்சிக்கூடம், சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி, எட்டையபுரம் அல் முபீன் உமறுப்புலவர் அன்பு இல்லம், சக்கரைக்கோட்டை அன்பு இல்லம், நாகூர் கிரசென்ட் பள்ளி, குற்றாலம் இஸ்லாமிக் சென்டர் புதிய பள்ளிவாசல் உருவாக்கம் , கொடைக்கானல் பள்ளிவாசல், சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பள்ளிவாசல் , திருநெல்வேலி ஆலங்குளம் பள்ளிவாசல் என்று பட்டியல் நீண்டு செல்லும்.

நாட்டின் தலைநகரில் புது டெல்லியில்  இஸ்லாமிக் சென்டர் உருவாக்க இரண்டு கோடிகளுக்கும் மேலாக நிதியளித்துள்ளார்கள்.அவரது இளவல் செய்யது சலாஹுத்தீன் அவர்களும் அவ்வாறே நிதி வழங்கியுள்ளார்கள்.

இன்னும்  பலப்பல உதவிகள்....இயக்கங்கள், நாளிதழ், மாத இதழ்கள்,இலக்கியம் என்று உள்ளது.

அவற்றைப்பற்றி எல்லாம் நான் தனிப் புத்தகமாக எழுத வேண்டும்.

நாட்டில் அறக்காரியங்கள் பல செய்ய கீழக்கரை KVMஅப்துல் கரீம் காக்கா ,PSM.அப்துல் காதர் காக்கா உடன்  இருந்து ஒத்துழைத்தார்கள்.

அந்தப்பெருமகன் உலாவிய இடத்திற்குச்சென்று இரண்டு சந்திப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன்.

ஒன்று அங்கே இருக்கிற அருமையான களப்பணியாளர்கள், நிர்வாகிகளின் சந்திப்பு,மற்றொன்று Iman Culturals IMAN கல்ச்சுரல் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்திப்பு....
அவற்றை ஒவ்வொன்றாக பதிவிடனும்...

வள்ளல் அப்துல் ரகுமான் அவர்கள் கொண்ட அன்பினைப்போலவே அவர்களின் இளவல்கள் MDவாப்பா செய்யது M. சலாஹுத்தீன் அவர்கள், சின்னவர் சீனாதானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் எனக்குத் தருகிறார்கள்..
அவர்களின் செயலாளர்களும் அவ்வாறே.

நோன்பு காலத்தில் துபாய் வெய்யில் கொளுத்தி எடுக்குது.
ஆனாலும் அங்கே இருக்கிற அன்பு உள்ளங்களால் மனதும் உள்ளமும் உடலும் குளிர்சசியாகவே உள்ளது

(தொடர்வோம்)

சனி, 4 நவம்பர், 2017

மழை தான் பெய்யட்டுமே.

எங்க சின்ன வயசுல மழைக்காலங்கள் அவ்வளவு அழகா இருக்கும்..

எங்க ஊர் திருநெல்வேலிச்சீமை  மேலப்பாளையம் கிராமியம் கலந்த நகர் ஜாடை .அவ்வளவு தான்.

இப்பவுள்ள தார் கான்க்ரீட் ரோடெல்லாம் அப்ப எந்த தெருவிலும் இல்லை.
செம்மண் சாலைகள் தாம்.
நெசவுத்தொழில் செறப்பா இருந்தகாலம் அது.

காலை வேளைகளில், போடப்படும் பாவுகள் மீது நூலின் விரைப்புக்காக கஞ்சி வாளிப்பு இருக்கும்.பாதி கஞ்சி தரையில் தான் கொட்டியிருக்கும்...அதுவே தெருக்களை சுத்தமா பூசி மொழிகின மாதிரி வச்சி இருக்கும்.

நூல் பாவின் நிறத்தோடு....சில நேரம் கஞ்சி வடிஞ்சி தெரு முழுக்க பச்சையோ, செவப்போ, நீலமோ தரையில் தெரியும் .

நல்லா மழை பெய்யிற காலத்தில அப்படியே அம்புட்டு கஞ்சி தரையும், அடிச்சிட்டு போயிடும்.

அநேகமா மழைக்காலத்தில் நெசவுத்தொழில் கொஞ்சம் ஓய்வெடுக்கும்....ஏன்.....பாவு லெகுவா இருக்காது...ஊடு பண்ணு ல சிக்கிக்கும்.அதனால மழை விட்டு கொஞ்சம் கூதாப்பு குறைஞ்ச பெறகு தான் தறில இறங்குவாக.

இடுப்பு வரை ஒரு பள்ளம் தோண்டி நின்று கொண்டு கால்கள் உள்ளே இருப்பது காக்குழி தறியாகும்.

காலை வெளிச்சம் வந்து பொழுகிற சூரியன் வெளிச்சத்தை கொறைக்கிற வரை இடுப்பை தறி குழி திண்ணையில் சாய்த்துக் கொண்டு கால்கள் இரண்டையும் மாறி மாறி மிதித்துக்கொண்டு, ஒரு கையால் நூல் ஓடத்தை அடித்துக்கொண்டு, இன்னொரு கையால் நூல் பண்ணை பலமாக  இறுக்கி அழுத்திக் கொண்டு வேஷ்ட்டியை,  சேலையை எங்கள் நெசவாளப்பெருமக்கள் உருவாக்குவார்கள்.

அவர்கள்  வருஷத்தில் ஒரு 10 நாட்கள் தொழில் முடக்கம் செய்வதே ரொம்ப அபூர்வம்.

ஆனால் எனக்கு தெரிந்து.....மழைக்காலங்கள் வந்தால் வீட்டுக்குள்ளே  தறிக்குழிகளில் அது முங்குகிற அளவில் தண்ணீர்  ஊறி கால்களை உள்ளே வைக்க முடியாத அளவுக்கு நிரம்பி நிற்கும்....அது வடிய 10 நாள் 20 நாள்ன்னு.....ஆகும் .

அப்பசி அட மழை காலம் வந்தால்....பல வயசான தலைக்கட்டுகள் " கதை முடிஞ்சு போய்டும்".

அது குளிர் காலமாக கூட இருக்கும்.ரொம்ப வேதனைப்பட்டு ஆட்கள்  இறந்து போனது குறைச்சல் தாம்....

ஊனு,  தண்ணி கொறைஞ்சி அவங்க காலம்.... ஆடி  அடங்கி....  முடிவுக்கு வரும்.

ஆறு வாய்க்கால் முங்கி தண்ணி ஓடும்...

பெரியாறு தாமிரபரணி வெள்ளத்தைப் பார்க்க கூட்டம் கூட்டமாக ஆணும் பெண்ணும் போய் வருவாக.
இப்போ  வெள்ளம்  வருவதே கனவாய்ப் போச்சு....

வாழ்கிற இந்த தலைமுறை  மழைக்காலம் வந்தால்  வெறுக்கிறார்கள்....

பிள்ளைகள் மட்டுமே  பள்ளிக்கூடங்களுக்கு லீவு என்று அடிக்கடி வந்தால் சந்தோஷம் கொள்கிறார்கள்.

மழைக்காலங்கள் வந்தால் பைக்கில் போகமுடியாது........
தேங்குகிற போக்குவரத்து நெரிசல் .....சட்டை பேண்ட் நனைவதால்  மழை மீது ஒரு வெறுப்பை  கொண்டுள்ளார்கள்....அவங்க நினைக்கிற இடத்துக்கு ஒடனே போகமுடியல்லைங்கிரத தவிர வேற ஒன்னுமில்லை.

ஆகவே அடைமழை, கடும் மழை,   பேய்மழை என்று எழுதுகிறார்கள்.

மழை இல்லைன்னா.....குடிக்க, குளிக்க, சமைக்க ,விளைய வைக்க , தண்ணிக்கு எங்க போக?....ஆடு ,மாடு ,பறவைகள், மத்த வாயில்லா ஜந்துக்கள் எங்கே போக?

மழை என்ன ....புதுசா இப்ப மட்டுமா பேயுது.?பூமி உண்டான காலம் தொடங்கி  எம்புட்டோ  வருஷமா பெய்யுது.

மழை தண்ணி வாற போற கால்வாயை  மரிச்சு வழிய  செறத்தா.....என்ன ஆவும்?.பொறவு தேங்குது... தெவுங்குதுன்னு கூப்பாடு போட்டா என்ன ஆவும்?

வருஷம் 365 நாளில் ஒரு 20 நாள் மழை யை கூட தாங்கி மகிழ்ச்சி அடைய விவசாயிகளை தவிர யாரும் தயாரா இல்லை.அதுவும் காலம்  மாறி பொழிந்தால் அவனுக்கும்  பிடிக்கப்போவதில்லை.

மழையை  ரசிப்போம்.வரவேற்போம்.அதனால் தான் நாமும் மரம் செடி கொடிகளும் ஆடுமாடுகளும்....பறவைகளும் ஊரும் வாழ முடியும்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

இப்படி ஆகிட்டாங்களே.....



அன்னைக்கு ராத்திரி கொஞ்சம் தாமதமா...மோட்டார் பைக்கில் ஒரு மணி வாக்கில்  ....வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.அதுவும் கிழக்க இருந்து மேக்க பார்க்க புல்லட்ல வந்து எங்க வீட்டு வாசலில் பைக்க  நிறுத்தி   ஸ்டேண்ட் போடதயாரானேன்..... என்  பைக் லைட் வெளிச்சம் ஒரு ஆயிரம் அடி தூரமாவது ...இருட்டைக் கிளிச்சுக்கிட்டு போகும்.

அப்படி...லைட்ட அங்க நேரா...காட்டிய போது எங்க வீட்டிலிருந்து நூறு அடி தூரத்தில் உள்ள எங்க தெரு....அதான் அய்யர் தெரு பிள்ளையார் கோவில் தெரிந்தது.



எங்க வாப்பா?பெரிய வாப்பா  காலத்தில் எங்க தெரு,பக்கத்து தெரு  வயசாளிகளும்,நடுத்தட்டு ஆசாமிகளும்  ராத்திரி பத்து மணி வரை அதன் வெளியே உள்ள வாய்க்கால் திண்டில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பார்கள்.
இப்ப உள்ள பாளையங்கால் தண்ணீர் சாக்கடையானதால் அங்கன யாரும் உட்கார முடியல்லை.கொசு பிச்சி எடுத்துடுது.

அத மாதிரி தான் பக்கத்தில் உள்ள கொடி மேடையிலும்.
எங்க இளமைக்காலங்களில் நாளைக்கு பள்ளிக்கூடம் லீவுன்னாலோ ,கோடை லீவுன்னாலோ.....நள்ளிரவு வரை இளவட்ட வயசுக்காலங்களில்....அந்த மேடை மணலில் துண்டை விரித்துப்படுப்போம்.படுத்துக்கொண்டே கதைகள் பேசுவோம்.....ஆம்பிள...கதாபாத்திரங்கள் பொம்பிள கதாநாயகிகள்  கதைகள் பல மாதிரியா எங்க செட்ல பேசப்படும்.... நட்புகள் பொருளாதாரம் பார்த்து பழகாத காலம் அது.இப்போ அந்த மேடையிலும் யாரும் படுப்பதில்லை,.

மைதீன் தைக்கா கொடிமேடை....பிள்ளையார் கோவில் கோபுரம் தாண்டி...என் பார்வை கோவில் பின்னால் அமைந்து இருந்த எங்க பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வாட்டர் டேங் மீது சென்றது.
அங்கே....அதன் மேலே......நாலு அல்லது ஐந்து பேர்கள் நின்று பேசிக்கிட்டு இருப்பது போல தெரிந்தது.எதோ செல் போன் விளக்கு..வெளிச்சங்கள் போல அடிக்கடி அங்கே மாறி மாறி தெரிந்தது.

அங்கே என்ன நடக்குது ?....கொஞ்ச நாளா நம்ம பக்கத்துல உள்ள டேங்ல இருந்து நம்ம பகுதிக்கு குடி தண்ணீர் வருவதில்லையே.....என்று சந்தேகம் கொண்டு....டேங்ல எதுவும் பிரச்சினையோ...என்று பலவாறாக யோசிச்சுகிட்டே இருந்தேன்.

என்னை எங்க வீட்டுக்குள் அனுப்பிவிட்டு கதவைப் பூட்டத்  தயாரா இருந்த கிருஷ்ணசாமி  அண்ணாச்சி....என்னிடம் “அங்க என்னத்த பார்க்கிய?” என்றார்.

“ எப்பா?....டேங் மேல ஒரு அஞ்சாறு பேர் நிக்கிற மாதிரி தெரிது....வா....போய் பார்த்திட்டு வருவோம்”...ன்னு சொன்னேன்.
“அதாரு....அங்க நடமாடுறது? வாங்க போலாம்”என்று அண்ணாச்சியும் கூட வந்திட்டார்.

ஒரு நிமிஷத்தில் எங்க தெரு மேக்க உள்ள டேங் கீழே நானும் அண்ணாச்சியும் வந்து சேர்ந்துட்டோம். ....கீழே நான்கு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

“ கிருஷ்ணசாமி ...வா....மேல போலாம்.” என்று சொல்லிட்டு....வளைஞ்சு வளைஞ்சு ஐம்பது அடி உயரத்தில் இருந்த அதன் மேல்பகுதிக்கு வந்து விட்டேன்.

அங்கே அந்த நட்ட நடு நிசியில்...ஒரு ஐந்தாறு பேர்கள் உட்கார்ந்தும் நின்றும் கொண்டு இருந்தார்கள்....அப்போது என்கையில் இருந்த செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில்  சுத்து முத்தும்  பார்த்தேன்.....ஆளாளுக்கு போதையில் இருந்தார்கள்..இரண்டு மூணு பேர் சாப்பிட்டு இலையை விரிச்சு போட்ட..கோலம தெரிந்தது......

யாருப்பா....நீங்க....இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்..

“சும்மா....இங்கே உட்கார்ந்து சாப்பிட வந்தோம்.”என்றான் ஒருவன்.அங்கே நின்ற எவனுமே...எங்கள் பகுதியை சேர்ந்தவன் இல்லை.

“ என்னடே விளையாடுறிய? ஆமா...இந்த டேங் மாடியில யாரு சாப்பாட்டு கிளப் நடத்துறா? " கிருஷ்ண சாமி அண்ணாச்சி கொஞ்சம் கோபமாக கேட்டார்.

" யார்ரா நீங்க.?...சொல்லுங்க...என்றேன்.....

எங்க வட்டாரத்தில் இருந்து அம்பை ரோட்டுக்கு தூரமா இருக்கிற தெருவை சொன்னார்கள்.

நான் பேண்ட் சர்ட் போட்டு அந்த இருட்டில் நின்று கொண்டு இருந்ததால்..
:"யாரோன்னு" கொஞ்சம் கலவரப்பட்டு ...ஜட்டி மட்டும் போட்டு இருந்த அந்த இளைஞர்கள்....பேண்ட் சட்டைக்கு மாற ஆரம்பித்தார்கள்....

" என்ன...வேல செஞ்சோம்....கைல பாதுகாப்புக்கு ஒரு கம்பு கூட இல்லையே...எவனாவது வேகத்துல நம்மள ஒரு முட்டு முட்டி தள்ளிவிட்டுட்டா என்னசெய்ய.?..வாங்க போலாம்ன்னு" ,என் காதில வந்து  ..அண்ணாச்சி எச்சரிக்கை பண்ண ஆரம்பிச்சார்.

அதுல ஒருத்தன்......“ டே....வாங்க சீக்கிரம்..” .என்று... அந்த வாட்டர் டேங் உள்ளே நுழையிர " மேன் ஹோல" பார்த்து சவுண்ட்...கொடுத்துக்கிட்டு இருந்தான்..

அப்போது அங்கே போய் பார்த்தேன்....அந்த குடி நீர் தொட்டிக்குள் இறங்கி...பாதி டேங் தண்ணியில படிக்கட்டுல நின்று....தேய்த்துக் குளித்துக்கொண்டு இருந்தான்......இன்னொருவன்..அங்கே நீந்திக்கொண்டு இருந்தான்.

“ டேய்....வாடா  வெளியே...என்று சொல்லி பிடித்து இழுத்து வந்தேன்...இப்படி கொடுமை  செய்றீங்களே...இந்த குடி தண்ணியத்தானே...பச்சப்புள்ளைக...முதக்கொண்டு எல்லாரும் குடிக்கோம்...நீ...குளிச்ச அழுக்குத்தண்ணிய நாங்க குடிக்கணுமா?...”.என்று ஆத்திரம் தீர கத்தித் தொலைச்சேன். ஆவேசமா ஆடிவிட்டேன்...

கொஞ்சம் கொஞ்சமா....கூட்டம் கூட ஆரம்பிச்சுது....விட்டா போதும்ன்னு...அந்த பயலுவ.....ஓட்டம பிடிச்காணுக...அதுக்கப்புறம் அவனுங்கள நான் எங்க வட்டாரத்தில்...பார்க்கவே இல்லை.

யாருக்கும் கட்டுப்படாமல் இப்போது எங்கள் ஊரில் இளைஞர்களில் ஒரு பிரிவினர் உருவாகிவிட்டார்களோ என்ற கோபமும் அடிக்கடி வந்துபோகிறது.

ஒரு பைக்கில் மூவர் , நால்வர் தெருக்களில் அதிவேகத்தில் செல்வதும் அங்கே நிண்டு விளையாடிக் கொண்டு  இருக்கிற குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கும் வேலைகளிலும் இறங்கிவிட்டார்களோ என்ற எண்ணமும் வந்து நிற்கிறது...இவர்களை யார் கட்டுப்படுத்துவது என்கிற கேள்வியும் பிறக்கிறது. 
மறுநாள்...அரசு அதிகாரிகள்....ஜமாஅத் தலைவர்கள்...உள்ளிட்ட பலருக்கும் அன்று இரவு நடந்த கொடுமையை  சொல்லி...பள்ளிவாசல்களில் பேசச்சொன்னேன்.....

அந்த டேங் மேல போக உள்ள ஏணிப்படிகள் மேலே அன்னியர் யாரும் போக முடியாமல்  அந்தப்  பகுதியை...சுற்றி காம்பவுண்ட்...சுவர் எழுப்பி பாது காக்க வழி ஏற்பாடு செய்து விட்டுத்தான் மறுசோலின்னு முடிச்சேன்.

பண்பாடும் கலாச்சாரமும் கொண்டு மேலோங்கும் அன்பினைக் கொண்ட இந்த ஊரை " எங்கே கொண்டு செல்லுகிறார்கள்?."...என்கிற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.