புதன், 31 ஜூலை, 2013

துரத்தித்......துரத்தி.


     நேத்து சின்னத் திரையில்,பல சேனல்களை மாத்திக் கிட்டு இருக்கும் போது, யாரும் பாக்காத ஒரு சேனல்ல, சும்மா............. விதவிதமா நாய்களின் அணிவகுப்பை காட்டிக் கிட்டு இருந்தான்.

   பெரிய கண்ணுக்குட்டி சைசில் இருந்து, பூனை மாதிரி அம்சம் வரை. மூஞ்சி பெருத்தும்.சிறுத்தும் துள்ளி திமிறி வந்து கொண்டு இருந்தன....நீண்ட சடைமுடிகளோடும்,கண்கள் இறுகிச்சொருகியும், நாக்கைத் தொங்கவிட்டும்  நாய்கள் வித விதமாய் காட்சிகள்  தந்தன.

   .சிலதுகளுக்கு என்ன பாவத்துக்காகவோ வாலை.ஓட்ட நறுக்கி  இருந்தார்கள்.

 “ரொம்ப பெரிய மனசுக்காரிகள்” அதுகளில் சிலதை, குளிர் தாக்காமல் இருக்க, சால்வை போட்டு மூடி,அனைத்து லாவகமா  கொண்டுவந்தார்கள்.

    கொடுத்து வச்ச ஒன்னு, ரண்டு  வகையறாக்கள் ஏ.சி. வண்டியில் வந்து இறங்கின. வயசான ஆட்கள் அந்த அழகை 'உச்சு' கொட்டி ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

      யாருக்கும் தெரியாத இடத்தில், ஒன்னு ரண்டு நாய்கள்,மூக்குடன், மூக்கு வச்சி  மூஸ்....மூஸ் என்று உரசிக்கொண்டு இருந்தன. சில.... கொர்.....புர்ர்.........என்று முறைச்சல் பண்ணிக்கொண்டு இருந்தன.

    ஒன்னு மட்டும் தெரிஞ்சது என்னான்னா,வந்த அம்புட்டு பேரும் பணக்காரங்கன்னு மட்டும் தான்.....பெத்த புள்ளையை கூட , இம்புட்டு பக்குவமா வச்சிருப்பாங்களா?...என்னவோ? கொஞ்சம் சந்தேகம் தான்.

        ஹையோ......நாம..... நம்ம ஊரில் இதை,இந்த இனத்தை எப்படியெல்லாம் பார்த்தோமுன்னு மனசுல வந்து போச்சுது....

     எங்க அப்பாம்மா, நாயைத்தொட்டு விட்டேன்னு தெரிஞ்சா  ஏழு முறை தெருவில் வச்சோ,பாளையங் கால்வாய்க்கு கூட்டிப் போயோ, கை.கால் கழுவி முடிச்சால் தான், வீட்டுக்கு உள்ளேயே  விடுவாள். 

   அதுக்கு மேல ,லெப்பார் மாமா...... அதுங்களை கண்டு, அவர் சதா பயந்ததாலோ, என்னவோ,..... “ நாய்களாகப் பிறந்தது  எல்லாம், மத்தவங்களை கடிச்சு முடிச்சுட்டுத்தான் மத்த சோலியை பாக்க போகுமுன்னு”.......... ராத்திரியில கதை சொல்லுகிற நேரமெல்லாம் எங்களை  பயங்காட்டி இருக்கிறார்.

      அதனால் என் சின்ன வயதில் இருந்தே அதுகளைக் கண்டால் ஒரு பயம் இருந்தது,  அதையும் மீறி “ஐயோ...பாவம் .இந்தப் பையங்க ஏன் தான்,இந்த ஜீவனை மட்டும் ,கல்ல வச்சு, அடிச்சு கொடுமை படுத்துறாங்களோ?”....அப்படீங்கற இரக்கமும் என் மனசுல கூடவே எப்பவும் வந்து போகும்.

       எப்போவாவது மாமா அல்லது வாப்பாவுடன் வக்கீல், பண்ணையார் வீடுகளுக்கு போகும்போதெல்லாம் அதுகள்  நிக்கிற இடத்தை விட்டு கூடிய மட்டும்,அதுங்களை திரும்பிக்கூட பார்க்காமல்  வேகமாகவே போய்விடுவேன்.

        நம்ம வீட்டில் நிக்கிற ஆடு மாடுகள் கூட இத்தனை ரகத்தில் இல்லையே: இதுகளில் மட்டும் இத்தனை ரகமாங்ற? ஆராய்ச்சிக்கும், மனசில இடம் இருந்துகிட்டே வந்தது.

  

    எங்க ஊர் பக்கம் எங்க சின்ன பிராயத்திலே “பெர்னாட்ஷா” என்கிற பேரை “பெர்னா சார்” ன்னா தான் மத்தவங்களுக்குத் தெரியும். எங்க தெருவுக்கு கிழக்கே,அம்மன் கோவில் வடக்குத் தெருவில் ஓலைப் பள்ளிக் கூடம் நடத்திக் கொண்டு இருந்தார். அவருக்கு ‘அசல் பேர்’  பகவதியாபிள்ளை, என்று சொல்லுவார்கள். தம்மை பெர்னாட்ஷா என்றே அவர் சொல்லுவார்....

    அந்த பேர் அவராவே வச்சுகிட்டரோ? அல்லது வேற யாராவது வச்சாங்களோ?....இந்த வரலாறை யாரும் சொல்லவில்ல. பெர்னா சார் பள்ளிக் கூடத்தில் படிப்பது என்பது, அந்தக்காலத்தில் ரொம்பப் பெருமைக்குரிய விஷயமாகும். கொஞ்சம் வசதியான வீட்டுப் பிள்ளைகள் அங்கேதான் படிப்பார்கள்.

    “பெர்னா சார்வாள்” கிட்ட “ட்யூசன்” படிக்கிற வயசில், கூட படிச்ச மத்த பையன்கள் அம்மங் கோவில், பவுண்ட் ரோடு குத்துக்கல் தாண்டி போகவே இருட்டில்,பயப்பட்ட காலத்தில், நான் ஏதாவது சிவாஜி,எம்,ஜி,ஆர்.பாட்டை படிச்சிக்கிட்டே தைரியமாப் போயிடுவேன். மத்தவங்க எம் பின்னால தான் வருவாங்க.அதுல ஒரு பெருமை வேறு..... ஆனால் எங்காவது அது..... உறுமுகிற,அல்லது ஊளையிடுகிற மாதிரி  ஏதாவது  கேட்டுட்டா அவ்வளவுதான்....... திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே, ஓட்டமா வந்து சேர்ந்துடுவேன்..

    “என்னடா.?.....என்ன சமாச்சாரம்?.....திரும்பிவந்திட்டே?......என்கிட்டே சல்யூட் அடிச்சிக்கிட்டுதானே போன?......அப்புறம் பயம் வராதேடா”.....என்பார் எங்க வாத்தியார் பெர்னாசார்....   


    ‘சார்வாள்’ வந்து இருட்டைத்தாண்டி,”நான் இங்கயே நிக்கேன்...நீ வீட்டுக்கு போப்பா”என்று சொல்லி  அனுப்பி வைப்பார்..இல்லைனா.....எங்க வீட்டில் இருந்து யாராவது வந்து கூப்பிடனும்.அப்ப தான் போவேன். அவ்வளவு பயம்.....இது நாய்களுக்கும் எனக்கும் இருந்த சின்ன வயசு வரலாறு.

நானும் நண்பர்களும் இளம் வயதில் உடற் பயிற்சிகள் செய்ய கிளப்புகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம்.  சில, நண்பர்களுக்கு கொஞ்ச நாளிலேயே  போரடித்துவிடும். அதற்குள் ஏதாவது மழை,குளிர்,வந்துவிட்டால்,கிளப்புக்கும் லீவுதான். இல்லையென்றால் கிளப்பையே மூடிவிடுவார்கள். கிளப்புகளில் பேரல் பார் ,பெஞ்ச பிரஸ்,மற்றும் எடைக் கற்கள் இருக்கும்.அதுக்கும் நண்பர்கள் புடை சூழ கூட்டமாக சென்றால் தான் போரடிக்காது.

  அது போல கிரிக்கெட் அணி அமைத்து விளையாடிய நண்பர்களைப் பற்றி தனித்தனியே எழுதலாம்.

    உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வதை விட, ஏதாவது விளையாட்டுத்திடலில் சென்று நடையும் ஓட்டமும் கொண்டு பயிற்சிகள் செய்யதால் நல்லா இருக்கும்.அதுக்கு எங்கே போவ?...நம்ம பள்ளிக் கூட மைதானத்திலே காலை வேளைகளில் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதென  நானும் அருமை நண்பன், ஆருயிர்த்தோழன் சர்புதீன் மாப்பிளையும் முடிவு செய்து கொண்டோம்.

    “மாப்பிளை,....காலை விடிகிற வேளையில் நாம ஓடினால்தான் ஆக்சிஜன் தெளிவா கிடைக்கும்.நீ பாட்டுக்கு தூங்கிடாதே”ன்னு சர்புதீன் முதல் நாளிலேயே என்னை தயார் படுத்திக் கொண்டான்.

    ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டு முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி மைதானத்துக்கு வந்தோம். அதுக்குப் பிறகு நான் ஓட, .....சர்புதீன் ஓட........இப்படி ஒரு வாரம் ரொம்ப தெளிவா .....ஓட்டம் பிடிச்சுது..

   ஒரு நாள் காலையில், நான் முன்னால் ஓடிக்கொண்டு இருந்தேன்...அது அப்படி ஒன்னும் பெரிய வேகமில்லைதான்.....வழக்கமா எனக்கு பின்னால் சர்புதீன் வருவான்.  அவனுக்கு ஒரு போதும் ஓடினால் இளைக்காது.ஆனால் எனக்கு பின்னே வேறு யாரோ சிலர், வேகு....வேகு ...என்று இளைக்கிற சப்தத்துடன் ஓடி வருவதைப் போல காதில் கேட்டது.... சர்புதீன் தான் நம்மை முந்த, பக்கத்தில் வருகிறானோ? என்று நினைத்துதிரும்பிப் பார்த்தால் .... ....................நான் முன்னால் ஓட எனக்கு பின்னால், ஒரு நான்கு, ஐந்து நாய்கள்,நாலு கால் பாய்ச்சலில்  என்னை விரட்டிக் கொண்டு வந்தன.....
         நாம சரி......நம்ம சர்புதீன் மாப்பிளை என்ன ஆனான்னு? பார்த்தால்.......... என்னையும் ,துரத்திவந்த நாய்களையும் விட்டுத்தள்ளிவிட்டு எ........................பே........என்று சொல்லிவாறு.....இல்லை அலறியவாறு எனக்கு இடது பக்கம் பார்த்து ஓடத் தொடங்கியிருந்தான்.....

       உலக சேம்பியன் அன்று என்னோடு ஓட்டப்பந்தயம் வந்திருந்தாலும் தோற்றுப் போய் இருப்பான். அவ்வளவு வேகம்.
     நான் ஓடிய ஓட்டம் எனக்குத்தான் தெரியும்....தூரத்தில் தெரிந்த பூவரச மரமே எனக்கு இலக்காகத் தெரிந்தது..நான் ஓட....நாய்கள் துரத்த ....முடிவில் ஜெயித்தது யார்.?......நானே தான்.....மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

   ரொம்ப தூரம் துரத்தி வந்து, நாய்களுக்கு இளைக்க,அதுக்கும் மேலா எனக்கும் இளைக்க, மரத்தில் அமர்ந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறதோன்னு  படபடப்புடன் பார்த்திருந்தேன். தூரத்தில் வைத்திருந்த சைக்கிளோடு சர்புதீன் வர, நாய்கள் ஓட்டம் பிடித்தன.அது ஓடியதும் மாப்பிளை கல்லைத்தூக்கி வீசியதும் ரொம்ப வேடிக்கையானது....
        மாப்பிளை டவ்சரை   கழட்டி விட்டோ,அல்லது உள்ளே போட்டோ, கால்களை மூடி, வேஷ்ட்டி கட்டிக் கொண்டு, பாது காப்பு உணர்வோடு .....வேறு எதுவும் வருகிறதா? என்று அங்க இங்க பார்த்துக் கொண்டு வந்தான்.
.       மரத்தில் இருந்து கீழே இறங்கி நான் அவனைப் பார்க்க, சர்புதீன் மாப்பிளை என்னைப் பார்க்க இரண்டு பேருக்கும் அழுகை வந்து விட்டது...
       "வாங்க மாப்பிளை போயிருவோம்"ன்னு சொன்னதில் அவசரம் தெரிந்தது...,
    மீண்டும் "அதுங்க" வருமோன்னு ,அங்க இங்க பார்த்துக் கிட்டான்.”மாப்பிளை உஷாராத்தான் வந்திருக்கான்” னு தெரிஞ்சிக்கிட்டேன்....அன்னையோடு எங்க “ஜாக்கிங்” ஒரு முடிவுக்கு வந்தது.....அதுவும் நாயால் வந்த வினைதான்.

    காடு வெட்டி கிராமத்தில் தோட்ட விவசாயம், தனியாக நடத்த ஆரம்பித்த காலத்தில் ,நான் தங்கி இருந்த குடிசைக்கு அருகில்  எங்கிருந்தோ வந்த நாய்க்குட்டி ஒன்னு, தள்ளாடி நடந்து  வந்து பாவமாகப் பார்த்தது. அது தாயை விட்டு பிரிஞ்சதா?....அல்லது யாராவது விட்டுட்டு போனதான்னு? தெரியாது. “அது பொட்ட குட்டி. அதனால தான் விட்டுட்டுப் போயிட்டாங்க” ன்னு எங்க பாண்டியன் சொன்னார்.

    ரொம்ப பரிதாபமா முழிச்ச அதுக்கு,  "சாப்பிட என்ன இருக்கு"?ன்னு கேட்டுப் பார்த்தேன். சரி இதையாவது கொடுப்போமுன்னு ,முதலில்  நான் கொடுத்ததே யாக்கோபு நாடார் கடை சாயாவைத் தான். கிஸ்ன சாமி அண்ணாச்சி “இத கொடுங்க”ன்னு  அவராவே தான் அத ஊத்தினார்... அப்புறம் நான் போட்ட எங்க வீட்டு மிச்ச மீதி சாப்பாட்டை உண்டு, தின்னு வாலை ஆட்டி ,பாசம் காட்டி எங்க “தோட்டமே கதி”ன்னு இருந்துகிட்டது.

   இத எப்படித்தான் தெரிஞ்சுதோ? இன்னொரு நாயும் வந்து கூட்டணி அமைத்துக் கொண்டது....அது கொஞ்சம் பெர்சாகவும்,வயசாளியாகவும் இருந்த ஆண் நாய்.   ஒன்னுக்கு கொடுத்து வந்த சாப்பாட்டை ரண்டு  வயிறுகளுக்கு கொடுத்து வந்தேன்.

     மின்சார இணைப்பு கிடைக்கும் வரையில், கிணறு பக்கத்தில் உள்ள ஓலைக் குடிசையில் தான், ஸ்லோ ஸ்பீட் ஆயில் என்ஜின்  ஒரு பெல்ட் மூலம், பம்ப் செட்டை ஒடவைத்துக் கொண்டு இருந்தது.    
        டக்கு....டக்....டக்...என்கிற சப்தத்தை தவிர வேறு சப்தமே கேட்காது....அங்கே தூரத்தில் உள்ள குழாயில் இருந்து, தொட்டியில் தண்ணீர் கொட்டும்....அதை வைத்துத் தான் ஆயிரக்கணக்கில் வாழை விவசாயம் நடந்தது........

    ஏதோ....ஒரு பொருளைத் தேடி அலைந்து முடித்து விட்டு, பம்ப்  செட்.ஓடிக்கொண்டு இருந்த குடிசைக்குள் நுழைந்து ,கையில் இருந்த ஒரு சிறிய மண்வெட்டியை அங்கு இருந்த தகர பீப்பாய்க்குள் போட்டேன். ....எனக்குத் தெரியாது. .அந்த பீப்பாய்க்கு அந்தப் பக்கம்  அந்த பெரிய நாய் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தது என்பது.

  அந்த பெரிய நாய்க்கு அந்த சப்தம், ஏதோ வெடி விழுந்ததைப் போல் காதில் கேட்டிருக்க  வேண்டும்..முன்ன, பின்ன எங்கேயும்  பார்க்காமல்,கண் மண் தெரியாமல்  விழுந்தடித்துக் கொண்டு ஓடியது....அப்போது யாரும் எதிர்பாராமல்  அந்த விபரீதம் நடந்தது......
        வேறு ஒண்ணுமில்லை......ஆயில் என்ஜின் பெல்ட்டில் அந்த பெரிய நாயின் வால் மாட்டிக் கொண்டது. ஒரு சுழற்று சுழட்டி பம்ப் செட்அந்த நாயை விட்டது.......கண்ணிமைக்கும் பொழுதில், பெல்ட்டில் இருந்து விடுபட்ட அந்த நாய். தமது வாலை உருவிக்கொண்டு......... அது வோ................வள்....வள்... வள்....வள் என்று பெரும் குரல் கொடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.........திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை....நல்ல வேளை, அதுக்கு ஒன்னும் ஆகவில்லை,பிழைத்துக் கொண்டது. " தலை தப்பியது ,தம்பிரான் புண்ணியம்” என்று மனதைத் தேத்திக் கொண்டேன். அன்னைக்கு பார்த்த அந்த நாயை...... அதுக்குப் பிறகு எங்க தோட்டத்துப் பக்கம் நான் பார்க்கவே இல்லை..

   தோட்ட விவசாயத்துக்கு காவல் நாய்கள் வளர்ப்பதில்,வேட்டை நாய்கள் வளர்ப்பதில் உள்ள இஸ்லாமிய சட்ட தகவல்களை எங்க சலீம் மச்சானிடம் பல முறை கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன். ஆடம்பரத்துக்கு நாய்கள் வளர்க்க உள்ள தடைகள் பற்றியெல்லாம் நீண்ட விளக்கங்கள் சொல்வார்கள். அதன் அடிப்படையில் தோட்டத்தில் நாய்கள் கிடக்கும்...

     ஒரு நாள் “ போனவன் போனாண்டி” கதையாக நாய்,ஒன்று காணாமல் போய்விட்டது அந்த நாய்  குறைச்சால் ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக் காவது கேட்கும்.  இதை ....அப்போது பஷீர் மாப்பிளை கடைக்கு வந்த ஒரு நண்பரிடம் சொல்லி வைத்தேன்.

அதுக்கு அந்த நண்பர் “நான் ஒருவரிடம் நாய் ஒன்று விலைக்கு வாங்கினேன்.அது பாம்ரேனியன் வகை நாய்.அது உனக்கு வேணுமா பாரு” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் சும்மா மொழுக்,மொழுக் என்று ஒரு இளைய நாய் ஒன்றோடு வந்தார்.......

“மாப்பிளை ,நான் என்ன கொடுத்தாலும், இந்த நாய் தொட்டு பார்க்க மாட்டேங்குது......அதுக்கு என்ன பிரியமோ,?,,, அதைக் கொடுத்துப் பாருன்னு ஒரு கண்டிஷனையும் போட்டு அந்த நாயை என்னிடம் தந்துவிட்டார். மிகுந்த எச்சரிக்கையாக நான் போன ஜீப்பின் உள்ளே  அதையும் கட்டி, தோட்டம் கொண்டு போய் சேர்த்தோம்.

       "வழக்கமா நாய்கள் திங்கிற உணவுகளைப் போடுங்கள் .சாப்பாட்டோடு பால் ஊற்றினால் வேகமாக அவைகள் சாப்பிட்டுவிடும்".இதை மனதில் வைக்கச் சொல்லிவிட்டு ஊருக்கு வந்து விட்டேன்.

      மறுநாள் காலை வழக்கம் போல தோட்டத்துக்கு போன போது அந்த நாயைப் பார்த்தேன்.,ரொம்ப சோர்வாக தெரிந்தது.... “என்ன கொடுத்தாலும் திங்க மாட்டேங்குது....என்ன செய்யன்னு”? தேவர் வந்து கேட்டார்.
     நான் யோசனையில் அந்த நாயையே பார்த்துக் கொண்டு இருந்தேன்....இந்த நாய் ஏதோ பணக்கார வீட்டு நாய் மாதிரி தெரியுதே....அத வளர்த்த ஆள் சாப்பாடு போட்டால் தான் திங்குமோன்னு ஒரு நினைப்பு வந்தது....என்ன செய்யன்னு யோசனை நீண்டது.... எது கொடுத்தாலும் உண்ணுவதில்லை என்று வைராக்கியம் கொண்டதாக அந்த நாய் இருந்தது.எனக்கும்
என்ன செய்ய? இந்த நாயை? அப்படீன்னு எண்ணம வந்து விட்டது..

“ஆமா....ஒரு பத்து பதினைந்து நாளுக்கு முன்னால் ஏதோ ஒரு பேப்பரில் காணவில்லைன்னு ஒரு நாய் படத்தோட விளம்பரம் பார்த்தோமே.....அது இந்த நாயோ என்னமோ தெரியல்லியே.”....?அப்படீன்னு மின்னல்வெட்டாய் நினைப்பில் வந்து  வந்து போனது..

அதுக்கு மேலே எனக்கு எதுவும் தோணவில்லை. அது எந்த நாள்  பேப்பரில் வந்தது? என்று யோசிக்க ஆரம்பித்தேன்..

அப்போது மாலை மணி ஆறைத் தாண்டி இருந்தது....டிசம்பர் மாத கடும் குளிர் வேறு.வாடைக் காற்று லேசா வீசத்துவங்கியது.அந்த நாயை நான் பார்த்தபோது லேசா முனகுவது போல் தெரிந்தது.அதன் கண்களில் கண்ணீர் வேறு..என்னால் அதற்கு மேல் நிலை கொள்ள இயல வில்லை.

எந்த பேப்பரா இருக்கும்?  யாரு கிட்ட கேக்க?  பலரிடம் கேட்டு ம்,உருப்படியான தகவல் ஒன்றும் கிடைக்க வில்லை.

சரி, பத்திரிகைத் துறையில் தான் நமக்கு நல்ல நண்பர்கள் பலர் இருக்கிறார்களே அங்கே போவோமுன்னு,போனேன்.முதலில்,தினகரன்,தினத்தந்தி,,என்று,அலுவலகங்களுக்குப் போய் கேட்டேன். 

        “எது சம்பந்தமாக பார்க்கணும்?” என்று எடிட்டோரியலில் என்னிடம் கேட்டார்கள்....காணவில்லைன்னு ஒருவர் விளம்பரம் வந்தது.அது சம்பந்தமா ஒரு தகவல் இருக்கு...அதுக்குத் தான்.என்றேன்..ஒரு மாத பத்திரிகை புக்கே தூக்கித் தந்தார்கள்.நானும் என்னோடு வந்த ஒருவரும் பக்க வாரியாகத் தேடினோம்.  ஒன்றும் ஒரு தகவலும் கிடைக்க வில்லை..

சரி இன்னும் இரு பத்திரிகைகள் உள்ளன.தினமலர்,தினமணி.அதிலும் போய் விசாரித்து விடுவோம் என்று தின மலர் ஆபீஸ் போய் விசாரித்தேன்....என்னை உ ட்கார வைத்து ,அவர்களும் அந்த மாத பத்திரிகை புக் பைண்டிங்கை தந்து விட்டு, “காணல்லைன்னு நீங்க விளம்பரம் பார்த்தது..... ஆம்பிளையா?....இல்ல பொம்பிளையா என்று அந்த தோழர் கேட்டார்.

நான் ரொம்ப திக்கி திணறி ..."அது வேற யாருமில்லீங்க.....அது அது ஒரு நாய்ங்க"...என்றேன்.

அதைக் கேட்டதும் அந்த நண்பருக்கு என்னவோ போல ஆகிவிட்டது..”என்ன தம்பி? என்  நேரத்தையெல்லாம் நீங்க வீணடிக்கீங்களோ ' ?

"இல்ல சார் ,நல்லா நினைப்பில் இருக்கு. தின மலரில் இந்த விளம்பரம் வந்ததாக நான் பார்த்தேன்" என்றேன் விடாப்பிடியாக.

எங்கள் இருவரின் உரையாடலையும்,அங்கே பார்த்துகொண்டிருந்த பத்திரிகை போடும் இளைஞன்  ஒருவன் “சார் நான் தான் சார் அந்த விளம்பரத்தை வாங்கித்தந்தவன்".  என்றான்.

"அப்படியா தம்பி?"என்றேன் இனம் புரியாத மகிழ்ச்சியுடன்.

"ஆமா சார் .போன மாசம் நம்ம பேப்பரில் வந்தது"ன்னு அந்த இளைஞன் மடமடவென சொன்னான்.

   நான் உடனே அவனிடம் ," தம்பி இந்த விளம்பரத்தைக் கொடுத்தவரை உடனே  நான் பார்க்கணும்..கூட்டிட்டுப் போங்க.....சீக்கிரம் வாங்க" ன்னு அவசரப் படுத்தினேன்....."வாங்க சார்..போலாம்"முன்னு....என் பைக்கில் வந்து வழிகாட்டினான்.

"அண்ணே,கே.டி.சி.நகர் போட்டும்னே"....

சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தாண்டி, கே.டி.சி.நகர் போய் சேர்ந்து அந்த வீட்டைத் தேடினோம்..

ஆல்பர்ட், கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம், (ஓய்வு)  என்று பலகை போடப்பட்ட வீட்டின் முன்பாக நாங்கள் போய் நின்றோம்.  அந்த இளைஞன் பெல்லை அடித்தான்.  ஒரு அறுபது வயது தாண்டிய,  முதியவர் ஒருவர் கதவைத்திறந்தார்.
    “சார் நீங்க தானே, நாயக் கானோமுன்னு விளம்பரம் கொடுத்தீங்க..?என்று கேட்டேன்.

 “ ஆமா தம்பி.அதுக்கு ஏதாவது துப்பு கிடைச்சுதா?” என்று பரிதாப உணர்வோடு கேட்டார்.

“ஆமா சார்.இந்த சார் அது சம்பந்தமா ஏதோ உங்க கிட்ட கேக்கனும்னார்.கூட்டி வந்துட்டேன்”என்று அந்த இளைஞர் சொன்னார்.

வேகமாக வந்து அந்தப் பெரியவர் என் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டார்..

“எய்யா......என்னய்யா சொல்றே....எங்க வீட்டு நாயை நீ பார்த்தீயாய்யா?....அது எங்கைய்யா இருக்கு?.”....என்று அந்த பெரியவர் அழுது கொண்டே கேட்டார்...நான் அதை எதிர் பார்க்கவே இல்லை..

அவர் மனைவியை பெயர் சொல்லி,சப்தமிட்டு கூப்பிட்டுக் கொண்டே, அந்த வீட்டுக்குள் என்னை அழைத்துக் கொண்டு போனார். உள்ளே படுக்கையில் கிடந்த அவர் வயதை உடைய பெரியம்மா  எழுந்து உட்கார்ந்தார்...

“லைட்ட போடுங்க”...என்றார்.

விளக்கு வெளிச்சத்தில் நான் சுற்று முற்றும் பார்த்து..அப்படியே திகைச்சுப் போனேன்....

பெருசா...சிறுசா... நாய் படங்கள்...கையில் வைத்துக் கொண்டும்,பக்கத்தில் அனைத்துக் கொண்டும் விதவிதமாய்.....

“எனக்கு பிள்ளைங்க இல்லைய்யா......இந்த நாய்கள் தான் எல்லாம்”....என்று சொல்லிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.

என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை.....மனசு.. ...என்னவோ போல் ஆகிவிட்டது...

“தம்பி இந்த நாயப் பார்த்தீங்களா?......சொல்லுங்க தம்பி...சொல்லுங்க”.....என்று என் தோள்களை உலுக்கி,  குலுங்கி குலுங்கி சப்தத்துடன் கதறினார்...

“என்னய்யா...இது ? ஒரு நாய் பேர்ல இம்புட்டு பாசமா”ன்னு எனக்கு ஆகிப் போச்சு.

“இந்த போட்டோல நிக்கிற நாய் மாதிரி ஒன்னு எங்க தோட்டத்துல வச்சிருக்கேன்.நீங்க வந்து பார்த்தா  தான், அது உங்க நாயா?,மத்தவங்க நாயா?” என்று  தெரியும்ன்னுசொல்லிட்டு எங்க தோட்டம் இருக்கிற காடு வெட்டி விலாசத்தையும் சொன்னேன். 

"சரி தம்பி.....இப்போவே வாங்க.நான் உடனே அதப பாக்கணும். போலாம்"ன்னு” என்னோடு புறப்பட்டு வர ஆரம்பித்தார்.

“அய்யா,இப்போ ராத்திரி பத்தாச்சு......நான் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கேன்..என்னாலேயே குளிர் தாங்க முடியல்லே...உங்களால்.முப்பது கிலோ மீட்டர் தூரம் இதுல, இந்த நேரம் வரமுடியாது” என்று சொல்லி நிறுத்தினேன்.

“இல்ல தம்பி இந்த ஏக்கத்தில் நானும் எம் பொஞ்சாதியும் கடந்த பதினஞ்சு நாளா சாப்பிடலை,தூங்கலை. எம் பக்கத்துல நின்னதைக் காணோமுன்னு தவிச்சுப் போய் இருக்கோம்.....கூட்டிட்டு போய்யா...”இதக் கேட்டு அந்த வீட்டுக்கு பக்கத்தில் என்னவோ? ஏதோன்னு? கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது.

அடுத்து என்ன செய்யன்னு யோசிக்கும் போதே அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு நண்பர்..”வாங்க தம்பி போலாமுன்னு” அவருடைய காரை எடுத்து வந்து விட்டார்....அதில் அந்தப் பெரியவரும், அவர் மனைவியும், நானும் ஏறிக்கொண்டோம்.வழி நெடுக ஒரே நாய்ப் புராணம் தான்.

..இடையில் பலரிடம் போன் செய்து துப்பு கிடைத்த தகவலை பறிமாறிக் கொண்டும்,"கார் வேகமா போட்டும்" ன்னு மட்டும் அந்தப் பெரியவர் சொல்லிக் கொண்டே இருந்தார்

எனக்கோ உள்ளூர ஒரு பயம்.  நம்மகிட்ட வந்த நாளில் இருந்து அந்த ஜீவன் ஒண்ணுமே சாப்பிடல்லை.அதுக்கு முந்தியும் சாப்பிடல்லை.நாம் ஊருக்கு வரும்போதே பலகீனமா இருந்துச்சே.....என்ன ஆச்சோ?.....நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா, இந்த மனுஷன் அதை தாங்குவாரா?" அப்படீன்ன்னு மனசுல பல்வேறு நினைப்புகள்.

ஒரு அரை மணி நேரத்துல தோட்டத்துக்கு போய் சேர்ந்தோம். தோட்டத்து வாசலில் இன்னும் இரண்டு கார்கள்.அதில் சிலர் இறங்கி வெளியே நிப்பது தெரிந்தது.

“யாருங்க நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று நான் விசாரித்தேன்.

“நாங்க பக்கத்து கோவிந்தப் பேரி  ஊருதான்.. இதோ வந்திருக்காரே ,அவுக எங்க அத்தான் தான். அவங்க சொல்லித்தான் நாங்க இங்க வாரோம்.உங்க தோட்டத்து அட்ரஸ் சொன்னாங்க.. நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு வேற போட்டு இருக்கீங்களே.அதான்.உள்ள போகாம வெளிய நிக்கிறோம்”

ஒரு நாயைத்தேடி இத்தனை பேர்களா ? என்று நினைத்துக் கொண்டேன்.

எல்லோரும் உள்ளே போனோம்..ஒரே அமைதி. நாய் குறைப்பே இல்லை..எனக்கு என்னவோ போல இருந்தது.....

அங்கு இருந்த சிறிய வீட்டுக்குள் ஒரு சாக்கு விரிப்பில் அந்த நாய் பல்கீனமாய் படுத்து இருந்தது...கண்களை விரிக்கக் கூட சிரமத்தில் இருந்தது...இவர்கள் வாசனையை கொஞ்சம் அறிந்து விட்டது என நினைத்தேன்..ஆமாம் வாலை ஆட்டத் தொடங்கியது..

.”ஸ்நோயி” என்று அந்தப் பெரியம்மா குரல் கொடுக்க அந்த சோர்ர்வான நாய் தள்ளாடியபடி வாலாட்டி வந்தது.பிறகு ரண்டு பெரும் மாறி மாறி கூப்பிட்டார்கள்.

அப்படியே வந்து கீழே விழுந்தது....

“ஏதாவது சாப்பிட வச்சிருக்கீங்களா?” அந்தப் பெரியவர் கேட்டார்.

பொளுகிற வச்ச பாலையும், சோத்தையும் கொடுத்தோம்.அதை வாங்கி அந்த நாய்க்கு கொடுத்தார்.

நாங்கள் ஊட்டி விட்டும் உண்ணாத அந்த பழைய சோற்றை, பெரியவர் கொடுத்ததும் ,மிக வேக மாக தின்ன ஆரம்பித்தது.அதோடு கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தார்கள்.

“எய்யா.....உனக்கு என்னய்யா வேண்டும் சொல்லுயா....நீ என்ன கேட்டாலும் தாரேன்” என்றார்,அந்தப் பெரியவர்.

“ஒன்னும் வேண்டாய்யா.”....என்றேன்.

“அது சரியில்லை” என்றார்.

“நான் இந்த நாயை ரூபா முன்னூறு கொடுத்து வாங்கி வந்தேன்.அதை மட்டும் தந்திடுங்க” என்றேன்.

அதை அப்படியே வாங்கி, அங்கு அந்த நாயை இரு நாட்கள் பராமரித்த எங்க இசக்கி முத்து  தேவருக்கும் ,பரமசிவக் கோனாருக்கும் கொடுத்தேன்.அவர்கள் "இந்த பணம் நமக்கே நமக்கா ? "அப்படீன்னு பார்த்தார்கள்.
ஊர் வரும் வரை அந்த முதிய தம்பதிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியை சொல்லிக் காட்ட என்கிட்டே வார்த்தைகளே இல்லை.

வியாழன், 11 ஜூலை, 2013

கீழக்கரை.சீனா தானா. செய்யது அப்துல் காதர் அவர்களின் பேருள்ளம்.


      
இம்மாத முதல்வாரத்தில், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்துக்கு, கீழக்கரை சீனா தானா செய்யது அப்துல் காதர் வாப்பா அவர்கள், தமது குடும்பத்தாருடன் சீசனை ஒட்டி வருகை தந்திருந்தார்கள்..

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜும்மா நாள்.அதற்காக செங்கோட்டை 'தஞ்சாவூர் முஸ்லிம் ஜமாஅத்' பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த அவர்களை ,உரையாற்ற ஜமாஅத் நிர்வாகிகள் அழைத்தார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லாக்  கடன்வழங்கும் பைத்துல்மால்கள்  அந்தப்பள்ளி வாசலில் தாம், துவக்கி வைத்ததையும், அவை  தற்போது நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில், பரவிப் பலன் தருவதையும்,  தமது உரையின்போது சீனா தானா அவர்கள் குறிப்பிட்டார்கள்...

தொழுகைக்குப் பின்னர் அவர்களின் நண்பர் மறைந்த 'மெடிக்கல்' அஷ்ரப் அவர்களின் மகன், அவரது வீட்டில் மதிய உணவு உண்ண அழைத்திருந்தார்.

தமது குடும்பத்தாருடன்,நண்பர்களுடன் உணவருந்திவிட்டு வெளியே காரில் ஏறப்போகும் வேளையில்,அந்த வீட்டிலிருந்து, கொஞ்ச தூரத்தில் தெரிந்த குடிசையைப் பார்த்தார்கள்.

அது ஒரு கொல்லுப்பட்டறை. அதனுள் தன்னந் தனியாக முதுமையுடன் ஒருவர் வியர்க்க வியர்க்க வேலை செய்வதையும், இரும்பை உருக்கி தட்டி,நிமிர்த்தி பொருட்கள் செய்வதையும் பாத்துக்கொண்டே அந்தக் குடிசையினுள் நுழைந்தார்கள்.

உள்ளே அந்தத் தகரக் கொட்டகைக் குடிலில், நிமிர்ந்தால் தலைதட்டுகிற அளவில்  கூரை இருந்தது. அங்கே அந்த முதியவரைத் தவிர தீ மூட்டும்”துருத்தியை” சுற்றுவதற்குக் கூட, வேறு துணை யாரும் இல்லை.

, அந்த உழைப்பாளியின்  முகத்தில் மட்டுமே வயோதிகம் தெரிந்தது. உடலோ, உழைத்து உரமேறிய, வைரக்கட்டையாகவும் ,......வார்த்தைகள் நெஞ்சில் இளமை கொலுவிருக்கும் வெளிப்பாடகவும்  இருந்தது.

வாப்பாவோடு அவர்களது மகளார் சுமையாவும் சென்றார்கள்.

"கருமமே கண்ணாக இருந்த" அந்த உழைப்பாளி, உள்ளே நுழைந்த ,அந்த  இருவரை ஒன்றும் புரியாமல், மகிழ்ச்சி பொங்க பார்த்தார்.

அவர் கண்களில்தான் அத்தனை ஆனந்தம்.அவ்வளவு வரவேற்பு.

 “வாங்க, வாங்க சின்னையா” என்று கைலி,தொப்பி கோலத்தில் வந்திருந்த வாப்பாவையும்,முக்காடு அணிந்து வந்த சகோதரி சுமையாவையும் வரவேற்றார்.

“யார் இவுக? என்ன வேணும்?” உடன் போன என்னிடம் கேட்டார்?

“அப்பு,............. அவங்க கீழக்கரை.உங்க பட்டறைய, உங்களப் பார்த்ததும் உள்ளே வந்துட்டாங்க”என்றேன். எங்க பக்கமெல்லாம்,தங்க ஆசாரியோ,கொல்லாசாரியோ  அப்பு,அல்லது சின்னையானுதான் கூப்பிடுவோம். அதுல உச்சி குளிர்ந்து போவாங்க...

தமது குடிசைக்கு வந்த அந்த செல்வந்தர்கள்  இருவரையும் அவர் வேறு எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

வாப்பாவே பேச்சை துவக்கினார்கள்.

"சாப்பிடல்லியா?"

"இல்ல சின்னையா.......இனிதான் சாப்பிடனும்"

“உங்களுக்கு துணையா வேறு வேலைக்காரங்க யாரும் இல்லையா?”

“இல்லியே”

“உங்க பிள்ளைகள்?”

“எனக்கு ஆம்பிளை பிள்ளை இல்ல......பொம்பிள்ள தான் மூணு  பேர் இருக்காக...பேரப்பிள்ளைகள கூப்பிட மனசு வரமாட்டேங்குது...”

“இந்த வயசில இப்படி கஷ்ட்டப் படுரீங்களே துணைக்கு,வேலைக்கு  யாரையாவது வச்சிக்கக் கூடாதா?”

“யாரு வேலைக்கு வாராக?..........இப்பவெல்லாம் எல்லாப் பையங்களும்.படிக்கப்ப் போயிடுறாங்க...மத்ததுங்க கொத்தன்,சித்தாள்  வேலைக்கும், போயிடுதுக...”

“உமக்கு இந்தத் தொழிலில் தினமும் எவ்வளவு கிடைக்கும்?”

“அம்பதும், நூறும் கிடைக்கும்,.......பல  நேரம் ஒன்னுமில்லாமலும் இருக்கும். காலம் போயிடுச்சு..... என்காலத்துக்குப் பிறகு இந்த கொல்லுப் பட்டறையை யார் நடத்தப் போறாங்க? .............என்னவோ ஓடுதுங்க.....என்னையும் ஒரு மனுஷனா நினைச்சு உள்ள வந்தீங்களே....ரொம்ப பெரிய மனசு முதலாளி”......என்று முடித்தார் அந்த தொழிலாளி.

வாப்பாவுடன் பேசும் போது அந்த தொழிலாளி  முகத்தில் அம்ம்புட்டு சந்தோசம்...பின்னர் வாசல் வரை வந்து வாப்பாவை அனுப்பிவைத்தார்.....

“மீரான் ,ஒரு காலத்தில் இப்படி கைத்தொழில் செய்யவே ஆள் இருக்க மாட்டார்களோன்னு வந்துட்டு....அப்படித்தானே? என்றார்கள்....

என்னால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.....