வெள்ளி, 12 செப்டம்பர், 2014

என்ன சொல்ல ?....எப்படிச்சொல்ல?...



கொஞ்ச நாட்களுக்கு முன்னர், எங்கள் குடும்ப நண்பரும் மிகச்சிறந்த பாடலாசிரியருமான கவிஞர் வீரை.அப்துல் ரகுமான் என்னை காலை ஏழு மணி அளவில், அலைபேசியில் அழைத்தார்..

அப்போது நெல்லை விரைவு வண்டியில், சென்னையில் இருந்து ஊர் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்..
கவிஞர் வீரை ரகுமான் அவர் கள் ,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களுக்காக, நிறைய இஸ்லாமிய பாடல்கள் எழுதியுள்ளார்...

ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்.......
இறைவா வரம் தருவாய்,......
கைகளை எந்திவிட்டேன்,.....
சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே,கொஞ்சம் சீர் தூக்கிப்பார்க்கனும் நெஞ்சுக்குள்ளே...முதலான சிறப்புக்குரிய பாடல்களும் அதில் உண்டு..

தமிழ் மீது மாறாத காதல் கொண்டவர்....
வாசகர் வட்டம் நடத்தி...பாரதியார்,பாரதி தாசனார்.,வ.உ.சிதம்பரனார் , பெரியார்,அண்ணா,காயிதே மில்லத் ,காமராசர்,பசும் பொன் தேவர்,அம்பேத்கர்,பிறந்தநாள் சொற்பொழிவுகள் பல நடத்தியவர்.சமூக நல்லிணக்க இயக்கங்கள் பலவற்றில் பங்கெடுப்பவர். முஸ்லிம் லீக் இயக்கத்தின் முன்னணித்தலைவர்களில் அவரும் ஒருவர்....

"என்ன கவிஞரே எப்படி இருக்கீங்க.?."...
வழக்கமான விசாரிப்புக்கள் முடிந்தன...
“அப்புறம்?...”
‘இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு வரணுமே..’
“எங்கே வீரவ நல்லூருக்கா?”....
“ஆமாம்,...அங்கே ஒரு அன்பு இல்லத்துக்கு போகனும்”...என்றார்.

மாலை ஐந்து மணி சுமாருக்கு வீரவநல்லூர் போய் சேர்ந்தேன்...
என்னை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த, கவிஞர் கைகளில் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மற்றும் மிச்சர்,பலகாரங்கள் கொண்ட ஒரு பெரிய பை இருந்தது...காருக்குள் நுழைந்ததும் எல்லாம் சேர்ந்த ஒரு வாசனை வந்தது...

“தம்பி....நான் உங்களை ஒரு வாரமா நினைச்சுக்கிட்டு இருந்தேன்....இன்னைக்குத்தான் கிடைச்சீங்க” என்றார் கவிஞர்....

கூட வந்த அவர் மகன், ‘இந்த ரோடு அந்த ரோடு” என்று அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த வீடு ஒன்றுக்கு வழி காட்டிக் கொண்டு இருந்தார்....

ஒரு பழைய பெரிய வீட்டின் வாசலில் நிருத்தச்சொன்னார் . காரை நிறுத்தினேன்...
"வாங்க தம்பி..... போலாம்.."..என்று அந்த வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்...அந்த வீட்டில் முன் பக்கம் இருந்த அறை ஒன்றில் என்னை உட்கார வைத்தார்...

“அண்ணே....இதுதான் நீங்க சொன்ன அன்பு இல்லமா?”... என்று கேட்டேன்..
‘ஆமாம்.’...என்றார்.
“உள்ளே வாருங்கள்”...ஒரு பெரிய அறைக்கு கூப்பிட்டார்.
அங்கே நுழைந்த பின்னர்....மனது என்னவோ போல ஆகி விட்டது....

அந்த அன்பு இல்லத்தில் குழந்தைகளைக் காணோம்...ஆனால்......
எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுத்து....பேரன்கள் பேத்திகளும் கண்ட முதியவர்கள், என் பாட்டி வயதுடைய தாய்மார்கள் அங்கே இருந்தார்கள்...நான் மனதால் நொறுங்கிப்போனேன்....

கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை....
“அண்ணே இவங்கல்லாம் யாருண்ணே?.”...கவிஞர் காதுகளில் மட்டும் விழும் அளவில் கேட்டேன்..
“இவங்கல்லாம் ஆதரவு யாருமே இல்லாத அப்பாவி....முதியோர்கள்”.என்றார்.....அங்கே அமைதி குடிகொண்டு இருந்தது..

நான் உற்று நோக்கிய போது அதில் பலர் நோயாளியாக இருந்தார்கள்...
பலர் இருமிக் கொண்டு இருந்தார்கள்...
யாரும் யாரிடமும் பேசாமல், எங்களைப் பார்த்ததும் ..சிலர் தன தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள்.

நான் பார்த்த அந்தமக்களிடம் குலம் தெரியவில்லை....
மதம் தெரியவில்லை....  ஒரு ஜாதி மட்டும் தெரிந்தது......அது புது ஜாதி...
என்ன ஜாதி?....ஆமாம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர் ஜாதி...

கையோடு கொண்டு வந்த பலகாரங்களை கவிஞரும் நானும் கொடுத்தோம்....”வாங்காவிட்டால் வந்திருக்கிறவர்கள் வருத்தப்படுவார்களோ?..” என்கிற நினைப்பில் பட்டும் படாமல் வாங்கிக் கொண்டார்கள்....

அவர்கள் கண்களில் யாரையோ தேடுகிற முழிப்பு இருந்தது....கொஞ்சம் பக்கம் போய் ஆண்கள் பிரிவில் இருந்த பெரியவர்களிடம் மெதுவாக  பேச்சுக் கொடுத்தேன்....

ரொம்ப நேரம் ஒண்ணுமே பேசல்ல....அப்புறம் "சொல்லுங்கையா உங்களைப்பற்றி" ன்னு சொன்னதும்.... ஒரு வயசாளி மெல்லிய குரலில் என்கிட்டே பேசத்துவங்கினார்...
. “ நான் வயல் தோட்டமுன்னு செழிப்பா இருந்தேன்.... ரண்டு பொம்புளை புள்ளைங்கள கட்டிக் கொடுத்தேன்...மூணு பையங்க....எல்லாருக்கும் சொத்து பத்துக்களை பிரிச்சு எழுதிக் கொடுத்தேன்... வீட்டுக்காரி....போய் சேர்ந்துட்டா....கண்ணீரோடு சொல்லி .....கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார்...
பாதகத்தி.... அப்பவே சொன்னா......இப்படி செய்யாதிய ....நீ ராசா...ய்யா .....நாம மண்டையை போட்ட பொறகு, அது அதுங்க பிரிச்சுக்கட்டும்...ன்னு. நாந்தான் கேட்டுத்தொலைக்கல்ல....இன்னைக்கு எங் கதியப்பார்த்தியாய்யா ?...எல்லாத்தையும் இழந்து இப்போ இங்க வந்து நிக்கேன்.”...என்னால் பேசமுடியவில்லை...

அவர் தோள்களில் கைகளை வைத்திருந்தேன்...அவர் அதில் தம் முகத்தை சாய்த்துக் கொண்டார்...கொஞ்ச நேரம் கழித்து ...அவரிடம் விடை பெற்று ஆறுதல் சொல்லி அங்கே இருந்து அடுத்த பகுதிக்கு போனேன்.

முழுதும் பெண்மக்கள் அதுவும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அங்கு இருந்தார்கள்..பார்வை ஒன்றே சொல்லியது...
அவர்களின் வேதனையை...

ஒவ்வொருவர் பக்கமும் போய் அவர்களின் நலம் விசாரித்தேன்...அப்போது அந்த அறையின் மூலையில்..... முகத்தில் செழுமை நிறைந்து...அது காணாமல் போய் இருந்த ஒரு பாட்டியைப்பார்த்தேன்...

கொஞ்ச நேரம் என் பார்வை அவரை விட்டு மாறவே யில்லை...அந்த பாட்டியும் என் மீது வைத்த பார்வையை மாற்றவே இல்லை...

மெதுவா பல படுக்கைகளைத்தாண்டி அவர் பக்கம் போனேன்..அவர் இருந்த படுக்கையில் என்னை “உட்காருப்பா”, என்று சொல்லிவிட்டு மீண்டும் என்னையே அந்த அம்மா பார்த்துக் கொண்டே இருந்தார்...

“ மேலப்பாளையமாய்யா நீ ” ? என்று என்னிடம் கேட்டார்.
“ஆமாம்மா .எப்படித்தெரியும்?..” என்று கேட்டேன்.
“உம் பேரை, காலைலயே இங்க எழுதிப் போட்டாங்கப்பா....ந்தா அங்கப்பாரு...”,.என்று என் முதுகுப்பக்கம் இருந்த கரும்பலகையைக் காட்டினார்..., அங்கே சாக்பீசால் என் பெயரும், ஊரும் எழுதி வைத்திருந்தார்கள்..

மீண்டும் அமைதி ....அவர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்...நானும் ஒன்றும் சொல்லவில்லை..மௌனம் கலைக்க....
“அம்மா....”என்றேன் அவர்களைப் பார்த்து ..

“என்னப்பா சொன்னே?...” ...
”அம்மான்னு சொன்னேம்மா.”என்றேன் ..

அவ்வளவு தான்...

எங்கு தான் அடக்கி வச்சிருந்தாரோ...விக்கித்து அழ ஆரம்பித்துவிட்டார்...
"அழாதீங்கம்மா."..என்றேன்..என் கைகளைப்பற்றி பிடித்துக் கொண்டார்...எய்யா....நான் கார் பங்களான்னு, பாளையங்கோட்டையில் ஒரு பகுதியைச்சொல்லி அங்கே வாழ்ந்தவள், என்று சொல்லத்துவங்கினார்...

"என்னம்மா ஆச்சு?"....

"எனக்கு ஒரே ஒரு மகன்...அவனுக்கு வந்தாள் ஒருத்தி... மெட்ராசில இருந்து பிடிச்சிட்டு வந்தான்.வருஷக்கணக்கா காதலிச்சோம்ன்னு சொன்னான்...அவ பூர்வீகம் ஆந்திரா பக்கம்..அவம் விரும்பினானேன்னு, என்ன ஏதுன்னு விசாரிக்காம கட்டி வச்சேன்...சண்டாளி....என்ன அவன்கிட்ட இருந்து பிரிச்சு, இங்க இருந்த வீடு வாசலைஎல்லாம் வித்து முடிச்சு அவனை மெட்ராசுக்கே கூட்டிப்போய் விட்டாள்....அவன் குடிச்சு குடிச்சு முழு போதையிலேயே முடங்கிட்டான்..."

“உங்களை யாருமே தேடல்லியாமா?”...

“என் பேரப்பிள்ளைகள் தான் என்னைத் தேடனும்....அதுங்க தான் என்கிட்டே உயிரா இருந்துச்சுங்க....நானும் அப்படி இருந்தேன்...என்னப்பத்தி அந்தப் பிள்ளைகளிடம் என்ன சொல்லி வச்சிருக்காளோ? .....அவங்க .... எங்க இருக்காங்கன்னே தெரியல்லைய்யா ....அவங்க கிட்ட நாம்பேச, செல் போன் நம்பர் கூட என் கிட்ட இல்லைய்யா.”....

“கண்டிப்பா ஒருநாள் அந்தப்பிள்ளைங்கஉங்களைத்தேடி வருவாங்க பாருங்க....” என்றேன்..அவர் அழுத அழுகை என்னை க் கடுமையாக  வேதனைப்படுத்தியது...என்னாலும் அழுகையை அடக்க முடியவில்லை..
ஒரு அரை மணி நேரம் போனது....நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை...என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்..

“அம்மா.....நான் போயிட்டு வரட்டுமா?...”....கொஞ்ச நேரம் எதுவும் சொல்லாமல்.......அப்புறம் சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டி காட்டினார்..."போய்ட்டுவாய்யா"...என்றார்..

“இந்தப்பக்கம் வந்தா கொஞ்ச நேரம் இந்தக் கிழவி கிட்ட வந்து பேசிட்டு போய்யா...” சரி என்று சொல்லிவிட்டு அவரை நோக்கி கையை அசைத்து காட்டி விட்டு “வர்ரம்மா.....” என்று கண்ணீரோடு கிளம்பினேன்..ஒரு நாலு எட்டு வச்சிருப்பேன்,.

“எய்யா....கொஞ்ச நில்லுய்யா...எனக்கு ஒரு உதவி செய்யணும்...செய்வியாய்யா ”

“என்னம்மா செய்யணும் சொல்லுங்கம்மா ?...”

“நான்....இந்தக் கதியில இருப்பதையும் ....என்ன இங்கப் பார்த்ததையும் எங்கயும் சொல்லிடாதேப்பா"....

அடுத்து அழுகைமேலிட அவர் சொன்னது, என்னையும்
அழ வைத்தது .

.."என் புருஷன் ஊரு மெச்ச வாழ்ந்தவருப்பா...அவருக்கு அசிங்கம் வந்துடக் கூடாதுப்பா...”
என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை .



வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆடு மேய்க்கத்தான் லாயக்கு.....



நாங்க படிக்கிற காலத்திலே வாத்தியாருங்க பிள்ளைகள திட்டுவாங்க. எப்போ? வகுப்பிலே வளவளன்னு பேசிக்கிட்டு இருந்தாலோ,பரீட்சைல மார்க் கொறையா எடுத்திருந்தாலோ கடுமையாத் திட்டுவாங்க..

“மூதேவி.....மூஞ்சியப்பாரு....”

“தடி மாடு மாதிரி இருந்தாப் போதுமால?.”

“படிக்க வேண்டாமாலே?....”

“ஏல நீ நெடுவ அலஞ்சிக்கிட்டு இருந்தா எப்படில படிப்ப?”

இப்பிடி பலவாறா வாழ்த்துக்கள் இருக்கும்.

“மாசிலாமணி சார்வாள் இப்படியெல்லாம் பேசுவதோடு நிக்க மாட்டார்..,சாட்டைக் கம்ப வச்சி, பிச்சித்தள்ளிருவார்....பேச்சும் கிடைக்கும், கூடுதலா அடியும் கிடைக்கும்.

எங்களுக்கு, ஜலீல் வாத்தியார்ன்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு என்ன ஆகுமோ..... ஏது ஆகுமோ தெரியாது...பெரும்பாலான நேரங்கள் வகுப்பில் பாடங்களே நடத்த மாட்டார்..வகுப்பில் நகங்களைக் கடித்துக் கொண்டே இருப்பார்... ரெண்டு கால்களையும் அப்படியே நாற்காலி மேலே தூக்கி வைத்து முட்டைக் கட்டிக் கொண்டு பல நேரங்கள் இருப்பார்.வேற ஒன்னும் நடக்காது.   திடீர்ன்னு “ஆ...ஆன்ம் பொஸ்சத்த எடு.... பொஸ்சத்த எடு”....ம்பார்....அவர் எங்களுக்கு ஆறாம் வகுப்பு எழாம் வகுப்பு எடுத்தார்.

“சாமுண்டி பாக்ஸ் வச்சிருக்கியால”.?....இருக்கு சார்.

“ஏல.... அதுல காம்பஸ்,கவராயம்லாம் இருக்கால?”....

எதுக்குன்னு சொல்ல மாட்டார்.

நாங்க படிச்ச காலத்தில் தான், கணம், சேர்ப்புக்கணம் வெட்டுக்கணம்....மற்றும் அல்ஜீப்ரா அடிப்படைகள் படிச்சுக் கொடுக்கத் துவங்கினார்கள்...

அவருக்கு அந்த சனியன் தெரியாதோ என்னவோ?.....மனுஷன் அதைக் காட்டிக்க மாட்டார்..

“ஏல எழுதுங்கலே.....ஒன்னு மெய்... ரண்டு மெய்...மூனு மெய்யல்ல, அஞ்சுமெய் ....ஆறு மெய், ஏழு மெய்யல்ல”.....என்பார்.

“சார்.....எனக்கு வெளங்கல்லியே....கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க சார்” என்று எவனாவது கேட்டால், அவ்ளோதான்....தொலஞ்சான்.

“ஏல எழுஞ்சில ”....என்று கேள்வி கேட்டவனை நிக்க வச்சிட்டு...அவனுக்கு அடுத்து இருப்பவனை எழுப்பி “உனக்குத்தெரியுதாலே?”
வாத்தியார்லோ கேக்கார்ன்னு..தெரியாவிட்டாலும் ”சார் ....தெரியுது சார்” என்பான்.

இப்படி ஒரு அஞ்சாறு பேர வகுப்பில் அங்க இங்க எழுப்பி,...இதே பாணியில் கேப்பார்...எல்லாப் பயபுள்ளையலும்,”சார் நல்லா தெரியுது சார் ”அப்படீம்பானுவோ.

கேள்வி கேட்டவன் செத்தான்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவன நிப்பாட்டி .....”உனக்கு தனியா வெளக்கனுமாலே?...மத்தவனுக்கு வெளங்கும் போது உனக்கு ஏம்லே வெளங்கல்ல ?".. “....என்று பேசிப்பேசியே, மனுஷன் அழ வச்சி வேடிக்கைப் பார்ப்பார்... கடைசி வரை அந்தப்புரியாத கணக்க அவர் வெளக்கிச்சொன்னதா.சரித்திரமே இல்ல.

அவரால், கணக்கில் நாசமா போனவங்க நிறைய.....என்னையும் சேர்த்து.

அனந்தையன்னு, எங்களுக்கு கைத்தொழில் வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.அப்போவெல்லாம் “தறி நெய்வது எப்படி?”, என்று பாடம் நடத்துவார்......குழித்தறி, மேடைத்தறி என்றெல்லாம் எழுதிப்போட்டு  மனுஷன் கேள்வி கேட்டுத்தொலைப்பார்.......தக்ளி,ராட்டை,இது மாதிரி சாதனங்களைக் காட்டி பாடம் நடத்துவார்.

தக்ளியில் பஞ்சைச்செலுத்தி நூல் உண்டாக்குவது எப்படி? என்கிற அதிசயத்தை அடிக்கடி நிகழ்த்திக்காட்டுவார்...அந்த நூலை வச்சித்தான் கதர் சட்டை,வேஷ்ட்டிகள் தயாரிக்காங்கன்னு சொல்லுவார்.....

பாவம்.அவருக்கு  கிட்டப்பார்வைதான் உண்டு. தூரப்பார்வை சரியா இருக்காது. அதோடு காதும் சரியா கேட்காது..வகுப்பில் அங்க இங்க பார்த்துக்கிட்டு இருப்பார்.யாராவது பேசிக் கொண்டு இருந்தால்...பேசினவனை நச்சி எடுக்க வேகமா வருவார்.அவர் வருகை பற்றி உஷாராகிற நண்பர்கள்,தொபுகடீர்ன்னு தலையை கீழே “டெஸ்க்கில்” வைத்துக் கொள்வார்கள்.எவம் பேசினானோ? அவனுக்கு நேரா...பின்னால இருந்தவன கொன்னு எடுத்திருவார்...அடிவாங்கினவனுக்கு எதுக்கு இந்த மனுஷன் வெறியா நம்மள வந்து அடிக்கார்?.....ன்னு தெரியாம, ரெண்டு கைகளையும் கொண்டு அடிபட்ட இடத்தை தடவி விட்டுக் கொள்வான்.... அவர் ஏன் அடிச்சார்னு ...தெரியவே செய்யாது..

நாம்ம கதைக்கு வருவோம்.

பொதுவா....ஒலகம் முழுசும் இருக்கிற வாத்தியாருங்க “நீ எல்லாம் படிச்சு என்னத்த கிழிக்கப்போற?...பேசாம மாடு மேய்க்கப் போலே...ஆடு மேய்க்கப்போலே...” என்று சர்வ சாதாரணமாகத் திட்டி?...அல்லது ஆசிர்வதித்து அனுப்புவார்கள்.

என் அனுபவத்துல சொல்றேன்.

மாடு மேய்ப்பதும், ஆடு மேய்ப்பதும் அம்புட்டு லேசில்லை.

எங்க விவசாய கிராமத்திலே, ஆடி மாசம் கோயில்ல கொடை நடக்கும்.
அப்போ எங்க பண்ணையில் வேலை செய்யிற எல்லாரும், லீவு போட்டுட்டு, மூனு நாளைக்கு, ஒக்கொன்னா போயிருவாங்க...

உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும், நான் தான் அங்கே வந்து, இருந்து, ராப்பகலா ஆடுகளையும் மாடுகளையும் கவனிச்சுக்கனும். விவசாயத்தொழிலாளர்களுக்கு அப்போதான் தான் ஓய்வு கிடைக்கும். வெளியூர் ஆட்கள் விருந்தாளியா கொடைய ஒட்டித்தான் கிராமங்களுக்கு வருவாக. இன்னைக்கும் அதுதான் நடக்கு.

அந்த மாதிரி நாட்களில் என் மச்சின மார்கள் குறிப்பா நூருல் ஹக்,சிராஜ்,மீரான்,முதலானவர்கள் அவங்க நண்பர்களோடு,ஒரு மூணு நாள் எங்க பண்ணையில் தங்கிக் கொள்வாங்க....அதுவும் வெட்ட வெளியில், மரத்தடியில் கட்டிலிலோ,தரையிலோ இரவு நேரங்களில் படுத்துக் கொள்வார்கள். விதவிதமா சமச்சிப் பார்ப்பது எப்படி?  என்கிற வசதியும்,அனுபவமும், அவங்களுக்கு அப்போ கிடைக்கும்.   மூணு நாள் போவதே தெரியாது.

அந்த மாதிரி நேரங்களில் தோட்டத்த விட்டு மாடுகளையும், ஆடுகளையும் கொஞ்சம் வெளியே “பத்திக்கிட்டு” போவேன்.

ஆட்டையும், மாட்டையும் ஒரு போதும் ஒன்னா கொண்டு போகமுடியாது....

நான் சொல்லுறது கிடையை....மொத்த ஆடுகள் கூட்டத்தை சொல்றேன்.

ஆடுகளை மொத்தமாக மூங்கில் வேலி அமைத்து அடைத்துப் போட்டு இருப்பார்கள்...அதுக்குப் பக்கத்தில் குட்டிகளை பரிசல் மாதிரி அமைப்புள்ள ஒரு பெரிய பெட்டியை கவுத்திப்போட்டு அதுக்குள்ளே.....சின்னஞ் சிறு குட்டிகளை அடைத்துப்போடுவார்கள்..

அங்கிருந்து சின்ன குட்டி “ம்ம்பா.”...என்று கத்த...கிடையில் உள்ள தாய் ஆடு, அந்த சப்தத்தை எப்படித்தான் தெரியுமோ? அது தன் குட்டி சப்தம்ன்னு, ரொம்பச்சரியா,அந்தக் குட்டி ஆட்டின் தாய், சரியா பதிலுக்கு “ம்ப்பே”...என்று பதில் சப்தம் போடும்.

காலையில் பொலபொலன்னு விடிஞ்சப்பொறகு, கொஞ்சம் குளிரான காலங்களில், மூசு மூசுன்னு, ஆடுகள் தும்மல் போடும்.அப்போது மூக்குத்துவாரங்களிலும்,வாயில் இருந்தும் கொஞ்சம் ஆவி பறக்கும்...அந்த இடத்தில் ஆட்டு மூத்திர மற்றும் பிழுக்கை வாடை நாசியில் வந்து சேரும்..

கொஞ்ச நேரத்தில் ,இருபக்கம் இருந்தும்,அதாவது தாய் ஆடுகள் பக்கமும், குட்டிகள் பக்கமும் இருந்து சப்தம் கூடி விடும்.

“ஐயோ பாவம் .நேத்து சாயரச்சே அடச்சுப் போட்டது.ஒன்னும் திங்காம,குடிக்காம குட்டிகள் கிடக்கு.தெறந்து விடப்பா”...... இப்படி யாரவது கண்டிப்பா அந்த சப்தம் கேட்டால், சொல்லாமல் போக மாட்டார்கள்.

குட்டிகளைத்திறந்து விட்டதும்,நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்கும் கிடையில் தாய் ஆடு தம் குட்டியையும்,குட்டி தன் தாயையும் அடையாளம் கண்டு கொள்ளும்.  தப்பித்தவறி மற்ற ஆடுகள் பக்கம் போய் இன்னொரு ஆட்டின் குட்டி மடியில் பால் குடித்துவிடமுடியாது...

குட்டியை அல்லது தாயை இழந்த ஆடுகளை வலுக்கட்டாயமாக பிடித்த பின்னால் இன்னொரு ஆட்டிடம்,   பாலூட்டவோ கொடுக்கவோ முடியும்.

ஒரு நாள் ஆட்டப் பார்க்கிற கோனார் காலையில் எதுக்கோ வராம போயிட்டார்...

என்ன செய்ய? ஆடுகளை திறத்து விடுவோமேன்னு தட்டிகளை எடுத்துத் திறந்து விட்டேன். நான் எங்கேயோ அதுகளைப் பத்த அதுங்க வேற திக்கில போக ஆரம்பிச்சுது. நான் ஒருபக்கத்தை பார்த்து இந்தா....ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....ஹை....ஹை....என்று அதுக்கு புரிகிற ஏதோ ஒரு பாஷைய்ல மாடா சத்தங் காட்டியும் ஒன்னும் வேலைக்கு ஆகல்ல.....அதுகள் தம்பாட்டுல போக ஆரம்பிச்சுது...

பொதுவா நேத்து மேஞ்ச இடத்துல ஆடுகள் இன்னைக்கு மேயாது..அதுக்கு காரணம் ஒரு ஆட்டின் வாய் நீர் எச்சில் பட்ட இடத்தில், இன்னொரு ஆடு புல்ல  கடிக்காது. இயற்கை கொடுத்துள்ள கால இடைவெளி, என்று கூட அதச்சொல்லலாம். அதனால் வேற திசைக்கு மேஞ்சிட்டு,ஒரு மூணு நாள் கழித்து பழையபடி முன்ன மேஞ்ச இடத்துக்கு வரும்.

நானும் போனேன்...... போனேன் அதுங்க போற வழியில், போனேன். போய்க்கிட்டே இருந்தேன்.

காலையில் எழுந்து பல்ல வெளக்கி,ஒரு சொம்பு தண்ணீர் மட்டும் தான் குடிச்சிருந்தேன்.சரி யாராவது வாராங்களான்னு பார்த்தா;,யாருமே அன்னைக்கு வரல்லை.”போகுமிடமெல்லாம் நானும் வருவேன்”னு ஒட்டிக்கிட்ட “ஜெல்” போனும், அன்னைக்கு நான் எடுத்திட்டு போகல்லை.

மதியம் ஒரு பன்னிரண்டு மணி ஆகும் போது லேசா கண்ண கட்டுச்சு...சரி....இன்னைக்கு அவ்ளோதான் ..... பார்ப்பம்ன்னு தலையில் கட்டியிருந்த தலைப்பாவோடு போய்க்கிட்டே இருந்தேன்.

அப்போ..... பசி, கூட ஆரம்பிச்சு இருந்தது....

எங்க தோட்டத்தில் இருந்து ஒரு மூணு கிலோ மீட்டர்க்கு மேலே ஆடுகளோடு, நடந்திருப்பேன்.

ஆட்கள் நடமாட்டமே இல்லாத அந்த மணிமுத்தாறு கால்வாய்க் கரையில்  “சூனா பானா” வடிவேலு மாதிரி இருந்த ஒரு கிராமத்து ஆள்,என்னைத்தாண்டி சைக்கிள்ள போனவன், திடீர்ன்னு சைக்கிள நிறுத்தி, திரும்பி வந்து கொண்டு இருந்தான்.

நான் தலைப்பாவை எடுத்து முட்டாக்கு போட்டுக் கொண்டு,முகத்தை மூடி அவனை எதிர் கொண்டேன்.

‘ஏ...ஏ...யாரு நீ?....புதுசா இருக்கே?”

நான் ஒன்றுமே பதில் பேசவில்லை...

“கேக்கன்...பதில் ஒன்னும் சொல்ல மாட்டேங்க...?”

கொஞ்சம் மெதுவான குரலில்...”நானும்.... நம்மூருதான்...”என்றேன்.

“இங்க உன்ன  முன்னபின்ன நான் ஆடு மேக்க பாக்கல்லியே”? என்றான்.

அப்புறம்..... ஆட்காட்டி விரலை பல்லில் வச்சிக்கிட்டு,.....”சரி சரி.....அசலூரு ஆளோ? புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கியோ?” அதச்சொல்ல வேண்டியது தானே? என்றான்.

“ஆ..ஆமாம்,பக்கத்தில எல்க்கேஷ் தோட்டத்தில...”என்று,  நான் சொல்லி முடிக்கும் முன்னே ...

”அதச்சொல்லித் தொலைக்காம எதுக்கு நீ இம்புட்டு மெதுவா சொல்றே?....” என்று சொல்லி விட்டு, என்னையும் என் ஆட்டுக் கூட்டத்தையும் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு,,சைக்கிளில் ஏறி..பச்சை  டவுசர் வெளியே தெரிய வேஷ்ட்டியக் தூக்கி கட்டிக்கிட்டு போனவன், ஒரு அஞ்சாறு முறையாவது திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“எலேய் ......  களவானிப்பய எவனும் ....வாரானான்னு சாக்கிரதையா பார்த்துக்கிடுங்கலே ”.....ன்னு ..தூரத்தில மாடு மேச்சிக்கிட்டு இருந்தவரிடம் சத்தம் போட்டு சொல்லிக் கொண்டே அந்த ஆள் போய்க்கிட்டு இருந்தான்.

அப்பாட தப்பிச்சோம் என்று நிம்மதியடைதேன்.

கொஞ்சம் வடக்கு பக்கமா மீண்டும் ஆடுகள் போக ஆரம்பித்தது..

என்னால் வெய்யில் தாங்க முடியவில்லை...தலையைச்சுற்றி ஒரு மாதிரியா இருந்தது.

ஏதாவது  குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன்.

கொஞ்ச தூரத்தில் ஒரு பம்பு செட் ரூம் கண்ணில் பட்டது..

நிழல் வாட்டமா இருந்த அந்த பம்ப் செட் ரூமின் திண்ணையில் போய் உட்கார்ந்தேன். கொஞ்சம் சாயலாம் என்று சரிந்தேன்.

மணி எத்தனையோ? தெரியவில்லை.

கொஞ்ச தூரத்தில் ஒரு வயசாளி போய்க் கொண்டு இருந்தார்...

அவரிடம் சென்று “நீங்க போற பாதையில் உள்ள யாக்கோபு நாடார் ஓட்டலில், திங் கிறதுக்கு ஏதாவதும், டீயும் ஒருத்தர் கேக்கான்னு சொல்லிடுங்க”...என்று சொல்லி அனுப்பினேன்.

நாம அனுப்பிய தூதர், யாக்கோப் நாடார் கடைல சொன்னாரோ என்னவோ? என்று ஒரு அரை மணி நேரமா....காத்துக்கிட்டு இருந்தேன்...

தூரத்தில் ஒரு டி.வி.எஸ்.சூப்பர் வாறது தெரிஞ்சுது..அதில சிரிப்பு நடிகர் செந்தில் மாதிரி அசலா “முழிக்கும்” யாக்கோபும், இன்னொருத்தனும் அந்த பம்ப் செட் நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

நான் அவங்க கைகளையே, பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பின்னால் இருந்தவன் கைகளில் ஒரு ‘கைப்பிடி மரக்கட்டையில்’ டீ இருந்தது...நான் பம்ப் செட் திண்ணையில் இருந்தேன்.

யாக்கோபு என்னை பார்க்கும் போதும் நான் தலையில் முக்காடுதான் போட்டு இருந்தேன்.காரணம் அனல் காற்று வேறு அப்போ அடித்துக் கொண்டு இருந்தது...

“ஏல...எவம்ல ஆடு மேய்க்கவன்?.....நான் பாக்கனும்ல உன்ன.....அங்க வந்து டீய குடிக்க மாட்டியால?.....என் தோட்டத்து பம்ப் செட்ல உனக்கு என்னல சோலி?....என்று கோபம மேலிட தொடர் கேள்விகள் கேட்டுக் கொண்டே என்னை நெருங்கினார்..

“யப்பா....இனியும் தாமதிக்கக் கூடாது”ன்னு...தலையில் போட்டிருந்த துண்டை விலக்கினேன்...

“எய்யா....நீங்க எங்க இங்க வந்து படுக்கிய?”....என்று யாக்கோபு ஆச்சிரியம் கலந்த வியப்பில் கேட்டுக் கொண்டார்.

”நாடாரே...முதல்ல டீயைக் கொடுங்க.”...என்று வாங்கும் போது, இல்ல பிடுங்கும் போது கூட வந்த ஆள்  கைல இருந்த பொட்டலத்தைக் கவனித்தேன்..அதில் எங்க பக்கம் போடுகிற முட்டைக்கேக் (வெட்டுக் கேக்) இருந்தது. அத வாங்கி நான் தின்ன வேகத்தைப் பார்த்துட்டு நாடாரும் கூட வந்த ஆளும் பயந்தே போய்ட்டாங்க...

“என்னய்யா..... சும்மா நிதானமா சொல்லுங்க இங்க வந்து எதுக்கு பம்மி இருக்கிய?” என்று கேட்டார்.

நான் கொஞ்ச நேரம் சிரித்துக் கொண்டேன்.டீயைக் குடித்துக் கொண்டே அவரைப்பார்த்தேன்.

“என்ன இந்த ஆள் ?...., நம்ம பம்ப் செட் கிணத்து ரூம்ல, யாருக்கும் தெரியாம எதுக்கோ  பதுங்கி இருக்காரா”? ன்னு ... யாக்கோப் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.

“ நாடாரே... வழக்கமா ஆடு மேய்க்க கோனார் வேலைக்கு வரல்லை...ஆட்டத்தொறந்து விடுவோமேன்னு பத்தினேன். அதுங்க, அங்க சுத்தி இங்க சுத்தி ஒம்ம தோட்டம் பக்கத்துல வந்துட்டுது....நான் காலையில் இருந்து ஒன்னும் உங்க, திங்க இல்லையா அது தான் கிரக்கிடுச்சு” என்று சொல்லி முடித்தேன்.
...
“என்ன வேல செஞ்சீங்க? மணி இப்போ நாலரை ஆகுது....நீங்க போங்கன்னு”...தொரட்டிக் கம்பை வாங்கி ... என்னை அனுப்பி வைத்துவிட்டு ,  யாக்கோபு நாடாரே ஆடுகளைப் பத்திக் கொண்டு வந்தார்...

கூடவந்த பையனோடு, என்னை அவர் கொண்டு வந்த டி.வி.எஸ். சூப்பரையும் கொடுத்து அனுப்பினார்.

காலையில் இருந்து என்னைக் காணாமல், எங்க பண்ணையாட்கள் கலவரமே படவில்லை.

“நீங்க யார் கூடவாவது களக்காடு போயிட்டீங்களோன்னு நினைச்சோம்” என்றார்கள்.

ஆறுமணிக்கு ஆடுகள் திரும்பி வந்தன...வயிறுகள் எல்லாம் நிறைந்து...எனக்குத்தான் பசி மயக்கம்
 இருந்தது...

அப்போ வாத்தியார்கள்...எப்போவோ சொன்னது காதில் கேட்டது.

“நீங்கள்லாம் ஆடுமேய்ய்க்கத்தான் லாயக்கு”........   




 

வெள்ளி, 11 ஜூலை, 2014

தப்பிச்சோம்....பிளைச்சோம்.




இளம் வயசுக் காலம்...... அதை நினைத்தால் மனசில் என்னவெல்லாமோ வந்து போகிறது.

எதைச்சொல்ல?......எதைவிட?......எதை மூடி மறைக்க?......

“ஆத்தில் குளிக்கும்போது, கோவனமாவது கட்டிக் கொண்டு குளிச்சாத்தான் சரி” ம்பான்  கண்ணதாசன். அதுக்காகவாவது சொல்ல முடிகிறதை மட்டும்  சொல்லனும்.  நான் சொல்லுவதால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாதேங்ற கவலை, கண் முன்னால வந்துகிட்டு போகுது. அதனாலதான் அடக்கி வாசிக்க வேண்டியது உள்ளது.

ஒரு வேளை இன்னும் கொஞ்சம் வயசானால் அத எழுதுவதுக்கு தெம்பு வருமோ என்னவோ?

அப்போவெல்லாம் ரிக்கார்டு பிளேயர்கள் மறைஞ்சு, கேசட் பிளேயர்கள் தலைகாட்டிய நேரம். அரபு நாட்டு புண்ணியத்துலே தெருவில் பாதிக்கு மேற்பட்ட வீடுகளில் டேப் ரிக்கார்டர்கள் ஒலிச்சுக் கொண்ட நேரம். பத்தாவது படிப்பு முடிச்சக் காலம் தொட்டே, டேப் ரிக்கார்டர்கள் மீது  பைத்தியம், எங்களுக்குப் பிடிச்சது.

இப்ப உள்ள மாதிரி நினைச்ச பாட்டுகள் எல்லாம் அப்போ கேசட்டுல கிடையாது...எம்.ஜி.ஆர்.சிவாஜி பாட்டு மட்டும் தான்..ஊடாலே ஜெமினி கணேசன்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சந்திர பாபு பாடல்களும் கிடைக்கும்.

மெனக்கெட்டு வேறு பாட்டுக்கள் கேக்கனும்ன்னா திருனவேலி  ஜங்சன் “ருக்”எலெக்ட்ரானிக், கடைக்குப் போய்த்தான் பதிஞ்சு வாங்கி வரணும்..கேசட்டைப் பதியக் கொடுத்தால், குறைஞ்சது ஒருவாரத்துல இருந்து,  பத்து நாள்ல தருவாங்க.

C 60, C90 என்று அறுபது,தொண்ணூறு  நிமிஷம் ஓடும் கேசட்டுகள் அங்கே கொண்டு போய்க கொடுத்தால், பத்து ரூபாய்க்கும்,பதினைந்து ரூபாய்க்கும் பதிஞ்சு தந்தார்கள்.

அத சைக்கிளில் போய் வாங்கி, வீட்டுக்கு கொண்டு வந்து முதல்ல கேக்கும் ரசனை இருக்கே?....அடடா.....நினைத்தாலே இனிக்கும்....

திரும்பத்திரும்ப நேரம் காலம் பார்க்காமல் கேப்போம்.அப்படி ஒரு பெருமிதம்.

ராத்திரி வேளைகளில் எங்க வீட்டு திண்ணையில் நானும் எங்க புகாரி காக்காவும், வெளி நாட்டில் இருந்து எங்க கூட பாட்டுக் கேக்கத்தான் லீவுல வந்தாரோன்னு “மத்தவங்க” நினைக்கிற. எங்க லெப்ப காக்காவும்,இன்னும் சில நண்பர்களும்  நடுராத்திரி தாண்டியும் பாடலகள் கேப்போம்.

எனக்கு விஸ்வநாதன்-ராம மூர்த்தியும் , எங்க புகாரிக்கு கே.வி.மகாதேவனும், பெரிய காக்காவுக்கு முகம்மது ரபி,லதா மங்கேஷ்கர்,ஆஷா போன்ஸ்லே கிஷோர் குமார்,மன்னாடேயும் பிடிக்கும். எங்க எல்லோருக்கும் மொத்தமாக இசைமுரசு நாகூர் ஹனீபா ரொம்பப்ப்பிடிக்கும்.

ஒரு கேசட்ட போட்டா, குறைஞ்சது ஒரு பக்கம் ஓடி முடிக்க, அரைமணி நேரமாவது ஆகும். முதல்ல போட்ட கேசட்,  ஒரு ஆள் விருப்பம்ன்னா,மறு கேசட் வேற ஆள் விருப்பமா வரும். ரண்டாவது கேசட் கேட்டு முடிக்கும் போதே, தூக்கம் கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். பெரும் பாலும் மூணாவது கேசட்ட லெப்ப காக்கா மட்டும்தான் கேப்பார்..

அவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே ,எங்க வாப்பா வெளியே வந்து “ஏலே.... தூங்காம என்ன பாட்ட போட்டு கேக்கியோ ? ” அப்படீன்னு ஒரு குரல் கொடுப்பார்.அவ்வளோ தான். சபை கலைஞ்சிரும். அப்புறம் மறுநாள் தான். பெரும் பாலும், நாளைக்கு பள்ளிக்கூடம் காலேஜ் லீவுன்ன அன்னைக்கு ராத்திரிதான் இத்தனைக் கூத்தும் நடக்கும்.

வழக்கமா எங்களோடு பாட்டுக்கேக்கிற லெப்ப காக்கா, எங்களுக்கு ஒரு சேதியச் சொன்னார்.

“அடே..நம்ம ஊட்டுல இருந்த எக்ஸ்டிரா ஸ்பீக்கர் இரண்டை நம்ம மணியாச்சி காஜா சாச்சா தூக்கிட்டு போய் ஒரு மாசமாச்சு...நீ நாளைக்கு அவர்ட்ட போய் அத வாங்கி, உன் செட்ல மாட்டி வச்சுக்கோ” அப்படின்னார்.

 ரேடியோ,டேப் ரிக்கார்டர்கள் கனவுகளில்யே சதா கிருக்குப்பிடிச்சு அலைஞ்ச காலம் அது என்பதால் அவர் சொன்னது மிக ஆனந்தமான ஒன்றாக இருந்தது.காதுல தேன் வந்து பாஞ்சா இப்படித்தான் இருக்கும்ங்ரத அப்போதான் புரிஞ்சோம்.

 அந்த கால கட்டத்தில் தான், தமிழில் ப்ரியா மற்றும், நினைத்தாலே இனிக்கும், பட பாடல்களும், ஸ்டீரியோ ரிக்கார்டிங் முறையில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்டு வெளிவந்தது..அத மோனோ செட்டில் கேட்டால் நல்லாவே இருக்காது. எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்கள் மாட்டி, கேட்டால் அப்படியே சொக்க வைக்கும்.கொன்னு எடுத்திடும்.

சே....நம்ம வீட்டு ஸ்பீக்கர்கள் மணியாச்சி காஜா சாச்சா வீட்டில் இருக்கா? நம்பவே முடியல்லியே....அப்படீன்னு நானும், புகாரி காக்காவும் சொல்லிக் கொண்டு, அத உடனடியாகக் கைப்பற்றி, எங்க வீட்டுக்கு கொண்டு வரும்  முயற்சியில் இறங்கினோம்...

காலை  ஆறு மணிக்கே அவர் வீட்டுக்குப் போய் விட்டோம்..

மணியாச்சியிடம் விபரம் சொல்லி கேட்டோம்.’லெப்பையே....சொன்னானா?’...அப்படீன்னு திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டார்...இவனுகளை எப்படி அனுப்ப அப்படீன்னு யோசிக்காரோன்னு நினைச்சிக்கிட்டோம்.

காரணம் கத்தார் நாட்டில் இருந்து கொண்டு வந்த ஸ்பீக்கர் பெட்டியல்லவா...அதான் அந்தக் கேள்வி அவர் கேட்டுக்கொண்டார்..மணியாச்சி காஜா மனைவியும் எங்க பெரியம்மாவும் அக்கா தங்கச்சிங்க அதனால அவர் மீது எங்களுக்கு பயம் கலந்த மரியாதை உண்டு.

ஒரு இருபது வருஷத்துக்கு முந்தைய மேலப்பாளையத்தில் உள்ள இளைஞன்  அரபு நாட்டில் இருந்து எது கொண்டு வந்தாலும், அது அவனோ, அல்லது அவன் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அனுபவித்தார்களோ?, தெரியாது.ஆனால் பெரும்பாலும் அவை உறவினர்களுக்குத்தான் போய்ச்சேரும்.  அவன் துபாயில் இருந்து கொண்டுவந்த சோப் கேஸ் கூட, மீண்டும் பயணம் கிளம்பும் நாளில் மிச்சம் இருக்காது. அரபு நாட்டு பொருள் மீது அம்புட்டு மோகம்.

இப்ப உள்ள “பொன் பிள்ளைங்க” ரொம்ப உஷார்......மாப்பிளை கொண்டு வார சாமான்கள் பத்திரமா இருக்க, என்ன வேலை  சரியா செய்யணுமோ, அத சரியா செய்யுதுங்க...

பத்து வருஷத்துக்கு முன்பு மாப்பிளை கொண்டு வந்த, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சென்ட் பாட்டில்கள்  கூட பல வீடுகளில் இன்னும் ஸ்டாக்கில் இருக்கிறது.பாவப்பட்ட மாமா மார்கள் எங்காவது வெளியே போகும்போது அதை பூசிக்கொண்டு செல்லுகிறார்கள்..அல்லது "மவ்த்தா" போன பெறகு, தொளிக்கக் கொடுக்கிறார்கள்......பல இடங்களில் இதுதான் வாடிக்கை..

“என்னங்க இங்க வாங்க...”

“என்ன.?..என்னா..”?.என்று அரபு நாட்டு மாப்பிளை பதறியபடி பொண்டாட்டி முன் நாணிக் கோனி நிற்கின்றான்..

.“ஒன் மேன் ஷோ அந்த மனுஷனுக்கு எதுக்கு? ..இது மனைவி

“எந்த மனுஷனுக்கு”? மெல்லிய குரலில்...மாப்பிள காரன்.

“அதுதாங்க...உங்க வாப்பாக்கு....அவர் என்ன மைனரா? எந்தம்பிக்கு இத நான் கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்......”என்று மாப்பிளைகளிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு, கறார் யாபாரம் பேசி,அந்த பழைய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சென்ட் பாட்டிலை மாப்பிளையிடம் கொடுத்து, மாமாக்களின் தலையில் கட்டிவிடும்  மருமக்களை நான் பார்த்துள்ளேன்.

இப்ப, அவனவன் அரபு நாட்டிலிருந்து கொண்டு வருகிற சாமான்கள்,அவனவன் வீட்டில் இருக்கிறது,என்றால் “பொண்டாட்டி கெட்டிக்காரி” அப்படீன்னு பேரு வேற.

ஆனா உண்மையிலே எல்லா வீடுகளிலும், இப்போ எல்லா நாட்டு சாமான்களும் தட்டில்லாமல் இருக்கிறது...ஒவ்வொரு வீட்டு பிள்ளையும் தன் வீட்டுக்கு தாராளமா சாமான்கள் கொண்டு வாரான்.அப்போ இருந்த நிலைமை வேற இப்போ உள்ள நிலைமை வேற. 

சரி ஸ்பீக்கர் கதைக்கு வருவோம்...

எங்க இரண்டு பேரையும், மேல கீழ, முழுசா பார்த்த மணியாச்சி....என்ன  செய்ய? இந்த ரண்டு பயல்களும் பெட்டிய வாங்காமப் போ மாட்டானுவோ...போல இருக்கேன்னு யோசித்து....

”சரீ......நாங்க  ஒரு   கேசட்டு...கேக்கணும்....அது பாதில நிக்கி....அதனால....ராத்திரி ஒரு பத்து பத்தரை மணிக்கு வந்து வாங்கிட்டுப் போப்பா”.....அப்படீன்னு கொஞ்சம் சன்னமான குரலில் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்...

எப்படியும் இன்னைக்கு விடப்படாது....அப்படீன்னு முடிவு கட்டி நானும் புகாரியும் ராத்திரி  ஒன்பது  மணிக்கே....அவர் வீட்டுக்கு போய் விட்டோம்..

சொன்ன மாதிரி அந்த வீட்டு டேப் ரிக்கார்டரில் கேசட் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது. ஏதோ கடையநல்லூர் நூர் மைதீன் பாடிய  நூர்மசலா....பக்கீர் சாயிபு தப்ஸ் ஒலியோடு நாங்க வாங்கப் போன ஸ்பீக்கரில் “ஓடிக்கொண்டு” இருந்தது...

நூறு கேள்விகளுக்கு பதில் சொல்லும், “மஸ்அலாக்கள்” அது. வயசான கிழடு கட்டைகள், அதையே கதி என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள்..

நாங்களும் ,...விதியே...என்று அந்த கேசட் முடிகிற வரைக்கும் இருந்தோம்.
 ....ஒரு பதினோரு மணிக்கு...அந்தக் கேசட் ஓடி முடிஞ்சதும்....மைக் செட் காரன் வேகத்தில்....அந்த கனத்த இரண்டு ஸ்பீக்கர் பெட்டிகளையும்,கழற்றி எடுத்து.....நாங்கள் கொண்டுவந்த சைக்கிள் கேரியரில் வைத்தோம்...

அப்போதான் புகாரி காக்கா சொன்னான்.....”எப்பா நீ சைக்கிள் ஒட்டு..நான் மடியில் அந்த இரண்டு பெட்டிகளையும் வைத்துக் கொள்கிறேன்”..... என்றான்.

நான் சைக்கிள் ஒட்ட, புகாரி பின்னால் இருக்க ஒரு நூறடி வந்திருப்போம்..

மேலப்பாளையத்தில் இப்போ இருக்கிற மாதிரி,இருட்டை வெளிச்சமாக்குகிற  சோடியம் வேப்பர் லைட் எல்லாம் அப்போது  கிடையாது....தெருவுக்குத்தெரு இருக்கிற,எலக்ட்ரிக் கம்பத்தில் 40 வாட்ஸ் பல்புகள்  தான் எரியும்...அதுவும் சில வேளைகளில் தீர்ந்து போய்விட்டால், வார்டு கவுன்சிலர் சொல்லி,சரிசெய்ய மாதக்கணக்கில் ஆகும்.

காத்தடிக்காலங்களிலும்,கோடைக் காலங்களிலும் பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டு திண்ணைகளில் தான் தூங்குவார்கள்.

சில வீடுகளில் தம் மகனையும் மருமகளையும் வீட்டில் இருக்க வைத்து விட்டு, தாயும் தந்தையும் திண்ணையில் தூங்கிய குடும்பங்களும் உண்டு.

ஒரு சில பேர்கள் நட்டநடுத் தெருவில் தரைக்கட்டில் போட்டுப் படுப்பார்கள்.

சில “முன்ன பின்ன” யோசிக்காதவர்கள்,நடுத்தெருவிலேயே பாய் ஜமுக்காளம் விரித்துத் தூங்குவதும் உண்டு.

நானும் புகாரி காக்காவும் சைக்கிளில் லோடு போட்டு வரும்போதுதான்  அப்படி ஒரு விபரீதம் நடந்தது.

சைக்கிளில் லைட் இல்லாமல் போனால் பசாரில் தான் போலிஸ் காரங்க பிடிப்பாங்க...ஆனா தெருக்குள்ள அதெல்லாம் ஒன்னும் நடக்காதுங்ற தைரியத்தில் சுவாரஸ்யமாக ஸ்பீக்கர் பெட்டிய எங்க வைக்கலாம் எப்படி மாட்டலாம்ங்ற பல்வேறு யோசனைகளை செய்து பேசிக்கொண்டு வந்தோம். அந்தப்பகுதிக்கு வரும்போது கொஞ்சம் இருட்டு.

நான் ஒட்டிக கொண்டு போன சைக்கிள் ஏதோ ஒரு நாயின் வயிற்றில் ஏறி இறங்குவது போல சைக்கிள் பெடலின் மிதியில் உணர முடிந்ததுதான் தாமதம்.......”ஏ ஏ ....எஈ ஏ ....”என்று கடுமையான அபாயக் குரல் எழுப்பிக் கொண்டு சடார்பிடார்ன்னு ஒருவர் சைக்கிளின் கீழ் இருந்து எழுந்தார்...

நான் பயந்தே விட்டேன்..

நான் சுதாரிப்பதற்குள் ஒரு சேர பின்னால், இருந்த புகாரி காக்கா வோடு சைக்கிளோடு அந்த ஆள் மேல் விழுந்தோம்...

“எம்மா” .....என்று ஒரே அழுகைச்சத்தம்..இருட்டில் இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று கொஞ்சமும் நாங்கள் எதிர் பார்க்கவில்லை...

அக்கம் பக்கம் வீடுகளில் தெருவிளக்கைப் போட்டார்கள்..

அப்போதுதான் பார்த்தேன்....நான் நாய் என்று சைக்கிளை ஏற்றியது ஒருவரின் வயிற்றில் என்பதை...

அந்த ஆளு எங்க வட்டாரத்துல எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தார்...எங்களைப்பார்த்தாவது ஒப்பாரிய நிறுத்தினானா? என்றால் இல்லை...ஏதோ எங்களை உற்றுப்பார்த்துவிட்டு அந்த ராத்திரியில் அந்த ஆள் திறந்த வாயை "ஏதோ ஒரு நினைப்பில்" மூடவில்லை....அம்புட்டுச்சத்தம்.

“வானானத்துருவே....என்ன வேல பார்த்தே?.....அடைலெப்பய சாவடிக்கப் பார்த்தியே?.....” என்று புகாரி காக்கா, ஈனக் குரலில் எனக்கு மட்டும் கேட்கும் அளவில் முனங்கினான்..அவன் குரலில் அடுத்து என்ன நடக்குமோ?  அப்படீங்கற பீதி தெரிஞ்சுது....

“அந்த ஆள் நீட்டி, நிமிர்ந்து நடுத்தெருவில் படுப்பான்னு, எனக்கென்னல தெரியும்?” என்று நான் புகாரியிடம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன்..

அடைலெப்ப அலி பார்ப்பதற்கு,வடிவேல் படத்தில்  “கினற்றை காணவில்லை” போலிஸ் இன்ஸ்பெக்ட்டர் சிவாவைப்போல கொஞ்சம் ஒல்லியாக இருப்பார்.வயிறு உள்ளடங்கி இருக்கும்......ஆள் நல்ல வளர்த்தி..   

எங்க தெருவில் இருந்து ஆயிரம் அடிதூரத்தில் இந்த சம்பவம் நடந்தது..தவிரவும் நாங்கள் நின்று கொண்ட தெருவிலும், எங்கள் உறவினர்கள் நிறையபேர்கள் இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் இந்தக் "காப்ரா" கேட்டு அவர்களும் என்னவோ? ஏதோ? இந்த ரெண்டு பெரும் இருட்டில் கூட்டத்தின் நடுவே நிக்காங்களேன்னு  வந்து, சூழ ஆரம்பித்தார்கள்.

என்னை நோக்கி வெள்ள மீரான் சம்சுத்தீன் மாமா வேகமாக வந்து கொண்டு இருந்தார்...ஆள் ஆஜானு பாகு வாக ...அந்தக்கால ஸ்டண்ட் நடிகரைப்போல இருப்பார்..அனால் கொஞ்சம் வயோதிகம்.எங்கள் இருவர் வீட்டுக்கும் வாரம் மூன்று நாளாவது வந்து சாயா குடிக்காமல் போக மாட்டார்....

“ஏல...என்னலே நடந்துது? அப்படீன்னு பக்கத்தில் வந்து கேட்டார்.

நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கொண்டு,இருட்டில் நடுத்தெருவில் அந்த ஆள் படுத்துக் கிடந்ததை.....அப்புறம் சைக்கிள் எறியதை....நடந்ததைச்சொன்னேன்...

அப்புறம் வெள்ள மீரான் சம்சுத்தீன் மாமா ஒரு வேலை  செய்தார் பாருங்க...அது தான் எங்களை வீடு வரை ஓடச்செய்தது..

வயிற்றைப் பிடிச்சிக்கொண்டு வந்த அடைலெப்ப அலியிடம், “...ஏல....படுக்காலிப்பயலே நீ தூக்கக் கலக்கத்தில், சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்த சின்னப்பையங்க மேல மோதுவியாலே?” கீழ விழுந்த அவங்க கைய, கால ஓடச்சிக்கிட்டா என்னல பண்ணுவே? அப்படீன்னு கேட்டுவிட்டு...போட்டாரே ஒரு போடு அவம் முதுகில்...

அப்புறம் எந்த அழுகையும் அவன்கிட்ட இருந்து வரல்லை....

வழக்கு எப்படி ?......... தீர்ப்பு எப்படி?   

 

    

ஞாயிறு, 8 ஜூன், 2014

இசைமுரசு நாகூர் ஹனீபா.....சில நினைவுகள்..



இசைமுரசு நாகூர் ஹனீபா....
தமிழ் முஸ்லிம் வீடுகளில்......
இவர் குரல்கேட்காத வீடில்லை.
தமிழ் நாட்டில் இஸ்லாமியப் பாடல்கள் மூலமாக இஸ்லாமியத் தத்துவங்களை முஸ்லிம் களிடத்தும்,சகோதர சமுதாயப் பெருமக்களிடத்தும் கொண்டு போய்ச் சேர்த்ததில் இவரது தொண்டு மகத்தானது..
இவரது காலத்திலும்,அதற்கு முன்னரும் எத்தனையோ இஸ்லாமியப் பாடகர்கள், பாடல்கள் மூலம் இஸ்லாமிய நெறியினை எடுத்துச் சொன்னாலும்,இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் உழைப்பை,புகழை யாரும் தொடவில்லை என்பதே உணமை யாகும்.
வெண்கல நாதமாய் ஒலித்த இவருடைய குரல் உள்ளத்துக்குள் நுழைந்து என்னவெல்லாமோ செய்தது..
பாடல்களில் உச்ச ஸ்தாயியை மிக எளிதாக அவரால் தொட முடிந்தது. அவரது குரல் அவ்வளவு நளினம் பேசியது..
முறையான சங்கீதம் எதுவும் கற்றுக் கொள்ளாத அவரால் தேர்ந்த பாகவதர்கள் போல் இராகம், தாளம், பல்லவி உரிய இலக்கணத்துடன் கொடுக்க முடிந்தது.
இதற்கெல்லாம் இவருடைய 'கேள்வி ஞானம்' தான் குருவாக அமைந்து இருந்தது...

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்.சிவாஜி பட சினிமா இசைத்தட்டுகள் எந்த அளவு விற்பனையானதோ அதற்குச் சற்றும் குறையாத எண்ணிக்கையில் இவரது இஸ்லாமியப் பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனைகள் படைத்தன என்கிற செய்திகள் பலரும் அறியாதது...
இன்றைய  ஐ பாட்,செல்போன் பிளேயர்கள் காலத்தில் இளைஞர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாறுதல்கள் தனிப்பட்ட முறையில் இவரின் பாடல்களைக் கேட்பதில் ஒரு தேங்குதலை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆனால் அகில இந்திய வானொலியும், பண்பலைகளும் இன்றும்.......இவரின் பாடல்கள் பலவற்றைப்    பன்னிசைத்துக் கொண்டு வருகின்றன..பாதுகாத்து ஒலிபரப்பி வருகின்றன...

வானொலியின் வீச்சு அதிகமாயிருந்த காலங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி   அவரின் பாடல்கள் பலவற்றை உலகிற்கே அறிமுகப்படுத்தியது  என்றும் கூடச்  சொல்லலாம்.

பலரது கார்,பஸ்,ரயில்,மற்றும் வான் பயணங்களிலும் கூட வந்து    குதூகலம்.தருவது .... இவரின் பாடல்களாகும்..
.
முஸ்லிம் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல்,அனைத்து மதப் பெருமக்களும் இரசித்து விரும்புகிற குரல் அவருடையது. அவர்கள் உள்ளங்களில் அப்படி ஒர் இடம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது.
அதையும் தாண்டி...... "இறைவனிடம் கையேந்துங்கள்" என்று யாரெல்லாம் வேண்டுகிறார்களோ, அந்த சமரச நெறியுடையோர்க் கெல்லாம் அவரின் பாடல்கள் எப்போதும் பிடிக்கும்.
எங்க பக்கமெல்லாம்......... "கேசட் பிளே யர்கள்"  என்கிற ஒன்று வீடுகளில்
ஆட்சிஊர்ப் செய்த பொழுது.... அதிகமாக ஒலித்த குரல்
இவர் குரல்தான்.....

அதற்கு முந்தியெல்லாம் கிராமபோன் தட்டுகளும்,  ஊசி மாட்டி உரசிச்சென்ற அரக்கு ரிக்கார்டுகளும் அதில் வெளி வந்த அவர் பாடல்களும்,விழாக்களிலும்,
திருமண வீடுகளிலும் உற்சாகக் குரல் கொடுத்தன..

இன்றைக்கும்  மணவிழாக்களில்,அதைப் பதிவு செய்த   ஒளிப்பேழைகளில்....
மாப்பிளையையும்-பெண்ணையும் ஒன்றாய் வைக்கும் போது,பின்னணியில்
"வாழ்க வாழ்கவே வாழ்கவே"........என்று இசைமுரசின் குரலே வாழ்த்துகிறது..

. அந்தக் காந்தக்குரல்..கம்பீரக் குரல்....சினிமாப் பாடல்களைப் பின்னுக் குத்தள்ளியது..பிள்ளைகள் நாவில் ஒழுக்க நெறிகளை மனனம் செய்ய வைத்தது...
அதுபோல ,ந்தக் குரல்  தந்தை பெரியாரை,காயிதே மில்லத்தை,பேறிஞர் அண்ணாவை, திராவிட இயக்கத்தை,கலைஞரை.... தமிழை.......
தமிழ்ப் புலவர்களை...இலக்கியங்களைப் பாடி நின்றது..
..
இசைமுரசின் குரலில் வெளிவந்த பெரும்பான்மைப் பாடல்கள்இஸ்லாமியப் பாடல்கள் தான்....அவை........காலத்தைக் கடந்தும்  நெஞ்சம் தொட்டுநிற்கின்றன.
.
         பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை....
         ஒரு நாள் மதினா நகர் தனிலே...
        அந்த நாளிலே மக்கா நகரம் ....
         அதிகாலை நேரம்....
         இரு கண்கள் நம் ஹசன் ஹுசைன் வாழ்வை....
         தாயிப் நகரத்து வீதியிலே....
         எத்தனை தொல்லைகள்,என்னென்ன துன்பங்கள்....

இப்படி எண்ணற்ற
பாடல்களை  இவர் மேடைகளில் பாடும் போது.... கண்ணீர் விட்டுக் கதறி அழுதவர்களை, ஊர் தோறும் பார்த்துள்ளேன்...பிள்ளைச்செல்வம் இல்லாத ஒருவர்"பிறை போல வளர்கின்ற சிறுவர்களே"....அவர் பாடும்போது
பிள்ளைக்காக ஏங்கிஅழுததை..... ....இசைமுரசின் முத்துவிழா மலரில்
22 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.
அவருக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மூன்று தலைமுறை நட்புண்டு.
சொல்லிக்காட்ட நிறைய உண்டு....
என் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தவேண்டும்
என்று நாங்கள் கேட்டதனால்வெளிநாட்டுப் பயணத்தையே
தள்ளி வைத்தார்கள்..சொன்ன மாதிரியே வந்து ஐந்து மணி நேரம் அமர்க்களமாகப் பாடிஎங்களை மகிழ்வித்தார்கள்..
பல பொழுதுகளில் நெல்லைச் சுற்று வட்டாரத்துக்கும்குற்றாலத்துக்கும் வரும் போதெல்லாம் அவரைக் காணாமல் இருந்ததில்லை...நாகூர் வீட்டுக்கும் போய் வந்துள்ளேன்...அது கணக்கில் அடங்காது..அங்கே நான் சாப்பிட்ட பொழுதுகளும்தான்..
நாகூரில் அண்ணன் நாசர், ..மதுரையில்,சென்னையில் அண்ணன் நவ்சாத்,திருச்சி மருமகன் சென்னை மருமகன் வல்லம் மருமகன்
சம்பன்குளம் மருமகன் வீடுகள்...அப்படி உபசரிப்பார்கள்..பேரப்பிள்ளைகள் உட்பட....மெய்சிலிர்க்க வரவேற்பார்கள்...
அப்போது ...அடிக்கடி சென்று வரும் இடங்கள்..அவை..

அந்த நேரங்களில்... அவர்களின் பாடல்களைப் பற்றி...
இசை அமைப்பைப் பற்றி...
இதமான,பதமான,
சூடான
விமர்சனங்கள் செய்வேன்.
இசை முரசு
அதை விரும்பி இரசிப்பார்கள்.
.
குற்றாலம் பேரருவி மேட்டில்,
ஆறாம் எண் அறையில்,
சமுதாயக் கவிஞர்.தா.காசிம்.
அவர்கள் பாடல்கள் எழுத
இசை அமைக்கப்பட்ட பொழுதுகள்...நினைக்க..... நினைக்க....
இன்பம் தருபவை...

அவர்களின் திருநெல்வேலி தாஜ் ஹோட்டல் சம்பந்தி ஷேக் முகைதீன் ஹாஜியை, மாமா என்றே நான் அழைப்பேன்.
.
இசைமுரசின் வீட்டில் நானும்
எங்க வீட்டில் அவரும்...
விருந்துகள் வரவேற்பைச்
சொல்லில் வடிக்க முடியாது...


பதினெட்டு ஆண்டுகள் முன்பு
ஒரு நாள்
சென்னை எழும்பூர்,
கென்னட் வீதி.........
ஏதோ ஒரு வேலையாய்
போய்விட்டு
நான் இருந்த
ரீகலுக்கு திரும்பிக்கொண்டு இருந்தேன்..
லட்சுமி மோகன்லாட்ஜ் முன்னர்
நான் கடந்து போகும் போது
இரண்டாவது மாடியில் இருந்து
சுதி பேதமில்லாமல்"எத்தா....எல்கேஎஸ் "என்று சங்க நாதத்தோடு ....என்னை நோக்கி ஒரு அழைப்புக்குரல் .......

அந்த மாடியின் முகப்பில்......சொல்லப் போனால் உப்பரிகையில்......... இசைமுரசு புன்னகை பூத்து நின்று கொண்டு இருந்தார்....அவ்வளவுதான்....வேகமும்,பாய்ச்சலுமாய்மாடிப் படிகள் ஏறினேன்.
நான் அவர்களை வழக்கமாக"வாப்பா " என்றே அழைப்பேன்.அவர்கள் என்னைச் செல்லமாய்"அத்தா"...என்று அழைப்பார்கள்..
எப்போவாவது  "தம்பி".
நான் அவர்களைப் பார்த்த மகிழ்வில்அவர் பக்கம் போயநின்றேன். வழக்கமான
குடும்ப விசாரிப்பெல்லாம்முடிந்தது..."எத்தா...இன்னைக்கு கவர்னர் மாளிகையில் நம்ம நிகழ்ச்சி இருக்கு...வாரீங்களா?"
என்று அவர்கள் அழைத்தார்கள்...
 
"இதோ...இப்பவே வாரேன்"..என்று அந்த மாலை வேளையில புறப்பட்டுவிட்டேன்..
வாசலில் அவர்கள் பயன் படுத்தும்ஒல்ட்மாடல் "மெர்சிடிஸ் பென்ஸ்" தயார் நிலையில்...அதன் அருகே...ஹார்மோனிஸ்ட் இன்ப ராஜ்.ஆல் ரவுண்ட் சின்னத்தம்பி, கீ போர்டு சேது ராமன்,'எலெக்ட்ரிக் தராங்' மாரியப்பா,தபேலா ஜான்பாய்.முதலானவர்கள் புறப்படத் தயாராக இருந்தார்கள்..
சென்னா ரெட்டி  அப்போ தமிழகக் கவர்னர். கவர்னர் மாளிகைக்குள்
அடக்கம் பெற்றுள்ள ஒரு இஸ்லாமிய ஞான வானின்நினைவு நாள்.
அதற்காகவே அவர்  அங்கே அழைக்கப்பட்டிருந்தார்.

 கவர்னர் சென்னா ரெட்டி வருகை தந்து...மந்திரக் கோல்கைகளில் தாங்கி....
கால்மேல் கால் போட்டு...முதல் வரிசையில்..வெல்வெட் நாற்காலியில்
மெய்க்காவலர்கள்..புடைசூழ ரசிகராக இருந்து இசை நிகழ்ச்சி முழுவதையும்
கேட்டு இரசித்துக் கொண்டு இருந்தார்..
அருமையான நிகழ்வாக அந்தக் கச்சேரி அமைந்தது...அந்தக் காலப் பொழுதில்
அவர்கள் பாடி பிரபலமானப் பாடல்கள் பலவற்றை பாடினார்கள்.பல்வேறு ரசிகர்கள்....
பல்வேறு பாடல்களைப் பாடச்சொன்னார்கள்...சளைக்காமல் பாடிக் கொண்டு இருந்தார்கள்...அப்போது ஒரு துண்டுச்சீட்டு.....அதில்,."உயிர் இருக்கும் வரை உம்மை மறவேனே    உள்ளத்தில் வாழ்கிற நபிகள் பிரானே..." என்கிற பாடலைப் பாடுங்கள்
என்று ஒருவர் கேட்டிருந்தார்..

அதைப் பார்த்துவிட்டு
"இந்தப் பாடல் புத்தகம் நான் கொண்டு வரவில்லை..
அதனால் வேறு பாடல் பாடுகிறேன்"
என்று சொல்லிவிட்டு வேறு பாடல் பாடினார்..
எப்போதும் என் சட்டைப் பையில்
பேனாவும் குறிப்பேடும்
வைத்திருப்பேன்...
நான் மளமள வென்று
"உயிர் இருக்கும் வரை உமைமறவேனே..
உள்ளத்தில் வாழ்கிற
நபிகள் பிரானே...
இது பல்லவி..
அப்புறம் சரணங்களாக....

உயர் மார்க்கம் தனைத்தந்த
உத்தமர் கோனே... உலகெல்லாம்
புகழ்கிற எம் பெருமானே....அருட்சுடரே.........
அண்ணலே,,,,,,இறைத்தூதே...
ஆமினார்,........அப்துல்லா....ஈன்ற மஹ்மூதே,......... ,
உரிமையெல்லாம் தந்த  அருமை ரசூலே...
உமக்கினை உண்டுமோ இப்புவி மேலே...."...என்று

அடுத்த பாடலை அவர்கள் பாடும் முன்னர்  நாகூர் ஆபிதீன் காக்காவின்
பாடல்வரிகள்முழுதையும்     இசை முரசுவிடம் எழுதிக் கொடுத்தேன்...
அந்தப்பாடலையும்  என் முகத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டு....
"நாற்பது வருடமாக நான் பாடும் பாடல் இது...  ஆனாலும் என்னால்
புத்தகம் இல்லாமல் பாடமுடியாது....
இதோ என் தம்பி....என் பிள்ளை....சின்ன வயதுக்காரர்...அவர் பிறக்கும் முன்னர்
நான் பாடி ரிக்கார்டாக வந்த பாடலை இந்த மேடையில் வைத்தே எழுதித் தந்துள்ளார்....நான் பாடுகிறேன்"...என்று சொல்லிவிட்டு பாடினார்...
அப்புறம் கவர்னர்  இசைமுரசு அவர்களுக்கு அணிவித்த பட்டு சால்வையையும் எனக்கே போர்த்தி விட்டார்..
..
மேலப்பாளையத்தில்முஸ்லிம் மேல்நிலைப்பள்ளித் திடலில்
கவியரங்கம்,பாட்டரங்கம், கருத்தரங்கம் கொண்டு...
தி.மு.க.தலைவர் கலைஞர்,   முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத்
அப்துல் லத்தீப்,
முதலான தலைவர்களை அழைத்து
மேலப்பாளையம் முன்னாள் சேர்மன் .
எம்.ஏ.எஸ்.அபூபக்கர் சாகிப் அவர்கள் தலைவராக
நான் செயலாளராக,
வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பள்ளி
நிர்வாகத்தினர்
தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள்,சதக்கத்துல்லா அப்பாக கல்லூரி முன்னாள்முதல்வர் பேராசிரியர்.முகம்மது பாரூக்,
 சூழ இருந்து
இசைமுரசு 75 ஆம் வயது முத்து விழா
நடத்தியது பற்றி
தனியே எழுதலாம்..

இன்னும் நிறைய இருக்கிறது...


செவ்வாய், 27 மே, 2014

சைலப்பன் அண்ணாச்சியும்,அம்பாஸ்டர் காரும்


 

        வழக்கமா எங்க வீட்டுல உள்ள கார்களை, பழுது நீக்கி சரி பண்ண திருனவேலி ஜங்சன் பேராச்சி பட்டறைக்குத் தான் அனுப்புவது வழக்கம். எங்க வாப்பா காலத்திலும், இப்பவும் அதுதான் நடைமுறையில் உள்ளது..

பேராச்சி திருநெல்வேலி ஜங்சன் பிரபு ஹோட்டலுக்கு அடுத்து ஒர்க் ஷாப் வச்சிருந்த நேரத்திலும்,அப்புறம் திருநெல்வேலி வடக்கு பை-பாஸ்  சாலையில் அதை மாற்றிய நேரத்தில் இருந்தும்,




எங்க கார்கள்  அந்தப்பட்டறைக்கே சென்று புதுப்பிக்கப்பட்டு, அல்லது பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

இப்போ பேராச்சி சின்னையா   இல்லை. கடும் உழைப்பாளியான அவர் காலமாகி விட்டார்.ஆனால் அந்த பேராச்சிப் பட்டறையில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்,அந்த பழைய ஒர்க்ஷாப் பக்கம் தங்கள் தொழிலை செய்து வருகிறார்கள்.

நேற்று முந்தினம் மைத்துனர் ஹைதர் அலி சென்னையில் இருந்து செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது "உங்களுக்கு விஷயம் தெரியுமா?.......அம்பாஸடர் கார் கம்பெனிய மூடியாச்சு "  அப்படீன்னாம்.

"ஏதாவது ஸ்ட்ரைக்கா இருக்கும்",என்றேன்.
"இல்லங்க,பிளான்டையே குளோஸ் பண்ணிட்டான்.இனி அம்பாஸ்ட்டர் கார் தயாரிப்பு இருக்காது"என்ற சொல்லும் போது மனதை என்னவோ பண்ணியது.
அடடா....இப்படி மூடிட்டாங்களே....என்று மனசில் தோன்றியது..
முதலாவதாக கார் ஓட்டப்பழகிய அம்பாஸ்டர் கார்,அப்புறம் வாப்பா,சின்னவாப்பா,மற்றும் குடும்பத்தில் பல வீடுகளில் நின்ற அந்தக்கார்களின் எண்களும்,நிறங்களும் அதனை ஒட்டிய காரோட்டிகளும் நினைவில் வந்து போனார்கள்.

நீண்ட தூரங்களுக்கு அம்பாஸ்டர் கார் ஓட்டுவது தனித்தன்மை கொண்டது.
காரின் தரம் அதன் இயக்கத்தைப் பொருத்ததே. எத்தனை கார்கள் சந்தையில் புதிதாக வந்தாலும் அம்பாஸ்டர் கார்களின் அந்த "மோரிஸ் ஆக்ஸ் போர்டு"  மாடலுக்கு நிகரான "பழைய"  அழகை,கம்பீரத்தை வேறு எந்த மாடல் கார்களிலும் பார்க்க முடியாது.
எழுபது வருஷமாக முன்பக்க கிரில் மட்டுமே பெரும்பாலும் புறத்தோற்றத்தால் மாறும்.ஆனால் காரின் பின் பக்கம் "லேன்ட் மாஸ்ட்டர்" காலத்துக்கு பிறகு ஒரே மாதிரி தான்..

பெட்ரோல் என்ஜின்,அப்புறம் டீசல், கேஸ், என்று எல்லா வகை என்ஜின்களும் அதுக்கு மாட்டிப் பார்த்துவிட்டார்கள்...
கடைசியில் இசூசு என்ஜின் ஓரளவு நன்றாகவே இருந்தது...ஆனாலும் அந்த என்ஜினை வச்சிக்கிட்டு வேகத்தில் பிக்கப்பில் குட்டிப்பையன் "மாருதி ஸ்விப்ட்"பக்கம் நெருங்கக் கூட முடியவில்லை...

 நேற்று எங்க அம்பாஸ்டரை எடுத்துக் கொண்டு பேராச்சி பட்டறை சைலப்பன்-ராமகிருஷ்ணனிடம் காட்டப்போனேன்...
விஸ்வநாதன்-ராமமூர்த்தி மாதிரி  சைலப்பன்-ராம கிருஷ்ணன் இரட்டையர்கள் தான் தமது கைவண்ணத்தை எங்கள் வண்டிகளில் காட்டுவார்கள்.
அவர்கள் வண்டியை சரிசெய்தால் தான் மனதுக்கு ஒருவகை திருப்தி ஏற்படும்.

நான் போனபோது ராம கிருஷ்ணன் எங்கோ வெளியில் போய் இருந்தார்.

தமது தலையை வண்டியின் பானட்டுக்குள் சொருகி, பலவகை நம்பர்கள் கொண்ட ஸ்பானர்களால் "சைலன்சரை" முறுக்கிக் கொண்டு, வெளியே தலை காட்டிய  சைலப்பன் அண்ணாச்சியிடம் ,"அண்ணாச்சி,அம்பாஸ்டர் கார் கம்பெனிய மூடிட்டாங்க தெரியுமா' என்று கேட்டேன்.
 
 அவர் "என்ன  ஐயா சொல்றீங்க?" ...என்று பதறிய படி திரும்பி என்னிடம் கேட்டார்.

"ஆமா...அண்ணாச்சி.....நஷ்ட்டமாம்.மூடிட்டானுங்க.." என்றேன்.
கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டார்..அப்போது அவரின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.....
கொஞ்ச நேரம் ஒன்னும் என்னிடம் பேசவில்லை...
அப்புறம் சொன்னார்..."நான் பத்து வயசில் வேலைபார்க்க வந்தேன்.எனக்கு சாப்பாடுபோட்டது,என் வீட்டக் கட்ட உதவி செய்ய்தது,பிள்ளைகளை படிக்க வச்சது,கல்யாணம் கட்டிக் கொடுக்கவச்சது எல்லாமே அம்பாஸ்டர் கார் வேலைதான்"....என்றார்.

"இனி அது புதுசா வரவே செய்யாதா? ?...." என்று அப்பாவியாக ஏக்கத்துடன் மீண்டும் கேட்டார். "அண்ணாச்சி....உங்கள மாதிரி வேலை தெரிஞ்ச ஆட்கள் இருக்கும் வரை அம்பாஸ்டர் திருனவேலியில ஓடிக்கொண்டு இருக்கும்" என்றேன்.

சைலப்பன் அண்ணாச்சி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அவர் கண்களுக்கு கீழே ஸ்பானரோடு ஒட்டிக கொண்டு இருந்த  கருப்புஆயில் பசை அவர்  முகத்தில் ஒட்டிக கொண்டது...

வழக்கமா....கலகலப்பாக என்னிடம் பேசிக் கொண்டே வேலைகள் செய்யும் சைலப்பன் அண்ணாச்சி....நான் புறப்படுகிறவரை ஒண்ணுமே பேசவில்லை...

அம்பாஸ்டர் கார் கம்பெனியின் மூடல் அவரை அவ்வளவு பாதித்திருந்தது...

நான் ஒரு சைலப்பனைத்தானே பார்த்தேன்....நாட்டில் அம்பாஸடர் காரோடு காதல் கொண்ட எத்தனை சைலப்பன்களோ?
 
.....( இந்தியர்களோடு இணைந்து கடந்த 70 ஆண்டுகளாக பயணித்த அம்பாசிடர் காரின் சகாப்தம் முடிந்தது
இந்திய சாலைகளில் கடந்த 70 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த அம்பாசிடர் கார் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. அந்த காலத்தில் கார் என்றால் அது பணக்காரர்களின் அடையாளமாகவே இருந்தது இந்த கார். தற்போது விதமான,விதமான கார்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், மிக பழமையான அம்பாசிடர் காரின் மவுசு மெல்ல, மெல்ல குறைந்துவிட்டது. இன்னொரு பக்கம், அரசாங்க கார் என்ற பட்டப்பெயருடன் செல்ல பிள்ளையாக இருந்த அம்பாசிடர் காரை பல மாநில அரசுகளும் தற்போது கைவிட்டுவிட்டு சொகுசுகார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசிடர் கார் உற்பத்தி நேற்று முன் தினமும் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி அம்பாசிடர் கார் பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
'என்ன இருந்தாலும் அம்பாசிடர் கார் போல வருமா' என்று சொன்னவர்களின் நீங்களாக இருந்தால் அதன் நினைவை பகிர்க..என்ற முகநூல் செய்ய்தியைப் பார்த்ததும் என் மனதில் பட்டது....).
`