திங்கள், 12 ஜனவரி, 2015

அவன்.....


அவன்...

செய்யது அகமது கபீர்...எங்க அண்ணன்.....

எங்கள் குடும்பத்தில் எங்க பெரியவாப்பாவின் மகன்...என்னைவிட ஒரு எட்டு வயசு மூப்பு.....மென்மையும் ,எளிமையான வாழ்க்கை முறையும் கொண்டவன்.

எங்க குடும்பத்தில் சின்னஞ்சிறிய வயதில் நாங்கள்  கொண்ட பாசமும் பிரியமும் மகத்தானது....ஒரு போதும் பகைமை உணர்வு எதிலும் வந்ததில்லை...1977 வரை எங்கள் குடும்பத்தின் மூன்று பெருந்தலைகளின் பேரன்களாக  மொத்தம்  நாங்கள் 7 பேர்கள்தான்..

எங்கள் இளமைக் காலத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்தது...அதற்கு முந்தியெல்லாம் நூல் வியாபாரமும்  மற்றும் கைத்தறி தொழிலும்  இருந்து வந்தது

எங்களுக்கெல்லாம் மோட்டார் சைக்கிள், ரேடியோ, டேப் ரிக்கார்டர் பித்துப் பிடித்து இருந்த பருவ காலங்களில், அவனுக்கு மாடுகளும், ஆடுகளும், பயிர் பச்சைகளும் மட்டுமே பிடித்திருந்தது...

எம்.ஜி.ஆர்.,சிவாஜி படங்கள் மேல் நாங்கள் கொண்ட மோகம் அவனுக்கு இல்லை.....ஜெமினி கணேசன் படங்கள் மட்டுமே அவனுக்கு பிடிக்கும்.சிவாஜி எல்லாம் அவனுக்கு ஜெமினிக்குப் பிறகுதான்....

பைக்குகள் ஓட்ட வேண்டும் என்று ஒருபோதும் சொல்லியது இல்லை...கற்றுத்தாருங்கள் என்று கேட்டதும் இல்லை...

ஊர் உலகமெல்லாம் சுற்றவேண்டும் என்று ஆசையும் அவனுக்கு வந்ததில்லை...ஆனால் வயக்காடுகள், தோட்டம் போகவேண்டுமென்றால்.....ஓடோடி வந்து விடுவான்...

சைக்கிள் மட்டுமே அவனுக்கு பிடித்தமான வாகனம்...அதவிட அவனுக்கு எங்கள் வீட்டில் எங்களின் இளம்  பிராயத்தில் இருந்த மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் மீது மாபெரும் காதலுண்டு....

எங்களூரில் கூடும் சந்தைக்கு எங்களோடு அவன்  வந்தால் மற்ற பகுதிகளுக்குப் போகவே மாட்டான்...மாடுகள் பட்டியில் நின்று கொள்வான்... ஏதாவது ஒரு காளைகள் ஜோடி அவனுக்குப் பிடித்து விட்டதென்றால்.....அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பான்.... அவற்றின் கொம்பு ,திமில்,தோற்றம் ,பொலிவு,உயரம்,கால்களின் நேர்த்தி இவைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பான்...

“இத வாங்குறியாப்பா?”

என்னிடம் கேட்டுப்பார்ப்பான்....” ட்ராக்டர் ..வந்தபிறகு மாடுகளுக்கு ஜோலிகள் இல்லாமல் போய்விட்டதை” சொல்லுவேன்...

“மாட்டு வண்டியாவது வாங்குப்பா” என்பான்....

“பழைய காலத்து மோரிஸ் மைனர் கார், மாருதி ஜிப்சி ,அம்பாஸடர் ,இன்னோவா வரை கார்கள் நமக்குத் தந்துள்ளார்கள். மாட்டு வண்டியை எவம்பா ஒட்டுவான்?”.... என்று வெறுப்போடு சொல்வோம்.

ஏதாவது ஒரு வருஷத்தைச்சொல்லி...... “அந்த வருஷத்தில்  நம்மூர் மாட்டுவண்டிப்போட்டியில், நம்ம வண்டி தான் ஜெயிச்சிது....அந்த மாடுகள் இந்த ஜோடிய மாதிரித்தாம் இருக்கும்.....அதெல்லாம் உனக்கென்ன தெரியப்போகுது”?..என்பான்..

“சரி....உனக்கு என்ன வேணும்? சொல்லு” என்று கேட்டால்....”ஒத்த மாடு போடுற மாதிரி தட்டு வண்டி வாங்கிக்கொடு” என்றான்.

ரொம்பத்தான் ஆசப்படுகிறான்...தட்டுவண்டி எங்காவது கிடைக்கிறதா?என்று அலைந்து திரிந்து தோண்டித்துருவி விலைக்கு கேட்டால்....அந்த விலைக்கு புது ஹோண்டா மோட்டார் பைக்கே வாங்கிடலாம்... என்று பதில் வந்தது......அப்புறம் மாட்டை   தினமும் தீவனம் கொடுத்து பாது காக்கனும்...

“சரி..... மாட்ட வாங்கி யாரு கட்டி மேய்க்க ? .....நமக்கு உண்டான பசு மாடுகளையே மேய்க்க,பால் கறக்க ஆள் கிடைக்க மாட்டேங்குது ....நீ என்ன செய்வே?”....என்று நான் கேட்டேன்.

“அப்போ ஒன்னு செய்...உம் மகன் வச்சிருக்கானே....அந்த மாதிரி ஒரு ஆக்டிவா....வாங்கிக் கொடு அதில தோட்டத்துக்குப் போய்.... வாரேன்” என்றான்..

ஒரு நாள் என் மகன் வண்டியையே அவன்கிட்ட கொடுத்து, “தோட்டத்துக்கு நீ போயிட்டு வாரியாப்பா?” என்று கேட்டேன். “இந்தா...இப்பவே போறேன்” என்று கிளம்பி விட்டான்...

 “இவம் எப்படித்தனியா ...ஆக்டிவாவில  போவான்”?....என்று பயந்து கிருஷ்ண சாமி அண்ணாச்சிய  அவன் கூட அனுப்பி வைத்தேன்....கிருஷ்ணசாமி சின்ன வயசில் இருந்தே எங்க வீட்டில் ஒரு ஆள்...என் பிள்ளைகளுக்கு எங்க அண்ணன் மாதிரி...எங்க வீட்டை,தோட்டத்தை தவிர அவருக்கு ஒன்னும் தெரியாது...

எங்க குடும்ப விஷயங்களை யார் கேட்டாலும் செவிடு மாதிரி இருப்பதில் அண்ணாச்சிக்கு நிகர் அவரேதான்....தெரிஞ்ச ஆளோ....புது ஆளோ யாராவது வந்து என்னுடைய செல் நம்பர் கேட்டால் கூட...ஏதாவது சொல்லி மழுப்பிவிடுவார்..மறந்தும் கூட என்னுடைய நம்பரை கொடுத்துவிட மாட்டார்...

அவனை வலத்துல கட்டினா....கிருஷ்ண சாமிய இடத்துல கட்டனும்...

என்னாச்சோ.?...ஏதாச்சோ ?....இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் பண்ணைக்கு போகும் முன்னரே....அவனோடு ஆக்டிவாவில் கூடப் போன அண்ணாச்சி ,வண்டி போன லட்ச்சனத்தை பார்த்து,மிரண்டு,பயந்துபோய்.....ஊரைத்தாண்டும் முன்பே,....வண்டியில் இருந்து குதிச்சிருக்கிறார்....

“நீ...ஒரு மனுஷனா?....கிஷ்ணனைப் போய் எங்கூட அனுப்பலாமா?.....”என்று எப்பவோ வந்த கோபம் அடங்கி..... ரொம்ப சப்தமும்....இல்லாமல் குறைவாகவும் இல்லாமல், என்கிட்டே அவன் கேட்டான்...

“ஏம்பா...அண்ணாச்சி கூட வந்தால் நல்லது தானே?......ன்னு கூட அனுப்பி வச்சேன்...அதுக்கு என்னப்பா”? என்று கேட்டேன்....

“நான் வண்டி ஹாரன் அடிக்கும் முன்னே....பின்னால இருந்துகிட்டு கிருஷ்ண சாமி ஓரம்.... ஓரம்”..ன்னு சத்தம் போட்டால் நான் வண்டி ஓட்ட முடியுமா?”...என்று கேட்டான்..

நல்ல கேள்விதான் .இதுக்கு அண்ணாச்சி ஒரு விதமா பதில் சொன்னார்...

“அண்ணாச்சி நீ எதுக்குப்பா இப்பிடி சப்தம் போட்டே”?..நான் கேட்டேன்.

“....நீ......ங்க ஒரு ஆளு....இவருக்கு வண்டி ஓட்டத்தெரியாதுங்குற கதையை....என்கிட்டே சொல்லவே இல்லையே....இவரு ஓட்டுன வண்டிய.... போற, வார ஆள் மேல எல்லாம் விடப்பார்த்தாரு....என்னவோ..... நல்ல காலம் யாருக்கும் அடிகிடி விழல்லை....இவரை நம்பி எவம் போவான்?....

“ஆமா...நீ மட்டும் ஒழுங்கா எம் பின்னால இருந்தியாக்கும்?....என் தோளைப் பிடிச்சு ஆட்டிக்கிட்டு...பின்னால கிடந்து சப்தம் போட்டுக்கிட்டு...ஏ..பைய...ஏ....பார்த்துன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு.வந்தே........ஒன்ன வச்சுக்கிட்டு எவம்ல....வண்டிய ஒழுங்கா ஓட்டமுடியும்?..” இப்படி ஒரு பதில் அவம்கிட்ட இருந்து வந்தது...

அந்த இரண்டு பேரும் பேசிய பேச்சைக் கேட்டு நான் சிரித்த சிரிப்பால்....அவனுக்கு வந்த கோபம்...நான் முன்பின் பார்த்து அறியாதது...

இவங்க ரண்டு பேரும் வண்டியில் போன கதையை என் தாயார் முன்னால நான் கேட்டதும்....”ரண்டு அப்பாவிகளை இப்படி தனியே...தோட்டத்திற்கு அனுப்பலாமா?”....என்று எனக்கு அவகிட்ட இருந்து கடும் கண்டனங்கள் வேறு வந்தது...

இப்படி அவனை நினைத்து நினைத்துப் பார்ப்பதற்கு நிறைய உள்ளது...

கொஞ்ச நாளாவே....என் கிட்ட அவம் வரும்போது...கொஞ்சம் சோர்வடைஞ்ச மாதிரியே வருவான்...'உனக்கென்ன சுகர் இருக்கா?....ஒரு மாதிரி முழிக்கியே..... என் கூட டாக்டர்கிட்ட வா...போலாம்" என்று கூப்பிடுவேன்...”எனக்கு ஒண்ணுமில்லை....உன்னை செக் பண்ணிக்கோ”... என்று வீம்பு பேசுவான்...

எங்க சின்ன அண்ணன் ஒரு முறை அவனை மைசூருக்கு அனுப்பும் போது “...இவம் முழிக்கிற முழிப்பு சரி இல்லை....ரயிலில் பார்த்து அனுப்புப்பா.....இவனுக்கு என்னவோ செய்யுதுப்பா...”...என்று பொதுவாகவே சொல்லி வைத்தேன்....

9.1.15 வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்தேன்...முந்தைய நாளில் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துர் ரகுமான் அவர்கள் உடல் நல்லடக்கத்தில் கலந்து விட்டு  சனிக்கிழமை ஊர் திரும்ப ரயில் டிக்கெட் எடுத்துவிட்டு, சென்னை ஹோட்டல் மாசாவில் தங்கி இருந்தேன்...அந்த நாளில் நண்பர்களைச் சந்திக்கவும்..மறுநாள் நந்தனம் புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு நூல்கள் வாங்கவும் திட்டமிட்டு இருந்தேன்...

மாலை 6 மணிக்குப்பின்னர் ....மனது என்னவோ போல இருந்தது....ஊருக்குப் புறப்படவேண்டுமென ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது...புறப்பட்டுவிடவேண்டுமென முடிவுடன், விடுதி அறையைக் காலி செய்துவிட்டு கோயம்பேடு வந்துசேர மணி இரவு 10.00  ஆகிவிட்டது...

வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னை வரவும், மீண்டும் ஊர் திரும்பவும்  ரயில் டிக்கட்டை முன்பே எடுத்துவைத்திருப்பேன்...எப்போவாவதுதான் பஸ் பயணம்.நடக்கும்...

இந்த முறை மதுரைக்கு  குடும்பப் பெரியவர் ஒருவரை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சந்திக்கக்  காரில் வரும் போது தான் கீழக்கரை வள்ளல் பி.எஸ்.அப்துர் ரகுமான் அவர்களின் இறப்புச்செய்தி கிடைத்தது....அதற்குப் பிறகு என்னோடு வருகை தந்தவர்களை மதுரையில் இருந்து ஊர் செல்ல ஏற்பாடுகள் செய்து விட்டு, காரை மதுரையில் உறவினர் வீட்டில் நிறுத்தி விட்டு சென்னை வந்தேன்..

கோயம்பேடு பஸ் நிலையம் வந்து மதுரை செல்லும் பஸ் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டேன்... அதில் அமர்ந்து  கோயம்பேடு பஸ் நிலையம் தான் தாண்டி இருப்பேன்...

சின்ன அண்ணன் புகாரி போனில் அழைத்தான்...

“எங்க இருக்கே?” அவன் கேட்டான்.

“இப்போதான்பா..... பஸ்சில்  புறப்பட்டு ஊருக்கு வந்து கொண்டு இருக்கிறேன்..”..என்றேன்.

“நம்ம கபீருக்கு....கொஞ்சம் மூச்சு தினறுகிறது....எந்த டாக்டரிடம் கூட்டிப்போக”?...என்று படபடப்புடன் கேட்டான்..

“நம்ம பிரேமச்சந்திரன் சாரிடம் கூட்டிக் கொண்டு முதலில் காட்டு.... அவர் என்ன சொல்லுறாரோ....அப்படிச்செய்”...என்று சொல்லிவிட்டு டாக்டரிடம் அண்ணன் வரும் தகவல் சொன்னேன்...

“வரட்டும்.... உடனே கவனிக்கிறேன்” என்று டாக்டர் சொன்னார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ...புகாரியிடமிருந்து மீண்டும் போன்... “கபீர் மூச்சு திணறல் நிற்கவில்லை....தோள்பட்டை...முதுகு எல்லாம்...வலிக்கிறது என்கிறான்...குளிச்ச மாதிரி அவனுக்கு வேர்க்குதுப்பா...”...என்றான்.

“தோள் பட்டைகள், முதுகெல்லாம் வலித்து ...வியர்த்து மூச்சுத் தினறினால்...மாரடைப்பின் அறிகுறிப்பா...பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிபோப்பா .....” என்று படபடப்புடன்  சொல்லிமுடித்தேன்...

அதற்குள் பஸ் பெருங்களத்தூர் வந்துவிட்டது....

புகாரியிடமிருந்து மீண்டும் போன்....

“என்னப்பா....கபீர் காக்கா எப்படி இருக்கிறான்?....”.நான் கேட்டேன்.

கொஞ்ச நேரத்திற்கு பதில் வரவில்லை...புகாரி நாவெல்லாம் தழுதழுத்தது....

“அவன் போய் விட்டாம்பா”....

நான் பதிலே சொல்ல வார்த்தைகள் வரவில்லை...

காலமெல்லாம் வேடிக்கையாகவும்....அன்பாகவும் பேசிவந்த அவன் போய் விட்டானா?....எவ்வளவு நேரம் அழுதேன் என்பது எனக்குத்தெரியாது...

எனக்கு அடுத்து இருந்த பெரியவர்....”ஏன் தம்பி அழுறீங்க?....” என்று கேட்டார்...

“அண்ணன் போய்ட்டான் சார்..”...என்றேன்.

மறுபடியும் பல செல் போன் அழைப்புக்கள்... அபுஷஹ்மா மாமா ஊரில் இருந்து...கேட்டுக் கொண்டே இருந்தார்.

எல்லோரும்...“எப்போ அவனை எடுக்க?”....என்று கேட்டார்கள்...

நான் ஊருக்கு வந்து அவன் முகத்தைப் பார்க்கணும்...அப்புறம் எடுங்கள் என்றேன்....

எனக்காக எல்லோரும் காத்து இருந்தார்கள்...
ஊர் வந்து சேர்ந்தேன்...

கபீரும்..... அவன் முகத்தை என்னிடம் காட்ட சலனமில்லாமல் படுத்து இருந்தது போல இருந்தான்...

நான் புதிதாக அழுவதற்கு...என்னிடம் கண்ணீரும் இல்லை...இரவெல்லாம் அழுது களைத்து இருந்தேன்...

நானே நின்று, உறவினர்கள் சூழ அவனை குளிப்பாட்டினேன்.....மையித்துக்கான ஆடைகளை அணிவித்தேன்....வாசனைத்திரவியங்களைப் அந்த ஆடைகளில் தடவினேன்..கண் இமைகளுக்கு சுர்மா பூசினேன்..தலையில் தலைப்பா கட்டி துணிக்குள் சுற்றி பாயில் வைத்து சந்தூக்கில் தூக்கிச்சென்றேன்...திரும்பிப் பார்த்தேன் அவ்வளவு கூட்டம் பின் தொடர்ந்தது...

பள்ளிவாசலில் தொழுகை நடந்தது...இதோ பக்கத்தில் எங்கள் குடும்பத்துப் பெரியவர்களை அடக்கம் செய்கிற பகுதி... என் வாப்பாவை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் அவனின் உறைவிடம் தோண்டப்பட்டு இருந்தது..என் தோள் அளவு தோண்டப் பட்ட குழியில் அவன் தலைப்பகுதி வைக்கப்படும் இடத்தில் நான் நின்று கொண்டு,அவன் உடலை வாங்கினேன்....

குனிந்து மெதுவாக அவன் உடலை வடக்கே தலை வைத்து, மேற்கு நோக்கி மக்காவின் திசை நோக்கி சரித்து வைத்தேன்...அவன் முகத்தைபார்த்தேன்...என்னோடு பக்கத்தில் படுக்கும் போது எப்படிப் முழிப்பானோ.....அப்படி முகம் காட்டினான்..

வழக்கமாக அவன் மெல்லிய சிரிப்புச்சிரிப்பான்....உடன் இருக்கும் நாங்களெல்லாம் பலமாகச்சிரிப்போம்...

அன்று.... அவன் முகம் புன்னகைக் காட்டியது.... அன்று அவனின் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்து நாங்கள் அழுதோம்இப்படி திடீர் என்று அவன் மூச்சு அடங்கிவிட்டதே என்று.......

மாறாத சிரிப்பை அவன் இறந்தும் மறக்கவில்லை...
ஒன்று நிச்சயம்........

அதே புன்னகையோடு..... ஒரு நாள்.....எங்க செட்டில் முன்னாடியே போய்விட்ட .....எங்க லெப்பை காக்காவோடு, எங்களைக் காண அவன்.. காத்திருப்பான்.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

One of the kind hearted souls have left us.May Allah grant him Jannah. Inna lillahi wa inna ilaihi raajioon.

Asiya Omar சொன்னது…

தங்களின் இந்த பகிர்வு ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்க,வாசிக்க வாசிக்க ஜனாப் கபீர் அவர்களை கண் முன் நிறுத்தியதோடல்லாமல் உங்கள் நட்புறவின் நெருக்கத்தையும் எடுத்துக்காட்டி கண்ணில் மழை போல் நீர் பெருக்கெடுக்க வைத்தது.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.சபூர் செய்து கொள்ளுங்கள் சகோ.

அப்துல் ஜப்பார் சொன்னது…


அல்லாஹ் கபீர் காக்கா அவர்களின் மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன். 1995 96 களில் இருந்தே அவரோடு பழக்கம் பாஸ் டெயிலர் கடையில் இருந்து மணிக்கணக்கில் பேசி உள்ளோம் சமீபமாக மரோடை ஆறு பக்கம் தான் குளிக்க வருவார் அப்போது பேசிக்கொண்டே இருப்பார் எளிமையாக பழக கூடியவர் அல்லாஹ் அவரது மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக