பக்கங்கள்

திங்கள், 26 ஜனவரி, 2015

தூக்கம் தழுவாத இரவுகள்.


திருநெல்வேலி மேலப்பாளையம். டாக்டர்...பிரேமச்சந்திரன்....எப்போதும் எல்லோரோடும் கலகலப்பாகப் பழகக் கூடியவர்....எங்கள் குடும்ப நண்ப ரும் கூட.


நான் அவரிடம் பலவிதமான சந்திப்புகளுக்காகச் செல்வதுண்டு....சில நேரங்களில், ஏழை எளிய மக்களின் மருத்துவ மற்றும் கல்வி உதவிகள் கேட்பதும் உண்டு...மனசு நிறைய உதவிகள் செய்வார்...

மத நல்லிணக்கம், இலக்கியம்,விளையாட்டு,ரோட்டரி,இசை அரங்குகள் ,தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவுகள் என்று டாக்டர் எப்போதும் பிசிதான்.....

ஒருநாள் .......அன்றைய தினத்தில் நான் சென்றது எனக்காக....
வழக்கமான நல விசாரிப்பிற்குப் பின்னர்...

“டாக்டர்.....ராத்திரி அல்லது அதிகாலை  வேளைகளில் திடும்.....திடும்..... என எனக்குத்  தூக்கம் கலைந்து போகுது....” என்று ஆரம்பித்தேன்.

“கரைக்ட்டா..... டைம் சொல்லுங்க....”

  சுமாரா 2-3 ….மணிக்கு...”

“ராத்திரிக்கு......நிறைய தண்ணி குடிப்பீங்களோ?......அதிகமா தண்ணி குடிச்சா முழிப்பு வந்து டாய்லெட் போக வச்சிடும்..அதான் கேட்டேன்.....”

“இல்லையே சார்..... எட்டு மணிக்குப்பிறகு நான் அதிகமா தண்ணி குடிப்பது இல்லையே......”

“அப்போ..... எதுவும் கவலையோடு தூங்கப்போவீங்களோ.?...”

“..கவலைகள் இல்லாமல் யார் சார் இருக்காங்க?..”

“அப்போ.... எதனால எப்படி முழிக்கீங்க?....காரணம் ஏதாவது தெரியுதா?..... “

“சார்......கொஞ்ச நாளா.....ரயில் சத்தம் கேட்டதும் முழிச்சிடுதேன்...எங்க வீட்டுப்பக்கத்தில், அது போற சத்தம் ரா வேளைகளில் கேட்குகும்...அப்ப எப்படித்தான் முழிப்பு வருதுன்னு தெரியல சார்.....”என்றேன்.

“அப்புறம்”...

 “முகமெல்லாம் வேர்க்குது....சார்.”

“தூக்கம் வருவது இல்லை....”

“அப்படியா.....நாளைக்கு வாங்க ....அதப் பத்தி உங்க கிட்ட நிறைய பேசனும்....”  என்று சொல்லி டாக்டர் அனுப்பி வைத்தார்....

மறுநாள் டாக்டரிடம் போனேன்...என்னை கடைசியா வரச்சொன்னார்...

நிறையக்கேட்டார்....

 " புதிய பறவை "  சினிமாப் படத்தில்  நடிகர்திலகம் சிவாஜிகணேசன் , அவரது காதலி ,   சரோஜாதேவி கிட்ட ரயில் தண்டவாளத்தைப் பார்த்ததும்....  பதட்டம் கொண்டு அதற்கு பின்னணிக் காரணம் சொல்வாரே ....அதுக்கு நிகரான ஒரு சம்பவத்தை டாக்டரிடம் சொன்னேன்....டாக்டர் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டார்....

அப்புறம் ”சொல்லுங்க...”என்றார்

"  அன்னைக்கு காலையில் வழக்கம் போல.... 7 மணியளவில் எங்க வீட்டு கல் திண்ணையில் தினசரி பேப்பர்கள் வந்துவிட்டது....., 
எங்க வாப்பாவோடு கூட இருந்து, அன்றைய தினசரி செய்தித்தாள்கள் படிக்கிற சொந்தக்காரர்கள் இரண்டு மூன்று பேர்கள் எப்போதும்... இருப்பார்கள்... 

என் தாயார் கொடுக்கும்  சாயவை குடித்துக் கொண்டே, முந்தினநாள்  ராத்திரி முதல், காலை வரை ஊரில் நடந்த பலகதைகளைச்  சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
பல வகை பஞ்சாயத்துகளும் எங்க வீட்டு வாசலுக்கு, திண்ணைகளுக்கு  வரும்......

ஒரு மணி நேரத்தில் எல்லாப்பிரச்சினைகளும் அந்த சபையில், “பைசல்” ஆகிடும்...

அந்த சமயத்தில்..... எங்க ஊரின், “பெரியாறு” தாமிரபரணியில் வருஷக்கணக்கில்..... ஒரே வேளையில் குளித்துவிட்டே மத்த சோலிகளை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்த , சேப்பிள.மம்மது மைதீன் படபடப்போடு அந்த சபையில் ஒன்றை சொல்லிக்கொண்டு இருந்தார்.... 

 வயதில் எங்க வாப்பாவுக்கு அவர் மூத்தவர்.....நல்ல குரல் வளம் கொண்டவர்....பாகவதர் பாடல்களைப்பாடுவதில் எங்க ஊரில் அவருக்கு தனிப்பெரும் பெயர் உண்டு....

அவர் எங்க வாப்பாவுக்கு ஒருவகையில் உறவுக்காரர்....அண்ணன் முறை...

நெசவுத்தொழிலில் தறிகளுக்கு நூல் போகும் முன்னே, அதை பாவாக ஆக்கிக் கொடுக்கும் வேலையை அவர் செய்து வந்தார். எம்.ஜி.ஆர்.நடித்து வெளிவந்த ‘படகோட்டி’ படம் வந்ததற்குப் பின்னர் பொதுவாக பாவோட்டும்  தொழில் செய்து வந்தவர்களை எங்கபக்கம், எங்க ஊர்க்காரர்கள்,  “பாவோடி” என்றே அழைக்க தொடங்கியிருந்தார்கள்....அந்தப்பெயரால் யாரும் அவரை  அழைத்தால் அவர் கோபம்  கொள்வது இல்லை.....மாறாக சிரித்துக் கொள்வார்...

கேலிகளும்,  கிண்டல்களும் அவர் கூடப் பொறந்தது..மாதிரி .மனுஷன் எப்போதும் கலகலப்பாகவே இருப்பார்...நிறைய வரலாறுகள் அவர் கிட்டயிருந்து என்னை  மாதிரி ஆட்களுக்குக் கிடைக்கும்.....

நான் அப்போதுதான் எங்கோ வெளியில் கிளம்ப மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து கொண்டு இருந்தேன்..படபடப்போடு அந்த திண்ணை சபையில் இருந்த மாமா சேப்பிள.லத்தீப்பிடம் கொஞ்சம் மெதுவா....அதே நேரம் படபடப்போடு ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்....

அதைக்கேட்டதும்.....லத்தீப் மாமா அதிர்ச்சி கொண்டவராக..... “உனக்கு வேற வேலையே இல்லையா..?...உன் சோலியப்பார்த்துக் கிட்டு போறியா....நமக்கு எதுக்கு இந்தப் பொல்லாப்பு?.”..என்று என்று சத்தம் குறைவா வார மாதிரி சொல்லிக்கொண்டார்....

எங்க வீட்டுத் திண்ணையைத்தாண்டி, கொஞ்ச எட்டு வச்ச பின்னர்...... ,என்ன நினைத்தாரோ.....மோட்டார் சைக்கிளை இயக்கி கியர் போடும் நிமிடத்தில் , இருந்த என்னை  நோக்கி வந்து “எப்பா....கொஞ்சம் கேளுடே”என்றார்.

அவர் என் பக்கம் வந்து காது கிட்ட ஒரு பகீர் செய்தியை சொல்லிவிட்டு என் முகத்தைப்பார்த்தார்....“என்ன பெரியாப்பா...,,என்ன சொல்றிய?..... நீங்க நேர்ல  பார்த்தீயளா... “என்றேன்...

“ஆமாம்...நான் ரண்டு கண்ணாலும் பார்த்தேன்”... என்றார்...

நான் அதிர்ச்சி அடைய..... அவர் சொன்னது கேட்டு எங்க வாப்பாவும் கைகளில் இருந்த காலைப்பத்திரிக்கையை கீழே வைத்துவிட்டார்கள்.....

கிட்ட இருந்த லத்தீப் மாமாவிடம்....”முதல்ல உன்கிட்ட வந்து பாவோடி காக்கா...ஏதோ சொன்னார்...அப்புறம் அவன் கிட்ட ஏதோ சொல்லுறாரே?.....என்னப்பா நடக்குது” என்றார்.....

“வேறு ஒன்னுமில்லைப்பா.....அவர் குளிக்கப்போகும்போது .....நம்மூர்ப் பெண் ஒன்னு ....வேகமா ஓடிப்போய் ரயில்ல விழுந்து செத்துடுச்சாம்....அதப் பார்த்துப் பேதலிச்சுபோய் நம்ம கிட்ட வந்து சொல்றார்...”ரயில்வே போலீஸ்ல யார் இதப் போய்ச்சொல்ல?” என்றார்....

மேலப்பாளையம் ஊரில் மோசமான நிலை இருந்த கால கட்டம்...அது.நமக்கு எதுக்குப் பொல்லாப்பு?  என்று போலிஸ் ஸ்டேசன் பக்கம் போகவே பயம் ஆட்கொண்டு இருந்த நேரம்...

“ஆப்புட்டவன் தொலைஞ்ஞான்”..... கதைதான்....ஒரு சில ஜமாஅத் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மட்டும் எது வந்தாலும் வரட்டும் சந்திப்போம் என்று போய் வந்தார்கள்..

“நம்மூர் பிள்ளைகள் இப்படியெல்லாம் செய்யாதுவோ.... பேசாமா.....போய் உங்க வேலயைப்பாருங்க......” இப்படி ஒரு தீர்ப்போட அந்த சபை அன்னைக்கு கலைந்தது....

மனசெல்லாம் கனத்து ...நான் செல்ல வேண்டிய வேலைகளுக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுப் போய்விட்டேன்...

மதியம் ...ஒரு மூணு மணி சுமாருக்கு வீட்டுக்கு சாப்பிட வந்தேன்.....சாப்பிட்டு முடிச்சு,கைகள் கழுவும் போது எங்க வீட்டின் பின் பகுதி மேகரையில்....ஆட்கள் நிறையபோவதைச்  சொல்லுகிற அளவில் நிறைய பேச்சுச் சத்தங்கள் கேட்டது....அதைப்பார்க்க கதவைத் திறந்தேன்.பத்து இருபது பேர்களாக ரயில் தண்டவாளம்  இருக்கிற மேற்கு திசை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.....

“நாமளும் போயிடனும்”..... என்று அந்தப்பகுதிக்குச்சென்றேன்.....என்னோடு என் உறவினர்கள் சிலரை கூட அழைத்துக் கொண்டேன்.

அய்யோ........பாவோடி பெரியாப்பா சொன்னது நெசம் தான்....அங்கே..... மூனு துண்டா....ஒரு பொண்ணு அலங்கோலமா....தண்டவாளத்தின் மேல்பக்கமும் கீழ் பக்கமும் கிடந்தாள்........அதைப்பார்த்து....நானும் கூடப்போனவங்களும் அதிர்ந்து  போய்விட்டோம்...

நான் போனதும்.....முதல் காரியமாக.....பிறந்த மேனியாகக் கிடந்த அந்தப்பெண் மீது அங்கே கிடந்த அவளது சேலையை எடுத்து எடுத்துப் போட்டேன்.....”

“..காலையில் இருந்து இவள் இப்படிகிடக்காளே.....யாராவது மூடக் கூடாதா?..”...என்று அங்கே நின்று வேடிக்கைப்பார்த்தவர்களிடம் கேட்டேன்... ஒருத்தரும் பதில் சொல்லக் காணோம்....

ஒரு மரத்தடியில் நான் செய்வதைப்  பார்த்துக் கொண்டு இருந்த ரயில்வே போலிஸ்காரர்....” சார்....சார்........ நீங்க யாரு?.... அங்க என்ன பண்ணுறீங்க?”.....என்று கேட்டார்.

....“ செத்துப் போனாலும் அந்தப்பெண் மானத்தைக் காபபாத்த நமக்கு கடமை இருக்குசார்....” என்றேன்.....அப்புறம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்...

அந்த போலிஸ்காரர் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார்.....

“சார்...... காலையில் இந்தப்பெண் ரயில்ல அடிபட்டதா...கேள்விப்பட்டோம்...யாரோ? எவரோ தெரியல்லியே....நாங்க என்ன சார் செய்யனும்?.....”நான் கேட்டேன்.

“தம்பி....இந்த ரயில்வே ஸ்டேசன் எல்லை....திருவனந்தபுரம் கோட்டம் பகுதியைச் சேர்ந்தது....போஸ்ட்-மார்ட்டத்துக்கு போகனும்ன்னா....சாயந்திரம் வருகிற நாகர்கோவில் பாசஞ்சரில் தூக்கிப்போட்டு நாகர் கோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்....அங்கே வந்து பாடியை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்....”என்று அவரது வழக்கப்படியான பதிலைச்சொன்னார்...

“அது முடிஞ்சு பாடியைக் கொடுக்க ரண்டு நாள் ஆகிடுமே....எங்க ஊருக்கு கிழக்கே...7 கிலோ மீட்டரில் உள்ள ஹைக்கிரவுண்ட் பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகனும்ன்னா என்ன செய்யணும்?”. என்று அங்கே கூடி நின்ற ரயில்வே போலிஸ்காரர்களிடம்  கேட்டேன்..

:”அப்படீன்னா...அம்புலன்ஸ் கொண்டு வாங்க...அதில் வேண்டுமானால் பாடிய , ஹைக்கிரவுண்ட் கொண்டு போங்க  ”என்று சொன்னார்கள்....

இன்னைக்கு இருக்கிற அம்புலன்ஸ் வசதிகள் எதுவும் அப்போது  அந்த நேரத்தில் மேலப்பாளையத்தில் இல்லை....குற்றுயிரும் குலைஉயிருமாக...
  ஆம்புலன்சுகள் ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் மட்டுமே இருந்தன....அதிலும் ஓட லாயக்கற்றவைகளாக வரிசையாக காட்சிப்பொருளாக ஆம்புலன்சுகள் ஆஸ்பத்திரி வாசலில் நிற்கும்...காட்சிகளை எப்போதும் பார்க்கலாம்..

என்ன செய்ய?.... என்று யோசித்து விட்டு அன்றைய முஸ்லிம் லீக் முன்னோடித் தலைவராக எங்க ஊரில் இருந்த செ.கா.மு.யூசுப் அவர்களைப் பார்த்து, காலையில் இருந்து நடந்த கதைகளைச்சொன்னேன்...பின்னர் அவர் அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரி சென்று பார்த்த போது அம்புலன்ஸ் எதுவுமே கிடைக்கவில்லை....”வேறு என்ன பண்ணப்பா..?...”என்று செ.கா.மு.கேட்டார்...

“சரி.....பக்கத்தில் தானே நம்ம அநாதை நிலையம் உள்ளது அங்கே போய் அதன் தலைவர், ஜமால் முஹம்மது முதலாளியிடம் சொல்வோம்” என்று சொன்னேன்..

“நல்ல யோசனைதான் ....வாப்பா...” என்றார்.

காலையில் இருந்து நடந்த கதைகள் அனைத்தையும் ஜமால் முகம்மது முதலாளியிடம் சொன்னேன்....” நீங்க போய் ஜங்ஷன் ஷிபா ஆஸ்பத்திரி ஷாபி அவர்களிடம்  சொல்லுங்கள்.....நானும் போனில் சொல்லுகிறேன்”.....என்றார்...

அங்கிருந்தே நேராக...... ஷிபா ஆஸ்பத்திரி முதலாளி ஷாபி அவர்களிடம் சென்றேன்...

“பிரதர்....ஜமால் முதலாளி பேசினாங்க....எங்க அம்புலன்ஸ் தருவதில் ஒன்னும் கஷ்ட்டம்  இல்லை....வேறு  ஒன்னும் பிரச்சினை.....ஏதும் இதில் வந்து விடக்கூடாது....பார்த்துக்கோங்க....”என்று ஷாபி சொன்னார்...

“ஒன்றும் இல்லை...காக்கா கவலைப்படாதீர்கள்........அது தற்கொலைதான் ....காவல்துறையின் உரிய  அனுமதி பெற்றுத்  தான் அந்தப்பெண்ணின் உடலை உங்கள் அம்புலன்ஸ் மூலம் ஹைக்கிரவுண்ட் ஆஸ்பத்திரி கொண்டு செல்லுகிறோம்”.... என்று நானும் செ.கா.மு.வும்.சொன்னோம்.

மிகச்சிரமப்பட்டு ஷிபா ஆஸ்பத்திரி அம்புலன்சை அந்தப்பெண் அடிபட்டுக்கிடந்த ரயில்வே ட்ராக் பக்கம் கொண்டு போய்விட்டோம்.... அம்புலன்சோடு மைலக்காதர் தெரு  தி.மு.க பிரமுகர் கி.மு.சாகுல் ஹமீதும் வந்தார்...இதையெல்லாம் இறந்து போன அந்தபெண்ணின்  உறவினர்கள் சிலர் அதை வேடிக்கைப்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.....கிட்ட வரவில்லை...

ரயில்வே  போலீசார்  விசாரணையின்  முடிவில்  தற்கொலைதான் அது என்று முடிவுக்கு வந்த பின்னர்...... அந்தப்பெண்ணின் உறவினர்களும் கொடுத்த வாக்குமூலமும் சரியாக ஒத்துப்போக அந்தப்பெண்ணின் உடலை எடுக்க அனுமதித்தார்கள்...

என்கூட வந்த எங்கள் உறவுக்கார இளைஞர்கள் அந்தப்பெண்ணின் கூறாய்ப்  போய்விட்ட உடலைத்  தைரியமாகத்தூக்கி எடுத்தார்கள்....நானும் அவளது உடலின் பாகம் ஒன்றைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தேன்...அதுவே எனது தூக்கத்தை பல இரவுகளில் தொலைக்க வைத்தது....

டாக்டர் அதற்கே மனோதத்துவ ரீதியில் பதில் சொன்னார்...



”நீங்க எதற்கு மனதுள் அதிர்ச்சி கொண்டீர்கள்?....நல்ல காரியம் தானே செய்தீர்கள்......மனதை எப்போதும் சீராக வைத்துக் கொள்ளுங்கள் ..அதையே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்..”.......என்றார்...

போர்க்களங்களில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி புரியும் சேவைகளைப்பற்றி...விளக்கி, என் ..மனதிற்கு ஆறுதல் சொன்னார்....

அதோட சரி....அப்புறம் அதற்குப்பின்னர்....எங்கள் வீட்டிலிருந்து ஆயிரம் அடி தூரத்தில் உள்ள ரயில் தண்டவாளங்கள்....அதிலிருந்து........இரவு நேரங்களில் எழும் ரயில்களின்  சப்தங்கள்   என் தூக்கத்தைக் கலைக்க வில்லை....நான் நள்ளிரவு நேரங்களில் கூட அந்தப்பாதையில் தனிமையில் கடக்கிறேன்....
முன்பு தூக்கத்தைக் கலைத்து......வேறு ஒன்றும் மனதில் வந்து போகவில்லை....நான் தூக்கிய உடலின் பாகம்....அதன் தோற்றம் எடை.....இவற்றைப்பற்றியது....

நான் தூக்கி ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்தது  .......ரயிலில் விழுந்து தற்கொலை செய்து.... இறந்து போன ....அவளின் துண்டு பட்ட தலையைத் தான் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக