பக்கங்கள்

திங்கள், 23 செப்டம்பர், 2024

வரிச்சோறு

"வரி வைக்கனுமே "....
"அப்படியா.... ரொம்ப சந்தோசம்... வரி வச்சிடுவோம்". 
"எப்ப வைக்கனும்....
சொல்லுங்களேன், என்னைக்கு வைக்கலாம்? "....
" நீங்க ஊர்ல இருப்பியள்ள?
ஞாயித்துக் கிழமை சரியா இருக்குமா?.....
அன்னைக்கே ரசூலுல்லாஹ் கந்தூரி ஊர் வரி வச்சுக்கிடுவோம்" . 

எவர் ஊர் வரி தருகிறார்களோ அவங்க வீட்டு நல்லது பொல்லதுகளுக்குத் தான் ஊர்க்காரங்க போய் நின்னு நடத்துவாங்க. எங்க ஊர் பக்கம் எல்லாம் தனித்தனி தெருக்களைக் கூட ஊர் என்று சொல்வார்கள்.

இப்போ உள்ள இளைஞர்கள் சிலர்  சோத்துக்கு என்று வரி தர மாட்டோம் .....ஆனாலும் நல்லது நடக்கட்டும் என்று நன்கொடையாகவும் பல தெருக்களில் கொடுத்து விடுகிறார்கள். மகனுக்கு தெரியாமல் சாப்பாட்டை வாங்குகிற தாய், தந்தைமார்களும் உள்ளார்கள்.

எங்க இஸ்மாயில் பெத்தாப்பா சொல்லுவார், " வே.... பேரப்பிள்ளே ...இந்த வரியை வாங்கி சோறு மட்டுமாவே ஆக்குறோம்... இல்லவே ....
யாராவது செத்துப் போயிட்டா மய்யித்தை எடுக்க..... சில குடும்பங்கள்ள‌ கொடுக்க காசு இருக்காது... நாம ஒரு அரை மணி நேரம் பாக்கணும். அதுக்குள்ள தரலன்னா.... அதுக்குப் பொறவு மையத்து செலவுக்கு ....  ஊர் கணக்குல இருக்கிற பணத்தை எடுத்து மையத்துக்கு துணிமணி எடுக்கணும் .....குழி வெட்டனும் .....குழி வெட்டுறவனுக்கு உண்டான கூலியை நாமளே கொடுத்துடனும்.... அதுக்கெல்லாம் ஊர் வரி மிச்சம் வர தொகையை தான்வே வச்சிருக்கோம்.... உமக்கு புரியுதா?
எவராவது அசலூருக்  காரங்க வந்து சாப்பிட வழியில்லை,..... ஊர் போறதுக்கு காசு இல்ல என்று கேட்டாலும் ஊர் பண்டில இருந்து தான்வே.... கொடுக்கணும்.... சில வீட்ல குடும்பத்தில் பெரியவன் திடீர்னு செத்து போயிட்டான்னு வச்சுக்கோ... அந்தக் குடும்பத்து சாப்பாட்டு செலவுக்கு காசு இல்லன்னா, அதுவும் நாமதான்வே கொடுக்கணும்......தெரியுதாவே?" 
 என்று என்னுடைய சின்னஞ்சிறிய வயதில் சொல்லி இருக்கிறார். ஆக சோறாக்குறதுக்கு மட்டும் இந்த வரி இல்லை என்பதும் புரிந்து கொண்டேன்.... 

பலவகையான பஞ்சாயத்துக்கள் ஊர் வரி வைக்கிற கூட்டத்தில் தான் அரங்கத்துக்கு வரும். 

ஊரை விட்டு ஓடிப் போனவன்.... ஊருக்குத் தெரியாமல் தாலி கட்டியவன்..... இதற்கெல்லாம் அங்கீகாரம் கொடுப்பதற்கு பஞ்சாயத்துகளும் நடக்கும். ...

 பாகப்பிரிவினை.... பங்காளித் தகராறு..... பொதுச்சுவர் சண்டை..... கொடுக்கல் வாங்கல்.... இவையெல்லாம் தீர்த்து வைக்க , குடும்பப் பலத்தை.... செல்வாக்கை சில பேர்கள் காட்டுவதும் உண்டு. 
100 க்கு  99 சதவீதம் நேர்மையான தீர்ப்புகளே வழங்கப்படும்.

எங்க வாப்பா இருக்கிற வரை நானும் என் தம்பியும் ...."எதுக்கு வாப்பா இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் போறீங்க  "  ?......என்று குறை சொல்வோம். 

எங்கள் வாப்பா சொல்வார்...
 " நம்மள மாதிரி குடும்பத்து க்காரங்க சொல்றத மத்தவங்க கேட்பாங்கங்கிற நம்பிக்கையில தாங் கூப்பிடுறாங்க ......நாம போய் சொல்றோம். அதப் பல நேரங்கள்ள ஒத்துக்கிறாங்க ..... ஏத்துக்கிடும் போது எம்புட்டு நெறைவு மனசுக்கு வருமோ.... அத மாதிரி அவன் ஏத்துக்கிடாட்டாலும் மனசு ஒத்துக்கிடனும்.... நமக்கு என்ன யாரும் ஃபீசா தர்றப் போறாங்க?...
நமக்கு தெரிகிற நியாயத்தை சொல்லுறோம். அவ்வளவுதான். 
என்று என் தந்தை சொல்லுவார். 

என் தந்தை காலமானதற்குப் பிறகு இது மாதிரி ஜமாத் கூட்டங்களுக்கும்.... வரி வக்கிற கூட்டங்களுக்கும் அழைப்பார்கள் . 

நல்ல மாதிரியா எல்லாம் நடக்கட்டும்ங்கிற நம்பிக்கையோடு தான் போவோம். சில நேரங்களில் எடக்குமடக்கான கேள்விகளும் வரத்தான் செய்யும். அதையும் மனதில் வாங்கிக் கொண்டு தான் வந்துடுவோம். 

ஊர் ஜமாத் , பள்ளிவாசல் ஜமாத் பல இடங்களில் இருக்கும்.

யாருக்குக் கட்டுப்படுகிறானோ இல்லையோ ......ஊர் ஜமாத்துக்கு கட்டுப்பட்டே இருப்பான்.
ஜமாத்தை நம்பித் தான் அவர்களுடைய வீட்டில் வயதான தாயையும் ..... தகப்பனையும்.....மனைவி.... மக்களையும் .....பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிக்கையோடு வெளிநாடுகளிலே பலர்  வேலை செய்கிறார்கள். 

அவ்வாறு இருக்கும் இளைஞர்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஊருக்கு அனுப்பி.... இன்று தெருவுக்குத் தெரு பைத்துல் மால்கள் என்று சொல்லப்படும் வட்டி இல்லாத , பலன் எதிர்பார்க்காத கடன்கள் வழங்கும் சங்கங்கள் பலவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
 சில இடங்களில் மருத்துவச் செலவுவிற்கு ....படிப்புச் செலவிற்கு.... மாதம் தோறும் அரசு கொடுக்கும் பென்ஷன் போன்று வழங்குவதற்கு.... ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். 

பசியோடு யாரும் உறங்கக் கூடாது என்ற வைராக்கியத்தில் பசி தீர்க்கும் பணியிலும் மகத்தான உள்ளங்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

முன்னெல்லாம் பள்ளிவாசல் மோதியார் வந்து வீடு வீடாக  அழைப்பார்....
இப்ப அப்படி இல்ல. பள்ளிவாசல் மைக்ல சொன்னாலே போதும். 
ஊர் வரி வக்கிற போது தான்.... ஆறு மாசத்து ஆவலாதிகள் எல்லாம் வந்து போகும். 

அடுத்த வரி ஷாபி  இமாம் கந்தூரி வரிதான்... என்னைக்குடா வரி வைக்கிற கூட்டம் நடக்கும் என்று சிலர் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். 

ஊர்க் கணக்க வாசிங்க.... கேப்போம்...
அரிசி பருப்பு, காய்கறிகள் சாப்பாடு ஆக்குற பண்டாரிகள் கூலி உட்பட இம்புட்டுச் செலவு...

 இறந்து போனவங்க வீட்டுக்கு கேக்கும் டீயும் வாங்கி கொடுத்த செலவு..... கல்யாணப்பந்தல் போடுற வீட்டுக்காரன் கொடுத்த வரி பணம்.... அடுத்த தெரு பையன் மாப்பிள்ளை ஆக தெருவில் வருவதற்கு நிக்காஹ் பதிவுப் புத்தகம் கொடுக்கிற ஊர் வரிப்பணம்.... சுன்னத்து கல்யாணம் பண்ணுகிறவன் கொடுக்கிற பணம்..... நன்கொடையாக வந்த பணம் என்று வரவு இனம் காட்டும். 

பெரும்பாலும் ஊர் ஜமாத்களில் பணத் தாவாக்களே இருக்காது. பெருந்தன்மையோடு செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள். எவர் மீதும் எவருக்கும் நம்பிக்கை குறைபாடுகளே வராது. 
நபிகள் நாயகம் கி.பி. 570 ஆம் ஆண்டு சவுதி அரேபியா புனித மெக்கா நகரில் , ஒரு திங்கட்கிழமையில் ரபியுல் அவ்வல் என்கிற அரபி மாதத்தின் பனிரெண்டாம் நாளில் பிறந்தார்கள்.
தமது அருபத்தி மூன்றாம் வயதில் 633 ஆம் ஆண்டு மதினா நகரில் அவர்கள் மறைந்தார்கள்.... அவர்கள் இறந்ததும் அதே ரபியுல் அவ்வல் அரபி மாத 12 ஆம் நாளாகும். 

நபிகள் நாயகம் பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 என்று அறிவித்தே பல இடங்களில் மீலாதுப் பெருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 
சில இடங்களில் ரபியுல் அவ்வல்  12க்குப் பின்னர் வருகின்ற திங்கள் கிழமை நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். 

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் சின்னஞ்சிறிய ஊர்களிலும் பேரூர் களிலும் நபிகள் நாயகத்தின் பெயரால் அனைத்து மக்களும் நல்ல உணவு உண்ண வேண்டும் என்பதற்காகவே ஊரில் பொதுவாக சமையல் செய்து வழங்கப்படுகின்றது.
1975 ஆம் ஆண்டு வரை பிரியாணி சாப்பாடு என்பது இஸ்லாமிய சமூகத்தின் உயர்த்தட்டு மக்கள் மட்டும் சாப்பிட்டு வந்ததாகும் என்பதைச் சொன்னால் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 பெரும்பான்மையான திருமணங்களில் வெண்சோறும் ஆட்டி இறைச்சியும் புளிப்பு சுவையுடன் கத்தரிக்காய் சாம்பாரும் வழங்கப்படும். 
மாப்பிள்ளையை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும் என்பதற்காக மறு வீடுகளில் தேங்காய் சோறு என்று தேங்காய் பாலில் நெய்ச் சோறு தயார் செய்வார்கள். 
இன்று தேங்காய் சோறு என்கின்ற முறையே மாறி நெய் தாளிச சோறு பல இடங்களில் வழங்கப்படுகிறது.
ஏழையும் பணக்காரனும் ஒரே வகையான சாப்பாட்டை சாப்பிடுகிற முறை உள்ளது .அத்துடன் பல இடங்களில் உணவு தயாரிப்பதற்கு அல்லது இறைச்சி அத்துடன் சேர்த்து வழங்குவதற்கு, கத்திரிக்காய் சாம்பார் எங்க ஊரு பக்கம் கத்தரிக்காய் ஆணம் என்று சொல்வார்கள் அதையும்  வழங்குவதற்கு தாராளமாக நன்கொடை வழங்கக்கூடிய குடும்பத்தினரும் உள்ளார்கள். 
சில குடும்பங்களில் அந்த சாப்பாடு தயார் செய்வதற்குரிய அரிசியையும் வாங்கிக் கொடுப்பார்கள்.

இப்போதெல்லாம் தலைக்கட்டு வரி என்று யாரும் கொடுப்பதில்லை. கும்பா என்று சொல்லப்படும் ஒரு பாத்திரத்தின் அளவிலேயே வாங்குகிறார்கள். 

 திருமணத்தின் போது சில வீடுகளில் ஏழு அல்லது ஒன்பது சாமான்கள் கொடுப்பார்கள். இரண்டு செப்பு க் குடங்கள், ஒரு தவலைப் பானை, ஒரு அரிசிக் கட்டி, ஒரு சொம்பு, ஒரு குழுவட்டு, ஒரு கும்பா... இத்தோடு ஜமுக்காளம் ,பாய் தலையணை, ஒன்று இரண்டு ஐந்து ஏழு பதினொன்னு என்று வாழைக்குலைகள் அனுப்புவார்கள். 
அதில் உள்ள கும்பா என்கின்ற பாத்திரம் பித்தளையால் ஆனது. ஒரு காலத்தில் கும்பா நிறைய சம்பா சாப்பாட்டை ஒரு நபர் சாப்பிட முடியுமாம். இரண்டு கும்பா சாப்பாடு இருந்தால் ஒரு தலைக்கட்டு என்று சொல்வார்கள். ஒரு குழந்தை மேல அதிகமாக இருந்தால் ஒன்னறை தலைக் கட்டு என்று வரி வாங்குவார்கள். இப்போதுள்ள உணவுப் பழக்க வழக்கத்தில் ஒரு கும்பா சாப்பாட்டை இரண்டு அல்லது இரண்டரை பேர் சாப்பிட முடியும். 
அந்த அளவுக்கு வயிறு சுருங்கி போய்விட்டதோ தெரியவில்லை. 

ஆகவே தெருவில் வினியோகிக்கப்படும் ஊர் வரிச் சாப்பாட்டிற்கு ஒரு கும்பா 130 140 150 என்று நிர்ணயம் செய்து வாங்குகிறார்கள்.
ஊர் சமூகத்தை நம்பி வாழ்கின்ற சிகை அலங்காரம் செய்வோர், துணிமணிகளை துவைத்துக் கொடுப்போர்,  இன்று அயர்ன் செய்து கொடுப்போர்.... தெருவில் தூய்மைப் பணி செய்யக்கூடிய துப்புரவு பணியாளர்கள் என்று உள்ளோருக்கு இலவசமாகவே வழங்குவார்கள். 
இந்த வரிச் சாப்பாட்டின் பெருமை என்னவென்றால் முஸ்லிம் சமூக மக்களோடு இணைந்து வாழக்கூடிய சகோதர இந்து சமுதாய பெருமக்களும் ஒரு கும்பாவிற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு கொடுத்து.... ஜமாத்துகளிடம் அவர்கள் உண்ணும் அதே சாப்பாட்டை தம்முடைய குடும்பத்துக்கும் பெற்றுக் கொள்வது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக