பக்கங்கள்

சனி, 13 ஏப்ரல், 2013

துபாய் வாப்பா படும் பாடு...

      
      
        சமீபத்துல துபாயி லிருந்து வழக்கமான விடுமுறையில் ஊர் திரும்பிய என் நண்பன், ராத்திரி பத்துமணிக்கு மேல என்னை திடீர்ன்னு அழைச்சான்.
“என்னடா...எப்பிடி இருக்கே? .....என்ன இந்த நேரம் ஓம் போன்”வழக்கம் போல் நான் கேட்டேன்.
“கொஞ்சம் வீடு வரை வரியா?”
“எதுக்குரா?”
“வாரியா ...இல்லையா?.”...
”எதுக்குன்னு கேக்கிறேன் சொல்ல மாட்டேங்கிறியே?” 
”உடனே வாயேன்”.
“சரி வரம்ப்பா.”
    இப்ப குத்தாலம் போற சீசன் காலம் இல்லையே...எதுக்கு இந்த நேரத்திலே அழைக்கான்?...எந்த வம்புக்கு நம்மக் கூப்பிடுதானோ?......என்னவோ?.....ஏதோ?....என்ன பிரச்சனையோ?....ன்னு யோசித்துக் கொண்டே, எம் மகன் , வச்சிருக்கிற ஆக்டிவாவிலே புறப்பட்டேன்.
மீண்டும் செல் பேசி....அதில் அவந்தாம்.
“மச்சான்..... வீட்டுக்கு வந்திரு......”.. 
“ஏய்....சொல்லண்டா.....ஒன்னும் சொல்லாமல் வாயேன்னா.... எதுக்கு கூப்பிடுற?”பதிலே சொல்லாமல் டக்குன்னு போனை வச்சிட்டான்.ஒரே சஸ்பென்ஸ் மயமாகவே இருந்தது...

  "போன வாரம் தானே, அங்க வலிக்குது....  இங்க வலிக்குதுன்னு..... சொன்னான்,இப்போ புதுசா அவனுக்கு சுகர்,பிரசர்ன்னு டாக்டர் விதவிதமா மாத்திரையெல்லாம் எழுதிக் கொடுத்து வாங்கி வந்தோமே  ...வேற எங்கேயும் டாக்டர்கிட்ட கூப்பிடுதானோ?"இப்படி பல விதமா மனசில் ஓடிக்கொண்டிருந்தது.
    அவம் வீட்டுக்கு ஒரு அம்பதடி தூரத்தில்; வண்டியை நிறுத்திவிட்டு ,இரண்டு மூன்று வீடுகள் தாண்டி நான் அவம் வீட்டுக்கு போன நேரம்,வீடே நிசப்தமா இருந்தது. வேறோன்னுமில்லை...பக்கத்து  வீட்டு டிவியில், யாரோ ஒரு பொம்பள ஆவேசத்தோடு அழுகிற காட்சி வழக்கம் போல், தெருவாசல் வரையும் கேட்டது......அதிசயமாக அவம் வீட்டு டிவியில் மட்டும் அமைதி....பெருக்கெடுத்தோடியது.
தெரு வீட்டில் வழக்கமா சிரித்து வரவேற்கும் அவம் மகன், “வாங்க...மாமா”.அப்படீன்னு சொல்லிட்டு ஆவேசம்,ஆத்திரம்,பொங்க ஒரு வித மான அமைதியில் முகமெல்லாம் வாடி தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தான்.
ஆகா.....என்னவோ ஏதோன்னு நினைச்சோமே.....இவன்தாம் பிரச்னையேன்னு கொஞ்சம் யூகித்துக் கொண்டேன்.
சரி நாம தான் அவன்கிட்ட பேசனும்ன்னு...பேசினேன்.
“வே...மருமகனே  எப்படிப் போகுது  ஒங் காலேஜ்?”......
அதுக்கு சுரத்தே இல்லாமல் “இருக்குது”  என்று  ஓத்த வார்த்தையில் பதில் சொன்னான்.
நான் வந்து பேசுகிற  சப்தம் கேட்டு என் நண்பனும்,அவம் பொஞ்சாதியும் வளவு வீட்டில் இருந்து முன்பக்கம் தெருவீட்டுக்கு வந்தாங்க.
“காக்கா ...வாங்களேன்”..வழக்கம் போல் அவம்  பொஞ்சாதி.
“என்ன....நீ....இவ்ளோ லேட்டு?”.....இது அவன்.என் நண்பன்.
எடுத்த எடுப்பிலேயே எந்த பிரச்சினைக்குள்ளும் போய் பேச ஆரம்பித்தால் தோல்விதான்னு,வக்கீல் அனீபா சாகிபு அடிக்கடி சொல்லுவார்,
அதனாலே.....அங்க சுத்தி, இங்க சுத்தி பேச்ச ஆரம்பிச்சேன்....என் நண்பன் பேசினான்.
“மச்சான்...நீ தானே இவன காலேஜ்ல சேர்த்த?
‘”ஆமா”....அதுக்கென்ன?”
அவன் எந்த குரூப் கேட்டானோ அதை வாங்கிக் கொடுத்து,பணம் கட்டி எல்லாம் சென்சோம்மில்லியா?
“ஆமாம்..”
“வழக்கமா வி.எஸ்.டி.சந்தை வரையும் பஸ் வரும்.அதுல தான் எல்லாரும் காலேஜுக்கு போவாங்க.நேத்து வரைக்கும் அதுல போனவன்,இனி  அதுல போ மாட்டானாம். மோட்டார் சைக்கிள்ள தான் போவானாம்.”
அதுக்கு பதில் நான் சொல்லு முன்னாலே அவமகனை பார்த்து,” சரி... “நம்ம ஊர் வரைக்கும் காலேஜ் பஸ் தான்  வருதுல்ல?”நல்லா ஜாலியா தானப்பா போய்க் கொண்டுறிந்திய.....இப்ப திடீர்ன்னு அதுல போ மாட்டேன்னா எப்படி? அத விட்டுட்டு  மோட்டார் சைக்கிள்ள போனா தனி செலவாகுமில்லியா?....மருமனே சொல்லுவே” என்று கேட்டேன்.
“நிறைய பையங்க மோட்டார் சைக்கிள்ள தான் வாராங்க...அதுனால எனக்கும் மோட்டார் சைக்கிள் வேணும்.”அவ மகன் சொல்லும் போது அந்தக் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
சரிப்பா,”மோட்டார் சைக்கிள் இல்லாத பிள்ளைங்கதான்  நிறைய பேர் காலேஜுக்கு வாரங்க..அது உனக்கு தெரியத்தானே செய்யும்?”
“எங்க வாப்பாவும் துபாய்ல இருக்காருன்னு,நான் காலேஜ்ல சொன்னா,யாரும் நம்ப மாட்டேங்ராங்க”
     உடனே அவந் தகப்பன்”எவன் கேக்கான்?.....வேணும்ன்னா  என் பாஸ்போர்ட்,விசா காப்பியை ஜெராக்ஸ் எடுத்து தாரேன். அப்படி நம்பாம கேக்கிறவங்கிட்ட காட்டு”என்று படபடத்தான்.
“ஏய்....ஏய்...பொறுப்பா”என் நண்பனின் பேச்சை இடைமறிச்சேன்.
 “என்ன மருமகனே.அதுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்.”?
பையன் பதில் சொல்லாமல், எதுக்கோ அடிபோட்டுக்கிட்டுருந்தான்.
“வேணும்னா என் வண்டியைக் கொண்டுபோகச்சொல்லுப்பா” என்றான் என் நண்பன்.
“உங்க வண்டி எவன் ஒட்டுவான்?” என்று ஆவேசத்துடன் சொன்னான் அவம்மகன்.
“நீயே சொல்லுடே....என் வண்டிக்கு என்ன  குறை?”
வழக்குக்கு போன இடத்துல.தகப்பனுக்கும்,மகனுக்கும் இப்படி ஒரு கேள்வி,பதில் வந்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.அதைப் பார்த்ததும் என் நண்பன் முகம் போன போக்கு .....விளக்கவே முடியாதது.”இவனப் போய்  கூப்பிட்டோமே?”ன்னு  இருந்துச்சு அவம் பார்த்த பார்வை.
“மாமா....இவர் வச்சிருக்குறது.....மொபெட்...அது TVS 50. நான் கேக்கிறது மோட்டார் சைக்கிள்.இவருக்கு, ரண்டுக்கும் உள்ள வித்யாசம் கூடத் தெரியல்லை”.என்றான்,கொஞ்சம் கிண்டலாக.
“ஆமாம்..... ரண்டு வண்டிக்கும் முப்பதுனாயிரம் ரூபாய் வித்யாசம்ன்னு தெரியும்பா” என்றான் பொருளாதாரம் படிச்ச என் நண்பன்.
சரீ.....இப்ப நான் சொல்லுரதைக் கேளுங்கப்பா.....“புள்ள ஆசப்படுறான்..ஏதாவது மோட்டார் சைக்கிள் எடுத்துக் குடுப்பா...ஆனா அதக் கொண்டுட்டு காலேஜ்லாம் போகவேண்டாம். ......வழக்கம் போல காலேஜுக்கு  பஸ்லதான் போகணும்.தெரியுதா?” என்று சொல்லிவச்சேன். என் நண்பன் பரிதாபமா பார்த்தான்.
நான் சொல்லி முடிச்சது தான் தாமதம் .”மாமா கொஞ்சம் இருங்க.நான் ஒரு வண்டி கொன்டு  வரேன்.அந்த மாடல் தான் வேணும்”ன்னு சொல்லிட்டு, பதிலை எதிர் பார்க்காமல் அவம் மகன் ,வெளியே புறப்பட்டுப் போனான்.
ரொம்ப நேரம் மவுனமாக சபையைக் கவனித்துக் கொண்டுருந்த என் நண்பனின் மனைவி என்னிடம் ” காக்கா....நானும் ரொம்ப நாளா எம்புள்ளை மோட்டார் சைக்கிள் கேக்கிறான்..வாங்கிக் கொடுங்கோன்னு சொல்லிக் கொண்டுதான் இருக்கேன். மனுஷன் அசஞ்சிக் கொடுக்கலே. மத்த பையங்க மாதிரியா அங்கயும் இங்கயும் இவன் அலையிறான்?”என்று சொல்லி முடிக்கும் போது மகனுக்காக ஒரு தாயின் பரிந்துரை தெரிந்தது.
“நல்லா இருக்குப்பா இவ சொல்லுறது. இவ இப்படி சொல்லிச் சொல்லியா நான் இவனுக்கு கம்ப்யூட்டர்  வாங்கிக் கொடுத்தேன்?”
“ஆமா.அது இவர் என்கிட்டயும், அவ புள்ளைங்க கிட்டயும் பேசத்துக்குன்னு அனுப்பினார்.”
“செல் போன்....இங்க கிடைக்காததா?...அதையும் அவன் சொன்ன மாடல்லாம் அனுப்பினேன்..அது என்ன விலை தெரியுமா?அதுவும் ஒன்னு ரண்டா?.....எவ்வளவோ  அனுப்பியிருக்கேன்.”
நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டுருந்தேன்.
”இந்தபாரு..என் செல் போன்.....நான் என்னத்த வச்சிருக்கேன் பாரு நாலு வருஷத்துக்கு முந்தியது.”என்று சொல்லிய நண்பன் தொடர்ந்து பேசினான்.
“சரிப்பா செல் போன்ல என்னத்தை தான் பாப்பானுவோளோ?.....அல்லது யாருக்குத் தான் என்ன கொடுப்பானுவோளோ?...... தெரியல்லே..ராத்திரியில் தூங்க மாட்டானுவ போல .....ஒரே எஸ்.எம்.எஸ்.தான்......உடனே பீப் பீப் சப்தம் பதிலுக்கு வருது.. ராத்திரி பூரா பேஸ்புக்,டுவிட்டர்ன்னு..இருக்கனுவோப்பா.......நாம என்னத்த சொல்ல?....”என் நண்பனின் கவலையோடு கலங்கிய கண்களும் தெரிந்தது.
“சரிப்பா...நம்ம இளமயிலே இதெல்லாம்.கிடையாது.இப்ப வந்திருக்குது.  நல்லதே நினைப்போம்”ன்னு சொல்லி ரண்டு பேர் பேச்சையும் நிறுத்தினேன்.
அப்போது வாசலில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்கும் சப்தம் கேட்டது. என் நண்பனின் மகன் ,அவனோடு கல்லூரியில் படிக்கும் ,நண்பனோடு வீட்டுக்குள் வந்தான். வாசலில் அவன் கொண்டு வந்த புது மாடல் பைக் கம்பீரமா நின்றது.
“சொல்றா.....இந்த வண்டியைப் பற்றி” என்று கூட வந்த நண்பனிடம் சொல்லச்சொன்னான்.
அந்த இளைஞனும் எங்க ரண்டு பேருக்கும் உறவினந்தான்.அவன் தகப்பனும் துபாயில் தான் இருக்கிறான்.
“மாமா... ....இந்த வண்டி பேரு.YAMAHA Fesar….அப்படியா?.....நான் புஸ்தகம் எதிலுமே இதப்பார்க்கல்லியே.... என்றான் என் நண்பன்.”
“மச்சான் இந்த வண்டி விலையை கொஞ்சம் கேளன்”...என்றான்.
நான் விலையை கேக்கும் முன்பே என் நண்பனிடம்...”சரிப்பா  வாங்கிக் கொடுடே....நீ கொடுக்காம அவனுக்கு அவம் மாமா கொடுக்கனும்ன்னு நினைக்கிறியா?"என்று கேட்டேன்.
“அது வொன்னும் கூடுன விலையில்லை......தொன்னூத்து எட்டாயிரம் தான் மாமா”...அப்போ என் நண்பன் முகத்தைப் பார்க்க நான் என்ன ஒன்னும் தெரியாதவனா?
அதக் கேட்டுட்டு நான் போன வேகம் எனக்கும் என் ஸ்கூட்டருக்கும் தான் தெரியும்.
மறு நாள் ஞாயிறு. திங்கள் கிழமை காலை.என் நண்பனின்.போண்.
“மச்சான்....எங்க இருக்க?”.....கலகலப்பே இல்லாமல் என் நண்பனின் குரல்.
“தோட்டத்துல”....
அதுக்கு பிறகு அவன் சொன்ன பதிலைக் கேட்டு நான் ஒண்ணுமே பேசலை.
”....இன்னைக்கி போய் எம் மகன் கேட்ட வண்டியை,வங்கிக் கொடுத்திருவோம்..ஊருக்கு வந்தா நிம்மதி  வேண்டாமா?....நம்ம கஷ்ட்டம் இங்க இவங்களுக்கு தெரியுமாப்பா?........என்ன ...செய்ய எம் மகளுக்குன்னு  நான் வாங்கிவந்த 5 பவுன் தங்க செயினை வித்துற வேண்டியதுதான்.”