மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்த
ஆசிரியர்களை பற்றி, மருமகன் அப்துல் ஜப்பார் அவர்கள், அண்மைக் காலமாக, அரிய தகவல்களை படங்களோடு முகநூலில் தொடர்ந்து
வெளியிடும் பணியினை செய்து வருகிறார்....
அவற்றை
பல்லாயிரம் இளைய தலைமுறையினர் பார்த்து,படித்து தங்களது கருத்துக்களையும் பதிவாகத்
தருகிறார்கள்...அதற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடன் நண்பர்கள் ஷா இன்ஷா,மற்றும் முகம்மது அலி, முதலானோர் உறுதுணை நல்கி வருவது பாராட்டுக் குரியது.
அவர்கள் செய்து வருகிற இந்தப் பணிக்காக, பல்வேறு நாட்கள் எனது ஆசிரியப்
பெருமக்கள் பலரைப் பற்றியும், என்னிடம் கலந்துரையாடி இருக்கிறார்கள்.......
மேற்கொண்டு
அவர்கள் , பணி நிறைவு பெற்ற ஆசிரியத்
தந்தைகளிடம், நேர்காணலும் நடத்தி வந்துள்ளார்கள்.....அதற்காக PM அப்துல் ஜப்பார் மற்றும் நண்பர்களை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்.
முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் சில வகுப்புக்களாவது படித்திருந்தால் மட்டுமே....அந்த
குருகுலத்தை-பள்ளிக் கூடத்தை,அதன் ஆசிரியப் பெருமக்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
மேலப்பாளையத்தில்
உள்ளவர்கள் இதைத் தவற
விட்டிருந்தால்,மிகப் பெரிய அனுபவத்தை அவர்கள் இழந்து விட்டதாகத்தான் கருத
வேண்டும்.....
“.....நாங்க படிச்ச பள்ளிக் கூடம் என்னத்துல குறைச்சல்?... .......எங்க மாதிரி
மாணவர்களுக்கு, மகிழ்வும், கண்டிப்பும் அனுபவமும், இல்லாமலா
போகும்?...... உங்க பள்ளிக் கூடத்தமட்டும் நீங்க உசத்தி சொல்லலாமா?” என்று கூட
நண்பர்கள் கேக்கலாம். ஆமா....அப்படிக்கூட சொல்லலாம்.
இன்னைக்கு பணக்கார ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கிற மாணவ மாணவியரிடம் “ உங்க டீச்சரைப்
பற்றி சொல்லுங்களேன் ” என்றால் சொல்லத்தெரியவில்லை......எந்த டீச்சரைப் பற்றிச்
சொல்ல?.....மறந்து விடுகிறார்கள்....
குறிப்பாக ஆங்கிலப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நிரந்தரமாக அல்லது தொடர்ச்சியாக,
ஒரே பள்ளியில் வேலை செய்யாதது கூட இப்படிச் சொல்ல முடியாததுக்கு காரணமாக இருக்கலாம்.
என்னால் என் முதல் வகுப்பு ஆசிரியரைக் கூட சொல்லிக் காட்ட முடியும்...
....மேலப்பாளையம் முஸ்லிம் ஹைஸ்கூல் வாத்தியார்கள் வாப்பாமார்களுக்கும்,பின்னாட்களில் அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கும், பலநேரம் வகுப்புக்கள் எடுத்ததனால்......பழைய
மாணவர்களாக இருந்த வாப்பாமார்களிடம் பிள்ளைகளின், படிப்பு லட்சனத்தை
சொல்லிவிடுவார்கள்.....இதனால் பாதிபேருக்கு “தானா” பயம் வந்துடும்....
“நம்ம யோக்கிய தாம்சம்” வீடு வரை போய்
விடும் எதுக்கு வம்பு? என்பதனாலே பிள்ளைகள் விழுந்து விழுந்து படிப்பார்கள்....பரிட்சைல மார்க்
எடுக்காததை, வாப்பா மார்களிடம் வாத்தியார்கள் சொன்னால் வேற வெனையே வாண்டாம்.
“பையன் படிக்கலைன்னா ......பிச்சிருங்க பிச்சி..” அப்படீன்னு அடி பின்னியெடுக்க
உத்திரவாதங்கள் வேறு கிடைத்துவிடும்....பிறகென்ன “கேக்கவா’ வேணும்?
படிக்கிற காலத்துல அடி உதை கொடுத்த ஆசிரியப் பெருமக்களை இன்னைக்கு
பார்த்தாலும்.....பாசம்,மரியாதை மட்டும்
தான் வரும்......
அது என்னவோ ஆச்சிரியமாத் தான்
இருக்கு.....என்னைக்கோ எவனோ அடிச்சதை நினைவில் வைத்து, அதற்கு பழி வாங்க, கால
நேரம், காத்திருக்கும் மனித மூளை.....ஆசிரியர்கள் விஷயத்தில் மட்டும் நேர்மாறாக நினைக்கிறது.....
சொல்லப் போனால் அந்த ஆசிரியர் தந்த பழைய அடிகளுக்கு, மரியாதையான பார்வையும்,
வாழ்த்துக்களும், சலாமும்தான் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் திரும்பக்
கொடுக்கிறார்கள்... அது அந்த தொழிலுக்கு உண்டான, அற்பணிப்புக்கு காலம் தருகிற
பரிசாக இருக்கலாம்.
எங்களுக்கு ஆறாவது வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து
பல்வேறு பாடங்கள் நடத்திய மைதீன் லெப்பை
சார், எங்களின் எட்டாம் வகுப்பு, கடைசி நாளில் எங்களை வாழ்த்தி விடைபெறும் போது,
பிரிவுத்துயர் தாங்காமல் அழுது ......வாழ்த்திக் கொண்டே வழி அனுப்பி வைத்தார்....
அதுபோலவே, கடும் கெடுபிடிகள் கொண்ட, கண்டிப்புகளுக்கு பேர் போன, மாசில்லா மணி சார்வாளும் பள்ளி கடைசி நாளில்
எங்களிடம் விடை பெறும் போது, பேச முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு, நாத்தழுதழுக்க ஆசி
கூறி அழுது வழியனுப்பி வைத்தார்... இன்னைக்கும் மனதில் அந்தக் காட்சிகள் தான்
நிழலாடுகிறது.அவர்கள் தந்த “அடிகள்”
பின்னால் மறைந்து போய்விடுகிறது....
கல்வி ஆண்டின் துவக்கத்தில் பல்வேறு பெற்றோர்கள் தம் பிள்ளைகளைச் பள்ளிக்
கூடங்கள்,கல்லூரிகள்,தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர்க்க என்னை அணுகுவது உண்டு...
என்னால் செய்ய முடிந்ததைச் செய்வேன்.
ஆனால் என்னை எவ்வளவோ சொல்லியும் என் பிள்ளைகளுக்காக சென்றுவந்ததில்லை...
என் பிள்ளைகளுக்கு என் தம்பியோ, மைத்துனர்களோ,அல்லது சகோதரிகளோதான் பள்ளிக் கூடங்களில்
காத்திருந்து இடம் வாங்கித் தந்துள்ளார்கள்...நான் அப்ளிகேசனில் கையெழுத்து
போடுவதோடு சரி..
பணக்காரப் பிள்ளைகள் படிக்கிற கான்வெண்டுகளுக்குப் போய், என்னை அறிமுகப்
படித்தி என் பிள்ளைகளுக்கு சீட் பெறுவதை அவமானமாகவே என் மனது தடுத்து
வந்துள்ளது....
ஒரு வேளை என் பிள்ளைகளுக்கு நான் சென்று கேட்டும், வந்த அந்த பிரபல
ஆங்கிலப் பள்ளிக் கூடங்களில், இடம் தராமல், அனுமதிக்காமல்
இருந்திருந்தால் என்னால் அந்தத் தோல்வியை
காலம் முழுதும் தாங்க முடியாது...
இந்த ஒரு அநியாயத்துக்காகவே நான் என் பிள்ளைகளை
அழைத்து கொண்டு பள்ளிக் கூடங்களில்
காத்திருக்கவில்லை. ஆனால் ஊரில் உள்ள பிள்ளைகளை, அழைத்துச் சென்று, சண்டை போட்டாவது இடம்
வாங்கிக் கொடுத்துள்ளேன்...எனக்காகக் கேட்பது சுயநலம் என்றே மனசு அணை போடுகிறது..
எங்க வாப்பாவும் என்னை பள்ளிக் கூடங்களில் சேர்க்க நேரில் வந்தது இல்லை....என் தாயின்
தந்தையார்,மாமுவாப்பா வந்து என்னை சேர்த்துள்ளார்கள்....
என் பிள்ளைகளை உயர் வகுப்புகளில் சேர்க்க...11,12 மற்றும் கல்லூரிகளில் சேர்க்க நான் என் மனைவியுடன் சென்று சேர்த்து வந்துள்ளேன்.
மருமகன் ஜப்பார் வெளியீடு செய்யகிற முகநூல் பதிவுகள் பல ,நான் ஆறாம்
வகுப்பும்,அதற்கு மேலும் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த நாட்களை என் கண்முன்
கொண்டு வந்து நிறுத்துகிறது. அப்போ என் வாத்தியார்கள் எப்படி காட்சி
தந்தார்களோ,அந்தத் தோற்றத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
மாணவர்கள்,எல்லோரும் கைலி கட்டிக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போக முடியுமா
என்றால் எங்க ஊரில் முடிந்தது...அன்றைய கால கட்டத்தில் நான் படித்த முஸ்லிம் மேல்
நிலைப் பள்ளியில் “யூனிபார்ம் டிரஸ்”
முறையெல்லாம் இல்லை. அதுபோலவே தென்காசி,கடைய நல்லூர்,புளியங்குடி,கீழக்கரை,காயல்
பட்டணம் மாணவர்களுக்கும் இல்லை.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் , 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் யூனிபார்ம் ட்ரஸ் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.....
இன்னைக்கு உள்ள பிள்ளைகளிடம் நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு கைலி கட்டிக்
கொண்டுதான் போனோம் என்றால் நம்பத்தயாராக இல்லை. “அது எப்படி பள்ளிக் கூடத்துக்கு
உள்ளே விடுவாங்க?.....யார் கிட்ட கதை விடுதிய?” அப்படீன்னு எங்க வீட்டில் என் சின்ன மகள்
கேக்கிறாள்.
நாங்கள் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று அல்லது நான்கு மாணவிகள்
இருந்தாலே,அது அதிகமாகவே தெரியும்....ஆனால் இப்போது முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி
மொத்த மாணவ மாணவியரில் பாதிக்கும் மேல் மாணவிகள் தான் இருக்கிறார்கள்.அது அறுபது
சதவீதத்தை தொடுகிறது......
முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில், எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களில் ‘சொல்முரசு’
கோமதி நாயகம், கிதிர் முகம்மது, ஜலீல், ஓவிய ஆசிரியர் அப்துல் ரகுமான், கந்தசாமி
ஜோஸ்வா, சோம சுந்தரம், அல்லி மீத்தின் சாகுல் ஹமீது, அனந்தையர்,’களந்தைதமிழ்க் கோ’ களக்காடு சி.காசா
முகைதீன, எஸ்.என்.எம்.முகம்மது காஜா,சயின்ஸ் சார் சீனிவாசகம், வீரை.பீர்
முகம்மது,முகைதீன் லெப்பை, மாசிலாமணி ஆகியோர் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்-மறைந்து விட்டார்கள்...
தலைமை ஆசிரியர் ஜமால்.அகமது அலி, மற்றும் ஆசிரியர்கள் முகுந்தன், நல்ல பெருமாள், கடைய நல்லூர் எகியா,உமையொருபாகம் விளையாட்டு ஆசிரியர்கள் அகமது மீரான் , முஹம்மது யூசுப் ஆகிய
பெருமக்கள் இன்றும் நலமுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் 1952-1982 வரை பணி நியமனம் பெற்றவர்கள் யாவரும் எனது மாமா
L.K.M அப்துர் ரகுமான் B.A.,B.L. (Melapalaiyam Ex.Chairman ) அவர்கள் பள்ளியின் தாளாளராக இருந்த போது, அவர்களால் நியமிக்கப்
பட்டவர்கள் ஆவார்கள்.....
எங்கள் மாமா வீட்டில் சின்ன வயசுப் பிள்ளைகளாக வளர்ந்த நான்,
பணி நியமன ஆணை பெற வருகிறவர்களுக்கு ....1973-1982 வரை ஒரு
பத்தாண்டுகள், தேநீர் விநியோக சேவைகள் செய்துள்ளேன்.....அதனால் அந்த ஆசிரியப்
பெருமக்கள் பணிக்கு சேரவந்த முதல் நாள், அவர்களைப் போல எனக்கும் நன்றாக நினைவில்
இருக்கும்.....
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் ஜமால்.அகமது அலி, திருமிகு ஆசிரியர்கள், எஸ்.என்.எம்.முகம்மது
காஜா,சயின்ஸ் சார் சீனிவாசகம் முகைதீன் லெப்பை, மாசில்லாமணி, ஓவிய ஆசிரியர்
அப்துல் ரகுமான், கந்த சாமி ஜோஸ்வா, முதலான என் ஆசிரியர்கள் எனது வாப்பாவுக்கும்
வகுப்புக்கள் நடத்தியுள்ளார்கள்..
திருமண வீடுகளிலோ, பசாரிலோ மற்ற இடங்களிலோ என்
ஆசிரியர்கள் என் வாப்பாவையும் என்னையும் ஒரு சேரப் பார்த்தால் இருவரையும் “ஒருமையில்” தான் அழைப்பார்கள்.எங்க வாப்பா அப்படியே நெகிழ்ந்து
விடுவார்கள்....
என் படிப்பு,மற்றும் பரீட்சை மார்க் விபரங்களை அப்போவே சொல்லி
விடுவார்கள்....மார்க் குறைவாக எடுத்திருந்தால் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் எங்க
வாப்பாவிடம் கையெழுத்து வாங்க, நான் படாத பாடுகள் பட வேண்டும்...எங்க உம்மாவோ,வாப்பும்மாவோ,லெப்பார் மாமாவோ கடும் சிபாரிசு
பண்ணினால் தான் நடக்கும்.....
.”நீங்க என்ன?...... ஒன்னும் கேக்கமாட்டேங்றீங்களே?......உடனே போட்டு விடுரீங்களே........மார்க்கா
இது?”....... அப்படீன்னு எங்க வீட்டு உள்நாட்டு இலாக்காவிலிருந்து கடும் கண்டனங்கள்
எனக்கு வரும்....
அதற்கு நான் “பிராக்ரஸ் ரிப்போர்ட்டின் கையெழுத்துக்காக எங்க வாப்பாவிடம் கால்
கடுக்க,கண்சிவக்கக் காத்திருந்தது என் முன்னால், நினைவில் வந்து போகிறதே ...நான்
என்ன செய்ய”?.....அப்படீன்னு வழக்கம் போல பதில் சொல்லிடுவேன்...
நாங்கள் ஏழாம் வகுப்பு எட்டாம்
வகுப்பு படிக்கிற காலத்தில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர்
முகம்மது பாரூக் அவர்கள், ஒரு ஸ்க்ரிப்ட் தயாரித்துக் கொண்டுவந்து “ஆல் இண்டியா
ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி தயாரிக்கிறேன்......உங்க பள்ளியில் இருந்து நல்லா பேச, பாட
மாணவர்கள் தாருங்கள்" என்று அன்று எங்கள்
தலைமை ஆசிரியராக இருந்த ஜமால் அகமது அலி அவர்களிடம் வந்து கேட்டார்கள்....உடனே ஆள்
பிடிக்கும் வேலை நடந்தது.....
நான் படிக்கிற காலத்தில் இன்றைய அன்னை ஹாஜிரா கல்லூரித்தலைவர் நாடறிந்த பொறியாளர். செய்யது
அகமது அவர்கள் ஒரு வருஷம் எனக்கு இளையவர்.
பள்ளிக் கூடத்தில் நடக்கும், ‘ சொற்பயிற்சி மன்ற’ பேச்சுப் போட்டி,கட்டுரைப்
போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் தீவிரமாகப் பங்கு பெற்று நானும், எஸ்.கே.செய்யது
அகமது, அவர்களும் பரிசுகளை பங்கு வைத்துக் கொள்ளும் அளவுக்குப் போட்டியிடுவோம்.....
(எங்கள் குடும்பத்தில்,என் தந்தையுடன் பிறந்த சகோதரி மற்றும் மாமா பொறியாளர்
முகம்மது ஹுசைன் அவர்களது மகளை எஸ்.கே.செய்யது அகமது, மணம் முடித்துள்ளார்.)
ஆர்.எம்.எ.ஷாஜஹான், அழகிரி புரம் மாரியப்பன், மியா லெப்பை லத்தீப்
ஆகியோர் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.பரிசுகள் பெறுவார்கள்...
பேச்சுப்போட்டிகளில் என்னோடு SK. செய்யது அகமது, சின்னாமது மசூது, கே.கே.முகம்மது முகைதீன் போன்றவர்களும் பரிசுகள் பெறுவார்கள்....
அந்த நிகழ்ச்சியின் பெயர் “நபி பிறந்தனரே” என்பதாகும்....பேராசிரியர் முகம்மது
பாரூக் அவர்கள் எழுதித் தந்த நபிகள்
நாயகத்தைப் பற்றி வசன கவிதையை, “அனைத்துலகின் அருட்கொடையாம்.:” என்று ....
பொறியாளர் புகாரி ஒருபத்தி வாசிக்க,அடுத்து நானும் ,செய்யது அகமது,ஷாஜஹான் என்று
வரிசையாகப் பேசினோம்.
இடையிடையே பாடல்கள். அதுவும் சாஸ்த்தீரிய இசை அமைப்பின் சாயலில்.....அதை
யாரெல்லாம் பாடுவது?...என்று ஓவிய ஆசிரியர் ரகுமான் சார் கடும் ஒத்திகை
நடத்தி, என்னையும்,செய்யது அகமது,மாரியப்பன், மற்றும் எங்கள் சக மாணவி விருந்தாட்சி
என்பவரையும் தேர்வு செய்தார்....
பாடல்களை சொல்முரசு கோமதி நாயகம் எழுதினார்....அவற்றில் “அழியாச்செல்வம்
கல்வியைப் பெறுவோம்”......”அருளைப் பொழியும் புனித ரமலான் மாதத்தில்”....”.நேற்றடித்த
திசையினிலே.....ஐலசா..” என்கிற பாடல் வரிகள் எனக்கு இன்றைக்கும் நினைவில் வந்து
போகும்.....
பாடல்களுக்கு இசை அமைத்தவர் ஓவிய ஆசிரியர் ரகுமான் சார்..."அன்பர் இசைக்குழு"
என்கிற பெயரில் சார் அந்தக் காலத்தில் ரொம்பவும் பிரபலமானவர்.....தூரத்தில்
இருந்து பார்த்தால் ஒரு சினிமா நடிகர் போல நேர்த்தியாக, அவ்வளவு அழகாக
இருப்பார்.....இளம் வயதில் புல் புல் தாரா வாசிப்பதில் இணையற்ற திறமை சாலியாக
இருந்தார்.....அதே பாணியில் இடது கையாலே பட்டன்களை அழுத்திப் பழகியதால் இடது கை
பழக்க முடையவராக ஹார்மோனியத்தில் இசை அமைத்தார்..
ஹார்மோனியம் வாசிப்பதிலும் தன்னிகரற்றவராக
இருந்தார்.....அவரது விரல்கள் ஹார்மோனியத்தின் கருப்பு வெள்ளைக் கட்டைகள் மீது
அப்படியே நர்த்தன மாடும்....அப்போது துள்ளி எழுந்து இசை வந்து ஆனந்தத் தாலாட்டும்
என்று கேட்பவர்கள் சொல்வார்கள்..... ......அடிக்கடி "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதனை நினைவு
கொள்வார்.....அவர் மூலம் விஸ்வநாதன் மீது ஏற்பட்ட மோகம் எனக்கு இன்றும் குறைய
வில்லை...
சிறுவர் குரல் நிகழ்ச்சிகளில் எங்கள் பள்ளி மாவட்ட அளவில் பரிசுகள் பல
பெற்றது.....அதனால் வருஷத்துக்கு ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோ ,நிகழ்ச்சிக்கு எங்களை
அழைத்துச் செல்வார்கள்.....வானொலி நிலையத்தில்,கிடைக்கும் பணத்தை அப்படியே பெற்றோர் ஆசிரியர்
கழகத்துக்குக் கொடுத்து விடுவோம்......இன்றும் அன்று வானொலியில் பாடிய அந்தப்
பாடல்கள் நினைவில் வந்து தாலாட்டும்....... எப்போவாவது அந்தப் பாடல்களை நான் மெதுவாகப்
பாடும் போது.....இது எந்தப் படம், என்று பிள்ளைகள் கேட்பார்கள்........
என்னை மேடையில் பேசவைக்க ..மதிப்பிற்குரிய என்
ஆசிரியர்கள் முகைதீன் லெப்பை, கோமதி நாயகம், முகுந்தன், காசா முகைதீன் மற்றும் ஓவிய
ஆசிரியர் ரகுமான் முதலானவர்கள் கடுமையாகத் தயார் செய்தார்கள்.
அதுபோல தமிழ் மீது பாசமும், காதலும் கொள்ளச் செய்தவர்கள் எனது திருமிகு ஆசிரியர்களான கோமதி
நாயகம், சி.காசா முகைதீன்,ஐயா.முகுந்தன் ஆகியவர்கள் என்றால் அது தான் உண்மை....
கல்லூரிக் கனவுகளை இன்னும் பேசுவோம்....
(முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் மாணவர் என்கிற உரிமையில் நான் என் ஆசிரியர்களைப் பற்றி எனது பார்வையில் பகிர்ந்துள்ளேன். இறைவன் நான் படித்தபள்ளியின் ஆட்சிக் குழுவின் உறுப்பினராக,தலைவராக, தற்போது செயலாளராக, தாளாளராகப் பணி செய்யும் வாய்ப்பையும் எனக்குத் தந்துள்ளான்.
(முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியின் மாணவர் என்கிற உரிமையில் நான் என் ஆசிரியர்களைப் பற்றி எனது பார்வையில் பகிர்ந்துள்ளேன். இறைவன் நான் படித்தபள்ளியின் ஆட்சிக் குழுவின் உறுப்பினராக,தலைவராக, தற்போது செயலாளராக, தாளாளராகப் பணி செய்யும் வாய்ப்பையும் எனக்குத் தந்துள்ளான்.
எங்கள் நிர்வாக காலத்தில், தலைமை ஆசிரியராகப் பணி செய்த ஆசிரிய மாமணி ஐயா, நல்ல பெருமாள், நல்லாசிரியர்கள் ஹாஜி ஷேர் அலி கான், ஜனாப்.பீர் முகம்மது, திருமிகு.ஐயா முகுந்தன், திருமிகு தேவராஜ், கடைய நல்லூர் ஹாஜி எகியா முதலானோர் பற்றியும் தனியே நான் பதிவிட எண்ணுகிறேன் )