சனி, 9 பிப்ரவரி, 2013

அதிர்ச்சி அலைகள்

     
      உலகத்தில் குழந்தை பிறந்ததும் அழுகிறதே அது என்னவாம்? தாய்க்கு துன்பத்தின் வாசலில் இருந்து வெளியே வந்து விட்டோம்என்கிற தவிப்பின் முடிவைச் சொல்லவா ?; ஆகா... பிள்ளை பெத்தாச்சு.ஆணோ? இல்லை பெண்ணோ? என்று அறிகிற ஆவல் அந்தக்குரலில் இருந்து சில நிமிடங்களில் தெரிகிறதாலா? . வந்த குழந்தை உயிருடன் இருகிறதா? அந்தக் குழந்தையால் பேச முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகளுக்கு பதிலே  அழுகுரல் தான் என்று  பலரும் நம்பிக் கொண்டிருக்கும் போது ,மருத்துவம் மட்டும் வேறு வித மாகச் சொல்லுகிறது, நீங்கள் நினைப்பது தவறு என்று. 

ஒரு பத்து மாசம் தாயின் வயிற்றில் அங்கும் இங்கும் அசஞ்சிக் கொண்டும்,தொப்புள் கொடி மூலம் உயிரை வளர்த்த, குழந்தை பூமியில் வெளி வந்து  பிரான வாயுவை உள்ளே இழுத்து வெளியே விட முதல் முயற்சியே அதிர்ச்சியில் தான் துவங்குகிறதாம். ஆக எல்லா மனுஷாட்களும் பூமியில் வந்ததும் முதன் முதலில் அடைவது அதிர்ச்சியே. என்று  இப்போ கண்டு பிடிச்சிருக்கான்.

மனுஷன் என்ன மனுஷன்? மத்த உயிர்களுக்கு   என்னவாம்? அதுகளுக்கும் இந்த அதிர்ச்சிதான்னு விஞ்ஞானம் சொல்லுது.

எல்லாத்திலும் தானே உசத்தி, என்று பேசுகிற மனிதன் சிந்தித்துப் பார்த்தால்  உண்மையிலே அற்பன் தான்..  நாலு காலும் ,ஒரு வாலும் கொண்ட மிருகங்கள் கூட, பிறந்து சில நிமிட நேரங்களில் தானே, எழுந்து தாய் மடி தேடி, முட்டி மோதி,அதன் பாலை அருந்தி வளர்கிறது. சில வகை மான்கள் பிறந்த  சில நிமிடங்களில்  சுமார் பதினைந்து கிலோ மீட்டர் வேகத்தில் கூட ஓட முடியும்ன்னு அனிமல் பிளாநெட் அறிஞர் ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆனா மனுஷன்?..... தீ சுடும்ன்னு தெரிகிற வரைக்கும் தாய் அல்லது பிறர் தான் அவனுக்கு பாலையும்,சோற்றையும்,மருந்து மாத்திரைகளையும் ஊட்டிவிட்டு.பீயைக் கழுவி, ஆடை அணிய வைத்து கடமையைச் செய்ய வேண்டியது உள்ளது. அவன் கீழே உட்கார மாசக்கணக்கும்,தவளவும் ,நடக்கவும் வருஷத்தை தாண்ட வேண்டுமே.இது தானே நிசம்.

அதிர்ச்சியிலே பிறக்கிற உயிரினம் சில அதிர்ச்சிகளில் உறைந்து போய்விடுகிறது. நாளைப் பொழுது விடியுமா? என்பது மனிதர்கள் கையிலும் ,வாழ நினைக்கிற விலங்குகள் கையிலும் இல்லை. அது எங்கோ இருந்து நம்மை ஆட்டிவைக்கிரவன் கைகளில் உள்ளது..தன்னை  விரட்டுகிற வேட்டை மிருகங்களின் வாயிலிருந்து  மிருகங்கள் தப்பிப் பிழைப்பது , தினம் தினம் செத்துப் பிழைப்பதுக்கு சமம்.  மனுஷன் மட்டும் கொஞ்சம் வித்யாசம்.

நான் தத்துவம் எல்லாம் படிக்க வில்லை.சித்தர் பாடல்களும் பட்டினத்தார் பாடல்களும் கூட ரொம்பம்பத் தெரியாதவன் என்பதை மிக அடக்கத்தோடு சொல்லக் கடமைப் பட்டவன்.

தடுப்பு ஊசியும் காச்சல் வந்து போடும்போது ஊசியும் குழந்தைகளுக்கு நாம் தருகின்ற முதல் புற வலியாகக் கூட இருக்கலாம்.தட்டுத் தடுமாறி கீழே விழுவதை இதில் சேர்க்கக் கூடாது.

பள்ளிக்கூடத்தில் சேர இப்பவெல்லாம் சின்னஞ் சிறு பச்சை மழலைகளுக்கு பரீட்சை வைக்கிறாங்களே .அது முடிஞ்சு சில பிள்ளைகள் தங்கள் பேர் இல்லைன்னு  பார்த்துட்டு மனம் கலங்குகிற அதிர்ச்சியை பார்த்து நான் பலமுறை கலங்கிப் போய் அழுதுள்ளேன்.

வழக்கமா என் குழந்தைகளுக்கு நான் சென்றது ஆரம்ப.உயர் நிலை,மேல்நிலை,அளவில் மூன்று முறை இருக்கலாம். ஆனால் ஊரில் பல தரப்பு பிள்ளைகள் பலர் வருகிறார்களே, அவர்களை அழைத்துக் கொண்டு நான் வருடம் தோறும் சென்று வருகிறேன். அது துவக்க,உயர்நிலை,மேல்நிலை,கல்லூரி அளவில் உள்ளது..

சில பள்ளிக் கூடங்களில் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் அறை முன்னே, கால்கடுக்க நின்று காரியம் சாதிக்க வேண்டும்.  சில வேளைகளில் வஞ்சப் புகழ்ச்சி அணியை  கையில் எடுக்கவேண்டியது வரும். “இது என்னுடைய சொந்தக்காரரின் பிள்ளை,இவன் என் மைத்துனன்,மருமகன்.தம்பி,என்று ஏதாவது சொல்லி அவனின்  பிள்ளை இது” என்று துவங்க வேண்டும்.

பெரும்பாலும் பலர் போய் முட்டி மோதி காரியம் நடக்காமல்  முத்திய நிலையில் சீட் இல்லை என்கிற நிலை வரும் போது தான் நண்பர்கள் என்னைத்தேடி வருவார்கள். பத்துக்கு எட்டு சேர்த்திடுவேன். அல்லது மற்ற  இடங்களில் சேர்த்து விடுவேன்.

அது வேற கதை.நான் சொல்ல வருவது வேற.

அதிர்ச்சிகள் தெரியாத அளவில் என்னை என் வாப்பும்மாவும்,தாயும்,மாமியும், தந்தையும் வளர்த்தார்கள். மிக மென்மையான மனதளவில் தான் வளர்ந்தேன்.

நீச்சல் தெரிந்தும்  தெரியாமலும் கத்துக் குட்டியாய் நம்ம ஆத்தில் நீந்திய போதுஆத்து வேகம் என்னை  இழுத்துச் சென்ற போது என் நண்பன் மைலக்காதர் தெரு அபுல் காசிம் கைபிடித்து இழுத்து அதிர்ச்சியில் இருந்து மீட்டான். அதை வீட்டில் சொல்லவே இல்லை.

சில நேரங்களில் மின்சாரக் கம்பிகள் தந்த அதிர்ச்சி.

சில பயணங்கள் தந்த விபத்துக்களின் அதிர்ச்சி....

.தேர்வுகள்,தேர்தல்களின்  முடிவுகள் தந்த அதிர்ச்சி....இவையெல்லாம் சர்வ சாதாரண நிகழ்வுகளாக இப்போ தெரிகிறது.

நள்ளிரவு நேரங்களில் அடிக்கும் போனின் மணியோசை கேட்டாலே பல நேரங்களில் எனக்கு பதட்டம்,அதிர்ச்சிதான்.....என்னவோ? ஏதோ?.....என்ற பதற்றத்துடன் தான் போனையே எடுக்கிறேன்

ஆனால் சில இறப்புக்கள் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்ல.அவை தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவே இல்லை.

ஆறாம் வகுப்புக்கு மேல் என்னை பாசத்தோடு வளர்த்த என் தந்தையுடன் உடன் பிறந்த தாத்தா (தமக்கை)  அன்னை ரபீக்கா அவர்களின் திடீர் மறைவு, என் தாயின் உடன் பிறந்த தங்கை, நினைவிழந்து மறைந்தது, இன்னொரு சாச்சி, புற்று நோயால் பாதிக்கப் பட்டு பொலிவிழந்து கொஞ்சம் கொஞ்சமாக இறந்தது.என்னை ஆளாக்கிய எங்க வாப்பா என்னை அழைத்து  "என்ன வாப்பா?"... என்று நான் கேட்டு பதில் சொல்ல முடியாமல் நிரந்தரமாக கண்மூடியது,.....என்னிடம் பாசமும் நேசமும், காட்டிய என் அப்பாம்மா, என் கைகளைப் பற்றியவாறு மௌத்தாய் போனது,......இவை எல்லாம் இன்று நினைத்தாலும் பதறி விடுகிறேன்.ஒவ்வொரு இறப்பும் வேதனை தான் ஆனால்,இவை எனக்கு அதிர்ச்சியை தந்தவை.தனிமையில் அழுதிருக்கிறேன்.

  என் பெரிய வாப்பாவின் மகன்,என்னை விட பதினைந்து வயது மூத்த, பெரிய காக்கா அப்துல்லா லெப்பை. அண்ணன் என்பதை விட பாசம் மிக்க நண்பன்னு அவரைச் சொல்லலாம்.அம்புட்டு பாசம் பிரியம்.

எனக்கு விவசாயத்தின் மீதும் .ஆடு,மாடு,பறவைகளின் மீதும் காதல் வரச்செய்தவரே அவர்தான். “லண்டனுக்கே போரதாக இருந்தாலும் எனக்கு மோட்டார் சைக்கிள் இருந்தால் போதும் போயிட்டு வந்திடுவேன்” ,என்பார்.

எப்பவும் நான் அவருடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.  ஒரு காலகட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் கத்தார் நாட்டில் அவருக்கு உதவியாக வேலைக்கு அழைக்க,ஏதோ ஒரு நினைப்பில், "சரி" என்று சொல்லிவிட்டார்..அவரைப் பிரிய யாருக்கும் எண்ணமில்லை.
மனசை ரொம்ப கல்லாக்கிவிட்டு கத்தார் நாட்டுக்கு சென்றார்."வரல்லை"ன்னு சொன்னா,அவரை அழைத்தவருக்கு பண நஷ்ட்டம் வந்திடுமேன்னு போனார்.
திருனவேலி ரயில் நிலையத்தில் வழிஅனுப்ப வந்த எங்களிடம் ,பிரியாவிடையில் அவர் அழுத அழுகை இன்னைக்கு நினைச்சாலும் வேதனை தரும்.அந்த நேரத்து மதராஸ் சென்ட்ரலில் வேறு வண்டி புடிச்சு ,அங்கிருந்து பாம்பே போய் கத்தர்நாட்டிலும் இறங்கிவிட்டார்.
இப்போ மாதிரி, ,நினைச்ச நேரமெல்லாம் போனில் பேசிக்க முடியாது.எப்பவாவது பெருநாளைக்கு அவர் பேசினாலே அதிசயம் தான்.ஆனால் கடிதப் போக்குவரத்து உண்டு.  ஒவ்வொரு கடிதத்திலும் “நல்லா படி” என்றே எழுதுவார்.  “உனக்கு என்ன வேண்டும் ? சொல்லு;அனுப்புகிறேன்” என்பார்.

எங்கள் இளமைக் காலத்தில் வால்வு ரேடியோ.,ரிக்கார்டு பிளேயர்,  டேப் ரிக்கார்டர்கள் ,  மற்றும் வால்க்மன் பிளேயர்கள் மீது  தான் ஆசை இருக்கும்.  நம்ம ஊரில் அப்போதெல்லாம் பழைய பாடல்கள் கேசட்டுகளாக கிடைப்பது பெரிய விஷயம். இசைத்தட்டுகள் மட்டுமே அதிகம் கிடைத்த காலம் அது.

 திருனவெலி ஜங்ஷன் பக்கம் போய் ரிக்கார்டிங் சென்டர்களில் கேசட்டில் பதிவு  செய்து வாங்கி வரவேண்டும். குறைந்தது பத்து நாட்கள் ஆகும்.

இதை அவரிடம் கடிதம் மூலம் சொன்ன போது "ப்பூ.....இவ்வளவு தானா? இங்கே தாராளமா...கிடைக்குதுப்பா உனக்கென்ன வேண்டும்?" என்று கேட்டு வாங்கி அனுப்புவார். அந்தக் காலத்தில் அது ஒரு பொக்கிஷமாகத் தெரியும்.
நான் எது கேட்டாலும்,ஊருக்கு வரும் யாரிடமாவது கொடுத்து அனுப்பிவைப்பார்.  அம்புட்டு  பிரியம் என் மீது.   நல்ல துணிமணிகள், கூலிங் கிளாஸ் கண்ணாடி, நய்லான் பனியன்கள்,வாசனை திரவியங்கள் அதில் இருக்கும்.
சாதாரணமாக அவர் கத்தார் நாட்டுக்கு போய்வரும் காலங்களில், ஊருக்கு வந்து விட்டால் ஒரே அமர்க்களம் தான்.வந்தவுடன், அவர்  வெளிநாடு போன நாளில் இருந்து ,குடும்பத்தில், ஊரில் நடந்த நிகழ்வுகளை விலா வாரியாக சொல்ல வேண்டும். எப்படியும் திண்ணையில் உட்கார்ந்து பேசி முடித்து தூங்கப் போக ராத்திரி நள்ளிரவு தாண்டி அதிகாலை ரண்டு மணியாவது ஆகிவிடும்.சபையே கலகலப்பு தான்.
 எங்க வாப்ப மாதிரி ஆட்கள் ,"இன்னும் தூங்கப் போகாமல் என்னல  இங்க உக்காந்து சலம்பிக்கிட்டு இருக்கியோல ?  என்னத்த விடிய விடிய   பேசிக்கிட்டு.இருக்கானுவோ ." அப்படீன்னு சப்தம் கொடுத்த பிறகு தான் மத்த காக்கா மார்க்களும் ,நான் உட்பட எல்லோரும் ஓட்டம் பிடிப்போம்.அதிலும் புகாரி காக்கா, எப்படித்தான் எங்க வாப்பா வருவதை மோப்பம் பிடிப்பானோ?... தெரியாது.முதல் ஆளாக அவன் தான்   நைசா நடையைக் கட்டுவான்.
 .கார்,மோட்டார் சைக்கிளில் சுற்றுவதும்,வயக் காட்டுக்கு போறதும், வீட்டில் நிற்கும் ஆடு, மாடுகளோடு பாசம் காட்டுவதும்,அதுகளை தினசரிக் குளிப்பாட்டி வயிறு நிறய தீவனம்,தண்ணீர் கொடுத்து அதன் மேனி அழகை ரசிப்பதும் அவரது அன்றாட பொழுது போக்கு.சில நேரங்களில் மாட்டு வண்டிப் பயணங்களும்  உண்டு.

“சந்தைக்கு வர்யாலே? நல்ல ஓட்டா மாடு வந்திருக்காம்.பாப்பமாலே? சிந்தி பசு கொண்டு வந்திருக்கானாம்ல...... புடிச்சா கொண்டு வந்திரலாம்ல”,இப்பிடி ஏதாச்சும் சொல்வார். இல்லன்னா  ஒரு மாசத்துக்கு தேவையான மீன் கருவாடு,குத்தை எதாச்சும் வாங்க சந்தைக்கு கூட்டிட்டு போயிருவார்.

குடும்ப மற்றும் விவசாயத்தின்  எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுச் செய்து விட்டு அவருக்கு   மீண்டும் கத்தார் நாட்டுக்கு திரும்ப லேசில் மனசு வராது.

பயண நாளும் வரும்.  அங்கே போக பெட்டி இதர சுமைகளோடு ஏர் போர்ட் வரையும் போவார்.  “சின்னாப்பா, ஒரு பதினைந்து நாள் கழிச்சிப் போறேன்” என்று, எங்க வாப்பாவிடம் போனில் சொல்லிவிட்டு,எங்க வாப்பா பதிலை கேட்காமல்,படார்ன்னு போனை வைத்துவிட்டு பாஸ் போர்ட் விசா பேப்பரோடு சிரித்த முகத்தோடு மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார். ஏன்னா எங்க வாப்பா தான் அவரை அதிகமாகக் கண்டிப்பார். செல்லம் கொடுப்பார்.அவருக்கு ஆதரவாகவும் இருப்பார்.எங்க பெரிய வாப்பா  ஒண்ணுமே சொல்ல மாட்டார்.

“சரி சரி விடுங்கலே”,இது மட்டும் தான் பெரிய வாப்பா அவர்கள்,காக்கா  விஷயத்தில்  அதிக பட்சமாக சொல்வது. அதை இன்று  நினைத்தால் கூட வேடிக்கையாக இருக்கும். 

இப்படி ஒரு பத்து முறையாவது இந்தக் கதை நடந்திருக்கும்.ஒரு முறை விசா முடியும் கடைசி நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து  புறப்பட்டார்.  நான் அவரை வழி  அனுப்பப் போய் இருந்தேன்.

உள்ளே நுழைய இன்னும் பத்து நிமிடம் தான் பாக்கி இருந்தது.  “காக்கா கத்தார் நாட்டு விமானப் பயணிகளுக்கு கடைசி அறிவிப்பு கொடுக்கிறாங்க உள்ளே .போங்க..” என்றேன். 
"நீ கொஞ்சம் பொறுடா.....நான் போக இன்னும் எனக்கு மனசு வரலை" என்றார் மிகச் சாதாரணமாக..எனக்கு பகீர் என்றது .எமிகரேசன் கதவும் பூட்டியாச்சு.  அதைப் பார்த்து  வழக்கம் போல் ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தார்....
"ஏலே....வாலே ஊட்டுக்கு போலாம்."..
“என்ன காக்கா சொல்லுறிய?.... ஊட்டுல கேட்டா என்ன சொல்ல ?”

“என் விசா முடிஞ்சு போச்சு...வேற விசாலதான் போலாம்ன்னு ஏர் போட்டுல சொல்லி நிப்பாட்டிட்டான்னு சொல்லுல....வேற எதையாவது சொல்லி மாட்டிவிட மாட்டேல்ல”....இப்படி சொல்லிக் கொண்டே கார் நிக்கும் இடத்துக்கு கூட்டிவந்துட்டார். புறப்புடுப்பா.....”

“எங்கே?”  

“நம்ம ஊருக்குத்தான்”.... என்று ரொம்ப சந்தோஷமா சொன்னார்.

“ஊரில் கேட்டால் என்ன சொல்ல?” மீண்டும் கேட்டேன்.

“விசா முடிஞ்சு போச்சுன்னு சொல்லு....”  "நீ சொன்னா நம்ம வீட்டில் எல்லாரும் நம்பிக்குவாங்க".
நான் ரொம்ப யோசித்துக் கொண்டிருந்தேன். சரி,சரி வா ஊட்டுல போய் சமாளிச்சுக்கல்லாம்.
வீட்டுக்குப் போனால் அவரை விட எனக்குத்தான் "வரவேற்பு" கிடைக்கும்.சரி பார்த்த்கிடுவோம்ன்னு ஊருக்கு வந்தோம். வீட்டுக்குள் நுழையும் போது அப்போதான் அரபு நாட்டில் இருந்து ஊர் வந்தவரைபோல் முகமலர்ச்சியுடன் வந்தார் .

அடுத்து .....என்ன நடக்கும்?.....வீட்டில் விசாரணை .....முடியும். கொஞ்ச நாட்கள் கழித்து வேறு ஒரு விசா வந்து மீண்டும் புறப்பட்டுப் போவார்.
"என்னலே அரபு நாடு ..போதும்டா....."
ரொம்ப காலம் கத்தார் நாட்டில் வேலை பார்த்துட்டு “இனி அங்க எனக்கென்ன வேலை?”போதும்ப்பான்னு ஊர் வந்து விட்டார்.எங் ளுக்கெல்லாம் மகா சந்தோசம் .
அடுத்து  என்ன? வழக்கம்போல் சந்தை,தோட்டம்,வயக்காடு, ஆடு மாடு,மோட்டார் சைக்கிள்,கார்,மாட்டுவண்டி...மாமூல் நிலைமை தான்.
"என்னடா இங்க வண்டி ஓடுது? அங்க அரபு நாட்டு அரபி பையங் கள் யமகா,ஹோண்டா,சுசூகி,கவாசாக்கின்னு மோட்டார் சைக்கிள் ஒட்டுரானுவோ.நம்ம ஊர்ல இப்ப தான் அது வருதாம். பேசாம இந்த ராஜ்தூத் மோட்டார் சைக்கிளையும்,லம்ப்ரீட்டா ஸ்கூட்டரையும் வித்துட்டு சுசூகி வாங்கிற வேண்டியது தான் .  சின்ன வாப்பா கிட்டையும்,பெரிய வாப்பட்டையும் யார் சொல்ல ?  நீ தான் சொல்லணும்" என்று சொல்லி முன்னே தள்ளிவிடுவார்.
எங்க பெரிய வாப்பா புத்தம் புதுசா ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை,அத வாங்கின களத்தில் இருந்தே அத புதுசு மாறாம வச்சிருந்தார்.எங்க வாப்பவிடமும் ,சின்ன வாப்பா விடமும் அதே மோட்டார் சைக்கிள்கள் இருந்தன..  
பிள்ளைகள் விரும்புகிறார்களே என்று நாங்கள் கேட்ட எல்லா ரக மோட்டார் சைக்கிளும் வாங்கித்தந்து சந்தோசப் பட்டார்கள்,
அந்த வாகனத்தைக் கொண்டு தான் விவசாயப் பணிகளுக்கும் மற்ற இடங்களுக்கும் போவோம்.
ஒரு முறை காலை வேளையில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரைப் பார்க்க அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டோம்.  கிராம அதிகாரி எங்கள் கிராமத்தில் இல்லை. கொஞ்ச தூரத்தில் உள்ள இடத்திற்கு போய் இருந்தார். காக்கா....கொஞ்சம் இருங்கோ நான் போய் அவரைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடன் தலையாரி தலையாரி ஒருவரை அழைத்து போய் விட்டேன்.
 கிராமத்துக்கு மீண்டும் திரும்ப  மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது.  "காக்கா,...... மதியம் என்ன சாப்பிட்டீங்க"ன்னு கேட்டேன்.
  அதற்க்கு அவர் ,கொஞ்சம் கூட கோபமோ,வருத்தமோ இல்லாமல்,
" காலையில் நீ கூப்பிட்டாயேன்னு வரும் போது   மணிபர்ஸ் எடுத்துவர மறந்துட்டேன். ஒன்னும் சாப்பிடல்லை.இப்போ தான் நம்ம உழவன வீட்டில் நான் பட்டினி கிடக்கேன்னு தெரிஞ்சு சிறு பயிறு அவிச்சித் தந்தாங்க .....அதைத் தின்னுட்டு ஒரு டீ அடிச்சிட்டு நிக்கேன்ன்னு சிரிச்சிக்கொண்டே சொன்னார்."
நான் திகச்சிப் போனேன் , என்ன இது இப்படி ஒரு தப்பு பண்ணிட்டோமே? ன்னு பதறிப் போய் விட்டேன்.
"காக்கா, தப்பா எடுத்துக் காதீங்க.அங்க போன இடத்தில் ரொம்ப லேட்டாகிட்டது. நீங்க சாப்பிடாம இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாம போயிடுச்சு"
அன்னையில் இருந்து யாரை நான் கிராமத்துக்கு அழைத்துச் சென்றாலும் சாப்பிட ஏற்பாடு பண்ணாமல் போனதே இல்லை.அவர் தந்த பாடம் அது.

நேருக்கு நேராக உள்ள எங்கள் இருவரின் வீடுகளிலும் கல் திண்ணைகள் இருக்கும்.அங்கிருந்து பார்த்தால்,பசுமையான வயக்காடுகளும், மேற்குத்தொடர்ச்சி மலையும்,அதன் தொடரும் தெரியும். அன்றைய தினத்தில் அவங்க  வீட்டுத் திண்ணையில் மாலை சுமார் ஐந்து மணி வாக்கில் அவர் உட்கார்ந்திருந்தார். என்னைப்  பார்த்ததும் கூப்பிட்டார்.

“இங்க வா....இன்னிக்கு பொளுகிற எங்கப் போப்போற?”....

“எங்கப் போகனும் சொல்லுங்க காக்கா”

“மோட்டார் சைக்கிள் எங்கே? எங்க சின்ன வாப்பாட்ட சொல்லிடு.வண்டியை நான் கேட்டேன்னு.ஜங்ஷனுக்கு போய் சப்பாத்தி குருமா சாப்பிடனும் போவம்மா?”

“சரி காக்கா.” போவோம்.

அது தான் காக்கா பேசிய கடைசி வாத்தைகள்.

நானும் அவரும் அடுத்து அடுத்து அமர்ந்திருந்தோம். நான் செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு திண்ணையில் கால்களை ஆட்டிக் கொண்டு அவருக்கு அடுத்து ஒரு சாண் தூரத்தில் இருந்தேன். அவரும் கால்களை ஆட்டிக் கொண்டு இருந்தார்.கொஞ்ச நேரம் அமைதி.  அப்போது தான் அது நடந்தது.

திடீரென மூஞ்சி குப்புற காக்கா நாலடி உயரத்தில் திண்ணையில் இருந்து கீழே விழுந்தார். நான் பதறிப் போய் தூக்கிப் பார்த்தேன். பேச்சும் இல்லை; மூச்சும் இல்லை.  நான் போட்ட சப்தம் எங்க தெரு பூராவும் எதிரொலித்தது.

அவரைக் காரில்  தூக்கிக் கொண்டு டாக்டர்.பிரேமச் சந்திரன் செல்வன் ஆஸ்பத்திரி போனோம்.வலி நெடுகும்  அவர் நெஞ்சத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டே வந்தேன். காதை வைத்தும் கேட்டேன்.  ஒரு சிறு துடிப்பும் கேட்க வில்லை.  டாக்டர் பார்த்து விட்டு கடுமையான மாரடைப்பு.  இறந்து விட்டார் என்றார்.
நான் துடித்த, துடிப்பும் அழுகையும் என் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை.

நான் அடைந்த அந்த அதிர்ச்சி இன்னும் என் நெஞ்சை விட்டுப் போகவே வில்லை.1999 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அவரது திடீர் இறப்பு தாங்க முடியாதது.

இந்த அதிர்ச்சியை தாண்டி இன்னொரு கொடுமையான அதிர்ச்சி. அதை இன்னும்  சொல்ல வேண்டியதுள்ளது.
(தொடர்ந்து பேசுவோம

செவ்வாய், 13 நவம்பர், 2012

லிப்ட்.லிப்ட்.லிப்ட்.


 
பூமியில் இப்பவெல்லாம்   மேலே ஏறுவதும் இறங்குவதும் ரொம்ப சர்வ சாதாரணம்.ஆகிவிட்டது.மலைகளின் உச்சிக்குப் போக ,ஓடு தளம்  இருந்தால் விமானங்கள் ஏறி இறங்கவும்,ஓடு தளமே இல்லாத இடங்களுக்கு போய்வர   ஹெலிகாப்டர்,வசதிகளும் வந்துவிட்டது சில இடங்களில் இரு மலைகளையும் இணைக்க விஞ்ச் போக்குவரத்து வசதிகளும் இருக்கிறது.
சாலை வசதி இருந்தால் கார்,ஜீப்,பேருந்து,லாரி,பஸ் ஏன் மோட்டார் பொருத்தப்பட்ட எந்த வாகனத்திலும் எந்த உயரத்துக்கும் செல்லலாம்,வரலாம்..ஊட்டி,டார்ஜிலிங் மாதிரி மலைகளில் செல்ல அற்புதமான இயற்கையை ரசித்து வர மலை ரயில் வசதியும் உண்டு..கால் வலிமை கொண்ட பயில்வான்கள் சைக்கிளில் கூட போகலாம்.
அதுக்கு முந்தி எல்லாம், ஒன்னு நடக்கணும்:இல்லன்னா கழுதை.குதிரை ,ஒட்டகம்,மாதிரி விலங்குகள் மேல் அமர்ந்து போயாகணும்.சில இடங்களுக்குகுறிப்பா மலை மீதுள்ள அடர்ந்த காடுகளுக்கு  யானையிலே தான் போக முடியும்.
ராஜா மார்கள் காலத்துல பல்லக்கு ஊர்கோலம்தான்.அது மேட்டுக்கோ, பள்ளத்துக்கோ .எதுவானாலும் உள்ளே இருக்கவனுக்கு கவலை இல்லை.சுமப்பவன் பாடு சொல்லி மாளாது.
எதுவும் வேண்டாம் நடராஜா சர்வீஸ் போதும் என்றால் வேறு வண்டி வாகனம் எதுவும் தேவைப்படாது.

இதெல்லாம் வூட்டுக்கு வெளியே தான் வசப்படும்.வீட்டுக்குள்ள ஒசக்கப் போக என்ன செய்ய.ஏணிப் படிகளில் ஏறி இறங்கி தானே ஆகணும்: ஒல்லிக்குச்சு பேர்வழிகள் எப்பிடியாவது ஏறி இறங்கிடுவார்கள்.கொஞ்சம் குண்டு மண்டுகளாக இருந்தால். மேல் மூச்சும்,கீழ மூச்சும் வாங்குமே என்ன செய்யன்னு தான் லிப்ட் என்கிற ஒன்ன கண்டு பிடிச்சானாம்.
ஏறி இறங்க ரொம்ப கஷ்டமா இருக்கேன்னு ரொம்ப நாளைக்கு முன்னால மைசூர் மகராஜா அரம்மனையிலே லிப்ட் வச்சாங்களாம். வட நாட்டு ராஜாக்களும்,ஜமீன்தார்களும் சும்மா இருப்பாங்களா?அவங்களும் வச்சாங்க.

.ரண்டு மூணு மாடி கட்டி வீடுள்ளவங்களும்.அடுக்கு மாடி வீட்டில் குடி இருப்பவங்களும் லிப்ட் இல்லைன்னா? ஏறி இறங்க நெனைச்சே பாக்க கஷ்டம தான்.இப்போ அதையும் தாண்டி எஸ்கலேட்டர் வரை வந்தாச்சு.
சின்ன வயசு ஆசாமிகளுக்கு எஸ்கலேட்டரில், லிப்டில் ஏறி இறங்க கொள்ளைப்பிர்யம் தான்.இதை திருனவேலிப்ப்பக்கம் ஆரெம்கேவி ,போத்தீஸ்.இப்போ ஆரா சில்க்,சென்னை சில்க் பக்கமெல்லாம் பாக்கலாம்.
சில ஆஸ்பத்திரிகளில் சிலதுங்க நோயாளிகளை கொண்டு செல்லுற லிப்ட்டில் ஏறி இறங்கினால் தான் ஆச்சுன்னு சண்டித்தனம் பண்ணுவதையும் பார்க்க முடியும்.

லிப்ட்டுன்னு ஒன்னு இருக்குங்கற கதையே  திருநெல்வேலியில் சென்ட்ரல் டாக்கீஸ்ல வச்ச போது தான் எங்க பக்கம் நம்பினார்கள். அங்கே தான் லிப்ட் அறிமுகம் ஆச்சு. “அது ஓடி நான் பாக்கவே இல்லை”ன்னு அண்ணன் சேக்கான் சொல்லும் போது சுவாரஸ்யமாய் இருக்கும்..
“என்னது லிப்ட் ஓடவா? அது எங்க ஓடப் போவுது?எங்கேயும் போகாமல் ஒரே இடத்துல நிக்கும்” "ஏறி இறங்க” ன்னு திருத்திச் சொல்லுங்கன்னு சீண்டுவான்  சர்புத்தீன்.

"பரணி ஓட்டல்ல லிப்ட் வச்சி கட்டிருக்கானாம்லே.போய் ஏறி  ஒரு ரவுண்ட் பாப்பமா"ன்னு நண்பர்கள் கேட்டிருக்காங்க..ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் கூட 1984 வரை லிப்ட் கிடையாது.இப்போ இதையெல்லாம் கணக்கே பாக்க முடியாது. லிப்ட் இல்லாத பெரிய கட்டடமே இல்லைங்கிற அளவுக்கு  போயாச்சு.
சரீ.....என்னடா லிப்ட் புராணம் பாட வந்துருக்கானேன்னு நினைச்சுட வேணாம். எல்லாம் அதுல?  படிச்ச பாடத்தத் தான் சொல்ல வந்தேன்.

லிப்டுக்குள்ள என்னைக்கு வகுப்பு யார் நடத்துனாங்க? போகும்போதும் வரும்போதும் இல்லையில்லை மேலே ஏறும்போதும் இறங்கும்போதும் பட்டது தான் எனக்குப் பாடம்.
அப்பவெல்லாம் மெட்ராஸ் என்கிற பேரால் சென்னை இருந்த போது எங்க மாமா எல்.கே.எம்.அவர்களோடு அந்த லிப்டுல போய் வந்திருக்கேன்.அப்புறம் சம்சுல் ஆலம் சட்டமன்ற உறுப்பினர் ஆன காலத்திலே உறுப்பினர் விடுதி லிப்ட்டில் ரொம்ப தைரியமா ஏறி இறங்கி இருக்கிறேன்.என்னா லேசாயிடுச்சுன்னு குஷிவந்து போகும்.

"பாத்துப்போப்பா; கரண்ட் இல்லன்னா உள்ள மாட்டிக்குவே.என்ன கூப்பாடு போட்டாலும் எவனும் வரமாட்டானுவோ”ன்னு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோதர் மைதீன் அவர்கள் மிரட்டல் குண்டு போட்ட நாள் முதலா,”நாம போய் வார வரை கரண்ட் போயிடக் கூடாது”ன்னு ரொம்ப வேண்டிக்கிட்டு தான் அதிலே ஏறுவேன்.இறங்குவேன். போய்ச் சேர வேண்டிய மாடிக்குப் போய்  லிப்ட் நிக்கிற வரை மனசெல்லாம் ஒரே பீதி மயம் தான்.காரணம் அங்கே இருந்த லிப்டுகளின் “முழிப்பு” அப்படி.

ஒரு முறை முஸ்லிம்லீக் தலைவர் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்களோடு கேரளா,மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உடன் சென்றிருந்தேன். கேரளா மாநிலத்தின் அலுவல்களுக்குப்பின்னர் கர்நாடக மாநிலத்தில் மங்களூர் நகரில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொள்ள வசதியாக அந்த ஊரில் “ஹோட்டல் விக்னேஷ்” என்கிற லாட்ஜில் தங்கி இருந்தோம்.

மாலை நேரத்து நிகழ்ச்சி.அதில் பங்கேற்க மறைந்த தலைவர் பனாத்வாலா,இப்போதைய மத்திய அமைச்சர் மற்றும் அகில இந்தியத் தலைவர் இ.அகமது சாஹிப்,உள்ளிட்ட தலைவர்கள் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்களின் வருகையை எதிர் பார்த்து தரைத்தளத்தில் காத்திருந்தார்கள். தலைவர் அவர்களோடு நான் ஐந்தாவது மாடியில் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வந்து லிப்ட் வருகையை  நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன்.
ஏழாவது மாடியில் நின்று கீழிறங்கிய லிப்ட்டின்  வாசல் திறந்த போது அதனுள் நெருக்கமாக ஒரு ஏழு எட்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
தலைவரிடம் “என்ன செய்ய”? என்று கேட்ட போது “போங்க தம்பி” என்று சொல்லி என்னை உள்ளே போக விட்டு, அந்த நெருக்கடியில் அவர்களும் நுழைந்து கொண்டார்கள். தரைத்தளத்திற்கு பட்டனை தட்டியதும் முன்னே பின்னே கேட்டறியாத சப்தத்துடன் வழக்கத்தை விட வேகமாக கீழ்நோக்கி லிப்ட் துரித கதியில் இறங்கியது.. முடிவில் தொம் என்ற சப்தத்துடன் லிப்ட் இறங்கிய வேகத்தில் தரையில் எதோ ஒன்றில் அது மோதி ஸ்பிரிங்குகள் நொறுங்குவது போல உணரமுடிந்தது.

சரி.....வெளியே போகலாம்: கதவுகள் திறக்கும் என்று காத்திருந்தால் அது அசஞ்சுக்கொடுக்க வில்லை. ஒவ்வொருவரா உள்ளே இருந்த அத்தனை பேர்களும் ஒவ்வொரு பாஷையில் கத்த ஆரம்பித்தார்கள். நான் பொதுவாக “ஓப்பன் தி டோர் “ என்று லிப்ட் கதவுகளை பலத்த சப்தத்துடன் தட்டிக்கொண்டே அபயக்குரல் எழுப்பினேன்.
நேரம் போய்க்கொண்டு இருந்தது.அத்தோடு தலைவரைப் பற்றிய கவலையும் வந்துவிட்டது.அவர்கள் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளவில்லை.கையில் இருந்த சிறிய நோட்டுப்புத்தகத்தால்  அவர்களின் முகத்தில் விசிறிக்கொண்டிருந்தேன்.கொஞ்சம்கூட காற்று இல்லை.
எல்லோருக்கும் வியர்க்க ஆரம்பித்தது.எனக்கு மூச்சுத்திணறல் வந்தது போல் உணரமுடிந்தது.வெளியே அகமது சாகிப் அவர்கள் “Samath Saap Don’t worry.Just wait,we are trying to broke the door.”என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“எப்போ உடைச்சி எப்போ வெளியே வர.”?என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே லிப்டுக்குள் பலர் மயக்கம் போடத்துவங்கி இருந்தார்கள். அடுத்து நாம் தான்.மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேத்தினேன்.மூச்சு முட்டியது. அய்யோ.........இப்படி மாட்டிக்கிட்டோமேன்னு கண்ணீர்விடும் அளவுக்கு வந்து விட்டேன்.

நேத்து  கள்ளிக்கோட்டையில். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ரயிலில் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி இறந்த வீரர்களின்,  வரலாறு கூறும்  மண்ணறைகளை திரூர் பள்ளிவாசலில் பார்த்து வந்ததெல்லாம் கண் முன் வந்து போனது.நான் ஆடிப்போய் விட்டேன்.
சட்டை பேன்ட் எல்லாம் வியர்வையில் நனைந்து விட்டது.இதில் ரொம்ப வேதனை என்னவென்றால் உள்ளே நுழையும் போதே ஒரு புன்னியவாளன்  கையில் சிகரேட்டோடு உள்ளே நுழைந்தது தான். கூட்ட நெடியில் சிகரெட் புகை வேறு.

ஒரு பத்து நிமிஷத்துக்கு பிறகு லிப்ட் கதவு உடைத்து திறக்கப்பட்டது. தரைத்தளத்தின் வாசல் உயரத்தை விட லிப்ட் ஒரு மூன்று அடி கீழே இறங்கி இருந்தது.ஒவ்வொருவரும் தாவி வெளியே வந்தார்கள். ஆனால் இதய நோயாளியான தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்கள் சலனமே இல்லாமல் வெளியே.வந்தார்.பதட்டமோ பயமோ அவர்முகத்தில் இல்லை.
“எனக்குத் தெரியும்.நாம் வெளியே வர எப்படியும் ஒரு பத்து நிமிஷமாவது ஆகும் என்பதை  மனதளவில் ஏற்றுக்கொண்டதனால்.நான் பயப்படவில்லை.ஆனால் நீங்கள் தான் ரொம்ப பயந்துவிட்டீர்கள்” என்றார்.
எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நீங்க ரொம்ப நாட்களாச்சு.

எனது நண்பர் பொறியாளர் ஜூடு அந்தோணி இருதயராஜ் பாளையங்கோட்டையில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றை கட்டி முடித்த நேரம். முக்கிய நண்பர்கள் அனைவரும்  பொறியாளர்களின் உதவியாளர்களாக பணி செய்தோம்.எல்லா பணிகளும்  முடிந்து லிப்ட் பொருத்தும் வேலையும் முடிந்தது.
“இந்த லிப்ட் எப்படிண்ணே மாட்டியிருக்கானுவோ? போய்ப் பார்த்தீங்களா?” என்று அங்கே மேலாளராக இருந்த நண்பன் சரவணன் கேட்டான்.
“பாப்பம்மா?” நான் கேட்டேன்.
“இந்த லிப்ட் ஆப்பரேட்டர் உள்ளே இருக்கும் போதே திடீர் திடீர்ன்னு லிப்ட் நிக்குதே.  அதை  அவம்தான் நிப்பாட்டுரானா? இல்லை அதுவா நிக்குதா?” இப்படி சரவணன் கேட்டதும் நான் உஷாராகத்தான் இருந்தேன்.
ஒரு ரண்டு மூணு நாள் கழிச்சு மேலே ஐந்தாவது தளத்தில் நின்ற நண்பர் ஜூடு அந்தோணியை பார்க்க அதே லிப்ட்டில் மேலே சென்ற போது மாட்டிக்கொண்டேன்.என்னவோ கையில் செல் போன் இருந்த புண்ணியத்தில் நான் போட்ட சப்தத்தில் லிப்ட் மெக்கானிக்கும் வந்து சேர வியர்த்து விதிர் விதித்து கீழே இறங்கினேன்.இது எனக்கு கிடைச்ச ரண்டாவது அனுபவம்.
கடந்த அக்டோபர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது.வழக்கம் போல் பெருநாளைக்கு முந்திய நாள் எனக்கு சட்டை, வேஷ்ட்டி,துண்டு எடுக்கப் போனேன்.என்னுடன் என் மனைவியும் என் மகள் ரபீகாவும்  வந்திருந்தார்கள்.
ஜவுளிகள் எடுத்து முடித்து இரவு சாப்பிட திருநெல்வேலி சந்திப்பு ஜானகிராம் சைவ ஹோட்டல் ஆறாவது மாடியில் உள்ள ரூப் கார்டன் அரங்கத்துக்கு போனோம். வழக்கம் போல மேலே போக லிப்ட் தான். அதற்குள்ளே ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் ஆப்பரேட்டராக இருந்தான்.எங்களோடு இன்னொரு குடும்பமும் மேலே ஏறி மூன்றாவது மாடியில் இறங்கிய பிறகு நாங்கள் இன்னும் மேலே மூன்று மாடிகள் போக சுவிட்ச்சை அழுத்தவும் லிப்ட் தூக்குவது தெரிந்தது. திடீரென மின்தடை.  லிப்ட் அந்தரத்தில் எதோ இருமாடிகளுக்கிடையில் நின்று விட்டதை  மட்டும் ஊகிக்க முடிந்தது.
உள்ளே கும்மிருட்டு.”பொறுங்க சார் ஜெனரேட்டரை இப்போ போட்டுருவாங்க”ஜெனரேட்டரை போட்ட பின்னர் லிப்டுக்குள் விளக்கு எரியத் துவங்கியது.ஆறாவது மாடி போக மீண்டும் சுவிச்சை அந்த ஆப்பரேட்டர் அழுத்தினான்.லிப்ட் மேலும் போகாமல் கீழும் இறங்காமல் அப்படியே நின்று அன்னா அசார் கதைக்கு வந்தது.. அந்த சுவிட்ச் போர்டில் எத்தனை  நம்பர்கள் உள்ளதோ அத்தனை பொத்தான்களையும் அந்த ஆள் அழுத்திய பிறகும் லிப்ட் அசஞ் சுக் கொடுக்காமல் அடம் பிடித்ததை கண்ட பிறகு தான்,ஆகா ....... இன்னைக்கு மாட்டிக்கிட்டோம் என்று உணரமுடிந்தது.
உள்ளே இருந்த போனில் அந்த லிப்ட் ஆப்பரேட்டர் யாரையோ அழைத்தான்.பத்து நிமிஷம் வரை ஆகியும் ஒன்னும் கதை நடக்கவில்லை.அவன் கையில் இருந்த போனை வாங்கி நானும் வெளியில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். “பொறுங்க சார்” என்றார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் மகள் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். நான் எனக்குள்ள கவலையை முகத்தில் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. என் மனைவியும் தன்னால் மூச்சு விட சிரமாய் உள்ளதாகச் சொல்லியதும் எனக்கும் அதே கோளாறு உள்ளதை உணர முடிந்தது.லிப்டுக்குள் பேன் ஓடிக்கொண்டிருந்தது.ஆனால் காற்று தான் கொஞ்சம் கூட வரவே இல்லை.உச்சகட்டமாக லிப்ட் ஆப்பரேட்டர் பையனும் “முழிக்க” ஆரம்பித்தான்.

இனி இவர்களை நம்பிப் பயன் இல்லை.தீ அணைக்கும் இலாக்காவை அழைத்து  விட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அதுக்குள் என்னவோ,ஏதோ  செய்து லிப்ட்டை  திறந்து விட்டார்கள்.வெளியே பார்த்தால் ஒரு சிறிய ஏணி இருந்தால் தான் இறங்கமுடியும் என்கிற உயரத்தில் லிப்ட் இரு மாடிகளுக்கிடையில் இருந்தது..
வெளியே பெரிய ஸ்டூல் ஒன்று போட்டார்கள் முதலாவதாக என் மகளை லிப்டின் தரையில் உட்கார்ந்து அதில் இறக்கிவிட்டேன். அப்போது தான் அவள் அழுகை நின்றது.இரண்டாவதாக என் மனைவியும் மூன்றாவதாக நானும் இறங்க கடைசியில் லிப்ட் ஆப்பரேட்டர் இறங்கினான். மூணு நாலு பேர் வந்து லிப்டை ஆராய்ச்சி செய்தார்கள்.
"அப்பாடி ....போதும் .....இனி லிப்ட்டில் ஏறவே மாட்டோம்” என்று அப்போதைக்கு, என் மனைவியும் மகளும் உறுதி எடுத்துக்கொண்டார்கள்.
சாப்பாடு எனக்கு இறங்கவே இல்லை.ஒரு மணி நேரம் போனது.கீழே “காருக்குப் போகணும். போலாமா”? நான் கேட்டதும் இந்த லிப்டுல தான் போகனுமா?என்றார்கள்.
“லிட்டில் மேல ஏறுவது தான் கஷ்டம்.தாராளமா கீழே இறங்கலாம்”னு கூட்டிவந்துட்டேன்.

ஆனாலும் “லிப்ட்பயந்திகள்”  எங்க வீட்டில் மேலும் இரண்டு பேர்கள் கூடிவிட்டார்கள்.

 

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரமலான் பயணம்


         எனக்குத் திருமணமான பொழுதில் வந்த முதல் நோன்புப்பெருநாள்.
அப்போதுநான் சென்னைக்கும் ஊருக்கும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தேன்.
         காரணம் பல்வேறு சிவில் கேஸ்கள் என்னை, என் குடும்பத்தை அலைக்களித்துக்கொண்டு இருந்த கடுமையான வேளை அது.

    ஒருத்தருக்கொருத்தர் கேஸ் நடத்தும் சாதாரண மனிதர்களுக்கே கோர்ட் உத்தியோகம் மோசமானதாக இருக்கும்.ஆனால் நானோ தமிழக அரசை, அதன் நிலச் சட்டத்தை எதிர்த்து என்னுடைய குடும்பத்து உறுப்பினர்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தேன்.
          சென்னை உயர் நீதி மன்றப் படிக்கட்டுகள் ஏறியதோடு, டெல்லி உச்ச நீதி மன்றம் வரையிலும் சென்றேன்.
      காலமும் பணமும் விரையமானது.நாட்டின் அருமையான சட்டங்கள் பல, அரசு அதிகாரிகளின் சோம்பேறித்தனத்தினால், அறியாமையினால் குடிமக்களுக்கு எப்படி எல்லாம் பாதகம் தரமுடியும் என்று, மற்றவர்களிடம் சொல்லிக் காட்ட,  என்னிடம் டாக்ட்டரெட் செய்யும் அளவுக்கு சங்கதிகள் இருக்கின்றன.

      திருமணமாகி பதினைந்தாம் நாளிலேயே கேஸ் நடத்த சென்னை வந்து விட்டேன்.என் தந்தையும் தாயும் .என்னை நம்பி வந்த மனைவியும் பலநேரம் இதனால் வருந்தி இருக்கிறார்கள்.கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.என்ன செய்வது? கேஸ் நடத்தாவிட்டால் இழப்புக்கள்  நிறைய வருமே..கடமை இருக்கிறதே. குடும்பத்து மற்ற பங்காளிகளும் நான் பார்த்துக்கொள்வேன் என்று இருந்து விட்டார்கள்.
     சென்னையில் பல நேரங்களில் பெரிய வக்கீலை பார்க்கவே முடியாது.கேஸ் கட்டும் கையுமாக ,சில வேளைகளில் புத்தகமும் கையுமாகவே இருப்பார்கள்.
         கத்துக்குட்டி ஜூனியர்கள் கைகளில் அப்பாவிக் கட்சிக் காரன் கிடைத்தால் தொலைந்தான்.நாம் ஒன்னு சொல்ல, அவர்கள் நமக்குத்தெரியாததை கோர்ட்டில் சொல்லுவார்கள்.
     நாம் கேட்காமலே வாய்தா வாங்கி இன்னொரு நாளுக்கு வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள்.
    "வர்ற வாய்தாவுக்கு நீர் வந்துரும்.வரும்போது மறக்காமே திருனவேலி அல்வா கொண்டாரும்வோய்."
"வாய்தா எப்போ?"
" வர்ற மூணாம் நாளைக்குத்தான்."
"சார் நான் ஊருக்குப் போக முடியாதே ?"
"இங்கேயே இரும்மையா" அழகாக பதில் தருவார்கள்.
  வேறு என்ன செய்ய சென்னையிலே இருப்பேன்.
இதற்கு மாற்றமாக சில நல்ல வக்கீல்களும் எனக்குக் கிடைத்தார்கள்.என்னைத் தமது  நண்பனாக,தம்பியாக, மகனாகப் பாவித்த நல்லவர்களும் இருந்தார்கள்.அவர்கள்தான் எனது கண்ணீரைத் துடைத்து கரை ஏறச் செய்தார்கள்.


பீஸ் என்று நான் கொடுத்த மிகச்சிறிய தொகையை மிகப் பெருந்தன்மையோடு  பெற்றுக் கொள்வார்கள்.
       அரிதான குணமுடைய அவர்களுக்கு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நெல்லை வழக்கறிஞர் தீன்அவர்கள், அவரதுசீனியர்அப்துல் வஹாப் அவர்கள், சென்னைகொடைஅரசு அவர்கள் ஆகியோரையும் சொல்லலாம்.

           கோர்ட்டுக்குப் போய்இன்னொரு நாளுக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டு "வாய்தா" வந்து விட்டால் எனக்கு வேறு வேலை  இருக்காது.
நேராக வாலஸ் கார்டன் போய்விடுவேன்.
        அங்கே தான் முதல் தெருவில் ,அப்போலோ மருத்துவ மனை பக்கம்,  மணிச்சுடர் நாளேடு மற்றும் முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களின் அலுவலகம்  இருந்தது.
       எனது குடும்ப "வழக்குப் போக்குவரத்தை" தலைவர் நன்கு அறிவார். 

அங்கே நான் சோர்வாகப் போய் அமர்ந்தால் "என்ன புது மாப்பிளை எப்படி இருக்கீங்க?" என்று அன்பு மொழி பேசி கலகலப்பாக்குவார். 

    பக்கத்தில் குளிர்ந்த மோர் இருக்கும் அதைப் பருகிடத் தருவார்.
      கொஞ்சநேரத்தில் தலைவர் வீட்டிலிருந்து மதிய சாப்பாடு வரும் அதைத் தலைவரும், நானும் இன்னும் வேறு யாராவது வந்தால் அவர்களும், பகிர்ந்தே சாப்பிட தலைவர் வற்புறுத்துவார்.எல்லோரும் உண்டுமுடிப்போம்.

    ரமலான் மாதம் வந்தது.அப்போதும் வாரக்கணக்கில் சென்னையில் தங்கவேண்டியதிருந்தது.இருபத்து எட்டாம் நாள் ஊருக்குப் புறப்பட ஆயத்த மானேன்.
      ரொம்ப சிரமப்பட்டு எக்மூரில் இருந்து புறப்படும் பஸ் ஒன்றில் பயணிக்க மேலப்பாளையம் பள்ளி காசிம் என்கிற குடும்ப நண்பர் பயணச்சீட்டு எடுத்து வைத்திருந்தார்.அந்த பஸ்சை விட்டால் மறுநாள் பஸ் எதிலும் இடமே இல்லை.சரி ஊருக்குப் போய் விடுவோம் என்று முடிவு செய்து விட்டு தலைவர் அப்துஸ் சமத் சாகிப் அவர்களிடம் பயணம் சொல்லப் போனேன்.

       அப்போது மாலை ஐந்து மணி இருக்கும் .தலைவர் தொழுது கொண்டிருந்தார்.தொழுகை முடிந்து சலாம் வாங்கியதும் நான் நிற்பதைப் பார்த்தார்.
      "என்னா.தம்பி ?என்ன சேதி "என்று அழகான மெல்லிய குரலில் கேட்டார்கள்.
"வாப்பா நான் ஊருக்குப் போகிறேன்"......
அவர்கள் எதோ ஒதிகொண்டிருந்தார்கள்.கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்.மீண்டும் ஊருக்குப் போவதைச் சொன்னேன்.
"நாளைக்குப் போலாம் தம்பி" என்று சொல்லிவிட்டு,தலைவர் .மீண்டும் தொழுகையைத் தொடர்ந்தார்கள்.




  "இங்க வந்தது தப்பாப் போச்சே,.....அடடா நம்ம ஊரில் ஒரு நாளைக்கு முன்னதாகவே நோன்பு வச்சாங்களே.அங்கே இன்னைக்கு இருபத்து ஒன்பது முடிஞ்சாச்சே..திடீர்ன்னு நாளைக்கு பெருநாள்ன்னு அறிவிச்சுட்டா என்ன செய்ய?.....நம்மள வாப்பா, உம்மா, மனைவி தேடுவாங்களே.இங்க வந்து பயணம் சொன்னது தப்பாப் போச்சே"ன்னு மனசுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன். 
     அங்கே மேனேஜராக இருக்கும் நெல்லை ஏர்வாடி மீராசாஹிப் அவர்களிடம் போனேன்."சாச்சா,தலைவர் எதுக்காக என்னை நாளைக்குப் போ ன்னு சொல்லுறாங்க?உங்களுக்கு ஏதாவது தெரியுமான்னு?"கேட்டேன்."
   "இன்னைக்கு எதோ இப்தார் பார்ட்டிக்கு போறதா தெரியுது.அதுக்கு உங்களைக் கூட்டிட்டு போறதா இருக்குமோ? என்னவோ?"ன்னு அவர் பட்டும் படாமலும் வழக்கம் போல் சொல்லி  முடித்தார்.
நான் என்ன செய்யன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்.
   "சாச்சா.நாளைக்கு நான் ஊரில் இருக்கணும்.எனக்கு தலை பெருநாள்.என்னை எங்க வீட்டில் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.தலைவர் கேட்டால் பஸ் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருப்ப தால் நான்  கிளம்பிட்டேன்னு    சொல்லி விடுங்கள்" என்று  வந்து விட்டேன்.

   அரக்க பறக்க ரூமை காலி செய்ய்துவிட்டு எக்மோர் ரயில் நிலையம் முன்பாக வந்து சேர்ந்தேன்.அந்த பஸ் எனக்காகவே காத்திருந்த மாதிரி தெரிந்தது.காரணம் நான் வண்டிக்குள் ஏறியதும் மற்ற பயணிகள்லாம் ஒரு பார்வை என்னைப் பார்த்த விதத்தில் நான் ஐந்து நிமிட லேட் என்பதைப் புரிந்து கொண்டேன்.
      பஸ் டிரைவருக்குப் பின்னால் இரணடாவது வரிசையில் சன்னலோரத்தில் என்னுடைய இருக்கை.   அதில் என்னை விட இளையவர் ஒருவர் இருந்தார்.'"அண்ணே எனக்கு வாமிட் வரும்னே .அதனாலே நான் ஜன்னலோரமா உங்க  சீட்ட்ல இருக்கேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க"எனறதும் அடுத்து உள்ள சீட்டில் அமர்ந்தேன்.

   என்னை அடுத்து நடை பாதை.அதற்கடுத்துள்ள சீட்டில் நெல்லை வழக்கறிஞர்முருகவேல் அவர்களும்,அவருக்கு அடுத்து ஊத்து மலை இளைய ஜமீன்தார் எஸ்.எம்.பாண்டியன் என்கிற சங்கர மருதப்ப பாண்டியன் அவர்களும்.இருந்தார்கள்.
    ஊத்துமலை ஜமீன் தாருக்கு எங்கள் குடும்பத்தையும், என் வாப்பாவையும்,என்னையும் நல்லா தெரியும்.அவருக்கு மோட்டார் சைக்கிள்கள் மேலே ரொம்பவும் காதலும் மோகமும் உண்டு.திருநெல்வேலி வட்டாரத்தில் பி.எஸ்.எ.மோட்டார் சைக்கிள் அவர் மட்டுமே வைத்திருந்தார்.

   திருனவேலி பக்கம் அப்போதெல்லாம்1970 களில்மோட்டார் சைக்கிள்களை அவர்மாதிரி ஆட்களும்,பண்ணையார்களும்,போலீஸ் இலாக்காவைச் சேர்ந்தவர்களும் .பெரிய வியாபாரிகளும் தான்  வைத்திருந்தார்கள்.
       அது அந்தஸ்த்தின் சின்னமாக பார்க்கப்பட்டது.அவர்கள் எல்லோரும் திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் தியாகராஜன் ஆட்டோ ஒர்க்ஸ்  பரமன் அண்ணாச்சி கடையில் ஒன்று கூடுவார்கள்.
      அங்கே எங்கள் குடும்பத்தில் இளையவரான எங்கள் வாப்பாவும் அவரின் அண்ணன் வைத்திருந்த ராஜ்டூட் மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வார்.அந்த மோட்டார் சைக்கிள்கள் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்தது.
      அந்தக் கடையில் த.பி.சொக்கலால் ராம் சேட் பீடி  முதலாளி, ஹரிராம் சேட் படம் இருக்கும்.அவர் தான் அந்த கடையை உருவாக்கியதாகச்சொல்லுவார்கள். எங்க வாப்பா சில நேரங்களில் என்னையும் மோட்டார் சைக்கிளில் அங்கே அழைத்துச் செல்வதுண்டு.அங்கே தான் ஊத்துமலை என்னை பல முறைப்பார்த்துள்ளார்.பாசமுறையில் கொஞ்சுவார். நான் வளர்ந்த பிறகும் போற வாற இடங்களில் கண்டால் விடமாட்டார். .
    "யோவ்... மருமகனே"என்று.தான் பெரும்பாலும் அழைப்பார்.திருநெல்வேலித் தமிழின் பாசம் அதில் இருக்கும்.
   "யோ....வ்வ்...எங்கய்யா  உன்ன ஊர்ல பாக்கவே முடியல்லே?என்னய்யா பண்ணிக்கிட்டுருக்கே?" என்று பார்த்த இடத்தில, பஸ்சில் என்னை விசாரித்துக்கொண்டார்.
    நான் ஒரு கேஸ் விஷயமா மெட்ராசுக்கு வந்ததை மட்டும் சொன்னேன்."ஒங்க அப்பா சுமையை நீர் சுமக்கீராக்கும் ".
    எங்க வாப்பா மற்றும் நில விபரங்கள் கேட்டு முடிக்கும் போது வண்டி தாம்பரத்தை நெருங்கி இருந்தது.
"யோவ்,மருமகனே,........... என்னைய்யா இது .அரை மணி நேரத்துல இந்த டிரைவர் இங்க வந்துட்டாநேய்யா?"
"ஆமாம் ராஜா".
அப்போதுதான் அந்த டிரைவர் பஸ் ஓட்டுகிற 'அழகை' கவனித்தேன்.மோசமான ட்ரைவிங் .மனசு என்னவோ போல் இருந்தது.
"வோய்....... இவன் நம்மள ஊர் கொண்டு சேப்பானாயா"?
"விழுப்புரத்துல பஸ் மாறிட வேண்டியது தான்யா"
இப்படி அவர் சொன்னதும் எனக்கு பக் என்று இருந்தது.

       பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ் விழுப்புரத்தில் ஒரு ஓட்டல முன்பாக  வந்து  நின்றது.சுற்றிலும் ஆம்பிளைகள் மூத்திர நெடியில் தங்களுடைய ;கட்டாயக் கடமையை'முடித்துக்கொண்டிருந்தார்கள் .

    மனசு என்னவோ போல் இருந்தது.வேற ஏதாவது பஸ்சில் மூணு டிக்கெட் கிடைக்குமான்னு, 'ஊத்து மலை' அக்கம் பக்கம் நின்ற பஸ்களில் விசாரித்தார்.எல்லாம் புல்.
    "பேசாம திருச்சி போய், வேற பஸ்ல போய் விட வேண்டியது தாங்கற" முடிவுக்கு வந்தோம்.விழுப்புரம் வரையிலும் ஒரு மாதிரியாக வந்த பஸ் அதைத் தாண்டியதும் இன்னும் வேகம் எடுத்தது.
      ஒரு கட்டத்தில்  டிரைவரை சப்தமாக எச்சரித்த ஊத்துமலை, வண்டி ஓட்டுகிற இடத்துக்கே போய் டிரைவரிடம் "எப்பா நீ ஓட்டுவது கொஞ்சமும் சரியில்லை.பாத்துப்போப்பா"என்றார். டிரைவர் எதையும் காதில் வாங்க வில்லை.
    எதிரே கண்கூசும் விளக்குகளோடு வரும் ஒவ்வொரு வாகனத்தையும் நாங்கள் பயணித்த வண்டி கடக்கும் வரை, அடிவயிறு ஒரு கலக்கு கலக்கி நின்றது..
     அந்த டிரைவர் யார் சொல்லியும் கேட்கவில்லை.நான் இருந்த இருக்கைக்கு அடுத்து இருந்த இரும்புத் தூணை பக்கவாட்டில் சேர்த்துப் பிடித்துக்கொண்டேன்.தூக்கம் வரவே இல்லை.என்றைக்கும் இல்லாத பீதியும் பயமும் அடிக்கடி வந்து போனது.

     திருச்சி வரப்போகிறது. அப்பாடி இறங்கிட வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு மேம்பாலத்தில் வண்டி ஏறியது. பின்னர் கடும் வேகத்தில் பஸ் இறங்கியது.எங்கள் கண் முன்னே, சைக்கிள் டயர் பொருத்திய தள்ளுவண்டியும், அதை ஒருவர் தள்ளிக் கொண்டு போவதும் தெரிந்தது.
  
     அடுத்த கணம் பஸ்சின் முன் கண்ணாடியில் தள்ளுவண்டிக்காரர் வந்து விழுவதும்,பஸ் டிரைவர் சடன்பிரேக் பிடித்ததும் தெரிய முடிந்தது.யாரும் எதிர் பாராத நேரத்தில், இறக்கத்தில் வேகமாக இறங்கிய பஸ் வலது புறமாகச் சாய்ந்தது.ஒரு ஆயிரம் வயலின் சப்தம் ஒரு சேரக் கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு
சப்தம் வந்தது.
      இடது கையை அந்த இரும்புத்தூனோடு சுற்றி வளைத்து வலது கையைச் சேர்த்து தலையோடு கட்டிக் கொண்டேன்.முதலில் ஒரு பல்டி அடித்த பஸ் மறுபடியும் உருண்டு பக்கத்தில் இருந்த பள்ளத்தில் பக்கவாட்டில் சரிந்தது.கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே புரியவில்லை.என்ன நடந்தது? என்று அங்கே இங்கே பார்க்கும் போதுதான், தலைக்கு மேலே பஸ்சின் வாசல் படி இருப்பது தெரிந்த்தது.
எனக்கு பக்க வாட்டில் இருந்தவருக்கு இடப்புறம் நான் கிடந்தேன்.என் காலுக்கு ஊடே வேறு இருவர் குப்புறக் கிடந்தார்கள்.எழ  முயற்சித்தேன்.முடியவில்லை.

"தம்பி எழுந்திரியுங்கள் என்று நான் என்பக்கத்து சீட் ஆளை எழுப்பும் போது தான் அவர் உயிருடன் இல்லை என்பது தெரிந்தது.
பாலத்தில் பஸ் முட் செடிகளின் மேல் கவிழ்ந்ததால் அதில் வலுவான ஒரு கிளை அந்த இளைஞரின் நெஞ்சுக்குள்ளே நுழைந்து தெரிந்தது.அவர் இருக்கும் இடம் நாம் இருக்க வேண்டிய இடம் அல்லவா,என்ற அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

எப்படி எழுவது? என்றே புரியவில்லை.ஒரு வழியாக சுதாரித்து தலைக்கு மேலே பார்த்தபோது ஊத்து மலையும்.வக்கீல் முருகவேல் அவர்களும் சீட்டுகளின் மேல் கால வைத்து ஏறி பஸ்சின் வாசல் படிப்பக்கம் நின்று கொண்டு, என்னைத் 'தம்பி' 'தம்பி' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு முன் சீட்டில் இருந்தவர்களும் பிழைக்கவில்லை.

நீ ஏறுகிறாயா?இல்லையா?பஸ் தீப்பிடிச்சுடும்.ஏறுய்யாஎன்று ஊத்து மலை உரத்தகுரலில் என்னை அழைத்தார்.
ஒருவழியாக சமாளித்து மேலே ஏற  எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.இதில் ஊத்து மலை எப்படி ஏறினார் என்று யோசிக்கும் போது தான் அவர் காடு மேடுகளில் வேட்டைக்குப் போன அனுபவம் கொண்டவர் என்பது நினைவில் வந்து போனது.
எங்கய்யா அவன்?நம்மள இப்படி இந்த கதிக்கு ஆக்கின டிரைவரைப் பிடிய்யாஎன்றார் மிடுக்கோடு.".


   பஸ் கவிழ்ந்ததும் ஓட்டம பிடித்தவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை என்றார்கள்.பஸ் விழுந்த இடத்தில் இருந்த S.K.எஜன்ஜீஸ் என்கிற பெட்ரோல் பல்க் காரர்களும் அதுக்கு பக்கத்தில் இருந்த ஒர்க் ஷாப் தொழிலாளிகளும் பஸ்சில் மாட்டிக்கொண்ட ஒவ்வொருவரின் உடைமைகளை எடுத்து வந்து கொடுத்தது வாழ் நாளில் மறக்க முடியாததது


   பின்னர் ஒருவழியாக திருச்சி பஸ் நிலையம் வந்து வேறு பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தோம்.அது தனிக்கதை.
ஊரில் கிழிந்த சட்டை பேண்டோடு பார்த்த என் வாப்பா அதிர்ச்சி ஆகிவிட்டார்.நடந்ததைச் சொன்னேன்.அழுதேவிட்டார்.