பக்கங்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

குற்றாலம் போன கதை.


ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்கள் வரும் முன்னாலேயே..... என் பிள்ளைகள், எங்கயாவது   போவதுக்கு, ,.    ....இங்க ,அங்கன்னு திட்டம் போடுவார்கள். என்னால் பெரும்பாலும் போகமுடிவதில்லை. ஆனாலும் சில வேலைகளைத் தூர ஒதுக்கி வைத்து விட்டு, அவர்களோடு தயாராகி விடுவேன்.

ஆண்டு விடுமுறையில் என் தம்பியும் ஊர் வந்து விட்டால், பிள்ளைகள்... கேக்கவே வேண்டாம்......எப்படியாவது அவனைச் சரிக் கட்டிக் கிடுவார்கள். பிறகு அவன் தலைமையில் பயணம் கிளம்புவோம்.,

எனது உம்மாவும்,சகோதர,சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளும் டூரில் இருப்பார்கள். சின்ன கார்கள் காணாது. ஏதாவது வேன் இருந்தால் கொஞ்சம் தாராளமாய் இருக்கும்.

அப்படி சென்று வரும் போது மனது மிக லேசாகிவிடும்.

எனக்கு புடிச்சது என்னவோ குத்தாலம்தான்.அந்த மலையும்,அருவியும் நான் எத்தனை முறை பார்த்தாலும்,குளித்தாலும் சலிப்பு தந்ததே இல்லை. என்னவோ அந்த ஊர் மேல அம்புட்டு பிரியம். “பார்க்கப் பார்க்க, ஆனந்தம் எனக்கு எது? ன்னு கேட்டால் ,நான் குத்தால மலைஅழகை, மேகங்களை, அருவிகளைத் தான் சொல்லுவேன்.

“உங்களுக்கு குத்தாலத்த விட்டா வேற ஊருக்கு வழியே தெரியாதா?”......என்று “அந்தப்புரத்திலிருந்து” காட்டமான கேள்விகள் கூட அவ்வப்போது வருவதுண்டு.

திருனவேலி காரங்களுக்கு டூர் போக ரொம்பத் தோதுவான இடங்கள் சுத்திச் சுத்தி  நிறைய இருக்கு.....

அனேகமா....எல்லாவீட்டிலேயும் மூணு தலைமுறைக்குள்ளான கால கட்டத்தில், குத்தாலத்திலும்,மணிமுத்தாறு பாவனாசத்திலும் எடுத்த படங்கள் கண்டிப்பா இருக்கும்.

கொஞ்சம் “விவரம் தெரிஞ்சதுகள்” நம்பிக் கோவில், களக்காடு,செங்கல்தேறி,மாஞ்சோலை,கடனாநதி,மேக்கரை.பாலருவி,கும்பாவுருட்டி அருவி,தென்மலை....என்று .அப்படியாப்பட்ட ஊர்களுக்கு போய்வரும்.

எங்க சுத்தி எங்க போனாலும் காலையில் போயிட்டு, பொழுகிற ஊட்டுக்கு வந்துடலாங்ற வசதி இதுல இருக்கு.

அதென்னவோ ஊர் சுத்துரதில, எல்லாருக்கும் பிரியம்தான் . பல சிரமங்கள் பயணத்தில் இருந்தாலும், மனசு என்னவோ அவைகளை விரும்பி ஏத்துக் கிடத்தான் செய்யுது.

இந்தத் தலைமுறை மக்கள் கொடுத்து வச்சவங்க......

இன்னைக்கி டூர் போக  நினைச்சா, விமானம்,கப்பல், ரயில்,பஸ், வேன்,கார்,பைக் அது இதுன்னு நிறைய வசதி வந்துட்டது. நாங்க சின்னவர்களா இருக்கும் போது நிலைமையே வேறு..

ஊரைத்தாண்டி டவுனுக்கு சினிமா போரதுக்குக் கூட, விடாமல் கட்டுப்பெட்டியாக எங்களை வளர்த்திருந்தார்கள் பள்ளிக்கூட சுற்றுலா போரத்துக்கு ரொம்பவே கனவு கண்டிருந்தோம்.

“தினத்தந்தி” அச்சாவது எப்படி என்று பார்க்க, ஒருக்க “வீராவரம்” ஜங்ஷனுக்கும்,”சிமிண்ட் எப்படி தயாரிக்கிறார்கள்?” என்று   காட்ட தாழையூத்து சிமிண்ட் மில்லுக்கும் பள்ளிக் கூடத்தில் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.அதுலாம் நாலாவது,அஞ்சாவது படிக்கிற காலத்தில் தான்.

அப்புறம் ஆறாவது,ஏழாவது படிக்கும் போது அரசு அதிகாரிகள் உத்தரவுப்படி பள்ளிக்கூடத்தில் ஏதாவது அரசு சினிமா படம் காட்ட கூட்டிப் போவாங்க.....

கண்ணகி டாக்கீஸில் காந்தி டாக்கு மென்ட்ரி படம் பார்க்கப்  போயி   வந்து, ” என்ன படமோ?............என்னத்த எடுத்திருக்கானுவோ?..... எம்.ஜி.ஆர். சிவாஜி வராதது ஒரு படமாலே? ஒரு பாட்டு,ஸ்டண்டு இருக்கால?.... ன்னு அந்தக்காலத்தில் எங்க செட்டுக்கே பயங்கர கோபம் வந்து போனது.  “ “இதெல்லாம் எவம்லே பார்ப்பாம்? . இந்த டிராயிங் சாருக்கு வேற படமாலே கிடைக்கல்லே?” என்று பேசிக்கொள்வோம்.

“கப்பலோட்டிய தமிழனில் சிவாஜிய போட்டு, கொன்னு எடுக்குராணுவ” சிவாஜியால அடி தாங்க முடியல்லே......எனக்கு அழுகையா வந்துட்டது”ன்னு எங்க செட்டுல, ஜின்னா சொல்ல.......

“இதுக்கு தாம்லே வாத்தியார் வருணுங்றது.....அந்த போலீசை விட்டு வைப்பாராலே? நொறுக்கித் தள்ளிற மாட்டாரேலே” என்று “ஓப்பீ” சொல்வான்.

எட்டாவது ஓம்பதாவது படிக்கிற காலத்தில் தான் குத்தாலத்துக்கு “எக்ஸ் கர்சன்” போப்போரம்..வர்றவங்க பேர் கொடுங்கன்னு ஒவ்வொரு வகுப்பா பேர் எடுத்தாங்க.....

“எல நீ வந்தா நா வாறன்”......அப்படீன்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல ரொம்ப நெருக்கடி கொடுத்து அனுமதி கேட்டோம்.....

 “மாசிலாமணி சார்வாள் வாறாரா?.”....என்று கேட்டு, அனுமதி கொடுத்த உம்மா வாப்பாவும் உண்டு. 

அந்தக் காலத்துல முஸ்லிம் ஹைஸ்கூலில் அவர் கொடுக்கிற அடிகள்,  அம்புட்டு பிரபலம். மாணவர்களை,சர்வ காலமும்  அடிச்சி அழகு பார்க்கும் அவரை, புதுசா எவனாவது பார்த்தான்னா,பாக்கிறவன் மிரண்டே போயிருவான்........வாட்ட சாட்டமா......ஆஜானு பாகுவா...அப்படி இருப்பார்.  

அவர் கொடுக்கும் பிரம்படி வித்தை, ஒவ்வொருத்தன் வீடு வரைக்கும் தெரியும்....அடி வாங்குனவன் .நடக்க முடியாது. .....அவர் கண்ணசவை, விட்டு பிள்ளைகள்,யாரும் தூரப் போமாட்டங்கன்னு, தாய் தகப்பனுக்கு நம்பிக்கை இருந்தது.

எங்க வாப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி, நேரம் பாத்து அப்ப்ளிகேசன் போட்டேன்.

“பள்ளிக் கூடத்துல குத்தாலம் கூட்டி போறாங்களாம்.....நான் கண்டிப்பா போகணுமாம்.”

“அப்படி யாரு சொன்னா” ?

“சார் தான்...”

“எந்த வாத்தியார்ரா, சொன்னது?”

“கோமதி நாயகம் சார்வாள் தான்”

“அப்படி, எந்த சாரும் சொல்ல மாட்டாங்களே?”

“அவர்தான் சொன்னார். நாங்க அங்க .....போனதிலிருந்து வூட்டுக்கு வரும் வரை, பாத்ததை ,மனசுல தொகுத்து  கட்டுரை எழுதணுமாம்......அதுக்கு கிடைக்கிற  மார்க்க வச்சித்தான் பரிச்சையிலே பாஸ் பண்ணுவாங்களாம்.”......

“சரி,சரி, .....குத்தாலம் போக ரூபா எவ்வளவாம்?”  

“நாலு  ரூவா தான்.”

“எதுல கூட்டி போறாங்களாம்?”

“திருனவேலி ஜங்ஷனில் இருந்து தென்காசி வரை ரயில்.....அப்புறம் வரும் போதும் ரயில் தான்”.....

“சரி சரி ....உன்கூட யார்லாம் வாராங்க?......

“சிந்தா காஜா,..முத்துப் பாண்டி,மயில்.நம்ம தாஜுத்தீன்,ஜின்னா.....ஜாபர்......இவங்கல்லாம்”

."மலைக்கு மேலெல்லாம் போகக் கூடாது.....உம்மாட்ட ரூபா வாங்கிட்டு போயிட்டு வா........எல்லாரும்....பத்திரமா போயிட்டு வாங்க...ஆழம் தெரியாம எங்காவது இறங்காதீங்க”....அப்படீன்னு வாப்பா சொல்லி அனுமதியும் கிடைச்சிது..

“செண்பகாதேவி,தேனருவிக்கேல்லாம் போகப்டாது” ன்னு உறுதி மொழியோடு பணமும் தந்து எங்க உம்மா அனுப்பினாள்.

அன்னைக்கு மதியம் பனிரண்டு மணி சுமாருக்கு திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலைய ரண்டாவது பிளாட் பாரத்தில் செங்கோட்டை பாசஞ்சர் ரயில் தெற்கு நோக்கி புறப்படத்தயாரா நின்னது.

அங்க எப்படி வந்து சேர்ந்தோமுன்னு தெரியல்லே....அம்புட்டு சந்தோசம்..மதிய சாப்பாட்டை பத்தரை மணிக்கெல்லாம் முடிச்சாச்சு.

கருத்த நீண்ட குழாய் வடிவம்; கீழே சக்கரங்களைக் கொண்டு வடிவமைத்தது  போல நீராவி என்ஜின்.அதுக்கு அடுத்த ரண்டு,மூணு பெட்டியில் நாங்கள் சுமார் நூறு பேர் அடித்து பிடித்து உட்கார்ந்து கொண்டோம்.

.ஆத்ம நண்பனா இருந்தாலும் ஜன்னலோர சீட்டை விட்டுக் கொடுக்க யாரும் தயாரா இல்லை .இதப்பார்த்த கோமதி நாயகம் சார்வாள் ”ஆளுக்கு கொஞ்ச நேரம் முறை வச்சி உட்காருங்கப்பா”அப்படீன்னு ஒரு முடிவு சொன்னார்.

நீராவி என்ஜினில் இருந்து வந்த நிலக்கரி புகையும்,ஒரு மாதிரி ஆவி வாடையும் ரயில் நிலையம் முச்சூடும் இருந்தது.அது அப்போதைக்கு ரொம்பப் புடிச்சிருந்தது.

இதற்கிடையே பசிவந்தால் சாப்பிட ஒட்டு மாவு.பணியம்,மிச்சர்,காரச்சேவு,அல்வா எல்லாம் எங்க அப்பாம்மா தந்து விட்டாள்.

“ம்ம்ம்வூம்” என்கிற சங்கு சப்தத்தில் ரயில் புறப்பட தயாரானது. நாங்க இருந்த பெட்டிக்குள்ளே,வாத்தியார்கள் ஒவ்வொருத்தன் பெயரா சொல்லி வருகையை சரி பார்த்துக் கொண்டார்கள். என்ஜினை சுத்தி பக்கவாட்டில் இருந்து ஆவியும் புகையும் கலந்து வெளிவர வண்டி புறப்பட்டது.

மேம்பாலம் தாண்டியும் வண்டி வேகம் புடிக்கல்லே.

.”மீராப்பள்ளி ஆறு வருமாலே?......லெப்ப கேட்டான்.

“அது திருச்செந்தூர் பாதையில் தாம் வரும்.ஒரு மண்ணும் உனக்குத் தெரியல்லியே” அப்படீன்னு ஒப்பீ சொல்லிக்கிட்டான்  .

டக், டக், டக், டக்,...... ஊ......ஸ்.........ஊ....ஸ் ஊஸ் என்று குறுக்குத்துறை ரோட்டு ரயில் கேட் பக்கம் போனது. ரயில் கேட அடைச்சிருந்தது, அங்க நிக்கிற நம்மூர்க்காரர்கள் யாராவது,ரயில்ல நாங்க போறதைப், பார்க்க மாட்டார்களா? என்று தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டோம்.தெரிஞ்ச மூஞ்சி யாரும் இல்லை.

கொஞ்ச தூரத்தில் டவுண் ஸ்டேசன் வந்து அங்க ஒரு அஞ்சு நிமிஷம்.அப்புறம் பேட்டை,கல்லூர்,என்று நின்னுபோனது.

“எலே....சேர்மாதேவி கத்திபாலம் வரும்ல.....எவனாவது தலய, கிலய நீட்டாதிய.....உள்ள வாங்க”...அப்படீன்னு சொல்லிக்கிட்டுருக்கும் போதே,தாமிர பரணி ஆத்தின் மேல் உள்ள அந்த  பாலம் வந்தது. தடா தட சப்ப்தத்துடன் வண்டி போனது...

அங்கும் நிப்பாட்டினான்.

ஒவ்வொரு ஸ்டேசனிலும் என்ஜின் டிரைவர் கையில் கொடுக்க, வட்ட சைசில்ஒரு பெர்ய கவட்டை மாதிரி பேட்,  சடார்ன்னு வண்டி போகிற,அந்த வேகத்திலும் டிரைவர் கையில்,கொடுத்துகிட்டே இருந்தான். அத மாதிரி வண்டி டிரைவரும் ஏதோ எரிஞ்சிக்கிட்டே வந்தான்.

“அம்பாசம்த்திரம் முறுக்கு நல்லாருக்கும் சாப்பிட்டு பார்லே”...என்று சொல்லி எங்க லெப்பார் மாமா எனக்கு நாலணா தந்து விட்டார்.அது டவுசர் பாக்கட்டில் இருந்தது.அந்த ஊர் வந்ததும் மறக்காம வாங்கி சாப்பிட்டுக்கிட்டேன்.

போளின்னு ஒன்னு கொண்டு வந்தான்.அத ரயில்ல தவிர மத்த இடங்கள்ல வாங்க முடியாதோ?என்னவோ.?

எப்பவோ போட்ட போளியை, எங்க தலையில் கட்டிட்டு அந்த கண்ணாடி டப்பா யாவாரி போயிட்டான். மஞ்சக் கலர் சப்பாத்தியில் கொஞ்சம் இனிப்பு கலந்த மாதிரி அது இருந்தது. "நம்ம ஊரில் ஏது?  இந்தப் பண்டமுன்னு" தின்னேன்.

அம்பாசம்த்திரத்துக்கு அடுத்துநாலைந்து ஸ்டேசன் தாண்டி  ரவண சம்த்திரம்..அங்க இறங்கித்தான் பொட்டால் புதூர் போவாங்க.தூரத்தில் அந்த மினாரா தெரியுதான்னு பார்த்தால் ஒண்ணுமே தெரியல்லே.

அங்க சுத்தி இங்க சுத்தி.பொளுகிற அஞ்சு மணி தாண்டி வண்டி தென்காசி வந்து சேர்ந்துச்சு.

கொண்டு வந்த பை,பாக்கட்டுகளோடு,வண்டிய விட்டு  இறங்கி வெளியே வந்தோம்.தூரத்தில் மேக கூட்டத்தோடு குத்தால மலை தெரிந்தது.     அங்கிருந்து  மலை வாசத்தோடு, வந்த குளுந்த காத்து அப்படியே மனசை என்னவோ செய்தது.

ம்ம்ம்.....நடங்கப்பா...அப்படீன்னு சொன்னாங்க.

“சரி பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்காம்”? .

“ கொஞ்ச தூரத்துல”......சரி நடப்போமுன்னு நடந்தோம்.....

நடைப் பயணம்   பஸ் ஸ்டாண்டும் தாண்டி,,குத்தால ரோட்டுக்கு போனது.

வழி நெடுக இருந்த மருத மரங்களில் இருந்து, சொல்லிக் காட்ட முடியாத வாசனை......

"சார்.....குரங்கெல்லாம் எங்க போச்சு?.....ஒன்னையும் காணமே"? அப்படீன்னு நாங்க கேட்டுக்கிட்டோம்.

"நீங்கல்லாம் வாரத தெரிஞ்சு    அதுகள்லாம், மலைக்குள்ள போயிட்டுதோ என்னவோ?  " சொன்னது மாசிலாமணி சார்வாள் தான்
.
அவர்  இந்த மாதிரி ,நடந்து வந்து ரொம்ப நாளாச்சுதோ....என்னவோ? பேசும் போது கொஞ்சம் இளைக்கவும் செஞ்சுது.  அவர் சட்டை,வேஷ்ட்டி  எல்லாம் வேர்வையில் நனைஞ்சிருந்தது.

"எப்போ குத்தாலம்  கண்ணுல தெரியப் போகு தோ?" ன்னு ஆயிடுச்சு...

ஒரு ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கு, எங்களை நடத்தியே குத்தாலத்துக்கு கூட்டி வந்துவிட்டார்கள். கை காலெல்லாம் , ஒரே வலி.

அப்பாட......வந்துட்டோமுன்னு அண்ணா சிலை பக்கம் வந்து, அருவிக் கரைக்குள் நுழைந்தோம்.

அக்கடான்னு, ......மெயின் பால்ஸ் கரையில் உட்கார்ந்திட்டு ,. கொஞ்ச நேரம் கழிச்சி .......குளிச்சோம்.குளிச்சோம்.அப்படி ஒரு குளி...

"கரையேறு" ன்னு சொல்ல ஆள் யாரும் இல்லை..... கண்கள் சிவந்து தலை முடியெல்லாம் பஞ்சாய் பறக்க,நடுக்கம் இல்லாமல். வெளியே வந்தோம்.தலை துவட்டும் போது காத்து அடிச்சதால் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது,..

அடுத்து சாப்பிடுறது தான்.....

“யாருக்கு என்ன வேணுமோ?  அதை அவனவன் வாங்கி சாப்பிட்டுக் கங்க.....அதுக்கு அவங்களே துட்டு கொடுத்துக்கங்க “ இதை சார் சொல்லிக் கிட்டார்,

ஒரு ரூபா கொடுத்தா நல்லா சாப்பிடலாம்.......

அன்னைக்கு சாரலோடு குளிரும் இருந்தது.  அருவியில் குளிச்சு நல்லா பசி.. சாப்பிட்டோம்..சாப்பிட்டு முடிச்சுட்டு எங்களை அப்படியே ஐந்தருவி ரோட்டில், தளவாய் பங்களாவுக்கு எதிரே “கங்கா விலாஸ்” என்கிற பழைய பங்களாவுக்கு கூட்டிப் போனார்கள்.

அந்த பங்களா  உள்ளே போய், ஆசிரியர்கள் பேசப் போனார்கள். ரொம்ப நேரம் ஆச்சுது...எங்க யாரையும் உள்ளே கூப்பிடல்லை. பெறகு ஒரு தடிச்ச அம்மாவெளியே வந்து கடுமையான குரலில்  “இங்க நிக்கிற அம்புட்டு பேரும் வெளிய போங்க....என்றார்,
"எம்மா.....வந்துருக்குறது எல்லாம் புள்ளைங்க.....இந்த நேரத்துல அவங்களை நாங்க எங்க கூப்பிட்டுப் போக முடியும்? "கோமதி நாயகம் சார் கெஞ்சுகிற குரலில் பேசினார்.

"நான் கேக்கிற வாடக உங்களாலே தரமுடியாது...போயிருங்க.....இங்க தங்குரதுக்கு இடமில்லை".....வார்த்தைகளில் கொஞ்சம் கூட அந்தப் பெண்ணிடம் இரக்கம் தெரியவில்லை..

என்ன செய்யன்னு ஒருத்தருக்கும் ஓடல்ல......மணி வேற பத்து ஆயிட்டுது....

கொண்டு வந்த குளிர் தாங்கும் டர்க்கி டவல் நனைந்து விட்டது.அதனால் தூக்கி கொண்டு போக,கனம் வேறு.   எங்க வாத்தியார்கள் கெஞ்சிப் பார்த்தார்கள்.அந்த தடி பொம்பள கிட்ட ஒன்னும் நடக்கலை.
அங்க இங்க ஓடி யாடி பார்த்தும் ஒரு இடமும் கிடைக்கவில்லை.

எதிரே இருந்த ஒரு ஹோட்டல் வாசலில், கடும் குளிரில்,சாரல் மழையில் பற்கள், கிடுகிடு என நடுங்க சுவர் ஓரமாக உட்கார்ந்தும், படுத்தும் அந்த இரவைக் கழித்தோம்.   

கொஞ்சம் குண்டு பையன்கள்,   குளிரை தாங்ர மாதிரி, காட்டிக்  கிட்டாங்க..ஒல்லிக் குச்சி ஆசாமிகள்   வெட வெடுத்துப் போனார்கள்...அந்த கோஷ்ட்டியில் நானும் இருந்தேன்.....அப்படி ஒரு கஷ்டத்தை, தூக்க மில்லாத இரவை நான் அனுபவித்ததே இல்லை.    
 
அந்த நிலையைப் பார்த்து கொஞ்சம் அழுகை வந்தது. நல்ல வேளை....நம்ம வீட்டில் இத யாரும் பார்க்கல்லை...தெரிஞ்சா இனி டூர் போக விட மாட்டாங்களே ....என்ற கவலை தான் வந்து போனது..

மறுநாள் அதிகாலையில்,நம்ம ஊர் பிள்ளைகள் இப்படி "மழையில்..... ராவிடிய கஷ்ட்டப்படுகிரார்கள்"  என்பதைத் தெரிந்து கொண்ட குத்தாலம் பள்ளிவாசல் இமாம்,மறைந்த கோஜா லெப்பை யூசுப்  ஆலிம் அவர்கள், ஓடோடி வந்து விட்டார்.     அவரும் ஆசிரியராக இருந்து பல, நூறு பிள்ளைகளுக்கு பாடம் படிச்சிக் கொடுத்தவர்   ஆச்சே......அதனால் "தானாடாவிட்டாலும் அவர் தசை ஆடியது".

"அவ ஒரு பொம்பளையா?  இப்பிடி குளிர்ல போட்டு,பிள்ளைகளை அநியாயம் பன்னிட்டாளே"....கிதிர் சாரும்,மைதீன் லெப்பை சாரும் அழுது விட்டார்கள்.

"வாங்க எல்லோரும் போவோம்"..என்று கையோடு பள்ளிவாசலுக்கு கூட்டி வந்துவிட்டார்..தூக்கக் கலக்கத்தில் இருந்த மாணவர்களை  பள்ளிவாசல் கட்டிடத்தில் ஓய் வெடுக்கச் செய்தார்.

பள்ளிவாசல் எதிரே     சித்தருவிக்குப் போனோம்...அப்புறம் வேற எங்க போகவும் மனசே வரல்லை.

பிறகு மதிய உணவும்   பள்ளிவாசல் திண்ணையில் தந்தார்கள்.பருப்பு சாம்பாரோடு அன்னைக்கு புதுசா ஒரு துவையல் சாப்பிட்டேன். எங்க வீட்டில் சாப்பிடாத கொத்தமல்லி சட்னிதான்.பசியில் உண்ட அந்த உணவும்,சட்னியும்,பள்ளிவாசல் திண்ணையும் இன்னைக்கும் நினைவில் நிற்கிறது.

 

அன்னைக்கு மாலையே ஊருக்கு கூட்டி வந்தார்கள்...தென்காசிக்கு மீண்டும் நடைப் பயணம்....திருனவேலி ரயிலைப் பிடிச்சு ஜங்ஷன் ரயில்வே ஸ்டேசன் வந்தோம்....

அங்கிருந்து,....... தூக்க கலக்கத்துடன் நடந்து வந்து, பத்தாம் நம்பர் பஸ் புடுச்சு கீழாப் பாளயம் வந்து தளர்ந்த நடயுடன் வீடு வந்து சேர்ந்தேன்..

என்னைப் பார்த்துட்டு எங்க உம்மா சொன்னாள் “ஒரு நாள்ல இப்பிடி உணந்துட்டியே “

 .

 

.

:

 

 




(இன்னைக்கும் அந்த “கங்கா விலாஸ்” பங்களாவை நான் பார்க்கும் போதெல்லாம்,................ எனக்கு பள்ளி நாட்களும்,.................எங்க வாத்தியார்களின் கெஞ்சலும் .......இரவெல்லாம் கடும் குளிரில் நடுங்கியதும்,.............எங்களைத் துரத்திவிட்ட அந்த "குண்டு பொம்பிள்ள" உருவமும் தான்,நினைவில் வந்து போகிறது...................அப்போ பார்த்த அதே கட்டிடம், எந்த விதமான வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே நிற்கிறது...)

 

22 கருத்துகள்:

  1. அப்துல் ஜப்பார்19 ஆகஸ்ட், 2013 அன்று 5:33 PM

    மாணவ பருவத்தின் கோப தாபங்கள் அந்த பருவத்தின் சுற்றுலா அனுபவங்கள் அதுவும் ரெயிலில் செல்லும் அனுபவங்கள் படிக்கும் போது எங்கள் பள்ளி பருவத்தை நினைவு படுத்துகிறது
    ஒருநாள் படுக்க இடமில்லாமல் பட்ட கஷ்டம் என்பது உங்கள் வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அனுபவத்தை தந்து இருக்கும்
    அன்று ஒரு கங்கா விடுதி சுற்றுலா மாணவ நண்பர்களுக்கு தங்க இடம் தரவில்லை ஆனால் இன்று தங்குவதற்கு ஏராளமான வசதிகளை உங்களுக்கு இறைவன் தந்து உள்ளான் அல்ஹம்துலில்லாஹ்

    பதிலளிநீக்கு
  2. திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்துச் சென்றது ஆச்சரியமாக இருக்கிறது.

    ‘கங்கா விலாஸ்’ படம் பொருத்தம். பதிவுக்கெனவே படம் பிடித்ததா?

    பதிலளிநீக்கு

  3. "என்னைப் பார்த்துட்டு எங்க உம்மா சொன்னாள் “ஒரு நாள்ல இப்பிடி உணந்துட்டியே" ...... இந்த ஒரு வரிக்கு இந்த உலகில் ஈடு இணை உண்டோ .........?

    பதிலளிநீக்கு
  4. கலக்கல் கதை 5 நிமிடம் நேரம் போனது தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  5. தம்பீ! எந்த ஒரு சொந்த அனுபவத்துக்கும் வயதே கிடையாது. ஏனென்றால் அனுபவங்களுக்கு பிறக்கத்தான் தெரியும். இறக்கத் தெரியாது. மறஞ்சு போகும். அம்புட்டுதான்.

    அனுபவம் பிறந்த மேனிக்கே திரிஞ்சிகிட்டுதான் இருக்கும். அதுதான் அதன் உயிர் வாழ்க்கை.

    நானும் உங்களுடன் படிக்காவிட்டாலும், உங்களுடன் படிச்சி இருந்திருந்திருக்கலாமோ இந்த அனுபவத்தை பெற.

    இப்படி எனக்கு தோணுகிறது. இதுதான் எழுத்தின், அனுபவத்தின் ஆகர்ச சக்தி.

    பதிலளிநீக்கு
  6. Malarum Ninaiugal.Vattara Moli. "Eam pillai oru naalil unanthittiye.AMMAvin kural" Athuthaan THAAI.

    பதிலளிநீக்கு
  7. LKS......எங்களை 30 வருஷம் முன்னாடி கொண்டு போய் விட்டீர்கள்.தேங்க்ஸ்...

    பதிலளிநீக்கு
  8. We mostly all like Courtralam, may be the apt reason, the season which rightly fallows torturous summer. Courtralam will have the same climate in the rainy days of Nov-Dec, but it hardly have anybody.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் ' குற்றாலம் போன கதை ' எழுத்து நடை --புகைப்படங்களின் அணி வகுப்பு ---- எங்களையும் அந்த ' குளுகுளு ' குற்றாலத்திற்கு யாரோ எங்கள் விரல் பிடித்து அழைத்துச் சென்று -- கண்டு களிக்க வைத்து --- பத்தாம் நம்பர் பஸ் பிடித்து கீழாப்பாளையம் வந்திறங்கி தளர்ந்த நடை நடந்து வீடு வந்து சேர்ந்தது போல் இருந்தது. மிக அருமை காக்கா! நானும் படித்த அதே ஆசிரியப் பெருந்தகையை நினைவு படுத்தியமைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. தங்களின இளமை கால குற்றால சுற்றுலா அனுபவங்களை படிக்க நன்றாக உள்ளது. பள்ளி பருவத்தின் சுகானுபவங்களை நெல்லை தமிழில் தீட்டியுள்ளீர்கள்.

    மாசானமுத்து

    பதிலளிநீக்கு
  11. அனுபவங்களை இப்படியெல்லாம் அருமையாக எழுதுவது ஒரு கலை..very nice....

    பதிலளிநீக்கு
  12. NALLA ORU ARUMAIYANA ANUBAVAM IRUNTHA POTHILUM,THANGALAIYUM THANGAL SCHOOL MANAVA NANBARHALAIYUM TENKASI RAYUL NILATHI IRUNTHU KURTAULAM 6 KM VARAI NADATHIYE AZHAITHU PONATHUM THIRUMPA KURTAULATHIL IRUNTHU TENKASI RAYUL NILAYAM VARAI 6 KM NADATHIYE AZHAITHU VANDATHUM VARUNTHA THAKKATHU ENANRAL ELLORALUM APPADI NADANTHE POVATHU ROMPA KASHDAMANA KARIYAM ANTHA NERATHIL VAHANA VASATHI EPPADI IRUNTHATHO ENAKKU THERIYA VILLAI IRUNTHA POTHILUM ADHU ORU VITHIYASHAMANA JALIYAHATHAN IRUNTHU IRUKKUM NAN URIL ATHIHAMAHA CYCLE LIL THAN PIRAYANAM SEIVAN INGU SAUDI ARABIYAVIL VEETAI VITTU VELIYE SENRAL PIRAYANAM SEIVATHU BENZ CAR, TOYOTA CAR NISSAN CAR, IVAIHALILTHAN ENANRAL ANDANADU APPADI INTHANADU IPPADI MELUM [MARAINTHA KK. MOHAMED YOUSUF ALIM] ENATHU PERIYA THANTHAI AVARHALUDAYA KANNIYAMANA ATHARAVAIYUM KANIVANA UBASARIPPAYUM PATRIYUM THANGAL ITHILE KURIPPITTU IRUNTHATHAI ARINTHU NANUM EN KUDUMPATHARHALUM MIHAUM MAHIZHCHI ADAIHIROM MOTHATHI ITHU ORU SIRAPPANA ANUBAVAM.

    பதிலளிநீக்கு
  13. இப்பொழுது தான் படித்தேன்
    தங்களின இளமை கால
    குற்றால
    சுற்றுலா அனுபவங்களை
    படிக்க நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. மலரும் நினைவுகள் .......இதை படித்த போது அன்று குற்றாலம் போய்வந்தது என்னெமோ இப்போ போய்க்கொன்றுஇருப்பது போல் இருக்கிறது jafer jeddah

    பதிலளிநீக்கு
  15. it is intresting to read in our melapalyam slang.really i enjoyed ur writing.gud.i can understand it is recalling ur early nostalgia moment.
    .

    பதிலளிநீக்கு
  16. குற்றாலம் போன கதை அருமையான எழுத்து நடையில் சலிக்காமல் வாசிக்கத் தூண்டியது.அற்புதமான நினைவாற்றல் சகோ உங்களுக்கு.என்ன தென்காசியில் இருந்து நடத்தியே கூட்டி வந்ததும்,இரவில் தங்க இடவசதி இல்லாமல் அல்லலுற்றதும் கொஞ்சம் சங்கடத்தை ஏறபடுத்தியது.
    அடடா,ஆனாப் பாருங்க,சகோ இந்த வருடமும் எனக்கு குற்றாலம் பார்க்க கொடுத்து வைக்கலை.அடுத்த வருடமாவது ? முடிகிறதா? பார்ப்போம்.
    எங்க வாப்பா காலத்தில் வருடம் வருடம் தவறாமல் குற்றாலம் போவதும் வாரக் கணக்கில் தங்கியதும் தான் நினைவிற்கு வருகிறது.அங்கு சீசன் தோறும் எங்கள் கடை போடும் பழக்கம் இருந்தது.நாங்களும் அநதப் பள்ளியில் கோஜா லெப்பை ஆலிம் குடுப்பத்தார் சமையலை பலமுறை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம்.மலரும் நினைவுகள் எப்பவுமே இனிமை தான் சகோ.

    பதிலளிநீக்கு