வியாழன், 22 அக்டோபர், 2015

ரயில் பயணங்களில்....


ரயில்....
அந்த வண்டிகள் நிற்கும் நிலையம்...
அவை சின்ன வயது முதலே என்னவோ ஒரு ஈர்ப்பை, எல்லோர் மனதிலும் ஏற்படுத்தித்தான்  வைத்துள்ளது.

நாங்க உயர்நிலை மேல்நிலை வகுப்புகள் படிக்கிற காலங்களில் ....உசுரோடு .....காற்றில் ஆடி அசைந்து....நெடிது  உயர்ந்த.... பெரிய மரங்கள் நிறைந்து,தென்றலோடு தாலாட்ட,..... பச்சைப்பசுமை வயல்கள் சூழ....அப்போது இருந்த மேலப்பாளையம் குறிச்சி ரெயில் நிலையம், அழிஞ்சே போச்சு.....தூக்கிட்டாங்க.

சின்னச்சின்ன வீடுகளில் அங்கேயே குடியிருந்த , அந்த ஸ்டேசன் மாஸ்ட்டர் ஐயருக்கு பத்து பிள்ளைகள்.அவர்களில் கிருஷ்ணன் எங்க கூட முஸ்லிம் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படிச்சான்.....

அதனால் பரிட்சைக் காலங்களில் அங்கே கிடந்த சிமென்ட் சிலாப்பு பெஞ்சுகளில் நானும் நண்பர்களும் ஒன்னா...இருந்தே படிக்க முடிந்தது.

சின்னஞ்சிறிய அழகிய நிலையமாக குறிச்சி ரெயில் நிலையம் இருந்தது....நண்பர்கள் அபூபக்கர் மவ்லானவும்,சின்னாமது மசூதும்  அங்கே படிச்சதவிட அங்கே பாடியதும் ,"பாடம்" படித்ததும் தான் அதிகம்.

மேலப்பாளையம் ரயில் நிலையம் உருவானபோது அங்கேயும் நானும்....இப்போ....மாவட்ட துணை ஆட்சியர் தகுதியில் உள்ள அபுல்காசிம் மாப்பிள்ளையும் நிறைய...."வாசித்துள்ளோம்".
அந்தக்காலத்தில் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் நீராவி என்ஜின்கள் இழுக்க ஒரு.... பத்து பெட்டிகள் கொண்ட தொடர் நெல்லையில் இருந்து சென்னை வரை போகும்.
முதல் நாள் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.00 மணியளவில் சென்னை போய்ச் சேரும்.
கோடை வந்தால் சென்னை செல்வது என்பது.....அமெரிக்கா போவதற்கு நிகரான ..ஒரு வித பரபரப்பை தந்தவை .
பெரும்பாலும் திருநெல்வேலியில் இருந்து கிழக்கே காயல் பட்டணம் ,திருச்செந்தூர் போகவும். மேற்கே தென்காசி ,ரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம் போகவும் அந்தக்காலத்தில் மூணு மணி நேரம் பயணப்பட்டு....சிரமப்பட்டு....கஷ்ட்டப்பட்டு.... "கரிவண்டியில்" தான் போவார்கள்.
ரயில் என்ஜினில் இருந்து கிளம்பும் நீராவி மற்றும் நிலக்கரி தந்த புகை வாசம் ஒருவிதமா இருக்கும்....
மதியம் மதியம் 1.00 மணிக்கு புறப்படும் வண்டிக்கு காலை11.00 மணிக்கே மேலப்பாளையத்தில் இருந்து மாட்டுவண்டியில் புறப்பட்டு விடுவார்கள்..
முதலாவது அல்லது இரண்டாவது நடைமேடையில் நிப்பாட்டி வச்சு இருக்கிற வண்டியில் ஏதாவது ஒரு பெட்டியில் உட்கார்ந்து கொள்வோம்.
வீட்டில் இருந்து எங்க அப்பாம்மா ....கட்டிக் கொண்டு வந்த கூட்டாஞ் சோத்தை.....அவ கையால் எங்களுக்கெல்லாம் ஊட்டி விடுவாள்.....அந்த ருசியை இதுவரை வேற எந்த சாப்பாட்டிலும் கண்டதில்லை...
பெரும்பாலும் ஜன்னல்களுக்கு கம்பிகள் இருக்காது...
ரயில் போகும் திசையில் இருந்து காற்றில் பலநேரங்கள் கரித் துகள்கள் பறந்து கண்களில் விழுந்து உறுத்திக் கொண்டே இருக்கும்..
சென்னைக்கு வருடத்தில் நாலைந்து முறை போகும் எங்க மாமா ...."ஹோல்ட் ஆல்"....என்கிற சுருட்டும் மெத்தையில் தலையணை,போர்வை, சிலவேளைகளில் போர்வை உள்ளிட்டவைகளை கொண்டுசெல்வார்கள்....அதுதோல் வார்பெல்ட்டால் அது கட்டப்பட்டிருக்கும்.அது ராணுவப் பச்சை....நிறத்தில் இருக்கும். 
பெறகு....இப்போ கிடைக்கிற மாதிரி குடி தண்ணீர் பாட்டில்கள் அப்போவெல்லாம் விலைக்கு கிடைத்ததில்லை....திருகுச்செம்பில் காணும்  வரை தண்ணீர் கொண்டு செல்வார்கள்.தீர்ந்துவிட்டால் ஏதாவது ஸ்டேசனில் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு ஊர் தண்ணீரும் வெவ்வேறு ருசியில் இருக்கும்.சில ஊர் தண்ணீரை குடிக்கவே இயலாது.அவ்வளவு துவர்ப்பாக இருக்கும்.வெளியூர் போனால் அந்த ஊர் தண்ணீர் சுவை மாறுபாடு படுத்திஎடுத்துவிடும்.

இப்போது குளிர் பெட்டிகளில் பயணங்கள் பல நேரங்களில் வெறுமை தான்.

இப்போதுள்ள இளைஞர்கள் முதுகில் மாட்டும் பையும்.....அதில் ஒரு ஜீன்ஸ் மற்றும் இரண்டு டி சர்ட்டுகளோடு நாலு நாள் பயணத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள்....அந்த ஜீன்சை எப்போது தான் துவைப்பார்களோ.....யார் அறிவார்?.....தெரியவில்லை.
முன்பெல்லாம் ரயில் கிளம்பியதும் பக்கத்தில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆகிக் கொள்வார்கள்...பலகதைகள் பேசிக்கொள்வார்கள்...

இப்போது செல்போனில் ஹியர் போன்களை மாட்டிக்கொண்டு இளம் வயசுக் காரர்கள் தொடங்கி கிழடு கட்டைகள் வரை .....ஒரு வித மான... "முழி"...முழித்துக் கொண்டு வருகிறார்கள்.....சிலர் இடையிடையே உடம்பையும் நெளித்துக் கொள்வார்கள்..அவங்க பாட்டுக் கேட்கிற ..."லட்சணம் "அப்படி.யாரும் யார்கூடவும் பேசுவதில்லை...
லேப்டாப்,டேப்லட் வைத்துக் கொண்டு சினிமா படங்களை இளைஞர்கள் மட்டுமல்லாமல் கிழடுகள் வரை .....என்னத்தையோ பார்த்து ரசிக்கிறார்கள்..இடையில் தீவிரப்பார்வையும் சிரிப்பும் வேற.
குளிசாதன வசதிப் பெட்டியில் .....உடன் வரும் பயணிகள் பூசுகிற நீலகிரித்தைல அல்லது கோடாரித் தைல நெடி....தாங்கமுடியாதது...

இரவு நேர பயணங்களில் வெளிச்சத்தங்கள் உள்ளே ரொம்ப கேக்காத மாதிரி  இருக்கு....ஆனா...சில பெரும் ஆசாமிகள் சில பயணங்களில் எழுப்புகிற குறட்டைச்சத்தங்கள்  ....தூக்கமில்லாமல் செய்துள்ளன.
எப்போதோ தயார் செய்த வடை,போளி,சமோசாக்கள்,....தின்பவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புகிற பணிகளை கச்சிதமாக செய்து வருகின்றன...
ரயிலில் பயணிக்கும் டிக்கட் பரிசோதனை செய்பவர்களும் , காவலர்களும் டீ முதற்கொண்டு காசு கொடுத்து அவர்களிடம் வாங்கி சாப்பிட்டதை நான் பார்த்ததே இல்லை.
நேற்று திருநெல்வேலி ரயில் நிலையம் சென்று வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வரப் போய் இருந்தேன்.....அப்போது பழமை மாறாத பாட்டிகள் இருவர்.....யாரையோ எதிர்பார்த்து வாசலில் காத்து நின்றார்கள்....
அப்போது நினைவில் வந்தவை இவை.
வெள்ளி, 2 அக்டோபர், 2015

.பாளையங் கால்வாயை பாதுகாப்போம் ......நாங்கள் சின்ன பிள்ளைங்களா இருந்த போது  ..... எங்க ஊர் அமைப்பு வேற...
இன்னைக்கி நாங்க பாக்குற ஊர் வேற...

பொழுந்த பிறகு ....விளக்கு வச்ச பெறகு ....வீட்டை விட்டு பிள்ளைகள் யாரும் வெளியே போக பெத்தவங்க விடமாட்டாங்க...
அவங்க கண்காணிப்பிலே வச்சுக்கிடுவாங்க.....

பெரும்பாலும் குண்டு பல்புகள் தான் தெரு விளக்காகி வெளிச்சம் தரும்.அதுவும் நாப்பது வாட்சுக்கு மேல இருக்காது.
ராத்திரியானா....ஒருவிதமான ஈசல் சத்தமும்....கொஞ்சம் பெரிய வீடுகளின் மேல.... ஒசக்க ஆந்தைகள் சத்தமும் சிலவேளைகளில் கேக்கும்.

எப்பவாவது வெருகுகள் வந்து கோழிய புடிச்சிட்டு போனதா சொல்வாங்க.
ஜூன்,ஜூலை மாதத் தென்றல் காற்றை அனுபவிப்பது அந்தக்காலத்தில் மிகப்பெரும் கொடுப்பினையாகும்.

இன்னைக்கு வீடுகளின் முன் பக்கத்தில் திண்ணைகளே இல்லாமல் வீடு கட்டுவது ,ஒரு நாகரிகமாகிவிட்டது...
ஆனால் கடையநல்லூர் மக்கள் அந்த திண்ணை வச்சு கட்டுகிற கலாச்சாரத்தை இன்னும் விடவேஇல்லை.
எங்கூர்ல அந்த திண்ணைகளில் ‘ஒன்னுபோல’ இரண்டுபேர்கள் படுக்கிற.... தூங்குகிற வசதிகள் இருக்கும்.

ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும்.
அப்போது திண்ணைகளில் உட்கார்ந்து.... முகம் காண முடியாத கொஞ்சம் மெல்லிய இருட்டில்...ஆண்மக்கள் தனியாவும் ,பெண்மக்கள் தனியாவும் உட்கார்ந்து ஒரு ஒரு மணி நேரத்த போக்குவார்கள்...அதுக்குப் பெறகு சிலதுகள் வீட்டுக்குள்ளே போய் தூக்கம் போடுவார்கள்.சிலர் அப்படியே திண்ணையில் பாயை போட்டு தூங்கிவிடுவார்கள்..

ஒரே ஒரு தட்டு உள்ள வீடுகளில் உள்ள ஆண்கள்.... தானும் ,அவங்க வீட்டம்மாவும்,ஒரு மறைப்பு....அல்லது படுதா கட்டி.... ,”பிள்ளை அல்லது மகன் மருமகளுக்கு  வசதியா”...பின்னிரவு  அல்லது அதிகாலை வரை திண்ணைகளிலேயே.. தூக்கம் போடுவார்கள்.அங்கேயே குடும்பம் நடத்தும் சில “வல்லாத்த”:...பேர்களும் உண்டு.
யாரும் அடுத்த வீடுகளில் போய் தலையிட மாட்டார்கள்..

 யார்வீட்டு மாப்பிளையாவது...நடுநிசி தாண்டி...மனைவி வீட்டில் இருந்து வேக வேகமாக சைக்கிளை அழுத்திக் கொண்டு போவதுண்டு...அந்த சைக்கிள் போன திசையின் பின்னே.....முபாரக் ஸ்டோர் அல்லது குட்டிமீனா ஆலிம் ஷா அத்தர் வாசனை காற்றில் வீசுவதுண்டு..
அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் காதுகளின் மேல் மடிப்பு இடுக்குகளில் புளியங்கொட்டை அளவில் உருண்ட அமைப்பில்,பஞ்சு எடுத்து அத்தர் அல்லது சென்டில் நனைத்து செருகி வைத்திருப்பார்கள்.

பொண்ணு வீட்டு தெருக்களில் செல்லும் போதோ...அல்லது வேறு யாராவது
பக்கத்தில் வந்தாலோ....சொய்யில....காதில உள்ள பஞ்சை...ஒரு விரலால்  லேசாக ஒரு சிறிய அழுத்தம் கொடுத்து அதில் தட்டுப்படுகிற அத்தரின் ஈரப்பதத்தை “அங்க இங்க” தேய்த்துக் கொள்வார்கள்.

மேலதிகமாக காற்று வாங்கனும்ன்னு நினைக்கிற கிளடு கட்டைகள் ....அவங்க வீட்டின் வாசல் ஓரம், நார் அல்லது கயிர் பின்னல் கட்டில்களைப் போட்டு அதுக்கு மேல சின்னதா முதுக அழுத்தாம இருக்க, ஜமுக்காளம் விரித்து,தலைக்கு தலையணை வைத்துத்  தூங்குவார்கள்.
நிம்மதியான காலம் அது...

எப்பவாவது திருட்டுப்பய ....சேட்டைகளும் நடக்கும்...அப்படியாபட்டவங்க ....கையில ஆம்ப்ட்டான்னா தொலைஞ்சான்.......கொன்னு எடுத்துருவாங்க.அதுக்கு தோதுவா...பாவாத்துற அலாம்புக் கம்புகள் ஐந்து வீடுகளில் ஒன்றிலாவது இருக்கும்.

எல்லாத்துக்கும் மேலா....தண்ணிச்செலவே அந்தக்காலத்தில அதிகம் இருக்காது.
குடிக்க மட்டும்தான் பெரியாத்துத் தண்ணி.(தாமிரபரணி)...அல்லது முனிசிபாலிட்டி தண்ணி....மத்ததுக்கெல்லாம் நம்மாத்துத் தண்ணிதான்.

பொதுவா நம்மாறுன்னு மேலப்பாளையம் ஊரைச்சுத்தி ஓடுகிற பாளையங்கால்வாயைத் தான் சொல்லுவார்கள்.
காலை விடிகிற நேரத்துக்கு முன்னே ‘புதுப்பொண்ணுகளும்,’இளம் வயது ஆண் பெண் மக்களும் வாய்க்காலில் போய் குளித்து முடித்துவிடுவார்கள்.

அதுக்கப்புறம் எட்டுமணிக்கு மேலே இளந்தாரிகளின் ஆளுகையில் நம்மாறு வந்து விடும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி படித்துறைகள் உண்டு.

காலை எட்டு மணிக்கு குளிக்க ஆத்துல இறங்கி மதியம் ரண்டு மணிவரை அழிச்சாட்டியம் செய்யும் சேட்டைக் கார பையன்கள் ஒவ்வொரு தெருவிலும் இருப்பார்கள்..

வாய்க்காலின் இக்கரைக்கும் அக்கறைக்கும் போட்டி போட்டு நீச்சலடிப்பார்கள்...சில குசும்பர்கள்,படிக்கட்டின் பக்கத்தில் கூட்டமா நின்று குளிக்கும் ஆண்களை அதிலும் கொஞ்சம் வயசு கூடியவர்களை உள் நீச்சல் போட்டு நீந்தி வந்து “பிச்சி” விடுவதுவதும் உண்டு.

எங்காவது தெருவில் “மையத்து” விழுந்துவிட்டால், இளவட்டங்கள் வாய்க்காலில் இருந்துதான் நாலு நாலு குடமாக தண்ணி எடுத்து கொண்டுபோய் தொட்டியில் நிரப்பிக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்வார்கள்..

மிக நீண்ட தூரமாய் இருந்தாலும் ஊர்க்காரர்கள் தான் தண்ணி மொண்டு கொண்டு போவார்கள்..இன்னைக்கு ஆழ்குழாய் உதவியால் யார்வீட்டின் மையத்துக்கும் வாய்க்கால் தண்ணி கொண்டுபோவதில்லை.

 தண்ணீர் வசதி இல்லாத வீடுகளில்... தெருவில் உள்ள பொது நல்லிகளில் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்லுகிறார்கள் 

நல்ல தண்ணி வராத காலங்களில் வாய்க்கால் தண்ணியைக் கொண்டு சோறாக்கி ,குடித்து தாகம் தணித்தவர்களும் நிறைய இருந்தார்கள்.
இன்னைக்கு....படித்துறைகள் எதிலும் ஆட்கள் யாரும் வருவதில்லை...மனுஷங்க மாறியதுபோல....பாளையங்காலும் மாறிவிட்டது..

எங்க ஊருக்கு தண்ணி வருவதற்கு  முன்னாடியே கருங்குளத்தில் துவங்கும் சாக்கடை கலக்கல் காட்டுத்தெரு தாண்டி..... பெருகி ஓடும கூவமாக மாறிவிட்டது...
கைகால்கள் கூட அலம்ப முடியாது.மீறினால் சொறி சிரங்குதான்.
பாளையங்கால்வாயை இப்படி கொடுமைக்கு உள்ளாக்கியது யார் குத்தம்?....
பொறுப்பற்ற உள்ளாட்சி நிர்வாகமும், கண்டுகொள்ளாத மாநகராட்சியும்,தான்.
அத்தோடு இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.பூமியை இறைவன் படைத்த நாள் முதல் பாதுகாத்து அதனுள்ளே இருக்கும் ஆழ்குடிநீரை வகைதொகை இல்லாமல் பம்ப் செட்டுகள் மூலம் எடுத்து சீரழிக்கின்றோம். 

பாதி தெருக்களில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது.மிச்சம் மீதியுள்ள தெருக்களில் முன்நூறு அடிக்கு கீழே போய்விட்டது.

 பின் சந்ததிகளுக்கு நிலத்தடி நீரை இருப்புவைக்காமல் சுரண்டிக் கொண்டு இருக்கிறோம்....

எங்கள் தலைமுறைக்குப் பின்னர் வாய்க்காலை யாரும் பயன் படுத்தததால் நீச்சல் என்றால் என்னவென்று தெரியாத இளைஞர்கள் எங்கள் ஊரில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.
வசதி வாய்ப்புக்கள் உள்ள சிலர் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சென்று நீச்சல் குளத்தில் நீந்த பயிற்சி  எடுக்கிறார்கள்...

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சொன்னது போல நீருக்காகவே யுத்தங்கள் வரலாம்.
நேற்று நானும் ,மருமகன் அப்துல் ஜப்பாரும் எங்கள் வீட்டின்  பக்கம் வாய்க்கால் கரையில் நின்ற காரில் ஏறி   வெளியூர் புறப்படுமுன்னர் அங்கே பார்த்தேன்.....நாங்கள் எல்லாம் நீச்சல் பழகிய....அதிக நேரம் குளித்ததால் என் வாப்பும்மாவிடம் உதைவாங்கக் காரணமாயிருந்த பாளையங்கால்வாயின் கரையைத்தொட்டு நிறைய நீர் சாக்கடை நீர் தேங்கி திணறிக் கொண்டிருந்தது.

தண்ணீர் நிறைந்து செல்லுகிற காலங்களில் கூட குளிப்பதற்கு  இளவட்டங்கள்,சிறுவர்கள்,தாய்மார்கள் என்று யாரும் இல்லை..என் மனது என் இளமைக் காலத்தை நினைந்தது ஏங்கியது..

நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து டவுசரை கழட்டி வைத்துக் குளித்தக் காலங்களும்,.......லுங்கி கட்டும் வயதில் வெட்கப்பட்டு மறைத்துக் குளித்த வசந்தகாலப் பொழுதுகளும்.கண்முன் வந்து போனது.
வாப்பாமார்களின் லுங்கியை உடுத்திக் கொண்டு ஆற்றில் குளிக்கும் போது.... இருபுறமும் வேஷ்ட்டிக்குள்ளே காற்றை செலுத்தி கொஞ்சம் பலூன் போல ஆக்கி வாத்துகள் போல கொஞ்ச தூரம் நீந்திச்சென்றதும் நினைவில் வந்து நிறைத்தது.

ஆனால்.....பாளயங்கால்வாயில் குளிக்கத்தான் ஆட்கள் இல்லை.......மனது கனத்தது .......மாடுகளும்,எருமைகளும்..... சுகமாக நீந்திக் கொண்டு இருந்தன.
பாளையங்கால்வாய் கரையை ஒட்டி குழாய்கள் அமைத்து அந்த குழாய்களில் கழிவு நீர் சாக்கடைகள் கழிப்பறை கழிவுகள் சேருகிற அமைப்பில் உண்டு செய்தால் பாளையங்கால் வாயை காப்பாற்ற இயலும்.

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறட்டும்.... என்று காத்துக் கொண்டிருந்தால்.... மேலப்பாளையத்தில் உள்ள நிலத்தடி நீர் அனைத்தும் சாக்கடை நீராகவே மாறிப் போய்விடும் அபாயக் கொடுமை உள்ளது .

கன்னிமார் குளத்தில் தேங்கி இருக்கின்ற தண்ணீர் அனைத்தும் ஹாமிம்புரம் பகுதிகளின் கழிவு நீர் சாக்கடைகளின் சேமிப்பாகும் .

அங்கு சேருகிற கழிவு நீரையும்  தனியாக வெளியேற்றி தனி குழாய்கள் மூலமாக பாதாள சாக்கடைக்கு சேமிப்புக்கு செல்ல வேண்டும்.
இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றோம்.

தொடர்ந்து பேசுவோம் ... 


ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

மோட்டார் பைக்கும்....குருநாதரும்.


சில சம்பவங்கள்....சில முகங்கள்....எப்போதும் மனதை விட்டு மாறவே மாறாது ; மறையாது....
அதில் எங்க அண்ணன் செய்யது முகம்மது புகாரி..பற்றி நினைக்க ....நினைக்க பல சம்பவங்கள் மனதில் வந்து போகும்..அதில் எதைச் சொல்ல?......எத விட?
எங்க வீட்டில் பாட்டனார்கள் மூவர்......
அவர்கள் இலங்கை,பர்மா,கராச்சி,சிட்டகாங்,கொல்லம் முதலான ஊர்களில் கைத்தறி லுங்கிகள் மொத்தவணிகம் செய்தவர்கள்.
அந்த மூவருக்கும் ஆண் மக்கள் ஆறு பேர்கள் தாம்....
அந்த ஆறுபேர்களுக்கும் பதிமூன்று பேர்கள் பேரன்கள் ஆவோம்...நான் சொல்வது ஆண் வாரிசுகளை மட்டுமே..
எங்கள் இளமைக் காலம்.... பள்ளி...கல்லூரிக்கு செல்வதைத் தவிர, வயலுக்குப் போவது ,தண்ணீர் பாய்ச்சுவது ....சந்தைக்கு போவது.....ஆடுமாடுகளை பேனுவது.....என்று தொடர்ந்தது..அது சுகமானது.
எங்கள் பெரிய வாப்பா மகன் அப்துல்லா லெப்பை காக்கா.....அவரைத்தொடர்ந்து சின்ன காக்கா கபீர் என்று சிறிய வயதிலேயே அவர்கள் இருவரும் மாரடைப்பால் இறந்துபோய் விட்டார்கள்...
குடும்பத்தில் கார்கள் இருந்தாலும் அதன் மீது அந்தக் காலத்தில் எனக்கு ஆர்வம ஏற்படவில்லை.... மோட்டார் சைக்கிள் ஓட்டிப் பழக, சின்ன வயதில் நான் மிக ஆர்வம கொண்டிருந்தேன்...ஆனால் அந்த ராஜ்தூத் வகை மோட்டார்பைக்கை தொடக் கூட முடியாது.
பெரிய வாப்பா அவ்வளோ அழகா வைத்திருப்பார்....எங்க ஊரில் மொத்தமே நான்கு பேரிடம் மட்டும் தான் மோட்டார் சைக்கிள் இருந்த காலம் அது.....
என்றைக்காவது வயலுக்கோ அல்லது சந்தைக்கோ போகச்சொல்லி அவர் தந்து வண்டியை ஒட்டிக கொண்டு போனால் தான் உண்டு.
அதுவும் எங்க அண்ணன் மார்கள் மூத்த இருவர் மட்டுமே ஓட்ட அனுமதிப்பார்கள்.....என் போன்றவர்கள் பின்னால் உட்கார்ந்து தான் வரவேண்டும்.
ஒருநாள் எங்க சின்ன காக்காவை.....மோட்டார் சைக்கிள் ஓட்ட சொல்லித் தரச்சொல்லி படுத்தாத பாடு படுத்தினேன்...
"சரி....நாளைக்கு நம்ம வயலில் களை எடுக்க ஆளை எண்ணச் செல்லும் போது நீயும் வா.....பாக்கலாம்"..... என்று அவன் பொதுவாகவே சொல்லி வைத்தான்...
மறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் அவனோடு செல்ல அவங்க வீட்டுத் திண்ணையில் தயாராக இருந்து கொண்டேன்...
ஒரு பத்து மணிவாக்கில்...."வா..போலாம்"...ன்னு கூப்பிட்டான்...
அன்னைக்கு கடும் வெய்யில....ஊரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தருவை வயக்காட்டுக்கு "ஆள எண்ண"..ப் போனோம்..
மதியம் இரண்டு ....மணியாச்சு .,வயலில் இருந்து ,வீட்டுக்கு புறப்பட்டோம்..
நிழலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் பக்கம் வந்தோம்.அண்ணன் அதன் விசையை உதைத்து..... உட்காரப் போனான்..
"சரி...சரி....நான் ஓட்டுறேன்" என்றேன்.
"இன்ன பார்...இது பிரேக்..."...
"அப்புறம்"....
"இது ஆக்சிலேட்டர்... "
"ம்ம்..."
"இது ...கிளட்ச்...."..முதல்ல...கிளட்சை...அழுத்திப் பிடிக்கணும்....அப்புறம் காலால் கியர் ராடை....கீழே அழுத்தனும்....அப்புறம் மெதுவா....ஆக்ஸிலேட்டரை கூட்டி....கிளட்ச விடனும் என்றான்..."
"சரி..சரி...ஆட்டும்"என்றேன்.
எல்லாம் சரியாத்தான் நடந்தது...
ராஜ்தூத் வண்டி டப...டப...வென்று போகத்துவங்கியது....நான் எதோ ....பறப்பதைப் போல அந்தப் பொழுதை....உணர்ந்தேன்.
கொஞ்ச தூரம் ஒட்டி இருப்பேன்...
பச்சையாற்றுப் பாலம் வந்தது....
"டேய்...அங்கே ஒரு பஸ் வருதுல........கொஞ்சம் ஆக்சிலேட்டர கொறல..."...
"கொறச்சாச்சு...அப்புறம் என்ன செய்ய?"...
"கியர கால வச்சு கீழே அமுக்குல...."....
.................................................................
"ஏல..ரொம்ப....நேரமா...கால வச்சு என்னத்த தேடுறே"?....
"கொஞ்சம் பொறு.....கியர் மாத்துற ராட காணோம்டா....அதைத் தான் நான் தேடுறேன்...." என்று நான் கொஞ்சம் லேசான பதட்டத்தோடு சொன்னேன்..
"என்ன..சொல்ல்றே..கியர் ராட....காணோமா?...என்னடா சொல்றே?சீக்கிரம் கியர மாத்துடா..."...என்று கடைசியாக அவன் சொன்னது மட்டும் கேட்டது...
எப்படியோ தட்டுத் தடுமாறி....வேர்த்து... விறுவிறுத்து....அந்த கட்டபொம்மன் பஸ் முன் பக்கம் போய் மோட்டார் சைக்கிளை...நிறுத்தினேன்...
குருநாதர்....... என்ன சொல்லப் போறாரோ?...என்ற தவிப்புடன்....
பின்னால் திரும்பிப் பார்த்தேன்........பகீர் என்றது.

ஆளைக்காணோம்.

பின்னால் தான இருந்தான்? எங்க போனான்?.....என்று அங்க இங்க...பதட்டத்தோடு தேடினேன்.
ரொம்ப தூ.......ரத்தில்..... நடு ரோட்டில் அவன் நிற்பதைப் பார்த்தேன்..அப்படியே மெதுவாக என் பக்கம் வந்து சேர்ந்தான்.
என்னால் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றி, பிரேக் முடியவில்லை...என்றதும் எப்படித்தான்.....வண்டியை விட்டு குதித்தானோ?....என்னால் இன்று வரை புரிந்து கொள்ளமுடியவில்லை...
அவனைப் பார்த்து ரொம்ப நேரமாக.......நான் சிரிக்க....என்னைப் பார்த்து அவன் முறைக்க....
அதன் பின்னர்..... பஸ் என்னை விட்டு கடந்த ....வெகுதூரத்தில் ரோட்டில் கிடந்த, கியர் ஷிப்ட் ராடை...எடுத்து...கல்லை வைத்து தட்டி சொறுகி...வண்டியை " ஒரு மாதிரியா...."..ஸ்டார்ட் பண்ணினோம்.
கொஞ்சம் கெஞ்சிய குரலில்.... " நான் ஓட்டட்டுமா"..என்று மீண்டும் கேட்டேன்..

"ஏல...என்னை கொண்டு போய்.... வேற லாரி ....பஸ்ல...உள்ள விடவால ....இப்படி கேக்கிறே"?....என்று கேட்டுட்டு ஒரு முறை முறைச்சான்...
வீடு வந்து சேர்ற வரையும்..அவன் என்னை ஏசிக்கொண்டும்....நான் அவனை பதிலுக்குத் திட்டிக் கொண்டும் வந்தோம்...
அப்புறம்....நாலு வருஷமா ....என்கிட்டே அந்த வண்டிய ,  அவன் தரவே இல்லை....
நான் வேற ஆளைப பிடிச்சி ஓட்டப படிச்சது வேற கதை.....
இன்னைக்கும்..அதே கிண்டல்..அதே கேலி....அதே பொறுப்புணர்ச்சி....அதே பாசம் கொண்டு உரிமையோடு இருப்பவன் எங்க அண்ணன் செய்யது முகம்மது புகாரி..
(அவனைப் பற்றி சொல்ல நிறையவே இருக்கு...
அப்புறம் எனக்கு கார் ஓட்டப படிச்சுத்தந்ததும் அவன் தான்.)

எங்களை மனிதர்களாக்கிய சதக்கத்துல்லாஹ் அப்பாக்கல்லூரி.


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை,ரஹ்மத் நகரில் அமைத்துள்ளது  சதக்கத்துல்லா அப்பாக் கல்லூரி.....
என் போன்றவர்கள்...மனிதனாக வாழ அடிப்படை அமைத்துத்தந்தது எங்கள் கல்லூரி ...என்றே எப்போதும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்...
பேராசிரியர் நசீருதீன்,பேராசிரியர் முஹம்மது பாஸி ஆகிய இருவரும் முதல்வராக இருந்த காலத்தில் இளங்கலை கற்கும் வாய்ப்பு..... எங்களுக்குக் கிடைத்த காலத்தின் பரிசு என்றே சொல்லலாம்........
கல்லூரியில் சேரத் தகுதிக்குரிய பிளஸ் டூவின் மதிப்பெண்கள் என்று வைத்து இருந்ததைவிட இரண்டு மதிப்பெண்கள் குறைவாகவே எடுத்து இருந்தேன்....
நான் கல்லூரியில் நுழைவுப்படிவம் வாங்கச்சென்ற அன்று என்னோடு என் மைத்துனர் எஸ்.எம்.தாஜூதீனும் வாங்க வந்து இருந்தார்..
கடுமையாகக் காற்றடித்த, ஜூன் மாதத்தின் ஒருமதிய வேளையில், நானும் தாஜூதீனும் ஆளுக்கொரு சைக்கிளில் மேலப்பாளையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த எங்கள் கல்லூரிக்குச் சென்றோம்..
தாஜ் எனக்கு முன்னால் படிவம் கேட்க, நானோ வரிசையில் அவனுக்கு அடுத்ததாக நின்று கொண்டு இருந்தேன்..
என் முறை வந்தது....ரூபாய் ஐம்பதைக் கைகளில் வைத்துக் கொண்டு காத்து நின்றேன்...
"எந்த குரூப்"? அங்கே கவுண்டரில் இருந்தவர் கேட்டார்.
"பி.ஏ ".....என்றேன்.
என் பக்கத்தில் நின்ற மைத்துனர் தாஜுதீன்.,"என்னது பி.ஏ.வா ?.....வெளங்கும்.......நீ மட்டும்தான் ஒத்த காக்காயா....அங்க போய் இருக்கணும்...நாங்கள்லாம் பி.காம் போறோம்...நல்லா யோசித்துக்கோ"....என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டான்.
அந்த ஒரு வார்த்தை..... என் வாழ்வை....படிப்பின் தலைவிதியையே மாற்றி ......அங்க இங்கசுத்தவச்சி.....அரசியல்மேடைகளில் ஏற்றி......பொதுவாழ்வில்.....கல்விப்பணியில்....போகவைத்து என்னைக் காடுவெட்டி விவசாயத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது....
நானோ பி.ஏ..படித்து பின்னர் பி.எல்.முடித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என, நீண்ட நாட்கள் கனவுகள் கண்டு வந்தேன்....அந்தக்கருப்புக் கோட்...மற்றும் கவுனையும்,அணிந்து யாராவது சென்றால்...என் மனதுக்குள் இனம் புரியாத ஏக்கம் வந்தே செல்லுகிறது...என்னால் தாங்க முடிவதில்லை...வக்கீலாக ஆகணும் என்று நினைத்த ஆசை நிறைவேறாமல் .....கனவாகவே போய் விட்டது......
பி.காம்.பாடப்பிரிவில் சேர்ந்தேன்...கல்லூரி முதலில் பயத்தைத் தந்தது....பிரமிப்பாய் இருந்தது....கலகலப்பாய் இருந்த நட்பின் வட்டங்கள் விரிந்தது...
நாங்கள் சதக்கத்துல்லா அப்பாக கல்லூரியில் மாணவர்களாக இருந்தபோது “அக்கால வழக்கப்படி” ஸ்ட்டெப்...கட்டிங் ....ஸ்டைல் எங்களையும் பற்றிப் பிடித்திருந்தது...என்னோடு கல்லூரிக்கு உடன் வருகிற தாஜுதீன்,முத்துப்பாண்டி, மைதீன் அப்துல் காதர்,,அயூப்கான்,செய்யதுதாமீம்....உள்ளிட்ட அனைவரும் அதே ஸ்டைலில் தான் முடியை அலங்கரித்து இருந்தோம்.....
அதற்கு ஒருதலைராகம்.... வாழ்வே மாயம் முதலான தமிழ் சினிமா படங்களும்..இந்தியில் வெளி வந்த குர்பானி...ஷான்....தி பர்னிங் ட்ரெயின் .படங்களும் காரணமாய் அமைந்தன...
எங்களின் ஸ்டெப் கட்டிங் தலையழகை.... கலையழகை பேராசிரியர் நசீருதீன் ஒரு போதும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்....ஒருநாள் கல்லூரி நுழைவாயில் அருகே நின்று கொண்டு இருந்த அவர், கடும் வேகமாகக் கடக்க முயன்ற எங்கள் கோஷ்ட்டியை தடுத்து நிறுத்தினார்.... .....
”என்ன.... கொண்டையை...வளர்ப்பதில்....போட்டியா வச்சு இருக்கீங்க?”...என்று கடும் சிரிப்பின் ஊடே என்னை பார்த்து கர்ஜித்தார்..... .... "ஒழுங்கு மரியாதையா....நாளைக்கு காலேஜ் வரும்போது....முடிய வெட்டிக்கிட்டு வரணும்"....
“சரி சார்”....
“நான் சொன்ன மாதிரி....அப்படி முடி வெட்டாம...வந்தீங்கன்னு வச்சுக்கோ.....நானே உங்க முடியவெல்லாம் வெட்டிப்புடுவேன்...வெட்டி.... ”.....
மனுஷன் பயங்கரமான ஆளாச்சே....செஞ்சாலும் செய்திடுவார்...என்று பயந்துபோய் அடுத்தநாளே நான் தலைமுடி அமைப்பை மாற்றிக்கொண்டேன்....
மத்த நண்பர்கள் எல்லாம் அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவே இல்லை...அடுத்து வந்த மாதங்களில்.எங்கள் முதல்வர் பேராசிரியர் நசீருதீன் உடல் நலிவுற்று இறந்து போனார்.
அவர்கள் காலத்திற்குப்பின்னர் பேராசிரியர் முஹம்மது பாஸி அவர்கள் முதல்வர் ஆனார்கள்...அவர்கள் முதல்வர் பணி முடித்து இன்று அமெரிக்காவில் உள்ளார்கள்....
இன்றும் என்னோடும்.... என் சகோதர சகோதரிகளோடும் தொலைபேசியின் மூலமாகத்தொடர்பு கொண்டும்,...ஒவ்வொரு முறை ஊர் வரும்போதும் எங்கள் விருந்துக்கு வருவதையும், வழக்கமாக வைத்துள்ளார்கள்...அதையும் தாண்டி முகநூலில் என்னோடு எப்போதும் தொடர்பில் அவர்கள் இருக்கிறார்கள்....
அவர்களுக்குப் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் முகம்மது பாரூக் அவர்களும் அப்படித்தான்....என் கல்லூரி முதல்வர்கள் மூவரோடு பாசமான நட்பு கொள்ளவைத்த காலங்களை அடிக்கடி... மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கிறேன்...
கல்லூரியின் எல்லா விழா நிகழ்வுகளுக்கும் அழைப்புகள் வருகின்றன....கல்லூரி உருவாக்கம் பெற உழைத்த எங்கள் மாமா மேலப்பாளையம் முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் அவர்களின் பிள்ளையாக, நானும் அவர்களோடு வலம் வந்ததால் கிடைத்த அன்பாகவும் அது இருக்கலாம்.
முன்னாள் மாணவர்கள் கூடும் கூட்டங்கள்,மற்றும் கல்லூரியின் அழைப்புக்கள் வருகிற அனைத்துக் கூட்டங்களிலும், பெரும்பாலும் கலந்து கொள்கிறேன்...கல்லூரியின் அழைப்பை தாய் வீட்டின் வரவேற்பாகவே எப்போதும் நான் எண்ணிக் கொள்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த வாரம் கல்லூரியில் இருந்து வந்த கடிதம் ஒன்றை இரவில் நெடு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன்....Board Of Studies in Commerce (Finance) என்கிற படிப்பிற்கு பாடத்திட்டம் அமைக்கிற குழுவில் உறுப்பினராக என்னையும் இணைத்து இருந்தார்கள்...என் கல்லூரி எனக்குத்தந்த மிகப்பெரிய கண்ணியமாக எண்ணுகிறேன்...அதைச்சொல்ல வேண்டுமென நினைத்து ஒரு வாரம் கழித்து இன்று தான் எழுதுகிறேன்..(கல்லூரியப்பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது)


ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

இசைமுரசு நாகூர் ஹனீபா என்னும் சகாப்தம்.கடந்த  எட்டாம் தேதி இரவு இஷா தொழுகை நேரத்திற்குப் பின்னர்...முக்கியமான சில மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டு இருந்தேன்...அப்போது செல் போனில் ஒரு அழைப்பு... மருமகன் அப்துல் ஜப்பார் பதட்டத்தோடு அலைபேசியில் பேசத் துவங்கினார்..
"நாகூர் அனீபா இறந்து விட்டாராமே?...."
"அப்படியா?....யார் சொன்னது?....யாராவது வதந்திகளைப் பரப்பி இருப்பார்கள்." என்று வழக்கம் போல நான் சொன்னேன்.
"இல்லைங்க...ஆடுதுறை ஷாஜஹான் ஸ்டேடஸ் போட்டு இருக்கிறார்." ....என்றதும் பகீர் என்று ஆகிவிட்டது...
அடுத்த நிமிடம் இது வழக்கம் போல வதந்தியா...இருக்கட்டும் என்று மனதை வைத்துக் கொண்டு ....நாகூரில் இருந்த இசைமுரசுவின் மகன், அண்ணன் நாசருக்கு போன் செய்தேன்...அங்கே ..மறுமுனையில் நாசர் வந்தார்....
"அண்ணே...அத்தா  போய்ட்டாங்கண்ணே ."...அழுகை மேலிட  என்னிடம் சொன்னார்...
என்னால் பதில் வார்த்தைகள் கூட சொல்ல முடியவில்லை... இருவரும் வேறு எதையும் பேசவில்லை...” சபூர் செய்யுங்கள்”.... என்று சொல்லிவிட்டு...உடல் அடக்கம் எங்கே நடைபெறுகிறது?....என்று கேட்டேன்..
"நாளை நாகூரில் வைத்துத் தான் நடத்தனும்...நேரத்தை அப்புறம் சொல்லுகிறேன்"... என்றார்..

அவ்வளவு அதிர்ச்சியான தகவலாக இருந்தது...
என் மனதில் எனக்கு ஏற்பட்ட இசைமுரசுவின் தொடர்பு....என்மீது அவர் வைத்திருந்த பாசம்...அன்பு....பொழிந்த அன்பான வாழ்த்துக்கள்...அவர்களோடு உண்டு களித்தப் பொழுதுகள்...பயணம் செய்த தூரங்கள்....மேடைகளில் அவரோடு அமர்ந்து...அவர் பாட இசைக்கலைஞர்கள் கருவிகளை மீட்டெடுக்க...மனதில் அவையாவும்  வந்து போனது...
ஒன்றா இரண்டா....நினைத்துப்பார்க்க?...
.
நாகூர் ஹனீபா லாட்ஜ் திறப்புவிழா....

கவிஞர் த.காசிம் மகள் திருமண நிகழ்வு....

குற்றால இல்லத்திறப்பு....
குற்றாலம் மெயின் அருவிச்சாலையில் ஆறாம் எண் வீடு ...அங்கே கோர்வை செய்யப்பட்ட பாடல்கள்..
2002 ஆம் வருடம் ஜூன் மாதம் அவர்களின் மனைவி இறப்பு.
.”அத்தா...நானும் கூடிய சீக்கிரம் போயிடனும்பா...பொஞ்சாதி இறந்த பின்னாலே ....வயசான புருஷன் துனியா வில இருக்கக் கூடாதுப்பா....ஆண்டவன் சீக்கிரமா....அழைச்சுக் கிடனும்பா.”என்று உருகிய வார்த்தைகள் .....
அவர்களின் காதுகள் பாதிக்கப்பட்ட  நேரங்கள்...
முதுகு வலியால் அவதிப்பட்டது.......
நாகூர்..மற்றும் சென்னையில் ....இருந்தத் தனிமைப் பொழுதுகள்...எல்லாம் கண் முன் வந்தது...
மேலப்பாளையத்தில் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில்,முன்னாள் சேர்மன் எம்.எ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்கள் தலைமையில் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 22.7.1993 அன்று கலைமாமணி இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் சமூக, இலக்கிய இசைப்பணியினை பாராட்டு விழா நடத்தி இசைமுரசுவுக்கு நாங்கள் பொற்கிழியும் வழங்கினோம்..

தி.மு.க தலைவர் கலைஞர்....முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் சமத் சாகிப்.....லத்தீப் சாகிப், வைக்கோ, தினகரன் கே.பி.கந்தசாமி..மெஜெஸ்டிக் கரீம் காக்கா, பத்ஹூர் ரப்பானி சாகிப்,...எ.கே.ரிபாயி சாகிப்..பீட்டர் அல்போன்ஸ் மற்றும் முஸ்லிம் லீக்...தி.மு.க...காங்கிரஸ்... மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.....
அவையும் மறக்கமுடியாமல் என்னை அவர் நினைவுகளோடு ....அலையலையாய் என்னைக் கொண்டு  போனது...

தமிழகத்தின் இக்கட்டான சில அரசியல் சூழ்நிலைகளை, அவர் எதிர்கொண்ட விதங்கள்...அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்கள் ....மிகப்பெரும் தகுதிக்குரியவை...

சென்னை தீவுத்திடலில் நடந்த...முஸ்லிம் லீக் மாநாட்டில் அவர் பேசிய ..உருக்கமான உரை....அதே நாள் காலையில் அவர் பெற்ற விருதுகள்...என்று எவ்வளவோ நினைவில் வந்து வந்து சென்றது...

பொதுவாக இசைமுரசு நாகூர் ஹனீபா என்றதும் அவர் பாடிச்சென்ற காலத்தால் அழியாத பாடல்கள்தான் முதலில் நினைவுக்கு வரும்..
 எண்ண எண்ண ...இனிக்கிற பாடல்கள் பல அவர் தந்தவை...
நபிகள் நாயகம் சொல்லிச்சென்றவற்றை.......
நாயகத் தோழர்களின் வரலாற்றை..."இஸ்லாத்தில் ஆகும் நெறி எது?....ஆகா நெறி எது..என்பதை.... சகோதர சமுதாய மக்களிடம்  சென்று சொல்ல முடியாததை இசை முரசு நாகூர் ஹனீபா பாடல்கள் வடிவில் ஒலித்தட்டாக..ஒலிப் பேழையாக வடித்து  வைத்தார்...
அது மிக எளிதில் அவர்களின் உள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டது...
நானிலத்தை  வாழ வைக்க நாயகம் பிறந்தார் பாடல், நபிகள் நாயகத்தில் பிறப்பு தாய் தந்தை...அன்றைய அரபகத்தின் கோலம்.... இவை பற்றி எல்லாம்  பத்து நிமிடத்தில் வரலாறு   சொல்லி நின்றது...

ஆளும் இறைவன் தூதர் நபி.அன்பே வடிவாம் நாதர் நபி பாடலின் ஒவ்வொரு வரியும் நாயத்தின் ஒவ்வொரு கால கட்டத்தை சொல்லிக் காட்டியது...

அண்ணல் நபிகளின் வண்ண மகள் எங்கள் பாத்திமா...
பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?...
தீன் குலக்கண்ணு...நல்ல திருமறைப்பெண்ணு ....
விண்ணகமும் மண்ணகமும்..வியந்துரைக்க வந்துதித்த....அண்ணலாரின் நபி மகளார் அருமையான பாத்திமா...
என்று பல பாடல்கள் பெண்கள் திலகம் நபிகள் நாயகத்தின் மகளார் பாத்திமா அவர்களின் புகழைப் பாடி நின்றன....
பொன்மொழி கேளாயோ...நபிகளின் பொன்மொழி கேளாயோ...
சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே...கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே.....
என்று நபிகளின் நற்போதனைகளைப் பாடிக்காட்டினார்.... குரானைப்பற்றி...
நபிகள் நாயகம் திருவாய் மலர்ந்தருளிய ஹதீஸ்களைப்பற்றி...
ஐந்து கடமைகளில் எத்தனைத் தத்துவங்கள்....
பள்ளிவாசல்...பற்றியும்..
அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததைக் கேளுங்கள்...
இஸ்லாத்தின் தத்துவங்களை எடுத்து வைத்த அல்லாஹ்வின் மெய்யடியார்களை...பாட்டால் பாடிக்காட்டினார்...
மக்கத்து மன்னர் தர்பார் வாசல்...என்று அந்தக்காலத்தையே கண்முன்னே காட்டினார்.
வட்டிக் கொடுமையைத் தட்டிக் கேட்டார்...தீனோரே நியாயமா? என்று நீதி கேட்டார்...
பெண்களை மணமுடிக்க மாப்பிள்ளைகள் கேட்கும் ....கைக்கூலியாம் வரதட்சணை ஒழிப்பை பாடல்களில் கொண்டு வந்து பிரச்சாரம் செய்தார்...அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்...

முதலில்...முஸ்லிம் லீக் இயக்கத்தில் தன்னை ஆட்படுத்தி....
பின்னர் திராவிட கழகத்தில்...தி.மு.க.வில் தம்மை இணைத்து வாழ் நாள் எல்லாம் அந்தபாதையிலே பயணித்தார்...

அவரின் பாடல்களைப் பற்றி நினைக்கும் போது இரு கேள்விகள் மனதில் வரும்..அவர் பாடியது போல இன்னொரு பாடகர் இத்தனை தலைப்பிலும் பாட முடியுமா?என்பதும்...அப்படியே பாடி வைத்தாலும் ...மக்களிடம் அந்தப்பாடலின் கருத்துக்கள் சென்று சேருமா? என்பதும் தான் ...

யாரையும் நோக வைக்காத பழக்கத்திற்கு சொந்தக்காரர்...
இன்றைய காலத்தில் விருந்தோம்பலை...அடடா...அவரிடம் தான் கற்க வேண்டும்....இன்னும்  நிறைய அவரைப்பற்றி மனதுக்குள் வந்து போனது...

எப்படியாவது அவரது முகத்தை பார்த்தாகனும்...என்கிற ஆவலில் திருநெல்வேலியில் இருந்து காலையில் 8.30 மணிக்கு புறப்பட்டு..மதியம் 2.30 மணியளவில் நாகை சென்று அடைந்தோம்..

நாகூருக்குச்சென்றால் அவரைப் பார்க்காமல் வந்ததில்லையே....இனி எப்படியோ?....என்றெல்லாம் மனதில் ஆயிரம் கேள்விகள்...என் மனதில் வந்துபோனது...

எத்தனையோ முறைகள்...நான் சென்று...உரையாடி....உணவுகள் உண்டு....வரலாறுகள் கேட்ட நாகூர் நவ்சாத் கார்டன் வீடு...ஷாமியானா பந்தல் போடப்பட்டு...களையிழந்து போய் இருந்தது...

புத்தம் புதிய பாடல்களின் கேசட்டுகளை...சி.டி.க்களை எனக்கு அன்பளிப்புத்தந்து அதை டேப் ரிக்காடர்களிலோ...பிளேயர்களிலோ...பாடவிட்டும் காட்டிய அந்த வீட்டின் நடுக் கூடத்தில் .....அசைவற்ற உடலாய்....எங்கள் இசைமுரசு...

பல்லாயிரம் பாடல்வரிகளை உச்சரித்த அந்த உதடுகள்....கூரிய பார்வை கொண்ட அந்த விழிகள்...இசைக் கச்சேரிகளில் சுட்டிக்காட்டும் நீண்ட  விரல்கள்  கொண்ட கைகள்...
அழகான வெண்மைத்தாடி....தொப்பிக்குள் அடங்காத வெண்மைநிற முடிக்கற்றைகள்....இவையாவும் அடங்கிப்போய் ஐஸ் பெட்டிக்குள் ....அவர் உடல்...

அந்தக்கோலத்தில் அவரைப்பார்க்க.முடியாமல் ...
வெளியே வந்தேன்...அண்ணன் நாகூர் கவிஞர் ஜபருல்லா "மாமா...மாமா" என்று இசைமுரசை அழைத்து ,  கண்ணீர் வடித்து கதறி அழுது கொண்டு இருந்தார்.. என்னால் தாங்கவே முடியவில்லை...

அங்கே அவரது பிள்ளைகள் நாசரும்..... நவ்சாத்தும்... மாப்பிள்ளைகளும்..அவர்களை கட்டிப்பிடித்து ....ஆறுதல் சொன்னேன்.....

அன்றைய தினத்தில் நாகூரில் அங்கே வந்தவர்கள்....அனைவரும் அவரின் அன்பில் மூழ்கியவர்கள் தாம்.

நெல்லையில் இருந்து நானும் வழக்கறிஞர் தீனும் போயிருந்தோம்..

தென்காசியிலிருந்து சகோதரர்கள் வி.டி,எஸ்.ஆர்.இஸ்மாயில்,ஹாஜி முஸ்தபா கமால்,வீராணம் ஊரைச்சேர்ந்த திருச்சி ராஜா ஓட்டல் கமால்,தென்காசி லத்தீப், பைம்பொழில் முஹம்மதலி ஜின்னாஹ்...மற்றும் தி.மு.க.மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள்,த.மு.க.மு...மனித நேய மக்கள் கட்சித்தலைவர்கள்..வந்திருந்தார்கள்
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து மாநிலப் பொருளாளர் ராமநாதபுரம் ஷாஜஹான், கவிஞர் நாகூர் ஜபருல்லா,  ஆடுதுறை ஷாஜஹான்,ஜமால் முஹம்மது இப்ராஹீம்,நாகை செய்யதலி,நூருல்லாஹ், அபுலசன்  அறமுரசு அப்துல காதர்,தம்பி கடையநல்லூர் ஹபிபுல்லா  வழுத்தூர் மக்கி பைசல் ஹபீப் ரகுமான்,  திருச்சி மாவட்ட தலைவர் K.M.K.ஹபீப் ரஹ்மான்,திருச்சி மாவட்ட செயலாளர் V.M.பாரூக்,நாகை தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சம்சுதீன்,நாகூர் ஜான் சாப் , ,நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் திட்டச்சேரி அன்வர் , நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் Aஅபூபாரிஸ்,தஞ்சை இளைஞர் லீக் நாகூர் இஸ்மாயில் ,நாகூர் சுலைமான் ,உள்ளிட்ட முஸ்லிம் லீக் தோழர்கள் வந்திருந்தார்கள்..
 த.மு.மு.க,மற்றும் மனித நேய மக்கள் கட்சியில் இருந்து அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ், அண்ணன்  ஹைதர் அலி , அண்ணன் ஜே.எஸ்.ரிபாயி,  பேராசிரியர் காஜா கனி முதலான தோழர்களும்அவர்களைச் சேர்ந்தவர்களும்.
,தி.மு.க.விலிருந்து,ஆயிரம் விளக்கு ஹுசைன் , தி.மு.க தமிழக முன்னாள் அமைச்சர்கள்  பெரியவர் கோ.சி.மணி நெல்லை டி.பி.எம் மைதீன்கான், உபையத்துல்லா மாநில தி.மு.க துணைச்  செயலாளர் ஐ.பெரியசாமி , முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கோட்டை அன்பழகன் ,கோவி.செழியன் , , மதிவாணன்,தமிழக  வக்பு வாரிய உறுப்பினர் சிக்கந்தர் , ,ஜமா அத்துல் உலமா சபையின் கொள்கை பரப்பு செயலாளர் தேங்கை  சர்புத்தீன் ஆலிம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுத்தீன்,உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இயக்கத்தொண்டர்களும் பொதுமக்களும், ,ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்கா வளாகத்தில் அமையப்பெற்றுள்ள அந்தப்பள்ளிவாசல் நிரம்பி இருந்தது...அங்கேயே உள்ள மையவாடியில் இசைமுரசு அவர்கள் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்..
நாகூரில் தொடங்கி...நாகூரில் வளர்ந்து....நாகூரிலேயே  மண்ணறை வாழ்வையும் கொண்டுவிட்டார்...
வாழ்க இசைமுரசுவின் புகழ்!.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரை ஏற்றுக் கொள்வானாகவும்..அவர் பிழைகளைப் பொறுப்பானாகவும்..!  .(இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களும் திராவிட இயக்கமும் என்பது..தனி வரலாறு ஆகும்.அதுவும் தொடர்ந்து வரும்)