1.1.1941
புதன் கிழமை...
அன்று .....மதிய வேளை லுகர் தொழுகைக்கு இன்னும் ஒரு மணி நேரமே
இருந்தது......
மேலப்பாளையம் ஊரிலிருந்து தெற்கே .....திருநெல்வேலி-திருவாங்கூர் (திருவனந்தபுரம்) சாலையின் மேல்புறம் .....ஜோதிபுரம்.என்கிற சிறிய குடியிருப்பு.... இப்போதைய
டக்கரம்மாள்புரத்திற்கு, தென்புறம்...ரோட்டை ஒட்டி .உள்ள புலவர் செய்யது அகமது தரகனார்.பங்களா.....
கண்ணுக்கெட்டிய தூரம் வரை....நான்கு திசைகளிலும் பனை மற்றும் புளிய மரங்கள்.....பக்கத்தில்
தண்ணீர் தேங்கி நிற்கும் சிறிய அளவிலான குளங்கள்.... மட்டுமே..
பெயர் தெரியாத மரங்கள் .....அங்கே தாராளமாக குட்டிகளோடு நரிகள் நடமாடுகின்ற
புதர்கள்.....பொழுது சாய்ந்து விட்டால் அவை எழுப்பும் ஊளைகள்...கேட்பவர்களுக்கு
ஒரு மாதிரி பீதியினைக் கொடுக்கும்....
அதற்கு மத்தியில் முதலாளி குடியிருப்பு...
அங்கே மூக்கை துளைத்து வெளியே வருகிற..... பால் மாடுகளின் கொட்டகை வாசம்....
அதற்குப்பக்கத்தில் ......நெடு நெடுவென உயர்ந்த ‘ஒட்டாக் காளை மாடுகள்’...அவைகளை
வண்டியில் பூட்டினால் ...அதன் நோக்கால் மாடுகளின் கழுத்துகளில் தாங்கி இருக்க.....வில்
வண்டியோ பின் பக்க வாக்கில் சாய்ந்து
இருக்கும்...அந்த வகைக் காளைகள் ஜோடிகளாகக் கட்டப்பட்டு இருந்தன.
இருநூற்றுக்கும் அதிகமான வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ....மேய்ந்து
வந்து அந்த வீட்டை ஒட்டி ,அங்கே இருந்த உயரமான
பெரிய வேப்ப மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த பகல் பொழுது....
சர்ர்.....என்று பெரிய .....பெரிய கார்களில் மேலப்பாளையம் முதலாளிகள்
ஒவ்வொருவராக அந்த புலவர் வீட்டு பங்களாவில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தார்கள்...
சில முதலாளிகள் குதிரை வண்டிகளில் வந்து இறங்கினார்கள்....
அதே சாலையில் கொஞ்சம் வடக்கே இருந்த தோட்டத்திலிருந்து ஜமால் செய்யது
முகம்மது ஆலிம் அவர்கள் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் வந்து முதலாவதாக வந்து
இறங்க.....மற்றவர்களும் வந்து இறங்கத்தொடங்கி இருந்தார்கள்...
அவர்கள் அனைவரும் ..... அந்த பங்களாவின் முகப்பில் ஒரே வட்டமாக தரையில்
ஜமுக்காளத்தில் அமர்ந்து...பல கதைகளை சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்கள் ......
வயதால் கொஞ்சம் பெரியவர்கள்.... சுவற்றில் சாய்ந்து கொள்ள வசதியாய்....பலகைகளும் ,தலையணைகளும் அங்கே நிறையவே இருந்தன...
யாருக்கும் தெரியாமல் சுருட்டு பிடிக்க ....அல்லது புகைக்க..... கொஞ்சம் தள்ளி.... சில முதலாளிகள்
நின்று கொண்டார்கள்..அவர்கள் இருக்கும் இடத்தை ....மூக்கைத்துளைத்து வந்த சுருட்டு
வாடையே காட்டித்தந்தது....அவர்கள் ஆடைகளில் பூசியிருந்த அத்தர், ஜவ்வாது வாசனையை விட ....கொஞ்ச நேரத்திற்கு
முன்னர் புகைத்த ....சுருட்டு வாடையே முன்னே வந்தது.....அவர்கள் கொண்டு வந்த..... திருக்கு
செம்பிலிருந்து தண்ணீரை மொண்டு வாய் கொப்பளித்துக் கொண்டார்கள்...
தூரத்தில் ஒரு ஆஸ்டின் காரில் ‘கான்பகதூர்.’...டி.எஸ்.எம்.ஒ.உதுமான்
சாகிப் வந்து கொண்டு இருப்பது பங்களாவில் முன்னமே காத்து இருந்தவர்களுக்குத்
தெரிந்தது....
அதே காரைத் தொடர்ந்து.....ஒரு
பெரிய கெடிலாக் காரில்.....நேரு கோட் அணிந்து ....பாக்கட் வாட்ச் அந்த
சட்டைப்பையில் இருப்பதைக் காட்டும் ....வண்ணம் தங்க சங்கிலி இணைக்கப்பட்ட
கோலத்தில் துருக்கித்தொப்பி அழகில் பருத்தி சாகுல் ஹமீது-ஹனீபா சகோதரர்கள் வந்து
இறங்கினார்கள்..
அந்தக் காரை ஓட்டுவதற்கு என்றே....இலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட
அந்த சிவந்த நிறமுடைய ....மௌன்ட் பேட்டன் பிரபு போலத் தோற்றம் கொண்ட ......காரோட்டி
.....முதலில் காரை நிறுத்தி விட்டு, இறங்கி ....சடாரென பின் பக்க வாசல் அருகே
வந்து .....குனிந்து இடப் பக்கக் கதவைத் திறந்து விட்டான்...
அவர்கள் அந்த பங்களாவில் உள்ளே இருந்த அதே நேரத்தில்....காடுவெட்டி
கிராமத்திலிருந்து திருவாங்கூர் சாலையில் பயணித்து, .....எல்.கே.எஸ்.முகம்மது மீரா முகைதீன்
தரகனாரும் வந்து அந்த பங்களாவில் வந்து இறங்கிவிட்டார்....
தாம் வந்த கார் டிரைவரை..... காரோடு அனுப்பி....சமாயினா யூசுப்
லெப்பை....மூளி.கலந்தர் லெப்பை...மோத்தை மதார்...வ.சே.ஷேக் மன்சூர் முதலான
தோழர்களை.... ஊரில் போய் அழைத்து வரச்செய்து விட்டு உள்ளே நுழைந்தார்...
கலகலப்பான ..அந்த ...வருடத்தின் முதல் நாள் .....அந்த மதிய வேளை.... நண்பகலைத்
தொட்டது........லுகர் தொழுகை நடந்தது...ஜமால் செய்யது முகம்மது ஆலிம்...தொழுகையை
முடித்தார்கள்.....
ஒவ்வொரு முக்கிய நாட்களின் போதும் நண்பர்கள் முறை வைத்து ஒவ்வொருக்கொருவர்
விருந்து கொடுத்துக் கொள்வார்கள்....அன்றைய விருந்து புலவர் செய்யது அகமது ஏற்பாடு
செய்து இருந்தார்....
வித விதமான அசைவ வகைகள்.....அரிசி வகை பிரியாணிகள்
....வருத்தவை....பொறித்தவை....தேங்காய் மற்றும் எண்ணெய் சேர்த்தவை....சேர்க்காதவை... ஆக்கியவை
என்று பல வகைகளில் பரப்பி வைத்து ....விருந்தாளிகளை உண்ண அழைக்கிற நேரம்...
"முதலாளி....முதலாளி."......என்று ஒரு குரல்....
“ யாருப்பா....பழனிய்யாபிள்ளையா?....எல்.கே.எஸ்.வீட்டு கணக்குப்
பிள்ளை .... என்னய்யா அவசரம்.....இப்போ சோறு வைக்கிற நேரத்தில வந்து இருக்கே?.”....என்று வேகவேகமாக வந்து சைக்கிளில் இறங்கியவரை நோக்கி .....சமாயினா
யூசுப லெப்பை விசாரித்தார்;.
“ஆமாம்....முதலாளியை அவசரமா பார்க்கணும்..”....இளம் வயதினரான பழனியா
பிள்ளை முகத்தில் பதட்டம் தெரிந்தது....
மேலப்பாளையம் சமாயினா காதர் மீத்தீன் தெரு சமாயினா யூசுப் லெப்பை வயதில் கொஞ்சம் மூத்தவர்...பிரபல
வணிகரும் கூட.....யாரிடத்தும் முகத்திற்கு நேரே எதையும் சொல்லிவிடும் தகுதி பெற்று
இருந்தார்...ஊர் ஜமாஅத் பஞ்சாயத்துக்களில் .பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்புக்கள்
சொன்னவர்.
அத்தோடு.... தமிழில் செய்யுட் பாக்கள் எழுதும் அளவிற்கு பாண்டித்தியம்
கொண்டு இருந்தார்..அரங்கேற்றம் செய்யாமல் நீண்ட நாட்களாக இருந்த ரகுமான்
முனாஜாத்து அவர் எழுதியது தான்..
பழனியா பிள்ளையை திண்ணையில் உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று....“எல்.கே.எஸ்.முகம்மது முதலாளி.....உங்களைப் பார்க்க உங்க கணாபிள்ளை....வந்திருக்காம்.....என்னவோ
பதட்டமா இருக்காம்...என்னான்னு பாருங்கோ”....என்று எல்.கே.எஸ்.தரகனாரை
அழைத்தார்...
கணக்குப் பிள்ளையைப் பார்த்த மாத்திரத்திலேயே ....எதோ ஒரு பெரிய
பிரச்சினையா தான் இங்க வந்து இருக்காம் .....என்று நினைத்துக் கொண்டே
எல்.கே.எஸ்.தரகனார்,..... பழனியாபிள்ளை பக்கம் வந்தார்...
“என்னய்யா...விஷியம்?..”
“முதலாளி...கல்கத்தா வக்கீல் எக்ஸ்பிரஸ் தந்தி கொடுத்திருக்கார்...”என்றார்
பதட்டத்தோடு.
சாதாரணமான காலங்களிலேயே தந்தி என்று வந்தாலே....அது துக்கச்செய்தியைக்
கொண்டதாவே இருக்கும் என்பதில் ......முதலாளிமார்களும் நம்பிக்கை கொண்டு
இருந்தார்கள்....
தந்தியைக் கைகளில் வாங்கிப் பார்த்தபோது .....பத்துப் பதினைந்து
வரிகளோடு நீண்ட விபரங்களைச்சொல்லுவது போல இருந்தது....ஓரளவுக்கு படித்த பழனியாபிள்ளைக்கும்...”ஒன்னும் புரியவில்லை...”
பர்மாவில் ஒரு இங்க்லீஷ் கம்பெனிக்கும் எல்.கே,.எஸ்.தரகனார்கள் நடத்தி
வந்த வியாபார நிறுவனத்திற்கும், வியாபாரத்தின் டிரேடு மார்க் சம்பந்தமாக
கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருந்தது...
எல்.கே.எஸ்.கம்பெனி டிரேடு மார்க் ...அதாவது விமான சின்னம்...தங்கள்
கம்பெனிக்கு உரியது என்றும்... அதை அவர்கள் பயன் படுத்தியதால் தங்களுக்கு , லட்சக்
கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தி விட்டார்கள் ..ஆகவே சுமார் இவர்கள் மூன்று ஆண்டுகள் வருமான
கணக்கு காட்டிய தொகைகளை நஷ்ட ஈடாகத்தரவேண்டும்.... என்பது....அந்த இங்கிலாந்து
கம்பெனி தொடர்ந்த வழக்காகும்...
கிறிஸ்துமஸ் விடுமுறை நாளுக்கு முன்னர் வெளியான
....அந்த வழக்கின் கல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தான் அந்த நாளில் சுருக்கமாக
கல்கத்தா வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து எக்ஸ்பிரஸ் தந்தி மூலம்,ஊரில் இருந்த முதலாளிக்கு தெரிவித்து
இருந்தார்கள்....
அங்கே கூடி இருந்த.....மேலப்பாளையத்தின் செல்வச்சீமான்கள் யாருக்கும்
தந்தியில் கூறியிருந்த .... தீர்ப்பு விபரத்தை வாசித்துப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை...எல்.கே.எஸ்.மீரான்
தரகனாருக்கு ஏற்பட்ட பதட்டம் ....எல்லோருக்கும் வந்துவிட்டது...."வழக்கில் ஆங்கிலக்
கம்பெனி வெற்றி பெற்று விட்டால்...சுமார் மூன்று லட்சங்கள் வரை நஷ்ட்ட ஈடு தரவேண்டுமே....கொடுக்கவேண்டுமே...என்ன
செய்வது?."...என்று ஒரு இடத்தில் அமர்ந்து படபடத்துக் கொண்டு இருந்தார்...
"நீங்கள் எல்லோரும் சென்று.....சாப்பிடுங்கள்..ஆக்கி வைத்த சோறு வீணா
காத்திருக்கிறது".... என்று எல்.கே.எஸ்.தரகனார் சொல்லிப் பார்த்தார்...உடன் இருந்த
நண்பர்கள் யாரும் விலகிச்செல்லவில்லை...சுற்றிலும் சோகமயமாய் இருந்தது....
“நம்ம....மருமகப் பிள்ளைகளை உடனே கூப்பிட்டு வாங்களேன்”.....என்றார் எல்.கே.எஸ்.தரகனார்.
“ஆமா....அவங்க தான் இந்த தந்தியைப் பார்த்து ...விளக்கம் சொல்ல
முடியும்”எல்லோரும் ஏகோபித்து சொன்னார்கள்..."கூப்பிடுங்க அவங்களை"
.
யார் அந்த மருமகப்பிள்ளைகள்?
பர்மாவில் படித்து..... ஆங்கிலப் புலமை மிகக் கொண்டு வழக்கறிஞரான.... மேலப்பாளையத்தின்
முதல் பட்டதாரி கே.எம்.எஸ்.ஹமீது சாகிப்.....
இரண்டாவது மருமகப்பிள்ளை ...எல்.கே.எம். அப்துர் ரகுமான்.ஆவார்.
திருநெல்வேலி.ம.தி.தா.இந்துக் கல்லூரி
உயர்நிலைப்பள்ளியில் படித்து, அதே கல்லூரியில் தமிழ்ப்
புலமை மிகக்கொண்டு, அந்த வருடத்தில் பி.ஏ.பட்டம் படித்து முடித்து இருந்தார்...
பின்னர் அதே ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து பின்னர் வழக்கறிஞரான முதல் சுதேசி பட்டதாரி....
பின்னர் அதே ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து பின்னர் வழக்கறிஞரான முதல் சுதேசி பட்டதாரி....
எல்.கே.எஸ்.தரகனாருக்கு வக்கீல் ஹமீது சாகிப் சகோதரி மகன்
முறையாவார்....வக்கீல் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப் அவர்களோ மகளைக் கட்டிய மருமகன் ஆவார். ஆகவே
தான் அவர்கள் இருவரையும் நண்பர்கள் உள்ளிட்ட எல்லோரும் "மருமகப் பிள்ளைகள்" என்றே அழைத்தார்கள். தம்
மருமக்களாக எண்ணி மரியாதை தந்தார்கள்....
"மருமக்கள் எங்கே?" என்றே எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களில் மூத்தவர் பாபநாசம் மில்லுக்கும்,இளையவர் தூத்துக்குடி
மில்லுக்கும் புத்தாண்டு விருந்திற்குப் போயுள்ளார்கள் என்ற தகவல்
கிடைத்தது..."உடனே அவர்களை அழைத்து வாருங்கள்" என்றார்கள்...
கிழக்கு .....மேற்கு திசைகளில் அவர்களைக் கையோடு அழைத்து வர கார்கள் புறப்பட்டன.
அன்றைய காலத்தில் மேலப்பாளையம்
நகரில் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு மிகப் பெருமளவில் பருத்தி நூல் வாங்கும்
.....தரகனார்களின் குடும்பத்தில் இருந்து.... பிரதிநிதிகளை நூல் உற்பத்தி ஆலைகளுக்கு அழைத்து ...புத்தாண்டு அன்று பரிசுகள் தந்து ....விருந்தளித்து பாராட்டுவது என்பது ஆங்கிலக் கம்பெனி ஆலையாக இருந்த .....”ஹார்வி மில்”...(இன்றைய மதுரா
கோட்ஸ்) நிர்வாகம் கொள்கையாகக் கொண்டு இருந்தது...
மதியம் மூன்று மணியாகிவிட்டது....நண்பர்கள்
யாரும் உணவுண்ணவில்லை.....கவலைகள் கொண்டு
அமர்ந்து இருந்தார்கள்... எல்.கே.எஸ்.என்ன ஆவாரோ?...என்கிற கவலை அங்கே
எல்லோருக்கும் இருந்தது...
தூரத்தில் கார் ஹாரன் சப்தம்
கேட்டது....அந்தக் காரில் சிவந்த முகமும் அழகும்,வனப்பும்,விரிந்த மார்பும்,உடற்
பயிற்சியினால் கட்டுடலும் பெற்ற வழக்கறிஞர் ஹமீது சாகிப் வேகமாக வந்து
இறங்கினார்..
ஏற்கனவே அழைக்கச்சென்றவர்கள் தந்தி வந்த விபரங்கள் யாவையும்
அவர்களிடம் தெரிவித்து இருந்தார்கள்...
வந்த வேகத்தில்...சுற்றிலும் நண்பர்கள் புடைசூழ சோகமாக அமர்ந்து இருந்த எல்.கே.எஸ்.மீர முகைதீன்
தரகனார்...படபடப்போடு தந்தியை வக்கீல் ஹமீதுசாகிப் கைகளில் கொடுத்தார்....
வேகவேகமாக.......ஹமீது சாகிப் தந்தியை தனக்குள் படிக்கத்துவங்கினார்..
படித்து முடித்துவிட்டு அங்கே இருந்த நண்பர்கள் அனைவர் முகங்களையும்
ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்...
:”மாமா....இந்த தந்தியில் உள்ள தீர்ப்பு பற்றி...விளக்கம் சொன்னால்...எனக்கு
எவ்வளவு பீஸ் தருவீங்க?...”என்று கேட்டார்..
“நீங்க என்ன கேட்டாலும் தருவோம்” என்றார் எல்.கே.எஸ்.தரகனார்.
“சொல்லுங்க...சீக்கிரம் சொல்லுங்க...”என்றார்கள் சுற்றி இருந்த
முதலாளிகள்...
“நீங்க ஜெயிச்சிட்டீங்க.....மாமா...டிரேடு மார்க் கேசில நீங்க
ஜெயிச்சீட்டீங்க மாமா...”என்றார் வக்கீல் ஹமீது சாகிப்.
இந்த விளக்கத்தைக் கேட்ட மீரா முகைதீன் தரகானர் ...வக்கீல் சாகிப்பை கட்டிப்
பிடித்துத் தழுவிக் கொண்டார்....
அந்த நேரம் இளைய மருமகன் எல்.கே.எம்.அப்துர் ரகுமானும் வந்து
சேர்ந்துவிட்டார்...வக்கீல் ஹமீது சாகிப் நடந்த விபரங்கள் யாவையும் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப் அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்..
“தந்தியை வாசிக்கத் தெரியாமல் ......நமக்கு சாதகமா வந்த .......இந்த தீர்ப்பு தெரியாமலா....ஆக்கிவச்ச....சாப்பாட்டை தின்னாமல் இவ்வளவு நேரம் பசியோடு தவிச்சுக்கிட்டு இருந்தோம்? “
“கோடிக்கணக்கில் சொத்து இருக்கே....தந்தியை வாசித்து,ஆங்கிலத்தை புரிந்து கொள்ளத் தெரியல்லியே.... “என்று
முதலாளிகள் சொல்லிவிட்டு சாப்பிடத்துவங்கினார்கள்..
உண்டு முடித்து...மாலை நேர அசர் தொழுகை நடந்து முடிந்தது..
வக்கீல் ஹமீது சாகிப் எல்.கே.எம்.அப்துர் ரகுமான் சாகிப்பை தம் கைகளோடு பற்றிப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் போய் எதோ ஆலோசித்துவிட்டு....தீர்க்கமான முடிவு ஒன்றோடு .....அந்த பங்களாவின் பக்கம் வந்தார்.
“எல்லோரும் இங்கே வாங்க”....என்று...முன்னதாக அவர்கள்
இருந்த அந்த முன் பக்கத்திற்கு அழைத்தார்..
எல்லோரும் மகிழ்ச்சி பெருக்கோடு வந்து அமர்ந்தார்கள்..
“எனக்கு பீஸ் தரனுமே....எவ்வளோ தரப்போகிறீர்கள்?” வழக்கறிஞர் ஹமீது
சாகிப் கேட்டார்......எல்.கே.எம்.சிரித்துக் கொண்டார்.
“என்ன வேண்டுமானாலும் கேளுங்க... தரோம்...வீடுவாசல்கள் வேண்டுமா.?..நஞ்சை புஞ்சைகள் வேண்டுமா? எது
வேண்டும்?சொல்லுங்க.....” என்று கேட்டார்கள்..
“ஆமா.....எனக்கு நிலங்கள் வேண்டும் .அதுவும் டி.எஸ்.எம்.ஒ.உதுமான்
சாகிப் மற்றும் எல்.கே.எஸ்.முகம்மது மாமா....இருவரும் சேர்ந்து நிலங்கள் தரவேண்டும்...”என்றார்.
‘மருமகப்பிள்ளை ...நிலத்த வாங்கி என்ன பண்ணப் போறீங்க?
“ஆமாம்...எனக்கு ஒரு பேராசை உள்ளது..”
“பேராசையா?”......
“ஆமாம்.”
“கோடி....கோடியா...வசதி வாய்ப்பில் இருக்கிற உங்களுக்கு உலகக் கல்வி...
ஆங்கிலக் கல்வி தெரியல்லியே.....அந்த நிலைமை நம்ம சந்ததிக்கும் இருக்க
வேண்டுமா?....”
“இல்லை இல்லை....நாங்க தவியாத் தவிச்சுப் போய்ட்டோம்....என்ன
செய்யணும்ன்னு சொல்லுங்க....”
“அந்த நிலைமையை மாற்ற ....ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கணும்......அதுல
இங்க்லீஷ்....தமிழ்...அரபி....உருது ...ஹிந்துஸ்தானி லாம் சொல்லிக் கொடுக்கணும்...”
“பள்ளிக் கூடத்து பேர் என்ன?”
“ The Muslim
Higher Grade School”…
அப்படீன்னா? முஸ்லிம் உயர்தர பாடசாலைன்னு அர்த்தம்.....
(தொடரும்)
A unknown history of Muslim higher secondary school is explained as beautiful manner. Awesome.
பதிலளிநீக்கு