வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆடு மேய்க்கத்தான் லாயக்கு.....நாங்க படிக்கிற காலத்திலே வாத்தியாருங்க பிள்ளைகள திட்டுவாங்க. எப்போ? வகுப்பிலே வளவளன்னு பேசிக்கிட்டு இருந்தாலோ,பரீட்சைல மார்க் கொறையா எடுத்திருந்தாலோ கடுமையா திட்டுவாங்க..

“மூதேவி.....மூஞ்சியப்பாரு....”

“தடி மாடு மாதிரி இருந்தாப் போதுமால?.”

“படிக்க வேண்டாமாலே?....”

“ஏல நீ நெடுவ அலஞ்சிக்கிட்டு இருந்தா எப்படில படிப்ப?”

இப்பிடி பலவாறா வாழ்த்துக்கள் இருக்கும்.

“மாசிலாமணி சார்வாள் இப்படியெல்லாம் பேசுவதோடு நிக்க மாட்டார்..,சாட்டைக் கம்ப வச்சி, பிச்சித்தள்ளிருவார்....பேச்சும் கிடைக்கும், கூடுதலா அடியும் கிடைக்கும்.

எங்களுக்கு, ஜலீல் வாத்தியார்ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு என்ன ஆகுமோ தெரியாது...பெரும்பாலான நேரங்கள் வகுப்பில் பாடங்களே நடத்த மாட்டார்..வகுப்பில் நகங்களைக் கடித்துக் கொண்டே இருப்பார்...வேற ஒன்னும் நடக்காது.   திடீர்ன்னு “ஆ...ஆன்ம் பொஸ்சத்த எடு.... பொஸ்சத்த எடு”....ம்பார்....அவர் எங்களுக்கு ஆறாம் வகுப்பு எழாம் வகுப்பு எடுத்தார்.

“சாமுண்டி பாக்ஸ் வச்சிருக்கியால”.?....இருக்கு சார்.

“ஏல அதுல காம்பஸ்,கவராயம்லாம் இருக்கால?”....

எதுக்குன்னு சொல்ல மாட்டார்.

நாங்க படிச்ச காலத்தில் தான், கணம், சேர்ப்புக்கணம் வெட்டுக்கணம்....மற்றும் அல்ஜீப்ரா அடிப்படைகள் படிச்சுக் கொடுக்கத் துவங்கினார்கள்...

அவருக்கு அந்த சனியன் தெரியாதோ என்னவோ?.....மனுஷன் அதைக் காட்டிக்க மாட்டார்..

“ஏல எழுதுல.....ஒன்னு மெய்... ரண்டு மெய்...மூனு மெய்யல்ல”.....என்பார்.

“சார்.....எனக்கு வெளங்கல்லியே....கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க சார்” என்று எவனாவது கேட்டால், அவ்ளோதான்....தொலஞ்சான்.

“ஏல எழுஞ்சி”....என்று கேள்வி கேட்டவனை நிக்க வச்சிட்டு...அவனுக்கு அடுத்து இருப்பவனை எழுப்பி “உனக்குத்தெரியுதாலே?”

வாத்தியார்லோ கேக்கார்ன்னு..தெரியாவிட்டாலும் ”சார் தெரியுது சார்” என்பான்.

இப்படி ஒரு அஞ்சாறு பேர வகுப்பில் அங்க இங்க எழுப்பி,...இதே பாணியில் கேப்பார்...எல்லாப் பயபுள்ளையலும்,”சார் நல்லா தெரியுது சார் ”அப்படீம்பானுவோ.

கேள்வி கேட்டவன் செத்தான்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவன நிப்பாட்டி .....”உனக்கு தனியா வெளக்கனுமாலே?...மத்தவனுக்கு வெளங்கும் போது உனக்கு ஏம்லே வெளங்கல்ல ?".. “....என்று பேசிப்பேசியே, மனுஷன் அழ வச்சி வேடிக்கைப் பார்ப்பார்... கடைசி வரை அந்தப்புரியாத கணக்க அவர் வெளக்கிச்சொன்னதா.சரித்திரமே இல்ல.

அவரால், கணக்கில் நாசமா போனவங்க நிறைய.....என்னையும் சேர்த்து.

அனந்தையன்னு, எங்களுக்கு கைத்தொழில் வாத்தியார் இருந்தார்.அப்போவெல்லாம் “தறி நெய்வது எப்படி?”, என்று பாடம் நடத்துவார்....குழித்தறி, மேடைத்தறி என்றெல்லாம் எழுதிப்போட்டு  மனுஷன் கேள்விகேட்டுத்தொலைப்பார்.......தக்ளி,ராட்டை,இது மாதிரி சாதனங்களைக் காட்டி பாடம் நடத்துவார்.

தக்ளியில் பஞ்சைச்செலுத்தி நூல் உண்டாக்குவது எப்படி? என்கிற அதிசயத்தை அடிக்கடி நிகழ்த்திக்காட்டுவார்...அந்த நூலை வச்சித்தான் கதர் சட்டை,வேஷ்ட்டிகள் தயாரிக்காங்கன்னு சொல்லுவார்.....

பாவம்.அவருக்கு  கிட்டப்பார்வைதான் உண்டு. தூரப்பார்வை சரியா இருக்காது. அதோடு காதும் சரியா கேட்காது..வகுப்பில் அங்க இங்க பார்த்துக்கிட்டு இருப்பார்.யாராவது பேசிக் கொண்டு இருந்தால்...பேசினவனை நச்சி எடுக்க வேகமா வருவார்.அவர் வருகை பற்றி உஷாராகிற நண்பர்கள்,தொபுகடீர்ன்னு தலையை கீழே “டெஸ்க்கில்” வைத்துக் கொள்வார்கள்.எவம் பேசினானோ? அவனுக்கு நேரா...பின்னால இருந்தவன கொன்னு எடுத்திருவார்...அடிவாங்கினவனுக்கு எதுக்கு இந்த மனுஷன் வெறியா நம்மள வந்து அடிக்கார்?.....ன்னு தெரியவே செய்யாது..

நாம்ம கதைக்கு வருவோம்.

பொதுவா....ஒலகம் முழுசும் இருக்கிற வாத்தியாருங்க “நீ எல்லாம் படிச்சு என்னத்த கிழிக்கப்போற?...பேசாம மாடுமேய்க்கப் போலே...ஆடு மேய்க்கப்போலே...” என்று சர்வ சாதாரணமாகத் திட்டி?...அல்லது ஆசிர்வதித்து அனுப்புவார்கள்.

என் அனுபவத்துல சொல்றேன்.

மாடு மேய்ப்பதும், ஆடு மேய்ப்பதும் அம்புட்டு லேசில்லை.

எங்க விவசாய கிராமத்திலே, ஆடி மாசம் கோயில்ல கொடை நடக்கும்.
அப்போ எங்க பண்ணையில் வேலை செய்யிற எல்லாரும், லீவு போட்டுட்டு, மூனு நாளைக்கு, ஒக்கொன்னா போயிருவாங்க...

உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், நான் தான் அங்கே வந்து, இருந்து, ராப்பகலா ஆடுகளையும் மாடுகளையும் கவனிச்சுக்கனும். விவசாயத்தொழிலாளர்களுக்கு அப்போதான் தான் ஓய்வு கிடைக்கும். வெளியூர் ஆட்கள் விருந்தாளியா கொடைய ஒட்டித்தான் கிராமங்களுக்கு வருவாக. இன்னைக்கும் அதுதான் நடக்கு.

அந்த மாதிரி நாட்களில் என் மச்சின மார்கள் குறிப்பா நூருல் ஹக்,சிராஜ்,மீரான்,முதலானவர்கள் அவங்க நண்பர்களோடு,ஒரு மூணு நாள் எங்க பண்ணையில் தங்கிக் கொள்வாங்க....அதுவும் வெட்ட வெளியில், மரத்தடியில் கட்டிலிலோ,தரையிலோ இரவு நேரங்களில் படுத்துக் கொள்வார்கள். விதவிதமா சமச்சிப் பார்ப்பது எப்படி?  என்கிற வசதியும்,அனுபவமும், அவங்களுக்கு அப்போ கிடைக்கும்.   மூணு நாள் போவதே தெரியாது.

அந்த மாதிரி நேரங்களில் தோட்டத்த விட்டு மாடுகளையும், ஆடுகளையும் கொஞ்சம் வெளியே “பத்திக்கிட்டு” போவேன்.

ஆட்டையும், மாட்டையும் ஒரு போதும் ஒன்னா கொண்டு போகமுடியாது....

நான் சொல்லுறது கிடையை....மொத்த ஆடுகள் கூட்டத்தை சொல்றேன்.

ஆடுகளை மொத்தமாக மூங்கில் வேலி அமைத்து அடைத்துப் போட்டு இருப்பார்கள்...அதுக்குப் பக்கத்தில் குட்டிகளை பரிசல் மாதிரி அமைப்புள்ள ஒரு பெரிய பெட்டியை கவுத்திப்போட்டு அதுக்குள்ளே.....சின்னஞ் சிறு குட்டிகளை அடைத்துப்போடுவார்கள்..

அங்கிருந்து சின்ன குட்டி “ம்ம்பா.”...என்று கத்த...கிடையில் உள்ள தாய் ஆடு, அந்த சப்தத்தை எப்படித்தான் தெரியுமோ? அது தன் குட்டி சப்தம்ன்னு, ரொம்பச்சரியா,அந்தக் குட்டி ஆட்டின் தாய், சரியா பதிலுக்கு “ம்ப்பே”...என்று பதில் சப்தம் போடும்.

காலையில் பொலபொலன்னு விடிஞ்சப்பொறகு, கொஞ்சம் குளிரான காலங்களில், மூசு மூசுன்னு, ஆடுகள் தும்மல் போடும்.அப்போது மூக்குத்துவாரங்களிலும்,வாயில் இருந்தும் கொஞ்சம் ஆவி பறக்கும்...அந்த இடத்தில் ஆட்டு மூத்திர மற்றும் பிழுக்கை வாடை நாசியில் வந்து சேரும்..

கொஞ்ச நேரத்தில் ,இருபக்கம் இருந்தும்,அதாவது தாய் ஆடுகள் பக்கமும், குட்டிகள் பக்கமும் இருந்து சப்தம் கூடி விடும்.

“ஐயோ பாவம் .நேத்து சாயரச்சே அடச்சுப் போட்டது.ஒன்னும் திங்காம,குடிக்காம குட்டிகள் கிடக்கு.தெறந்து விடப்பா”...... இப்படி யாரவது கண்டிப்பா அந்த சப்தம் கேட்டால், சொல்லாமல் போக மாட்டார்கள்.

குட்டிகளைத்திறந்து விட்டதும்,நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்கும் கிடையில் தாய் ஆடு தம் குட்டியையும்,குட்டி தன் தாயையும் அடையாளம் கண்டு கொள்ளும்.  தப்பித்தவறி மற்ற ஆடுகள் பக்கம் போய் இன்னொரு ஆட்டின் குட்டி மடியில் பால் குடித்துவிடமுடியாது...

குட்டியை அல்லது தாயை இழந்த ஆடுகளை வலுக்கட்டாயமாக பிடித்த பின்னால் இன்னொரு ஆட்டிடம்,   பாலூட்டவோ கொடுக்கவோ முடியும்.

ஒரு நாள் ஆட்டப் பார்க்கிற கோனார் காலையில் எதுக்கோ வராம போயிட்டார்...

என்ன செய்ய? ஆடுகளை திறத்து விடுவோமேன்னு தட்டிகளை எடுத்துத் திறந்து விட்டேன். நான் எங்கேயோ அதுகளைப் பத்த அதுங்க வேற திக்கில போக ஆரம்பிச்சுது. நான் ஒருபக்கத்தை பார்த்து இந்தா....ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....ஹை....ஹை....என்று அதுக்கு புரிகிற ஏதோ ஒரு பாஷைய்ல மாடா சத்தங் காட்டியும் ஒன்னும் வேலைக்கு ஆகல்ல.....அதுகள் தம்பாட்டுல போக ஆரம்பிச்சுது...

பொதுவா நேத்து மேஞ்சஇடத்துல ஆடுகள் இன்னைக்கு மேயாது..அதுக்கு காரணம் ஒரு ஆட்டின் வாய் நீர் எச்சில் பட்ட இடத்தில், இன்னொரு ஆடு புல்ல  கடிக்காது. இயற்கை கொடுத்துள்ள கால இடைவெளி, என்று கூட அதச்சொல்லலாம். அதனால் வேற திசைக்கு மேஞ்சிட்டு,ஒரு மூணு நாள் கழித்து பழையபடி முன்ன மேஞ்ச இடத்துக்கு வரும்.

நானும் போனேன்...... போனேன் அதுங்க போற வழியில், போனேன்.

காலையில் எழுந்து பல்ல வெளக்கி,ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் தான் குடிச்சிருந்தேன்.சரி யாராவது வாராங்களான்னு பார்த்தா;,யாருமே அன்னைக்கு வரல்லை.”போகுமிடமெல்லாம் நானும் வருவேன்”னு ஒட்டிக்கிட்ட “ஜெல்” போனும், அன்னைக்கு நான் எடுத்திட்டு போகல்லை.

மதியம் ஒரு பன்னிரண்டு மணி ஆகும் போது லேசா கண்ண கட்டுச்சு...சரி....இன்னைக்கு அவ்ளோதான் ..... பார்ப்பம்ன்னு தலையில் கட்டியிருந்த தலைப்பாவோடு போய்க்கிட்டே இருந்தேன்.

அப்போ..... பசி, கூட ஆரம்பிச்சு இருந்தது....

எங்க தோட்டத்தில் இருந்து ஒரு மூணு கிலோ மீட்டர்க்கு மேலே ஆடுகளோடு, நடந்திருப்பேன்.

ஆட்கள் நடமாட்டமே இல்லாத அந்த மணிமுத்தாறு கால்வாய்க் கரையில்  “சூனா பானா” வடிவேலு மாதிரி இருந்த ஒரு கிராமத்து ஆள்,என்னைத்தாண்டி சைக்கிள்ள போனவன், திடீர்ன்னு சைக்கிள நிறுத்தி, திரும்பி வந்து கொண்டு இருந்தான்.

நான் தலைப்பாவை எடுத்து முட்டாக்கு போட்டுக் கொண்டு,முகத்தை மூடி அவனை எதிர் கொண்டேன்.

‘ஏ...ஏ...யாரு நீ?....புதுசா இருக்கே?”

நான் ஒன்றுமே பதில் பேசவில்லை...

“கேக்கன்...பதில் ஒன்னும் சொல்ல மாட்டேங்க...?”

கொஞ்சம் மெதுவான குரலில்...”நானும்.... நம்மூருதான்...”என்றேன்.

“இங்க உன்ன  முன்னபின்ன நான் ஆடு மேக்க பாக்கல்லியே”? என்றான்.

அப்புறம்..... ஆட்காட்டி விரலை பல்லில் வச்சிக்கிட்டு,.....”சரி சரி.....அசலூரு ஆளோ? புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கியோ?” அதச்சொல்ல வேண்டியது தானே? என்றான்.

“ஆ..ஆமாம்,பக்கத்தில எல்க்கேஷ் தோட்டத்தில...”என்று,  நான் சொல்லி முடிக்கும் முன்னே ...

”அதச்சொல்லித் தொலைக்காம எதுக்கு நீ இம்புட்டு மெதுவா சொல்றே?....” என்று சொல்லி விட்டு, என்னையும் என் ஆட்டுக் கூட்டத்தையும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு,,சைக்கிளில் ஏறி..பச்சை  டவுசர் வெளியே தெரிய வேஷ்ட்டியக் தூக்கி கட்டிக்கிட்டு போனவன், ஒரு அஞ்சாறு முறையாவது திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“எலேய் ......  களவானிப்பய எவனும் ....வாரானான்னு சாக்கிரதையா பார்த்துக்கிடுங்கலே ”.....ன்னு ..தூரத்தில மாடு மேச்சிக்கிட்டு இருந்தவரிடம் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டே அந்த ஆள் போய்க்கிட்டு இருந்தான்.

அப்பாட தப்பிச்சோம் என்று நிம்மதியடைதேன்.

கொஞ்சம் வடக்கு பக்கமா மீண்டும் ஆடுகள் போக ஆரம்பித்தது..

என்னால் வெய்யில் தாங்க முடியவில்லை...தலையைச்சுற்றி ஒரு மாதிரியா இருந்தது.

ஏதாவது  குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன்.

கொஞ்ச தூரத்தில் ஒரு பம்பு செட் ரூம் கண்ணில் பட்டது..

நிழல் வாட்டமா இருந்த அந்த பம்ப் செட் ரூமின் திண்ணையில் போய் உட்கார்ந்தேன். கொஞ்சம் சாயலாம் என்று சரிந்தேன்.

மணி எத்தனையோ? தெரியவில்லை.

கொஞ்ச தூரத்தில் ஒரு வயசாளி போய்க் கொண்டு இருந்தார்...

அவரிடம் சென்று “நீங்க போற பாதையில் உள்ள யாக்கோபு நாடார் ஓட்டலில், திங் கிறதுக்கு ஏதாவதும், டீயும் ஒருத்தர் கேக்கான்னு சொல்லிடுங்க”...என்று சொல்லி அனுப்பினேன்.

நாம அனுப்பிய தூதர், யாக்கோப் நாடார் கடைல சொன்னாரோ என்னவோ? என்று ஒரு அரை மணி நேரமா....காத்துக்கிட்டு இருந்தேன்...

தூரத்தில் ஒரு டி.வி.எஸ்.சூப்பர் வாறது தெரிஞ்சுது..அதில சிரிப்பு நடிகர் செந்தில் மாதிரி அசலா “முழிக்கும்” யாக்கோபும், இன்னொருத்தனும் அந்த பம்ப் செட் நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

நான் அவங்க கைகளையே, பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பின்னால் இருந்தவன் கைகளில் ஒரு ‘கைப்பிடி மரக்கட்டையில்’ டீ இருந்தது...நான் பம்ப் செட் திண்ணையில் இருந்தேன்.

யாக்கோபு என்னை பார்க்கும் போதும் நான் தலையில் முக்காடுதான் போட்டு இருந்தேன்.காரணம் அனல் காற்று வேறு அப்போ அடித்துக் கொண்டு இருந்தது...

“ஏல...எவம்ல ஆடு மேய்க்கவன்?.....நான் பாக்கனும்ல உன்ன.....அங்க வந்து டீய குடிக்க மாட்டியால?.....என் தோட்டத்து பம்ப் செட்ல உனக்கு என்னல சோலி?....என்று கோபம மேலிட தொடர் கேள்விகள் கேட்டுக் கொண்டே என்னை நெருங்கினார்..

“யப்பா....இனியும் தாமதிக்கக் கூடாது”ன்னு...தலையில் போட்டிருந்த துண்டை விலக்கினேன்...

“எய்யா....நீங்க எங்க இங்க வந்து படுக்கிய?”....என்று யாக்கோபு ஆச்சிரியம் கலந்த வியப்பில் கேட்டுக் கொண்டார்.

”நாடாரே...முதல்ல டீயைக் கொடுங்க.”...என்று வாங்கும் போது, இல்ல பிடுங்கும் போது கூட வந்த ஆள்  கைல இருந்த பொட்டலத்தைக் கவனித்தேன்..அதில் எங்க பக்கம் போடுகிற முட்டைக்கேக் (வெட்டுக் கேக்) இருந்தது. அத வாங்கி நான் தின்ன வேகத்தைப் பார்த்துட்டு நாடாரும் கூட வந்த ஆளும் பயந்தே போய்ட்டாங்க...

“என்னய்யா.....சொல்லுங்க இங்க வந்து எதுக்கு பம்மி இருக்கிய?” என்று கேட்டார்.

நான் கொஞ்ச நேரம் சிரித்துக் கொண்டேன்.டீயைக் குடித்துக் கொண்டே அவரைப்பார்த்தேன்.

“என்ன இந்த ஆள் ?...., நம்ம பம்ப் செட் கிணத்து ரூம்ல, யாருக்கும் தெரியாம எதுக்கோ  பதுங்கி இருக்காரா”? ன்னு ... யாக்கோப் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.

“ நாடாரே... வழக்கமா ஆடு மேய்க்க கோனார் வேலைக்கு வரல்லை...ஆட்டத்தொறந்து விடுவோமேன்னு பத்தினேன். அதுங்க, அங்க சுத்தி இங்க சுத்தி ஒம்ம தோட்டம் பக்கத்துல வந்துட்டுது....நான் காலையில் இருந்து ஒன்னும் உங்க, திங்க இல்லையா அது தான் கிரக்கிடுச்சு” என்று சொல்லி முடித்தேன்.
...
“என்ன வேல செஞ்சீங்க? மணி இப்போ நாலரை ஆகுது....நீங்க போங்கன்னு”...தொரட்டிக் கம்பை வாங்கி ... என்னை அனுப்பி வைத்துவிட்டு ,  யாக்கோபு நாடாரே ஆடுகளைப் பத்திக் கொண்டு வந்தார்...

கூடவந்த பையனோடு, என்னை அவர் கொண்டு வந்த டி.வி.எஸ். சூப்பரையும் கொடுத்து அனுப்பினார்.

காலையில் இருந்து என்னைக் காணாமல், எங்க பண்ணையாட்கள் கலவரமே படவில்லை.

“நீங்க யார் கூடவாவது களக்காடு போயிட்டீங்களோன்னு நினைச்சோம்” என்றார்கள்.

ஆறுமணிக்கு ஆடுகள் திரும்பி வந்தன...வயிறுகள் எல்லாம் நிறைந்து...எனக்குத்தான் பசி மயக்கம்
 இருந்தது...

அப்போ வாத்தியார்கள்...எப்போவோ சொன்னது காதில் கேட்டது.

“நீங்கள்லாம் ஆடுமேய்ய்க்கத்தான் லாயக்கு”........