ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

இசைமுரசு நாகூர் ஹனீபா என்னும் சகாப்தம்.



கடந்த  எட்டாம் தேதி இரவு இஷா தொழுகை நேரத்திற்குப் பின்னர்...முக்கியமான சில மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டு இருந்தேன்...அப்போது செல் போனில் ஒரு அழைப்பு... மருமகன் அப்துல் ஜப்பார் பதட்டத்தோடு அலைபேசியில் பேசத் துவங்கினார்..
"நாகூர் அனீபா இறந்து விட்டாராமே?...."
"அப்படியா?....யார் சொன்னது?....யாராவது வதந்திகளைப் பரப்பி இருப்பார்கள்." என்று வழக்கம் போல நான் சொன்னேன்.
"இல்லைங்க...ஆடுதுறை ஷாஜஹான் ஸ்டேடஸ் போட்டு இருக்கிறார்." ....என்றதும் பகீர் என்று ஆகிவிட்டது...
அடுத்த நிமிடம் இது வழக்கம் போல வதந்தியா...இருக்கட்டும் என்று மனதை வைத்துக் கொண்டு ....நாகூரில் இருந்த இசைமுரசுவின் மகன், அண்ணன் நாசருக்கு போன் செய்தேன்...அங்கே ..மறுமுனையில் நாசர் வந்தார்....
"அண்ணே...அத்தா  போய்ட்டாங்கண்ணே ."...அழுகை மேலிட  என்னிடம் சொன்னார்...
என்னால் பதில் வார்த்தைகள் கூட சொல்ல முடியவில்லை... இருவரும் வேறு எதையும் பேசவில்லை...” சபூர் செய்யுங்கள்”.... என்று சொல்லிவிட்டு...உடல் அடக்கம் எங்கே நடைபெறுகிறது?....என்று கேட்டேன்..
"நாளை நாகூரில் வைத்துத் தான் நடத்தனும்...நேரத்தை அப்புறம் சொல்லுகிறேன்"... என்றார்..

அவ்வளவு அதிர்ச்சியான தகவலாக இருந்தது...
என் மனதில் எனக்கு ஏற்பட்ட இசைமுரசுவின் தொடர்பு....என்மீது அவர் வைத்திருந்த பாசம்...அன்பு....பொழிந்த அன்பான வாழ்த்துக்கள்...அவர்களோடு உண்டு களித்தப் பொழுதுகள்...பயணம் செய்த தூரங்கள்....மேடைகளில் அவரோடு அமர்ந்து...அவர் பாட இசைக்கலைஞர்கள் கருவிகளை மீட்டெடுக்க...மனதில் அவையாவும்  வந்து போனது...
ஒன்றா இரண்டா....நினைத்துப்பார்க்க?...
.
நாகூர் ஹனீபா லாட்ஜ் திறப்புவிழா....

கவிஞர் த.காசிம் மகள் திருமண நிகழ்வு....

குற்றால இல்லத்திறப்பு....
குற்றாலம் மெயின் அருவிச்சாலையில் ஆறாம் எண் வீடு ...அங்கே கோர்வை செய்யப்பட்ட பாடல்கள்..
2002 ஆம் வருடம் ஜூன் மாதம் அவர்களின் மனைவி இறப்பு.
.”அத்தா...நானும் கூடிய சீக்கிரம் போயிடனும்பா...பொஞ்சாதி இறந்த பின்னாலே ....வயசான புருஷன் துனியா வில இருக்கக் கூடாதுப்பா....ஆண்டவன் சீக்கிரமா....அழைச்சுக் கிடனும்பா.”என்று உருகிய வார்த்தைகள் .....
அவர்களின் காதுகள் பாதிக்கப்பட்ட  நேரங்கள்...
முதுகு வலியால் அவதிப்பட்டது.......
நாகூர்..மற்றும் சென்னையில் ....இருந்தத் தனிமைப் பொழுதுகள்...எல்லாம் கண் முன் வந்தது...
மேலப்பாளையத்தில் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில்,முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்கள் தலைமையில் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 22.7.1993 அன்று கலைமாமணி இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் சமூக, இலக்கிய இசைப்பணியினை பாராட்டு விழா நடத்தி இசைமுரசுவுக்கு நாங்கள் பொற்கிழியும் வழங்கினோம்..

தி.மு.க தலைவர் கலைஞர்....முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப்.....லத்தீப் சாகிப், வைக்கோ, தினகரன் கே.பி.கந்தசாமி..மெஜெஸ்டிக் கரீம் காக்கா, பத்ஹூர் ரப்பானி சாகிப்,...எ.கே.ரிபாயி சாகிப்..பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முஸ்லிம் லீக்...தி.மு.க...காங்கிரஸ்... மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.....
அவையும் மறக்கமுடியாமல் என்னை அவர் நினைவுகளோடு ....அலையலையாய் என்னைக் கொண்டு  போனது...

தமிழகத்தின் இக்கட்டான சில அரசியல் சூழ்நிலைகளை, அவர் எதிர்கொண்ட விதங்கள்...அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் ....மிகப்பெரும் தகுதிக்குரியவை...

சென்னை தீவுத்திடலில் நடந்த...முஸ்லிம் லீக் மாநாட்டில் அவர் பேசிய ..உருக்கமான உரை....அதே நாள் காலையில் அவர் பெற்ற விருதுகள்...என்று எவ்வளவோ நினைவில் வந்து வந்து சென்றது...

பொதுவாக இசைமுரசு நாகூர் ஹனீபா என்றதும் அவர் பாடிச்சென்ற காலத்தால் அழியாத பாடல்கள்தான் முதலில் நினைவுக்கு வரும்..
 எண்ண எண்ண ...இனிக்கிற பாடல்கள் பல அவர் தந்தவை...
நபிகள் நாயகம் சொல்லிச்சென்றவற்றை.......
நாயகத் தோழர்களின் வரலாற்றை..."இஸ்லாத்தில் ஆகும் நெறி எது?....ஆகா நெறி எது..என்பதை.... சகோதர சமுதாய மக்களிடம்  சென்று சொல்ல முடியாததை இசை முரசு நாகூர் ஹனீபா பாடல்கள் வடிவில் ஒலித்தட்டாக..ஒலிப் பேழையாக வடித்து  வைத்தார்...
அது மிக எளிதில் அவர்களின் உள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டது...
நானிலத்தை  வாழ வைக்க நாயகம் பிறந்தார் பாடல், நபிகள் நாயகத்தில் பிறப்பு தாய் தந்தை...அன்றைய அரபகத்தின் கோலம்.... இவை பற்றி எல்லாம்  பத்து நிமிடத்தில் வரலாறு   சொல்லி நின்றது...

ஆளும் இறைவன் தூதர் நபி.அன்பே வடிவாம் நாதர் நபி பாடலின் ஒவ்வொரு வரியும் நாயத்தின் ஒவ்வொரு கால கட்டத்தை சொல்லிக் காட்டியது...

அண்ணல் நபிகளின் வண்ண மகள் எங்கள் பாத்திமா...
பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?...
தீன் குலக்கண்ணு...நல்ல திருமறைப்பெண்ணு ....
விண்ணகமும் மண்ணகமும்..வியந்துரைக்க வந்துதித்த....அண்ணலாரின் நபி மகளார் அருமையான பாத்திமா...
என்று பல பாடல்கள் பெண்கள் திலகம் நபிகள் நாயகத்தின் மகளார் பாத்திமா அவர்களின் புகழைப் பாடி நின்றன....
பொன்மொழி கேளாயோ...நபிகளின் பொன்மொழி கேளாயோ...
சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே...கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே.....
என்று நபிகளின் நற்போதனைகளைப் பாடிக்காட்டினார்.... குரானைப்பற்றி...
நபிகள் நாயகம் திருவாய் மலர்ந்தருளிய ஹதீஸ்களைப்பற்றி...
ஐந்து கடமைகளில் எத்தனைத் தத்துவங்கள்....
பள்ளிவாசல்...பற்றியும்..
அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததைக் கேளுங்கள்...
இஸ்லாத்தின் தத்துவங்களை எடுத்து வைத்த அல்லாஹ்வின் மெய்யடியார்களை...பாட்டால் பாடிக்காட்டினார்...
மக்கத்து மன்னர் தர்பார் வாசல்...என்று அந்தக்காலத்தையே கண்முன்னே காட்டினார்.
வட்டிக் கொடுமையைத் தட்டிக் கேட்டார்...தீனோரே நியாயமா? என்று நீதி கேட்டார்...
பெண்களை மணமுடிக்க மாப்பிள்ளைகள் கேட்கும் ....கைக்கூலியாம் வரதட்சணை ஒழிப்பை பாடல்களில் கொண்டு வந்து பிரச்சாரம் செய்தார்...அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்...

முதலில்...முஸ்லிம் லீக் இயக்கத்தில் தன்னை ஆட்படுத்தி....
பின்னர் திராவிட கழகத்தில்...தி.மு.க.வில் தம்மை இணைத்து வாழ் நாள் எல்லாம் அந்தபாதையிலே பயணித்தார்...

அவரின் பாடல்களைப் பற்றி நினைக்கும் போது இரு கேள்விகள் மனதில் வரும்..அவர் பாடியது போல இன்னொரு பாடகர் இத்தனை தலைப்பிலும் பாட முடியுமா?என்பதும்...அப்படியே பாடி வைத்தாலும் ...மக்களிடம் அந்தப்பாடலின் கருத்துக்கள் சென்று சேருமா? என்பதும் தான் ...

யாரையும் நோக வைக்காத பழக்கத்திற்கு சொந்தக்காரர்...
இன்றைய காலத்தில் விருந்தோம்பலை...அடடா...அவரிடம் தான் கற்க வேண்டும்....இன்னும்  நிறைய அவரைப்பற்றி மனதுக்குள் வந்து போனது...

எப்படியாவது அவரது முகத்தை பார்த்தாகனும்...என்கிற ஆவலில் திருநெல்வேலியில் இருந்து காலையில் 8.30 மணிக்கு புறப்பட்டு..மதியம் 2.30 மணியளவில் நாகை சென்று அடைந்தோம்..

நாகூருக்குச்சென்றால் அவரைப் பார்க்காமல் வந்ததில்லையே....இனி எப்படியோ?....என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள்...என் மனதில் வந்துபோனது...

எத்தனையோ முறைகள்...நான் சென்று...உரையாடி....உணவுகள் உண்டு....வரலாறுகள் கேட்ட நாகூர் நவ்சாத் கார்டன் வீடு...ஷாமியானா பந்தல் போடப்பட்டு...களையிழந்து போய் இருந்தது...

புத்தம் புதிய பாடல்களின் கேசட்டுகளை...சி.டி.க்களை எனக்கு அன்பளிப்புத்தந்து அதை டேப் ரிக்காடர்களிலோ...பிளேயர்களிலோ...பாடவிட்டும் காட்டிய அந்த வீட்டின் நடுக் கூடத்தில் .....அசைவற்ற உடலாய்....எங்கள் இசைமுரசு...

பல்லாயிரம் பாடல்வரிகளை உச்சரித்த அந்த உதடுகள்....கூரிய பார்வை கொண்ட அந்த விழிகள்...இசைக் கச்சேரிகளில் சுட்டிக்காட்டும் நீண்ட  விரல்கள்  கொண்ட கைகள்...
அழகான வெண்மைத்தாடி....தொப்பிக்குள் அடங்காத வெண்மைநிற முடிக்கற்றைகள்....இவையாவும் அடங்கிப்போய் ஐஸ் பெட்டிக்குள் ....அவர் உடல்...

அந்தக்கோலத்தில் அவரைப்பார்க்க.முடியாமல் ...
வெளியே வந்தேன்...அண்ணன் நாகூர் கவிஞர் ஜபருல்லா "மாமா...மாமா" என்று இசைமுரசை அழைத்து ,  கண்ணீர் வடித்து கதறி அழுது கொண்டு இருந்தார்.. என்னால் தாங்கவே முடியவில்லை...

அங்கே அவரது பிள்ளைகள் நாசரும்..... நவ்சாத்தும்... மாப்பிள்ளைகளும்..அவர்களை கட்டிப்பிடித்து ....ஆறுதல் சொன்னேன்.....

அன்றைய தினத்தில் நாகூரில் அங்கே வந்தவர்கள்....அனைவரும் அவரின் அன்பில் மூழ்கியவர்கள் தாம்.

நெல்லையில் இருந்து நானும் வழக்கறிஞர் தீனும் போயிருந்தோம்..

தென்காசியிலிருந்து சகோதரர்கள் வி.டி,எஸ்.ஆர்.இஸ்மாயில்,ஹாஜி முஸ்தபா கமால்,வீராணம் ஊரைச்சேர்ந்த திருச்சி ராஜா ஓட்டல் கமால்,தென்காசி லத்தீப், பைம்பொழில் முஹம்மதலி ஜின்னாஹ்...மற்றும் தி.மு.க.மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள்,த.மு.க.மு...மனித நேய மக்கள் கட்சித்தலைவர்கள்..வந்திருந்தார்கள்
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து மாநிலப் பொருளாளர் ராமநாதபுரம் ஷாஜஹான், கவிஞர் நாகூர் ஜபருல்லா,  ஆடுதுறை ஷாஜஹான்,ஜமால் முஹம்மது இப்ராஹீம்,நாகை செய்யதலி,நூருல்லாஹ், அபுலசன்  அறமுரசு அப்துல காதர்,தம்பி கடையநல்லூர் ஹபிபுல்லா  வழுத்தூர் மக்கி பைசல் ஹபீப் ரகுமான்,  திருச்சி மாவட்ட தலைவர் K.M.K.ஹபீப் ரஹ்மான்,திருச்சி மாவட்ட செயலாளர் V.M.பாரூக்,நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சம்சுதீன்,நாகூர் ஜான் சாப் , ,நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் திட்டச்சேரி அன்வர் , நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் Aஅபூபாரிஸ்,தஞ்சை இளைஞர் லீக் நாகூர் இஸ்மாயில் ,நாகூர் சுலைமான் ,உள்ளிட்ட முஸ்லிம் லீக் தோழர்கள் வந்திருந்தார்கள்..
 த.மு.மு.க,மற்றும் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், அண்ணன்  ஹைதர் அலி , அண்ணன் ஜே.எஸ்.ரிபாயி,  பேராசிரியர் காஜா கனி முதலான தோழர்களும்அவர்களைச் சேர்ந்தவர்களும்.
,தி.மு.க.விலிருந்து,ஆயிரம் விளக்கு ஹுசைன் , தி.மு.க தமிழக முன்னாள் அமைச்சர்கள்  பெரியவர் கோ.சி.மணி நெல்லை டி.பி.எம் மைதீன்கான், உபையத்துல்லா மாநில தி.மு.க துணைச்  செயலாளர் ஐ.பெரியசாமி , முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கோட்டை அன்பழகன் ,கோவி.செழியன் , , மதிவாணன்,தமிழக  வக்பு வாரிய உறுப்பினர் சிக்கந்தர் , ,ஜமா அத்துல் உலமா சபையின் கொள்கை பரப்பு செயலாளர் தேங்கை  சர்புத்தீன் ஆலிம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுத்தீன்,உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இயக்கத்தொண்டர்களும் பொதுமக்களும், ,ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்கா வளாகத்தில் அமையப்பெற்றுள்ள அந்தப்பள்ளிவாசல் நிரம்பி இருந்தது...அங்கேயே உள்ள மையவாடியில் இசைமுரசு அவர்கள் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்..
நாகூரில் தொடங்கி...நாகூரில் வளர்ந்து....நாகூரிலேயே  மண்ணறை வாழ்வையும் கொண்டுவிட்டார்...
வாழ்க இசைமுரசுவின் புகழ்!.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை ஏற்றுக் கொள்வானாகவும்..அவர் பிழைகளைப் பொறுப்பானாகவும்..!  .



(இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களும் திராவிட இயக்கமும் என்பது..தனி வரலாறு ஆகும்.அதுவும் தொடர்ந்து வரும்)

ஞாயிறு, 22 மார்ச், 2015

எந்த ஊரு?....


மேலப்பாளையமா?......

நிறைய பயணங்களில்...குறிப்பா ரயில் பயணங்களில்....பக்கத்தில் இருப்பவர்களிடம்  நல்லா பேசிக்கொண்டே வருகிற போது.....”ஆமா...அண்ணாச்சிக்கு எந்தூரூ?.”..என்று சிலர் கேப்பார்கள்.
“நம்மூரு திருனவேலி  மேலப்பாளையம்ங்க”.....  இந்தப்பேரைக் கேட்டதும்...திடுதிப்புன்னு பேச்சை நிறுத்திக்கொண்டு..... வேற பராக்கு பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்...

...."நல்லா பேசிக்கொண்டு வந்தவர்கள்...படார்ன்னு நம்ம திசையை விட்டு  வேற திக்கப் பார்க்கிறாங்களே...என்னாச்சு ?."....

மனசு என்னவோ போல ஆகிவிடும்.. ....எதற்கு இந்த வெறுப்போ?....யாரும், யாருக்கும் பகைமை இல்லையே ?...எதுக்கு இப்படி வெறுக்கிறார்கள் ? என்று கொஞ்ச காலம் முன்பு  வரை  பதில் தெரியாமல் அல்லது இல்லாமல் தவித்து வந்துள்ளேன்...

 ......திருனவேலி மண்ணின்  பாசத்தை, அதன் ஒரு பகுதியாய் இருக்கிற தாமிரபரணி நதிக்கரையின் கீழக் கரையில் அமைந்துள்ளஎங்க ஊர்  மக்களிடம் நிறையவே பார்க்கலாம்...

அப்புறமா.....நான் சொல்ல வந்ததுக்கு வாரேன்...
அந்தப்பயணங்களில் சில ஒன்னுந்தெரியாத அப்பாவிகள் என்னிடம் கேப்பார்கள்...”நீங்க கோச்சுக்கப்ப்டாது.....'மத்த ஆளுங்க' யாருமே உங்க ஊர்ல லாந்த முடியாதாமே ?....அப்பிடியா?...

"யாருங்க அப்படிச்சொல்லி வச்சது?....கேளுங்க நடக்கிறத".ன்னு ...சொல்லிவைப்போம்..

எங்க ஊர்ல.....காலைல முழிச்ச கண்ணுக்கு ....” பாலு...பாலு”...ன்னு கூவிக் கூவி, மணி அடிச்சி...... ஆயிரக்கணக்கான லிட்டர் பால் யாவாரம் செய்வது எங்க ஊர் மற்றும் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த தேவர் மற்றும் யாதவர்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாம்....

அப்புறம்.......” அது உனக்கு...இது எனக்கு”...ன்னு  தெருக்க்களைப் பிரிச்சி.......இட்லி...வட தோசை....விக்கிறது...பிள்ளைமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்....

கறிக்கடை நடத்துறதுல  பாதிப்பேர் கோனாக்கமார்கள்தான்...அதுல பலபேர்கள் பரம்பரை பரம்பரையா ஆட்டுக்கறி யாபாரம்தான் செஞ்சி வாராங்க....சில குடும்பத்துக்க்காரர்கள் குறிப்பிட்ட கோனார்கள் கடையில் தான் தலைமுறை அளவில் இறைச்சி வாங்கி வருகிறார்கள்....


மீன் மார்க்கெட்டே ....படையாச்சிமார்கள், ஆளுகையில் தான்  இருந்துவருகிறது....

காய்ந்துபோன மீன், கருவாடுகள் வியாபாரம் செய்து வருவது.....பரதகுல மக்கள்தான்...


ஆசாரிமார்களைபற்றி  சொல்லவே வேண்டாம்...

எங்கஊரில் அவர்களைத் தங்கஆசாரி...தட்டாசாரி....கொல்லாசாரி...மரவேலைகள் செய்யும் ஆசாரிமார்கள்..... என்றே  தனித்தனியே அழைப்பார்கள்...

விவசாயப்பொருட்களை கடைகளுக்குக் கொண்டுவந்தும்,சாலைகளில் பரப்பியும்,ஆடு மாடுகளுக்கு கீரை,வைக்கோல் யாபாரம் செய்வர்களும், தலித் மக்கள் தாம்...
நான் சின்னப் பிள்ளையாய் இருக்கிற காலந்தொட்டு, கைவைண்டியிலும் இப்போ மாட்டு வண்டியிலும் வந்து உப்பு வியாபாரம் செய்வது...செட்டியார்கள் தாம்.

இன்றும் வெற்றிலை வியாபாரத்தை ஒட்டுமொத்தமாக செய்வது மூப்பனார்கள்....ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு   கல்யாண வீடுகளுக்கு வெற்றிலை பாக்குகள்.... அவர்கள் தான் அனுப்புவார்கள்......

எங்கள் ஊரில், சைவ ஹோட்டல் நடத்தி, பிறர் சம்பாத்தியம் செய்ய முடியாது...காரணம் கிராம்சு வீட்டு தெருப் பக்கம் இருந்த பால்பிள்ளையின் மகன்களான கதிரேசன்,கருப்பசாமி,ஆறுமுகம் சகோதரர்களின் கடைகளில் தான் காலை மாலை வேளைகளின் இட்லி,தோசை,கார வடைகள் விற்பனை ஆயிரக்கணக்கில் நடக்கிறது...

அவர்கள் கடைகளில் வாங்கி உண்டுப் பழகியவர்கள் வேறு எங்கும் வாங்கி உண்ண  மாட்டார்கள். 

சின்னஞ்சிறிய அந்தக் கடைகளில் காத்து நின்றே இட்லி தோசை வாங்கி வரமுடியும்..இன்றைக்கு மூன்று தலைமுறைகள் தாண்டி அவர்களின் வியாபாரம் நடந்து வருகிறது...அவர்களின் 99.9 சதவீத வாடிக்கையாளர்கள் மேலப்பாளையம் ஊர்க்காரர்கள்.

இப்போது புதுசா....வெள்ளாளப் பெருங்குடியின் தாய்மார்கள் இரவு நேரங்களிலும் காலைப் பொழுதுகளிலும் கடினமான சுமையுடன் கூடிய பாத்திரங்களில் தோசை மற்றும் இட்லி மாவு யாபாரமும் செய்து வருகிறார்கள்...இன்னும் சிலர் இடியாப்ப யாபாரம் செய்கிறார்கள்...

காய்கறிகடைகள் நடத்தி வருவது....நாடார் சமுதாயப் பெருமக்கள் தான்...அதுபோல தேங்காய் வணிகத்தின் பெரும் பகுதியும் அவர்களிடம் தான் உள்ளது...

தெருவுக்கு தெரு வாடிக்கைக் காரர்களைக் கொண்ட சலவைத்தொழில் செய்யும் வன்னார்கள்...இப்போ தேய்ப்பு தொழில் மூலமாக தினமும் கணிசமாக  வருவாய்  ஈட்டுகிறார்கள்...

தேவர்கள்.கோனார்களை,....நாயுடு,நாயக்கர்களை,ரெட்டியார்களை  ....மாமா என்றும்,
ஆசாரிகளை சின்னையா....என்றும்....
பரதர் குலத்தவர்களை சாச்சா என்றும்....
தலித்துகளை பேரப்பிள்ளைகள் என்றும்....
பிள்ளைமார்கள், நாடார்கள், செட்டியார்களை அண்ணாச்சிகள் என்றும் அழகாக பாசமுடன் அழைத்து பெருமைப்படுவது எங்கள் ஊர் மக்கள்தான்...அந்த மக்களும் இவ்வாறே எங்களை அழைத்துப் பதில் மரியாதை செய்கிறார்கள்...

திருமண வீடுகளுக்கு அந்த அன்புச்சொந்தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து, கூடி அமர்ந்து உணவுண்டுச் செல்வதைப்பார்க்க....ஆயிரம் கண்கள்  வேண்டும்...
ஊருக்கு கிழக்கே...குறிச்சிக்குச் சென்று   மட்பாண்டங்களை,மண் அடுப்புகளை அதிகமாக வாங்கி அந்தத் தொழிலில் ஈடு பட்டுள்ள வேளார்களை கை தூக்கிவிடும் பெருமக்கள் இந்த ஊரில் நிறைய உண்டு...

எங்கள் ஊரின் வயதில் பெரியவர்கள்.. பிராமணப் பெரியவர்களை,.....கோவில்களில் பூசை புனஸ்காரங்கள் செய்பவர்களை,.....கம்பர்களை   ...பொதுவாக சாமி என்றே அழைப்பார்கள்...

வீடுகள், கட்டிடங்கள்  உருவாக....பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கொத்தனார்கள்....சித்தாட்கள்...உழைப்புகள் தருகிறார்கள்.........அதன் மூலமாக மாதாமாதம் கோடிக்கணக்கில் சம்பளப்பணமாக  அவர்களுக்கு கைமாறுகிறது...

அந்தப்பணம் வெட்ட வெளிகளில்,வெய்யிலிலும் , புழுக்கத்திலும்....நெற்றி வியர்வை நிலத்தில் வடிய உழைத்து வந்த பணமாகும்......,வெளி நாடுகளில், அரபு நாடுகளில்...... நேரங்காலம் பாராமல்.... பாடுபட்டு,ஊர், உறவை, தாய்,தந்தை  ,மனைவி மக்களை, உற்றார்,உறவினரைப் பிரிந்து வாழும் எங்கள்  இளைஞர்கள், இளமையைத் தொலைத்த  பெரியவர்கள் மாதாமாதம் அனுப்புகிற ரியால்கள், திர்ஹம்கள், தினார்கள்,யூரோக்கள், வெள்ளிகள் மற்றும் டாலர்களால் அமைந்துள்ளது...அது எங்கள் தாய் நிலத்தை வாழ வைக்கிறது,,,

திருமண வீடுகளுக்கு ஒருகாலத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள்  தூக்கி வெளிச்சம் ஊட்டிய....குறவர் சமுதாயத்தினர்...அவர்கள் விற்பனை  செய்கிற பாசிமணி ஊசி மணிகள்....பெருக்கு வாரியல்கள்...பெயர் கொண்டவை..

அரைக்கீரை.....அகத்திக்கீரை......பொன்னாங்கன்னிகீரைகள் விற்பனை....
நாட்டுக்கோழிகளின் விற்பனை....
தயிர்,மோர்,.....நார்ப்பெட்டிகள்....விற்பனை......
பதநீர்,....நொங்கு,இளநீர்,.......
கோழி முட்டை...வாத்து முட்டை....சின்னஞ்சிறு வண்ணக் குஞ்சுகள்....
பலா,வாழை,மாம்பழம்,ஆரஞ்சு,ஆப்பிள்,கொய்யா,,திராட்சை,....என்று பலவகைப் பழ வகைகள்....
வடநாட்டுக் கம்பளிகள்,போர்வைகள், ....
ஐஸ் கிரீம்,பஞ்சு மிட்டாய்,சவ்வு மிட்டாய்.......
முறுக்கு, தட்டைப்பயிறு.,கருப்பட்டி,கரும்பு....
பினாயில்.....ப்ளீச்சிங் பவ்டர் ...
என்று  ஒவ்வொரு  வகை  வியாபாரங்களும்  சகோதர சமூக மக்களே ஊருக்குள் வந்து பாச வார்த்தைகள் முதலீடாய் கொண்டு விற்பனை செய்துவருகிறார்கள்...

வகைதொகையற்ற  வார்த்தைகள்...... வாணிபப் பேரங்களில் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை....அது எங்கள் ஊருக்குக்  கிடைத்த பெருமை....\

இது போக ராட்டினம் சுற்றுகிற கிராமத்து ஆட்கள்....வந்து குழந்தைகளை அதில் ஏற்றிச்சுற்றி மகிழ்ச்சியும் குதூகலத்தையும் ஏற்படுத்துகிறார்கள்...

பெருநாளுக்கு முன்னர் கூடும் சந்தைகளில் ஐந்தாயிரம்,பத்தாயிரம்  வரை கூடுதல் விலைக்கு ஆடுமாடுகளை விற்கும் பல்வேறு கிராமத்து ஆண் பெண் மக்கள்...
என்று அனைத்து சமூக மக்களும் 'ஒருவர் இன்றி - ஒருவர் இல்லை; என்று வாழ்கிறோம்....
பல்வேறு  ஊர்களில் இருந்து மேலப்பாளையம் ஊருக்கு வந்து பல்வேறு "நிலைகளை"ச்சொல்லி வீடு வீடாக உதவிகள் பலவும் பெற்றுச்செல்லுகிறார்கள் பலர்......இதெல்லாம் காலனிகளில் நடக்காதது...

"எதுக்கப்பா இல்லாததும் பொல்லாததும் சொல்லி எங்களை எங்கள் ஊரை  வேற்றுமைப்படுத்தி பார்க்கிறீர்கள்?"..... என்றே என்னுடைய நண்பர்கள் பலருக்கும் சொல்வேன்...அதுவே ரயில் பயணங்களிலும் நடக்கிறது...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

பொது வாழ்வின் சிகரங்கள்....

மேலப்பாளையம் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் (முன்னாள் மேலப்பாளையம் நகர்மன்றத்தலைவர்) அவர்கள் எனது மாமா என்பதில் எங்களுக்கெல்லாம் மிகப் பெரும் கண்ணியம் உண்டு....
எனது தந்தையின் உடன் பிறந்த சகோதரி எல்.கே.எஸ்.ரபீகா அவர்களை மணமுடித்த வகையிலும்,எங்கள் வீட்டில் சம்பந்தம் செய்து கொண்டதிலும் எனக்கு அவர்கள் மாமா ...என் தாயாருக்கோ அவர்கள் தாய் மாமன் ஆவார்கள்.
சின்னஞ்சிறு வயதில் அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாகவே நான் அவர்கள் வீட்டில் வளர்ந்தேன்.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியை உருவாக்கிய தலைவர்களின் வரிசையில் அவர்களும் உண்டு....அதன் நிர்வாகியாக 30 ஆண்டுகள் பணி செய்துள்ளார்கள்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பாக் கல்லூரியின் அமைப்புக்குழு உறுப்பினராக இருந்ததோடு 37 ஆண்டுகள், அதன் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணி செய்தார்கள்., மேலப்பாளையத்தில் பல நூறு பட்ட தாரிகள் உருவாக, மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் கல்லூரிப்படிப்புக் கிடைக்க அரும்பணியாற்றி உள்ளார்கள்...
மேலப்பாளையம் நகர் மன்றத்தலைவராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிட்டு நகர் மன்றத்தலைவராக 3 முறை தேர்வு செய்யப்பட்டு நேர்மையான முறையில் மக்கள் பணி செய்தவர்கள் ஆவார்கள்...
மேலப்பாளையம் குடிநீர் திட்டம்,நகரின் முக்கிய பகுதிகளில்  காங்ரீட் சாலைகள், காயிதே மில்லத் பெயரால் பள்ளிக்கூடம்,யாருக்கும் வளையாத நிர்வாகம்,,...எளிய மக்களுக்கு குறைந்த வீட்டு வரி விதிப்பு முதலானவை அவர்களின் பதவிக்காலத்தின் முக்கிய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்..

1961 ஆம் ஆண்டு மேலப்பாளையம்- திருநெல்வேலியை இணைக்கும் தாமிரபரணி ஆற்றில் மேல நத்தம் தாம்போதிப் பாலம் அவர்கள் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும் .தமிழக ஆளுநராக இருந்த வி ஷ்ணு ராம் மோதி இப்பாலத்தினை திறந்து வைத்தார்..அதற்கு முந்தைய காலத்தில் தண்ணீரில் நனைந்தே திருநெல்வேலிக்கு செல்லும் நிலை இருந்தது.

தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை
 மேலப்பாளையத்திற்கு விருந்திற்கு அழைத்து, வி.எஸ்.டி.வீட்டின் நடுக் கூடத்தில் மேலப்பாளையம் நன்குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றது தனி வரலாறு ஆகும்.

மேலப்பாளையம் குடிநீர் திட்டம் 1958 ஆம் ஆண்டில் அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு, .முன்னாள் நகர் மன்றத்தலைவர் எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்களின் காலத்தில் நகரில் எல்லாப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது..
மேலப்பாளையம் அம்பை சாலையில், வி.எஸ்.டி.குடும்பத்தினர் நன்கொடையாகத்தந்த இடத்தில் தான் மேலப்பாளையத்தின் மேல் நிலை நீர்தேக்கத்தொட்டிகள் இன்றும் உள்ளன..

மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமையப் பெற்றுள்ள மிகப்பெரிய இடங்களும் வி.எஸ்.டி.குடும்பத்தாலே தான் நன்கொடையாக அளிக்கப்பட்டவை ஆகும்.
கண்ணியமிக்க தலைவர் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப், அரசியல் சட்ட மேதை கே.டி.எம்.அகமது இப்ராகிம்,தென்காசி மேடைமுதலாளிகள் மு.ந.அப்துர் ரகுமான் சாகிப்,மு.ந.முஹம்மது சாகிப்,சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப், சின்ன முதலாளிகளான ஜமால் முஹம்மது சாகிப்,அ.க.ரிபாயி சாகிப் Ex.M.P.,.அ.சாகுல் ஹமீது சாகிப் Ex.M.L.A. ,காயல் பட்டணம் பல்லாக்கு அப்துல்காதர்,எஸ்.ஒ.ஹபீப்,செய்யது பீடி நிறுவனங்களின் தலைவர் பத்ஹூர் ரப்பானி,பேராசிரியர் நசீருதீன்,பேராசிரியர் முஹம்மது பாசி,டாக்டர்.முஹம்மது தம்பி முதலான பெருமக்களோடு அணுக்கமான நட்பினைப்பெற்றவர்களாக இருந்தார்கள்.
தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவராகவும், மேடைகளில் பேசுவதிலும், கட்டுரைகள் வடிப்பதிலும், தனிப்பெரும் திறமை கொண்டு விளங்கினார்கள். மாநிலத்தமிழ்ச் சங்கத்தில் துணைத்தலைவராக தமிழ்த்தொண்டு புரிந்துள்ளார்கள்
இளம் பருவத்தில் மேலப்பாளையத்தில் பஞ்சா எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்கள்....இஸ்லாமிய நெறிகளுக்கு மாறாக பஞ்சா எடுப்பது தொடர்ந்த போது அதற்கு கருப்புகொடி காட்டி பரபரப்பை அவர்களும் அவர்தம் நண்பர்களும் ஏற்படுத்தினார்கள்.
சின்னஞ்சிறு வயதில் எங்களை ஒருபோதும், பஞ்சா சப்பரம் பார்க்க அவர்கள் அனுமதித்ததே இல்லை...
அவர்களைப் பற்றி தனி புத்தகமே எழுதலாம்.அவ்வளவு செய்திகள் என்னிடம் உண்டு..
அவர்களின் வாழ்நாளின் கடைசி வருடங்களில் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு, இருந்தார்கள்....என்னையும் என் தம்பி கல்வத் பீர் முகம்மதுவையும் அவர்கள் அழைத்து அன்றைய நாளிதழ்களை வாசிக்கச்சொல்லுவார்கள்...
நானாவது எப்போதாவது சில முறை செல்வேன்.அதுவும் தி ஹிந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைகள் படிக்க மட்டுமே போவதுண்டு.ஆனால் எனது மாமனார் சாந்து அக்பர் சாகிப், சாந்து செய்து முகைதீன்,பத்ருதீன் வாப்பா,என் மைத்துனர் செய்யது முகம்மது முதலானோர் அவர்களுக்கு நாளிதழ்களை வாசித்து உதவிடும் பணியினை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள்..
என் சகோதரிகளும் அந்தப்பணியினை அவ்வப்போது செய்து வந்தார்கள்..
அகில இந்திய வானொலி வழங்கும் செய்திகளைக் கேட்காமல் அவர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை...இறப்பதற்கு முந்தைய நாள் வரை அந்தப்பழக்கம் அவர்களிடம் இருந்தது..
அவர்கள் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் என்னை அழைத்து ‘பாளையங்கோட்டையில் உள்ள காதுகேட்கும் திறன் இல்லாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு போய் வந்து இருக்கியா?” ....என்று கேட்டார்கள்...
“இல்லை...எனக்கு அதைப்பற்றி ஒன்று தெரியாதே”... என்றேன்...
“தெரிஞ்சிக்கோ....அது Florence Swainson பிளாரன்ஸ் ஸ்வேய்ன்சன் என்கிற ஆங்கிலேயப் பெண் மணியால் ஏற்படுத்தப்பட்டதாகும்...அவர்கள் பெயராலேதான் இன்றும் பாளயங்கோட்டை சிறைச்சாலைக்கு எதிரே உள்ளது..அங்கே ஜாதி,இனம், மதம் பாராமல்..... காதுகள் கேட்காத,வாய்பேச முடியாத ஊமைக் குழந்தைகளுக்கு பேச்சினைப் புரிந்து கொள்ளவும் .....தொழில் செய்யவும் கற்றுக் கொடுக்கிறார்கள்....அங்கே நானும் உங்கள் மாமியும் பல முறை பல்வேறு விழாக்களில் கலந்து வந்துள்ளோம்..என்றைக்கோ என் மனதில் ஒரு எண்ணம் வந்தது..வருஷத்தில் ஒரு நாள் அந்தக் குழந்தைகளுக்கு நம்ம வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும்...ஒவ்வொரு வருஷமும் அதுக்கு ஆகிற செலவிற்கு பணம் போட்டு ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும்......இப்போது ஒரு வார காலமாக என் மனதில் அந்த நினைவு அடிக்கடி வந்து போகிறது...இன்னைக்கு அந்தப்பணத்தை வங்கியில் போட்டாச்சு....கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காமல் .............நம்ம ஸமான் வருவார்,...அவர் கூட நம்ம வீட்டின் ஆண், பெண் பிள்ளைகள் எல்லோரும் அங்கே போய் உணவு உண்டு வாருங்கள்” என்றார்கள்..
கொஞ்ச நேரம் நானும் அவர்களும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை...
“உங்க மாமி இறந்த மாதம் ...இந்தப் பிப்ரவரி ஆகும்..அதனால் வருஷத்தில் எப்போதும் இந்த மாதத்தில் அங்கே போய் அந்தப் பிள்ளைகளோடு ஒரு நாள் இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்...குடும்பத்தோடு நீ கண்டிப்பா போகணும்......போலாம்ல?...”.... என்று கேட்டார்கள்..
“சரி மாமா...கண்டிப்பா போவேன் ...”என்று சொன்னேன்...2006 ஆம் ஆண்டில் இருந்து அங்கே ,அந்தக் குழந்தைகளோடு உணவு உண்ண, ஒவ்வொரு ஆண்டும் போய் வருகிறேன்...ஒரு ஆண்டு மட்டும் வெளியூரில் இருந்ததால் போகவில்லை.
 கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல நானும், என் தாயார்,சகோதரிகள், என் மனைவி...மற்றும் என் தாய் மாமான்களோடு அந்தப் பள்ளிக்குப் போய் அந்தக் குழந்தைகளோடு மதிய உணவு உண்டு வந்தோம்...
அங்கே போய்வரும் போது, அந்த நிறுவனத்தை உருவாக்கிய எங்கிருந்தோ வந்த அந்த ஆங்கிலச்சீமாட்டியும்,....இந்த ஏற்பாடுகளைச் செய்த என் மாமாவும்,...அவர்களின் மனதில் நீங்கா இடம் கொண்ட என் மாமியும்,...நினைவில் வருகிறார்கள்...
காது கேட்காமலும்,வாய் பேச முடியாமலும் தவிக்கிற அந்த அப்பாவிப் பிள்ளைகளுக்கு...ஊக்கமும் வாழ்வில் தைரியமும் கற்றுக் கொடுக்கிற அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியப்பெருமக்களின் கனிவான உபசரிப்பே உள்ள மெல்லாம் நிறைந்து நிற்கிறது