பக்கங்கள்

வியாழன், 9 ஜனவரி, 2014

அன்பின் வலிகள் .....



இயற்கையும் அது சார்ந்த தொழிலிலும் இருக்கும்போது வரும் மகிழ்ச்சியும்,வருத்தமும் இயற்கையாகவே இருக்கும்.

இதென்ன புதுசா ஒரு தத்துவமுன்னு யாரும் கேக்க மாட்டாங்க... வயலில்,வரப்பில் நடக்கும் போது வேளாண் தொழில் இருப்பவர்கள் எறும்புக்கடிகளுக்கும், முள் குத்தல்களுக்கும் ஆளாவது என்பது, தினசரி நடக்கும் மாமூலானவிஷயங்கள் தான்.

அது தேள், நட்டுவாக்களி, பாம்புக்கடி என்பது அசாதாராணமானது...தேள்கடிக்கு மருத்துவம் செய்யாமல் மண்டையைப் போடுபவர்கள் கதை, கிராமங்களில் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படியெல்லாம் நடக்கும் என்பதற்காக யாரும் வயல், வரப்புகள் பக்கம் போகாமல் இருப்பதில்லை.
அண்மையில் குற்றாலம்,வைரம்ஸ் நகர், சீனாதானா விருந்தினர் இல்லம் பக்கம், ஒரு மாலை நேரத்தில் சர்வ சாதாரணமாக ஊர்ந்து வந்த மிகப் பெரிய மலைப்பாம்பை பார்த்துவிட்டு, “உதவி,.....ஓடிவாங்க,......பாம்பு.....  அப்படீன்னு வார்த்தைகள் கூட  வெளியே வராமல்,வேர்த்து விறுவிறுத்து,  விக்கித்துப் போன நண்பர் ஒருவரைப் பார்த்து நான் சிரித்த சிரிப்பால், அவர் இன்று வரை என்னோடு பேச்சே இல்லாமல் இருக்கிறார்....அடுத்த அஞ்சாவது நிமிஷம், என்னை கூப்பிடக்கூட நேரமில்லாமல் அல்லது பயந்து   அங்கிருந்து புறப்பட்டு  திருனவேலிக்கு.ஓடோடி வந்துவிட்டார்...
"மனுஷன் குற்றாலத்துல  இருப்பானா?"  அப்படீன்னு அவர் கேட்ட கேள்வி என்னை இன்னும் அதிகமாக சிரிக்க வைத்தது....
பாம்புகள் நடமாடும் காட்டில் நாம், இருந்தால் அதுங்க  வரத்தானே செய்யும்...அதுங்க, உங்களுக்காக வெளி ஊருக்கா போக முடியும்?”..... அப்படின்னு அவருக்கு புரிகிற மாதிரி கேட்டாச்சு...”.நீ என்னை தனியா விட்டுட்டு போனப்பாரு ?அத..... அதத்தான் ஏத்துக்க முடியல்லைங்கான்...அடேய் ....உன்ன பாம்பு கடிக்கனும்ன்னு, எனக்கு என்னடா ஆசை?” அப்படி இப்படின்னு எவ்வளவோ சொல்லியாச்சி ஆனாலும் மனுஷன் பேசித்தொலைக்க மாட்டேங்கான்.மசிய மாட்டுக்கான்.
பலருக்குத்  தெரியாது; கடந்த இருபது ஆண்டுகள் காலமாக தாமிரபரணி நதியோரம் பிடிபடுகிற பாம்புகள் குற்றாலம் சித்தருவி பக்கம் தான் விடப்படுகிறது என்பது. அது தெரிஞ்சால்  பலர், அந்தப் பக்கம் கூட வரமாட்டார்கள்..... 
நான் விவசாய வேலைகள் செய்கிற காலம் முதற்கொண்டு, பலவகை பாம்புகளைப் பார்த்து வந்துள்ளேன்....கால் மிதிக்கும் பக்கத்தில், அதைப் பார்த்த அதிர்ச்சியில, சுருண்டு கிடக்கும் பாம்பைத்தாண்டி குதித்து வந்து இதயம் படபடக்க ஓடியும் வந்துள்ளேன்.
பாம்புன்னா நடுக்கம் வரத்தானே செய்யும்..அதுவும் படம் எடுத்து மூஸ்....ஸ்...ஸ்..என்று பாயும்  நாகப் பாம்புகள் பயமுறுத்தும் போது?...வேறு என்ன செய்ய?......அதப் பார்த்து சிரிப்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்....
எங்க தோட்டத்தில் பரம சிவக்கோனார் என்கிறவர்  கொஞ்சம் வயசாளி...அந்த ஆள் பாம்பைக் கண்டால், கையில் கம்பிருந்தாலும் அதை அப்படியே தரையில் போட்டு விட்டு,  பய பக்தியோடு,மேல் துண்டை இடுப்பில் அவசர அவசரமாக கட்டிக் கொண்டு  ....... நாகராசா......எய்யா.....போயிடுய்யாஅப்படீன்னு பாட்டு வேறு படிப்பார்....ஏன்யா...இப்படி?” என்று கேட்டால்...எங்க அப்பாரு...சொல்லி இருக்காங்கையாஅப்படீம்பார்.
எங்க வீட்டில் நான் ராத்திரி வேளைகளில் தோட்டத்தில் தண்ணி பாய்ச்சலுக்காக புறப்படும்போதெல்லாம் எங்க உம்மா சுலைமான் நபியை நினைச்சுக்கோ....அவங்களுக்குத்தான் எல்லா விலங்குகளும் வசப்பட்டுச்சுஅப்படீம்பாள்..எங்க வீட்டம்மாவோ கையில லைட்,கம்பு  இல்லாம அங்க, இங்க போகாதீங்கஎன்று ..ஒரு ஆலோசனையும் தருவார்.
விலங்குகளால், ஊர்வனவற்றால் பகலில் வெளிச்சத்திலும்,இரவில் இருட்டிலும் விவாசாயத்தொழிலில் உள்ளவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டியதுள்ளது....அது பயம் இல்லை...கொஞ்சம் முன்எச்சரிக்கைதான்.
ஆனால.....பறப்பனவற்றால்?...... 

மே மாத இறுதியில் ஒருநாள் மதியம்
,கோடை விடுமுறை முடியப்போகும் நேரம்....பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஐந்து  நாட்கள் இருந்தது. சரி, ”எங்க  போறோம்? எங்க வாறோம்?  இன்னைக்கு பிள்ளைகளோட தோட்டத்துக்கு போவோம்ன்னு எல்லோரையும் அழைச்சிக்கிட்டு போனேன். அன்னைக்கு, காரோட்டியும் நானே.
எம் பிள்ளை சின்னவள் இன்னைக்கு நான் பிறந்தநாள்.....இன்னைக்கு நாம எல்லோரும் தோட்டத்துக்கு போறோம்என்று சந்தோஷமாகச் சொன்னாள்...

வீட்டில் இருந்து கொண்டுபோன சாப்பாட்டைத்  தட்டில் வைக்கச்சொல்லிவிட்டு, பம்ப் செட்டில் இருந்து, செல்லும்  தண்ணீர் , தென்னந் தோப்பில் சரியாகப் பாய்கிறதா? என்று பார்த்து வரப் போனேன்.

ஒரு இடத்தில்  தென்னைக்கு அடியில், சொட்டு நீர் வருகிற அந்தக் குழாயின் மேல்,  ஒரு காய்ந்த தென்னை ஓலை ஒன்று, குறுக்காகக் கிடந்தது..  மட்டையின்  அழுத்தத்தினால் மற்ற மரங்களுக்குத் தண்ணீர் சரியாகப் பாயாதே,என்கிற கவலையால் அந்த ஓலையைத்தூக்கினேன்...

அந்த மட்டை ஒரு,இரு நாட்களுக்கு முன்பாகத்தான் மரத்திலிருந்து கீழே விழுந்திருக்க வேண்டும். அதை நான் தூக்கியவுடன்......நான் எதிர் பார்க்காத ஒன்று நடந்தது......

புஸ்.....என்று கரும்புகை போன்று ஏதோ கூட்டமாகக் கிளம்பியது..முதலில் நான் கொசுக்களோ என்றே நினைத்தேன்....அது தேனீக்களும் அல்ல,குளவிகளும் அல்ல என்பது புரிந்தது...அய்யோ இது விஷ வண்டுகளாச்சே...என்று கொஞ்சம் சுதாரிக்க ஆரம்பித்தேன்... நான் படபடப்புடன் ஓடத்துவங்கினேன்... நூற்றுக்கணக்கான கடந்தைவண்டுகள் என்னைத்தாக்க மூர்க்கமாக பறந்து வந்தன...ட்ராக்டர் மூலம் உழுது போட்ட அந்த நிலத்தில், தட்டுத் தடுமாறி என்னால் முடிந்த மட்டும்  ஓட ஆரம்பித்தேன்.

என் பிள்ளைகளும்,என் மனைவியும் இருந்த திசையில் வந்த போதுதான், நாம் அந்தப்பக்கம் போககக் கூடாது.போனால் அவர்களையும் அந்தக் கூட்டம் கொட்டித்தீர்த்துவிடும் என பயந்து எதிர் திசையில் போகவேண்டுமென முடிவு கட்டி,கிணற்றில் குதிக்க மறுபுறம் ஓடினேன்...ஆனாலும் அந்த வண்டுகள் விடவில்லை...நூற்றுக்கணக்கில் என்னைத்துரத்திக் கொண்டு வந்தன...
என்னால்  ஒருகட்டத்துக்கு மேல் ஓட முடியவில்லை..என் கைகளால் அவைகளை விரட்டினேன்.....பலனளிக்கவில்ல...என் முதுகு,பிட்டம்,தொடைகள் கால்கள்,இன்னும்தலை,கழுத்துப்பகுதிகளில் கொட்டிதீர்த்தது..எல்லா இடங்களிலும் தீக்கங்குளை வைத்து பொசுக்கினால் எப்படி வலிக்குமோ அப்படி ஒரு வேதனை....என்னால் தாங்க முடியவில்லை..

இதற்கிடையே நான் அங்கும், இங்கும் ஒடுவதைப்பார்த்த எங்க பாண்டியன் பதறிப்போய்விட்டார். வயோதிகரான அவர்  நான் ஓடிய திசைக்கு அவரும் ஓடிவந்தார்...என் முதுகில், டி சர்ட்டில்,பேண்ட்டில்  ஒட்டிக்கொண்டு, கொட்டிக் கொண்டு இருந்த அந்த வண்டுகளை தன்,கைகளாளாலும் , மேல் துண்டாலும் அடித்து விரட்டினார்... அது பலனளிக்கவில்லை.

கொஞ்ச வண்டுகள் மட்டும் பறந்து விட்டன..வண்டுகள் கொட்டித்தீர்த்த வலி தாங்காமல்....தரையில் சாய்ந்து துடித்துக் கொண்டு இருந்தேன்.... அவர்  கைதாங்கலாக,என்னைத்தூக்கி , தம் தோள் மீது சாய்த்து .... என்னை கூட்டிவந்தார்..நான் என் உடல் முழுதும் சொரிந்து கொண்டே வந்தேன்....எங்கு தொடுவது என்றே தெரியவில்லை...உடல் முழுதும் வலி மயம் தான்..."என்னய்யா....இப்படிப் பண்ணிப்புட்டீக "  ? என்று கண்ணீரோடு அவரும் கேட்டுக்கொண்டார்...

" யாராவது இங்க ஓடியாங்களேன்....." எங்க பாண்டியன் போட்ட சப்தம் கேட்டு பிறந்தநாள் குதூகலம் பாடி வந்த என் மகளும்,  பிள்ளைகளும், மருமக்களும் என் மனைவியும்,  நான் தள்ளாடியபடி, மெல்ல நடந்து வந்த இடத்துக்கு என்னவோ 

ஏதோன்னு ஓடி வந்து விட்டார்கள்...எல்லோரும் ஒரு சேர அழ ஆரம்பித்தார்கள்....என்னால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை..


திடீரென ஆவேசம் வந்தவராக எங்க இசக்கி முத்து பாண்டியன்...எய்யா....இன்னைக்கு பார்க்க இங்க ஆள் யாரும் இல்லையே......நான் என்ன செய்யட்டும்...?நீங்க உடனே இங்கிருந்து போய் ஆஸ்பத்திரில போய் சேர்ந்துடுங்க......கொஞ்ச நேரத்தில காய்ச்சலும் அதோடு ஜன்னியும்வந்துரும்...நீங்க இங்க நிக்காதியன்னு....என்னை காரில் உள்ளே தள்ளினார்...காரில் உள்ள  எல்லோரும் அழுதபடிஇருந்தார்கள்.......என்னால் கார் ஓட்ட கூட முடியாத வேதனையும் வலியும்....

எங்க தோட்டம் நெல்லை மேலப்பாளையத்தில்  இருந்து  2கிலோ மீட்டர் தூரம். முக்கிய சாலையைத்தொட பத்து கிலோ மீட்டர் தூரம் தாண்ட வேண்டும்..அது வரை எனக்கு உடம்பில் ஓரளவு தெம்பு இருந்தது....

இன்னும் பத்து  கிலோ மீட்டர் தூரத்தில் மேலப்பாளையம்....
அப்போது காரை ஓட்டுவதில் எனக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது....கைகள்  தடுமாறுவதை  உணர முடிந்தது...
பாண்டியன் சொன்னது போல என் உடல் முழுதும் கடும் சூடு ஏறிக்கொண்டு இருந்தது....

தருவை,முன்னீர் பள்ளம்,தாண்டி எங்கள் ஊர், வி.எஸ்.டி.பள்ளிவாசல் சந்திப்பு வந்தது. 

எனக்குத்தெரிந்த ஆட்டோ டிரைவரை தட்டுத்தடுமாறி ......அழைத்து  என் பிள்ளைகள் மற்றும் மருமக்களை என் வீட்டில் விடச்சொன்னேன்..

நாக்கு குழறியபடி நான் சொன்ன அந்த நிலைமையை பார்த்து அந்த ஆட்டோ டிரைவர் காருக்குள் முகம்  நுழைத்து ,   என் முகம் பக்கம் வந்து ,தன் நாசியை சோதித்துக் கொண்டார்....

பக்கத்தில் என்னைத் தடவிய படி  அழுது கொண்டு இருந்த என் மனைவியைப் பார்த்து,  அவர்களின் நண்பர்களிடத்தில் என்னவோ சொல்லிக் கொண்டார்...


அதற்கு மேல் அங்கு நின்று கால தாமதம் செய்யவில்லை....என்னால் இவ்வளவு முடியுமோ அவ்வளவு தெம்பை திரட்டிக் கொண்டு வைராக்கியமாக,பாதி மயக்கத்தில்  டாக்டர் பிரேமச்சந்திரன் அவர்கள் முன்னால் போய் நின்றது மட்டுமே தெரியும்...

இரவு 11.00 மணியளவில் கண் விழித்தேன்...அதுவரை மயங்கிய நிலைதான்.....என்னைச்சுற்றிலும் அழுத கண்களோடு என் தாயும்,மனைவியும்,என் தலையைக் கோதியபடி என் அப்பாம்மா......மற்றும் பிள்ளைகள், மருமக்கள்,சகோதரிகள்,மச்சான்கள்,மைத்துனர்கள்,சுற்றிலும் பார்த்தேன்....

அந்தக்காட்சியினைக் கண்டு கலங்கிப் போய்.....  என் சின்ன மகளைத்தேடினேன்....,....அவள் அழுது முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தாள்....


 அவள்,  நான் கண் விழித்தும் என்னைப்பார்த்து அதிகமாக அழுதுவிட்டாள். நானும் தான்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்என்றேன்.....
அவள்....அழுகை கூடிவிட்டது.
இன்றும் அவளது ஒவ்வொரு பிறந்தநாள் தேதி வரும் போதெல்லாம்.....நான் இதையே சொல்லி என் மகளைக் கோபப்படுத்துகிறேன்......அவளாலும், என்னாலும்,......மறக்க முடியவில்லை...அந்த நாளை.
என் உடலில் உள்ள வண்டுகள் கடித்த ஆழமான சில  வடுக்கள் வேறு அவளது பிறந்த நாளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது....




10 கருத்துகள்:

  1. //“ பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றேன்.....
    அவள்....அழுகை கூடிவிட்டது.//
    மலரும் நினைவுகள்,எப்படி உங்களால் இத்தனை தத்ரூபமாக எழுத முடிகிறது? நல்வாழ்த்துக்கள்.
    பூச்சி, பொட்டு நம்மை அண்டாமல் இருக்க ஸலாமுன் கவ்லன் மின் ரப்பிற்றஹீம் என்று ஓத வேண்டும் சகோ.

    பதிலளிநீக்கு
  2. “பாம்புகள் நடமாடும் காட்டில் நாம், இருந்தால் அதுங்க வரத்தானே செய்யும்...அதுங்க, உங்களுக்காக வெளி ஊருக்கா போக முடியும்?”.....

    பதிலளிநீக்கு
  3. அப்துல் ஜப்பார்10 ஜனவரி, 2014 அன்று 8:19 PM

    விவசாயிகள் மழையை எவ்வாறு எதிர்பார்கிறார்களோ அதே போல விஷ சந்துகளின் போன்ற வைகளின் தாக்குதலையும் எதிர்பார்த்து தான் வயல்வெளிகளிலும் தோட்டங்களை பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளகிறார்கள் என்பதாலே தான் விவசாயிகள் இந்நாட்டின் முதுகெலும்பாக உள்ளார்கள்

    பதிலளிநீக்கு
  4. (அண்ணன் வழக்குரைஞர் முகநூலில்) அருமை... நல்ல எழுத்து நடை ...ஒரு சிறுகதைக்கான வடிவம்... முகநூலி லும் பதியுங்கள்...(உங்களின் வண்டு கடி வேதனையும், வலியும் உம்மை விட மகளுக்கு அதிகமாக இருந்திருக்கும்)..........மண்ணின் வாசம் எழுத்தில் கமழ்கிறது........அனைத்தும் படிக்க முயல்கிறேன்... ஏன் உங்கள் எழுத்தை குன்றிலிட்ட விளக்காக வைத்திருக்கிறீர்கள்...வெளியில் தெரிந்தால் தானே ... இன்றுதான் எனக்கு ஒரு எழுத்தாளராய் அடையாளம் தெரிகிறது.....உங்களின் இந்த படைப்பை ஒரு இலக்கிய இதழுக்கு அனுப்பலாம்...

    பதிலளிநீக்கு
  5. தங்களின் ' போய் வந்தேன் ' கட்டுரைப் படித்தேன் .
    தங்களை வண்டு விரட்டிய காட்சி ...... என் கண் முன்னே தத்ருபமாக நிழலாடி என்னை திகிலடயச் செய்தது . தங்களின் எழுத்து நடை ---
    காட்சிகளை கண் முன்னே நிறுத்துகிறது .
    திரு . ஜீவா கிரிதரன் கூறிய அதே கூற்றை நானும்
    வழி மொழிகிறேன் . தங்கள் மகள் ' வாழியவே பல்லாண்டு .... ' என்று வல்ல நாயனைப் பிராத்திக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  6. Annan unga magal birantha naalla allah nadittan ethacharama nadanthadu atha ennuru biranrha naalla ninavu paduthi pullaya ala vaikkathinga

    பதிலளிநீக்கு
  7. Machan unha photo paatha appadi thaan irukku... Yethoo kaattukulla yedutha photo maathiri thaan irukku.... Katturai romba super machan...

    பதிலளிநீக்கு
  8. பயங்கர அனுபவம். மீண்டு வந்ததுக்கு அல்ஹம்துலில்லாஹ்.

    கடந்தை வண்டு எப்படி இருக்கும், அவை வயலுக்கு வராமலிருக்க/தடுக்க வழிமுறைகள் உண்டா, கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி போன்றவை குறித்தும் தெரிந்தால் பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. பயங்கர அனுபவம். மீண்டு வந்ததுக்கு அல்ஹம்துலில்லாஹ்.

    கடந்தை வண்டு எப்படி இருக்கும், அவை வயலுக்கு வராமலிருக்க/தடுக்க வழிமுறைகள் உண்டா, கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி போன்றவை குறித்தும் தெரிந்தால் பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு