பக்கங்கள்

வியாழன், 9 அக்டோபர், 2014

மோட்டார் சைக்கிள் மாப்பிள்ளை.....



 
சாதாரணமா, இரண்டு பைதா வண்டிகள்ன்னா,..... சின்னஞ்சிறுசுகளில் இருந்து வயசானவங்கள் வரைக்கும் ரொம்பப் பிடித்தம் தான்..

நடு வயசைத்தாண்டிவிட்டாலே,  முன்னாள் இளைஞர்கள் முதுகு “வலிக்குதே” ...”என்ன செய்யன்னு?”... வேற வகை வண்டிகளுக்கு மாறிடுறாங்க..... அல்லது பண வசதி அது இதுன்னு பலதால,  மனுஷங்க மாறிடுறாங்க.

சாமான்யங்கள் வாகனம்ன்னா அது டி..வி.எஸ்.50  தொடங்கி வசதி மற்றும் வாங்குகிற தகுதியைப் பொருத்து மோட்டார் சைக்கிள்கள் வரை போகும்..  புதுப்புது வண்டிகள் வாங்கிக்கிட்டேதான் இருக்காங்க...அதுல சில லட்ச ரூபாயையும் தாண்டுதாம்.

எங்க பக்கம், திருனவேலியில் வாழ்கிற  இளைஞர்களுக்கு, அல்லது குடும்பிகளுக்கு அவரவர் “வீட்டம்மாக்களோடு” அல்லது நண்பர்களோடு, மோட்டார்சைக்கிளில் போக வர, வசதியான சாலைகள் நிறைய உள்ளன.  ....

இள வட்ட பசங்க, பெண்மக்கள் யாரோடாயாவது, வண்டியில வெரிசையா,வேகமா போறதப்பார்த்தா .... ”எதுக்குத்தான் பயபுள்ளைகள், அதுகளை வச்சிக்கிட்டு அம்புட்டு வேகத்தில் போய்த்தொலைக்காங்களோ?...என்று கேக்கவே செய்றாங்க....அது “இயலாமையில்” கேக்கிற கேள்வி இல்லை.. அக்கரை கொண்டு கேட்கிற கேள்வி தான்.

ரொம்ப தூரமும் இல்லாமல், பக்கமும் இல்லாமல் திருனவேலி டவுண், பாளையங்கோட்டை,ஜங்ஷன் இருப்பதுதான் அவங்களுக்கு “அங்க இங்க” போற வழிப்பாதை.. சில பேர் வண்டி ஓட்டுகிற தினுச வச்சே....”இந்தப்பயலுக்கு மூக்கனாங் கயிறு இனிமத்தான் விளனும்டே.......அவம்முதுகில தொங்கிட்டுப்போறது யாருடே?.” என்று அர்த்தமுள்ள கேள்வியை திருனவேலி டவுன் பக்கமும், பாளையங்கோட்டை பக்கமும் கேக்கலாம்....

மிகச்சாதாராணமானவர்களில் இருந்து வசதியானவர்கள்,அதாவது நடுத்தட்டு மக்கள் வரை மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டரில் பயணப்படுகிறவர்கள் ஏதாவது காரியங்கள் இல்லாமல் செல்லுவதில்லை.

“சும்மா ஊர் சுற்றிப் பார்ப்போம்”, என்று போறவர்கள்,  நூத்தில் அஞ்சு பேர் கூட இருக்க மாட்டார்கள்.

கல்யாணமான இளைஞர்கள் வண்டி ஓட்டிச்செல்லும்  விதத்தை வைத்தே  “அந்த வண்டி அவன் உழைச்சு வாங்கியது, அண்ணன் தம்பிக்குள்ளதன்னும் அல்லது மச்சினமார்க்குள்ளதுன்னும்  லேசாக்  கண்டுபிடித்துவிடலாம்.

சிலர் வண்டி ஓட்டும் “கிரித்தியத்தை’ வைத்தே அவங்க அப்பன், பாட்டன் வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லிப்புடலாம்.

பெரும்பாலும் அந்த வண்டிகளில், மாலை நேரத்துப் பயணங்கள் சிரித்த முகங்களோடுதான் ‘”ஓடுகிறது’”.

துபாய் அல்லது வெளிநாடுகளில் இருந்து ஊர் வருகிற இளைஞர்கள் தமது மனைவி மக்களோடு மோட்டார்சைக்கிளில் பயணப்படும் போது அவர்கள் முகங்களைப் பார்க்கணுமே?... இருவர் முகத்திலும்.  அம்புட்டு பிரியம்  தெரியும்,

வண்டி மேக்க உள்ள டவுணுக்குப் போனால் ஏதோ புதுசா சில நகைகள் வீட்டுக்கு வரப்போகுதுன்னு அர்த்தம்.வண்ணார் பேட்டை தாண்டிப் போனால், ஏதோ “புள்ளதாச்சி”டாக்டரை பார்க்க போறதாகவும்,கொஞ்சம் மேக்க,கிழக்க திரும்பிப் போனால் அர்.எம்.கே.வீக்கோ,..போத்தீசுக்கோ ..சென்னை சில்க்கிற்கோ போறா ங்கன்னும் அர்த்தம். ஜங்ஷன் பக்கம் அரசனுக்கும்,பாளயங்கோட்டையில்  இப்போ உள்ள  ஹோட்டல் சாப்பாட்டுக்கோ போவாங்கன்னும் சொல்லிவிடலாம்.

நாப்பது வயசுக்கு மேல உள்ள ஆட்கள் போவது, பெரும்பாலும் மருத்துவமனைகளுக்குத் தான்னு தெளிவா சொல்லலாம்.

காலை,அல்லது முன் மாலை  வேளைகளில் குலவணிகர் புரம் மற்றும்,முருகன்குரிச்சி தாண்டி யாராவது அதமாதிரிப் போனால், கண்ண மூடிக் கிட்டு சொல்லலாம் அவங்க புள்ளைகளைப் பள்ளிக் கூடத்தில் உடவோ கூப்பிடவோ போராங்கலாம்.

அமீரக,அரபக நாடுகளில் உழைக்கும் இளம் வயது மாப்பிளைகள் தமது மனைவி மற்றும் கைக் குழந்தைகளோடு மோட்டார்சைக்கிளில் போகவே பெரும்பாலும் ஆவல் கொள்ளுகிறார்கள். 

ஒரு நாள் நானும் என் மனைவியும் என் சின்ன மகளோடு திருனவேலி வண்ணாரப்பேட்டை மருத்துவ மனையில் இருந்த உறவுக்கார மாமி ஒருவரைப் பார்க்கப்போனோம். சுகம் விசாரித்து விட்டு இரவு சுமார் ஏழு மணிவாக்கில் சூரியன் எப்.எம்.பக்கம் வந்து கொண்டு இருந்தோம்.. கொஞ்சம் இருட்டாக அந்தப்பக்கம் இருந்தது..என் மகளை பெட்ரோல் டேன்ங் மேலே எனக்கு முன்னால் வைத்திருந்தேன்..அவளுக்கு மூன்று வயது இருக்கும்..நான் ஒட்டிக்கொண்டு இருந்த புல்லட் பைக் நிதானமாத்தான் போய்க கொண்டு இருந்தது...

திடீர்ன்னு “நிறுத்துங்க....நிறுத்துங்க....வண்டிய நிறுத்துங்க”  என்று என் மனைவி  பதட்டத்துடன் சொன்னாள்...என்னவோ? ஏதோ? என்ற நடுக்கத்துடன் ஓரமாக வண்டிய நிறுத்தினேன்...

“அங்கப் பாருங்க டி.வி.எஸ்.50  ஒன்னு கீழே கிடக்குது...அது கிட்ட நம்மூர் பிள்ளை மாதிரி ஒரு பெண் ரோட்டுல குப்புறக்கிடக்கு...வாங்க வாங்க “என்றாள்......பதட்டத்துடன் அவள் சொன்ன இடத்தை பார்த்தேன்.

 அங்கே புர்கா அணிந்த ஒரு முஸ்லிம் பெண் கீழே மயக்கமாய் கிடக்க,அவளைத் தாங்கிப் பிடித்து, அவள் கணவன்  அழுது கொண்டு இருந்தான்... அவர்களது குழந்தை அந்த இருவரையும் பார்த்து அழுது கொண்டு இருந்தது....

அந்தபெண்ணின் கணவரை எனக்கு நீண்ட நாட்களாகத்  தெரியும்......வெளி நாட்டில் இருந்து  ஊர் வந்து இருந்தார்...இப்பவும் வெளிநாட்டில் தான் இருக்கிறார். என்னைப் பார்த்ததும் பெரும் குரல் கொடுத்து அழ ஆரம்பித்தார்...

நான் “என்ன?...ஆச்சுப்பா“ ? என்று அவரிடம் கேட்டேன்.

.” இந்த ரோட்டுல சின்ன குழி ....என் வண்டியின் பின் வீல் அதில் இறங்கி ஏறுச்சு...அவ கைல பிள்ளை இருந்துச்சு....தடுமாறி கீழே விழுந்துட்டா...இப்ப மூச்சு பேச்சு இல்லாம இருக்கா”,,,,,என்று அழுது கொண்டே சொன்னார்....குழந்தயைப்பார்த்தேன் அதுக்கு சின்ன சிராய்ப்புக் கூட இல்லாமல்,அந்தப்பெண் தாங்கிப் பிடித்துள்ளார்...

அந்த இளைஞரிடம்... “தைரியமாக இருப்பா” என்று சொல்லிவிட்டு அடுத்து,...”அவங்களை ஆஸ் பத்திரிக்கு கூட்டிட்டுப் போவோம்....என்று சொல்லி விட்டு ஆட்டோவை தேடினோம்...உடனடியாக அங்கே போன ஆட்டோ ஒன்று வந்து சேர்ந்தது...

நான் கால்கள் பக்கம் அந்தப்பெண்ணை தாங்கிப்பிடிக்க, என் மனைவி அவள் கைகள் பக்கம், பிடித்து தூக்கி ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றினோம்...”பக்கத்தில் கேலக்ஸி ஆஸ்பத்திரிக்குப் போங்க”....ன்னு சொல்லி அவங்களை அனுப்பி வைத்தோம்..

அந்த சூழ்நிலையில், ,அழுது கொண்டே இருந்த  அவர் மகளை என் மனைவி தூக்கி வைத்துக் கொண்டாள்......சரி,அவங்கள அனுப்பின ஆஸ்பத்திரிக்கு போவோமுன்னு, தயாராகும் போது தான், எங்க கூடவந்த  எங்க மகள் நினைவுக்கு வந்தாள்..

.”.ஆமா, நம்ம ரபிகாவை எங்கே?”...கூட்டத்தில் தேடினேன்...பிள்ளையை காணோம்.... கொஞ்ச தூரத்தில், நாம வண்டியை நிறுத்தின இடத்தில் பார்ப்போமுன்னு...அங்கே ஓடினேன்.... எங்கள் மோட்டார் சைக்கிளில் ,அந்த இருட்டில் என் பிள்ளை பதட்டப்படாமல் உட்கார்ந்து இருந்தாள்...எனக்கு ஏற்பட்ட திடீர் பதட்டம் அவளைப் பார்த்து போதுதான்   குறைந்தது..

  எங்களை விட்டு தனியே போகாமல் எப்போதும் எங்க கூடவே இருக்கிற  என் பிள்ளை...தைரியமாக அந்த இருட்டில் மோட்டார் சைக்கிளில் இருந்தாள்.அவள் கழுத்தில், கைகளில் தங்க நகைகள் வேறு.

ஒருமட்டுக்கும் கொஞ்ச நிம்மதியோடு,கேலக்ஸி,ஆஸ்பத்திரி போய் சேர்ந்தோம்...என் மனைவியின்  கைகளில் இருந்த அந்தப் பெண்ணின்  குழந்தை,  அழுகையை நிறுத்தவே இல்லை....ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போன அதன் தாயை நினைத்து....’எம்மா...”என்று பெரும் குரல் எடுத்து, அழுது கொண்டு இருந்தது....அந்த குழந்தைக்கு தாலாட்டு சொல்வதே கடும் சிரமமாய் இருந்தது..அப்புறம் அந்தச்சின்னக் குழந்தைக்கு “தேவையான” காரியங்களை செய்தோம்.

மருத்துவ மனையிலும்,  கீழே விழுந்து விபத்துக்குள்ளான, அந்தப் பெண் கண் விழிக்கவே இல்லை.மயக்க நிலையிலே தான் இருந்தாள்...அவரின் கணவர் அழுத அழுகையை விடவே இல்லை...அவரை அவசர சிகிட்சை அறைக்கு வெளியே உட்காரச்சொன்னேன்..

நல்ல வேளை.  என்னிடம் அப்போது போதுமான பணம் இருந்தது...என் கைகளில் இருந்த பணத்தை, அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காக செலுத்திவிட்டு, டாக்டர் மகபூப் சுபஹாணி எங்கள் குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் சொல்லி உடனடியாக சிகிச்சையை கொடுக்கச்செய்தேன்..

“தலையில் அடி பலமாகப் பட்டிருக்கலாம்”... என்கிற சந்தேகம் எங்கள் எல்லோருக்கும் இருந்தது...அடுத்து ஸ்கேன் எடுக்க வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்து அந்தப்பெண்ணை ஸ்டெச்சரில் அங்கிருந்தவர்கள் துணையுடன் நானும் என் மனைவியும் தூக்கிக் கிடத்தினோம்.அந்தப் பெண் அணிந்து இருந்த தங்க நகைகளை கழற்றி வாங்கி,ஒரு கைக் குட்டையில் சுற்றி  நான் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

 

அப்போது அந்தப்பெண் மயக்கம் தெளியத்தொடங்கி இருந்தார்...”நான் எங்கே இருக்கேன்?” ..”எம்புள்ளைய  எங்கே/.”....”எம் புள்ளே...புள்ளே...”.....என்று மெல்லிய குரலில் அழத்தொடங்கினார்..டாக்டர்கள் சிரித்துக் கொண்டார்கள்..”அப்பாட...நாம் பயந்த மாதிரி இல்லை...இவர் கோமா..நிலையில் இல்லை...சுய நினைவு வந்து விட்டார்,என்றார்கள்....

“எம்மா பயப்படாதேம்மா”.....என்றேன்.  என்னையும் என் மனைவியையும் அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.எங்கள் கைகளில் அந்தக் குழந்தை இருந்தது...

“அவர் எங்கே?”.....அந்த வேதனையிலும் கண்ணீரோடு அவரது  கணவரை அந்தப்பெண் தேடினார்..

“அவருக்கு ஒன்றும் ஆகவில்லையே?”.....என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்..

“நல்லா இருக்காரம்மா “...உங்க வீட்டுக்கு நான் முதலில் தகவல் சொல்லிவிட்டேன்...அவங்க வருவதை எதிர் பார்த்து வெளியில் நிற்கிறார் என்றேன்.

கண்விழித்தது தெரிந்ததும் டாக்டர் சுபஹாணி வந்து, அந்தப்பெண்ணிடம் விபத்து நடந்த விபரம் கேட்டு விட்டு...” நாக்க நீட்டும்மா,” “கண்ணைக் காட்டும்மா”...”காலை அசைத்துக் காட்டும்மா”....என்று சொல்லிவிட்டு...”கைகளை தூக்கிக் காட்டும்மா”..என்று படுத்த நிலையில் கிடந்த அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்..இடது கையை மட்டும் தூக்கிக் காட்டிய அந்தப்  பெண் வலது கையைத்தூக்க முடியாமல் “வலிக்கிறது” என்று சொல்லி அழுதது...

அதை வைத்து டாக்டர்கள், பரிசோதனை செய்தபோது, முன் தோள் பட்டையில் கழுத்துக்குப் பக்கத்தில் “காலர்’எலும்பு முறிந்து இருந்ததைக் கண்டு பிடித்தார்கள். அடுத்து எலும்புமுறிவு சிகிட்சைக்கு அனுப்பி வைத்தார்கள்...

கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்ணின்  மாப்பிளை மற்றும் பெண்ணின் குடும்பத்தார் ஆண்களும் பெண்களுமாக  வந்து சேர்ந்தார்கள்...

வந்ததும் என் மனைவி அவள் கைகளில் இருந்த குழந்தையை கொடுத்தாள்..நான் என் கைக்குட்டையில் இருந்த நகைகளை அப்படியே கொடுத்தேன்...

“ஆமா....நம்ம புள்ளையை எங்கே” ? மீண்டும் பதட்டத்தோடு ,....என் மனைவி கேட்டாள்...

“அதோ என்றேன்..”

என் மகள், அங்கே இருந்தாள்....அங்கே டி.வி.யில் அவள் ரசித்துப் பார்க்கும் POGO 








 
சேனல் ஓடிக கொண்டு இருந்தது...சிரித்துக் கொண்டே அவள் கிட்டே போனேன்......டி.வி.திரையையும் அவளையும் பார்த்தேன்..

அந்தப் படத்தின் பெயர்,, “டோராவின் பயணங்கள்”.