பக்கங்கள்

வியாழன், 31 மே, 2012

கண்டதைத் தின்னா...........

 முன் ஒரு காலத்துல அதாவது 1975 கால கட்டத்தில் காச்சல் அடிச்சா நாட்டு மருந்து கசாயம் போட்டுக்குடிப்பதும்,மண்டைஇடி வந்தா பச்சிலை பத்து நெத்தியில போடுவதும்..ஒடம்பு அசதியா இருக்க மாதிரி தெரிஞ்சா இஞ்சி தட்டி விஷ கஷாயம் போட்டுக் குடிப்பதும்,.மேல் கொதிக்க மாதிரி இருந்தா ஓமத்திராவகம் சாப்பிடுவதும்,புள்ள உண்டாயிருக்கவா “மாது லங்க ரசாயனம்”ங்ர பேர்ல எதோ ஒன்னை பெண் மக்கள்,கண்ண மூடிட்டுக் குடிப்பதும் எங்க பக்கம் ரொம்ப சாதாரணம்..
உடம்புல புண்ணு வந்து கட்டியா மாறுனா, அந்த புண்ணுக்கு மேலே போட,அந்தப் புண் இருக்கிற அளவு வெட்டி எடுத்த துணியில் ரோடு போட உபயோகிக்கும் தார்ன்னு பேர் கொண்ட கருப்பு கீல் மாதிரி இருக்கிற ஒரு வஸ்தை தடவி, சிமினி விளக்கு அல்லது நட்டி விளக்கு தீ ஜுவாலையில் வாட்டி,அல்லது காட்டி கொஞ்சம் எழக வச்சி, இளஞ் சூட்டோடு வெது வெதுப்பா இருக்கிற பக்குவத்தில அத ஓட்டுவார்கள். அடுத்த நாள் கட்டி உடைஞ்சு உள்ளே உள்ளதெல்லாம் வெளியேறி காய்ஞ்சு விடும்..
இத முத்துமணிக்களிம்பூன்னு சொல்லுவாங்க.அந்தக் காலத்துல முத்துமணிடாக்டர்,முகம்மது லெப்பைத்தெரு ரைஸ் மில்லுக்கு எதிர்த்தாப்புல இருந்தார்.
அவர்தாம் அந்த மருந்தைக் கண்டு புடிச்சதா சொல்வாங்க.இப்பவும் அண்ணா வீதியில் கல்வத் டாக்டர் அந்த மருந்த வச்சிருக்கார்.
எங்க அப்பாம்மா, எங்களின் சின்ன பிராயத்திலே சுக்கு, அக்கரா, திப்பிலி, இஞ்சி, இளம் வேப்பிலை கலந்து, இடிஉரலில் இட்டு நச்சி ஆட்டி, சங்கு வச்சி வலுக்கட்டாயமா புகட்டி விட்டுருவா.
என் தங்கச்சிகள், தம்பி மாதிரி சில பேர்கள் குடிக்கல்லனா, பக்கத்தில நிக்கவங்க கையை காலை அமுக்கிப் புடிச்சு, மூக்கப் பொத்தியாவது மருந்தை உள்ளே போக வச்சிருவா.பக்கத்தில் லெப்பார் மாமா நின்னா ,தவியாய் தவிச்சுடுவார்.(அவரைப்பற்றி தனி இடுகை உள்ளது )
இது மாதிரி காரியங்களுக்கு உடந்தையா அந்த மருந்தை முதாலாவது குடித்து முடித்தவர்கள் மகா உதவிகள் செய்வதும் உண்டு..
என் தம்பி, தங்கச்சிங்க குடிக்கலைனா, இதை நான் ரொம்ப ஆதரவா, "நல்லா குடு"ன்னு சொல்லி அப்பாம்மாவுக்கு ஆதரவு தெரிவிப்பேன்.ஏன்னா நான் பட்ட கஷ்டம் மருந்து குடிக்கும் போது அவங்களும் புரிய வேண்டாமா? அதுக்குத்தான்.
மத்தவங்க பாக்கும் போது அது சித்ரவதை மாதிரி தெரியும்.குடிச்சி முடிச்சபிறகு, வாயிலே சீனியை படக்குன்னு போட்டு விழுங்கச் ச்சொல்லுவா.கண்கள் இரண்டிலும் கண்ணீர் வந்துரும்.அதுக்கு பிறகு தான் ஆளை விடுவா நாங்க பெரிய பிள்ளைகளா ஆனபொறகும் இந்த இம்சை அடிக்கடி நடக்கும்.
சரியா வெளிக்குப் போக "சுக பேதி அல்வா", சற்குண வைத்தியச் சாலையிலிருந்து வாங்கி கொடுக்கச் சொல்லுவா.வந்த பேதி நிக்கலன்னா இருக்கவே இருக்குன்னு "மைதீன் ஸ்டோர் அல்வா" தருவா.
வர்மம் தட்ட பாட்டப்பத்துவாத்தியார் கிட்டேயும்,சின்ன உளுக்கு வந்தால் மொன்னாமீத்தியார் கிட்டேயும் கூட்டிட்டுப் போவாள்.பிந்தின காலங்கள்ல மதார் வாத்தியார்,மோதீன் யூசுப் மாதிரி ஆட்கள் உளுக்கு தட்டுவார்கள்
இன்னிக்கும் என் போன்றவர்களுக்கு, இருமல் அது இதுன்னா தூது வாழை, கண்டங்கத்திரி குளம்பு. சாப்பிட அவளே காரணம்.என் பதின் பருவத்தில், முகத்தில் வந்த பருக்களுக்குக் கூட “குங்குமாதி லேபம்” வாங்கித்தந்தாள்.
அவளின் முதுமையில், என்னை திருநெல்வேலி சற்குண வைத்தியச்சாலை சென்று “பலா ஷிபா” லேகியம் வாங்கி வரச்செய்து சாப்பிடுவாள். “அதுலே உள்ள பேர் அப்பிடீ”ன்னு சொல்லுவா.
தென்காசி மேடை முதலாளி சகோதரர்கள் அப்துல் ரகுமான் சாகிப்,முகம்மது சாகிப் ஆகியோருக்கு ஒரு சித்தர் சொல்லிக்கொடுத்த லேகியம்கிறது தெரிஞ்சு, அதே மருந்தை கை, கால் மூட்டு வலி வந்தபோதெல்லாம் சாப்பிட்டு குணம் ஆகிடுவா.
நாம் நாட்டு மருந்தை மறந்தோம்.நோய்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்தோம்.
இன்னிக்கு பன்றிக்காச்சல்,சிக்குன் குனியா,டெங்கு காய்ச்சல் ஒவ்வொரு வட்டாரத்தையும்தாக்கித் தள்ளுகிறது. இன்னிக்கு வரையில் டெங்கு நாற்பத்து ரன்ன்டு பேரை பலி வாங்கி உள்ளது.
இதைத் தடுக்கும் தன்மையுள்ள மருந்துகள் சித்த வைத்தியத்தில் உள்ளதாக அறுதியிட்டு கூறுகிறார்கள்.அலோபதியில் இரத்தம் ஏற்றச்சொல்லுகிறார் கள். 
திருநெல்வேலி நாட்டாஸ்பத்திரியில், அதான் மாவட்ட சித்த வைத்திய மருத்துவமனையில் நில வேம்புத்தண்ணீர் வாங்க கூட்டம் அலை மோதுகிறது.அதன் அருமை இப்போது தெரிகிறது.அதைக் குடித்தால் நோய் குனமாகிறதாம்.

"மருந்தே உணவாக,வாழும் மனிதர்கள்;உணவே மருந்தாக வாழும் மானிடர்கள்"; என்று இரு பெரும் கட்சிகள் தான் உலகெங்கும் உள்ளார்கள்.
“கண்டதைக் கற்க பண்டிதனாவான். கண்டதை திங்க சீக்காளி ஆவான்”, என்பது திருநெல்வேலியில் சொலவடை ஆகும்.
அது மருந்து,சாப்பாடு இரண்டுக்கும் பொருந்தும்.நேரம் காலம் தெரியாமல் கண்டதைத் திங்குவதும்,கண்டபடித்தூங்குவதும் சீக்கு வர வரவேற்பு கூறும் என்றால் கையில் கிடைத்த இங்க்லீஷ் மருந்து மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும்சீக்கு வரும் என்பது தற்கால கண்டுபிடிப்பாகும். 
இதுல இருந்து தொடர் நோயாளியான மனித குலம் மீள்வது எவ்வாறு?எப்போது.?
அது தான் உடம்புல எந்த பாகத்துல வலி வந்தாலும் இ.சி.ஜி, எக்கோ,ஸ்கேன்,ட்ரெட் மில்,அதையும் தாண்டி ஆஞ்சியோ வரை போய் விட்டது.நோயைக் கண்டால்மனிதனுக்கு பயம் இல்லாமல் போய்விடுமா?
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. அது தான் எல்லோருக்கும் வேண்டும்.

வெள்ளி, 25 மே, 2012

கேள்வியின் நாயகன்....

நாகூர் ,கவிஞர் இசட்.ஜபருல்லாஅண்ணன்அவர்கள், என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குறிப்பாக என் வாப்பாவின் மீதும் மாறாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்.


ஜபருல்லா பிறந்த செய்தியை நான் தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள்,பேச்சாளர்,கவிஞர்  வரிசையில், அவருக்கும் இடம் உண்டு. மாநில முஸ்லிம்லீக்  செயலாளராகப் பணியாற்றினார்....முஸ்லிம்லீக்  தலைவர்  பேராசிரியர்  கே.எம்.காதர் முகைதீன் அவர்களிடம் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் வரலாறு படித்தவர்.
அவருக்கு அணுக்கமான நெருக்கமான தோழர் யார் என்று கேட்டால்.....நம்ம ஹிலால் முஸ்தபா என்றே பதில் சொல்லுவார். இருவரும் கவிஞர் தா.காசிம் அவர்களோடு சென்னை முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் காலங்கள் கடினமானவை.பல நேரம் பட்டினி தான்.....தலைவர் அப்துஸ் சமத் சாகிப் வருஷத்தில் எப்போது அவர்களுக்கு மணிவிளக்கு மாத இதழ்சார்பில் சம்பளம்  தருவார் என்று யாருக்கும் தெரியாது..காய்ந்த ரொட்டித் துண்டுகளும் டீயும் பாலும் தான் எங்கள் உணவாக பல நாட்கள் இருந்தன என்று சிரித்துக்கொண்டே சொல்வார். 

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று,பீ.ஜி.எல்.வரை போய்,என்ன காரணத்தினாலோ சட்டம் முடிக்காமல் இருந்துவிட்டார்.

அவர் எழுதிய கவிதைகள், அதுவும் சாட்டியடிக் கவிதைகள் அமிழ்தையும் கொடுத்து,அமிலத்தையும் காட்டி,நக்கல் நையாண்டி பெருக்கெடுத்தோடும்.வகையில் இருக்கும். 

அவர் தனிரகம். தனி ராகம்.அவரது பாடல்கள் தமிழகம் முழுதும் அறிமுகமானவை.
அவற்றில் சென்னை இறையன்பன் குத்தூஸ் பாடிய  "அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்", உவமை சொல்லமுடியாதது.தலைவர் அப்துஸ்சமத் சாகிப் அவர்கள்ஆசிரியராக இருந்து வெளிவந்த மணிச்சுடர் தமிழ் நாளிதழ் பேராசிரியர் கே.எம்.காதர்முகைதீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தற்போதும் வந்து கொண்டு இருக்கிறது..
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் ஒரே நாளிதழ் இது தான்.சென்னையில் இருந்து வெளியாகி மற்ற ஊர்களுக்கு மறுநாள் பஸ்,ரயில் அல்லது தபால்  மூலமாக வந்து சேர்கின்றது. 

அம்மணிச்சுடர் நாளிதழில் தமிழகத்தின் பிற கவிஞர்கள் யாருக்கும் தோன்றாத சிந்தனையில் என் வீட்டிற்கு நபிகள் நாயகம் வந்தால் அவர்களை எப்படி வரவேற்பேன் என்று கேள்விகள் கேட்டு பதிலும் எழுதி இருந்தார்....அப்படியே உள்ளத்தை உருக்கி இருப்பார்.அதனையே குத்தூஸ் எடுத்து இசையமைத்து பாடி இருப்பார்.

"இறைவா", எனத் தலைப்பிட்டு அவர் எழுதியவை, அவரது கவிதைகளின் தலைப்பா வாக இன்றும் வாழ்த்தப்படுகிறது.

மிகச்சிறந்த சிந்தனையாளர்.திருமறையின் வசனங்களுக்கு அவர் தருகிற விளக்கம் ஆழ்ந்து வியக்க வைக்கும்.சாதாரண வார்த்தைகளால் உரையாடும் அவரின் உதாரணங்கள் அரிதான சிந்தனைகளைத் தூண்டும்.

சமுதாயச்சாடல்கள் பேச்சில் நிறைய வந்து கொண்டே இருக்கும். சமூக அவலங்களைச் சொல்லிக்காட்டி  வெளிப்படுத்கிக்கொண்டே இருப்பார்.

அடிக்கடி திருநெல்வேலி, மேலப்பாளையம்  வந்து கொண்டே இருந்த ஜபருல்லா அண்ணன், சமீபத்தில் அதிகமாக வரமாட்டேன் என்கிறார்..கேட்டால் "வருவங்க" என்கிறார்.

ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் பேசிக்கொண்டிருந்தார்."தம்பி,கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் தாங்களேன்" "பிரிட்ஜ் தண்ணீரா இருந்தாலும் பரவாயில்லை".என்றார்.

தண்ணீர் வந்தது.அதை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றிக்கொடுத்தேன்.வாயில் வைத்துக் குடிக்கப்போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தால் அதை முகர்ந்து பாத்தார்.

"என்னண்ணே தண்ணியை மோந்து பாத்துக்கிட்டு? வாடை கீடை  வரல்லியே?"அவர்முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
தண்ணியில மீன் வாடைஏதும்அடிக்குதோன்னு கொஞ்சம் சந்தேகம்.
"நாகூர்காரருக்கு மீன் என்ன பிடிக்காமலா போய்விடும்?" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.


“தம்பி இந்த தண்ணீ பிரிட்ஜில் இருந்து எடுத்தது தானே?”.......

“என்னண்ணே, என்ன சந்தேகம்? மோந்து பாக்கியோ?”........
“முந்தியெல்லாம் மீந்து போன உணவுச்சாமாங்களை அக்கம் பக்கத்து மக்களுக்கு கொடுப்பார்கள்.இப்போ அப்படியில்லியே .அதை யார் தடுத்தாங்க?சொல்லுங்க பாப்போம்”.........

நான் கவிஞர் என்ன சொல்ல வாராரோன்னு யோசிச்சிக் கொண்டிருந்தேன்.
“இந்த பிரிட்ஜ்ங்கறது வீட்டுக்கு வீடு வந்ததுல, எல்லா மக்களுக்கும் தனக்கு போக மீந்து போன சாப்பாட்டை, கறிவகைகளை மத்தவங்களுக்கு கொடுக்கனும்ன்னு இருந்த நினைப்பு மறந்து போச்சே கவனிச்சீங்களா?”

“என்னண்ணே இத வேற புதுசா கண்டுபுடிச்சிருக்கீங்க?”
“ஆமா தம்பி........ஒரு பிரிஜ் உள்ளே பாத்தீங்கன்னா போன வாரத்துல சமச்ச மீன் குழம்பு,,அஞ்சு நாளைக்கு முன்னால வச்ச பொரிச்ச கறி.இட்லிக்கு தொட்டுக்க வாங்கின சாம்பார் சட்னி,என்னைக்கோ வச்ச மல்லிக்கீரை புதுனா,வெளியே வச்சிருந்தா எப்போவோ குஞ்சா வந்திருக்கவேண்டிய கோழி முட்டைகள்,புள்ளைகளுக்கோ,பொன்ஜாதிக்கோ வாங்கி பத்திரப்படுத்தி வச்ச மல்லிப்பூ,பிச்சிப்பூ.இதையும் தாண்டி ஆரஞ்சு.ஆப்பிள் பழங்கள் வேறு.”
“சரிண்ணே, இதெல்லாம் என்னத்துக்கு சொல்ல வாறிய?........

“ கோடை வெயில்ல அலைஞ்சு, திரிஞ்சு வந்ததுக்குப் பிறகுரொம்ப ஆசைப்பட்டு, குளிர்ந்த தண்ணி தாங்களேன்னு சில இடங்கள்லே கேட்டு வாங்கி குடிக்கப்போனா, முன்னால நான் சொன்ன அத்தனை வாசமும் ஒன்னு சேர்ந்து தண்ணியிலே வந்து குமட்டிடுது.குளிர்ந்த தண்ணி குடிக்கிற ஆசையை போக்கிடுது.”அதுக்கு தான் உங்க வீட்டு பிரிட்ஜ் தண்ணியும் அப்படியான்னு பாத்தேன்......படு சுத்தமா இருக்கு.”
“பிரிட்ஜ் தண்ணீல இம்புட்டு கதை இருக்கா?”ன்னு என் பக்கத்தில் இருந்த சிந்தா புகாரி மாமா கேட்டுக்கொண்டார்.

அண்ணன் சொன்னது என்னை வியக்க வைத்தது.
அண்ணன் வழக்கமா என்னை குடும்ப இனிசியலை சொல்லித்தான் அழைப்பார்.என்ன எல்.கே.எஸ்.சரிதானா?
இன்னொன்னை கவனிச்சீங்களா?

“மேலப்பாளையம் கடையநல்லூர்,தென்காசி.நாகூர் மாதிரி அடுக்குத்தொடரா வீடுங்க உள்ள ஊர்ல எந்த வீட்டிலாவது நல்லது பொல்லாது நடந்தா அங்கே வந்தவர்கள் வீட்டுக்கு வெளியே பந்தலில் நாக்காலி போட்டு உட்காருராங்களே ஏன்னு கவனிச்சீங்களா?
“ஆமாண்ணே”சொல்லுங்கண்ணே..."
“வீடுகளெல்லாம் நாகரீகமா காங்க்ரீட்டோடு கட்டுனதுல, ஒன்ன மறந்துட்டாங்க........"
"சொல்லுங்க"
"அதுதாங்க....... திண்ணை.வச்சு வீட்ட கட்டுறது"..
"இந்த திண்ணைகளில் ரா வேளைகளில் ஊர் அடங்குனதுக்கு பொறகு பெண்டு பிள்ளைகள் மறைவா இருந்து ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கு வாங்க.இப்போ வீடுகளுக்கு திண்ணை வச்சுக் கட்டுறதுமில்லை,அங்க உக்காந்து பெண்மக்கள் பேசுரதுமில்லை.அவர்கள் மன பாரங்களை யாரிடம் இறக்கி வைப்பார்கள்? உற்ற தோழிகளிடம் தானே? அதற்கும்.இப்போ வாய்ப்பில்லையே".......
பெரிய நஷ்ட்டம் என்னான்னா........ எங்கேயாவது ஒரு வீட்டுல ஒரு மவுத் வந்துட்டா கொளுத்துகிற வெயில்கஷ்ட்டதுல பக்கத்துல எங்கேயும் போய் உட்கார முடியல்லே. போட்டிருக்கிற பந்தல்லே எத்தனை பேர்கள் தான் உட்ட்காருவது?”
"முந்தியெல்லாம் பக்கத்துக்கு வீட்டுத் திண்ணைகளில் மற்றவர்கள் உக்கார,பாய் விரிச்சு வைப்பாங்க.இப்போ அதுவும் போயிடுச்சு.பலர் பக்கத்துக்கு வீடுகளை பூட்டி வச்சிருக்காங்களே? "
"மனித மனங்கள் குறுகி விட்டதா நினைக்காதீங்க அண்ணே "..........
"பின்ன என்னங்க, இருக்கிற பழைய வீடுகளினுடைய திண்ணைகளில் எல்லாம் இப்போ க்ரில் போடுகிற பழக்கம் வந்துட்டதே.".....
"சரி அது ஒரு வகை பாதுகாப்புக்குத்தாங்களே”"............
"இல்லையில்லை, யாரும் இங்க வராதீங்க உட்ட்காராதீங்க,இந்தத் திண்ணை எங்க வசதிக்கு மட்டும் தான்னு யாரும் இன்னும் அறிவிப்புச் செய்யல்லே........இல்லையா.".................
"பள்ளிவாசல்களில் கட்டில்கள் மொவ்த்தாப் போன வீட்டுக்கு கொடுக்காங்களே அது என் தெரியுமா?".......
"சந்தூக் மட்டும் மட்டும் தான் பல ஊர்களின் பள்ளிவாசல்களிலே இருக்கும்.....
ஒரு காலத்திலே யார் வீட்டிலாவது ‘மையத்’ விழுந்து விட்டால் அக்கம் பக்கம் வீடுகள்ளே இருந்து கட்டில் கொடுப்பார்கள்.அதை எடுப்பார்கள்.இப்போ யார் அப்படி வச்சிருக்காங்க?உங்களுக்கு கட்டிலைத்தந்தா மெத்தையை நாங்க என்ன செய்ய?கட்டிலையும் மெத்தையையும் பிரிக்கலாமா?அப்படீன்னு புது பார்முலா சொல்லுறாங்க "
அதனால தான் எதுக்கு இந்த பொல்லாப்பு.ஊருக்கு ஊர் பள்ளிவாசல்களிலேயே கட்டில்களை வச்சிருக்காங்க தெரிகிறதா?".....
"சொல்லுங்கண்ணே......"
கவிஞரின் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தேட வேண்டும் நிலையில் நாம் உள்ளோம்.
___________________:__________________:_:__

 நம்மைவிட்டு பிரிந்த கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் பிகச் சிறந்த சிந்தனைவாதி. பக்கவாட்டுச் சிந்தனை (Lateral thinking) என்றால் என்னவென்பதை அவரது எழுத்துக்களின் மூலம்தான் நான் கற்றுக் கொண்டேன். அவரது பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது. அவரது வரிகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
———————————————-

சில சமயங்களில்
சினம் வருகிறது
சில விஷயங்களில்
நான் -
சினம் கொள்ளாததை
நினைத்து
———————————-
என் விஷயங்களில்
நினைத்ததெல்லாம்
நடந்து வருகிறது..!
நான் -
நினைப்பதைத் தவிர
————————————-
நான்மறையைக்
கற்றவனா ஞானி..?
“நான்” மறையக்
கற்றவனே ஞானி
——————————————
இந்தியா
எனக்கு
தாய் நாடும் அல்ல
தந்தை நாடும் அல்ல
இது-
என் நாடு...!
———————————————
நீருக்கும் நெருப்புக்கும்
பகை என்று
யார் சொன்னது..?
நீர்-
நெருப்பை
அணைக்கத்தானே
செய்கிறது..?
————————————————-
சிறையில் நான் சந்தித்த
அந்த
மரண தண்டனை கைதிக்கு
இன்னும் தேதி குறிப்பிடவில்லையாம்
அதுசரி..!
நமக்கு மட்டும்
இறப்புத்தேதி
தெரிந்தா விட்டது...?
——————————————————
பணக்கடனை
சாட்சிகளோடு
பத்திரங்களில்
பதிவு செய்பவர்கள்

பெற்ற கடன்
மற்ற கடன்களை
எதில் -
பதிவு செய்வார்கள்...?
———————————————————-
இறைவா..!
உண்டுவிட்டு
உனக்கு
நன்றி சொல்வதைவிட
பசித்திருந்தும்
உன்னளவில்
பொறுமை கொள்ளும்போது
என் ஆன்மா
ஆனந்தப்படுகிறது
————————————————-
இறைவா..!
உன்னோடு
அரபியில் பேசுவதைவிட
அழுகை மொழியில்
பேசும்போதுதான்
அண்மை தெரிகிறது..!

இறைவா..!
தொழும்போதுகூட
நான் -
தூரமாகவே உணர்கிறேன்
உன்னை -
நினைக்கும் போதெல்லாம்
நெருக்கமாகிறேன்..!

இறைவா...!
வானம்வரை கூட
என் எண்ணம்
வியாபிக்க முடிகிறது..!
ஆனால்
இந்த வார்த்தைத்தடைகள்
என்னை தரையிலேயே
நிறுத்தி விடுகிறதே..!
———————————————
நான்
அல்லாவுக்கு அஞ்சுவதில்லை
அவன் -
பயத்தை விட்டும்
என்னைப் பாதுகாப்பவன்
நான் -
அஞ்சுவது அந்த
ஷைத்தானுக்கு மட்டுமே...!
—————————————————

கவிதைகள் மூலம் :அப்துல் கையூம்

  

வெள்ளி, 18 மே, 2012

விளையாட்டை........ விளையாட்டாய்இந்தக் காலப் பிள்ளைகள் கோடைக் காலத்தை எப்படியெல்லாம் கழிக்கிறார்கள்.?
பெரும்பாலும் விளையாட்டு தான்.அதுவும் கிரிக்கெட் மட்டும் தான்.மிகக் குறைந்த அளவினர் மட்டுமே பூப்பந்து வாலிபால்,டென்னிஸ் ஆட்டத்தை விரும்புகிறார்கள்.
சிலர் விடிய விடிய கேரம்போடு.செஸ் விளையாட்டில் மூழ்கி முத்தெடுத் துக் கொண்டுள்ளார்கள்.எப்ப முழிப்பார்கள்?,எப்போ தூங்குவார்கள்? என்பதே தெரியாமலிருக்கும் போது உங்க திங்க கழிக்க முழிக்க எப்ப போவார்கள்ன்னுயாருக்குத் தெரியும்.? 
சில வங்கிளடுகள் தம் பேரப்பிள்ளைகளிடம் "இன்னிக்கி ரன் எத்துனப்பா எடுத்தாணுவ?"
"சச்சின், தோணி வள்லாட்டு எப்பிடிடே?"
"என்ன எழவு வள்லாட்டு வெளாடுரானுவோ?"
"போக்கத்தவனுவோ,.......இவ்னுவளை எதுக்குத் தான் இந்தியால வச்சிருக்கானுவோ?"
இப்படி ஏதாவது ஒன்னை போகிற போக்கிலே சொல்லிட்டுப் போய் விடுவார்கள்.இல்லையென்றால் ஒன்னும் தெரியாத ஆசாமின்னு பேர் வாங்கணுமே.
சில பேர்கள்; "இன்னிக்கி கிரிகெட்டுல எத்தனை கோல் போட்டானுவோ"ன்னு கேட்டு அதிர்ச்சி ஊட்டுவார்கள்.
இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது என்பது வேறு.
அனைத்து ஆட்டங்களிலும் அது மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று  .சொல்வது வேறு.
இரண்டுக்கும் வித்யாசம் நிறைய உள்ளது.இவர்களிடம் வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்பதைச் சொல்லியாக வேண்டும்.ஊடகங்களும் சொல்லியாக வேண்டும்.
இந்த டி.வி.வந்த பிறகே எல்லாம் மாறிவிட்டது.கிரிக்கெட் மோகம் தலைக்கு மேல் ஆடத் தொடங்கிவிட்டது.மத்த விளையாட்டப்பார்க்க யாருமே ஆவல் கொள்வதில்லை.
நல்லவேளை தூரதர்ஷன் புண்ணியத்தில் ஹாக்கி,வாலி பால்,மாதிரி சிலதுகள் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றன ..தனியார் கையில் பணம் மட்டுமே வரும் விளையாட்டு தான் தெரியும்.
ஒரு காலத்தில் திருநெல்வேலி வட்டாரத்தில் பிரபலமாக இருந்த "அமெரிக்கா புகழ்" சாப்ட் பால் விளையாட்டு இன்று கிரிக்கெட் ஆக்கிரமிப்பால் அழிந்தே போய் விட்டது.மேலப்பாளையத்தில் இந்த வித்தை தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
அது போலவே டென்னி கட் ரிங் விளயாட்டும். அதிலும் மாநில அளவில் கில்லாடிகள் மேலப்பாளையத்தில் இருந்தார்கள். சின்ன பிள்ளைகளிடம் டென்னிகட் ரிங் தெரியுமா? என்று கேட்டால் "கையில் கட்டுகிறது தானே"? என்று கேட்கிறார்கள்,
"ரொம்ப கொளப்பாதிய.....டென்னி கட் ரிங்குன்னா சிம்பு கையில் கட்டுறது தானே.இது தெரியாதுன்னு நினைச்சிட்டியளா"? இது அந்த விளையாட்டை பற்றிநான் கேட்டதுக்கு ஒரு சேட்டைக்காரன் என்னிடம் சொன்னது.
ஒரு காலத்தில் மேலப்பாளையத்தின் கிழக்கே பாளையங்கோட்டையில் ஹாக்கி விளையாட்டில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.இப்போ அங்கேயும் ஹாக்கி மீது கொஞ்சமாவது பிரியம் கொண்டவர்கள் எங்கே ?என்று தேடுகிறார்கள்.
நாங்க சின்ன பிள்ளைகளா இருந்த போது கபடி விளையாட்டு ரொம்ப பிடித்தமானது.என் வயசுக்காரர்கள் கால் கை மூட்டுக்களில் கபடி விளையாட்டின் "விழுப் புண்கள்" தந்த வீரத் தழும்புகள்..... "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாட்டு பாடுகிறது.
ஆதித்தனார் அவர்களின் அரும் பணியால் தமிழ்நாட்டு கிராமங்களின் விளையாட்டான கபடி, அகில இந்திய அளவில் பரவி, இன்று சர்வ தேசமாக மாறி ஒலிம்பிக் கோட்டை தொடப்போகும் பக்கம் வரை போய் விட்டது.
மேலப்பாளையத்தில் எங்களின் சிறு பிராயத்தில் மைலக்காதர் தெரு இளைஞர்களிடம் இந்த விளையாட்டு மீது மிகுந்த வெறியே உண்டு.அந்த இளைஞர் அணியின் "செவன் ஸ்டார் குரூப்" திருநெல்வேலி ஜில்லாவில் ரொம்பப் பிரபலம்.அவர்களை எதிர்த்து பானாங்குளம் அணி வரும்.இருவரின் ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும்.
நடுவர்களாக எங்கபள்ளியின் "சின்ன ட்ரில் மாஸ்ட்டர்" யூசுப், மற்றும்,"பெரியட்ரில் மாஸ்ட்டர்"அகமது மீரான் ஆகிய இருவரும் வாயில் விசிலுடன்இருப்பார்கள்.
கபடி விளையாட்டு கண் மண் தெரியாமல் கோபத்தை கொடுக்கும்.அந்த நடுவர்கள் தான் விளையாட்டின் தலை விதியை நிர்ணயிப்பார்கள்.எங்களுக்கெல்லாம் அந்த இருவருக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாதேன்னு பக் பக்குன்னு பயமா இருக்கும்.
மேலப்பாளையத்தில் தற்போது கபடி அழிஞ்சே போய் விட்டது.
பல இடங்களில் கபடி நடந்தால் கலவரமே வந்து விடுகிறது.
எங்களின் விவசாய கிராமத்தின் பக்கம் ஒரு பொங்கல் நாளில் நடந்த கபடிப் போட்டியில் "ரெப்ரி" கொடுத்த தீர்ப்பு இரு அணிகளுக்கும் சண்டை ஆகி .பாக்க வந்த ரன்ன்டு சைடு ஆட்களுக்கும் சண்டை ஆகி.ரன்ன்டு கிராம மக்களுக்கும் அருவா கம்பு, வெட்டு.குத்து வரைக்கும் போய் விட்டது.
ஜெயிச்சவங்களுக்கு பரிசுக் கோப்பை கொடுக்க, விழாவுக்கு போன சிறப்பு விருந்தினர்கள் தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு ஓடி வந்தது திகில் கதைக்கு ஒப்பானது.கையில் கிடச்சவங்களுக்கெல்லாம் அடி,உதை விழுந்தது.பிருத்து தள்ளிட்டாங்க....கோர்ட்டுக்கும் வீட்டுக்குமா ரண்டு ஊர்க்காரர்களும் ஒரு பத்து வருசத்துக்கும் மேலா அலைன்ஞாங்க.அப்புறம் பஞ்சாயத்து பேசி சுமூக மானது தனிக் கதை. சில இடங்களில் கபடி விளையாட்டு வீரன்னு சொன்னா.மற்றவர்கள்,அவர்களை "சண்டியர் பார்வை" பார்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
சில இளைஞர்கள் குத்துச் சண்டையோடு, அடிதடி அராஜகம் வரை போகும் WWF விளையாட்டை என்னமா ரசிக்கான்னு பாத்தா, பேசவே பயமா இருக்கு.
ரா விடிய அந்தக் குத்து, அடி மிதியையே திரும்பத்திரும்ப பார்த்து ரசிக்கிறார்கள்.இது கொடூரம்ன்னு அவர்களுக்கு யார் எடுத்துச் சொல்லுவது?மனிதனை மனிதன் தாக்கிக் கொள்வதை ரசிப்பது எந்த வகையில் உசத்தி?
மேலப்பாளையத்தில் ஒவ்வொரு மழைக் காலமும் ஒவ்வொரு விளையாட்டையும் மாற்றும்.
தெல்லுக்காய்,குச்சிக் கம்பு,கோலிக்காய்,பம்பரம்,பேப்பந்து, ரயில் வண்டி ஓட்டம்,பாண்டி ஆட்டம்,ஒத்தையா,ரட்டையா?,கண்ணாம் பூச்சி.கல்குத்து ,கல்லாங்குத்து,காதுல பூச்சொல்லி, தொட்டு விளையாட்டு, இம்புட்டு பணம் தரேன் விடுவியா......?குதிரை, கள்ளம் போலிஸ்,பட்டம் விடுவது,சடுகுடு அதான் கபடி,கிளியன் தட்டு,கிச்சு.......கிச்சு தாம்பாளம்,...பாம்பு அட்டை.சோழிதாயம்......சங்குசக்கரம்,இங்கு,நாகம்.பால்,........... .இதெல்லாம் கானாப்போச்சு....(தொடரும்)   
      
   

புதன், 16 மே, 2012

இலக்கற்ற பயணங்கள்.

அங்கும் இங்கும் ஊர் சுற்றலாய்     பல பயணங்கள்.

சில பயனுள்ளவை .
பல. பயனற்றவை.
சில .இலக்கற்றவை.
சில இலக்கணமற்றவை.
சில பயணங்கள் கற்றுத் தந்துள்ளன.
சில சொல்லும் தகுதி அற்றவை.

ஆரம்பத்தில் பெற்றவர் உற்றவர்களோடு சென்று வந்தேன்.அவை நினைக்க நினைக்க ஆனந்தம் தருபவை.

.பல நேரங்களில் பல பயணங்கள் சடைவை தந்து,.வெறுப்புக்களோடு .பாடங்களும் தந்ததுண்டு. 

காலதாமதம்கூடவந்த கூட்டாளிகள்  இடத்துல நெருக்கடி, கொசுக்கடி, மூட்டக்கடி, இது போல எதாவது ஒரு கடி அதுக்கு காரணமா இருக்கும்.

அடிக்கடி இப்படி வராது.எப்போவாவது ....

"சீ..... இது ஒரு போக்கா?.......ஒங்கள மாதிரி யார் இப்படி அலைறா?  ஊட்டுல கிடக்க மாட்டியளா?"என்று என் புகாரி காக்கா ரொம்ப கண்டிச்சிருக்கான். 

ராப்படையா .......மோட்டார் சைக்கிளில் யாருகிட்டேயும் சொல்லாம,கொள்ளாம.....  நண்பர்களாச் சேர்ந்து, நாலைந்து மோட்டார் சைக்கிள்ள குத்தாலத்துக்கு போறதை அப்படி சொல்லுவான். ..

வெடவெடக்க வைக்கும் குளிர் காற்றும்.கண்ணுக்குள் ஊசியாக் குத்தும் சாரல் மழையும் மோட்டார் சைக்கிள ஓட்டும் போது நடுங்க வைக்கும்...

மேப்பல்லும்..... கீப்பல்லும்...வெடவெடக்கும்.

பல முறை வாப்பா ,உம்மா, அப்பாம்மா, காக்கா உள்ளிட்ட குடும்பத்துக் காரர்கள் கடுமையாப் பேசுவார்கள்.
."இனிமே வண்டியத் தூக்கு அப்பும் இருக்கு" இது எச்சரிக்கை அறிவிப்பா வரும்.திட்டம் போடுவோம்...போயிடுவோம்.ஆனாலும் பயணம் செய்யப்பிடிக்கிறது.

சின்னஞ்சிறு பிராயத்தில் என் பெத்தும்மா (அப்பாம்மா)உம்மா. வாப்பா சின்ன வாப்பாமார்கள்,மாமிமார்கள்.என் வயதில் இருந்த உறவினர்களின் ஆண், பெண் மக்களுடன் மாட்டு வண்டியில் குற்றாலம் வரை சென்ற நினைவுகள் மாட்டு வண்டிகளைப் பார்க்கும் போதெல்லாம் வந்து செல்லும்.

மற்ற பயணங்கள் எல்லாம்திருநெல்வேலி டவுனுக்கும்.ஜங்ஷனுக்கும் போய் வந்ததுதான்.காச்சல் அது இதுன்னு வந்தா முகைதீன் டாக்டரிடம் மாட்டு வண்டியில் கூட்டிப் போய் தான் காட்டுவார்கள்.

மாடுகள் வண்டியை இழுக்க லாயக்காக மாடுகளின் கழுத்துக்களில் படுக்கை வாக்கில் நோக்கால் இருக்கும்.அதிலிருந்து தான் மாட்டு வண்டியின் சட்டம் துவங்கும்.

கூண்டு ஆரம்பிக்கும் இடத்தில் வண்டியோட்டுகிறவர் இருக்க வசதியான பலகை இருக்கும்.அதுக்குப் பின்னால் கோஸ் பெட்டி இருக்கும். 

அதில் உட்கார எங்க வயசுக்காரர்களிடம் கடும் போட்டி ஏற்படும்.அஞ்சாங் கிளாஸ் படிக்கிற பிள்ளைகளாயிருந்தால் நெருக்கியடித்து நான்கு பேர் அமரலாம்.
சில வண்டிகளில் கணீர்ன்னு சப்தம் வர மணி,ஓட்டுறவர் கால் வைக்கும் இடத்திலும், ராவுல வண்டி ஓட்ட, வெளக்கெண்ணெய் ஊத்தி எரியும் பக்க விளக்குகள் மாட்டிவச்சிருப்பார்கள். 

வண்டி "ஆமவேகத்தில் போனால் எப்ப போய் சேர்வது?"வண்டிஒட்டுபவரை கோஸ் பெட்டி ஆட்கள் உசுப்பேத்துவார்கள்.

"போட்டும்..... போட்டும்...இன்னும் வேகமாப் போட்டும்.".......வண்டிக்காரருக்கு ரோஷம் வந்துரும். 
"எங்க....போற? அன்ன நடை நடக்கிறியாக்கும்."?மாட்ட பேசிக்கிட்டே .கையில் உள்ள சாட்டையால் ரன்ன்டு விளாசு..அம்புட்டு தான்.மாடு ஓட்டம் பிடிக்கும்.
"எப்பா ...உள்ளே வாங்கோ...கீழே விழுந்துடப்டாது"ன்னு சொல்லி கோஸ் பெட்டியிலிருந்து பயணித்தவர்களை பெரியவர்கள் பிடித்து இழுத்து மடியில் வைத்துக் கொள்ளுவார்கள்.

"பெரிய பிள்ளைகளாகிய பிறகு, நீங்கள் கோஸ் பெட்டியில் இருக்கலாம்"என்று தடை உத்திரவு போட்டுடுவார்கள். ரொம்ப வருத்தமாகிவிடும்.

நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும் போது மேலப்பாளையத்தில் பெருநாள் அன்னைக்கி மாட்டுவண்டிப் போட்டி நடக்கும்.தாழையூத்து நவாப் சத்திரத்தில் துவங்கி குறிச்சி வாய்க்கால் பாலத்தில் போட்டி முடியும்.
கொக்கிர குளம் வரும்போது மாடுகள் ஓட்டம் பிடிப்பதைப் பார்க்க பயமா இருக்கும்.வருஷம் தோறும எங்க வீட்ல இருந்து ஒரு வண்டி இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்.


பெரும்பாலும் பெரிய வாப்பா,சின்ன வாப்பா வீட்டு வண்டிகளாயிருக்கும்.
அந்தக் காலத்தில் மாட்டு வண்டி ஜெயிக்கிறதுல கவுரவம் பாத்த மகா ஜனங்கள் இருந்த வீம்பான காலம் அது.

பல ஊர்களில் மாடுகளை விரட்ட.வண்டியை வேகமாக ஓட வைக்கஅதன் வாலைப்பிடித்து இழுத்தும் ,தார்க் கம்பு வச்சி குத்தியும்,ரொம்ப உச்சக் கட்டமா வாலைப் பிடித்து கடித்தும் கொடுமைக்காரர்கள் சிலர் மாடுகளை இம்சைபடுத்துவார்கள்.

எங்க ஊர்ல இதெல்லாம் செய்யக்கூடாது.இதுக்கெல்லாம் தடை போட்டிருந்தார்கள்.ரோட்டோரம் நின்னுக்கிட்டு சில விடலைகள் விசில் அடிப்பார்கள்.அது மாடுகளுக்கோ மனுசாட்களுக்கோ உற்சாகத்தை உண்டு பண்ணும்.

ஒரு முறை போட்டி கடுமை இருந்தது.எல்லைக் கோட்டைத் தொட ஐம்பது அடி தூரமே இருந்த போது வண்டி ஓட்டி வந்த"கொளக்கட்டை சுப்பையா" போட்ட கூச்சல் மாடுகள் மிரண்டு ஓடி வண்டியை வெற்றிக் கோட்டை தொட வைத்ததுஅந்த வெற்றிக் களிப்போடு வீட்டுக்கு வந்த சுப்பையா ஒரு குடம் தண்ணீரை அண்ணாந்து குடித்து முடித்த பின்னர் தொப்பென்று கீழே விழுந்தார்.அங்கேயே இறந்துவிட்டார்.ஊர் முழுதும் இதே பேச்சு தான்.

தொடர்ந்து வண்டிப் போட்டிகளில் கலந்து கொண்டதனால் ஒரு குறிப்பிட்ட வண்டி உரிமையாளர்களுக்குள்  மறை முக பகைமை இருந்து கொண்டே இருந்தது.அது பல பொதுப் பிரச்சினைகளில் திசையையே மாற்றிவிட்டது. ஒருக்கட்டத்தில் அவர்கள் இருவரும் சண்டையை மறந்து  சம்பந்த உறவை வைத்துக் கொண்டார்கள். ஊரே ஆச்சிரியமாய் பார்த்துக்கொண்டது.அது மாட்டு வண்டி போட்டி இணைச்சு வச்சது.

மாட்டுவண்டிகளின் போட்டிகளைப் பார்க்க நாங்கள் போகும்போது, என் தந்தை எங்களுடன் வந்ததே இல்லை. காரணம் போட்டியில் ஓடுகின்ற  எங்கள் வண்டியின் உள்ளே இருந்து கொண்டு , சாரதியை உற்சாகப் படுத்திக்கொண்டே வருவார்.

எங்க வாப்பாவின் கூடப் பிறந்தவர்களுக்கும் அவரது வாப்பாவின் கூடப்பிறந்த பெரிய வாப்பா சின்ன வாப்பா மகன்களுக்கும் இது பிடிக்காது. கடுமையாகப் பேசுவார்கள்.ஏதாவது ஆகிவிடப்போகிறது என்று பயப்படுவார்கள்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூணு-நாலோடு மேலப்பாளையம் வண்டிப் போட்டி சுத்தமா நின்னே போச்சு,

எங்க வாப்பாவிடம் தட்டு வண்டி ஒன்று இருந்தது.அதில் ஒரு மாடு பூட்டி ஓட்டுவார்கள். பக்கத்துக்கு ஊர்களுக்கும் விவசாய வேலைகளுக்கும் அதிலே தான் போவார். வருவார்.மாடுகளைப் பேணுவதிலும் அவருக்குப் பிரியம் அதிகம்.ரேக்ளா வண்டி ஓட்டுவதில் அதிக ஆர்வம அவருக்கு உண்டு.

மாட்டு வண்டிகளுக்குள் ஒரு மாதிரி வாடை அடித்துக்கொண்டே இருக்கும்.காளை மாட்டுச் சாணி.மூத்திரம்,மாட்டு மேலே வருகிற ஒரு வாடை,இதுவெல்லாம் கலந்து ஒரு கலவையான வாடை அடிக்கும்.

உள்ளே விரிக்கப்பட்டுள்ள மெத்தையில் இருந்து வேறு விதமான வாடை வரும்.இன்றுஇந்த மாதிரி வாடைகளைஎல்லாம், காரில் அடிக்கிற துவாலை வாசம் போக்கிவிடும்.ஆனால் மாட்டு வண்டியில் என்ன செய்ய?

எங்க அப்பாம்மா போட்ட வெற்றிலை, பாக்கு, தாம்பூல வாசனை இந்த அத்தனையையும் தாக்கி விரட்டிவிடும்.
பொதுவாக மாடுகளுக்கு ஒரு குணம் உண்டு.”வெளியூருக்கு போவதாக இருந்தால் மெதுவாகச் செல்வதும், மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் போது வேகமாக வருவதும்.“அது எதுக்கு சீக்கிரமா ஊட்டுக்கு வருதுன்னு தெரியாதாக்கும்?”
“பருத்திக் கொட்டை.புண்ணாக்கு தீவனம் வீட்டுக்குப் போனதும் கிடைக்குமே அதுக்குத் தான்”, என்பார் எங்க வீட்டு கோனார்.

பல வேளைகளில் எங்க ஊரை விட்டு எட்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் தருவை கிராமத்தில்;நெல் அறுவடை வேலைகளெல்லாம் முடிய இரவு பத்து மணி கூட ஆகி விடும்.அந்த இருட்டு வேளையில் வண்டிக்குள் சென்று அசதியினால் நாங்கள் எல்லோரும் நெருக்கி அடித்துக்கொண்டு தூங்கிவிடுவோம்.

ஆனால் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துக்கொண்டு ரோடுகள் வழியே பயணித்து, எதிரே கண்ணைக் கூசும் அளவு முகப்பு விளக்கை ஒளிர விட்டு பெரிய லாரிகளும் பஸ்களும் வந்தாலும், பாதையை சரியாக கவனித்து,பல்வேறு பாதைத் திருப்பங்களில் சரியாகத் திரும்பி ஊருக்கு பத்திரமாகக் கூட்டிவரும்..
வீடு வந்து விட்டது என்று ஆளை எழுப்புவார்கள்.அப்போது தான் வந்து சேர்ந்து விட்டோம் என்பது தெரியும்.
எங்களை வீடு கொண்டு சேர்த்த மாடுகள் இதையெல்லாம் கவனிக்காதது போல் அசை போட்டுக் கொண்டிருக்கும்.
பயணத்தைச் சொல்லப்போய் மாட்டு வண்டிப் போட்டிவரைசொல்லவேண்டியதாயிட்டு.

இப்போ மேலப்பாளையத்தில் ஏது மாட்டு வண்டி.
கொஞ்ச காலம் முன்பு வரை பிள்ளைகள் பாளையங்கோட்டை பள்ளிக் கூடங்களுக்கு போய்,வர அரசக் கோனாரும்.கந்தக் கோனாரும் மாட்டு வண்டி "சர்வீஸ்"நடத்தினார்கள்.

ஆட்டோ காரங்க வந்த பிறகு மாட்டு வண்டில போக பிள்ளைகளும் விரும்பல.அவுங்க உம்மா வாப்பா மாரும் விரும்பல.

என் தம்பி, தங்கைகள் மாட்டு வண்டீல தான் பள்ளிக் கூடம் போனாங்க.அவங்க பிள்ளைகளிடம் அதச் சொன்னா நம்ப மாட்டேன் என்கிறார்கள். அதுல மெதுவா போயி. எப்ப பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வர்ரதாம்னு கேட்கிறார்கள்.
இன்னும் சொல்லுவோம்.......
(தொடரும்)